எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, December 13, 2009

ஆஹா, வந்துடுச்சே, சந்தோஷத்தில் குதிக்கிறோமே!


இன்று காலை மருத்துவரிடம் போகவேண்டி இருந்தது. யாருக்குங்கறீங்களா?? வழக்கம்போல் நமக்குத் தான். எலும்பு முறிவு மருத்துவர். எக்ஸ்-ரே எடுத்துட்டு வாங்கனு சொல்லி ஒரு மாசம் ஆச்சு. நமக்கு வீட்டில் வேலை, விருந்தாளிகள் வரவு, மழை வரவு, தெருவிலே தண்ணீர் தேங்கி நின்னுட்டு வெளியே போகமுடியாம இருந்ததுனு ஆயிரம் காரணம் போகமுடியலை. இந்தத் தெருவிலே மழைத் தண்ணீர் மழை நின்னும் தேங்கி இருந்தது. அதை அப்படியே படம் எடுத்து, ஹிந்து பத்திரிகைக்கு டவுன் டவுன் செய்திகளுக்கு அனுப்பினோம். அங்கே இருந்து எங்களைத் தொடர்பு கொண்டு பேசிட்டு, நாங்க அனுப்பிய செய்திகளையும் படிச்சுப் பார்த்துட்டுப் போன மாசம் 22-ம் தேதிய டவுன் டவுன் செய்தியில் அரைப்பக்கத்துக்கு எங்களோட குறைகளை விளக்கிப் போட்டாங்க.

அதுக்கப்புறமும் முனிசிபாலிடியிலே இருந்து சுகாதார ஆய்வாளர் மட்டுமே வந்து பார்த்துட்டு, தண்ணீரை நாங்க தான் கொட்டி வச்சுட்டோமோனு சந்தேகப் பட்டு, மேற்கொண்டு பக்கத்து அடுக்கு மாடிக்குடியிருப்புக்காரங்களையும் நாங்கதான் கழிப்பறைத் தண்ணீரை வெளியே விடச் சொன்னோமோனும் சந்தேகப் பட்டுக் கேள்விகள் கேட்டுட்டுப் போயிட்டார். எங்க வீட்டிலேஇருந்து கொஞ்ச தூரத்தில் தெரு திரும்பும் இடத்தில் முழங்கால் தண்ணீரில் எல்லாரும் போயிட்டு இருந்ததைக் கவனிச்சதாய்க் கூடக் காட்டிக்கலை. வெறுத்துப் போய் என்ன செய்யறதுனு யோசிச்சுட்டு, நம்ம வீட்டுக் கதாநாயகர், இந்தக் காலனி மக்களின் சார்பா துயர் துடைக்க நாமதான் முன் வரணும்னு நினைச்சு, கமிஷனரைச் சந்திக்க நேரம் கேட்டார். மறுநாள் வரச் சொன்னாங்க. மறுநாள் போய்க் காத்திருந்து, நிஜமாவே மணிக்கணக்காக் காத்திருக்கும்படி ஆச்சு. அவங்க சொன்ன நேரம் வேறே. கமிஷனர் கொடுத்த நேரம் வேறே. அதைச் சொல்லலை. கமிஷனரைப் பார்த்தாச்சு. அவர் தெருவை வந்து பார்த்துட்டுத் தான் சொல்லுவேன். உங்க தெரு இந்த உலகிலேயே மிக அழகான, அருமையான வசதிகளைக் கொண்டதுனு தெரியுது. அதனால் இப்போ சாலை எல்லாம் போடறாப்போல் இல்லை. எதுக்கும் தொலை பேசி எண்ணைக்கொடுங்க. வந்து பார்க்கிறேன்னு சொல்லிட்டார்.

