எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, February 01, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் இரண்டாம் பாகம்


பஞ்ச பாண்டவர்கள் யார்???


அஸ்தினாபுரத்து இளவரசர்களில் மூத்தவனான திருதராஷ்டிரன் பிறவிக்குருடாக இருந்ததால், தனக்கு உரிமையுள்ள சாம்ராஜ்யத்திற்கு முடிசூட்டிக்கொண்டு சக்கரவர்த்தியாக இருக்க மறுத்துத் தன் தம்பியான பாண்டுவே அதற்குத் தகுந்தவன் என அவனை முடிசூட்டிக்கொண்டு சக்கரவர்த்தியாக அநுமதித்திருந்தான். பீஷ்மரோ ராஜ்யம் இருவருக்கும் பொதுவானது என்றே கூறிவந்தார். இது இவ்வாறிருக்க பாண்டுவோ குந்திபோஜனின் வளர்ப்பு மகளும், வசுதேவரின் சகோதரியுமான குந்தி என்றழைக்கப் பட்ட ப்ரீத்தாவை அரசியல் காரணங்களுக்காக மணந்துகொண்டு பட்டத்து மஹிஷியாக்கினான். என்றாலும் அவன் ஆசைப்பட்டு மணந்து கொண்டது மாத்ரி என்னும் மாத்ர நாட்டின் இளவரசியை. மாத்ரியிடமோ அல்லது குந்தியிடமோ இல்லற சுகத்தை அநுபவிக்க முடியாமல் பாண்டுவுக்கு ஒரு ரிஷியின் சாபம் இருந்தது. அவன் தன் மனைவியோடு இல்லற சுகத்தை அனுபவிக்க ஆரம்பித்தால் அந்தக் கணமே அவன் உயிரிழக்க நேரிடும் என்று சாபம் கொடுத்திருந்தார் அந்த ரிஷி.

மனைவியோடு மான் உருவில் இன்பம் அநுபவித்துக்கொண்டிருந்த அந்த ரிஷியைத் தவறாக மான் என நினைத்து பாண்டு வேட்டையாட, இருவரும் வாழ்வை அநுபவிக்க ஆரம்பித்த நிலையில் இறக்க நேரிடுகிறது. ஈடேறாத தன் எண்ணத்தை நினைந்து அந்த ரிஷி, இறக்கும் தருவாயில் பாண்டுவிற்கு இவ்வாறு சாபம் கொடுக்கிறார். ஆகையால் இரு மனைவியர் இருந்தும் பாண்டுவால் தன் மனைவியரோடு மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை. ஆனால் குடும்பம் விஸ்தரிக்கப் படவேண்டும். அந்நாட்களில் அரசருக்கு இரண்டு அல்லது மூன்று மனைவியர் இருப்பது இவ்வாறான வாரிசுகள் ஏற்படுத்த வேண்டியதன் காரணமாகவே அன்றி இன்பம் மட்டுமே அனுபவிப்பதற்காக இல்லை. ஆனால் பாண்டுவால் கடமையாற்ற வேண்டிக் கூட மனைவியரை அனுபவிக்க முடியாமல் போகவே என்ன செய்வது எனத் தவித்துக்கொண்டு நாட்டைத் தன் அண்ணனிடமே ஒப்படைத்துவிட்டுத் தன் மனைவியரோடு காட்டிற்குச் சென்று தவ வாழ்க்கை வாழ முடிவு செய்தான்.

