நேயர் விருப்பம் கொஞ்சம் அதிகமாவே இருக்கு. கோபிக்குத் தான் முன்னுரிமை கொடுக்கணும். என்றாலும் இப்போ கொஞ்சம் அந்த விதியைத் தளர்த்த வேண்டி இருக்கு. இதுவும் அநேகமாய் கோபி அறியாத ஒன்றாகவே இருக்கலாம். ஜெயஸ்ரீ என்பவர் ஆடிக் கிருத்திகை பற்றி என்னோட ஆன்மீகப் பயணம் பதிவுகளில் திருச்செந்தூர் பற்றிய பதிவில் கேட்டிருக்கிறார். இன்னும் மூன்று நாட்களில் ஆடிக்கிருத்திகை. வெள்ளிக்கிழமை அன்று. முருகனுக்கு திதிகளில் சஷ்டியும், கிழமைகளில் வெள்ளிக்கிழமையும், நக்ஷத்திரங்களில் கிருத்திகையும் சிறப்பு. முருகன் பிறந்தது விசாக நக்ஷத்திரம் என்று சொல்லப் பட்டாலும், அவனைப் பாலூட்டி வளர்த்தது கார்த்திகைப் பெண்கள் என்பதால் அவர்களுக்கே முன்னுரிமை. கங்கையாகிய ஆறு தாங்கிய ஆறு அக்னிப் பொறிகள் மூலம் ஆறுமுகங்களோடு பிறந்த முருகன் ஆறு பெண்களால் வளர்க்கப் பட்டான். அவன் குழந்தையாய் வளர்ந்ததும், திருவிளையாடல்கள் புரிந்ததும் ஆறு நாட்களே என்று சொல்லப் படுகிறது. இப்படிச் சகலத்திலும் ஆறு என்னும் எண் முக்கியமாய் அமையப் பெற்ற முருகனுக்கான நாமம் “சரவணபவ” என்னும் ஆறெழுத்தே ஆகும். நம் உடலிலும் ஆறு ஆதாரங்களிலும் நிலை பெற்றிருப்பது இந்த முருகனே என்பதே அருணகிரியார் கூற்று. ஆகவே ஆறாவது நாளான வெள்ளியன்று இந்த வருஷம் வரும் ஆடிக் கிருத்திகை மிகவும் சிறப்பானது என்பதை மறுக்க முடியாது.
கார்த்திகை விரதமே கார்த்திகைப் பெண்களை நினைத்து நன்றி செலுத்தும்விதமாக ஏற்படுத்தப் பட்ட ஒன்று எனக் கூறுவார்கள். சூரனை வதைக்க வேண்டி ஆறுமுகன் தோன்றியதும், அவனைக் கார்த்திகைப் பெண்கள் பாலூட்டிப் போற்றி வளர்த்ததும், குமரன் வளர்ந்ததும், அவனை அணைத்து ஒன்று சேர்க்க உமையுடன் அங்கே எழுந்தருளிய சிவபிரான், கார்த்திகைப் பெண்களைப் போற்றி வாழ்த்தியதோடு, இனி கந்தன் இந்தப் பெண்களின் பெயரால், “கார்த்திகேயன்” எனவும் அழைக்கப் படுவான் என்று சொன்னார். இதைக் கந்த புராணம்,
“கந்தன் தனை நீர் போற்றிய கடனால்
இவன் உங்கள் மைந்தன் என்னும் பெயராகுக!” என்றும் அருளியதோடு மேலும் அவர்களுக்கு நக்ஷத்திரப் பதவியும் அளித்து, இந்தக் கார்த்திகைப் பெண்களின் நக்ஷத்திரம் வரும் சமயம் விரதம் இருப்பவர்களுக்குக் குறைகள் நீங்கி, நல்வாழ்வும், முக்தியும் கிடைக்கும், என்று அருளிச் செய்தார். கார்த்திகை விரதம் இருப்பது பற்றிக் கந்த புராணத்தில்,
