எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, August 05, 2009

கண்ணன் வருவான் கதை சொல்லுவான்! ராதையைக் கண்ணன் மணப்பானா?

ராதையின் நிலையை இங்கே பார்க்கவும். ரொம்ப ரொம்ப மன்னிக்கவும் தாமதமான பதிவுகளுக்கு. தவிர்க்க முடியாத தாமதம். நடுவில் நக்ஷத்திர வாரம் வேறே! இந்தப் பதிவுக்குத் தான் எல்லாரும் வராங்கனு சில முக்கியமான இடுகைகளை வேறே இங்கே போட வேண்டி இருக்கு. புரிதலுக்கு நன்றி.
***********************************************************************************
காலியனைக் கண்ணன் அடக்கியபோது ராதை மயங்கியதில் இருந்தும், அதன் பின்னர் அவளை அவள் வீட்டில் அடைத்து வைத்ததையும் எண்ணி எண்ணிக் கண்ணன் ஒரு முடிவுக்கு வந்தான். ராதையை எவ்வாறேனும் ஐயனின் பிடியில் இருந்து விடுவித்துத் தான் மணந்து கொள்ளவேண்டும் என்பதே அது. ராதை தான் தன் ஜீவன் என்று கண்ணன் உணர்ந்தான். அவள் பார்வை, சுவாசம், பேச்சு, அனைத்துமே தனக்கு ஒரு சக்தியைத் தருவதையும், அந்த சக்தி இல்லாமல் தான் இல்லை என்பதையும், தன்னில் ராதை நிறைந்துள்ளாள் என்பதையும், ராதை இல்லாமல் தான் வெறும் கூடு எனவும் உணர்ந்திருந்தான் கண்ணன். ஆகவே இப்போது இன்றைக்கு இந்தப்பெளர்ணமி அன்று நடைபெறப் போகும் இந்த “ராஸ்” உற்சவத்திற்கு ராதை வரமுடியாதே என மனம் தளராமல் எவ்வாறேனும் அவளையும் இதில் ஆடவைக்கவேண்டும் என உறுதியும் பூண்டான் கண்ணன். புல்லாங்குழலை எடுத்து இசைத்தான். கட்டாயம் ராதைக்கு இந்த இசை கேட்கும் என்பதில் சந்தேகமே இல்லை. இசையைக் கண்ணன் நிறுத்தினான். அப்போது தான் ராதைக்கு உலகமே இருண்டது.

களைத்திருந்தாள் ராதை. மிக மிகக் களைத்திருந்தாள். கண்களை அவளால் திறக்கவே முடியவில்லை. எப்படித் தூங்கப் போனாள், தூக்கம் எவ்வாறு வந்தது என்பதே தெரியாவண்ணம், எத்தனை நேரம் தூங்கினோம் என்பதும் தெரியாவண்ணம் தூங்கிவிட்டாள். ஆனால், ஆனால் அவள் உடல் மேல் ஒரு மூச்சுக் காற்று பட்டது. இல்லை இல்லை இது அவளின் மூச்சுக் காற்றே தான்.
அவளே இன்னொரு மனுஷியாகி, ம்ஹும், அதுவும் இல்லையே, கானாவாகி விடும் மூச்சைப் போல் அல்லவோ உள்ளது? “கானா, என் கானா!” அரற்றினாள் ராதை தூக்கத்திலேயே. அவள் மேல் இதமாக வருடிச் சென்றது ஒர் ஸ்பரிசம். தூக்கிவாரிப் போட்டு எழுந்தாள் ராதை. சுற்றுமுற்றும் பார்த்தாள். யாரோ, இன்னும் யாரோ அந்த அறையில் இருப்பதாய் ஓர் உணர்வு அவளுக்கு. அவள் கத்தப் போவதை உணர்ந்தாப் போல் மெல்ல மெதுவாய் ஓர் இனிமையான, இதமான குரல் அவளருகே வந்து மெல்லச் சொன்னது, “ராதை, பேசாமல் இரு, கத்தாதே, மாற்றுடை அணிந்து “ராஸ்’ ஆடத் தயாராய் இரு.” என்றது அந்தக் குரல். ராதையின் கண்கள் விரிந்தன. அவள் கனவேதும் காணவில்லையே? இது கனவா, நனவா? ஆஹா, இது கானா! என் கானா! ராதை குரல் வந்த திசையை நோக்கிச் சென்று தன்னிரு கரங்களாலும் கானாவைக் கட்டிக் கொண்டாள். மேலே நிமிர்ந்த அவள் கண்களில் கூரையில் இருந்து யாரோ தொங்குவதும் தெரிந்தது. உடனேயே கண்ணன் ராதையிடம், “ சத்தம் போடாமல், உடை மாற்றிக் கொண்டு என்னோடு வா ராதை! உனக்காகவே இந்த ராஸ் காத்துக் கொண்டிருக்கிறது.” என்று சொன்னான். அந்தக் குரலில் இருந்த ஏதோ ஓர் இனம் புரியாத ஈர்ப்பு அவணையும் ஈர்த்ததோடல்லாமல் அவள் உடலே லேசாகிக் காற்றில் பறப்பது போல் உணர்ந்தாள்.

