எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, June 29, 2011

வேலைக்குப்போறதா வேண்டாமா? கல்யாணமாம் கல்யாணம்!

கடிதம் வந்தபோது நான் அன்றைய தினம் சமையலில் இருந்தேன். கடிதம் வந்திருக்கு என்று சொல்லி அதைக் கொடுத்தார்கள். உடனே பிரிச்சுப் படிச்சால் தப்பாயிடுமோ?? யோசனையோடு கடிதத்தை வாங்கித் தனியே வைத்துக்கொண்டேன். அதற்குள் என் நாத்தனார் என்ன விஷயம் என்று கேட்க, அதான் சாக்கு எனக் கடிதத்தைப் பிரித்துப் படிக்க முனைந்தேன். மாமனாருக்கும் கடிதம் வந்திருந்தது. அதற்குள்ளாகக் குட்டி மைத்துனன், “அண்ணாவுக்கு மெட்ராஸுக்கு மாற்றல் ஆகிட்டதாம், மன்னி, உன் கடிதத்திலேயும் அதானே எழுதியிருக்கு?” என்று கேட்க, படபடக்கும் இதயத்தோடு கடிதத்தைப் பிரித்தேன். நாத்தனார்கள் இருவர், மைத்துனர் இருவர், மாமியார், மாமனார் எல்லாரும் சூழ்ந்து கொள்ளக் கொஞ்சம் தர்மசங்கடத்துடனேயே கடிதத்தைப் பிரித்த எனக்கு ஒரு பக்கம் ஏமாற்றம். இன்னொரு பக்கம் ஆறுதல்.

கடிதத்தில் நாலே வரி:
செள.கீதாவுக்கு அநேக ஆசிகள். இப்பவும் இவ்விடம் நான் க்ஷேமம். எனக்கு மெட்ராஸ் மாற்றலாகிவிட்டது. உன் அப்பாவுக்கும் கடிதம் போட்டிருக்கேன். இந்த மாசமே குடித்தனம் வைக்க வேண்டும். நான் வருகையில் வீடு பார்த்து அட்வான்ஸ் கொடுத்துவிட்டு வருவேன். நீ தயாராய் இருக்கவும். மற்றவை நேரில்.”

இதான் கடிதத்தில் கண்டது. இன்லண்ட் லெட்டர் தான் என்றாலும் ஒரு கார்டில் அடங்கி இன்னமும் இடம் இருக்கும் அளவுக்கு விஷயமே இல்லாமல் இருந்தது. ஒரு பக்கம் கோபம் வந்தது. கன்னா, பின்னாவெனத் திட்டி எழுதலாமோ என்று தோன்றியது. இன்னொரு பக்கம் ஒரு வாரத்திற்குள் அப்படி எல்லாம் எழுத முடியுமா என்று தோன்றியது. ஒன்றும் புரியவில்லை. மாற்றல் வந்த சந்தோஷத்தைக் கூட மறக்கடித்தது கடிதத்தின் வரிகள் எனலாம். ஒருவாறு ஏமாற்றத்தை மறைத்துக்கொண்டு பதில் எழுதினேன். அப்போல்லாம் உடனே கடிதம் போயிடுமே. கடிதம் உடனே போய் அதற்கும் பதில் வந்தது. “செள,கீதாவுக்கு அநேக ஆசிகள். உன் கடிதம் கண்டேன். கதை படிக்கிறாப் போல் இருக்கிறது. உனக்குத் தமிழ் நன்றாக வருகிறது. நேரம் இருக்கையில் கதை எழுதிப் பழகு. நன்றாய் எழுதுவாய் என்று தோன்றுகிறது. மற்றவை நேரில்.” க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்னு அப்போவே சொல்லி இருக்கணும். சொல்லாமல் விட்டுட்டேன். :P ஆனால் வந்த கோபத்தில் அதுக்கப்புறமா என்னோட இலக்கிய நடையையே விட்டுட்டேன். ))))) ஆனாலும் அவர் அதுக்கப்புறமும் பல முறை சொல்லி இருக்கார். எழுதிப் பழகுனு. வணங்கவே இல்லை.

