கீழே உள்ள பதிவை நேற்றே போட நினைத்து முடியவில்லை. இன்று போட்டுள்ளேன். இது உ.வே.சாமிநாதய்யர் அவர்கள் சீவக சிந்தாமணியைப் பதிப்பிக்கப் பட்ட முயற்சிகள் பலவற்றில் ஒரு சிறு துரும்பு. எவ்வளவு கஷ்டப் பட்டு விபரங்கள் தேடி ஊக்கத்தோடும், முனைப்போடும் செயல்பட்டிருக்கிறார் என்பதற்கான ஆதாரம். மேலும் அவருக்குத் தகவல்கள் கொடுத்து உதவியதும் ஒரு பெண்மணி. இதிலிருந்து அக்கால கட்டத்தில் பெண்கள் படிப்பதிலிருந்து தடுக்கப்படவில்லை என்பதும், முடக்கப்படவில்லை என்பதும் கற்றறிந்த சான்றோராகவே இருந்தனர் என்பதும் புரியவரும். பிற ஆண்களுக்கு எதிரே வருவது என்பது எல்லாக் குடும்பங்களிலும் வழக்கத்தில் இல்லை. ஆகவே அந்த அம்மையார் வெளியே வரவில்லை என்பது குடும்ப வழக்கம் என்றே கொள்ளவேண்டும். மற்றபடி கல்வியறிவிலும், ஆன்மீகத்திலும் சிறந்தே விளங்கியிருக்கிறார் என்பதும் புரிய வருகிறது.
*************************************************************************************
186. "பவ்ய ஜீவன்"
மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே.சாமிநாதையர்
சீவகசிந்தாமணி தமிழில் உள்ள சிறந்த காப்பியங்களில் ஒன்று. அது ஜைனசமயத் துறவியாகிய திருத்தக்க தேவரென்னும் பெரியாரால் இயற்றப் பெற்றது. ஜைனர்கள் அந்நூலை ஒரு பாராயண நூலாகப் போற்றி வருகின்றனர்.
முதன்முதலில் அந்நூலைத் தான் ஆராய்ந்து வெளியிட்டேனென்பது தமிழுலகு அறிந்த விஷயம். சிந்தாமணியே என்னுடைய தமிழ்நூற்பதிப்பில் முதல் அரும்பு. வழக்கொழிந்த பழந்தமிழ்நூல்களை அறிவதற்கும் ஆராய்வதற்கும் அச்சிடுவதற்கும் என் உள்ளத்தைப் பக்குவப் படுத்தி ஊக்கமூட்டியவை அந்த நூலும் அதன் உரையுமே. தமிழ்த் தொண்டினால் இன்பம் உண்டென்னும் உண்மையை எனக்கு முதன்முதலில் வெளிப்படுத்தியது அந்த நூலே.
முதன் முயற்சியிலே அடையும் சிரமங்கள் அளவிறந்தன. சிந்தாமணியைப் போன்ற நூல்கள் தமிழ்நாட்டில் வழங்காத அக்காலத்தில் அதன் நடையே ஒரு தனிப் பாஷைபோல இருந்தது. அதன் உரையோ பின்னும் புதியதாகவே தோற்றியது. அதில் உள்ள விஷயங்களோ ஜைன சமயத்தைச் சார்ந்தவை. சைவம், அத்வைதம், வைணவம் என்னும் மூன்று சமயக் கருத்துக்களே தமிழ்நாட்டில் அதிகமாக வழங்கின. ஜைன சமயத்தைப் பற்றி அறிந்தவர்களையோ, கூறும் தமிழ்நூல்களையோ காண்பது அரிதாக இருந்தது. அன்றியும் திருவாவடுதுறையாதீனமாகிய சைவ மடத்திற் படித்த எனக்குப் புறச்சமயமாகிய ஜைனத்தைப் பற்றி அறிந்து கொள்ள வாய்ப்பு ஏது?
நான் கும்பகோணம் காலேஜில் இருந்தேன். சிந்தாமணி ஏட்டுப் பிரதியைக் கொடுத்துப் படிக்கச் சொன்னவர் சேலம் இராமசாமி முதலியார். நானும் படித்து அவருக்கும் பாடஞ்சொல்லி வந்தேன். ஜைனசமயக் கொள்கைகளை அறிந்து கொள்வதற்கு மிகவும் பாடுபட்டேன். என்னிடம் படித்துக்கொண்டிருந்த இராமலிங்க பண்டாரமென்பவர், என் கஷ்டத்தையறிந்து கும்பகோணத்தில் ஜைனர்கள் சிலர் இருக்கிறார்களென்று கூறியதோடு தமக்குத் தெரிந்த சந்திரநாத செட்டியாரென்ற ஒருவரை எனக்குப் பழக்கம் செய்விப்பதாகவும் சொன்னார்.
