கண்ணனை என்ன செய்யலாம்?
மறுநாள் அதிகாலை நேரம், பொழுது புலர இன்னும் ஒரு நாழிகை இருக்கையில் ஹூக்கு கப்பலின் முன்பக்கம் தற்செயலாக வந்தான். வந்தவன் அதிர்ச்சியில் உறைந்தான். தன் கண்களைத் துடைத்துவிட்டுக்கொண்டு, கசக்கிவிட்டுக் கொண்டு, தன்னைக் கிள்ளிப் பார்த்துக்கொண்டு, பல விதங்களிலும் பார்த்தும், அவனால் தன் கண்களை நம்பமுடியவில்லை. அங்கே சூரியன் உதிக்கும் திசையை நோக்கி அமர்ந்து காலை அநுஷ்டானங்களைச் செய்வது யார்?? கிருஷ்ணனும், உத்தவனும். என்ன இது? இருவரையும் கூண்டில் அடைத்துப் பெரிய பூட்டையும் போட்டல்லவோ பூட்டினேன்? இங்கே எப்படி இவர்கள்? இது என்ன மாயம்? அதிசயம்? இந்தப் பையனுக்கு உண்மையிலேயே தெய்வீக சக்தி உள்ளதா? அல்லது சின்னச் சின்ன சித்துவேலைகளைக் கற்று வைத்திருக்கிறானோ? ஓட்டமாய்க் கப்பலின் கீழ்ப்பகுதிக்கு ஓடிக் கூண்டு வைத்திருக்கும் இடம் சென்று அங்கே அவர்கள் இருவரும் இருப்பதை உறுதி செய்து கொள்ள நினைத்தான். ஓடிப் போய்ப் பார்த்தான். கூண்டு காலியாக இருந்தது. எந்த இடத்தில் கூண்டின் கதவை அல்லது அதன் கம்பிகளை உடைத்திருக்கமுடியும் எனக் கூர்மையாகக் கவனித்தான். எல்லாமே சரியாக இருந்தது. எங்கேயும் எந்தத் தப்பும் நடக்கவில்லை. கூண்டின் கதவுகளும் உடைக்கப்படவில்லை. கம்பிகளும் வளைக்கப்படவில்லை. அப்போ??? எப்படி இது நடந்தது??
ஹூக்குவிற்கு எதுவுமே புரியவில்லை. விளங்கவில்லை. எங்கிருந்தோ வந்த இரு பையன்கள், ஏதோ கெட்ட சூன்யக் காரங்களோ இவர்கள்? காற்றில் நடப்பார்களோ? கடல் நீரின் மேலும் நடப்பார்களோ?? கடவுளே, இப்படிப்பட்டவர்களின் கோபத்தால் பல வீடுகளும், பல மக்களுக்கும் நாசம் விளையுமோ?? இவர்களை ஏன் நம் கப்பல் தலைவர் அநுமதித்தார்?? நம்மை விடவும் இவர்கள் கெடுதலைச் செய்வார்களோ? யாருக்கும் பயப்படமாட்டார்கள் போல் தெரிகிறதே. இப்போ இந்தக் கூண்டிலிருந்து எப்படித் தப்பினார்கள்? அதுவும் கூண்டின் எந்தப் பாகமும் உடையாமல்?? ம்ம்ம்ம்ம்??? எதுக்கும் நம் எஜமானிடம் சொல்லிவிடவேண்டும் இவர்களைப் பற்றி. ஹுல்லுவையும் அழைத்துக்கொண்டே போய்ச் சொல்லலாம். ஹூக்கு தன் தலைவன் பாஞ்சஜனாவிடம் சொல்லிவிட்டு, அந்த இரு இளைஞர்களுக்கும் தண்டனை கொடுக்க வேண்டி ஹூல்லுவையும், தங்கள் சாட்டைகளையும் எடுத்துக்கொண்டு மீண்டும் கப்பலின் முன்பக்கம் வந்தான். பாஞ்சஜனா அங்கே நின்றுகொண்டிருந்தான். அவன் கண்களில் கோபத் தீ கொழுந்து விட்டெரிந்தது. கிருஷ்ணனையும் உத்தவனையும் பார்த்து, “எங்கே போயிருந்தீர்கள் இருவரும்? நேற்றிரவெல்லாம் எங்கே உறங்கினீர்கள்?” என வினவினான்.
கண்ணன் சற்றே அலக்ஷியமாக, “ம்ம்ம்ம்???” என்றான். பின்னர் சிறிய ஒரு மென்னகையுடன், “ஹூக்கு சொல்லவில்லை?? உன்னிடம் தண்டனை வாங்கிய அந்தச் சிறுவனுக்குத் தேறுதல் கூறி அவன் புண்களுக்கு மருந்திட்டு அவனைத் தூங்க வைத்தோம்.” என்றான்.
“என்ன அலட்சியம்?? என்ன தைரியம்?? உங்கள் வேலை அதுவன்று.” என்றான் பாஞ்சஜனா.