இத்தனை வருஷங்களுக்கு அப்புறம் இப்போத் தான் எழுதறேன். ஆனாலும் புதுசாக் கதை எல்லாம் எழுதாமல் சொந்தக் கதையை எழுதுகிறேன். அப்புறமாய் அவர் சென்னை வந்து முதல் முதல் வில்லிவாக்கத்தில் வீடு பார்த்து அட்வான்ஸ் கொடுத்துவிட்டு வந்தார். மாமனார், மாமியார் இருந்த ஊரின் பெயர் கருவிலி. பூர்வீக கிராமம் ஆன பரவாக்கரையிலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர். மாமனாரின் நிலங்கள் இங்கே இருந்ததால் இங்கேயே தங்கிவிட்டார். கருவிலி வந்து நாள் பார்த்து வைத்திருந்தபடி சென்னைக்குக் கிளம்பினோம். அப்போவும் என் மாமியாருக்கும், என் பெரிய நாத்தனாருக்கும் அவ்வளவாக இஷ்டம் இல்லை. சின்னப்பொண்ணு; இன்னும் கொஞ்ச நாள் பழகட்டும்; அப்புறமாய்க் குடித்தனம் வைக்கலாம்னு சொன்னாங்க. ஆனால் என் கணவர் கேட்கவில்லை. என் மாமியாரும், குட்டி மைத்துனரும் உடன் வர நாங்க இரண்டு பேரும் குடித்தனம் செய்யச் சென்னை வந்து சேர்ந்தோம். என் அம்மாவும் மதுரையிலிருந்து எனக்கு வேண்டிய சாமான்களோடு சென்னைக்கு வந்தாங்க. எல்லாருமே என் சித்தப்பா வீட்டில் தான் இறங்கினோம். அங்கிருந்து வில்லிவாக்கம் வீடுக்கு ரயிலில் போகணும்னு சொன்னாங்க. சென்னைக்கு அதற்கு முன்னர் வந்திருந்தாலும் என் பழக்கம் எல்லாம் திருவல்லிக்கேணி, மாம்பலம், மயிலைக்குள்ளாகத் தான். ஆகவே வில்லிவாக்கம், ரயிலில் போகவேண்டும் என்றதும் புதுமையாக இருந்தது.

அப்போதெல்லாம் புகை வண்டிகள் தான். வில்லிவாக்கம் செல்லும் புகை வண்டியில் சாமான்களை எல்லாம் வைத்துக்கொண்டு சாமான்னா என்னனு நினைக்கிறீங்க? ஸ்டவில் இருந்து, குமுட்டி வரை எல்லாமும், சித்தி குடும்பம், நாத்தனார் குடும்பம், என் அம்மா, என் மாமியார், மைத்துனர், நாங்க இரண்டு பேர் எனக் கிட்டத் தட்ட பதினைந்து பேர் போலப் போய்ச் சேர்ந்தோம். கீழே நான்கு குடித்தனம், மாடியில் எங்க போர்ஷனும், வீட்டுக்காரங்க போர்ஷனும் மட்டும் இருந்தது. மாடியிலிருந்து ஒரு ராட்டினம் கட்டிக் கீழே கிணறு வரை வந்திருந்தது. பார்க்கவே மயக்கம் வரும்போல் இருந்தது. தண்ணீர் கிணற்றில் ஊற ஊற எடுத்துக்கணுமாம். காலை முதல்லே வீட்டுக்காரங்க எடுத்ததுக்கு அப்புறம் தான் நாம் கிணற்றில் தண்ணீர் எடுக்கணுமாம். அதுவரைக்கும் காலைக்கடன்களுக்குத் தேவைப்பட்டால் என்ன செய்யறது? முதல் நாளே பிடிச்சு வைச்சுக்கணுமாம். ஏகப்பட்ட கண்டிஷன்கள். ஒண்ணும் புரியலை. சரி, பால் காய்ச்சலாம்னு பால் வாங்கணும்னு சொன்னோம். எதிரேயே கறப்பாங்க பாருங்க, அங்கே போய் வாங்கிக்கலாம்னு சொல்ல, என் மாமியாருக்கு ரொம்ப சந்தோஷம். ஆஹா, நல்ல பால் கிடைக்குதா இங்கேனு சொல்லிட்டு அவங்களே போய் வாங்கிட்டு வந்தாங்க. ஆனால் சென்னைப் பால்காரங்க பத்தி அவங்களுக்கு முழுசாப் புரியலை. பால் கேனை கவிழ்க்கிறாப் போல் காட்டிட்டு உள்ளே தண்ணீர் வைச்சுக் கறப்பாங்களாம். எனக்குமே இதெல்லாம் தெரியாது. பின்னால் எல்லாரும் சொல்லிக் கொடுத்துத் தான் தெரிய வந்தது.