ஒருநாள் சந்திரநாத செட்டியார் வீட்டிற்கு அவரும் நானும் போனோம். அந்த வீடு ராமஸ்வாமி கோவிலுக்கு மேல்புறமுள்ள ஒரு தெருவில் இருந்தது. அவர்கள் வீட்டில் வாழைமரமும், மாவிலைத் தோரணமும் கட்டப் பட்டிருந்தன. மாக்கோலம் போட்டிருந்தார்கள். ஜைனசமய நூல்களில் மிகச் சிறந்த பயிற்சியை உடைய *வீடூர் அப்பாசாமி நயினார் என்பவரும் வேறு சிலரும் வந்திருந்தனர். முதலில் சந்திரநாத செட்டியாரையும் அப்பால் மற்றவர்களையும் பழக்கம் செய்துகொண்டேன். "இன்று உங்கள் வீட்டில் ஏதோ சுபகாரியம் நடந்தது போலிருக்கிறது." என்றேன் நான்; "ஆமாம்! இன்று சிந்தாமணி பாராயண பூர்த்தி உத்ஸவம். சில மாதங்களாகச் சிந்தாமணி படனம் நடந்து வந்தது" என்றார். வீடூர் அப்பாசாமி நயினார் சந்தை சொல்லச் சந்திரநாத செட்டியார் முதலியோர் அதைப் படனம் செய்து வந்தார்களென்று அறிந்தேன். எனக்கு அப்பொழுது இராமாயண பட்டாபிஷேஹம், பெரியபுராண படனம் முதலிய செய்திகள் ஞாபகத்துக்கு வந்தன.
அப்பால் என்னுடைய சந்தேகங்கள் போவதற்கு அந்த ஜைனர்கள் பெரிதும் துணை செய்வார்களென்ற தைரியம் எனக்கு உண்டாயிற்று. அப்பாசாமி நயினாரிடமிருந்து பல விஷயங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டேன். அவர் சிலகாலம் கும்பகோணத்தில் இருந்தார். அவர் இருந்தவரையிலும் அடிக்கடி அவரிடம் சென்று விஷயங்களைத் தெரிந்து கொண்டேன். அவர் பிறகு ஊர் சென்றுவிட்டார். நான் கண்டு பேசிய ஜைனர் பலர், கும்பகோணத்தில் தரணி செட்டியார் என்ற ஒருவர் இருந்தனரென்றும் அவர் ஜைன விஷயங்களில் ஒரு உரையாணியைப் போல விளங்கினாரென்றும் கூறினார்;" அவர் இருந்திருந்தால் இந்த விஷயங்கள் உள்ளங்கை நெல்லிக்கனி போல விளக்கிவிடுவாரே!" என்று இரங்கினர்.
சந்திரநாத செட்டியார் மிக்க செல்வர்; ஜைன நூற்பயிற்சி நன்றாக உடையவர். அவருக்குச் சிந்தாமணி முழுவதும் பாடமாக இருந்தது. வைணவர்கள் திவ்யப் பிரபந்தத்தை ஸேவிப்பது போல அவர் சிந்தாமணியை ஸேவித்து மனனம் பண்ணியிருந்தார். நான் சிந்தாமணியை ஆராய்ந்தபோது நச்சினார்க்கினியர் தம் உரையினிடையே பின்னே வரும் செய்யுட்பகுதியை எடுத்துக்காட்டிச் சில செய்திகளை விளக்கி வருவதை அறிந்தேன். அப்படிக் காட்டப் பெற்ற பகுதிகள் எங்கே இருக்கின்றன வென்பதைத் தேடுவது ஆரம்ப காலத்தில் சிறிது கஷ்டமாக இருந்தது. அப்போது சந்திரநாத செட்டியாரைக் கேட்பேன். கேட்டவுடனே அவர் அப்பகுதிகள் இன்ன இன்ன இலம்பகத்தில் இன்ன இன்ன பாட்டில் வருகின்றனவென்று சொல்லிவிடுவார். இப்படியே சிந்தாமணியை ஜைனர்களிற் பலர் பாடம் பண்ணியிருந்ததை நான் அறிந்தேன். ஆனாலும் அவர்கள் அச்செய்யுட்களை ஆராய்ச்சி முறையில் படிக்கவில்லை. குற்றங்களைந்து சுத்த பாடமாக மனனம் செய்யவில்லை. பரம்பரையாக வந்த பழக்கத்தினாலும் பக்தியினாலும் சிந்தாமணியைப் பாராயணம் செய்தும் மனனம் செய்தும் வந்தார்கள். சம்பிரதாயமாக வழங்கி வந்த உரையொன்றையும் அவர்கள் நெட்டுருச் செய்திருந்தார்கள். அந்த உரை பெரும்பாலும் சம்ஸ்கிருத பதங்கள் நிரம்பியும் பரிபாஷைகள் விரவியும் அமைந்திருக்கும். மூலத்திலும் உரையிலும் பலகாலமாக ஏறிப் போன வழுக்கள் வழுக்களாகவே இருந்தன. எட்டுப் பிரதிகளும் அவர்கள் பாடமும் எவ்வளவோ இடங்களில் மாறுபட்டன. அதனால் அவர்கள் பாடத்தை வைத்துக்கொண்டு ஆராய்வதென்பது இயலாத காரியமாயிற்று.
