கப்பலில் கண்ணனும், உத்தவனும்!
சாந்தீபனி தொடர்ந்தார்:
“கண்ணா, உன்னைவிடச் சில வருடங்கள் பெரியவன் என் குமாரன் புநர்தத்தன். சென்ற வருடம் நாங்கள் இங்கே வந்துவிட்டுத் திரும்புவதற்கு முதல்நாள் கடலில் குளிப்பதற்காக இந்தக் கடற்கரைக்கு வந்தான். எனக்குப்பின்னர் என்னுடைய குருகுலத்தைத் திறம்பட நடத்தப் போகிறான் என எண்ணி இருந்த என் எதிர்காலக் கனவுகள் அனைத்தும் நொறுங்கிப் போயின. இந்தப் புண்யாஜனா ராக்ஷஸர்களால் அவன் கடத்தப்பட்டான். இங்கிருந்து இன்னும் மேற்கே வெகு தொலைவில் யமப்பட்டினம் என்ற பெயரில் ஒரு நகரம் இருப்பதாகவும், அங்கே என் குமாரனைக் கடத்திச் சென்றிருக்கலாமோ என்றும் சொல்லுகின்றனர். அங்கே சென்றவர்கள் திரும்பியே வரமுடியாது என்றும் சொல்லுகின்றனர். அந்த யமதர்மராஜாவே எடுத்துச் சென்றுவிட்டானோ என் மகனை? குமாரா, என் அருமைக்குமாரா! எவ்வளவு மென்மையான இதயம் படைத்தவன் அவன்?? என்னிடமிருந்து பிரிக்கப்பட்டதுமே அவன் இதயம் உடைந்திருக்குமே! அவ்வளவு கொடூரமான ராக்ஷஸர்களோடு இனி அவன் வாழ்நாள் பூராவும் எவ்வாறு கழிக்கப் போகிறான்??” புலம்ப ஆரம்பித்தார் சாந்தீபனி.
“ஆஹா, அதோ அவர்கள் கப்பல். மீண்டும் இந்தக் கடற்கரைக்கு வருகிறது. அவர்கள் கப்பலை மூழ்கடிக்கச் செய்யவேண்டுமென்றே என் மனம் விரும்புகிறது. ஆனால் அதற்காக என் மகனைப்பழிவாங்கிவிடுவார்களோ என்ற எண்ணத்தினால் தயக்கமும் ஏற்படுகிறது. “ குரு தேவரின் கண்கள் கண்ணீரை மழையாகப் பொழிந்தன. “குருதேவா, நான் என்னால் இயன்ற அளவு முயன்று பார்க்கட்டுமா?” கண்ணன் கேட்டான்.
“வேண்டாம், வாசுதேவ கிருஷ்ணா, உன்னால் இயலாது. அவர்கள் ஏழு கடல்களுக்கும் பிரயாணம் செய்கின்றனர். படாலா என்னும் நகருக்கு அடிக்கடி செல்வார்களாம். மேலும் கருநிற ராக்ஷசர்கள் பலர் ஒரு கூட்டமாய் வசிக்கும் தீவுகளுக்கும் செல்கின்றனராம். யார் கண்டது? என் மகனை அங்கே யாரிடமாவது, எந்தத் தீவிலாவது விற்றிருப்பார்கள். அல்லது அவர்களின் துர் தேவதைகளுக்குப் பலியாகக் கூடக் கொடுத்திருக்கலாம். என் மகன் இருக்கின்றானோ அல்லது கொல்லப் பட்டானோ?”
“நான் ஒரு முயற்சி செய்கின்றேனே?”
“அப்பா, கண்ணா, நீ வம்பைத் தான் விலைக்கு வாங்கிக் கொள்வாய். அல்லது உனக்கும் புநர்தத்தனுக்கு நேர்ந்ததே நேர்ந்துவிட்டால்??? நான் என்ன செய்வேன்???” குரு பதறினார்.
