மணிமகுடம் கிடைத்தது!
கண்ணன் தன் தந்தையை நமஸ்கரித்ததையும், வசுதேவர் அவனைத் தன்னிரு கரங்களால் எடுத்து அணைத்ததையும் பார்த்திருந்தாள் தேவகி. கடைசியாக இத்தனை வருடங்களுக்குப் பின்னர் தந்தையும் மகன்களும் சேர்ந்துவிட்டனர். அதோ கண்ணனுக்கு அருகே பலசாலியாகவும் கம்பீரமாகவும் வருவதுதான் பலராமனா? ரோஹிணி அக்காவால் வளர்க்கப் பட்டவனா?? கண்ணீர் பொங்கி வெள்ளம்போல் வந்தது. அந்த வெள்ளத்தினூடே நீந்தி வருவது போல் தெரிந்தான் கண்ணன். அவள் அருகே வராமல் போயிடுவானோ? தன்னைச் சூழ்ந்த தோழியரை விலக்கிவிட்டுக் கீழே இறங்கிக் கண்ணனின் பாதையில் நின்றாள் தேவகி. தன் வளர்ப்புத் தந்தையிடம் பேசிய கண்ணனோ தேவகி இருக்கும் பக்கமே வந்து கொண்டிருந்தான். தேவகியைப் பார்த்தான். அவளுக்கு வார்த்தைகளே வரவில்லை. தன்னிரு கரங்களையும் நீட்டினாள். அவள் நீட்டிய கரங்களுள் அவன் அடைக்கலம் புகுந்தான். “அம்மா”
அவ்வளவு தான். அந்த மந்திரச் சொல் தேவகியை மயக்கம் அடைய வைத்தது. ஒரு பூவைப் போல் தன் தாயைத் தூக்கி அவள் மயக்கத்தைத் தெளிவிக்க முயன்றான் கண்ணன். அவளைச் சூழ்ந்து அவளுக்கு வைத்தியம் பார்க்க வந்தோரை விலக்கிவிட்டுத் தன் கைகளால் அவளைச் சுமந்து கொண்டு வசுதேவரின் மாளிகைக்கு வந்தான் கண்ணன். அதற்குள்ளாக மயக்கம் தெளிந்த தேவகி மனதில் வெட்கம் சூழ எழுந்து அமர்ந்தாள். அனைவருக்கும் உயிர் வந்தாற்போல் நிம்மதியாய் இருந்தது. அங்கு வந்திருந்த யாதவத் தலைவர்கள் அனைவருமே வசுதேவருக்கும், தேவகிக்கும் வேண்டியவர்களே. ஆகையால் அனைவருக்கும் தேவகி போட்டிருந்த சபதத்தினால் மனம் கலங்கி இருந்தது. ஆனால் கண்ணனோ அவற்றை எல்லாம் ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டான். அப்போது அங்கே கட்டியம் கூறும் சப்தம் கேட்க அனைவரும் திரும்பிப் பார்த்தனர். வசுதேவரும், கர்காசாரியாரும், சாந்தீபனி பின் தொடர வந்து கொண்டிருந்தனர். சாந்தீபனிக்குப் பெருமை. வேத வியாசரின் கட்டளைப்படி தன்னால் விருந்தாவனத்தில் சில மாதங்கள் கண்ணனுக்கு ஆயுதப் பிரயோகம் கற்றுக் கொடுத்ததையும், கண்ணன் அதில் தேர்ந்திருப்பதையும் எண்ணி மனம் மகிழ்ந்தார். மேலும் அவர் கம்சனின் விருந்தாளிகளாய் வந்திருந்த அவந்தி தேசத்து ராஜகுமாரர்கள் விந்தன், அநுவிந்தன் இருவருக்கும் குருவாக இருக்கவும் தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தார். இவை எல்லாவற்றாலும் அவர் மனம் மகிழ்ந்து இருந்தது.