ஒருமுறை சந்திரநாத செட்டியார் வெளியூருக்குச் சென்றிருந்தார். ஸமவசரணம் என்பதைப் பற்றி விரிவாக அறியவேண்டிய சந்தர்ப்பம் வந்தது. சந்திரநாத செட்டியார் இல்லாமையின் வேறு யாரையேனும் கேட்கலாமென்றெண்ணினேன். அவர் வீட்டிற்கு எதிர்வீட்டில் குணபால செட்டியாரென்பவர் ஒருவர் இருந்தார். அவரும் ஜைனசமய சாஸ்திரப் பயிற்சியுடையவரென்று கேள்வியுற்றேன். யாரேனும் ஒருவர் என் ஆராய்ச்சிக்குச் சிறிதளவு பயன்படக்கூடியவராக இருந்தாலும் அவரைத் தேடிப் பிடித்துப் பழக்கம் செய்துகொண்டு அவரிடமிருந்து அவருக்குத் தெரிந்தவற்றை அறிந்து கொள்வதில் எனக்குச் சிறிதும் சலிப்பு ஏற்படுவதில்லை. ஆதலின் குணபால செட்டியாரையும் பார்த்துப் பழக்கம் பண்ணிக்கொள்ளவேண்டுமென்று நிச்சயம் செய்துகொண்டேன். ஒருநாள் அவர் வீட்டுக்குப் போனேன்.
அவரும் ஒரு செல்வர்; பிராயம் முதிர்ந்தவர். நான் போனவுடன் என்னை அன்போடு வரவேற்று உபசரித்தார். நான் அந்த ஊர்க் காலேஜ் உபாத்தியாயராதலின் என்னைப் பற்றி அவர் தெரிந்து கொண்டிருந்தார். ஒரு 'ஸோபா'வில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தேன். அந்த ஆஸனத்தில் மூட்டைப் பூச்சிகள் இருந்தன. சகல உரிமையோடும் அவை மேலே உலாவிக்கொண்டிருந்தன. ஒன்றைக் கையில் எடுத்தேன். குணபால செட்டியார், "ஹா ஹா ஹா!! கொல்லவேண்டாம், கொல்லவேண்டாம்" என்று நடுங்கிக் கொண்டே கையை அசைத்தார். ஜீவகாருண்யத்தை உயிரினும் சிறந்ததாக மதிக்கும் ஜைனர்களில் அவர் ஒருவர் என்பதை அப்போது உணர்ந்தேன். கையில் எடுத்த மூட்டைப் பூச்சியை அதனுடைய இடத்திலே சுகமாக இருக்கும்படி விட்டுவிட்டு நான் அந்த 'ஸோபா'வினின்று எழுந்திருந்து வேறிடத்தில் உட்கார்ந்து கொண்டேன். அவரிடம் ஸமவசரணமென்பதைப் பற்றிக் கேட்டேன். அவர் தமக்குத் தெரிந்தவற்றைக் கூறிவிட்டுத் தம் வீட்டில் இருந்த ஸமவசரணத்தைக் குறிக்கும் படமொன்றைக் காட்டினார். நான் பார்த்து மகிழ்ந்தேன். அவரிடம் மேலும் பல விஷயங்களைக் கேட்டேன். சிலவற்றைச் சொன்னார். மாலை ஐந்து மணி ஆயிற்று. அவர் உணவுகொள்ளப் போய்விட்டார். இரவில் உண்ணுவது ஜைனர்களுக்கு விரோதமானது.