“ஐயா, தாங்கள் அந்தக் கப்பல் இங்கே வந்ததும், அதைப் பற்றிய விபரங்கள் அனைத்தும் நான் அறிந்து கொள்ள அவகாசம் கொடுங்கள். சென்ற வருடம் நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும். ஆனால் நான் என்னுடைய குருதக்ஷிணையை இந்த விதத்தில் செலுத்த விரும்புகிறேன். நாளை என்னை இந்தக் குருகுலத்திலிருந்து விடுவித்து அனுப்பி வையுங்கள்.” என்றான் கிருஷ்ணன்.
“வாசுதேவ கிருஷ்ணா, உன் எண்ணத்தை நீ மாற்றிக்கொள்வதையே நான் விரும்புகிறேன். ஆனாலும் நீ இந்த விஷயத்தில் முனைப்பாக இருந்தால், பின்னர் அது உன் விருப்பம். ஆனால் இம்முயற்சியில் உனக்கு ஏதாவது நேர்ந்ததென்றால் உன் தகப்பன் வசுதேவனுக்கு நான் என்ன பதில் சொல்ல முடியும்?? இவ்வளவு நாள் கழித்து உன்னை அடைந்திருக்கும் உன்னைப் பெற்ற தாய் தேவகிக்கு என்ன சொல்லுவேன்?”
“குருதேவா, அவர்களிடம் நான் தர்மத்தை நிலைநாட்டச் சென்றிருக்கிறேன் எனத் தெரிவியுங்கள். அந்தக் கொடூர புத்தியுள்ள கடத்தல்காரர்களைத் தண்டிக்கச் சென்றிருப்பதாய்க் கூறுங்கள்.”
உத்தவன் கண்ணனின் சித்தப்பாவான தேவபாகனின் மூன்றாவது குமாரன். கண்ணனைப் பிறந்ததுமே கோகுலத்துக்கு அனுப்பியபோது அவனோடு துணையாக அங்கே வளர்ந்து வர அனுப்பி வைக்கப் பட்டான். ஆகையால் சிறு வயதிலிருந்தே கண்ணனின் அருமைத் தோழனும், சகோதரனும், கண்ணனுக்காக உயிரையும் கொடுக்கக்கூடியவனாகவும் இருந்தான். கண்ணனின் மனதில் உள்ளவற்றைப் புரிந்துகொண்டு செயலாற்றக் கூடிய திறமையும் கொண்டிருந்தான். இப்போது புண்யாஜனா கப்பலைப் பற்றிய செய்திகளையும், அந்தக்கப்பலில் பிரயாணிப்போர் பற்றிய தகவல்களையும் கண்ணனோடு சேர்ந்து அவனும் திரட்டி வந்தான். அவனுடைய ஒரே கவலை, ஒருவேளை கண்ணன் எடுக்கும் முடிவில் தன்னை விலக்கிவிடக் கூடாது என்பதே. புண்யாஜனா கப்பல் பிரபாஸ க்ஷேத்திரத்தின் கடற்கரைக்கு வந்த நாலாம் நாள் வர்த்தகம் நல்லபடியாக முடித்துக்கொண்டு அதன் தலைவன் ஆன பாஞ்சஜனா கரையிலிருந்து ஒரு படகில் தன் கப்பலுக்குச் சென்றான். அன்று நள்ளிரவில் கிருஷ்ணனும் , உத்தவனும் கடலில் நீந்திக் கொண்டு அந்தக் கப்பலை அடைந்து மிகவும் கஷ்டப் பட்டு அந்தக் கப்பலில் ஏறினார்கள். மேலே குதித்ததுமே ஒரு மாலுமி இரவு நேரத்தில் பணி புரிபவனால் பிடிக்கப் பட்டனர். அவனுக்கு இவர்களின் மொழி தெரிந்திருந்தது. ஆகவே என்ன வேண்டும் என விசாரிக்க, உங்களுடன் செல்ல விரும்புகிறோம் என்று கண்ணன் புன்னகையுடன் கூறினான். மேலும், “எங்கள் குருவழி சகோதரன் ஆன புநர்தத்தனை சென்ற வருடம் நீங்கள் கூட்டிச் சென்றுவிட்டீர்கள் அல்லவா? அவனைப் பிரிந்து எங்களால் இருக்க முடியவில்லை. அவன் இருக்குமிடம் எங்களை அழைத்துச் செல்லுங்களேன். அதற்காகவே வந்தோம்.” என்றான்.
