“என் மகன்! விருஷபாநுவின் மகளைத் திருமணம் செய்யப் போகின்றானா?? நடக்காது, நடக்கவே நடக்காது! மேலும் அவள் உன்னைவிடப் பெரியவள் வேறே! “ யசோதை கிட்டத் தட்டக் கத்தினாள். ஒருவேளை, ஒருவேளை, இந்தப் பையன் தன் வழக்கமான பாணியில் நம்மை ஏதாவது ஏமாற்றி விளையாட இப்படிச் சொல்லுகிறானோ?? ஆம் அப்படித் தான் இருக்கணும். கண்ணன் இந்தத் திருமணத்தில் நாட்டத்துடனும், ஆவலுடனும் இருக்கிறான் என்பதை யசோதை உணரவில்லை. ஆனால் கண்ணனோ, “ அம்மா, ஏன் விருஷபாநுவின் மகளை நான் மணந்தால் என்ன ஆகும்? பிரளயமா ஏற்படும்? பல ஆண்கள் தங்களைவிட வயது அதிகமான பெண்களைத் திருமணம் செய்து கொள்ளுவதை நீ அறிய மாட்டாயா?” என்று கேட்டான். “இல்லை, மகனே, இல்லை, உன்னைவிட வயதில் பெரிய ஒரு மறுமகளை நான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. என்னால் அப்படி நினைக்கக் கூட முடியவில்லை. அதை நான் வெறுக்கிறேன்.” யசோதை கண்கள் குளமாகக் கண்ணனைக் கெஞ்ச ஆரம்பித்தாள்.
“இல்லை, அம்மா, ராதை உன்னை அருமையாகக் கவனித்துக் கொள்வாள். “
“கண்ணா, நீ எப்போதுமே இப்படித் தான் ஏதாவது பிடிவாதம் பிடிக்கிறாய். இவ்வளவு நாட்களாய் நீ குழந்தையாய் இருந்ததால் நான் உன்னுடைய பிடிவாதங்களுக்கு இடம் கொடுத்து வந்தேன். ஆனால் இந்த விஷயத்தில் நான் சற்றும் வளைந்து கொடுக்க மாட்டேன். மேலும் நீ இந்த ஆயர்பாடியின் தலைவனின் மகன். ராதை நம்மிடம் வேலை செய்யும் ஒருவனின் பெண். உனக்கு ஏற்ற ஒரு தலைவனின் மகளை நான் உனக்குத் தேர்ந்தெடுக்கிறேன். நீ ராதையை மணக்கவே முடியாது.” யசோதை முடித்துவிட்டாள். கோபமும், துக்கமும் அவள் நெஞ்சை அடைத்தது.
“அம்மா, ஒரு அருமையான மறுமகளை நீ இழந்துவிடுவாயே?” கண்ணன் கண்களில் குறும்பு கூத்தாடியது.
“அப்பா, கண்ணா, வேண்டாம், இந்த ராதையின் முற்போக்கான நடவடிக்கைகள் எதுவுமே எனக்குப் பிடிக்கவில்லை. அவள் எதற்கும், யாருக்கும், கவலைப்படுவதும் இல்லை. எதை நினைத்தும் யாரையும் நினைத்தும் பயப்படுவதும் இல்லை. எனக்கு வேண்டாம் அப்பா, இத்தகைய முற்போக்கான குணமும் நடத்தையும் கொண்ட மறுமகள். இந்த விருந்தாவனமே அவளின் இந்த நடவடிக்கை பற்றித் தான் பேசிப் பேசி அலுத்துப் போய்விட்டது. அவள் ஒரு நல்ல மறுமகளாய் இருக்கத் தகுதி வாய்ந்தவளாய் எனக்குத் தெரியவில்லை.”
“ம்ம்ம்??? அம்மா?? அப்போது நீ உன் மகனை இழக்க நேரிடுமே?” கூடியவரையிலும் கண்ணன் இதை ஒரு புதிர்போலவே அம்மாவுக்குச் சொல்ல நினைத்தாலும் அவனையும் அறியாமல் உள் மனது இதை ஒரு மிரட்டலாகவே காட்டியதோ? யசோதையின் முகம் அப்படித் தான் காட்டியது.
யோசனையுடனும், அதிர்ச்சியுடனும் மகனைப் பார்த்தாள் யசோதை. இதை அவள் எதிர்பார்க்கவில்லைதான். என்றாலும் கண்ணனிடம் எதையும் காட்டிக் கொள்ளாமல், “கண்ணா, கண்ணா, என்னை ஏனப்பா தொந்திரவு செய்கிறாய்?? நீ இப்படியெல்லாம் திடீரென நடக்கக் காரணம் என்ன?? போய் உன் தந்தையிடம் இது பற்றிப் பேசு! எனக்கு அலுத்துவிட்டது உனக்குப் புரியவைக்க என்னால் முடியவில்லை.”
“அம்மா, யசோதா அம்மா, என்ன இது?? என்னிடம் உனக்கு அலுப்போ, களைப்போ, ஏற்படாதே? அதேபோல் எனக்கு வரப் போகும் மனைவியிடமும் ஏற்படக் கூடாது. விருஷபாநுவின் மகள் ராதை தினமும் காலையும், மாலையும் உன்னிடம் ஆசி வேண்டி உன் பாதம் தொட்டு வணங்குவாள். இது உறுதி!”