ஒரு நாள் மனம் மிகவும் நைந்த நிலையில் தன் பிரச்னையைக் குந்தியிடம் பகிர்ந்து கொண்டு பாண்டுவிடம், குந்தியும் துர்வாசரால் தனக்குக் கிடைத்த வரத்தைப் பற்றியும், அதைப்பயன்படுத்த வேண்டிய முறைகள் பற்றியும் விளக்கினாள். பாண்டு அந்த வரத்தைப் பயன்படுத்திக் குழந்தை பெற்றுக்கொள்ளுமாறு குந்திக்கு அறிவுறுத்த, முதலில் தயங்கிய குந்தி பின்னர், முழு மனதோடு பாண்டுவை நினைத்த வண்ணமே தர்ம ராஜாவை முதலிலும், வாயுவை இரண்டாம் முறையும், இந்திரனை மூன்றாம் முறையும் அழைத்துக் குழந்தைப் பேறை வேண்ட, அவ்வண்ணமே அவர்கள் அம்சத்தோடு பாண்டுவின் சாத்வீக குணங்களும், போர் நெறியும், அரச நெறியும் கலந்து மூன்று ஆண் குழந்தைகள் பிறந்தன. அவர்களுக்கு முறையே யுதிஷ்டிரன், பீமன், அர்ஜுனன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர். குந்திக்குக் குழந்தைப் பேறு கிடைத்ததைப் பார்த்து மாத்ரிக்கும் குழந்தை ஆசை வந்தது. பாண்டுவோ மந்திரத்தின் பலன் குந்திக்கு மட்டுமே என எண்ணி குந்தியையே மீண்டும் குழந்தைகள் பெற்றுக்கொள்ளச் சொல்ல திட்டவட்டமாய் மறுத்த குந்தி அதை மாத்ரிக்குச் சொல்லிக் கொடுத்தாள். மாத்ரியும் அந்த மந்திரங்களைப் பயன்படுத்தி ஒரே சமயத்தில் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுக்கிறாள். அவர்களுக்கு நகுலன் என்றும் சகாதேவன் என்றும் பெயர் வைக்கின்றனர். மாத்ரி பெற்றெடுத்தாலும் இயல்பாகவே குழந்தைகளிடம் பாசம் மிகுந்த குந்தி அந்தக் குழந்தைகளையும் அவளே பத்திரமாய்ப் பாதுகாத்து வளர்த்து வந்தாள்.

இதனால் தனிமையும், கணவனிடம் இயல்பாகக் கொண்ட காதலும் அதிகமான மாத்ரி, பாண்டுவோடு தன் நேரத்தைச் செலவிட, தன் ஆசை மனைவியை அநுபவிக்க ஆசை கொண்டு பாண்டு அவளைக் கட்டித் தழுவ முற்பட அவனால் இயலவில்லை. உடனே இறக்கிறான். குற்ற உணர்ச்சி மீதூற மாத்ரி தன் குழந்தைகளைக் குந்தியையே பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டுத் தானும் பாண்டுவோடு உடன்கட்டை ஏறுகிறாள். அந்தக்குழந்தைகளை அழைத்துக்கொண்டே குந்தி ஹஸ்தினாபுரம் வந்தடைகின்றாள். அவர்களே இப்போது மதுராவுக்கு வந்து கண்ணனுடனும், பலராமனுடனும் சிநேகிதமாய்ப் பழகும் பஞ்ச பாண்டவர்கள்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&


அர்ஜுனனின் மனம்!!

அர்ஜுனன் கண்ணனிடம் துரோணாசாரியார் என்னும் தங்கள் ஆசாரியாருக்குத் தான் இருட்டில் வில் வித்தை பயின்று அதில் தேர்ச்சி பெற்றவனாக இருப்பதில் அவ்வளவு சந்தோஷம் அடையவில்லை என்பதைக் கேட்டுக் கண்ணன் ஆச்சரியமடைந்தான். ஏன்?? ஏன்??? என்ன ஆயிற்று? என அர்ஜுனனைக் கேட்டான் மீண்டும். அர்ஜுனன் சற்று நேரம் தலை குனிந்து யோசித்துக் கொண்டிருந்துவிட்டுப் பின்னர் தனக்குத் தானே பேசிக்கொள்வது போல் கூறினான். “அன்று இரவின் பிடியில் மாலை நழுவிக்கொண்டிருந்த நேரம். இரவு உணவிற்காக நான் அமர்ந்திருந்தேன். கரிய இருட்டு தழுவிக்கொண்டது. நல்ல மழைக்காலம். புயல்காற்றும், மழையும் சேர்ந்து வரவே காற்றின் வேகம் தாங்கமுடியாமல் தீபங்கள் அணைந்துவிட்டன. தீபம் மீண்டும் ஏற்றுவதற்குள்ளாக நான் சாப்பிடுவதை நிறுத்தவில்லை. என் கை அநிச்சையாக உணவைத் தட்டிலிருந்து எடுத்து என் வாயில் போட்டுக்கொண்டிருந்தது. சட்டென எனக்குள் ஓர் எண்ணம்! இவ்வளவு இருட்டிலும் தட்டைக் கண்டறிந்து உணவை என் வாயில் போட என் கை முயலுமானால், ஏன் நான் இருட்டிலேயே வில்லில் இருந்து அம்பு போடப் பழகக்கூடாது??? அன்றிலிருந்து இரவு நேரங்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு குறியை வைத்துக்கொண்டு நான் வில் வித்தை பழக ஆரம்பித்தேன். அதில் வெற்றியும் பெற்றுவிட்டேன்.”

