பலராமன் விட்ட குத்தின் வேகம் தாங்காமல் திணறிக்கொண்டிருந்த முஷ்திகனை பலராமன் மேலும் வேகமாய்த் தாக்கினான். அவன் கிருஷ்ணனைப் போல் தன் தலை அலங்காரங்கள் எல்லாம் எடுக்கும் வரையில் காத்திருக்கவில்லை. முஷ்திகனின் அழைப்பில் இருந்த கேலி அவனைப் பொங்கி எழச் செய்தது. முஷ்திகன் மேல் பாய்ந்த பலராமனை முஷ்திகனும் தன்னிரு கரங்களால் தடுக்க முயல இருவருடைய கைகளும் இணைந்து ஒன்றை ஒன்று முறுக்கிக் கொள்ள, உடல்களாலும், இருவரும் யுத்தம் செய்ய ஆரம்பித்தனர். ஒருவர் மேல் இன்னொருவர் விழுந்து புரண்டு ஒருவர் உடலால் மற்றவர் உடலைப் பூட்டி எழுந்திருக்கவிடாமல் செய்து மாறி மாறித் தரையில் உருண்டு கொண்டிருந்தனர். கூடி இருந்த மக்கள் கூட்டமோ இருவரையும் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தது. நடு நடுவே, “சாது! சாது!” எனக் கோஷமிட்டனர்.
கிருஷ்ணன் அரங்கினுள் நுழைந்துவிட்டான். அவன் கண்கள் சாணுரனை அளவெடுத்துக் கொண்டிருந்தன. அவன் கால்கள் மெல்ல மெல்லப் பின் வாங்கி அரச விருந்தினர் அமர்ந்திருக்கும் இடம் நோக்கித் தன்னை இட்டுச் செல்ல முயல்வதையும் கண்டு கொண்டான். மேலும் சாணுரனின் இருகால்களின் ஒன்றிற்கு ஏதோ அடி பட்டிருக்கவேண்டும். அந்தக் காலை வலுவோடு ஊன்ற முடியவில்லை அவனுக்கு. இதையும் கண்ணன் கவனித்துக் குறித்துக் கொண்டான். பசியோடிருக்கும் மலைப்பாம்பு தனக்கு இரை கிடைத்ததும் எப்படி ஆவலுடன் விழுங்கக் காத்திருக்குமோ அப்படிக் காத்திருந்தான் சாணுரன் கண்ணனுக்காக. சாணுரனின் தாக்குதல்களிலிருந்து தப்பிக்க முயன்று கொண்டே அவனைத் தன்னுடைய மல்யுத்தப் பிடிகளில் ஒன்றால் கட்ட முயன்று கொண்டிருந்தான் கண்ணன். மெல்ல மெல்லத் தன்னை அரச விருந்தினரில் முக்கியமானவர் அமரும் இடம் நோக்கி அழைத்து வந்திருப்பதையும் உணர்ந்து கொண்டான். சாணுரனின் ஒவ்வொரு பிடியையும் கண்ணன் தவிர்த்துக் கொண்டு வந்தான். சாணுரனோ கண்ணன் ஒரு ஆரம்பப் பயிற்சியாளன் என்ற அசட்டையிலேயே இருந்தான். ஆகவே கண்ணனின் புத்திசாலித் தனமான சில பிடிகளில் அவன் ஆச்சரியமடைந்தான். மெல்ல மெல்ல இருவரும் கம்சனுக்கு நேர் எதிரே வந்துவிட்டனர்.
