ராதையின் நெஞ்சமே, கண்ணனுக்குச் சொந்தமே!
கண்ணனின் செய்தியை எடுத்துக்கொண்டு உத்தவன் விருந்தாவனம் சென்றபோது விருந்தாவன வாசிகள் கண்ணன் வரவுக்குக் காத்திருந்தனர். கண்ணன் மதுராவில் இருக்காமல் விருந்தாவனம் தான் திரும்புவான் என்ற ஆழ்ந்த நம்பிக்கையில் காத்திருந்தனர். மதுராவில் கண்ணன் நிகழ்த்திய சாகசங்களை உத்தவன் எத்தனை முறை கூறினாலும் அலுக்காமல் கேட்டனர். திரும்பத் திரும்பச் சொல்லச் செய்து மகிழ்ந்தனர். கண்ணன் இல்லாமல் விருந்தாவனம் வெறிச்சோடி இருப்பதையும், யமுனைக்கரையில் இப்போது ராஸ் நடப்பது இல்லை என்றும், யமுனை நதி கூடக் கண்ணன் பிரிவினால் வழக்கமான ஆரவாரத்துடன் ஓடாமல், மெதுவாகத் தயங்கித் தயங்கிக் கண்ணன் தன் கரையில் இருக்கிறானா எனப் பார்த்துக்கொண்டே செல்வதாகவும் கூறினார்கள். கண்ணனின் பெயரைச் சொன்னாலே பசுக்களும், காளைகளும், கன்றுகளும் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடப் புல் மேய்வதைக் கூட நிறுத்திவிட்டு வேய்ங்குழல் ஓசை கேட்கிறதா எனக் காதுகளைத் தூக்கி நிமிர்த்திக்கொண்டு உற்று, உற்றுக் கவனிக்கின்றன. குழலோசை கேட்காத ஏமாற்றத்தை “அம்மாஆஆஆஆ”எனப் பெருங்குரலெடுத்துக் கத்தித் தீர்த்துக்கொள்கின்றன. எல்லாவற்றுக்கும் மேல் யசோதா அம்மா, அம்மா, கண்ணனின் அருமைத் தாய், பித்துப் பிடித்தவள் போல் கனவிலும், நனவிலும் கண்ணனையே அழைத்துக்கொண்டு இருப்பதையும், அவளை நனவுலகுக்குக் கொண்டு வந்து மதுராவில் நடந்தவற்றைத் தெரிவிக்கப் பட்ட பாட்டையும் உத்தவர் விவரிக்கக் கேட்ட கண்ணனும் கண்ணீர்க்கடலில் ஆழ்ந்தான். இந்த அன்புக்கு என்ன கைம்மாறு செய்ய முடியும்?? மெதுவாய் உத்தவனைக் கண்ணன் பார்க்க, உத்தவனும் தயங்கித் தயங்கிக் கண்ணன் மிகவும் எதிர்பார்த்துக் காத்திருந்த அந்தச் செய்தியைக் கூறினான்.:
அவனுடைய ராதை, கண்ணனின் உயிருக்கு உயிரானவள், அவன் மூச்சுக்காற்றிலே கலந்தவள், அவனின் ஒவ்வொரு நாடி நரம்புகளிலும் தன் மூச்சுக்காற்றைப் பதித்து இன்று கண்ணனின் ஒவ்வொரு அசைவுக்கும் தானே காரணம் என்பதைச் சொல்லாமல் நிரூபித்துக்கொண்டிருப்பவள், கண்ணன் அவளுக்கென அனுப்பிய தனிச் செய்தியைக் காதாலும் கேட்கவில்லையாமே?? அப்படி என்ன தவறான செய்தியையா அனுப்பினேன்? கண்ணன் நினைத்து, நினைத்து வருந்தினான்:’நான் என்ன சொல்லி அனுப்பினேன் உத்தவனிடம்!’ “ராதா, என் உயிரும், உடலும் உன்னுடையது. என் கண்ணின் கருமணி போன்ற நீயே என் அனைத்து மகிழ்வுக்கும் காரணமாவாய். என் இதயத்தில் உன்னைத் தவிர வேறு யாருக்கும் இடமில்லை. நீ தான் எப்போதும் இருப்பாய். இப்போது நான் சொல்லும் இந்தச் செய்தியைக் கேள், நான் குருகுலவாசத்திற்குப் போகிறேன், குருகுலவாசம் முடிந்து திரும்பி வந்ததும், உன்னை வந்து பார்ப்பேன். நீ என்னுடன் வர விரும்பினாயானால் உடனே உன்னை அழைத்துவந்துவிடுவேன். இது சத்தியம்!” இதுதான் கண்ணன் உத்தவனிடம் கொடுத்த செய்தி.