“அதிகப் பிரசங்கி!” தன்னையுமறியாமல் யசோதை சிரித்தாள். கண்ணன் சொல்வது உண்மைதான். ரொம்ப நேரம் அவனிடம் கோபத்தைக் காட்ட முடியவில்லையே? கண்ணனை நந்தனிடம் போய்ப் பேசச் சொல்லி அனுப்பினாள் யசோதை. கண்ணனும் நந்தனிடம் சென்று தன் விருப்பத்தைச் சொன்னான். நந்தனோ மொத்த விஷயத்தையும் கேட்டுவிட்டு ஏதோ பெரிய நகைச்சுவைக் காட்சியைப் பற்றிக் கேட்டாற்போல் ரசித்துச் சிரித்தான் . சிரிப்பை அடக்காமலேயே, “நீ என்ன இன்னிக்குப் புதுசாய் பெண்கள் பின்னால் போகிறாயா கண்ணா? எனக்கு ஒண்ணும் அதிசயமோ ஆச்சரியமோ ஏற்படலை இந்தப் பெண்களில் ஒருத்தியை நீ மனைவியாக்கிக் கொள்ள ஆசைப் படுவாய் என்று நினைத்தேன்.”
“அப்பா, அப்போது உங்களுக்குச் சம்மதமா? அம்மாவைப் போய் ராதையைப் பெண் கேட்கச் சொல்லலாமா?”
“இல்லை, குழந்தாய்! உன் தகுதிக்கு நீ ஒரு இளவரசியை அன்றோ மணக்கவேண்டும்.” புன்னகை மாறாமலேயே நந்தன் சொன்னான்.
“ராதையின் அறிவுக்கும் அழகுக்கும் ஈடு சொல்லும்படியான இளவரசி யார் இருக்கிறார்கள்”
நீ எத்தனை இளவரசிகளைப் பார்த்திருக்கிறாய் கண்ணா?”
‘கோபியர் அனைவருமே இளவரசிகள் தானே! சொல்லப் போனால் இளவரசிகளை விடவும் இவர்களே தேவலை. மேலும் நாமெல்லாருமே இடையர்கள் தானே? இடைக்குலத்துப் பெண்ணை நான் மணந்தால் என்ன? என் தகுதிக்கு அதுதானே சரி?”
நந்தன் பேச்சை மாற்ற விரும்பினான். இன்னும் காலம் கனியவில்லை. கண்ணனைப் பற்றிய உண்மையான தகவலை இப்போது சொல்லலாமா தெரியவில்லை. ஆகவே கண்ணனிடம் நந்தன் சொல்கின்றான். “ ஐயனைப் பற்றி என்ன நினைத்தாய்? அவன் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்வான் என்றா?”
“அவனுக்கு இந்த விரஜபூமியில் உள்ள அனைத்து இளம்பெண்களும் இன்னும் மதுராவிலும் இளம்பெண்கள் உள்ளனர். அதை விடுங்கள் தந்தையே. அம்மாவைப் போய் விருஷபாநுவிடம் ராதையைப் பெண்கேட்கச் சொல்லி அனுப்புங்கள்.”
நந்தன் இப்போது கொஞ்சம் கலவரம் அடைந்தான். “என்னால் முடியாது, முடியவே முடியாது.” திட்டவட்டமாய் நந்தன் சொல்லக் கண்ணன் ஆச்சரியம் அடைந்தாலும் பணிவாகவே, “ஏன் தந்தையே?” என்று கேட்டான். கண்ணனுக்கும் இதில் ஏதோ இருக்கிறது என்ற சம்சயம் வந்துவிட்டதோ? ஆனால் நந்தன் அசரவில்லை. “நான் உன்னை ராதையை மட்டுமல்ல மற்ற எந்த கோபியர் பெண்ணையும் மணக்கவிட மாட்டேன். நீ கேட்பது எதையும் நான் மறுக்க மாட்டேன் என்பது தெரிந்து நீ உன் திருமணத்திற்கு என்னிடம் சம்மதம் கேட்கின்றாய். இந்த விஷயத்தில் நீ என்னிடம் சம்மதம் கேட்பதை விட குரு கர்காசாரியார் வரும்போது அவரிடம் கேட்டுக் கொள்.” நந்தன் பதில் முடிவாக இருந்தது.
“அவர் சரி என்று சொல்லிவிட்டால்”
“நிச்சயம் மாட்டார்.” நந்தன் இதில் மிகவும் திடமாக இருந்தான்.
ஒருவேளை சம்மதித்துவிட்டாரெனில்?”
“அப்போ நான் என் எதிர்ப்பைக் காட்டவில்லை. ஆனால் கர்காசாரியார் ஒத்துக் கொள்ளமாட்டார் என்பது நிச்சயம்.”
“சரி, நானே குருவிடம் பேசுகிறேன்.” கண்ணன் குரு வரும் நாளை எதிர்பார்த்துக் காத்திருந்தான். குருவும் வந்தார், கூடவே இன்னொருத்தரும் வந்தார். அவர் பெயர் சாந்தீபனியாம்.
தலைவி..கூடவே வரேன்..பின்னூட்டம் போட நேரம் இல்லை.
ReplyDeleteநேரம் கிடைக்கும் போது இங்க போயி பாருங்கள். உங்க ஸ்பெசல்.
"ஒரு குட்டியானையின் டயறிக்குறிப்பு"
http://kanapraba.blogspot.com/2009/08/blog-post.html
வாங்க கோபி, பின்னூட்டம் வெளியிட்டேன், இன்னிக்குத் தான் படிக்கிறேன் என்னனு, நீங்க சொன்ன பதிவைப் போய்ப் பார்க்கிறேன், உடனேயே, நன்றிப்பா. :))))))
ReplyDelete