எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, March 30, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான்! 2-ம் பாகம்!

கண்ணனின் சந்தேகம்!

“கண்ணா! இது ஒரு பயங்கரமான நாடு. நம் நாட்டின் ரிஷிகளையும், முனிவர்களையும், சந்யாசிகளையும் போல இந்த ராணிக்கும் வருங்காலத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள முடியும் என்கிறார்கள். ம்ம்ம்ம் சரி, வா, போகலாம், அடுத்த பட்டத்துக்கு உரிய பட்டத்து இளவரசியே உன்னை வரவேற்க வந்திருக்கிறாள். ஆ, மறந்துட்டேனே, அவளைத் தான் நீ தெய்வீகமான இளவரசி என அழைக்கவேண்டும். அவள் கணவனாக இருக்கப் போகும் இளவரசனுக்கு இங்கே எந்தவித மதிப்போ, மரியாதையோ இல்லை. அதை நன்றாக நினைவில் வைத்துக்கொள்.” என்றான் உத்தவன்.

“நல்ல தெய்வீக அன்னை ராணி! தெய்வீக இளவரசி!” கண்ணன் சிரித்துக்கொண்டான். இருவரும், அந்த நாட்டின் மற்ற பெருந்தரத்து அதிகாரிகள் புடைசூழ அரசியால் அனுப்பப் பட்டிருந்த விசேஷமான படகில் ஏறினார்கள். அது அரசர்கள், அரசிகளுக்கென உள்ள ராஜாங்கப் படகு என்பதால் மிக நேர்த்தியாக அலங்கரிக்கப் பட்டிருந்தது. கண்ணன் ராணிக்கும், இளவரசிக்கும், மற்ற அரண்மனை வாழ் மக்களுக்கும் எடுத்துச் சென்ற பரிசுப் பொருட்கள் வேறு இரண்டு படகுகளில் ஏற்றப் பட்டு அவையும் பின் தொடர்ந்தன. முன்னும், பின்னும் இரு படகுகள் காவல் காத்துக்கொண்டு செல்ல கண்ணனின் படகு கரையை நோக்கி நகர்ந்தது. கரையில் அந்த தெய்வீக இளவரசி கண்ணனை வரவேற்கக் காத்திருந்தாள். ஆஹா! அழகுத் தெய்வம் மெல்ல மெல்ல அடி எடுத்து வைத்ததோ? இது நடையா? அல்லது மயிலின் நடனமா? இத்தனை மெல்லிய உடலா? அது வளைவதைப் பார்த்தால் ஒடிந்து விடுமோ எனத் தோன்றுகிறதே! ஆனாலும் அதையும் மீறிய அவள் அழகு கண்ணைப்பறிக்கிறதே! தன்னைச் சூழ்ந்திருக்கும் மற்றப் பெண்களின் நடுவே அவள் நக்ஷத்திரங்கள் சூழ்ந்திருக்கும் வானத்தில் பிரகாசமாய் ஒளி விடும் பூரண சந்திரனைப் போன்ற தண்மையான குளிர்ச்சி வாய்ந்த அழகோடு காட்சி அளித்தாள்.

கண்ணனை எதிர்கொண்டு அழைக்க வந்த பெண் அதிகாரியைப் போலவே இவர்களும் ஆபரணங்களையே ஆடையாக அணிந்திருந்தனர். இளவரசியின் ஆபரணங்களில் ஜொலித்த கற்கள் பாம்பின் கண்களைப் போலவே பிரகாசித்தன. அவள் தலையில் சூடிக்கொண்டிருந்த நல்ல பாம்பைப் போன்ற ஆபரணத்தின் சிவப்புக் கற்கள் பாம்பு ஒன்று படமெடுத்துச் சீறிக்கொண்டே ஆடுவதைப் போலவே அவள் தலையைத் திருப்பும்போதெல்லாம் தோற்றமளித்தது. இந்தப் பட்டத்து இளவரசியைச் சூழ்ந்திருந்த பெண்கள் ஆபரணங்கள் மட்டுமின்றி ஆயுதபாணியாகவும் இருந்தனர். சற்றுத் தூரத்தில் அவள் கணவன் எனப்படும் இளவரசன் நின்றுகொண்டிருந்தான். அவனும் இளவரசியைப் போலவே அலங்கரித்துக்கொண்டிருந்தாலும் இடையில் ஒரு சிறு வாளும் தொங்கியது. அவனுக்குச் சற்றுத் தூரத்தில் சில ஆண்கள் பூரண ஆயுதபாணியாக எதற்கும் தயார் நிலையில் நின்று கொண்டிருந்தனர். சற்றே யோசனையுடன் அந்த இளவரசனைப் பார்த்துக்கொண்டிருந்த கண்ணன் இளவரசியை வணங்கினான். தன்னுடைய வணக்கங்களையும் அவளுக்குத் தன் மொழியில் தெரிவித்தான். இளவரசி தன் மொழியில் ஏதோ சொல்லிவிட்டுப் பின்னர் கண் ஜாடை காட்டினாள். உடனேயே சற்றுத் தூரத்தில் நின்று கொண்டிருந்த இளவரசன் முன்னே வந்து முதலில் இளவரசியை வணங்கினான். கண்ணனுக்கு இது ஆச்சரியமாக இருந்தது. பின்னர் மிகவும் சுத்தமான அதே சமயம் சரளமான கண்ணனின் சொந்த மொழியில் , இளவரசி பேசியவற்றை மொழி பெயர்த்துக் கண்ணனுக்குக் கூறினான். கண்ணன் அசந்து போனான். இவனுக்கு நம் மொழி தெரிந்திருக்கிறது. அன்றி மிகவும் சரளமாகவும், சகஜமாகவும் பேசுகிறானே? ம்ம்ம்ம்??

