கண்ணனை அடைக்க முடியுமா???
மறுநாள் காலை ராது தன்னுடைய காயங்களைக் கூட நினைக்காமல் வழக்கம்போல் வேலை செய்ய ஆரம்பித்தான். கப்பலின் மாலுமி ஏதோ தைலத்தைத் தடவி யிருந்தான். ராதுவின் மனம் பூராவும் கண்ணன் நேற்றிரவு தனக்குக் கிடைக்கப் போகும் தண்டனையைப் பற்றிக் கூட எண்ணாமல் பணிவிடைசெய்து தன்னைத் தேற்றியதே நிரம்பி இருந்தது. மெல்ல, மெல்லக் கப்பலின் மற்றப் பணியாளர்களுக்கும் இந்த விஷயம் பரவ, அவர்களுக்குள் மெல்லக் கிசுகிசுத்துப் பேசிக்கொண்டனர். அனைத்து மாலுமிகளும் புதிதாய் வந்த இரு இளைஞர்களின் நன்னடத்தையையும், அன்பையும், கருணையையும் பார்த்து வியந்தனர். பாஞ்சஜனாவின் கொடூரத்தால் பாலைவனம் போல் காய்ந்திருந்த அவர்கள் மனதில் ஊற்றுப் போல் அன்பு பெருக்கெடுத்தது. அது முழுதும் கண்ணனுக்காகவே என நிரம்பி வழிந்தது. பாஞ்சஜனாவும், கண்ணனிடமும், உத்தவனிடமும் அன்பாகவே நடந்துகொண்டான். அவனுடைய மெய்க்காவலர்களான இரு ராக்ஷசர்களும் வழக்கம்போல் சாட்டையும், கையுமாக அலைந்தனர்.
மூன்றாம் நாள் கப்பல் ஏதோ ஒரு துறைமுகத்தில் நங்கூரமிட்டு நின்றது. அது குஷஸ்தலை எனச் சொல்லப் பட்டது. அந்த நாட்டு அரசனான குக்குடுமின்னைத் துரத்திவிட்டு புண்யாஜனா ராக்ஷசர்கள் இதைக் கைப்பற்றிவிட்டதாகவும் கூறப்பட்டது. கப்பலில் இருந்து இறங்கிக் கரைக்குச் சென்று அவர்கள் தங்கள் கப்பலுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டே அல்லது பெற்றுக்கொண்டோ வந்தனர். மறுநாள் காலையில் ஒரு சின்னஞ்சிறு சிறுவன் வயது பதினாறு கூட இருக்காது. பாஞ்சஜனாவின் தண்டனைக்குக் காத்து நின்றான். அவன் செய்த தவறு மரியாதையுடன் நடக்கவில்லை என்பதாம். பாஞ்சஜனாவின் உத்தரவின் பேரில் ஹுல்லு அவனுக்கு சாட்டை அடிகளை வழங்க சிறுவன் துடிதுடித்தான். பாஞ்சஜனாவோ அதை ஓர் சிரிப்போடு பார்த்து ரசித்துக்கொண்டிருந்தான். அன்றிரவும் கண்ணனும், உத்தவனும் தண்டனை பெற்றுக்கொண்டு துடிப்பவனைப் போய்ப் பார்த்து ஆறுதல் மொழிகள் சொல்லி, தேற்றி, சாட்டை அடியினால் பட்டிருக்கும் காயத்திற்கு மருந்தையும் இட்டனர். அவனுக்குத் தங்கள் பங்குக்கு அளிக்கப் பட்ட நீரிலிருந்து குடிக்க நீரும், அருந்த உணவும் அளித்தனர். கப்பலின் மாலுமிகள் கொஞ்சம் ஆச்சரியத்தோடே வந்து, வந்து பார்த்துவிட்டுச் சென்றனர். பாஞ்சஜனாவின் செய்கையை இவ்வளவு தைரியமாகவும் ஒருவனால் எதிர்க்கமுடியுமா??
