இயக்கமே நின்றுவிட்டது. அனைவரும் செய்வதறியாது திகைத்துச் சிலையாக நின்றனர். மகத வீரர்கள் சண்டைபோட்ட நிலையிலேயே நின்றனர். அவர்களை வீழ்த்த முயன்ற யாதவத் தலைவர்களின் கைகளும் வாட்களை ஓங்கிய நிலையிலேயே நின்றுவிட்டிருந்தன. பலராமனால் சூழப் பட்டுப் பாதுகாக்கப்பட்டிருந்த வசுதேவருக்கோ நடந்தது நனவிலா அல்லது தம் கனவா என்ற சந்தேகம் மனதைத் துளைத்தது. அனைவரிலும் பரிபூரண பிரக்ஞையோடு இருந்தது கண்ணனும், பலராமனும் மட்டுமே. அனைவருமே ஓங்கிய வாளோடு கண்ணனையும், அவனருகே வெட்டப் பட்டிருந்த கம்சனின் தலையையும் கண்டனர். சங்கை முழக்கிக் கொண்டிருந்த கண்ணனையும் கண்டனர். உயிர்பெற்றெழுந்தாற்போல் மக்கள் கூட்டம் கண்ணனிடம் பாய்ந்தது. கண்ணன் தன் கை வாளைத் தூக்கி எறிந்தான். ஓடினான் தன்னைப் பெற்ற தந்தையிடம். இரு கைகளையும் கூப்பியவண்ணம் கீழே விழுந்து வணங்கினான் தந்தையை. மிகப் பணிவோடும், வணக்கத்தோடும், “தந்தையே, என்னை ஆசீர்வதியுங்கள்” என்றான். வசுதேவருக்கோ அழுகை அடங்காமல் பொங்கி வந்தது. செய்வதறியாமல் நின்றவர் தன் மகனை இரு கைகளாலும் தூக்கிக் கட்டி அணைத்தார். அவரை அறியாமல் வாய்விட்டுச் சத்தம் போட்டுப் பெரியதாய் அழுதார். ஆஹா, இந்த மகனுக்காகவன்றோ இத்தனையையும் பொறுத்துக் கொண்டு, இவன் ஒருநாள் வருவான், நம் கனவைப் பூர்த்தி செய்வான் எனக் காத்திருந்தோம்?? ஆஹா அவன் வந்தும் விட்டான், நம் கனவும் நனவாயிற்றே? தீர்க்கதரிசனம் உண்மையாகிவிட்டது. அழுதவண்ணமே வசுதேவர் தன் மகனின் தோள்களில் சாய்ந்தார். மகன் தந்தையைத் தேற்றினான்.
இத்துடன் கண்ணன் கதையின் முதல் பாகமும், அவனின் சிறு வயதுக் கொட்டங்களும் முடிந்தன. இனி கண்ணனை நாம் ஒரு இளவரசனாக அரச மரியாதைகளுடனும், அரச உடைகளுடனும் காணப் போகிறோம். அவன் வாழ்க்கைப் பாதையின் திசைகள் மாறப் போகின்றன. அவனுக்கு அளிக்கப்போகும் அரசுப் பதவியை அவன் மறுக்கப் போகிறான். அவன் வாழ்வின் முக்கியப் பங்கு வகிக்கப்போகும் பெண்களைச் சந்திக்கப் போகின்றான். அவர்களுக்கு அவன் கொடுக்கும் வாக்குறுதிகள், அவர்களுடனான உறவின் உண்மைகள், அவற்றின் விளைவாய் ஏற்படப் போகும் அரசுரிமைப் போர்கள் என அனைத்தையும் பார்க்கப் போகிறோம். நம் கதாநாயகன் கண்ணன் மட்டுமே. அவன் அத்தையான குந்தியின் மகன்களுக்காக அவன் செய்யப் போகும் உதவிகள், தியாகங்கள், அவர்களின் மண வாழ்க்கையில் கண்ணன் வகிக்கும் பங்கு என அனைத்துமே பார்க்கப் போகிறோம். இனி வரப் போகும் பாகத்தில் குருவிற்குக்கண்ணன் அளிக்கப் போகும் குரு தக்ஷணையும், பாஞ்சஜன்யம் அவனுக்குக் கிடைக்கப் போகும் விதம், மேலும் ஒரு நாட்டின் மொத்தக் குடிமக்களும் உலகிலேயே முதல்முறையாக சொந்த நாட்டை விட்டு வெளியேறி வேறு நாட்டில் குடியேறுவது, (The Exodus) ருக்மிணிக்குக் கொடுத்த வாக்கின்படி அவளைக் காக்க எடுக்கும் முயற்சியும் பார்க்கலாம்.
முதல் பாகம் முடிந்தது!
அருமையாகவும் எளிமையாகவும் உங்கள் வரிகளில் மூலம் மீண்டும் கண்ணன் சிறுவயது கதையை படித்தாகிவிட்டது.
ReplyDeleteநன்றி என்ற வார்த்தையை தவிர வேற எதுவும் இல்லை. அடுத்த வர இருக்கும் பகுதிகளை நீங்கள் சொன்னதே மிகுந்த ஆவல் ஏற்படுக்கிறது.
தொடருங்கள் தலைவி ;))
cant wait for next part
ReplyDelete:)))
ReplyDeleteஅருமையாகச் சொல்லி வருகிறீர்கள் அம்மா. மீண்டும் மீண்டும் படிக்கணும். மேலும் வருவதைப் படிக்கவும் ஆவலுடன்...
வாங்க கோபி, நன்றி நான் இல்லை சொல்லணும், விடாமல் படிக்கிறதுக்கு. நன்றிப்பா.
ReplyDeleteவாங்க எல்கே, உங்களுக்குத் தெரியாததா?? என்றாலும் உங்கள் ஆர்வம் உற்சாகமூட்டுகிறது. நன்றிப்பா.
ReplyDeleteவாங்க கவிநயா, எப்படியோ வந்துட்டுப் போறீங்க, எனக்குத் தான் சில(பல) சமயங்களில் முடியலை, நன்றிம்மா.
ReplyDelete