எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, August 03, 2009

இந்தக் காலத்திலே தியாகின்னா யாருக்குத் தெரியும்?

நெ.12. பிச்சுப் பிள்ளை தெரு.

மீனாக்ஷி அம்மாள் வாசலைப் பார்த்தாள். அவர் வருகிற அறிகுறியே தெரியவில்லை. காலை பத்தரைக்கெல்லாம் தெருவே தகித்துக் கிடக்கிறது. வெளியே காய்ந்த வெயில் வீட்டுக்குள் புழுக்கமாக உருவெடுக்கிறது. ஞானா அசந்து தூங்குகிறாள். பாவம் கர்ப்பவதி! அதற்காக விசிறியை எவ்வளவு நேரம் தான் வீசிக் கொண்டிருக்க முடியும்?? கைக்கு ஓய்வு கொடுத்த மாதிரியும் இருக்கும், அவர் வருகிறாரா என்று பார்த்த மாதிரியும் இருக்கும் என்றுதான் வெளியே வந்திருந்தாள்.

“நான் வாசப்படிலே நிக்கறேங்கறதுக்காக வந்துடப் போறாரா என்ன?? அவருக்கு ஆயிரம் காரியங்கள்!தெருமண் புழுதியைக் கிளப்புகிற மாதிரி ஒரு காற்றடித்தது. மீனாக்ஷி அம்மாள் கண்களை மூடிக் கொண்டாள். ஒரு நாய் இரைக்க இரைக்க வேகமாய் ஓடியது. அடுத்த வீட்டிலிருந்து விசாலாக்ஷி எட்டிப் பார்த்தாள்.

“என்ன மீனாஷி, வாசல்லே நின்னுண்டு இருக்கே?” என்றபடி அருகில் வந்தாள். “அவர் வர்றாரானு பார்த்துண்டுருக்கேன்.” பளீரென்ற புன்னகையை வரவழைத்துக் கொண்டு சொன்னாள் மீனாக்ஷி அம்மாள். “உள்ளே வாங்கோ!”

வேண்டாண்டியம்மா! ரொம்பப் புழுங்கறது. காத்தாட வாசப்படிலேயே உக்காந்துக்கலாம். நோக்கு வேற ஜோலி ஒண்ணும் இல்லையே?”
இல்லை என்று தலையசைத்தபடி விசாலாக்ஷிக்கு எதிரே அமர்ந்தாள் மீனாக்ஷி அம்மாள். விசாலாக்ஷி வாயைப் பிடுங்குவதற்கு வந்திருக்கிறாள் என்று அவளுக்குத் தெரிந்து தான் இருந்தது. அதற்காக அவளை வெறுத்து, ஒதுக்கிவிட முடிகிறதா என்ன? மீனாக்ஷியம்மாளால் யாரையும் வெறுக்கவும் முடியாது. மனிதர்களை வெறுப்பது “அவருக்கு”ப் பிடிக்காது. “மனுஷாள்னா ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரிதான் இருப்பா மீனாக்ஷி! கையிலே இருக்கற எல்லா விரலும் ஒரே மாதிரியா இருக்கு? அப்படி இருந்தா நாம சாப்பிட முடியுமோ, சொல்லு!” என்பார்.
விசாலாக்ஷி கேட்டாள்:”ஞானபாநு அச்சுக்குப் போயிடுத்தா?”
இன்னும் இல்லே, மாமி!”
“ஈஸ்வரா, நோக்கு ரொம்பக் கஷ்ட காலம்டியம்மா. போனதரம் பத்திரிகை அச்சடிக்கறதுக்கும், ஸ்டாம்ப் வாங்கறதுக்கும் பணம் இல்லாமத் தானே உன்னோட ரெட்டை வடம் சங்கிலியை வித்தே?”
“ஆமாம், மாமி”-விசாலாக்ஷியின் கண்களை எதிர்கொள்ள முடியாமல் தலையைக் குனிந்து கொண்டாள் மீனாக்ஷியம்மாள்.