சற்று நேரம் அவர்கள் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கே மதுராவின் காவலையும், பாதுகாப்பையும் ஏற்றிருந்த ப்ரத்யோதா வந்தான். அவன் முகம் கவலைக்கிடமாய் இருந்தது. வசுதேவரைப் பார்த்து, “ஷூரர்களின் அரசே, நாம் சீக்கிரம் ஏதாவது நடவடிக்கை எடுக்கவேண்டும், நிலைமை மிகவும் மோசமாய் இருக்கிறது. கட்டுக்கடங்காமல் போய்விடுமோ என அஞ்சுகிறேன். எப்போது பகைவர்கள் மதுராவின் மேல் பாய்வார்கள் என்பதைக் கணிக்க முடியவில்லை/” என்றான்.
“ஆம், உண்மைதான், வந்திருப்பவர்களில் கம்சனின் விசுவாசிகள் பலரும் இருக்கின்றனர். முக்கியமாய் விதர்ப்பதேசத்து இளவரசன்.. ம்ம்ம்ம்.., இப்போது என்ன செய்யலாம் ப்ரத்யோதா??” வசுதேவர் கவலையுடன் கேட்டார். ப்ரத்யோதாவோ, “ஐயா, வந்திருப்பவர்களை விடுங்கள், அவர்கள் விருந்தாளிகள். ஆனால் மதுரா நகரை இப்போது மூவாயிரம் மகத வீரர்கள் சூழ்ந்திருக்கின்றனர். அவர்களின் இளவரசனும், தளபதியும் ஆன வ்ருதிர்கனன் கொல்லப் பட்டிருக்கின்றான். மேலும் மகத நாட்டுச் சக்கரவர்த்தியின் அன்புக்குரிய இரு பெண்களின் கணவனும், மறுமகனும் ஆன கம்சனும் கொல்லப் பட்டிருக்கின்றான். ஜராசந்தன் வேறு எதைப் பொறுத்துக் கொண்டாலும் தன் மறுமகன் கொல்லப் பட்டதையும் தன்னிரு பெண்களும் விதவை ஆனதையும் ஒருகாலும் மன்னிக்கமாட்டான். கம்சனின் ராணிகள் ஆன அஸ்தி, ப்ரப்தி இருவரும் எப்போது நம் பக்கம் பாய்வார்கள் தங்கள் தகப்பனின் துணையோடு என்பதையும் அறியமுடியவில்லை. கம்சன் நம்மிடம் எப்படி இருந்தாலும் அந்தப் பெண்களிடம் ஒரு நல்ல கணவனாகவே நடந்து கொண்டிருக்கிறான். அந்தப் பெண்களின் துயரம் சகிக்க முடியவில்லை. எப்போது யார் என்ன சொல்வார்கள், செய்வார்கள் எனக் கணிக்கமுடியாமல் இருக்கிறது.” என்று வருத்தத்தோடே சொன்னான்.
வசுதேவர் யோசனையோடேயே சொன்னார்.”நம்மிடையே மாற்றுக் கருத்துக்களுக்கு இடம் கொடுக்காமல் அனைவரும் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கவேண்டும். அந்த முடிவை விரைவிலும் எடுக்கவேண்டும்.” என்றார். மேலும் ப்ரத்யோதா, “அரசரான உக்ரசேனர் மிகவும் பலஹீனமாய் உள்ளார். மனதளவில் மட்டுமல்லாமல் பல வருடங்கள் சிறை வாசத்தால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப் பட்டுள்ளார். என்னதான் கம்சன் மிகக் கொடூரமானவன் என்றாலும் அவரின் ஒரே மகன் கொல்லப் பட்டிருக்கிறான். அதனால் அவரால் இப்போது நிர்வாகம் செய்யமுடியுமா சந்தேகமே. நம்மில் வேறு யாராவது தலைமைப் பொறுப்பை உடனடியாக ஏற்றுக் கொள்ளவேண்டும். “ ப்ரத்யோதாவின் இந்தப் பேச்சைக் கேட்ட மற்ற யாதவத் தலைவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அவர்கள் மனதிற்குள் தானே தலைவனாகும் எண்ணமே ப்ரத்யோதாவிற்கு இருக்கிறதோ எனத் தோன்றியது. அதில் எவருக்கும் சம்மதமும் இல்லை. இப்படி எல்லாம் பேசி நம்மை மனம் மாறச் செய்கிறானோ என்ற எண்ணமும் மேலோங்கியது. “இப்போது என்ன அவசரம், தலைவனுக்கு?? இப்போ இருக்கிறபடியே இருந்தால் ஒண்ணும் தப்பில்லை.” என்றார் ஒரு தலைவர் அவசரம் அவசரமாய். இன்னொருவர், “இந்த மாதிரியான இக்கட்டான சமயத்தில் தேர்ந்தெடுப்பது சரியும் இல்லை. அவசரம் வேண்டாம்.” என்றார்.