“என்றால் நிச்சயமாய் உன் ஆசான் உன்னைப் பாராட்டி மகிழ்ந்திருப்பாரே??” மீண்டும் கண்ணன் குரல் ஆதுரத்துடனும், கனிவோடும் வந்தது. “””ம்ம்ம்ம்ம்??? அப்படித் தான் இருக்கணும்! ஆனால் ஹஸ்தினாபுரம் அரண்மனையின் நிலையை நினைத்தால் , அதிலும் என் பெரியப்பாவின் குமாரர்களும், எங்களுக்கு அண்ணன் முறையானவர்களும் ஆன தந்தைவழிச் சகோதரர்களுக்கு இது தெரிந்தால் ஆசான் வேண்டுமென்றே அவர்களுக்கு இதைக் கற்றுத் தரவில்லை என்று பழி அவர் மீது விழுந்துவிடும். அதனால் கூட அவர் வாய் மூடி மெளனியாய் இருந்திருக்கலாம். குருநாதரின் மீது தவறில்லை. அவரால் சந்தோஷத்தை வெளிக்காட்ட முடியவில்லை.” இதைக் கூடப் பணிவோடும், குருநாதரிடம் தனக்கு இருக்கும் குருபக்தியோடும் வெளிப்படுத்தினான் அர்ஜுனன். “”ம்ம்ம்ம்,,, ஆனால் நீங்கள் ஐவரும் அவர்களை விட மிகவும் உயர்ந்து ஒப்பாரில்லாதபடி இருக்கிறீர்கள்.” என்றான் கண்ணன்.

“அப்படித் தான் இருக்குனு நம்பறேன்.” அர்ஜுனனுக்குச் சிரிப்பு வந்துவிட்டது. “ஏனெனில் எங்கள் பெரியப்பாவுக்கும், சரி, அவருடைய குமாரர்களுக்கும் சரி, நாங்கள் ஐவரும் அடி முட்டாள்களாகவே இருந்திருக்கலாம் என்ற எண்ணமே இருப்பதாய் ஊகிக்கிறேன். அப்போது அவர்களுக்கு இது மகிழ்ச்சியாகவும் இருக்கலாம்.”” அர்ஜுனன் மீண்டும் சிரிக்க, கண்ணன் அவனை அழைத்துக்கொண்டு யமுனைக்குச் சென்று இருவருமாய் நீராடினார்கள். சிறிது நேரத்துக்கெல்லாம் அவர்களுடன் மற்ற நால்வரும் சேர்ந்துகொள்ள யமுனைக்கரையே அல்லோலகல்லோலப் பட்டது. பின் நால்வரும் அரண்மனை நோக்கி நடக்க, அர்ஜுனனின் தோள் மேல் கை போட்ட வண்ணம் கண்ணன் நடந்தான். கரையில் இருவரும் நின்றனர். அர்ஜுனனைப் பார்த்துக்கண்ணன், “அர்ஜுனா, நீ இந்திரனின் அம்சத்தோடு பிறந்தவனா?” என்று கேட்டான்.

“அப்படித்தான் வேத வியாசர் சொல்கிறார். அம்மாவும் அதையே சொல்கிறாள்.” என்றான் அர்ஜுனன்.