“பகவானே! இவ்வளவு கஷ்டத்துலே பத்திரிகை நடத்தணுமாங்கறேன்?”
“அதெல்லாம் புருஷா காரியம் மாமி! நாம ஒண்ணும் சொல்லப்படாது!”
“வாஸ்தவம், பத்திரிகை இருக்கட்டும். உன்னோட ஆத்துக்காரரோட தங்கை ஞானம் பிரசவத்துக்கு வந்திருக்காளே, அவளுக்கு வேணுங்கறதை செய்யறதுக்காச்சும் பணம் வேணுமோல்லியோ?”

மீனாக்ஷியம்மாள் பதில் பேசாமல் தெருவைப் பார்த்தாள். இந்த சம்பாஷணை அவளுக்குப்பிடிக்கவில்லை என்பது விசாலாக்ஷிக்குப் புரிந்தது. பேச்சை மாற்றினாள். “மீனாக்ஷி! நானே கேக்கணும்னு இருந்தேன். போன ஞானபாநுவிலே ஒரு கட்டுரை வந்ததே….. யாரோ நித்யதீரர்னு எழுதிருந்தாளே! ரொம்ப நன்னாருந்தது. என் புள்ளையாண்டான் கூடச் சொன்னான். கட்டுரைன்னா இப்பிடி இருக்கோணும்னு. யாராம் அது?”

“நம்ம பாரதியார்தான் மாமி!”
“யாரூ? சுப்ரமண்ய பாரதியா?”
“ஆமாம், அவரே தான். சரஸ்வதி, ஓர் உத்தம தேசாபிமானி, சாவித்திரி என்ற நிருபநேயர் இந்தப் பேர்ல எல்லாம் வேடிக்கைக் கதைகள், கவிதைகள் எழுதறதும் அவர்தான்.
“அதானே பார்த்தேன். இவ்வளவு அழுத்தமா பாரதியை விட்டா வேற யாரால எழுதமுடியும்? அதுசரி, உன் ஆத்துக்காரரோட லேகிய வியாபாரமெல்லாம் எப்படிப் போயிண்டிருக்கு?”
“நன்னா போயிண்டிருக்கு. ஆனா அதுலே வர்ற காசையும் பத்திரிகைல போட்டுடறார். அவருக்கு லோகத்துலே இருக்கற எல்லாத்தையும் விட தேசாபிமானம் முக்கியம்.” இதைச் சொல்லும்போது மீனாக்ஷியம்மாளின் குரல் கம்மி இருந்தது.

“நெஜம்தான். பின்னே??? நாலு வருஷமும் நாலு மாசமும் ஜெயில் தண்டனைன்னா சும்மாவா? பிரிட்டிஷ்காரன் புழிஞ்சுட மாட்டான்? அதோட அவருக்குப் பெருநோய்ங்கற குஷ்டம் வேறே வந்துடுத்து. திருச்சி, சேலம்னு ரெண்டு ஜெயில்லேயும் அவர் பட்ட கஷ்டம் அந்தக் கபாலீஸ்வரனுக்குத் தான் தெரியும். இவ்வளவு நடந்தும் மனுஷர் வீட்ல தங்கறாரா? கால்ல விஷ்ணு சக்கரத்தைக் கட்டிண்ட்டாப்ல ஊர் ஊராகப் போறார். கடற்கரையில கூட்டம் போடற எடத்துக்குத் திலகர் கட்டம் னு பேர் வைக்கறார்.”……….