திடீர்னு போன வாரத்தில் மாலை நேரம் ஒருநாள் முனிசிபாலிடியில் இருந்து தொலைபேசி அழைப்பு. கமிஷனர் வரார், தயாராய் இருங்கனு. மாலை, மரியாதை செய்யணுமோனு யோசிச்சேன். அதுக்குள்ளே நம்ம கதாநாயகர் கிளம்பிட்டார் வரவேற்க. முரசறைந்து தெருவில் எல்லாருக்கும் விஷயத்தைத் தெரிவிக்க ஒரு மாபெரும் கூட்டம் பின் தொடர ஊர்வலம் கிளம்பியது. எல்லாத்தையும் பார்த்துட்டு, அம்பத்தூரின் தண்ணீர் அனைத்துமே, தேங்கிக் கிடக்கும் சாக்கடை நீர் உள்பட இங்கே கொண்டு வரப்போவதாய்ச் சுபச் செய்தியைச் சொல்லி எங்கள் வயிற்றில் அக்னியை வார்த்துவிட்டு, உங்க தெரு இப்போப்போடமுடியாது, இதுக்கென்ன குறைச்சல்னு சொல்லிட்டாராம். இது தாழ்வான பகுதி, இங்கே எல்லாத் தண்ணீரையும் கொண்டு வந்தால் நாங்க எல்லாம் முழுகிப் போயிடுவோம்னு சொல்லிப் பார்த்தாச்சு. மனுஷன் கேட்கவே இல்லை. அதெல்லாம் நாங்க பார்த்துப்போம்னு சொல்றார். நாங்க முழுகிப் போறதைப் பார்க்க அவருக்கு அவ்வளவு ஆசையானு ஆச்சரியமாப் போச்சு. அப்புறம் தேங்கிக் கிடந்த தண்ணீரை மட்டும் வெட்டி விட்டு அகற்றுவதாய்ச் சொல்லிட்டுப் போனார். மறுநாள் மோட்டார் வைத்து அனைத்துத் தண்ணீரையும் இறைத்தும் தண்ணீர் தேங்கியே இருக்க, வீடுகளின் ஓரத்தில் பள்ளம் தோண்டி அந்தத் தண்ணீரை வெளியேற்றினார்கள்.

பக்கத்துத் தெருக்களுக்கு எல்லாம் சாலை போட வேலை ஆரம்பித்துவிட்டது. நாங்க மனசு நொந்து போய் இருக்க திடீர்னு முந்தாநாள் ஜேசிபி வந்து சாலையைத் தோண்ட ஆரம்பிச்சது. மேற்குப் பக்கம் தோண்டிட்டுப் போயிடுவாங்களோனு நினைச்சால், நேத்திக்கு எங்க பக்கமும் தோண்டிட்டாங்க. விசாரிச்சதில் எங்க சாலைக்கும் விடிவு வந்துடுச்சாம். சாலைபோடப் போறாங்களாம். தெருவாசிகள் அனைவர் வீட்டிலும் நேத்திக்குப்ப் பால்பாயாசம்னு கேள்விப்பட்டேன். எனக்கு யாரும் தரலை. ஆனால் என்ன சாக்கடை தோண்டற திட்டத்திலே மாற்றம் இல்லைனு வயித்திலே புளியைக் கரைச்சுட்டுப் போயிட்டார் அந்தக் காண்ட்ராக்டர். இவங்க மனசு திடீர்னு மாறி சாலை போட ஆரம்பிச்சதாலேயே என்னமோ மழைவேறே நேத்திக்குக் கொட்டோ கொட்டுனு கொட்டித் தீர்த்துடுச்சு. வீட்டை விட்டுக் கீழே இறங்க முடியாது. இரண்டு அடிக்குப் பள்ளம். கீழே இறங்கினால் என்னை மேலே ஏத்த கிரேன் தான் வரணும். மத்தவங்க எல்லாம் எப்படிப் போறாங்க வெளியேனு பார்த்தால் ஆண்கள் மட்டும் தான் ஒருமாதிரிச் சறுக்கிட்டுப்போயிட்டு இருக்காங்க. கார் வச்சிருக்கிறவங்க காரை எடுக்க முடியாது. வண்டியை எடுக்க முடியாது. நல்ல நடைப்பயிற்சி செய்யும்படிக்கு இருக்கு. வெளியே போகமுடியாதவங்களைப் படிதாண்டாப்பத்தினிகளாக ஆக்கிட்டாங்க. மேலே உள்ள படம் தண்ணீர் தேங்கி இருந்தப்போ எடுத்தது. இதிலே குறுக்கும், நெடுக்கும் போயிட்டுப் போயிட்டு வரது நம்ம கதாநாயகர் தான்.