வசுதேவருக்கோ ப்ரத்யோதா சொல்வதே சரியெனப் பட்டது. உடனடியாக நடவடிக்கைகளை விரைந்து எடுக்கும், முடிவுகளை விவேகத்துடன் எடுக்கும் ஒரு தலைவனுக்கு இப்போது தேவை என்பதை அவர் உணர்ந்தார். ப்ரத்யோதாவை ஆமோதித்தார். கர்காசாரியாரும் ப்ரத்யோதாவும், வசுதேவரும் சொல்வது சரி என்றார். அப்படி எனில் வசுதேவரே பொறுப்பை வகிப்பது சரி எனப் ப்ரத்யோதா சொல்ல, வசுதேவரோ தன்னால் முடியாது என்று திட்டவட்டமாய் மறுத்தார். “நான் வாழ்நாளில் பெரும்பகுதியைக் கவலையுடனும், துக்கத்துடனும், மனப்போராட்டத்துடனும் கழித்துவிட்டேன். எந்தவிதமான நடவடிக்கைகளிலும் ஈடுபட முடியாமல் தனிப்பட்ட வாழ்க்கை என்னை அலைக்கழித்துவிட்டது. ஆகவே நான் இதற்குத் தகுதியானவனே அல்ல. இந்த மாபெரும் பொறுப்பு எனக்கொரு சுமையாகவே தென்படுகிறது.” என்று சொன்னார். ஆனால் யார் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டாலும் அவருக்குத் தன்னுடைய மனமார்ந்த ஒத்துழைப்பை நல்குவதாயும் தெரிவித்தார். மீண்டும் ப்ரத்யோதாவின் மேலேயே அனைவருக்கும் சந்தேகம். இப்படி எல்லாம் விஷயத்தை மாற்றி மாற்றிப் பேசிக் கடைசியில் இவன் தலைவன் ஆகப் பார்க்கிறானோ? ம்ம்ம்ம்ம் என்னதான் இந்த மதுராவை இவன் காவல் காத்து வந்தாலும், நல்லதொரு தளபதியாகப் போர்களில் பங்கு பெற்றிருந்தாலும், திறமையானவனாக இருந்தாலும் இவனா நமக்குத் தலைவன்??? ஆஹா, இது நடக்கவே கூடாது.
அப்போது கிருஷ்ணனும், பலராமனும் அங்கே வந்து சேர்ந்தனர். தங்கள் தகப்பனுக்கு இருபக்கமும் இருவரும் அமர்ந்தனர். காணக்கிடைக்காத கண்கொள்ளாக்காட்சியாக அது அமைந்தது. இருவரையும் அந்த சபையில் இருந்த அனைவருமே வயது வித்தியாசமே பார்க்காமல் வணங்கி வரவேற்றனர். அதிலும் கிருஷ்ணன் வெறும் பதினாறு வயது நிரம்பாத பாலகன் இல்லை அவர்கள் கண்களுக்கு அவனே பாதுகாவலன், ரக்ஷகன், மீட்பன், இன்னும் என்னவெல்லாமோ!