"கபாலீஸ்வரரை விடுங்கோ மாமி! அவர் வார்த்தைக்கு வார்த்தை அன்னை பராசக்தி, அன்னை பராசக்தின்னு சொல்லிண்டிருக்காரே!... அவ கடைக்கண்ணைக் காட்டப் படாதா?” மீனாக்ஷியம்மாளின் முகம் காய்ந்து போன மல்லிகையைப் போல் வாடியது. வம்பளப்பவர்களிடம் கூட தன் மன ஆற்றாமையை வெளிப்படுத்த முடியும் என்கிற உணர்வு அவளைக் கொஞ்சம் வெட்கப் படச் செய்திருந்தது. சரியாக அதே நேரம் அவர் வந்தார். விசாலாக்ஷி வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தாள். “நான் வரேண்டி மீனாக்ஷி!” ஓட்டமும் நடையுமாக, வாசலில் இருந்து இறங்கி தன் வீட்டுக்குப் போனாள் விசாலாக்ஷி!.

அவர் தலையில் அங்கவஸ்திரத்தை முண்டாசுபோலக் கட்டியிருந்தார். கையில் இருந்த ஊன்றுகோலைச் சுவரில் சாற்றி வைத்தார். நடையில் கம்பீரம் கொஞ்சம் கூடக் குறையாமல் இருந்தது. மீனாக்ஷி அம்மாளை நேருக்கு நேர் பார்த்தார்.
“ஏன் உன் முகம் வாடியிருக்கு?”
“வீட்ல மணி அரிசியில்லே! ஞானம் கார்த்தால பழைய சாதம் சாபிட்டுட்டு சுருண்டு படுத்திருக்கா! ஆத்துலே தம்பிடி இல்லே! என்ன பண்ணலாம் சொல்லுங்கோ?”

அவர் மனம்விட்டுச் சிரித்தார். “இதுதானா உன் பிரச்னை? அன்னை பராசக்தி, லோகத்தையே ரக்ஷிப்பவள்…… அவள் இருக்கும்போது நமக்கேன் கவலை? அதைரியப் படாதே!”
வாசலில் போஸ்ட்மேனின் குரல் கேட்டது. “ ஐயா, மணிஆர்டர்!” அவர் வாசலுக்கு விரைந்தார். “என்ன?”
“ஞானபாநு மேனேஜர் பேருக்கு மணியார்டர் வந்திருக்குங்கய்யா!”
“மீனாக்ஷி! பராசக்தி வாசலில் நிக்கறா பாரு!”அவர் குரல் கொடுத்தார். மீனாக்ஷியம்மாள் கையெழுத்துப் போட்டுப் பணத்தை வாங்கினாள். அவள்தான் ஞானபாநு பத்திரிகையின் மேனேஜர், காரியதரிசி, குமாஸ்தா எல்லாம். போஸ்ட்மேன் போனதும் அவர் கேட்டார்:” எவ்வளவு வந்திருக்கிறது மீனாக்ஷி?
“ஒண்ணே முக்கால் ரூபாய்!”
“அப்பா….. இன்றைய பாடு கழிந்தது!”
***********************************************888888888********************************
அதே பிச்சுப் பிள்ளை தெரு! நெம்பர் 12
பிச்சுப்பிள்ளை தெரு கோடை வெயிலில் சூடேறிக் கிடந்தது. பைக்கை நிறுத்தியதும் தெருவோரத்தில் படுத்திருந்த கறுப்பு நாய் தலை உயர்த்திப் பார்த்தது. விநோத் ஹெல்மெட்டைக் கழற்றினான். பின்சீட்டிலிருந்து இறங்கிய முத்து கணேஷ் தயக்கமாகப் பார்த்தார்.
“என்ன ஸார், கண்டிப்பா விசாரிக்கணுமா?”
“ஆமாங்க, என் ப்ராஜக்டுக்கு இது ரொம்ப முக்கியம். அவர் வீட்டை ஒரு ஃபோட்டோவாவது எடுக்கணும். அப்போதான் பி.எச்.டி. வைவாவுலே அக்ஸெப்ட் பண்ணுவாங்க.”