சுதந்திரம் வந்து அறுபது வருஷத்துக்கு மேல் ஆகியும், மெட்ரோ நகரம் என அழைக்கப் படும் சென்னையின் மிகப் பெரிய முனிசிபாலிடியும் ஆசியாவின் மிகப் பெரிய முனிசிபாலிசியும் ஆன இந்த ஊரில் ஒரு சாலைக்கு எத்தனை வருஷம் போராட வேண்டி இருக்கு?? என்றாலும் இது என் நாடு. இதை நான் மிகவும் நேசிக்கிறேன்.

வாழ்க பாரதம்! ஜெய்ஹிந்த்!

16 comments:

  1. மற்றவர்கள் பால்பாயாசம் தராவிட்டால் என்ன? உங்க முயற்சி பலித்ததே உங்களுக்கு இனிப்பான செய்தியாச்சே.

    //எத்தனை வருஷம் போராட வேண்டி இருக்கு?? என்றாலும் இது என் நாடு. இதை நான் மிகவும் நேசிக்கிறேன்.

    வாழ்க பாரதம்! ஜெய்ஹிந்த்!//

    எத்தனையோ விஷயங்களுக்கு இப்படித்தான் போராட வேண்டியிருந்தாலும் நானும் உங்கள் கட்சி கீதா மேடம்! ஜெய்ஹிந்த்!

    ReplyDelete
  2. அச்சோ.. பாவம் அம்மா. நினைச்சாலே கஷ்டமா இருக்கு :( நிலைமை சீக்கிரம் சரியாக கடவுளை வேண்டிக்கிறேன்... அவர்தான் எனக்குத் தெரிஞ்ச ஒரே ஆளு.

    ReplyDelete
  3. ஸ்வாமி!! பாத்து. கீழ எங்கேயாவது விழுந்து யாருக்கும் என்னமும் ஆகாம இருக்கணும். கொசுக்கு மருந்து அடிச்சாளா? இங்க சென்னைலேந்து வந்தவருக்கு swine flu நு மறுபடியும் நாங்கள்ளாம் டார்த்வேடர் வேஷம் போட்டிண்டு இருக்கோம்:(( குழியை தோண்டிட்டு தோண்டத்தான் தெரியும் மூட தெரியாதுன்னு போயிடாம இருக்கணுமே கடவுளே!! லாங்க் ஜம்ப் ஹை ஜம்ப்னு ஒண்ணும் பண்ணாதீங்கப்பா.எல்க்ட்றிக் கம்பம் எல்லாம் அதது அததோட எடத்துல இருக்கானு பாத்துண்டுதான் கொஞ்சம் சூதானமாவே காலை வைக்கணும்:(( பயமாத்தான் இருக்கு வர Mrs Shivam .

    ReplyDelete
  4. கீதா மேடம்

    கஷ்டங்களைக் கூட நகைச்சுவையா பகிர்ந்துக்கற உங்க attitude எனக்கு பிடிச்சிருக்கு....வியாசர்பாடி, கொருக்குப்பேட்டை மாதிரி ஏரியாக்கள்ல இதை விட மோசமான தெருக்கள் இருக்கு....உங்க தெரு பரவால்ல தான் அவங்களோட ஒப்பிடும்போது.....

    சுந்தர்

    ReplyDelete
  5. அது சரி, எலும்பு டாக்டரை அம்போன்னு விட்டுட்டீங்களே? போனீங்களா இல்லையா?