அந்தச் சிறுவன் இந்த செளராஷ்டிரக் கடற்கரையில் எங்கேயோ ஓர் இடத்திலிருந்து இந்த ராக்ஷசர்களால் கடத்திக்கொண்டுவரப்பட்டவன் என்றும், அவன் இங்கு வந்து சில மாதங்கள் ஆயிற்று என்றும், அவனுக்கு ஆதரவு அளிக்கவோ, அன்பைக் காட்டவோ யாருமே இல்லை என்பதால் மனம் நொந்து வெம்பிப் போய் இருக்கிறான் என்பதும் கண்ணனுக்குப் புரிந்தது. தன் பூரண அன்பையும் அவனிடம் பொழிந்து கண்ணன் அவனுக்குத் தேறுதல் சொன்னான். அந்தப் பையனைத் தன் மடியில் போட்டுக்கொண்டு ஒரு தாயைப் போல் அவனுக்குப் பணிவிடைகள் செய்தான். அழுதுகொண்டிருந்த அந்த இளைஞன் மெல்ல, மெல்ல தன்னை மறந்து தூங்க ஆரம்பித்தான். ஒரு தாயைப் போலவே தன் மடியிலிருந்து அவனை எடுத்துக் கீழே விட்ட கண்ணனுக்குத் தனக்குப் பின்னால் யாரோ நிற்கின்றார்கள், தன் செயல்களைப் பார்க்கிறார்கள் என்ற உணர்வு ஏற்பட்டது. சட்டெனத் திரும்பிப் பார்த்தான். ஹூக்கு! ராக்ஷச இரட்டையர்களில் ஒருவனான ஹூக்கு கண்ணனைச் சாட்டையால் தாக்கச் சமயம் பார்த்துக்கொண்டிருந்தான். கண்ணன் மெதுவாக உத்தவனுக்கு எச்சரிக்கைக் குரல் கொடுத்தான். “அசையாதே! உத்தவா! அப்படியே நில்! இந்த ராக்ஷதனை எதிர்கொள்ளுவோம்!” என்றான் கண்ணன்.
முதலில் யாரோவென நினைத்த ஹூக்குவிற்கு இப்போது இந்த இரு இளைஞர்களையும் அடையாளம் புரிந்தது. தன் எஜமானின் மனதுக்கு உகந்தவர்கள் என்பதும் புரிந்தது. ஆனாலும் அவனுக்குக் கட்டளை தவறு செய்பவர்களைப் பிடித்து இழுத்துவருவது ஒன்றே. அதிலிருந்து அவன் மீற முடியாது. இவர்கள் யாரானால் என்ன?? இழுத்துச் செல்வோம் எஜமானிடம். ஹூக்கு இருவரையும் தோள்களைப் பற்றி இழுத்துக்கொண்டே கண்ணனுக்கு விளங்காத ஏதோ ஓர் மொழியில் என்னவோ சொன்னான். பின்னர் இருவரையும் தரதரவென்று இழுத்துக்கொண்டே போனான்.
ஏற்கெனவே அடி வாங்கிக்கொண்டு கிருஷ்ணனால் தூங்க வைக்கப்பட்ட பையனும் எழுந்து நடந்ததைப் பார்த்தான். பிக்ரு என்ன செய்கிறான் எனக் கவனித்தான். இதை ஒன்றையுமே அறியாதவன் போல அவன் கப்பல் சரியான திசையில் தான் செல்கிறதா என்பதை அறிபவன் போல விண்ணின் நக்ஷத்திரங்களைப் பார்த்துக்கொண்டிருந்தான். அவற்றிலிருந்து அவன் தன் கண்களை அகற்றவே இல்லை. கண்ணனும், உத்தவனும் கீழே சாமான்கள் கொட்டி வைக்கும் இடத்திற்குக் கொண்டு செல்லப் பட்டு அங்கே இருந்த ஒரு மரக் கூண்டில் அடைக்கப் பட்டனர். அதை நன்கு ஒரு பெரிய பூட்டினால் பூட்டினான் அந்த ஹூக்கு என்னும் ராக்ஷசன். பின்னர் அவன் சென்றுவிட்டான். கூண்டு வைத்திருந்த இடமும் சரி, கூண்டும் சரி, காற்றுக்குக் கொஞ்சமும் இடம் கொடுக்காவண்ணம் அமைக்கப் பட்டிருந்தது. அதோடு அங்கே குவிக்கப் பட்டிருந்த வித விதமான மளிகைப் பொருட்கள், மற்றும் பல்வேறு பொருட்களின் வாசனைகளும் சேர்ந்த ஒரு கலவை மூச்சை அடக்க வைத்தது. சீக்கிரத்திலே உத்தவனுக்கு வாந்தி வந்துவிட்டது.
கொஞ்ச நேரம் ஆனதும் கண்ணன் மெல்ல மெல்ல உத்தவனையும் தூங்கச் சொல்லிவிட்டுத் தானும் தூங்க யத்தனித்தான். யாரோ அங்கே வந்திருக்கிறார்கள். மெல்லிதாக மூச்சுவிடும் சப்தமும், மெதுவாக நடமாடும் சப்தமும் கேட்டது. கண்ணன் எச்சரிக்கை அடைந்தான். “கிருஷ்ணா! என்ன செய்கிறாய்?” மெல்ல மெல்ல ரகசியம் பேசுவது போல் ஒரு குரல்.
அப்பாடா, அது பிக்ருதான் வேறே யாருமில்லை. கண்ணனும், “என்ன விஷயம்?” என்று விசாரித்தான். “கப்பல் தலைவன் கப்பலின் யாத்திரை செல்லும் திசையை மாற்றச் சொல்லிவிட்டான். நாம் வைவஸ்வதபுரிக்குப் போகப் போவதில்லை” என்றான் பிக்ரு.
