எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, February 04, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், இரண்டாம் பாகம்!

கண்ணன் ஏற்ற பிரமசரிய விரதம்!

தானே ஒரு அவதாரம் என்ற நினைப்பின்றித் தன் வாழ்க்கையின் அடுத்த திருப்பத்தை அந்த ஆண்டவனே நிர்ணயிப்பான் என்ற எண்ணத்துடன் கிருஷ்ணன் அர்ஜுனனைத் தொடர்ந்து சென்றான். இருவரும் அருகருகே ஒருவரை விட்டு இன்னொருவர் பிரியாமல் அமர்ந்து கொண்டனர். இரவு படுக்கும்போதும் இருவருமே சேர்ந்து படுத்தனர். தங்கள் வாழ்வின் அனைத்து நிகழ்வுகளையும் அர்ஜுனன் கிருஷ்ணனோடு பகிர்ந்து கொண்டான். ஹஸ்தினாபுரத்தில் நடந்தவை அனைத்தையும் கூறினான். தாங்கள் காட்டில் வாழ்ந்த விதம், பின்னர் ஹஸ்தினாபுரம் வந்தது. அங்கே தங்கள் பெரிய தந்தையாரால் மறைமுகமாகவும், பெரிய தந்தையின் குழந்தைகளால் நேரடியாகவும் பட்ட, படும், இனியும் படப்போகும் அவமானங்கள், துன்பங்கள் என அனைத்தும் கிருஷ்ணனிடம் பகிர்ந்து கொண்டான். என்றாலும் இன்று வரையிலும் அனைவராலும் பிதாமகர் என அழைக்கப் படும் அவர்களின் தாத்தாவான பீஷ்மர் பாண்டவர்கள் பக்கமே பேசுவதையும், பாண்டவர்களான தங்களிடம் அவர் வைத்திருக்கும் தனிப் பாசத்தையும் பெருமையோடு கூறினான். இந்த உபநயனம் தங்கள் ஐவருக்கும் எத்தனை விமரிசையாக நடந்தது என்பதையும் நினைவு கூர்ந்தான். உபநயனத்தின் பின்னர் தாங்கள் வாழ்ந்த பிரமசரிய வாழ்க்கையைப் பற்றியும், அதிலும் தங்கள் ஆசிரியர்களால் தாங்கள் சிறப்பாகத் தேர்ச்சி பெற முடிந்ததையும் கூறினான்.

“ஆனால் கண்ணா,” கொஞ்சம் யோசனையுடனே சொன்னான் அர்ஜுனன். “அப்போது நாங்கள் அனைவருமே சிறுவர்கள். நீயோ இப்போதே பதினாறு பிராயம் நிரம்பி உள்ளாய். நிச்சயமாய் உனக்குக்கொஞ்சம் கஷ்டமாகவே இருக்கப் போகிறது.” என்றான். இதழ்களில் மயக்கும் புன்னகையோடு கிருஷ்ணன், “இல்லை அர்ஜுனா, இல்லை, நானும் இதில் தேர்ச்சி பெறுவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இந்த பிரமசரிய விரதத்தில் நான் தேறவில்லை எனில் நான் எப்படி தர்மத்தின் பக்கம் நின்றுகொண்டு, தர்மத்தைக் கடைப்பிடிக்க முடியும்?? மக்களை தர்மத்தின் பாதையில் நான் எப்படி இட்டுச் செல்ல முடியும்?? நான் தர்மத்தைக் கடைப்பிடிக்கவேண்டுமானால் இந்தக் கட்டுப்பாடுகள் நிறைந்த பிரமசரிய விரதம் அவசியமான ஒன்றல்லவா?? தர்மத்தின் பாதையை விட்டுச் சற்றும் அகலாமல் நான் செல்லவேண்டும் என நினைக்கிறேன். அதற்கு இது உறுதுணையாக இருக்கும்.” என்றான். “எப்படியோ, கண்ணா, எனக்குப் புரியவில்லை அப்பா. நீயோ விருந்தாவனத்திலும், கோகுலத்திலும் உன் இஷ்டத்திற்கு வாழ்ந்து பழகியவன். உனக்கு இந்தக் கட்டுப்பாடான வாழ்க்கை ஒத்துவருமா என்பதில் எனக்கு இன்னமும் சந்தேகமே.”