    ReplyDelete
  6. \\எலும்பு முறிவு மருத்துவர்\\

    எப்படி?? இப்போ எப்படி இருக்கு!?

    ;(

    ReplyDelete
  7. இப்பவும் யாராவது பால் பாயாசம் தருவாங்களா?னு தான் சொல்றீங்களே தவிர நான் வெச்சு தரேன்னு ஒரு வார்த்தை... ம்ஹூம்.. சாம்பு மாமா வெச்சா தான் உண்டு. :p

    உங்க தெரு சரியான பிறகு சொல்லுங்க, அம்பத்தூர் வரேன். :)))

    ReplyDelete
  8. வாங்க, ரா.ல. இப்படி ஏதாவது எழுதினால் தான் முத்துச்சரமே கொடுக்கறீங்க!ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் எப்படியோ என் கட்சியிலே இருக்கிறதுக்கு நன்னிங்கோ!

    ReplyDelete
  9. வாங்க கவிநயா, எனக்கும் தெரிஞ்ச ஒரே ஆள் அந்தப் பிள்ளையார் தான்.:D

    ReplyDelete
  10. வாங்க ஜெயஸ்ரீ, சென்னை வந்தாச்சு???? கொசுக்கு மருந்து அவங்க எங்கே அடிக்கிறது?? நாங்க அடிச்சுட்டு இருக்கோம், கொசுவையும் ஈயையும் சேர்த்து. :)))))))))))

    ReplyDelete
  11. வாங்க சுந்தர், வட சென்னைக்கு எப்போவுமே மாற்றாந்தாய் கொடுக்கும் அதே கனிவான விசாரணைகள் தான், எங்க ஊரும் வடசென்னைதான். வடமேற்குச் சென்னைனு வச்சுப்போமா?? வியாசர்பாடி, கொருக்குப் பேட்டை பத்தி, பத்தி பத்தியா எல்லாப் பத்திரிகைகளும் எழுதித் தள்ளறாங்க. எங்களுக்கு நாங்களே குரல் கொடுத்தோம்.

    ReplyDelete
  12. வாங்க திவா, எலும்பு டாக்டர் எலும்பை எண்ணிப் பார்த்துட்டாரே!

    ReplyDelete
  13. வாங்க கோபி, நீங்களும் இப்போ சென்னை??? ம்ம்ம்ம் நடத்துங்க. ஒண்ணும் பிரச்னை இல்லைப்பா. வழக்கமான ஒண்ணுதான். :D

    ReplyDelete
  14. ஹிஹிஹி, வாங்க, வ(அ)ம்பி, எப்போ வருவீங்கனு சொன்னால் கேசரி பண்ணிச் சாப்பிட்டுடுவேன். நீங்க வரச்சே பருத்திக்கொட்டை ரெடியா இருக்கும். கணேசன் கிட்டே சாட்டிலே உங்களைப் புகழ்ந்தேனே, சொன்னானோ?????????????

    ReplyDelete
  15. கீதா, பழமொழி மாதிரி இருக்கு. எலும்பு முறிஞ்சது பற்றி எனக்குத் தெரியாது. இப்பப் பரவாயில்லைனு நினைக்கிறேன்.
    போராட்டமே வாழ்க்கையா அமைஞ்சுடறது சில சமயம் இல்லையா. வழி பிறந்தால் சரி. கோபி ஊருக்கு வந்திருக்காரா.
    அட.

    நீங்க ஜாக்கிரதையாக இருக்கவும். மேடு பள்ளம் இரண்டுமே காலுக்கு ஆகாது.:((

    ReplyDelete
  16. வாங்க வல்லி, எலும்பெல்லாம் முறியலை, ஆனாலும் இந்த வலி என்னமோ பொறுக்கத் தான் முடியலை. tendonits??????தெரியலை, ஒண்ணும் சொல்லலை, வாழ்க்கை முடியறவரைக்கும் மருந்து சாப்பிடுனு சொல்றார். அவரைக் கேட்காம நிறுத்தக் கூடாதாம்! :((((((

    ReplyDelete