அந்த இருட்டிலேயே எவ்வாறோ தன் ராஸ் உடையைக் கண்டுபிடித்து அணிந்து கொண்ட ராதையிடம் கண்ணன், “ என் தோள்களில் ஏறிக் கொள் ராதை, நான் உன்னை மேலே அனுப்புவேன். அங்கே ஸ்ரீதாமா உன்னைப் பிடித்துக் கூரையின் மேல் இழுத்துக் கொள்வான். கூரையில் பலராமன் காத்திருக்கான். அவன் ஸ்ரீதாமாவின் கைகளைப் பிடித்து உன்னையும், ஸ்ரீதாமாவையும் இழுத்துக் கொள்ளுவான். பின்னர் நான் ஏறி வந்துவிடுவேன். “ என்று சொல்ல, இந்த அன்பைப் பார்த்த ராதைக்குப் பேச்சே வரவில்லை. கூரை ஏறத் தயாரானாள். “ராதை, பாதியிலேயே பயப்படமாட்டாயே?” கண்ணன் கேட்க ராதை ,”கானா, நீ இருக்கையில் எனக்கு என்ன பயம்?” என்று சொல்லிவிட்டுக் கண்ணன் சொற்படியே நடந்தாள். ஸ்ரீதாமா அவளைக்கூரையின் மேலே ஏற்ற, பலராமன் ராதையை இழுத்துக் கூரையில் விட்டுவிட்டு ஸ்ரீதாமாவின் கால்களைப் பிடித்துக் கொண்டு ஏற முயலும் கண்ணனையும், ஸ்ரீதாமாவையும் ஒரே நேரத்தில் கூரையில் இழுத்துப் போடுகிறான். அப்பா! வலிமையுள்ளவனாய் இருப்பதில் எத்தனை நன்மை! பலராமன் எண்ணிக் கொள்கிறான். சற்று நேரம் கூரையின் மேலேயே நடந்த அனைவரும் ஓர் இடத்திற்கு வந்ததும், முதலில் பலராமன் குதிக்க, அவன் தோளில் ஸ்ரீதாமா நிற்க, கிருஷ்ணன், ராதையையும் தூக்கிக் கொண்டு ஸ்ரீதாமாவின் தோளில் இறங்கிப் பின்னர் கீழே குதிக்க, மறுபடியும் இருவரும் பூமிக்கு வந்தார்கள். அனைவரும் யமுனைக்கரையை நோக்கி நடக்க அங்கே காத்திருந்த இளைஞர் கூட்டம் ஆர்ப்பரிக்கிறது அனைவரையும் பார்த்து. ராஸ் ஆட்டம் விறுவிறுப்பாய் ஆடப் படுகிறது.
காலையில் ராதையின் மாற்றாந்தாய் கபிலா கதவைத் திறந்து பார்க்க ராதை அசந்து தூங்குகின்றாள். தன்னை மறந்து தூங்கும் அவள் முகத்தில் ஓர் அலாதியான ஒளியும், நிம்மதியும். செக்கச் சிவந்த இதழ்களில் ஒரு புன்சிரிப்பு. கபிலாவுக்கு அதிசயமாய் இருக்கிறது. ஆனாலும் பெண் வெளியே செல்லவில்லை அல்லவா? அமைதி அடைகிறாள்.