ஆனால் ராதையோ இதைக் காதிலேயே வாங்கவில்லை. அரைகுறையாகத் தான் கேட்டாள் எனலாம். மேலும் ராதை உத்தவனைத் தானும், கண்ணனும் தினமும் தனிமையில் பொழுதைக் கழிக்கும் அந்தத் தோப்பிற்கு அழைத்துச் சென்று, தாங்கள் இருவரும் வழக்கமாய் அமரும் மரத்தடியைக் காட்டி, “இதோ, உத்தவா! என் கானா இங்கே இருக்கிறானே! பார், உனக்குத் தெரியவில்லையா?? இதோ, என் கானாவின் புல்லாங்குழல் எத்தனை இனிமையான இசையை இசைக்கிறது??என்ன உத்தவா. உனக்குக் காது கேட்கவில்லை???” சொல்லிக்கொண்டே ராதை உற்சாகத்துடன் ஒரு தட்டாமாலை சுற்றினாள். மேலும் அவள் உத்தவனைப் பார்த்து, “உத்தவா, என் அருமை நண்பா, உனக்குக் காதும் கேட்கவில்லை, கண்ணும் தெரியவில்லையா? என் கானா எங்கேயுமே போகவில்லை, தெரிந்து கொள் அதை! அவன் இதோ இங்கே என்னோடு இருக்கிறான். என்னோடு நான் எங்கே போனாலும் வருகிறானே! என் கானா என்னுடனே வாழ்கின்றானே! என்னோடு தான் என் வீட்டில் வசிக்கிறான். இதுக்கு மேலே எனக்கு வேறு என்ன வேண்டும் உத்தவா? அவன் என்னை விட்டுப் பிரிந்தால் அல்லவோ நான் துக்கப்பட முடியும்? என் ஒவ்வொரு செய்கையையும் பார்த்துக்கொண்டு, கேட்டுக் கொண்டு அநுபவித்துக்கொண்டு இதோ என் கானா, என்னுடனேயே இருக்கிறானே! எனக்கு இன்னும் வேறு என்ன வேண்டும்? அவன் எங்கேயுமே போகவில்லை உத்தவா, எல்லாம் உன் பிரமை! உனக்கு ஒன்றுமே புரியவில்லை!” கலகலவென்று உற்சாகம் சற்றும் குறையாமலேயே சிரித்த ராதையைப் பார்த்த உத்தவன் கண்கள் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
அந்தத் துக்கம் மாறாமலேயே துக்கம் தொண்டையை அடைக்க ராதையின் நிலைமையைத் தான் கண்டபடிக்கு வர்ணித்தான் உத்தவன் கண்ணனிடம். மேலும் உத்தவன் சொன்னான்: “கண்ணா, அவள் சொன்னதைக் கேட்டும், அவள் சந்தோஷத்தைப் பார்த்தும் முதலில் எனக்கு அவளிடம் கோபமே வந்தது. ஆனால் அவள் மகிழ்ச்சி என்பது சற்றும் பொய்யே இல்லாமல் உண்மையாகத் தெரிந்தது. ஆகையால் அவளைக் கடிந்து கொள்ள மனம் வரவில்லை. உன்னுடைய புல்லாங்குழலில் ராதை கீதங்கள் இசைத்துக்கொண்டு யமுனைக்கரையில் அவள் விருப்பம் போல் சுற்றித் திரிகிறாள். கூடவே நீ அருகிலிருந்தால் என்ன பேசுவாளோ, அப்படி எல்லாம் பேசிக்கொள்கிறாள். பதில் வருகிறாப் போல் பாவனையும் செய்கின்றாள். சில சமயம் அவள் நிலை எனக்குக்கொஞ்சம் பயமாகவும் இருந்தது கண்ணா!” உத்தவன் நா தழுதழுக்க ராதையின் நிலைமையைக் கூறி முடித்தான். ஆனால் கண்ணனுக்கோ ராதையின் நிலைமை நன்கு புரிந்தது. ராதை தன்னுள் கலந்து விட்டாள். நானும் அவளுள் கலந்துவிட்டேன். ஒருவருக்கொருவர் இப்படிக் கலந்த பின்னர் வெறும் உருவம் எதுக்கு? அதான் ராதை நான் அவளுள் இருப்பதை உணர்ந்து என்னுடன் பேசுகிறாள். அவள் வேறு எங்கும் போகவில்லை. என் மூச்சில் உறைந்திருக்கிறாள். நான் மற்றவர்களுக்கு வாசுதேவ கிருஷ்ணனாக இருக்கலாம். ஆனால் என் ராதைக்கு நான் என்றுமே கானா தான். நான் என்றுமே அவளுக்குரியவன், அவளுடனே உறைபவன். கண்ணனுக்கும் இனம் புரியாத சந்தோஷம் வந்தது. ராதையின் அளப்பரிய அன்பையும், காதலையும், பக்தியையும் நன்கு புரிந்து கொண்டதால் இந்த உறவே ஓர் அற்புதமான, அதிசயமான, ஜோதிமயமான ஒன்றாகத் தெரிந்தது. வாழ்க்கையே திடீரென சந்தோஷமும், ஆநந்தமும் நிரம்பித் ததும்பியது. அழகு கொஞ்சியது.