அன்றைய தினம் பால் காய்ச்சிச் சமையல் செய்து எல்லாருக்கும் சாப்பாடு போட்டுட்டு வந்தவங்களை வழி அனுப்பி வைத்தோம். வீட்டு மாடியில் இருந்து பார்த்தால் எதிரே ரயில்வே ட்ராக் நன்றாய்த் தெரியும். சென்னையிலிருந்து வரும் ரயில்கள் லோகோ தாண்டும்போதும், திருவள்ளூர் ரயில்கள் கொரட்டூரிலிருந்து வருகையிலும் தூரத்திலேயே கண்டு பிடிக்கலாம். அதுக்கப்புறமா வீட்டை விட்டுக் கீழே இறங்கி ரயிலைப் பிடிக்கலாம். ஒண்ணும் அவசரமே இல்லை. அது ஒரு காலம். இப்போதெல்லாம் போல் கூட்டமும் இருக்காது. ஆகவே எல்லாரும் ரயில் வரதைப் பார்த்துட்டே கிளம்பிப்போனாங்க. மாம்பலம் வரைக்கும் டிக்கெட் எடுத்துட்டா செண்ட்ரல் போய் மாறிக்கலாம். அங்கே எலக்ட்ரிக் ரயில். அப்படியே போனாங்க. எங்க குடித்தனமும் ஆரம்பித்தது. இதற்குள்ளாகக் கல்யாணம் ஆகும் முன்னர் நான் எழுதிய தேர்வுகளில் ஒன்றான எலக்ட்ரிசிடி போர்ட் பரிக்ஷையில் தேறிவிட்டதாய் வேலைக்கு உத்தரவு ஏற்கெனவே வந்திருந்தது. அலுவலகம் தான் கொடுக்கவில்லை. அதற்குள் கல்யாணமும் ஆயாச்சு. இப்போ அதற்கான உத்தரவு வந்திருக்கிறது. மதுரைக்கருகே பரமக்குடியில் போஸ்டிங் போட்டிருந்தாங்க. அப்பா அந்த உத்தரவையும், கூடவே ஒரு கடிதமும் வைத்து அனுப்பி இருந்தார் எக்ஸ்ப்ரஸ் தபாலில். வில்லிவாக்கம் குடித்தனம் வைத்த இரண்டே நாளில் இந்தக் கடிதம் வந்தது. வேலைக்கு உத்தரவா? போறதா? வேண்டாமா?

Monday, June 27, 2011

நான் எழுதுவது கடிதமல்ல; கல்யாணமாம் கல்யாணம்!

அப்போ புத்திசாலித் தனமாய் ஒரு வேலை செய்தேன். பொங்கிக் கொண்டிருந்த அரிசியைக் கரண்டியால் அள்ளி வேறொரு பாத்திரத்தில் மாற்றிவிட்டுக் கொடி அடுப்பில் இருந்த சாம்பாரைக் கீழே இறக்கிவிட்டு வேறொரு பாத்திரத்தில் நீரை விட்டுச் சுட வைத்தேன். அதற்குள்ளாக சமையலறையில் விட்ட புது மருமகளிடமிருந்து சத்தமே இல்லையே எனப் பார்க்க வந்தார் மாமியார். கூடவே என்னோட இரண்டாவது நாத்தனாரும் வந்தார். இவரைத் தான் என் சித்தப்பா(அசோகமித்திரன்) தம்பிக்குக் கொடுத்திருந்தது. மாமியார் பார்த்துட்டு அடுப்பைச் சுற்றிச் சிதறிக்கிடந்த அரிசியைக் கண்டு என்ன இது? என்று கேட்க, நான் வாயே திறக்கவில்லை. மெளனமாய் அரிசியைப் பாத்திரத்தில் மாற்றிக்கொண்டிருந்தேன். அதற்குள்ளாக மாமியார் விஷயத்தைப் புரிந்துகொண்டார். அரிசி எவ்வளவு போட்டாய்?

ஒரு படி தான்.

ஒரு படி போடலை நீ, இரண்டு படி போட்டிருக்கே.
இல்லை, ஒரு படி தான் போட்டேன். ராஜி கூட ஒரு படினு தான் சொன்னாள்.
எங்கே படியில் அரிசியை மறுபடி அளந்து எடுத்து வா.
அரிசிப் பானையில் இருந்த படியால் நான் இரண்டு தரம் அரிசியை அளந்து எடுத்து வர, என் மாமியார் நான் நன்னாப் பார்த்தேன் இரண்டு படி தான் எடுத்திருக்கே. இப்படித் தானே அப்போவும் எடுத்திருக்கே?