கண்ணனைத் தன் வலுவான பிடியால் கட்டவேண்டும் என்ற ஆத்திரத்துடன் வந்தான் சாணுரன். கண்ணன் மேல் ஆக்ரோஷமாய்ப் பாய்ந்தான். ஆனால் கண்ணனோ அவனைவிட வேகமாய் நகர்ந்ததோடு அல்லாமல், நகரும்போதே சாணுரனின் இடக்காலை நோக்கி ஓங்கி ஓர் உதையும் கொடுத்தான். கண்ணன் நினனத்தது சரியே. சாணுரனின் அந்தக் கால் தான் சற்று பலவீனமானது. அவன் தடுமாற ஆரம்பித்தான். மேலும் கண்ணன் அந்தக் காலை நோக்கித் தாக்குவான் என்றும் எதிர்பாராமல் சாணுரன் அவன் பெருத்த உடலை நிலை நிறுத்த முடியாமல் கீழே விழுந்தான். ஆனால் சட்டெனத் தன் இரு கைகளையும் ஊன்றிக் கொண்டு சமாளித்துக் கொண்டான். சாணுரனின் இந்தத் தவிப்பைப் பார்த்து அரங்கமே சிரிப்பில் ஆழ்ந்தது. மேலும் இந்த எதிர்பாராத் தாக்குதல்களால் களைப்பும் அடைந்தான் சாணுரன். ஏற்கெனவே தன் சக்தியை அவன் இழந்திருந்தான். ஆனால் கண்ணனோ புத்தம்புதியவனாய் முழு சக்தியோடும், உற்சாகத்தோடும் சாணுரனுக்குக் காத்திருந்தான். இருவரும் ஒருவரை பார்த்துக் கொண்டு அடுத்த தாக்குதலுக்குத் தயாராகிக் கொண்டிருக்கும்போது பலராமனால் முஷ்திகன் தூக்கி எறியப் பட்டான். அவன் விழுந்த வேகத்தில் மண்டை உடைந்திருக்குமோ எனச் சந்தேகம் கொள்ளும்படி இருந்தது. மக்களின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. உற்சாகக் கூச்சல் இட்டனர். இளம் மங்கையரும், இளம் வாலிபரும் ஆட ஆரம்பித்தனர்.
சாணுரனுக்குக் கோபம் மிகுந்தது. ஆக்ரோஷத்தோடு கண்ணன் மேல் பாய ஆயத்தமானான். பல வருஷங்கள் பயிற்சி பெற்றிருக்கும் சாணுரனுக்குக் கண்ணனின் சாந்தமும், அமைதியான தாக்குதலும் ஆச்சரியத்தை அளித்தது. சாணுரனின் பெருத்த உடல் அவனுக்குப் பலம் என இதுநாள் வரை நினைத்திருந்தான், ஆனால் கண்ணனின் வில் போல் வளையும் உடலையும், அவன் செளகரியமாகப் போடும் பிடிகளையும் பார்த்த சாணுரனுக்குத் தன் உடலே தனக்கு பலவீனமும் எனப் புரிந்து கொண்டான். சீக்கிரத்திலேயே சாணுரன் களைத்துப் போகக் கண்ணன் புத்துயிருடன் யுத்தம் புரிந்தான். கடைசியாகச் சாணுரன் தன்னுடைய வலுவான ஆயுதமான முஷ்டியால் எதிராளியின் முகத்தில் ஓங்கிக் குத்துவதை ஆரம்பித்தான். இவ்விதம் அவன் குத்தும்போது எதிரியால் தாக்குதலை எதிர்கொள்ளமுடியாமல் கீழே விழுந்துவிடுவான். உடனே சாணுரனின் பெருத்த உடலால் அவனும் கீழே விழுந்து எதிரியைத் தன் உடலால் நசுக்கி விடுவான். அம்மாதிரி சமயங்களில் பலர் இறந்திருக்கின்றனர். இப்போது கம்சன் கேட்டிருப்பதும் அதுவே. சாணுரன் தன் பலத்தை எல்லாம் பிரயோகித்துப் பின்னால் போய் வேகமாய்த் தன் முஷ்டியை ஓங்கிக் கொண்டு கண்ணன் முகத்தில் குத்த ஓடிவந்தான். கண்ணன் முகத்தை அது உரசவே கண்ணன் கீழே விழுந்திருக்கவேண்டும். சட்டெனச் சமாளித்த கண்ணன் தன் முஷ்டிகளால் சாணுரனைத் தாக்க ஆரம்பித்தான். இருவரும் ஒரே சமயம் கீழே விழுந்தனர். ஆனால் சாணுரனின் பெருத்த உடலைத் தூக்கிக் கொண்டு அவனால் எழமுடியவில்லை. கண்ணன் எழுந்துவிட்டான். சாணுரனுக்குத் தன்னுடைய முக்கியமான தாக்குதல் பலிக்காதது கண்டு ஆத்திரம் அதிகம் ஆனது.