“அர்ஜுனா, இப்போது புரிகிறதல்லவா? என் வாழ்க்கையின் முக்கியப் பகுதியான பிரமசரிய விரதம் இருப்பதில் நான் எவ்வளவு தாமதித்துவிட்டேன் என?? இழந்ததை நான் ஈடு செய்யவேண்டுமே? நான் முடிவு கட்டிவிட்டேன். இந்த வாழ்க்கையை ஏற்பது என. அது எவ்வளவு கஷ்டமானாலும் செய்து முடிக்கப் போகிறேன். இதைச் செய்து முடிக்காமல் என் வாழ்நாளை நான் எவ்வாறு கழிப்பேன்?? என்னால் சந்தோஷமாக அப்புறம் வாழ முடியுமா? முதலில் இதை நான் புரிந்து கொள்வேன். பின்னர் என் வாழ்க்கையை எங்கே ஆரம்பித்து சந்தோஷமாய் வாழவேண்டும் என்பதை அறிந்து கொண்டு பின்னர் அதை எங்கே எவ்வாறு நிறுத்தவேண்டும் என்பதையும் அறிந்து கொள்வேன். அப்போது தான் வாழ்க்கை முழுமை பெறும். அரண்மனை வாழ்க்கை கிட்டிவிட்டது என வெறும் சாப்பாட்டுப் பிரியனாக வாழ்க்கை நடத்தமாட்டேன்.”

“ம்ம்ம்ம்ம்ம்..,, என்னமோ கிருஷ்ணா, எங்களுக்கு வாழ்க்கையில் சந்தோஷம் என்பதைத் தேடவேண்டும் போல் இருக்கிறதே! எங்க பெரியப்பா பையனும், என்னுடைய அண்ணன் முறையுமான துரியோதனன் இருக்கிறானே, அவன் எங்களை எப்படியேனும் ஹஸ்தினாபுரத்தை விட்டு விரட்ட நினைக்கிறான். ஒருவேளை….. ஒருவேளை…… அவன் எண்ணம் வெற்றியடைந்தால்?? வெற்றியடைந்தால் நாங்கள் எங்கே போவோம்?? யாருடைய பாதுகாவலில் இருப்போம்? எப்படி வாழ்வோம்?? ஒன்றுமே புரியவில்லையே! துரியோதனன் எங்கள் தந்தை வழி எங்களுக்கென உள்ள அரச உரிமைகளில் எங்களுக்கு உரிமையானதைக் கொடுப்பானா? மாட்டானா? அதுவும் புரியவில்லையே!” அர்ஜுனன் முகம் வருத்தத்தில் தோய்ந்தது.

“என்ன இது அர்ஜுனா?? கோழை போல் பேசுகிறாயே? நீங்கள் ஐந்து பேர் இருக்கிறீர்கள் சகோதரர்கள். ஒற்றுமையாகப் போராட மாட்டீர்களா என்ன?? உங்கள் உரிமையை ஏன் விட்டுக் கொடுக்கவேண்டும்?” கிருஷ்ணன் முகத்தில் குழப்பம். இவ்வளவு கெட்டிக்காரனாய் இருக்கிறான். நம்மை விட நன்கு படித்தும் இருக்கிறான். ஆனாலும் இவ்வளவு அவநம்பிக்கையோடும் ஒரு இளைஞனால் இருக்க முடியுமா?? ம்ஹும், நானே இன்னும் நம்பிக்கையை இழக்கவில்லையே. என்னை ஜராசந்தன் ஒரு பக்கம் துரத்துகிறான். இன்னொரு பக்கம் கம்சனின் அந்தரங்க விசுவாசிகள் திட்டம் போடுகின்றனர். இதற்கு நடுவில் நெருங்கிய உறவினர்கள் நம்மை இடைச்சிறுவன் என்று கேலி செய்கின்றனர். இத்தனைக்கும் நடுவில் நம்பிக்கையை இழக்காமல் இருக்கிறோமே. அர்ஜுனனுக்கும் இது தெரியவேண்டாமா??