ஆமாம்; ஆனால் இது ஒரு படி அரிசி தான்.
அந்த நேரம் ஆபத்பாந்தவளாய் வந்தார் என் இரண்டாவது நாத்தனார். அம்மா, அவளைக் குத்தம் சொல்லாதே! மெட்ராஸில் இதுதான் ஒரு படி. நம்ம பக்கம் ஒரு படி என்கிறது அங்கே அரைப்படி. அவள் சரியாய்த் தான் புரிஞ்சுட்டு இருக்கா. அவளையே அளந்து எடுக்க விட்டிருந்தால் குழப்பம் வந்திருக்காது. ராஜி வந்து ஒரு படினு சொல்லவும் அவ பெரியபடியாலே ஒருபடி எடுத்திருக்கானு சொல்லி விளக்கம் கொடுக்க, எனக்கு இது முற்றிலும் புது விஷயமாக இருந்தது.

எங்கேயும் எட்டாழாக்கு ஒரு படினு தானே கேள்விப் பட்டிருக்கோம்; இது என்ன புதுசா? என நினைப்பதற்குள்ளாகப் பக்கத்து வீட்டு அத்தையும் இங்கே நடக்கும் கசமுசா காதில் அரைகுறையாய் விழ அவங்களும் வந்து என் மாமியாரிடம் விளக்கினார்கள். அவங்களுக்கும் பெரிய படி, சின்னப் படி என்பது அப்போதே புரிய வர, அதற்குள்ளாக நான் மாற்றிய அரிசியை வேறொரு வெண்கலப் பானையில் வைத்து இரண்டு பக்கமும் சாதத்தை வடிக்க ஒரு மாதிரியாகச் சாதம் தயாரானது.

என் இரண்டாவது நாத்தனார் தான் அந்தக் குடும்பத்திலேயே முதல்முதல் பள்ளி இறுதி வகுப்பு வரை படித்த பெண். அதற்கு முன்னர் குடும்பத்திலேயே பள்ளி இறுதி வகுப்புக்குப் போனது என் கணவர் தான். அவரோட அக்காவைப் படிக்க வைக்கவில்லை. பதினைந்து வயதுக்குள்ளேயே கல்யாணமும் செய்து கொடுத்துவிட்டார்கள். அதுவும் சொந்தம்; அத்தை பிள்ளைக்கே கல்யாணம் செய்து கொடுத்தார்கள். ஆகவே வெளிப்பழக்கம் என்பதே இல்லை. ஆனால் என் இரண்டாவது நாத்தனாரும், என் கணவரும் ஊரையும் விட்டுவிட்டு என் கணவர் புனாவிலும், நாத்தனார் மும்பையில் இன்சூரன்ஸ் அலுவலகத்திலும் வேலை பார்த்தார்கள். ஆகவே அவங்களுக்குத் தஞ்சையை விட்டு வெளிப் போக்குவரவு இருந்ததால் உடனே புரிந்து கொள்ள முடிந்தது. அதே என் மாமியாரோ, நாத்தனாரோ ஊரை விட்டு வெளியே சென்றது என்பது கும்பகோணம் சுற்றுவட்டாரக் கிராமங்கள் மட்டுமே. அதனால் அவங்களுக்கு என் அளவுக் கணக்கும், எனக்கு மிகவும் புதியதான இந்த அளவும் புரிய வில்லை. அப்புறமாய் இரண்டே நாட்களில் இந்தக் கணக்கில் மாகாணி, வீசம் என்பதில் நான் தேர்ந்தது தனிக்கதை.