படுத்த நிலையிலேயே சாணுரன் தன் கைகளை நீட்டிக்க்கண்ணனுடைய குரல்வளையைப்பிடித்து இரு கைகளாலும் நெரிக்க முயன்றான். ஆனால் கண்ணனோ தப்பித்துவிட்டதோடு அல்லாமல், எழமுடியாமல் படுத்திருக்கும் சாணுரனைக் கண்டு, “நீ தோற்றுவிட்டாய், சாணுரா!” எனக் கூறிக் கொண்டே அரங்கின் மற்றொரு பக்கம் ஓடினான். என்றாலும் சாணுரன் விடாமல் மெல்ல எழுந்து கண்ணனைத் தாக்க மீண்டும் ஓடி வந்தான். கண்ணனோ இந்தப்பக்கமும், அந்தப் பக்கமும் மாறி மாறி ஓடிப் பாய்ச்சுக் காட்டினான். கண்ணனை எப்படியாவது பிடிக்கவேண்டும் என நினைத்த சாணுரனின் கைகளுக்கு அவன் தோள் கிடைத்தது. அதைப் பிடிக்க யத்தனித்தான். ஆனால் கண்ணன் தன் முஷ்டிகளால் கொடுத்த அடி சாணுரனின் கண்களில் விழுந்திருந்தது. அவனால் சரியாகப் பார்க்கமுடியவில்லை. கண் பார்வை மறைத்தது. எப்படியாவது கண்ணனைப் பிடிக்கவேண்டும் என்ற அவன் முயற்சி பலிக்கும் முன்னேயே கண்ணன் அவன் மேல் ஒரு புலியைப் போல் பாய்ந்தான். அவனைக் கீழே தள்ளினான். கொப்பும், கிளையுமாகப் பரவிப் படர்ந்திருந்த ஒரு பெரிய மரம் ப்யல் காற்றில் கீழே விழுவதைப் போல் சாணுரன் கீழே விழுந்தான்.
கண்ணனோ அவன் மார்பில் ஏறி அமர்ந்தான். கூடி இருந்த கூட்டம் உற்சாகக் கூச்சல் போட்ட வண்ணம் குதித்து ஆடக் கண்ணன் அவனை “சாணுரா, உன் தோல்வியை ஒப்புக் கொள்” எனக் கேட்டுக் கொண்டிருந்தான். தப்பிக்கப் பார்த்த சாணுரனைக் கண்ணன் தன் இரும்புப் பிடியால் பிடித்துக் கொண்டிருந்தான். ஆனால் சாணுரனின் கரங்களோ அந்த நிலையிலும் தன் எஜமானனின் உத்தரவை நிறைவேற்றும் விதமாய்க் கண்ணனின் குரல்வளையை நெரிக்க முயன்றன. அவனுக்குக் கருணையே காட்டக் கூடாது என நினைத்த கண்ணன் அவன் தலையை நசுக்கிக் கொண்டே இன்னொரு கரத்தால் அவன் முகத்தில், கண்களில் குத்துவிட்டான். சாணுரன் உடலில் இருந்து ரத்தம் ஓட ஆரம்பித்தது. அப்படியே மயங்கி விழுந்தான் அவன். இடியோசை போன்ற கைதட்டல் சப்தம் காதைப் பிளந்தது. யாதவத் தலைவர்கள் தங்களை மறந்து கண்ணனைப் பாராட்டிக் கொண்டே அரங்கினுள் நுழைந்து கண்ணனுக்கு வாழ்த்துச் சொல்ல ஆரம்பித்தனர். ஆனால் கண்ணன் அந்த நிலையிலும் கம்சன் மேல் ஒரு கண் அல்ல இரு கண்களையும் வைத்திருந்தான். சாணுரன் கீழே விழுந்ததுமே கம்சனுக்குள் பொங்கி எழுந்த ஆத்திரத்தை உணர்ந்து