“போகட்டும், உன்னைப் பார்த்தப்புறம் எனக்குக் கொஞ்சம் நம்பிக்கை வந்திருக்கு கண்ணா, நீ என் அருகே இருந்தால் யானை பலம் பெற்றதாயும் உணர்கிறேன். “ அர்ஜுனன் சொன்னான்.

“ஓஓஓஓ, இது என்ன பிரமாதம்?? நாம் இருவரும் இணைந்து பணியாற்றுவோம். தர்மத்தைக் காக்க, மக்களை அதர்மத்தின் பிடியிலிருந்து விடுவித்து தர்மத்தின் பாதையில் செலுத்துவோம். இருவரும் இணைந்து நிறைய சாதிப்போம் என எனக்கும் தோன்றுகிறது.” கண்ணன் முகம் கனவில் ஆழ்ந்து வருங்காலத்தின் ஜோதிமயமான பிரகாசத்தில் கூசினாப் போல் கண்கள் மூடுகின்றன.

“ஆஹா, கண்ணா, இது என்ன?? நீ எப்போவும் தர்மத்தைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறாயே?? என்னப்பா விஷயம்?? தர்மத்தைப் பற்றி உனக்கு என்ன தெரியும்? நீ என்ன தர்மத்தின் காவலனா??”அர்ஜுனன் கொஞ்சம் கிண்டலாகவே கேட்டானென்றாலும் அவன் மனதிலும் இதிலுள்ள உண்மையை அறியவேண்டும் என்ற அவா இருந்தது. அனைவரும் கண்ணனின் பிறப்பைப் பற்றிச் சொன்னதை, சொல்லி வந்ததை அவனும் அறிவான். கிருஷ்ணன் பெரிதாகச் சிரித்தான், “ ஆஹா, அது ரொம்பவே சுலபமான ஒன்று அர்ஜுனா. ஒண்ணும் பெரிய விஷயமில்லை. என்னால் ஒவ்வொரு நிமிஷமும், ஒவ்வொரு நொடியும் என்னால் கடைப்பிடிக்கவேண்டிய தர்மத்தைப் பற்றிப் புரிந்து கொள்ள முடிகிறது. என்னால் அதைக் காணவும் முடியும்.”

“சரிதான், என்னவோப்பா, எனக்கு இன்னமும் புரியத்தான் இல்லை” கொஞ்சம் அடக்கமாகவே சொன்னான் அர்ஜுனன். அவன் தன்னை முழுதும் நம்புவதைக் கண்ணனால் உணர முடிந்தது. இது என்ன உறவு?? அவன் நம்மை நம்புகிறான் என்பதை உணர்ந்த கணமே என் மனம் மகிழ்வில் ஆழ்கிறதே? அவன் பொய்யும் எதுவும் சொல்லுவதில்லை. எப்போதுமே உண்மையே பேசுகிறான். இவனை எனக்கு மிகவும் பிடிக்கிறது. என் இனிய நண்பனாக இருப்பான் எப்போதுமே. கண்ணன் மனம் திருப்தியில் ஆழ்கிறது.