அதே போல எங்க வீடுகளிலே பேசிக்கிறதும் ரொம்பவே எந்தவிதமான தயக்கம் இல்லாமல் பேசிப்போம். என் அம்மா எங்க பெரியப்பாக்கள் கூடவும், என் தாத்தா என் மாமிகளோடும் தாராளமாய்ப் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டுப் பேசுவார். ஆனால் இங்கேயோ என் கடைசி நாத்தனார் அவங்க அண்ணாவான என் கணவரோடு பேசியே நான் பார்க்கலை. என் கணவரும் அவங்க அம்மா, அவரோட அக்கா இவங்க கிட்டேத் தான் ஜாஸ்தி பேசுவார். அவங்க அப்பாவும், பிள்ளையும் பேசிக்கொண்டே நான் பார்க்கலை. இரண்டாவது நாத்தனார் மட்டும் கொஞ்சம் கலகலப்பு. எனக்கு இரண்டே வயது மூத்தவங்க என்றாலும் வெளிப்பழக்கம் அதிகம் இருந்ததால் என்னோடு சகஜமாய்ப் பேசினாங்க. இங்கே அண்ணாவோடு சண்டை, தம்பியோடு வம்புனு இருந்த எனக்குக் கொஞ்சம் கஷ்டமாய்த் தான் இருந்ததுனு சொல்லணும். வேறே யாரும் கிடைக்காமல் என் குட்டிமைத்துனனை வம்புக்கு இழுப்பேன். அவனோ, “நீ என்ன மச்சினன் என்ற மரியாதைஇல்லாமல் இப்படி இருக்கே?” என்பான். “போடா!” என்று நான் சொல்ல, “அம்மா, அப்பா கிட்டே சொல்றேன்” என்று அவன் சொல்ல, அவங்க எதிரேயே கூப்பிடுவேன் என்று சொல்லிவிட்டு அப்படியே கூப்பிடுவேன். இந்த விஷயத்தில் மாமியார், மாமனார் சொல்லைத் தட்டிய மருமகளாகவே இருந்தேன் என்பதே உண்மை. எவ்வளவு முயன்றும் அப்படி ஒதுங்கி இருக்க என்னால் இயலவே இல்லை. இன்று வரையிலும் அவங்களை எல்லாம் பெயர் சொல்லியே கூப்பிட்டாலும், பேச்சுக் குறைந்துவிட்டது. அவங்க அவங்க குடும்பச் சூழ்நிலையில் குறைத்துக் கொண்டுவிட்டோமோ என்னமோ. அண்ணாவிடம் ஏதானும் காரியம் ஆகணும்னா இவரின் பெரிய தம்பி என்னிடம் தான் விண்ணப்பம் வைப்பான். குட்டி மைத்துனன், அவனுக்கு மூத்தவன் இருவருமே எனக்கு ஆறு வயதுக்கும் மேல் சின்னவர்கள் என்பதால் அவங்களோடு பழக எனக்கும் சுலபமாக இருந்தது எனலாம்.

அடுத்த இரண்டு நாட்கள் போனவிதம் தெரியாமல் என் அண்ணா மதுரையிலிருந்து வர, இவரும் புனாவுக்குத் திரும்பும் நாளும் வந்தது. என் மாமனார் என் நாத்தனாரைக் கொண்டு விடவேண்டும் என ஏற்கெனவே சென்னை செல்ல இருந்தார். எல்லாருமே ஒரே நாளில் கிளம்பினார்கள். வீட்டில் என் பெரிய நாத்தனார், அவங்க மூணு பொண்ணுங்க, என் மாமியார், இரண்டு மைத்துனர்கள் இருந்தோம். என் அண்ணாவும் திரும்பிப் போயாச்சு. இப்போத் தனியாக அனுப்ப மாட்டோம். கல்யாணம் ஆகி முதல்முறை வரும்போது இரண்டு பேரும் சேர்ந்து தான் வர வேண்டும் என என் மாமியார் சொல்லிட்டாங்க. புனாவிலிருந்து கடிதம் வரும் நாளை எதிர்பார்த்துக் காத்திருந்தேன். கடிதமும் வந்தது.


எல்லாரும் அடுப்பு, குமுட்டி, அம்மி, கல்லுரல் படங்கள் கேட்டிருக்காங்க. இரண்டு நாட்களாய் வீட்டில் வேலை, இன்னிக்கு வெளியே போயிட்டேன். படம் எடுக்கலை. எடுத்துப் போடறேன். நன்றி.

Friday, June 24, 2011

உலை மட்டுமா கொதித்தது? கல்யாணமாம், கல்யாணம்!

ஒரு சில நண்பர்கள் கல்யாணத்தின் சம்பிரதாயங்களையும் அதன் அர்த்தங்களையும் விடாமல் கேட்டதாலும், பழைய பழக்க வழக்கங்கள் மறைந்து வருவதைப்பற்றிய சிலரின் மன வருத்தங்களாலும் அவற்றை நினைவு கூரவும் இளைய தலைமுறை புரிந்து கொள்ளவுமே கல்யாணமாம் கல்யாணம் என்று ஆரம்பித்து எழுதி வருகிறேன்.