முத்துகணேஷ் பத்திரிகைக்காரர். மயிலாப்பூர்வாசி. அதன் இண்டு இடுக்கெல்லாம் அறிந்தவர். அதனால்தான் அவரைக் கூட்டி வந்திருந்தான் விநோத். அவர்கள் நின்ற இடத்துக்கு நேர் எதிரே ஓர் ஓட்டு வீடு. அதன் சுவர்கள் எப்போது விழுமோ என்கிற நிலையில் ஓடுகளைத் தாங்கிப்பிடித்தபடி பலகீனமாக நின்றிருந்தது. வாசலில் சட்டையில்லாமல், கைலியோடு உட்கார்ந்திருந்தார் ஒருவர்.
“ஸார், இங்க சுப்ரமணியசிவா வீடு எங்கருக்கு?” முத்து கணேஷ் கேட்டார்.
“சிவாவா? யாரு?>>>>> ப்ளம்பர் சிவாவா?”
இல்லைங்க, தியாகி, சுப்ரமணியசிவா!”
“தியாகியா? தெரியலைங்களே! அந்தா….. அங்க அயர்ன் கடை இருக்கு பாருங்க. அங்க கேளுங்க, அவருக்கு கரெக்டா தெரியும்.”
விநோத் பைக்கை உருட்டிக் கொண்டு அயர்ன் கடைக்குப் போனான். பீடி பிடித்துக் கொண்டிருந்த கடைக்காரர், யோசித்துவிட்டு, “ரொம்பப் பழைய ஆளுங்கன்னா, அந்தா…. அந்த எதுத்த வீட்டுக்காரருக்குத் தான் தெரியும்… அவரு ரொம்ப வயசானவரு. அவர்கிட்டே கேளுங்க!” ஒரு வீட்டைக் காட்டினார், அயர்ன் கடைக்காரர்.

கதவைத் தட்டியதும் ஒரு எழுபது வயதுப் பெரியவர் வந்தார். விசாரித்ததும் ரொம்ப யோசனைக்குப் பிறகு பக்கத்து வீட்டைக் காட்டினார். ‘இங்கதான் சுப்ரமணிய சிவா இருந்தாரு” பதிலை எதிர்பாராமல் கதவை மூடிக் கொண்டு போனார் அவர்.
அவர் காட்டிய வீடு ஒரு ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேய்ந்த வீடு. வெள்ளையாகச் சுண்ணாம்பு அடித்திருந்தது. பக்க்த்திலேயே ஒரு காரை நிறுத்தும்படியான கேரேஜ். அதன் கதவு மூடிக் கிடந்தது. வீட்டுக்குள் இருந்து ஒரு பெரியவர் பக்கெட் நிறைய துணிகளை எடுத்து வந்து, கொடியில் காயப் போட்டுக் கொண்டிருந்தார்.
“என்ன சார்! அவர்கிட்டே பேசலாமா?” முத்து கணேஷ் கேட்டார்.
“வேணாங்க, இதுதான் அவர் இருந்த வீடான்னு கன்ஃப்ர்மா தெரியலை. பேசுறது வேஸ்ட்.”
“ஆமா ஸார், இந்தக் காலத்துலே தியாகின்னா யாருக்குத் தெரியும்? நடிகை வீடுன்னா தம்மாத்தூண்டு குழந்தை கூட அடையாளம் காட்டும்என்றார் முத்து கணேஷ்.
இருவரும் அந்த இடத்தை விட்டு நகர, பிச்சுப் பிள்ளை தெரு மெளனத்தில் ஆழ்ந்திருந்தது.

நன்றி: கல்கி 5-7-09
எழுதியவர் :பாலுசத்யா



நெஞ்சு பொறுக்குதில்லையே! :((((((((((((

12 comments:

  1. கீதா,
    சுப்ரமணியம் சிவா மயிலையில் இருந்தார் என்பது கூட எனக்குத் தெரியாது. நன்றி.

    பெற்ற அம்மா அப்பாவையே திதி அன்னிக்கு மட்டும் நினைக்கறவர்கள் மத்தியில தியாகிகளை நினைவில் கொள்வது பெரும்பாடு அல்லவா:((

    ReplyDelete
  2. //சுப்ரமணியம் சிவா மயிலையில் இருந்தார் என்பது கூட எனக்குத் தெரியாது. நன்றி.//
    எனக்கும்!