“நுந்தம் பகலிடை இன்னவன் நோன்றாள் வழிபடுவோர்
தந்தம் குறை முடித்துப் பரந்தனை நல்குவம் என்றான்”
எனவும் சொல்லுகின்றது. விரதம் இருப்பவர்கள் கடைப்பிடிக்கவேண்டிய பொதுவான விரதமுறைகளே இதற்கும் பொருந்தும் என்றாலும் கந்தனுக்குரிய விரதங்களில் உப்பு தவிர்க்கப் படுவதை முக்கியமாய்க் கருதுகின்றனர். உப்பில்லா உணவை எடுத்துக் கொண்டு கார்த்திகை விரதமோ, சஷ்டி விரதமோ இருத்தல் சிறப்பாகவும், உயர்வாகவும் கருதப் படுகிறது. ஆடி மாதக் கார்த்திகை ஏன் விசேஷம் என்றால் மழைக்காலத் தொடக்கமான தக்ஷிணாயனம் பொதுவாக அனைத்து இறை வழிபாடுகளுக்கும் ஏற்றதாகவும், உத்தராயனம் திருமணம், உபநயனம், கிரஹப் பிரவேசம் போன்ற முக்கிய நிகழ்வுகளுக்கு ஏற்றதாகவும் சொல்லப் படுகிறது. ஆடி மாதத்தில் இருந்து வரிசையாக அனைத்துக் கடவுளரையும் வேண்டிச் செய்யும் பண்டிகைகளும், விரதங்களும் வருகின்றன. தேவர்களின் மாலைக்காலம் என்று சொல்லப் படும் இந்த மாதத்தில் வழிபாடுகள் அதனாலேயே நடத்தப் படுகிறது. தைமாதக் கார்த்திகையை விட ஆடிக் கார்த்திகையே சிறப்பாகவும் சொல்லப் படுகிறது. ஆடி மாதத்தில் இருந்து தொடங்கி ஆறுமாதங்கள் கார்த்திகை விரதம் இருந்து தை மாதக் கார்த்திகையில் விரதத்தை முடிக்கலாம்.
கார்த்திகை விரதம் இருந்தாலும், இருக்கமுடியாவிட்டாலும் கீழ்க்கண்ட இரு திருப்புகழ்ப் பாடல்களை மட்டுமாவது படிக்கலாம் என்றும் சொல்லுகின்றனர். இவை மனதுக்கு நிம்மதியையும், சகல செல்வங்களையும் அருளிச் செய்யும் என வாரியார் ஸ்வாமிகள் கூறி இருக்கிறார்.
“அதிருங் கழல்பணிந்து னடியேனுன்
அபயம் புகுவதென்று நிலைகாண
இதயந்தனிலிருந்து க்ருபையாகி
இடர் சங்கைகள் கலங்க அருள்வாயே!
எதிரங்கொருவரின்றி நடமாடும்
இறைவன் தனது பங்கிலுமைபாலா
பதியெங்கிலுமிருந்து விளையாடிப்
பலகுன்றிலும மர்ந்த பெருமானே.”
சரணகமலாலயத்தை அரை நிமிஷ நேரமட்டில்
தவமுறை தியானம் வைக்க அறியாத
சடகசட மூட மட்டி பலவினையிலேசனித்த
தமியன்மிடியால்மயக்கமுறுவேனோ!
கருணைபுரியாதிருப்பதென குறையி வேளை செப்பு
கயிலைமலை நாதர் பெற்ற குமரோனே!
கடகபுய மீதி ரத்ந மணியணிபொன் மாலை செச்சை
கமழுமணமார் கடப்ப மணிவோனே
தருணமிதையாமி குத்தகனமதுறு நீள் சவுக்ய
சகலசெல்வ யோகமிக்க பெருவாழ்வு
தமைமைசிவ ஞானமுத்தி பரகதியு நீ கொடுத்து
தவிபுரிய வேணு நெய்த்த வடிவேலா!