இதில் விட்டுப் போனவை எதாவது இருந்தால் தெரிந்தவர்கள் குறிப்பிடும்படி வேண்டுகிறேன். இனி ஓரிரு பதிவுகளே இந்தத் தொடரில் வரும். அதன் பின்னர் சமீபத்திய கும்பாபிஷேஹத்தின் வர்ணனைகள் வரும். நன்றி.
***************************************************************************************

மறுநாள் காலையிலே எழுந்ததுமே இன்னிக்குச் சமையல் புது மருமகள் தான் என்ற குண்டைத் தூக்கிப் போட்டார்கள். எங்க வீட்டிலே சமைத்து அநுபவம் நிறைய இருந்தாலும், புது இடம், அடுப்பிலிருந்து துடுப்பு வரை எல்லாமும் புதுசு, மேலும் அவங்க ருசி எப்படினு தெரியாது. கொஞ்சம் கலக்கமாய்த் தான் இருந்தது. குளித்துவிட்டு வந்ததும், சின்ன நாத்தனார் துணைசெய்ய சமையலைத் துவங்கினேன். நல்லவேளையாய் அடுப்புப் பத்த வைக்கிறது எல்லாம் தெரிந்தே வைத்திருந்தேனோ பிழைத்தேன். :P முதலில் கொடி அடுப்பு என்னும் அடுப்பின் ஒரு சின்ன பாகத்தில் பருப்பைப் போட்டு விட்டுப் பின்னர் வெண்கலப் பானையில் உலை வைக்க நீர் நிரப்பி ஏற்றி வைத்தேன். உலை கொதிக்கும் முன்னர் அரிசி களைந்து தயாராக வைத்துக்கொள்ள வேண்டும். புளி கரைத்துக் கொண்டு ரசத்துக்கு எடுத்து ஈயச் செம்பில் வைத்துக் குமுட்டியில் அதை ஒருபக்கம் வைத்துவிட்டு அரிசியை எடுக்க அரிசிப் பானைக்குப் போனேன். அந்த வெண்கலப் பானை அரைப்படி வெண்கலப் பானை. அரைப்படி என்றால் நாலு ஆழாக்குகள் பிடிக்கும். கிட்டத்தட்ட எண்ணூறு கிராமுக்குக் குறையாமல் பிடிக்கும். ஆகவே அரைப்படி அரிசியை எடுத்தேன்.

அப்போத்தான் விதி சிரித்தது. என் நாத்தனார் எவ்வளவு அரிசி எடுக்கறீங்க என்று கேட்க, நான் அரைப்படி என்று சொல்ல, அது போதாது; இது ஒருபடி வெண்கலப் பானை என்று சொன்ன அவள் ஒரு படி அரிசி போடவேண்டும் என்றும் சொன்னாள். திரு திருவென முழித்தேன் நான். எங்க வீட்டிலே இதை அரைப்படினு தானே சொல்வாங்க. தினமும் எங்க எல்லாருக்கும் இந்த மாதிரியான ஒரு வெண்கலப் பானையில் தானே சாதம் வைப்போம். அது நாகர்கோவில் வெண்கலப் பானை; இது கோதாவரிக் குண்டு. அதனால் அரிசியின் அளவுமா மாறும்? என் சின்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன மூளைக்கு எட்டவே இல்லை. என்றாலும் முதல் நாள் தேர்வு. தேர்வு நடத்துவதோ சின்ன நாத்தனார். எல்லாருக்கும் கடைசி; என்னைவிட இரண்டு வயதே சின்னவள் என்றாலும் வீட்டில் எல்லாருக்கும் அருமையானவள்; செல்லமானவள்; அவள் சொல்வதே எல்லாரும் கேட்பார்கள். அதை நாங்கள் ரயிலில் வந்தபோதே புரிந்து கொண்டிருந்தேன். ஆகவே அவள் சொன்னாப்போலவே ஒரு படி அரிசியை எடுத்துக் களைந்தேன்.

உலை நீர் கொதித்துக்கொண்டிருந்தது. பருப்பும் வெந்துவிட்டது; கொதிக்கும் உலையில் அரிசியைப் போட்டுவிட்டுக் கிளறிவிட்டுப் பருப்பில் கொஞ்சம் ரசத்துக்கும், யாருக்கானும் பருப்பு சாதம் சாப்பிடணும்னா அதுக்கு எனவும் எடுத்து வைத்துவிட்டுக் குழம்புக்குக் கரைத்த புளி நீரை ஊற்றிப் பொடி எல்லாம் போட்டு சாம்பாரை வைத்தேன். வைத்துவிட்டுத் திரும்பி சாதம் என்னாச்சு என்று பார்த்தால்?? கடவுளே! அரிசி பொங்கி வழிந்து கொண்டிருந்தது. பானையிலிருந்து வழிந்து கொண்டே இருந்தது. மிளுந்து வருது என்று மதுரைப் பக்கம் வழக்குச் சொல்லில் சொல்வார்கள். அப்படி வந்து கொண்டே இருந்தது. கிளறினால் அகப்பை உள்ள்ள்ள்ள்ள்ளே போய் விட்டது. தண்ணீரே இல்லாமல் பானை முழுதும் அரிசி. இத்தனை அரிசியும் கொதிக்கணும்னா இன்னும் ஜலம் வேண்டும். அரிசியோ பொங்கிக் கொண்டிருந்தது. அதைப்பார்த்துச் செய்வதறியாது திகைத்துப் போனேன். வெண்கலப் பானை, இரும்பு அடுப்பு, குமுட்டி எல்லாமும் படம் எடுத்து அப்புறமாச் சேர்க்கிறேன்.