************************************************************************************
சாந்தீபனியின் குருகுலம் மதுராவை விட்டுக் கிளம்ப ஆரம்பித்தது. கம்சன் இறந்து இருபத்தைந்து நாட்களாகிவிட்டன. யமுனைக்கரையோடு சென்ற சாலையில் சென்றது அந்த நடமாடும் பல்கலைக்கழகம். அதிகாலையிலேயே, பிரம்ம முஹூர்த்தத்திலே யமுனை நதியில் குளிர்ந்த பிரவாகத்திலே நீராடிக் காலை அனுஷ்டானங்களை முடித்துக்கொண்டனர். மதுரா நகரின் வெளிப்பாகத்திற்குச் சென்று தொடர்ந்து வரும் மற்றவர்களுக்குக் காத்திருந்தனர். அரச விருந்தாளிகள் அனைவரும் வந்தனர். அவர்களை உக்ரசேன ராஜா, அக்ரூரர், ப்ரத்யோதா போன்ற மிக உயர்ந்த யாதவத் தலைவர்கள் அழைத்து வந்தனர். தநுர்யாகத்திற்கென வந்துவிட்டு இன்னும் திரும்பாமல் இருந்த பல இளவரசர்களும் அன்று அவரவர் நாட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். யமுனைக்கரையே ரதங்களாலும், யானை, குதிரை, இளவரசர்களைத் தொடர்ந்து வந்த படை வீரர்கள் என நிரம்பி வழிந்தது. வந்திருந்த இளவரசர்களில் பெரும்பாலோர் கம்சனுக்கு மிகவும் நெருங்கியவர்கள். அனைவரும் கம்சனின் மாமனாரான ஜராசந்தனைத் தங்கள் முன் மாதிரியாகக் கொண்டிருந்தனர். அவர்களைத் தங்கள் பக்கம் இழுக்க வசுதேவர், அக்ரூரர் போன்றவர்கள் செய்த அனைத்து முயற்சிகளும் பலனற்றுப் போயின. அனைவரும் சம்பிரதாயமாகவும், கடமைக்காகவுமே இத்தனை நாட்கள் காத்திருந்த மாதிரி இருந்தது, இப்போது அவர்கள் கிளம்பும் காட்சியிலும், சம்பிரதாயங்கள் சற்றும் குறைக்காமலே அனைத்து முறைகளும் பின்பற்றப் பட்டன. எல்லாரிலும் ருக்மி சற்று அதிகமாகவே தன் வெறுப்பை வெளிப்படையாகவே காட்டிக்கொண்டான். பீஷ்மகன் மிகவும் பலம் பொருந்திய அரசன், அவன் மகன் ருக்மி, அவனைப் பகைத்துக்கொள்வது தங்களுக்குக் கொஞ்சம் கவலையைக் கொடுக்கிறது என்பது யாதவத் தலைவர்களுக்குத் தெரிந்தே இருந்தது. ஆனாலும் என்ன செய்ய முடியும்???
சாந்தீபனியின் நடமாடும் பல்கலைக்கழகத்தோடு செல்லும் கண்ணன், பலராமன், உத்தவன் ஆகியோருக்கு விடைகொடுக்க தேவகி, ரோகிணி போன்றோரும் வந்தனர். திரிவக்கரை தன்னுடைய வாசனைத் திரவியங்களை எடுத்து வந்து ருக்மிணிக்குக் கொடுத்தாள். கண்ணனிடம் தன் அன்பைக் காட்டி விடை கொடுத்தாள். தேவகிக்குத் தன் மகன் தன்னிடம் திரும்பி வந்ததில் ஆநந்தம் தான். ஆனாலும் இப்போது பிரியவேண்டி வந்திருக்கிறதே! ஆனால் என்ன செய்வது? இவனுக்காக நான் வருடக் கணக்காய்க் காத்திருந்தேனே. நல்லவேளை, இப்போது நமக்குத் தெரிந்தவர்களோடு படிக்கத் தானே போகிறான். நல்லவேளையாக மதுராவின் அரசுரிமையை வேண்டாம் என மறுத்தான். சாந்தீபனி போன்றதொரு உயர்ந்த குருவின் சிக்ஷையால் அவன் வாழ்க்கை மட்டுமில்லாமல் மொத்த எதிர்காலமும் பிரகாசமாய் விளங்கும்.