பிக்ரு என்னும் பெயர் கொண்ட அந்த மாலுமிக்குக் கண்ணனின் இந்த பயமற்ற தன்மையும், மிகவும் எளிதாகத் தன் விருப்பத்தைச் சொன்னதும் ஆச்சரியப்பட வைத்தது. பிரபாஸ க்ஷேத்திரத்து மக்கள் அனைவருக்கும் இந்தக் கப்பலில் வருபவர்களைக் கண்டாலே பயந்து நடுங்குவார்கள். அதுவும் இந்தக் கப்பலின் தலைவன் பாஞ்சஜனாவைப் பார்க்கக் கூட அவர்களால் இயலாது. ஆனால் இந்தப் பையர்களோ எனில்?? அவனுக்குக் கொஞ்சம் சந்தேகமாகவும் இருந்தது. இருவரும் ஏதேனும் திருட வந்திருப்பார்களோ? ம்ம்ம்ம்??? எதற்கும் நங்கூரத்தை எடுத்துவிட்டுக் கப்பலை ஓட்ட ஆரம்பிப்போம். கப்பல் நகர ஆரம்பித்தால் பயந்து நடுங்கிக் கொண்டு மீண்டும் கடலில் குதித்துக் கரைக்கு நீந்திச் செல்வார்கள். நங்கூரம் எடுக்கப் பட்டுக் கப்பல் மெல்ல மெல்ல நகர ஆரம்பித்தது. கடலில் அலைகள் மேலே பொங்குவதும், அடங்குவதுமாக இருந்தன. மேலே பொங்கும் சமயம் கப்பலும் அலைகளின் உச்சிக்குச் சென்றது. அலைகள் கீழே இறங்கும்போது கப்பலும் வேகத்துடன் கீழே இறங்கியது. அலைகளின் ஆட்டமும், அதனால் கப்பலின் ஆட்டமும் அதிகரித்தது. கப்பலும் வேகம் பிடிக்க ஆரம்பித்தது. ஆனாலும் இருவரும் சற்றும் கலங்காமல் இருந்தனர். ம்ம்ம்ம்ம்ம்???? என்ன இது??? பிக்ரு யோசனையுடனேயே கயிறுகளைக் கேட்டு வாங்கிக் கண்ணனையும், உத்தவனையும் அந்தக் கயிறுகளால் பிணைத்தான். இருவரும் தினம் தினம் இந்த மாதிரிக் கட்டுப் படுவதைத் தவிர தங்களுக்கு வேறு வேலை இல்லை என்பது போல் கட்ட அநுமதித்தனர். முகத்தின் புன்னகை மாறவே இல்லை. சுக்கானுக்கருகே அவர்களைக் கொண்டு சென்று விட்டுவிட்டு பிக்ருவும் அவர்கள் எதிரே அமர்ந்து கொண்டான். சற்று நேரம் மெளனம் ஒருவருமே பேசவில்லை. பிக்ருவின் மனதில் குழப்பம் மிகுந்தது.
nalla interestinga stagela todarum pottachu
ReplyDeleteஉங்களுக்கு அதிர்ஷ்டம் அடிச்சா இன்னிக்குப் போடுவேன், இங்கே மின் தடை ஒன்பது மணி நேரத்துக்கு. அதுக்குள்ளே போடணும்! :))))))))
ReplyDelete