இங்கே கண்ணனோ, அமைதி இல்லாமல் யோசிக்கிறான். பலராமனுக்குக் கூடக் கொஞ்சம் வருத்தம் தான், ராதையை அவள் வீட்டில் அடைத்துப் போடுவது குறித்து. இதற்கு ஏதானும் செய்யவேண்டும், எனக் கண்ணனிடம் சொன்னதுக்குக் கண்ணனோ அதைத் தான் பார்த்துக் கொள்வதாய்ச் சொல்லிவிடுகிறான். வீட்டுக்கு வந்தான் கண்ணன். தன் தாய் யசோதையைப் பார்த்துப் புன்னகையுடன், “அம்மா, விருஷபானுவுக்கும், அவன் மனைவிக்கும் ஒரு செய்தி அனுப்பவேண்டுமே!” என்று சொல்கின்றான். “என்னப்பா” என யசோதை கேட்க, “ராதைக்கு மணமகன் தயார் எனச் சொல்லவேண்டும்” என்கிறான் கண்ணன். யசோதை சிரித்தாள்:” கண்ணா, என் கண்ணா, அவளுக்குத் தான் ஏற்கெனவே நிச்சயம் ஆகி விட்டதே, ஐயனும் போரிலிருந்து திரும்பிவிட்டானாமே? சீக்கிரமே பிருந்தாவனமும் வரப் போகிறானாமே? ராதைக்குக் கல்யாணம் ஆகிவிடும்.” என்று தன் மகனைத் தேற்றுவது போல் கூறினாள். “ராதை ஐயனை மணம் புரிந்து கொள்ளக் கூடாது!” கண்ணன் சொன்னான். யசோதை, சரிதான், இந்தப் பையன் தன் வம்புத்தனம் ஏதோ ஆரம்பிக்கிறான் போல. எப்போவும், எதிலும் இவனுக்கு விளையாட்டுத் தான். “சரிப்பா, பெரியவங்க நீங்க பார்த்திருக்கிற மாப்பிள்ளை யாரு சொல்ல முடியுமா?” யசோதை கேட்டாள்.

“வேறே யாருமே இல்லை, நான் தான் அந்த மாப்பிள்ளை!” கண்ணன் சொல்கின்றான்.

“என்ன??” யசோதை கத்தினாள். சற்று நேரம் பேச்சே வரவில்லை அவளுக்கு.

5 comments:

  1. அட! இப்படி ஒரு தொடர் வந்துகிட்டு இருந்ததிலே?

    ராதைக்கு தூக்கம் வரலே. சிலருக்கு நல்லாவே வருது!
    ஹிஹிஹி.
    :P:P:P

    ReplyDelete
  2. அட! இப்படி ஒரு தொடர் வந்துகிட்டு இருந்ததிலே?//

    @thivaa, grrrrrrrrrrrrrrrrrrrrrrrrr
    தூ.மூ.னா தூங்கத் தான் செய்வாங்க! :P:P:P:P:P

    ReplyDelete
  3. //“வேறே யாருமே இல்லை, நான் தான் அந்த மாப்பிள்ளை!” கண்ணன் சொல்கின்றான்.

    “என்ன??” யசோதை கத்தினாள். சற்று நேரம் பேச்சே வரவில்லை அவளுக்கு.//

    ம்?.. அப்புறம்?..

    ReplyDelete
  4. வாங்க ஜீவி சார், நல்வரவு, நீங்க படிக்கிறது சந்தோஷமா இருக்கு. அப்புறம் என்ன?? கொஞ்சம் பொறுங்க. அவ்வளவு சீக்கிரமா பிள்ளையைப் பெத்தவங்க சம்மதிப்பாங்களா என்ன?? :))))))))))

    ReplyDelete
  5. கண்ணன்னா கண்ணன்தான். ச்சோ ச்வீட்!

    ReplyDelete