கண்ணன் முகத்தில் மீண்டும் புன்னகை சிரிப்பாக மலர்ந்தது. “ஆம், ஆம், அது எங்கள் வேலை அல்லதான். ஆனால் அது எங்கள் தர்மம். எங்களுக்கு விதிக்கப்பட்ட ஒன்று. நீ அவனுக்குத் துன்பத்தையும், வலியையும் கொடுத்தாய். அந்தத் துன்பத்தில் இருந்தும், வலியிலிருந்தும் அவனை விடுவிக்கச் சிறு முயற்சி எடுத்துக்கொண்டோம். அது எங்கள் தர்மம்.” மீண்டும் கண்ணன் அவனைப் பார்த்துக் கொண்டே பிடிவாதம் பிடித்துக்கொண்டிருக்கும் குழந்தைக்கு ஒரு தாய் எப்படிப் புரிய வைப்பாளோ அவ்வாறு அதே அன்பு குரலில் தொனிக்க, முகத்திலும் அன்பைக் காட்டியவண்ணமே சொன்னான்.
“தண்டனை அளிக்கப்பட்டவர்களைத் தனிமையிலே தான் விடவேண்டும் என்பது என் கண்டிப்பான கட்டளை. அதை அறிய மாட்டீர்களா இருவரும்? அதனால் போனீர்களோ?” பாஞ்சஜனாவிற்குக் கிருஷ்ணனின் அழகான, மென்மையான உடலில் சாட்டை அடி பட்டால் விலை போகமாட்டானே என்ற கவலை. ஆகவே அவனுக்குத் தெரியாமல் செய்துவிட்டான் என்ற சாக்கில் தண்டனையை நிறுத்தி வைக்கலாம் என நினைத்தான் போலும். ஆனால் கண்ணனோ, “எங்களுக்கு நன்றாகத் தெரியுமே! தெரிந்தேதான் போனோம். எங்கள் தர்மத்தை நாங்கள் எந்தக் காரணத்தை முன்னிட்டும் கைவிடமுடியாது. காயம்பட்டு மனத்துயரம் நிரம்பி உள்ளவனுக்கு உதவியே ஆகவேண்டும்.”
“என்ன துணிச்சல் உனக்கு? இங்கே நீ தலைவனா? நான் தலைவனா? என்ன அவமரியாதை?? மிருகங்களா நீங்கள்? ம்ம்ம்ம்ம்…, மறந்தே விட்டேனே, ஹூக்கு உங்கள் இருவரையும் கூண்டில் அல்லவோ அடைத்திருந்ததாய்ச் சொன்னான்?”
“ஆம், கூண்டில் தான் இருந்தோம்.”
“”ஆஹா, கூண்டை உடைத்துக்கொண்டு வந்திருக்கிறீர்களா?? உங்களை…… உங்களை……..”
கிருஷ்ணன் கலகலவென்று சிரித்தான். அவனின் அலக்ஷியத்தைப் பார்த்த பாஞ்சஜனாவின் கோபத்துக்கு இன்னும் எண்ணெய் வார்த்தாற்போல் ஆயிற்று. “எப்படி வெளியே வந்தீர்கள்?” அவன் போட்ட சப்தத்தில் கப்பலில் இருந்த அனைவரும் ஒவ்வொருவராக அங்கே கூட ஆரம்பித்தனர். அனைவர் கண்ணெதிரேயும் இந்த இரு இளைஞர்களும் தங்கள் வாழ்நாளில் மறக்கமுடியாத அளவிற்குத் தண்டனை கொடுக்கவேண்டும் என்று பாஞ்சஜனா எண்ணினான். ஹுல்லுவைக் கூப்பிட்டான்.ஹூக்குவையும் அழைத்தான். ஏற்கெனவே இவர்கள் சூன்யக்காரர்கள், கெட்ட ஆவி என நினைத்துக்கொண்டு அதையே ஹூல்லுவிடமும் சொல்லி இருந்தான் ஹூக்கு. இருவருக்கும் இப்போது நடுக்கம் ஏற்பட்டது. என்றாலும் எஜமானின் கட்டளையையும் மீறமுடியாது. மெல்ல மெல்ல இருவரும் சென்றனர். ஹூக்குவிற்குப் போகும்போதே உடல் நடுங்கியது; திடீரென ஒரு பெரிய காற்று வீசியது . அந்தக் காற்றில் அலைகள் மேலே எழும்பக் கப்பல் பேயாட்டம் ஆடியது. வானம் இருண்டு வர ஆரம்பித்தது. ஹூக்குவிற்கு இது சாத்தானின் வேலை என்றும் கெட்ட ஆவிகள் கோபமாய் இருக்கும்போது இப்படிப் புயலையும், மழையையும் வரவழைத்து அனைவரையும் கஷ்டப்படுத்தும் என்றும் அறிந்திருந்தான். ஆகவே இது இந்த இரு இளைஞர்களின் வேலையே என எண்ணிக்கொண்டே கிருஷ்ணனின் அருகே தயக்கத்தோடேயே சென்றான்.
