எச்சரிக்கை
இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.
Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.
Have a great day.
Have a great day.
பரமாசாரியாரின் அருள் வாக்கு
Saturday, August 29, 2009
கண்ணன் வருவான் கதை சொல்லுவான் - கோவர்தன மலையில் கண்ணன்!
அம்மைத் தடங்கண் மடவாய்ச் சியரும்
ஆனா யரும்ஆ நிரையும் அலறி
எம்மைச் சரணேன் றுகொள்ளென் றிரப்ப
இலங்கா ழிக்கையெந் தைஎடுத் தமலை
தம்மைச் சரணென் றதம்பா வையரைப்
புனமேய் கின்றமா னினம்காண் மினென்று
கொம்மைப் புயக்குன் றர்சிலை குனிக்கும்
கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே 3
267 கடுவாய்ச் சினவெங் கண்களிற் றினுக்குக்
கவள மெடுத்துக் கொடுப்பா னவன்போல்
அடிவா யுறக்கை யிட்டுஎழப் பறித்திட்டு
அமரர் பெருமான் கொண்டுநின் றமலை
கடல்வாய்ச் சென்றுமே கம்கவிழ்ந் திறங்கிக்
கதுவாய்ப் படநீர் முகந்தே றிஎங்கும்
குடவாய்ப் படநின் றுமழை பொழியும்
கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே 4
கோலாகலமாய்த் தயாராகிக் கொண்டிருந்தது விருந்தாவனம். இந்திரனுக்குத் தான் விழா எடுக்கவேண்டும் என்று சிலரும், இல்லை, இல்லை, கண்ணன் சொல்லுவதே சரி, நம்மைக் காத்து ரக்ஷித்து வரும் பசுக்களுக்கும், கன்றுகளுக்கும், வழிபாடுகள் செய்வதோடு, நமக்கு இறைவன் அளித்த கொடையான இந்த கோவர்தன மலைக்கும் வழிபாடு நடத்துவதே சரி என்று சிலரும். ஆகக் கூடி விருந்தாவனம் இரண்டாகப் பிரிந்தது. கண்ணனைப் பலரும், ஐயனைச் சிலரும் ஆதரித்தனர். ஐயனை ஆதரித்தவர்கள் இந்திரனுக்கு விழா எடுக்கத் தங்கள் அளவில் தயார் செய்து கொண்டிருந்தனர். கோபர்களின் தலைவன் ஆன நந்தனோ தன் அருமை மகன் பக்கம்தான். மற்ற கோபர்களிலும் பெரும்பாலோர் கண்ணன் பக்கமே. குரு கர்காசாரியாரும், குரு சாந்தீபனியும் கண்ணனையே ஆதரித்தனர். அவர்கள் இங்கே ஆசாரியர்களாக இருந்து விழாவை நடத்திக் கொடுக்கும் ஏற்பாடுகளில் மூழ்கி இருக்க ஐயனை ஆதரிப்பவர்கள் ஐயனின் தகப்பன் ஸ்தோககிருஷ்ணன் தலைமையில் கூடி அவர்களுக்கென ஒரு ஆசாரியர் தேவை என்பது பற்றி விவாதித்திக் கடைசியில் மதுராவில் இருந்து ஒரு நன்கு கற்றறிந்த அந்தணரை அழைத்து வந்திருந்தனர்.
பண்டிகை நாளும் வந்தது. மாடுகள், கன்றுகள் குளிப்பாட்டப் பட்டு நன்கு அலங்கரிக்கப் பட்டு ஒரு பெரிய ஊர்வலமாய் கோவர்தன் மலையை நோக்கிச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்தது. கோபர்கள் அனைவரும் இந்த ஊர்வலத்தில் தங்கள் மாடு, கன்றுகளோடு தாங்களும் செல்லத் தயாரானார்கள். வழியிலேயே ஒரே ஆட்டமும், பாட்டமும் கொண்டாட்டமுமாக இருந்தது. இளைஞர்கள் காளைகளைத் துரத்திவிட்டு அவை ஓடும்போது ஓடிப் போய்ப் பிடித்து, இளம்பெண்களின் கண்கள் முன்னால் அந்தக் காளைகளின் முதுகில் ஏறி அமர முயன்றனர். சிலர் தோற்றனர். சிலர் ஏறி அமர்ந்தனர். தோற்றவரைப் பார்த்து இளம்பெண்கள் தங்களுக்குள் சுட்டிக் காட்டிக் கொண்டு பேசிக் களுக்கெனச் சிரித்துக் கொண்டனர். வென்றவர் தங்கள் மார்பை நிமிர்த்திக் கொண்டு மிகப் பெருமிதமாய் இளம்பெண்களைக் கண்டு சிரித்த வண்ணம் சென்றனர். காளை மாடுகள் பூட்டிய வண்டிகளில் உணவுப் பொருட்களும், சில வண்டிகளில் சமைக்கப் பட்ட உணவுகளும் சென்றன. பெண்கள் தங்களை எவ்வளவு அழகாய் அலங்கரித்துக் கொள்ள முடியுமோ அத்தனை அழகாய் அலங்கரித்துக் கொண்டிருந்தனர். ராதையும் அந்தப்பெண்களில் ஒருத்தியாய் தன் திருமண நிச்சயதார்த்தம் கண்ணனுடன் நடந்தபோது யசோதை பரிசாய் அளித்த உடையில் ஜொலித்துக் கொண்டிருந்தாள். கிருஷ்ணனும், பலராமனும் ஊர்வலத்தை முன்னின்று நடத்தினார்கள்.