“என்றால் நான் நினைத்த வண்ணம் தான்” என்றான் கண்ணன். “அது என்ன” என்று அர்ஜுனன் கேட்க, கண்ணன் கூற ஆரம்பிக்கிறான். விருந்தாவனத்து இந்திரவிழா பற்றியும் தான் அதை கோவர்தன விழாவாக மாற்றியதையும், கோபம் கொண்ட இந்திரன் மழையாக வர்ஷித்ததையும், கோவர்தனத்தைக் குடையாக்கித் தான் தூக்கியதையும் கூறினான். பின்னர் ஓர்நாள் தான் பசுக்களை மேய்த்த வண்ணம் படுத்திருக்கையில் தன் பகல்கனவு போன்ற ஒரு தோற்றத்தில் இந்திரன் நேரில் வந்ததையும், கண்ணன் செய்வதே சரி என்றும், இறைவனை வணங்குபவர் யாராயினும் அன்பாலே மன மகிழ்வோடு வழிபடுவதே நல்லது என்றும் பயத்தோடு வணங்கக் கூடாது என்பது சரியானது என்றும் கூறியதாகத் தெரிவித்தான். மேலும் கண்ணனைப் பார்த்து இந்திரன், தான் மக்கள் அனைவரையும் நேசிப்பதாகவும், தனக்குக் கோழைகளைத் தான் பிடிக்காது என்று கூறினான். கண்ணனிடம் உதவி கேட்டு யாசித்த இந்திரன், தனக்கு ஒரு மகன் இருப்பதாகவும், கண்ணன் எப்போதுமே அவன் பக்கம் இருக்கவேண்டும் என்றும், அவனுக்கு உதவ வேண்டும் என்றும் வேண்டிக்கொண்டான். கண்ணனும் ஒத்துக்கொள்ள அவ்வளவில் இந்திரன் மறைகிறான்.

ஆனால் இந்திரனின் மகன் யார் என்றோ அவன் இருக்குமிடம் பற்றியோ எந்தத் தகவலும் கிட்டவில்லையே என்று கண்ணன் யோசிக்கிறான். எப்படிக் கண்டுபிடிப்பது அவனை?? யோசித்த கண்ணனிடம் மதுரா வந்த பின்னர் தேவகி அர்ஜுனன் பற்றியும் அவன் இந்திரன் மகன் என்றும் கூறவே தான் தேடிய நண்பன் இவனே எனக் கண்ணனுக்குப் புரிகின்றது. அர்ஜுனன் இனி நாம் பிரியாமல் இருக்கவேண்டும் என்று சொல்லக் கண்ணனும் அதை ஒத்துக்கொள்கின்றான். அவன் கண் முன்னர் அவர்கள் ஏழு பேரும் சேர்ந்து கொண்டால் பலவிதமான சாகசங்களைப்புரிய முடியும் என்றும் இவ்வுலகையே தர்மத்தின் பாதையில் கொண்டு செல்ல முடியும் என்றும் நம்பிக்கை பிறந்தது. ஆஹா, ஏழு பேரும் சேர்ந்து செயல்படப் போகும் அக்காலம் இப்போவே வந்துவிடாதா? ஆனால் அதற்கு முன்னால் வேறொரு முக்கியமான வேலை உள்ளதே? தான் உபநயனம் முடித்து ஒரு பிரம்மசாரிக்குரிய கடமைகளைச் செய்து முடிக்கவேண்டும். ஏற்கெனவே தாமதமாகிவிட்டது. இனியும் பிரமசரியத்திற்குத் தாமதம் ஆகக்கூடாது. அதன் பின்னரே மற்றவை

6 comments:

  1. வாழ்வில் என்ன அதிசயமெல்லாம் நடக்கிறது.
    நர நாராயணர்களாகக் கண்ணனும் அர்ஜுனனும் சேர்ந்து நிகழ்த்தப் போகும்
    அதிசயங்களிப் பற்றிப் படிக்க
    இன்னும் நாட்கள் இருக்கின்றன. வெகு விவரமாகத் துரித வேகத்தில் போகிறது கதை கீதா.

    ReplyDelete
  2. நகுலன் & சகாதேவன் பிறந்த கதை இப்போது புரிந்தது. நன்றி தலைவி ;)

    ReplyDelete
  3. சகாதேவன் ஒரு நல்ல ஜோதிஷ சாஸ்திர பண்டிதர் இல்லையா கீதாம்மா??

    ReplyDelete
  4. வாங்க வல்லி, துரிதமாய் எங்கே போறது??/ எழுதி வச்சதெல்லாம் போட்டாச்சு, இனிமே எழுதி வச்சுண்டா கொஞ்சம் சீக்கிரம் போகும்! :))))))

    ReplyDelete
  5. வாங்க கோபி, உங்களுக்காகவே இந்தக் கதை மறுபடியும்!

    ReplyDelete
  6. தக்குடு, என்ன இந்தப் பக்கமெல்லாம், உங்களுக்குத் தெரியாததா நான் எழுதப் போறேன்??? :P:P:P:P:P

    ReplyDelete