கண்ணனோ அவனை ஒரு சிரிப்போடு வரவேற்றான். “ஹூக்கு, இருவரையும் கூண்டில் அடைத்து நன்கு பூட்டினாயா? நிச்சயமா அது?” எனப் பாஞ்சஜனா வினாவினான். “ஒருவேளை உன் கனவாய் இருந்திருந்தால்?” என்றும் சந்தேகப்பட்டான். ஹூக்கு நிச்சயமாய் மறுத்தான். தான் தன் கைகளாலேயே கூண்டில் இருவரையும் அடைத்துப் பூட்டியதை உறுதிபடச் சொன்னான். பின்னர் எப்படி வெளியே வந்தார்கள்?? எஜமானனின் இந்தக் கேள்விக்குப் பதில் தெரியாமல், சொல்ல முடியாமல் ஹூக்குவின் உதடுகள் நடுங்கின. கூண்டு உடைக்கப்படவில்லை என்றும் கூறினான். பாஞ்சஜனா நம்பவில்லை. தன் பிரியத்துக்கு உகந்த மருமகனைக் கூப்பிட்டுப் போய்க் கூண்டைப் பார்த்துவரச் சொன்னான். அவனும் சென்று கூண்டு நன்றாகவே இருப்பதாகவும், எந்த இடத்திலும் உடைக்கப்படவில்லை என்றும் தெரிவித்தான். அதிர்ந்து போனான் பாஞ்ச ஜனா.
“என்ன???”
நீண்ட மெளனம் நிலவியது அங்கே. யாருமே பேசவில்லை. கப்பலின் மற்றத் தொழிலாளர்கள் நடுங்கியவண்ணம் பார்த்துக்கொண்டிருந்தனர். பாஞ்சஜனா கண்ணனைப் பார்த்து, “எப்படி வெளியேறினாய்?” என்று கேட்டான். “நீயே கண்டுபிடி!”என்று கண்ணன் சர்வ அலக்ஷியமாய்ச் சொன்னான். ஆனாலும் அவன் முகத்தில் காட்டிய விநயம், மென்னகை இரண்டையும் பார்த்த பாஞ்சஜனாவிற்கு அவனைத் தண்டிக்க மனம் வரவில்லை,
“சரி, போனால் போகட்டும், தம்பி, இனி இம்மாதிரிச் செய்யாதே! நான் எவருக்குத் தண்டனை அளித்தாலும், நீ அதில் தலையிடாதே! நீ உண்டு, உன் வேலை உண்டு என்று இருந்துவிடு. இம்முறை உன்னை மன்னித்தேன்!” என்றான் பாஞ்சஜனா.
கண்ணனோ, “ம்ஹும், அது மட்டும் என்னால் முடியாது அப்பனே! நீ அப்பாவி ஒருவனைத் தண்டிப்பாய், நான் பார்த்துக்கொண்டிருக்க முடியுமா?? இனி நீ உன் சாட்டையைத் தூக்காதே! நானும் பேசாமல் இருக்கிறேன்.” என்றான் கண்ணன்.
“நீ யார் எனக்கு ஆணையிட! உன்னால் முடியாத காரியத்தில் தலையிடாதே! நான் எவருக்கு வேண்டுமானாலும் தண்டனை அளிப்பேன். உனக்கு என்ன வந்தது!” என்றான் பாஞ்சஜனா.
“நீ சாட்டையால் அடிக்கும் ஒவ்வொருவருக்கும் என் அன்பான கவனிப்பு நிச்சயம் உண்டு.” கண்ணன்.
“உன்னால் முடியாது.” பாஞ்சஜனா.
“பார்ப்போம்!” கண்ணன்.
“ஹூக்கு, அந்தச் சாட்டையை எடு, இருவருமாய்ச் சேர்ந்து இந்தக் கண்ணனைச் சாட்டையால் நாலு முறைகள் அடியுங்கள்.” என்றான் பாஞ்சஜனா. அதைப் பார்த்துக்கொண்டிருந்த மாலுமி பிக்ருவின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.
படிக்கறப்பவே அதை நினைத்து மனம் பதறுகிறது. கிருஷ்ணா எப்படி தாங்கினாரோ
ReplyDeletehttp://www.karthikthoughts.co.cc/2010/03/blog-post.html
படிக்கறப்பவே அதை நினைத்து மனம் பதறுகிறது. கிருஷ்ணா எப்படி தாங்கினாரோ
ReplyDeletehttp://www.karthikthoughts.co.cc/2010/03/blog-post.html
தலைவி நேரம் கிடைக்கும் போது எல்லாம் உங்கள் பதிவுகளை படித்துவிடுவேன்.
ReplyDeleteநேரம் இருக்கும் போது விரிவான பின்னூட்டம் வரும் ;)