நன்கு வளர்ந்திருந்த பலராமனுக்கு இப்போதெல்லாம் ஏர்க்கலப்பைதான் ஆயுதமாய்த் தெரிந்தது. அதற்குக் குறைந்த வேறெதுவும் ஆயுதமாய்த் தெரியவில்லை. மற்றவர்களைவிட ஒரு பிடி உயரமாகவே இருந்த பலராமன் பொன்னிறத்துடன் இருந்தான். அவன் அணிந்திருந்த நீலநிற உடை அதை நன்கு எடுத்துக்காட்ட, நீலமேக சியாமளன் ஆன நம் கண்ணனோ, மஞ்சள் பீதாம்பரத்தில் ஜொலித்தான். மேலும் இப்போதெல்லாம் கண்ணனின் எடுத்துக் கட்டிய சிகையில் மயில் பீலி ஒன்றை வைத்துக் கொண்டு அலங்கரித்துக் கொள்ளுவதை வழக்கமாய்க் கொண்டிருந்தான். கழுத்தையும், கைகளையும் மலர்களால் செய்யப் பட்ட ஆபரணங்கள் அலங்கரிக்கத் தன் இடையில் தன்னைவிட்டு ஒரு கணமும் பிரியாத புல்லாங்குழலைச் சொருகிக் கொண்டிருந்தான். கண்ணன் தொடரும் கூட்டத்தின் அனைத்து மக்களையும் தனித்தனியாய்ப் பெயர் சொல்லி அழைத்துப் பேசுவதையும், இளம்பெண்களோடு சகஜமாகவும், அதே சமயம் மரியாதை தவறாமலும் பேசுவதையும் சாந்தீபனியும், கர்காசாரியாரும் கவனித்தனர். என்னதான் கண்ணன் சொன்னான் என்று கோவர்தனுக்கு விழா எடுக்கக் கூடிவிட்டாலும், என்ன நடக்கப் போகிறதோ என்ற உணர்ச்சிவசத்தில் அவர்கள் ஒரு எதிர்பார்ப்புடன் இருந்தனர்.
மதியம் போல் கோவர்தன மலையை அடைந்த அனைவரும் கொண்டு சென்றிருந்த உணவைப் பங்கிட்டுக் கொண்டும், பகிர்ந்து கொண்டும் உண்டனர். பின்னர் கிடைத்த ஓய்வு நேரத்தில் ஆடிப் பாடினர். ஒருவர் மற்றவரைக் கேலி செய்து மகிழ்ந்தனர். காட்டு மிருகங்களின் சப்தங்களைப் போல் குரலெடுத்துக் கேலி செய்து களித்தனர். இரவு நன்கு தூங்கிக் காலை எழுந்து வழிபாடுகளுக்குத் தங்களைத் தயார் செய்து கொண்டனர். கொண்டு போன பசுக்கள் அனைத்தும் கறக்கப் பட்டு பால் சேகரம் செய்யப் பட்டது. அனைவரும் குரு கர்காசாரியார் முன் செல்ல கோவர்தன மலை உச்சியை நோக்கி நடக்க ஆரம்பித்தனர். அங்கே சென்றதும் குரு கோவர்தன மலைக்குத் தன் வழிபாட்டைத் தொடங்கினார். அனைவருக்கும் மனதில் கோவர்தனம் மலைகளுக்கெல்லாம் மட்டும் அரசன் இல்லை, தங்களுக்கும் கோவர்தன மலையே கடவுள் என்ற எண்ணம் முன்னின்றது. வழிபாடு முடிந்து கற்பூர ஆரத்தி தொடங்க ஆயத்தம் செய்தார் கர்காசாரியார். அப்போது கண்ணன், கோவர்தன மலையின் மறுபக்கத்தில் இருந்து ஐயனும், அவன் நண்பர்களில் சிலரும் மலை ஏறி வந்து கொண்டிருந்ததைக் கண்டான். அதுவும் பெண்கள் இருக்கும் பகுதியில், இளம்பெண்களோடு சேர்ந்து ராதையும் நின்று கொண்டு வழிபாடுகளில் ஆழ்ந்து போயிருந்த பகுதியை நோக்கி ஐயனும், அவன் நண்பர்களும் முன்னேறிக் கொண்டிருந்ததைக் கண்டான். கண்ணன் இதழ்களில் புன்முறுவல் தோன்றியது.
கோபர்களில் சிலரும் ஐயனும் அவன் நண்பர்களும் வருவதைக் கண்டனர். அவர்களுக்கு அவன் வழிபாடுகளில் ஏதேனும் இடையூறு செய்யப் போகின்றானே என்ற அச்சம் ஏற்பட்டது. அதற்குள் ஏதோ முடிவுக்கு வந்த கண்ணன், “ஸ்ரீதாமா, ஐயனும், அவன் நண்பர்களும் வழிபாட்டில் கலந்து கொள்ள வருகின்றனர் போலும். அவர்களை இங்கே அழைத்துவா! ஐயன், உங்கள் நண்பர்களை அழைத்துக் கொண்டு இங்கே வந்துவிடுங்கள். வழிபாட்டை நன்கு காணமுடியும். “ கண்ணனே அழைத்துவிட்டான் ஐயனையும், அவன் நண்பர்களையும். ஆனால் இது என்ன?? ஐயன் வெகுவேகமாய்த் திரும்புகின்றானே??? வந்ததை விட வேகமாய்க் கீழே இறங்குகின்றானே? வழிபாட்டில் ஆரத்தி காட்டப் பட்டது கண்ணனுக்கும் சேர்த்து. அன்றிரவு!!!!
Subscribe to:
Post Comments (Atom)
ம்... அப்புறம்?
ReplyDelete