அருணதள பாத பத்ம மதுநிதமுமேது திக்க
அரிய தமிழ்தானளித்த மயில்வீரா
அதிசயம நேகமுற்ற பழநிமலை மீதுதித்த
அழகதிருவேரகத்தின் முருகோனே!
கிருத்திகைக்கு இன்னும் இருநாட்களே இருப்பதால், விரதம் பற்றிய செய்தி அறிந்து கொள்ளுவோருக்கு உதவியாய் இருக்கும் என்பதால் இன்றே பதிவு வெளிவருகிறது. இந்த விரதங்கள் பற்றித் திருவள்ளுவரும் சொல்லி இருக்கார் தெரியுமா?
"இலர் பலர் ஆகிய காரணம்-நோற்பார்
சிலர் பலர் நோலாதவர்"
அதிகாரம் : தவம்,குறள் எண் 270
சிலருக்கு வாழ்க்கையில் எல்லா வசதி, வாய்ப்புகளும் கிடைக்கும். ஆனாலும் மன நிம்மதி அரிதாகவே இருக்கும். சிலருக்கு வீடு, வாசல் இருக்காது. ஒருவேளை சாப்பாட்டுக்கே கஷ்டப் படுவார்கள். ஆனாலும் அவங்களுக்கு இருக்கும் ஆனந்தம் மற்றவரிடம் காண முடியாது. ஆனாலும் பணம், காசு இல்லாதவர்கள் என்று மட்டுமே பொருள் கொள்ளாமல், கணவன் சரியாய் இல்லாதவங்க, மனைவி சரியாய் அமையாதவர்கள், நன்கு படித்தும் அறிவு சரியாகப் பயன்படுத்தத் தெரியாம இருக்கிறவங்க, குழந்தைகள் இல்லாதவங்க, குழந்தைகள் இருந்தாலும் அவர்களால் துன்பம் அனுபவிக்கிறவங்க என்று வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு வகையில் பிரச்னை இருந்தே தீரும். இல்லாமல் இருக்காது.
ஆகையால் இத்தகைய பிரச்னைகளுக்குக் காரணமே வள்ளுவர் சொல்லுகின்றார். நோற்பார் சிலர், நோலாதவர் பலர் " என்று. அநேக உரைகளிலும் இந்த நோற்பு என்பதைத் தவம் என்ற பொருளில் எடுத்துக்கொண்டாலுமே, அதுவும் இங்கே பொருந்தி வருவதைக் காண்கின்றோம். நாள், கிழமை, விரதம் என நோன்பு நோற்பவர்கள் வர வரக் குறைந்து கொண்டே தான் வருகிறது. பலரும் இதில் உள்ள உடல் சிரமத்தைக் கண்டு நோன்பு, விரதம் என்று இருப்பதில்லை. உலகிலே தீவினைகள் அதிகம் ஆவதற்கே இதுவே காரணம் என்று சொல்லுகின்றார் வள்ளுவர். ஆகவே இந்த இடத்தில் விரதம் என்றும் வைத்துக் கொள்ளலாம். மனத் தூய்மைக்கும், மன ஒருமைக்கும் வழிசெய்யும் விரதங்களைக் கடைப்பிடிப்பது அனைவருக்கும் நன்மை பயக்கும்.
தலைவிக்கு மிக்க நன்றி ;))
ReplyDeleteஆடிக் கிருத்திகையில் திருத்தணியில் கவடி எடுப்பது எங்கள் வழக்கம். திருத்தணியிலேயே தங்கி (3 நாள்) அன்னதானம் எல்லாம் செய்துட்டு வருவோம். இப்போது கூட எங்கள் குடும்பத்தினர் அனைவரும் சொன்றுவிட்டனார். நான் தான் கடந்த 5வருஷம் எஸ்கேப்பு.
ஆடிக் கிருத்திகை பற்றி மேலும் தெரியாத சில செய்திகளும். திருப்புகழ்ப் பாடல்களை தந்தமைக்கு மிக்க நன்றி தலைவி ;)
அட, கோபி, உங்களை நினைச்சுட்டே தான் எழுதினேன். நன்றிப்பா.
ReplyDelete