அவர் ஜைன சம்பிரதாயங்களை அநுஷ்டானத்தில் ஒழுங்காக அநுசரிப்பது கண்டு நான் வியந்தேன். அவர் போஜனம் செய்த பிறகு ஜின ஸ்தோத்திரங்கள் சொல்லத் தொடங்கினார். நெடுநேரம் சொல்லிவிட்டுப் பிறகு வந்தார். சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார். சில விஷயங்களை அவர் தெளிவாகச் சொல்ல இயலவில்லை; "நாளைக்கு வாருங்கள். இவைகளைத் தெரிந்து கொள்ளலாம்" என்று அவர் கூறி என்னை அனுப்பினார். 'புஸ்தகங்களைப் பார்த்துத் தெரிந்து சொல்வார் போலும்!' என்றெண்ணிக் கொண்டு நான் திரும்பி வீடு சென்றேன்.
மறுநாள் அவருடைய வீட்டிற்குச் சென்றேன். வீட்டுத் திண்ணையில் அவர் உட்கார்ந்திருந்தார். நான் அவருக்கு எதிரே சிறிது தூரத்தில் உட்கார்ந்தேன். அவர் என்னைக் கண்டவுடன், "வாருங்கள்; இருங்கள்" என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றார். ஏதாவது புஸ்தகத்தை எடுத்து வருவாரென்று எண்ணினேன். சிறிது நேரத்தில் மீண்டு வெறுங்கையோடு வந்தார். "சரி, இப்போது உங்கள் சந்தேகங்களை யெல்லாம் சொல்லுங்கள்" என்று சற்று ஊக்கத்தோடு சொன்னார். அவர் என்னைக் கண்டதும், உள்ளே போனதும், மீண்டு வந்து ஊக்கத்தோடு இப்படிச் சொன்னதும், அவர் ஏதோ புதிய பலத்தைப் பெற்று வந்திருப்பதைப் போலத் தோற்றச் செய்தன.
நான் ஒரு சந்தேகத்தைக் கேட்டேன். அவர் அதைக் கேட்டு அங்கே இருந்த ஜன்னல்வழியாக உள்ளே யாரோ ஒருவரிடம் அதை அப்படியே சொன்னார்; உள்ளிருந்து சற்று மெல்லிய குரலில் அதற்கேற்ற விடை வந்தது. செட்டியார் அடைந்த புதியபலம் அந்தக் குரலென்பதை அறிந்து கொண்டேன். அக்குரல் ஒரு முதிர்ந்த பெண்பாலாருடையதென்று தோற்றியது. என்னுடைய சந்தேகத்துக்கு அது தெளிவான விடையாக இருந்தது. நான் இருந்த இடத்திலிருந்து உள்ளே இருப்பவர் இன்னாரென்று பார்க்கமுடியவில்லை.
அடுத்தபடி வேறொரு கேள்வி கேட்டேன். செட்டியார் அதை வாங்கி ஜன்னல் வழியாக உள்ளே அனுப்பினார். உள்ளிருந்து அந்த மெல்லியகுரலிலே விடை வந்தது. இப்படி நான் கேட்பதும் செட்டியார் அதை ஜன்னல் வழியாகத் தெரிவிப்பதும் அங்கிருந்து விடை வருவதுமாக ஸம்பாஷணை நடைபெற்று வந்தது. நானும் அதற்குள் ஓரளவு ஜைன விஷயங்களை அறிந்திருந்தேனாதலின் உள்ளிருந்து வரும் விடைகளை நன்றாகத் தெரிந்து குறிப்பெடுத்துக் கொண்டேன். இப்படி நிகழும்போது இடையே உள்ளிருந்த குரல், "பவ்யஜீவன் போலிருக்கிறதே!" என்றது. நான் மிகவும் சிரத்தையோடு மிக நுண்ணிய ஜைன சமயக் கருத்துக்களைக் கேட்டு வந்தேன். அக்கேள்விகளால் என்னைப் பற்றி ஓர் அபிப்பிராயம் அந்தக் குரலுக்குடையாருக்கு ஏற்பட்டிருக்கவேண்டுமென்று தோற்றியது. பவ்ய ஜீவனென்பது ஜைனர்களுள் கிரமமாக மோக்ஷமடைவதற்குத் தகுதியான நிலைமையில் இருக்கும் ஆத்மாவைக் குறிப்பது. எனக்கு அவ்விஷயம் முன்பே தெரிந்திருந்தது. ஆதலின் என்னப் பவ்ய ஜீவனென்று உள்ளிருந்தவர் கூறினவுடன் என் உடலில் மயிர்க்கூச்செறிந்தது. அர்கத் பரமேஷ்டியின் பக்தி எனக்கு அதிகமென்றெண்ணியேனும், நான் ஸந்தோஷமடையவில்லை. சிந்தாமணியை ஆராய்வதற்கு என்பால் ஓரளவு தகுதி உண்டு என்பதை அந்த இனிய குரல் கூறி என்னைத் தேற்றியதாகவே நான் கருதினேன்.