கொண்டான். அவன் மீசையை முறுக்கிக் கொண்டதையும், கைகள் உடைவாளுக்குச் சென்றதையும், அந்த இடத்தை விட்டுச் செல்ல யத்தனித்ததையும், அக்ரூரரால் தடுக்கப் பட்டதையும் கண்டிருந்தான். கம்சனின் ஆத்திரம் தன் மேல்தான் என்பதையும், அவன் வாளை எடுத்துக்கொண்டு தாக்கவந்தது தன்னையே என்பதையும் கண்ணன் உணர்ந்த அதே விநாடியில், மகத நாட்டுத் தளபதியின் வாள் அவனைப் பெற்ற தகப்பனான வசுதேவனின் தலைக்கு மேல் ஓங்கப் பட்டதையும், அதைக்கண்ட மற்ற யாதவத் தலைவர்கள் அனைவரும் குதித்தெழுந்து தங்கள் வாட்களை உருவியதையும் கண்ணன் கண்டான்.
அங்கே காவலுக்கு நிறுத்தப்பட்டிருந்த பூரண ஆயுதக்காவலர்களான மகத வீரர்கள் அனைவரும் யாதவத் தலைவர்கள் மேல் பாய்ந்ததையும், அக்ரூரர் கம்சனைத் தடுத்து நிறுத்தப்பிரம்மப் பிரயத்தனப் படுவதையும் கண்ட கண்ணன், அங்கே நிலவும் சூழ்நிலையைப் பூரணமாகப் புரிந்து கொண்டான். அக்ரூரர் மிகவும் பிரயாசையுடன், “வேண்டாம், கம்சா, வேண்டாம்” எனத் தடுக்க முயல்வதையும் கம்சனின் முகத்தில் கூத்தாடிய கொலைவெறியையும், அவன் தன் பலம் அனைத்தையும் பிரயோகித்து, அனைவராலும் மரியாதைக்குரியவர் எனப் போற்றப் பட்ட புனிதராகிய அக்ரூரரைக் கீழே தள்ளியதையும் கண்டான். கம்சன் கண்ணன்பக்கம் திரும்பினான். கம்சனின் தலைக் கிரீடம் கீழே வீழ்ந்தது. தூக்கி எடுத்துக் கட்டப் பட்டிருந்த அவன் சிகை விரிந்து தொங்கியது. கண்ணன் ஒரு அடி பின்னல் நகர்ந்து கம்சனின் பின் சென்று அவன் நீண்ட சிகையைப் பிடித்து இழுத்து அவனைக் கீழே தள்ளினான். கம்சனுக்கு மயக்கம் வரும்போலிருந்தது. அவன் வாளும் அவனை விட்டு நழுவியது. அவனுக்குத் தன் முடிவு பற்றிச் சொல்லப்பட்ட தீர்க்கதரிசனமும், அதை ஒட்டி நிகழ்ந்த அனைத்து நிகழ்வுகளும் மனக்கண்கள் முன் ஓடின. ஒரு நிமிட காலம் அவன் வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்தான். தன் முன்னே தன்னுடைய பரம வைரி ஒரு கடவுளைப் போலவே தன்னை சம்ஹாரம் செய்ய நின்றிருப்பதையும் கண்டான். ஒரு நிமிஷ காலம் கம்சனின் உள்ளத்துள்ளே இறைவன் மேல் பக்தியும், தான் அதுநாட்கள் வரை இறைவனை நினையாமல் இருந்ததும் தோன்றின. கம்சன் எழுந்திருக்க முடியாமல் கண்ணன் அவனை அமுக்கிக் கொண்டிருந்தான். கண்ணன் முகத்தையே பார்த்த கம்சனுக்குள் இனம் புரியாத ஏதேதோ எண்ணங்கள்!