இரண்டு நாட்களில் உபநயனச் சடங்குகள் ஆரம்பிக்கின்றன. மதுராவில் கொண்டாட்டங்கள் தடை செய்யப் பட்டிருந்தன. கம்சனின் மரணத்திற்கான துக்கம் அநுஷ்டித்தல் இன்னும் முடிவு பெறவில்லை. ஆகவே எல்லாவிதமான கொண்டாட்டங்களும் தடை செய்யப் பட்டிருந்தன. முக்கியமான நபர்கள் மட்டுமே பங்கேற்ற இந்த உபநயனச் சடங்குகளில் கண்ணனுக்கும், பலராமனுக்கும், உத்தவனுக்கும் உபநயனம் செய்விக்கும் கடைசி கட்டச் சடங்குகள் நடக்க ஆரம்பித்தன. மூவருக்கும் தலை முழுமையாக முண்டனம் செய்யப் பட்டு, உச்சியில் மாத்திரம் சிறிய குடுமி வைக்கப் பட்டது. ஹோமம் வளர்க்கப் பட்டது. கிருஷ்ணனும், பலராமனும் அவர்களின் பெற்றோர்களான வசுதேவரிடமும், தேவகியிடமும் தாங்கள் உபநயனம் செய்து கொண்டு பிரமசரிய விரதம் கடைப்பிடிக்க வேண்டிய அநுமதியை சாஸ்திரபூர்வமாக வாங்கிக் கொண்டனர். பின்னர் முதல் குருவான கர்கரிடமும், அதன் பின்னர் சாந்தீபனி, பின்னர் மற்ற உறவினர்கள் என அனைவரிடமும் ஆசிகளை வாங்கிக் கொண்டு வேத கோஷங்கள் முழங்க பூணூல் தரித்துக் கொண்டனர். உபதேசம் செய்யப் பட்டது. அவர்கள் மூவருக்கும் மான் தோல் அணியக் கொடுக்கப் பட்டது. இரவு படுக்கவும் வேறொரு மான் தோலே அளிக்கப் பட்டது. கையில் ஒரு தண்டமும், கமண்டலமும், பிக்ஷா பாத்திரமும் கொடுக்கப் பட்டது. கால்களுக்கு மரச் செருப்புகள். கண்ணனிடமும், மற்றவர்களிடமும் இது உனக்கு மறு பிறவி எனச் சொல்லப் பட்டது. சாஸ்திரங்களின் படி உபநயனம் நடக்கும்போது ஏற்கெனவே பிறந்த ஒவ்வொரு ஆண்மகனும் மீண்டும் பிறவி எடுக்கிறான் என எடுத்துக் கூறப்பட்டது. அவன் இனி தினமும் மேன்மை வாய்ந்த ஒரு ஆரியனுக்குரிய சடங்குகளைச் செய்ய வேண்டும். மான் தோலை விரித்துத் தரையில் தான் படுக்கவேண்டும். குருநாதரின் அநுமதி இல்லாமல் எதுவும் செய்யக் கூடாது, சாப்பாடு சாப்பிடுவது உள்பட அனைத்துக்கும் குருநாதரின் அநுமதி பெற்றே செய்யவேண்டும். தினமும் பிக்ஷை எடுத்தே சாப்பிடவேண்டும். (முதல் பிக்ஷையைத் தன் தாயான தேவகியிடமே பெற்றுக்கொள்ளவேண்டும்) அதுவும் தேவைக்கு அதிகமாய் பிக்ஷை எடுக்கவும் கூடாது. பிரமசாரிக்குரிய அநுஷ்டானங்களையும் வழிபாடுகளையும் பின்பற்றவேண்டும். சாஸ்திர, சம்பிரதாயங்களைக் கடைப்பிடிக்கவேண்டும். ஓர் அரசகுமாரனுக்குரிய சாஸ்திர, அஸ்திர, வாள், வில் வித்தைகளைக் கற்கவேண்டும். குதிரை ஏற்றம், யானை ஏற்றம், ரத ஓட்டம் அனைத்திலும் தேர்ச்சி பெறவேண்டும். மருத்துவ முறைகளை, உடனடி சிகிச்சை முறைகளை அறிந்து கொள்ளவேண்டும். அரசனாகக் குடிமக்களை எவ்வாறு வழிநடத்த வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். பாரபட்சம் இல்லாமல் நீதியையும், தர்மத்தையும் நிலைநாட்டப் புரிந்து கொள்ளவேண்டும். ஆம் தர்மத்தை நிலை நாட்டவேண்டும். கண்ணன் பிறந்ததின் காரணமே அது தானே! கண்ணன் பிரமசரிய விரதத்தை ஆரம்பித்துவிட்டான். இனி………