சிந்தாமணிக்கு உரை எழுதத் தொடங்கிய நச்சினார்க்கினியர் மிகவும் உழைத்துச் செய்திகளை அறிந்து முதலில் ஓர் உரை வகுத்தனராம். அதை ஜைனப் பெரியார்களிடம் காட்டியபொழுது அவர்கள் அங்கீகரிக்கவில்லை. அப்பால் அவர் ஒரு ஜைனவித்தியார்த்தி போல் சித்தாமூரிலுள்ள ஜைனமடத்திற்குச் சென்று ஜைன சமய நூல்களைக் கற்றுப் பிறகு இரண்டாம் முறை உரை எழுதினாராம். அதை யாவரும் அறிந்து பாராட்டினராம்.
இந்த வரலாற்றை நான் கேள்விப் பட்டிருந்தேன். அத்தகைய நூலை, "நடுக்காட்டில் வழி தெரியாது திகைப்பவனைப் போல நிற்கும் நான் எப்படி ஆராயமுடியும்? எனக்குத் தகுதி ஏது?" என்று ஐயமும் அச்சமும் கொண்டிருந்தேன். "பவ்ய ஜீவன்" என்று எனக்கு யோக்யதாபத்திரம் ஒரு ஜைன அறிவாளி மூலம் கிடைத்ததென்றால் எனக்கு ஆறுதலும் ஊக்கமும் உண்டாவதில் என்ன ஆச்சரியம்?
"உள்ளே இருந்து பேசுபவர்கள்...??" என்று பணிந்த குரலில் வாக்கியத்தை முடிக்காமலே செட்டியாரைக் கேட்டேன்.
"நம்முடைய பார்யை" என்று அவர் பெருமை தொனிக்கக் கூறினார். தம்மைக் காட்டிலும் தம் மனைவியாருக்கு அதிக அறிவு இருப்பதில் அவருக்கு எல்லையற்ற திருப்தி இருந்தது.
"அப்படியா! அவர்கள் இன்றைக்கு எனக்கு மகோபகாரம் செய்தார்கள். நான் எங்கெங்கோ தேடித் தேடிக் கஷ்டப் பட்டேன். இந்தக் காலத்தில் இவ்வளவு விஷயங்கள் அவர்களுக்குத் தெரிந்திருப்பது மிகவும் ஆச்சரியம்" என்றேன் நான்.
"எல்லாம் எங்கள் பிதா அவர்கள் ஆசீர்வாதம். அவர்கள் இட்ட பிச்சை."உள்ளிருந்த பெண்மணியார் கூறினார். அப்படிச் சொல்லும்போதே அவர்குரல் இடையிடையே தழுதழுத்தது; துக்கத்தின் கலப்பு அதில் இருந்தது. அவர் அப்போது தம்முடைய தந்தையாரை நினைவு கூர்ந்ததே அதற்குக் காரணம் என்று நான் ஊகித்துக்கொண்டேன்.
"அவர்கள் நாமதேயம் என்னவோ?" என்று நான் கேட்டேன். "தரணி செட்டியார்" என்று குணபால செட்டியாரே பதில் சொன்னார். "தரணி செட்டியார்வாளா!" என்று ஆச்சரியப் பட்டேன் நான். பலர் அப்பெரியாரைப் பற்றி அடிக்கடி கூறியது எனக்கு ஞாபகம் வந்தது.