நல்ல கதை, கண்ணன் இராதை கதை இத்துடன் முடிந்து விடுமா? இராதை நினைத்தால் உத்தவனைப் போல மனம் கனமாக இருக்கின்றது. (திருட்டுக் கண்ணன்). நன்றி அம்மா.
ReplyDeleteRahdai veru Kannan vera. radhai jeevathma krishnan paramathma ..
ReplyDeleteராதையின் நெஞ்சமே, கண்ணனுக்குச் சொந்தமே!
ReplyDeleteஇப்படி ஒரு பாட்டு உண்டோ?
வாங்க பித்தனின் வாக்கு, ராதை இனி வரமாட்டாள் கண்ணனின் வாழ்க்கையில். :(
ReplyDeleteஎல்கே, நீங்க சொல்வது சரியே, ராதையை நினையாமல் கண்ணனை நினைப்பது எங்கே?
ReplyDeleteஜெயஸ்ரீ, ஆமாம் ஒரு சினிமாப் பாட்டு இருக்கு. எந்த சினிமானு நினைவில் இல்லை.
ReplyDeleteradha krishna than. krishna radha illai
ReplyDeleteஹிஹிஹி, எல்கே, தங்கமணிக்குத் தெரியுமா? நீங்க ராதையை சைட்டடிக்கிற விஷயம்?? :P:P:P:P:P
ReplyDelete\\கீதா சாம்பசிவம் said...
ReplyDeleteவாங்க பித்தனின் வாக்கு, ராதை இனி வரமாட்டாள் கண்ணனின் வாழ்க்கையில். :(
\\
அப்போ அவுங்க அவ்வளவு தானா!!..அய்யோ பாவம்.
கிருஷ்ணண் என்கிற ப்ரஹ்ம ஞானிக்கே குரு !! தெய்வமே மனித உருவில் இருந்தாலும் அதற்கதற்கான வழி விதி முறைகளை கடை பிடிக்கறது தான் தர்மம் என்று எவ்வளவு அழகாக வாழ்ந்து காட்டுகிறது!! ராமராய் இருந்தபோது வஸிஷ்டர், கிருஷ்ணனுக்கு ஒரு சாந்தீபனியர், நரசிம்ம சரஸ்வதிக்கு ( தத்தாத்ரேயர் )ஒரு க்ரிஷ்ண சரஸ்வதி!!!
ReplyDeleteராதா என்கிற அருமையான புல்லாங்குழல் போய் விட்டது . ஆனா இசையென்னும் இனிமை இன்னும் இருக்கு!! புல்லங்குழலா நம்ப மாறினா நமக்குள்ளையும் அந்த இசை ஒலிக்கும் இல்லை?
ReplyDelete@ஜெயஸ்ரீ,
ReplyDeleteகுருவின் மேன்மையையும், குருவிற்கு சீடன் செய்யவேண்டிய சேவைகளையும் கண்ணனை விடச் சிறப்பாகச் செய்தவர் யார்?? இல்லையா?? கண்ணனின் குருபக்தி மிகவும் போற்றத் தக்கது. மனிதனாய்ப் பிறந்த இந்த இரு அவதாரங்களிலும் மனிதனாகவே நடந்துகொண்ட நேரங்களே அதிகம். எப்படி மனிதன் நடக்கவேண்டும் என்பதற்கும் உதாரணம்!
நமக்குள்ளே ஒலிக்கிறதாலேதானே இதெல்லாம் பார்த்து, கேட்டு, படிச்சு அநுபவிக்கிறோம்! இதுக்கும் ஒரு மனசு வேணும் இல்லையா?? :))))
ReplyDelete//ஹிஹிஹி, எல்கே, தங்கமணிக்குத் தெரியுமா? நீங்க ராதையை சைட்டடிக்கிற விஷயம்??//
ReplyDeleteசின்ன வயசுல கண்ணன் வேஷம் போட்ருக்கேன் அப்பா ராதைய சைட் அடிச்சதோட சரி. இப்ப அந்த ராதை எங்க இருக்களோ ...ஹ்ம்ம்
எல்கே, தங்கமணியோட ஐடி அனுப்பி வைங்க, ஒரு கை இல்லை இரண்டு கையும் பார்த்துடலாம், :P:P:P அதுவும் இன்னிக்குப் பார்த்து டிக்ளேர் பண்ணி இருக்கீங்க! :)))))))))))))))
ReplyDelete