Thursday, June 23, 2011

ஆஹா, மதுரைக்கு வந்த சோதனை இதுவா! கல்யாணமாம் கல்யாணம்!

நல்லவேளையாய் அன்றைக்கு ஹவிஸுக்கு வேண்டிய அரிசியைக் கொடுத்துட்டாங்க. இல்லைனா இந்த அளவுக் கணக்கில் பின்னர் ஏற்பட்ட குழப்பம் அன்றே ஏற்பட்டிருக்கும். பின்னர் என்ன குழப்பம்னு கேட்கிறீங்களா? வரேன் மெதுவா, இதை முதல்லே முடிச்சுட்டு. :D ஹவிஸ் தயாரானதும் ஹோமங்கள் நடந்து முடிந்தன. அன்றைய சாப்பாட்டிற்கு நான் தான் முதலில் பாயாசம் பரிமாற வேண்டும் என்று சொல்லி அனைவருக்கும் பரிமாறச் சொன்னார்கள். கிரஹப்ரவேசத்திற்கு மறுநாள் காலையில் வீட்டிற்குப் புதிய மருமகள் தான் வாசல் தெளிக்க வேண்டும் என்பது அந்த நாளைய வழக்கம், சம்பிரதாயம். அப்போதெல்லாம், (என்னைப் பொறுத்தவரை இப்போதும்,) முதலில் வாசல் கதவைத் திறப்பதில்லை. கொல்லைக் கதவைத் திறந்துவிட்டு (இது தனிவீடுகளில் மட்டுமே சாத்தியம்) கொல்லையில் நிலையைக் கைகளால் அலம்பிக் கோலம் போட்டுவிட்டுப் பின்னர் சுவாமி மாடத்தில் விளக்கை ஏற்றி இன்னொரு கை விளக்கையும் கூடவே ஏற்றி அதை எடுத்துக்கொண்டு வாசல் கதவைத் திறந்து வாசலுக்கு வரவேண்டும். எல்லா வீடுகளிலும் விளக்கு மாடம் இருக்கும். அந்த வாசல் மாடத்தில் விளக்கை வைத்துவிட்டுப் பின்னர் வாசல் நிலையைக் கைகளால் அலம்பிவிட்டுப் பின்னரே பசுஞ்சாணி கலந்த நீரால் வாசல் தெளிக்க வேண்டும். வாசல் தெளித்ததும் தான் துடைப்பமோ/விளக்குமாறு போட்டுப் பெருக்க வேண்டும். பெருக்கியதும் மீண்டும் ஓர் முறை சாணி நீரைத் தெளித்துச் சமன் செய்துவிட்டுக் கோலம் போடவேண்டும்.