வசுதேவர் அவர்களைப் பார்த்து, “எங்கே போய்விட்டீர்கள் இருவரும்? உள்ளே வந்தால் உங்களைக் காணோமே? உங்களுக்காகக் காத்திருந்தோம்.” என்றார். “தந்தையே, அன்னையைக் கொண்டு வந்து உள்ளே அந்தப்புரத்தில் விட்டுவிட்டு அவர்களைச் சமாதானம் செய்துவிட்டுக் கம்சன் மாமாவின் உடல் அவருடைய மாளிகைக்கு வந்து சேர்ந்துவிட்டதா என்று பார்த்துவிட்டு வந்தேன்.” என்றான் கண்ணன். “ஆஹா, கண்ணா, வாசுதேவா, உனக்கு எங்கள் வந்தனங்கள் உரித்தாகுக! செயற்கரிய அரிய செயலைச் செய்துமுடித்திருக்கிறாய் நீ!” என்றனர் அங்கிருந்த சில தலைவர்கள். “உண்மைதான், பெரியோர்களே, ஆனால் என் மனம் என்னமோ அதனால் மகிழ்வுறவில்லை. “ கண்ணனின் குரல் அவனையும் அறியாமல் தழுதழுத்தது. “அதிலும் இப்போது கம்சனின் மாளிகைக்குச் சென்றபோது இரு ராணிகளும் அலறித்துடிப்பதைக் கண்டதில் இருந்து மனம் துடிக்கிறது. என்னால் அதைக் காது கொண்டு கேட்கமுடியவில்லை. என்னுடைய மாமாவான கம்சன் ஒரு நல்ல அன்பான கணவனாக இருவரிடமும் இருந்திருக்கிறார். அதுதான் இரு ராணிகளும் மனம் உடைந்து அழுகின்றனர்.” கண்ணன் கண்களிலும் கண்ணீர் மழை இப்போது. சிலருக்கு இது ஆச்சரியமாகவே இருந்தது. கண்ணனுக்கு மன உறுதி இருக்கும் என நினைத்தோமே? ஒரு தலைவனாக அவன் செயலாற்றி இருக்கிறான் என எண்ணினோமே? இவ்வளவு பலஹீன மனம் படைத்தவனா கண்ணன்?? ம்ம்ம்ம்??/ இவன் எவ்வாறு நம் நாயகனாக ஆகமுடியும்??? குழப்பமே மிகுந்தது அனைவருக்குள்ளும்.
எதையும் கவனிக்காமல் கண்ணன் மேலும் தொடர்ந்தான்.”இனிமேல் அவர்களின் வாழ்க்கை இங்கே எவ்விதம் நடைபெறும்??? அவர்களுக்குத் துக்கமே மிகுந்திருக்கும். ஆனால் வேறு என்ன செய்யமுடியும் என்னால்?? மாமாவின் கொடூரமான நடத்தைக்கு வேண்டிய பலனையே அவர் அறுவடை செய்துள்ளார். வினை விதைத்தவன் வினையைத் தானே அறுப்பான்??? கடவுளின் விருப்பமும் அதுவே. “ என்றான் கண்ணன். மேலும் கண்ணன் பேசும் முன்னர் அக்ரூரர் அங்கே வந்தார். அவரோடு கம்சனின் தந்தையும், பல வருடச் சிறை வாசம் செய்தவரும் ஆன வயது முதிர்ந்த உக்ரசேனரும் வந்தார். அவரோடு சிறையில் இருந்த அந்தகர்களின் இன்னொரு தலைவன் ஆன வஜ்ராந்தகனும் கூடவே வந்தான். உக்ரசேனரைப் போல் வயதான இவனும் மூன்று நாட்கள் முன்பு தான் கம்சனை எதிர்த்துப் பேசியதற்காக வ்ருதிர்கனனால் கடும் தண்டனை அளிக்கப் பட்டு அதன் காயங்கள் ஆறாத நிலைமையில் உடல் பூராக்கட்டுகளோடு வந்திருந்தான். அனைவரும் எழுந்து நின்று அக்ரூரருக்கும், உக்ரசேனருக்கும் மரியாதை செய்தனர். வசுதேவரின் அருகே போடப் பட்டிருந்த சிங்காதனத்தில் உக்ரசேனர் அமர, அக்ரூரரும் , வஜ்ராந்தகனும் வசுதேவருக்கும் உக்ரசேனருக்கும் இடையே அமர்ந்தனர்.