10 comments:

  1. மஹா ஞானி மட்டுமில்லை மஹாராஜாவும் தானே? leaderஆக கிருஷ்ணனிடம் தான் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்!! .லீடர் என்பவன் செய்து காட்டுபவன் அல்லவா.அதி சாதுர்யன்!! இப்போ லீடெர் எல்லாம் டெலிகேட் மட்டுமே பண்ணிட்டு ஹாயா இருக்கறதுனால தான் ப்ரச்சனையே. எல்லாருக்கும் பதவி வேணும் ஒரு துரும்பையும் நகட்டாம, உடம்பு நோகாம!!

    ReplyDelete
  2. வாங்க எல்கே, நன்றிப்பா. உங்க பதிவையும் பார்த்தேன். சில சமயம் படிச்சாலும் பின்னூட்டம் கொடுக்கிறதில்லை, மன்னிக்கவும்.

    ReplyDelete
  3. வாங்க ஜெயஸ்ரீ, ராஜாவாய் துவாரகையை ஆண்டதில்லை என்றாலும் இன்றளவும் குஜராத் முழுதுக்கும் அவனே ராஜா. கண்ணனின் ராஜ்யம் என்ற நினைப்போடயே இருக்கும் மக்கள். ஆள்பவர் யாரானாலும் அவருக்கு இரண்டாமிடம் தான். அவரும் அதைப் பொருட்படுத்துவதில்லை. தினமும் ஜெய்ஸ்ரீகிருஷ்ணா சொல்லாமல் பொழுது விடிவதுமில்லை, அஸ்தமிப்பதுமில்லை. இவ்வளவு பக்தியை நம்மால் காட்டமுடியுமா?? சந்தேகமே! :(

    ReplyDelete
  4. நன்றாக சொல்லியுள்ளீர்கள். கால தாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்கள். தற்போது உடல் நலம் பரவாயில்லையா?. ஆமா ரோடு போட்டு முடிச்சாங்களா? இல்லையா?

    ReplyDelete
  5. வாங்க பித்தனின் வாக்கு, முதல்லே பிறந்த நாள் துளசிக்கு, அங்கே சொல்லவேண்டிய வாழ்த்தை இங்கே சொல்லிட்டீங்க.

    பின் தொடரலைனாலும் அடிக்கடி வரதுக்கு நன்னிங்கோ. உங்க கல்யாணப்பதிவைத் தேடினேன், தேடினேன், தேடிக்கொண்டே இருக்கிறேன்(க்ர்ர்ர்ர்ர்ர் ஒரு லிங்க் கொடுத்திருக்கக் கூடாதோ???) என்னை மாதிரி சோம்பேறிங்களுக்கு அதான் லாயக்கு! :))))))))

    ReplyDelete
  6. ரோடு இன்னும் போடலை, இப்போத் தான் டெண்டரே கூப்பிட்டிருக்காங்க. டெண்டர் திறக்கணும், அப்புறம் ரோடு! என்னிக்கோ ஒருநாள் வந்துடுமே! ஹையா! ஜாலி!!

    ReplyDelete
  7. பிரமசரிய விரதத்தை முறைகளை எளிமையாக சொல்லியிருக்கிங்க தலைவி....இனி !?? ;))

    ReplyDelete
  8. வாங்க கோபி, இது எளிமையா?? ஹிஹிஹி, எவ்வளவு கஷ்டம்னு அநுபவிச்சால் தான் புரியும்! :))))))))))))

    ReplyDelete
  9. //தினமும் பிக்ஷை எடுத்தே சாப்பிடவேண்டும். (முதல் பிக்ஷையைத் தன் தாயான தேவகியிடமே பெற்றுக்கொள்ளவேண்டும்) அதுவும் தேவைக்கு அதிகமாய் பிக்ஷை எடுக்கவும் கூடாது//

    மேலும், ஒரே வீட்டிற்கு தினமும் பிக்க்ஷைக்கு போகக் கூடாது

    ReplyDelete