“தெய்வீக இளவரசி, நான், வசுதேவன் என்னும் யாதவகுலத் தலைவனின் மகன், என் பெயர் கண்ணன் என்னும் வசுதேவ கிருஷ்ணன். என்னுடைய குரு சாந்தீபனி என்பவர். அவர்கள் அனைவரின் சார்பிலும் இங்கே வந்துள்ளேன். உன்னை வணங்குகிறேன்.” கண்ணன் தன் வணக்கங்களைத் தெரிவித்துக்கொண்டான். அதே சமயம் அவன் கண்கள் கூர்மையாக அந்த இளவரசனின் முகத்தையே கவனித்துக்கொண்டிருந்தது. கண்ணன், குரு சாந்தீபனியின் பெயரை உச்சரித்ததுமே அந்த இளவரசனின் முகம் வெளுத்துப் போனதையும், கண்களில் தெரிந்த பயத்தையும் கண்ணன் கவனித்துக்கொண்டான். கண்ணன் பேசியதை அவனால் உடனடியாக மொழி பெயர்க்க முடியாமல் தொண்டை அடைத்துக்கொண்டது என்பதையும் கண்ணன் கவனித்தான். என்றாலும் அவன் சமாளித்துக்கொண்டு கண்ணன் கூறியவற்றை மொழி பெயர்த்து இளவரசிக்குச் சொன்னான். கண்ணனுக்கு இப்போது சர்வ நிச்சயமாய்ப் புரிந்துவிட்டது. இது குரு சாந்தீபனியின் மகன் புநர்தத்தன் ! வேறு யாரும் இல்லை. பிக்ரு பாஞ்சஜனா விற்றதாய்ச் சொன்னதும் இவனையே எனப் புரிந்துகொண்டான்.

கண்ணனை தெய்வீக அன்னை ராணியின் சார்பாக வரவேற்பதாய்க் கூறினாள் பட்டத்து இளவரசி. அவள் அருகே அவளுக்குச் சிறிய அவள் தங்கையான இளவரசியும் நின்றிருந்தாள். கண்ணன் வந்ததில் இருந்து அவன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்த அவள் கண்ணனின் புன்னகையையும், அவன் வசீகரமான முகத்தையும் பார்த்துக்கொண்டே தன்னை மறந்த நிலையில் இருந்தாள். பின்னர் பட்டத்து இளவரசி ஏதோ ஜாடை காட்ட, அவளும் அவள் கணவன் என்று அழைக்கப்பட்ட இளவரசப் பதவியில் இருக்கும் புநர்தத்தனும் நகர்ந்து சென்றனர். அவள் கட்டளையின் பேரில் இளைய இளவரசி கண்ணனையும் அவனோடு வந்தவர்களையும் அங்கே காத்துக்கொண்டிருந்த பல்லக்குகளுக்கு அழைத்துச் சென்றாள். இளையவளும் கண்ணனின் பல்லக்கிலேயே ஏறிக்கொண்டாள். அவள் தன்னுடைய மொழியில் கண்ணனிடம் ஏதேதோ பேசிக்கொண்டே வந்தாள். கண்ணனுக்கு அவள் பேசுவது சுத்தமாய்ப் புரியவில்லை எனினும், அவள் குரலின் தொனியில் இருந்து அவள் கண்ணனோடு நட்பை விரும்புகிறாள் எனப் புரிந்துகொண்டான். கண்ணைக் கவரும் அவள் அழகு, கருத்தையும் கவருகிறது என்பதைப் புரிந்து கொண்ட கண்ணன், இந்த நாட்டின் பழக்க, வழக்கங்கள் எதுவும் புரியாமல் நாம் எதிலும் மாட்டிக்கொள்ளக் கூடாது. நாம் வந்த காரியம் கெட்டுப் போய்விடும். ஆகவே கவனமாகவும், எச்சரிக்கையுடனும் நடந்து கொள்ள வேண்டும் எனத் தீர்மானித்தான். பல்லக்கு ராணியின் அரண்மனைக்கு வந்து சேர்ந்தது.

6 comments:

  1. aha radhaiku potti jaasti aguthu pola

    ReplyDelete
  2. moral of the story is:

    கண்ணைக் கவரும் அவள் அழகு, கருத்தையும் கவருகிறது என்பதைப் புரிந்து கொண்ட கண்ணன், இந்த நாட்டின் பழக்க, வழக்கங்கள் எதுவும் புரியாமல் நாம் எதிலும் மாட்டிக்கொள்ளக் கூடாது. நாம் வந்த காரியம் கெட்டுப் போய்விடும். ஆகவே கவனமாகவும், எச்சரிக்கையுடனும் நடந்து கொள்ள வேண்டும் எனத் தீர்மானித்தான்.

    ReplyDelete
  3. எல்கே, ம்ஹும், ராதைக்கெல்லாம் போட்டி இல்லை. ராதை என்ற பாத்திரத்தின் அர்த்தமே யாருக்கும் புரியலையே, சமீபத்தில் வந்த சுப்ரீம் கோர்ட் மேற்கோள் உட்பட, ராதையைப் பற்றித் தவறான கருத்துகளே இருக்கின்றன. ம்ம்ம்ம்ம்ம்??????

    ReplyDelete
  4. கோபி, ஏதோ 2 வரி எழுதறீங்களோனு நினைச்சேன். ம்ம்ம்ம்ம்!

    ReplyDelete
  5. வாங்க சித்ரா, ஒரு விதத்தில் இதை நீதியாவே எடுத்துக்கலாம் இல்லையா??

    ReplyDelete