“ஓ, பின்னர் எங்கே போகிறோம்?”
“மிக மிக தூரத்தில், ஷோனிதாபுரி என்னும் நகரம்!” என்றான் பிக்ரு. கண்ணனுக்கு முதல்நாள் குஷஸ்தலையில் நிறுத்தி ஏன் அவ்வளவு பொருட்கள் வாங்கப்பட்டன என்பது புரிந்தது. “ம்ம்ம்ம்ம்..,, பாஞ்சஜனாவின் எண்ணம் என்னவாய் இருக்கும்? நீ என்ன நினைக்கிறாய் பிக்ரு?” கண்ணன் கேட்டான்.
“வேறு பக்கம் சென்று தொலைதூரத்து நாடுகளில் ஏதாவதொன்றில் உன்னை விற்கப் போகிறான். யாரேனும் அரசனுக்கு விற்பான். நிறையப் பணம் கிடைக்குமே அவனுக்கு. அவன் பணத்தாசை பிடித்தவன்.”
“பிக்ரு, நாம் எப்படியேனும் வைவஸ்வதபுரி போயாகவேண்டும். எனக்குப் புநர்தத்தனைப் பார்த்தே ஆகவேண்டுமே!”
“ஆஹா, அவன் விடமாட்டான், கண்ணா, விடமாட்டான். போகமுடியாது!”
“சரி, அப்போ அவனுக்குத் தெரியாமல் அவனின் அநுமதி இல்லாமலேயே இந்தக் காரியத்தைச் செய்தாகவேண்டும். உன்னிடம் இந்தக் கூண்டின் சாவி இருக்கிறதா?”
“ஹூக்குவிடம் அன்றோ உள்ளது?”
“அப்போ நான் கூண்டை உடைத்துக்கொண்டு வரட்டுமா?”
“வேண்டாம், கண்ணா, வேண்டாம், பின்னர் அதற்கும் சேர்த்துத் தண்டனை கிட்டும் உனக்கு. உன்னைக் கொன்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.”
“ம்ம்ம்ம்??? சரி, நான் இந்தக் கூண்டின் கம்பிகளை உடைத்துக்கொண்டு வெளியே வந்துவிடுகிறேன். ராதுவால் காலை விடிவதற்குள்ளாக இதைச் சரி செய்யமுடியுமா என்று கேள்” என்றான் கண்ணன். கண்ணன் முகத்தைப் பார்த்த பிக்ரு அவன் உண்மையாகவே சொல்கிறான் என்பதைப் புரிந்துகொண்டு, ராதுவைத் தேடிக்கொண்டு போனான். அவனைக் கேட்டுப் பார்க்கவேண்டும் என்று சொல்லிக் கொண்டே போனான். கண்ணனோ அவனால் முடியாவிட்டாலும் தங்களால் இந்தக் கூண்டில் இருக்கமுடியாது என்றும் உடைத்துக்கொண்டு வெளிவரப் போவதாயும் அறிவித்தான். கண்ணனும், உத்தவனும் கலந்து பேசிக்கொண்டனர். கூண்டை நன்கு ஆராய்ந்தனர். எந்தப் பக்கம் கம்பிகள் ஆட்டம் கொடுக்கின்றன என்பதைக் கண்டுகொண்டு அந்தக் கம்பிகளைப் பிளந்துகொண்டு இருவரும் ஒருவர் பின் ஒருவராக வெளியேறினார்கள். பின்னர் ராதுவைத் தேடிக்கொண்டு இருவரும் சென்றனர். வழியிலேயே கீழே வந்துகொண்டிருந்த ராதுவைப் பார்த்தார்கள். ராது ஒருவருக்கும் தெரியாமல் மறைந்து மறைந்து வந்து கொண்டிருந்தான். கிருஷ்ணன் புன்னகை புரிந்தான்.
interestinga pothu ... dont stop
ReplyDeleteஏதோ மர்மமும் திகிலும் நிறைந்த கதையைப் படிப்பது போல இருக்கிறது. கீதா. கண்ணன் கதையைப் பார்த்துத்தான் வெளிநாட்டவரும் ,கப்பல் கொள்ளையர்கள் கதையைஒ எழுதி இருப்பார்களோ!
ReplyDeleteநல்ல நடையில் சுறுசுறுப்பாகவும் விறு விறுப்பாகவும் போகின்றது. கண்ணன் தெய்வீகத் தன்மைகளைக் காண்பிக்காமல் அடக்கி வாசிப்பது மிக அருமை. நன்றி.
ReplyDeleteநல்ல நடையில் சுறுசுறுப்பாகவும் விறு விறுப்பாகவும் போகின்றது. கண்ணன் தெய்வீகத் தன்மைகளைக் காண்பிக்காமல் அடக்கி வாசிப்பது மிக அருமை. நன்றி.
ReplyDelete