"அவர்களைப் பற்றி நான் கேட்டிருக்கிறேன். அவர்களைப் பார்த்து விஷயங்கள் தெரிந்து கொள்ளும் அதிர்ஷ்டம் இல்லாவிட்டாலும் அவர்களுடைய அருமைக் குமாரியாரிடமிருந்து தெரிந்து கொள்ளும் லாபம் கிடைத்ததே; அதோடு, அவர்கள் எனக்குப் 'பவ்யஜீவன்' என்ற பட்டம் வேறு கொடுத்தார்களே; இதை நான் என்றும் மறவேன்" என்று நன்றியறிவோடு நான் கூறி விடை பெற்றுக்கொண்டேன்.
*.இவர் கும்பகோணம் காலேஜ் பிரின்சிபால் ஸ்ரீமான்ராவ்பகதூர் அ. சக்கரவர்த்தி நயினார் அவர்களுடைய பிதா.
மிக்க அருமை. பதிப்பித்தமைக்கு நன்றி.
ReplyDeleteதமிழ்த்தாத்தா உ.வே.சா.பற்றிய நினைவுகள் எக்காலத்தும் நாம் போற்றிப் பாதுகாக்க வேண்டியவை.
ReplyDeleteபகிர்தலுக்கு மிக்க நன்றி.
திருதக்கத்தேவரின் சீவகசிந்தாமணி மறக்கவே முடியாத காவியம். ஜீவகன்,அவன் தாய் விஜயை, காப்பியத்தின் வில்லன் கட்டியங்காரன் எல்லோருமே மறக்கவே முடியாத படைப்புகள். வான ஊர்தி பற்றி முற்பட்ட காலத்திய இந்த
காப்பியத்தில் பேசப்பட்டிருக்கும்.
சீவக சிந்தாமணி precisely வேத கால 4 ஆஸ்ரம விதிமுறைகளை பற்றிதான் நு எனக்கு தோனும். க்ரஹஸ்தனா இருந்த ஒருவரின் கதையாக அவர் முக்தி அடையும் வரை உண்டான ordealஎன்று நான் அர்த்தம் பண்ணிக்கொண்டேன் .
ReplyDeleteஉ வே தத்தா எவ்வளவு HUMILITY.
அதை "பார்த்து " APPRECIATE பண்ணற ஜீவன் இன்னும் எவ்வளவு humble ஆ இருந்திருக்கணும் ! NOBLE SOULS!!
நல்ல பதிவு. பதிப்பித்தமைக்கு நன்றி. அந்தக்காலத்தமிழை டீ-கோட் செய்வதே ஒரு சுகம்தான் :-)
ReplyDeleteum schoolku kootikitu pona geetha teacheruku nandri
ReplyDeleteநல்ல முயற்சி கீதாம்மா! வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாங்க தங்கவேல், முன்னாலும் எழுதி இருக்கேன், தாத்தா அவர்களின் நினைவு மஞ்சரியில் இருந்து, தேட முடியலை சுட்டி கொடுக்க.
ReplyDeleteநன்றி ஜீவி சார். நீங்க படிச்சது சந்தோஷமா இருக்கு.
ReplyDeleteஜெயஸ்ரீ, ஆமாம், நிச்சயமாய் உயர்ந்த உள்ளங்கள் தான். கற்பனை பண்ணினாலே சுகம், இதைவிட மற்றொன்று "தர்மம் தலைகாக்கும்" என்ற தலைப்பிலே கண்ணில் நீர் வர வைச்சது. நன்றிம்மா.
ReplyDeleteவாங்க பினாத்தல், நீங்களும் இதைப் படிச்சது அறிந்து சந்தோஷம், ஒவ்வொரு வருஷமும் நினைவு மஞ்சரியின் ஒரு சிறு பாகமாவது எழுதிப்பகிர்ந்துகொள்ளவேண்டும் என்ற ஆசையுடன் எழுதினேன். ஆதரவு இருப்பதற்கு மகிழ்ச்சி.
ReplyDeleteவாங்க எல்கே, உங்க தலைமுறை அதிகம் அறிந்திராத ஒன்றல்லவா இது??
ReplyDeleteதக்குடு, பழசை எல்லாம் தோண்டிப் பார்த்துப் படிங்க. முன்னாலேயும் எழுதி இருக்கேன். :)))))))))))
ReplyDelete@geetha
ReplyDeletehello nangalam ithai padichirukom.. tamil is nmy first language..
ஹிஹிஹி எல்கே, சரி, சரி, சரி, நம்பிட்டோம்ல!! :)))))))))
ReplyDelete//ஹிஹிஹி எல்கே, சரி, சரி, சரி, நம்பிட்டோம்ல!! :))//
ReplyDeletenambithan aganum