அனைவரும் நடந்த விஷயங்களையும், அவரவருக்குத் தெரிந்த கோணங்களில் பேசி விவாதிக்க ஆரம்பித்தனர். உள்நாட்டு, வெளிநாட்டுப் பிரச்னைகளும் விவாதிக்கப் பட்டன. மதுராவைச் சூழ்ந்திருக்கும் ஆபத்தே அனைத்திலும் பெரியதாகத் தெரிந்தது. நேரம் போய்க் கொண்டே இருந்தது. மந்திராலோசனை முடிவடையவில்லை. எந்த முடிவும் எட்டப் படவில்லை. அனைவருக்கும் நிலைமை மிகவும் கவலைக்கிடம் எனப் புரிந்தது. கடைசியில் உக்ரசேனரே ஒரு முடிவு எடுக்கும் நிலைக்குத் தள்ளப் பட்டார். “கூடியிருக்கும் யாதவகுல ரத்தினங்களே, நான் அனைத்தையும் நன்கு கேட்டுக் கொண்டேன். ப்ரத்யோதா சொல்லுவதில் உண்மை உள்ளது. அவன் சொல்வது போல் பலம் பொருந்திய விவேகம் நிரம்பிய ஒரு இளைஞனே நமது தலைவனாக இருக்கவேண்டிய சமயம் இது. நம்மில் ஒருவர் அந்தப் பொறுப்பை ஏற்கவேண்டும். உங்கள் அனைவருடைய கருத்தையும் நான் கேட்டுக் கொண்டுவிட்டேன். நானோ வயதானவன், பல வருடங்கள் செய்த சிறைவாசத்தால் இவ்வுலகத்தோடு தொடர்புஅற்றுப் போய் எதுவுமே தெரியாமல் இருக்கிறேன். மேலும் உடல்ரீதியாகவோ, உள்ள ரீதியாகவோ பலமிழந்தும் இருக்கிறேன். எனக்கும் ஒரு மகன் இருந்தான்.” உக்ரசேனரின் குரல் தழுதழுக்க, “என் ஒரே மகன், இந்தப் பட்டத்துக்கு உரியவன், கம்சன், அவன் இப்போது இல்லை, நான் மகனை இழந்தவன்.” தன் கண்களில் இருந்து பெருகிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டே உக்ரசேனர் மேலும், “ஆகையால் நான் கிருஷ்ண வாசுதேவனை என் மகனாக ஏற்றுக் கொண்டு அவனையே உங்கள் தலைவனாகவும் ஏற்றுக் கொள்ளும்படிப் பிரார்த்திக்கிறேன்.”
நல்ல நடையில் விவரித்துள்ளீர்கள். கண்ணன் தேவகியின் சந்திப்பு மிக அருமை. மந்திர ஆலோசனைக் கூட்டம் நேரில் பார்த்தது போல உள்ளது. மிகுந்த சிரமம் எடுத்து எழுதுகின்றீர்கள். நிச்சயம் உங்களுக்கு அந்த மாயவனின் அருள் கிடைக்க பிரார்த்திக்கின்றேன்.நன்றி.
ReplyDeleteஆகா இரண்டாம் பாகம் இப்போது தான் படித்தேன்...கலக்கலாக போகுது தலைவி ;))
ReplyDeleteஅப்பாடி. அம்மாவும் புள்ளையும் சேர்ந்துட்டாங்க. இப்போ யசோதையை நினைச்சா கவலையா இருக்கு :(
ReplyDeleteகண்ணன் வாழ்க!