    ReplyDelete
  3. WOW THANKS FOR SHARING AN INSPIRATIONAL ARTICLE

    ReplyDelete
  4. @போர்க்கொடி, வேக வேகமாய் வந்து கமெண்டினதுக்கும், முக்கியமாய் இந்தப் பதிவைப் படிச்சதுக்கும் நன்னிங்கோ!!!!

    ReplyDelete
  5. @பித்தன், புரியலையே, என்ன சொல்றீங்க?

    ReplyDelete
  6. வல்லி, சுப்ரமண்யசிவா போன்றவர்களை இப்போதெல்லாம் யார் நினைக்கிறார்கள்??? உயர்ந்த சிந்தனைகள், ஆக்கங்கள் செய்ய எண்ணம் எல்லாம் வைத்திருந்தார். கடைசியில் எதுவுமே நடக்கலை! :(((((

    ReplyDelete
  7. @திவா, வல்லிக்குச் சொன்னது உங்களுக்கும் ரிபீட்டே போட்டுக்கறேன்.

    ReplyDelete
  8. @குப்பன் யாஹூ, உண்மையில் இந்தக் கதையைப் படிக்கும்போது மனசு ரொம்பவே கனத்துப் போச்சு! எங்கோ போகிறோம் நாம்? :(((((((((((

    ReplyDelete
  9. வ.உ.சி அவர்கள் தம் கடைசி காலத்தில் காந்திஜீயிடம் உதவி பணம் கேட்டு எழுதிய தொடர் கடிதங்களை ஹிந்து பத்திரிக்கை ஒரு முறை பிரசுரித்திருந்தது. தன்னால் ஏதும் செய்ய முடியாது என்பதை ஒற்றை வரியில் முகத்தில் அடிப்பது போல் காந்தி எழுதியதாகப் படித்ததும் நினைவிருக்கிறது.

    வாழ்ந்த காலத்திலேயே இவர்களெல்லாம் மறக்கப்பட்டிருந்தனர் என்றால் 60 வருடங்களுக்கு பிறகும் அவர்களையெல்லாம் நினைவு வைத்துக் கொள்வது சற்று கடினமானதுதான். இதைத்தான் காலவெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவது என்பார்களோ :(

    ReplyDelete
  10. //தன்னால் ஏதும் செய்ய முடியாது என்பதை ஒற்றை வரியில் முகத்தில் அடிப்பது போல் காந்தி எழுதியதாகப் படித்ததும் நினைவிருக்கிறது.//

    உண்மைதான், காந்தி அப்படித் தான் எழுதியதாக நானும் படிச்சிருக்கேன். :(
    ஆனால் அறுபது வருஷம் கழிச்சும் இந்த மாதிரித் தியாகிகளை நினைவில் வைச்சுக்கறது கஷ்டம்னு சொல்லுவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எப்போவோ கரிகாலன் ஆண்டான், ராஜராஜன் ஆண்டான் என்பதற்கு நினைவாக அவங்க கட்டிய கோயில்கள் இருக்கின்றன, இல்லைங்கலை, இந்த மாதிரி முகம் கூடத் தெரியாத தியாகிகளால் தான் இன்னிக்கு நாம் எல்லாரும் எதுவேணாலும் பேசவோ, எழுதவோ முடியுது. நாட்டை ஒன்றுபடுத்தவும், ஒரே நாடாக மாற்றவும் இவர்களே முக்கியமாகவும் இருந்தனர். இவங்க ஒற்றுமைதான் இன்று இவ்வளவு பெரிய நாடாக உலக அரங்கில் பெயர் சொல்லிக் கொண்டிருக்கிறது. அதையும் நாம நினைவில் வச்சுக்கணும். :(((((((((

    ReplyDelete