அதற்குள் பலராமன் நிலையைப் புரிந்து கொண்டு, ஆபத்தை எதிர்பார்த்தவனாய்த் தன் அப்பாவைத் தாக்கப் போனவர்களைத் தன் கலப்பையால் ஓங்கி அடித்தான். எங்கும் குழப்பம் சூழ்ந்தது. ஆயுதம் தரிக்காத சாமானிய மக்கள் கலவரத்தில் இருந்து தப்பிக்க ஓடினார்கள். பெண்கள் அலறிக்கொண்டே ஓடினார்கள். ஓடமுடியாத பெண்கள் அலறலை நிறுத்த முடியவில்லை. ஆயுதங்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன. அவற்றின் சப்தம் இடியைப் போலவும், அவற்றிலிருந்து கிளம்பிய தீப்பொறிகள் மின்னலைப் போலவும் தோன்றின. எங்கும் ரத்த மழை வர்ஷிக்க ஆரம்பித்தது. ஒரு பார்வையாளனாக அதுவரை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த கண்ணனுக்கு, “வேளை வந்துவிட்டது” என்று புரிந்தது. கம்சனின் வாள் கண்ணனுக்கு அருகே விழுந்திருந்தது. அதை எடுத்தான். ஒரே வீச்சுத் தான். கம்சனின் தலை உருண்டதை அனைவரும் பார்த்தனர். கண்ணன் அது நாள் வரையில் கம்சனின் தோளில் தரிக்கப் பட்டிருந்த பொன்னால் கரையிடப் பட்ட சங்கை எடுத்தான்.தன் வாயில் வைத்துச் சங்கை ஊதினான்.
வெற்றிச்சங்கம் முழங்கியது.
த்ரீ சியர்ஸ் டு கன்னா ஹிப் ஹிப் ஹுரேஏஏஎ!
ReplyDeleteவாங்க திவா, பால் பாயாசம்??????
ReplyDeleteகலக்கல் தலைவி ;))
ReplyDeleteஅடேயப்பா. நேரில் பார்ப்பது போல் மல்யுத்தத்தை விவரித்திருக்கிறீர்கள். அருமை அம்மா.
ReplyDeleteமிகவும் அருமை. நல்ல கட்டுரை. நல்ல நடையில் அழகாக சொல்லியிருக்கின்றீர்கள். கம்சனின் வீழ்ச்சி முடிந்தது. அடுத்து படிக்க ஆவலாய் உள்ளேம். நன்றி.
ReplyDelete@கோபி,
ReplyDelete@கவிந்யா,
@பித்தனின் வாக்கு,
மூவருக்கும் நன்றி.
ரொம்ப வருஷங்களுக்கு முன்னாடி
ReplyDeleteகிங்காங் = தாராசிங் மல்யுத்தத்தைப் பார்த்தப்பரம்
நேரடியாவே ஒரு யுத்தத்தைக் கண்ணாலே பார்க்கிற
பிரமிப்பு ஏற்பட்டது.
ப்யூடிஃபுல் நேரேஷன்.
உங்க வலைப்பதிவு எனக்கு அதிகமே பரிசயம் ஆன ஒன்று தான்
என்றாலும், க்ரெக்டா இன்னிக்கு அங்கே போ அப்படின்னு வழி சொன்ன துளசி அம்மாவுக்கும் நன்றி.
அது சரி, கம்ஸனுக்கு சாவதற்கு முன்பாக, உண்மையாகவே ஒரு
இறை உணர்வும், அதைத் தொடர்ந்து சரணாகதியாகும் மன நிலையும் ஏற்பட்டதா ?
சுப்பு ரத்தினம்.
http://pureaanmeekam.blogspot.com
புராணங்களை இவ்வளவு எளிமையாக சொல்லிகொடுத்தால் தமிழின் சிறப்பை அனைவரும் அறிந்துகொள்வார்கள் அருமை பாராட்டுகள்
ReplyDelete