வீடு துடைக்கையிலும் இவ்வாறே முதலில் விளக்குமாறோ/துடைப்பமோ போட்டுப் பெருக்காமல் முதலில் நீரில் மஞ்சள் பொடி போட்டு அல்லது மண் தரை என்றால் சாணி போட்டு வீடு துடைத்துவிட்டுப் பின்னரே பெருக்க வேண்டும். அதன் பின்னரே மறு முறை வீடு துடைக்க வேண்டும். ஒரே முறை வீடு துடைத்தல் ஆகாது என்று அந்தக் காலத்துப் பெரியவங்க சொல்வாங்க. நல்ல நாட்கள் அல்லாத மற்ற நாட்களில் அதாவது சிராத்தம் போன்ற தினங்களில் மட்டுமே ஒரே முறையாக வீடு துடைக்கவேண்டும், இரண்டாம் முறை துடைத்தல் ஆகாது என்பார்கள். இதை எல்லாம் பெரியவங்க சொல்லிச் செய்து வந்ததால் இன்றும் மறக்காமல் இருக்கிறது. இந்தப் பாரம்பரியத்தைப் பற்றி எழுத வேண்டியே இதை எல்லாம் எழுதுகிறேன். அன்று தான் அப்பாவும், அம்மாவும், தம்பியும் ஊருக்குப் போகிறார்கள். அவங்களுக்கு எல்லாம் விட்டுட்டுப் போறோமேனு ஒரே வருத்தம். மதுரை என்னதான் சின்னக் கிராமம் போன்ற ஊர் என்றாலும் இது குக்கிராமம். வீட்டில் மின்சாரம் கிடையாது. வீட்டில் என்ன வீட்டில்! கிராமத்தில் எவர் வீட்டிலும் மின்சாரமே கிடையாது. ஹரிக்கேன் விளக்கும் கிடையாது. மதுரையிலே பட்டாணி, கடலை வறுக்கிறவங்க அந்தக் காலத்து இங்க் பாட்டிலில் மூடியில் ஓட்டை போட்டு மண்ணெண்ணை நிரப்பி, திரியைப் போட்டு எரிப்பார்கள். அந்த மாதிரிக் காடா விளக்கும், சின்னச் சிம்னி விளக்கும் தான் வெளிச்சத்துக்கு. காடா விளக்குப் புகை எனக்கு அப்போவே மூச்சுத் திணறச் செய்தது. அதோடு மாமியார் வீட்டில் விறகடுப்பும், குமுட்டி அடுப்பும் தான். மதுரையில் குமுட்டி அடுப்பில் சமைத்திருக்கிறேன் என்றாலும், எப்போவோ தானே. அதோடு இங்கே மண் அடுப்பு. தினமும் அடுப்பைச் சாணி போட்டு மெழுக வேண்டும். குமுட்டியும் மண் குமுட்டி. சமையலறை ஜன்னலில் ஒன்றும் மண் விறகடுப்புப் பக்கம் ஒன்றும், இரண்டாம் கட்டில் ஒன்றுமாக இருந்தது. இரும்புக் குமுட்டியும், இரும்பு விறகடுப்பும் இருந்தது. காப்பி எல்லாம் போடுவதற்கு தென்னை ஓலையைப் போட்டு எரிப்பார்கள். மாமனாருக்குத் தென்னந்தோப்புகள் இருந்ததால் எரிபொருட்கள் வீட்டிலே உள்ளதுதான். ஆகவே தென்னை ஓலை, தேங்காய் மட்டைனு எல்லாம் போட்டு எரிப்பாங்க. எனக்குப் பாலில் தென்னை ஓலை வாசம் வரும். (நாக்கு நீஈஈஈஈஈஈஈஈளம்) அவங்களுக்கோ அது பழக்கம். அவற்றில் தான் தினசரி சமையல் செய்ய வேண்டும். காப்பிக்கொட்டை அன்றன்றைக்குக் கொட்டையை வறுத்து அவ்வப்போதுக்கு அரைக்க வேண்டும்.

இதை எல்லாம் படிக்கும் தற்காலத்து அன்பர்கள் ஆணாதிக்கம் என்றும், பெண்களை வன்கொடுமைக்கு உள்ளாக்கினார்கள் என்றும் சொல்லலாம். ஆனால் இதை எல்லாம் ஆதிகாலம் தொட்டே செய்து கொண்டிருந்த என் மாமியார் இன்று எண்பதுக்கும் மேல் வயதாகியும் இப்போச் சில வருடங்களாகத் தான் வயதின் காரணமாகவும், கூன் போட்டதின் காரணமாகவும் தனியாக வேலை செய்வதில்லை. ஐந்து வருடங்கள் முன்னர் வரையிலும் பூரண ஆரோக்கியத்துடன் எல்லா வேலைகளையும் செய்து கொண்டு வளைய வந்தார். இப்போதும் தினசரி சமையல் பிடிவாதமாக அவர்கள் தான் செய்வார்கள். ஏனெனில் இந்த வேலைகளெல்லாம் ஒரு வகையில் உடல் பயிற்சியாகும். இதை இத்தோடு விட்டுட்டு என் குடும்ப வாழ்க்கையைக் கவனிக்கலாம். அப்பாவும், அம்மாவும் தம்பியோடு கிளம்பிப் போயாச்சு. இங்கே வீட்டில் எல்லாரும் அதாவது என் மாமனார், மாமியார், பக்கத்து வீட்டு அத்தை, ஊரில் இருந்த மற்ற வீட்டு உறவினர்கள், என் நாத்தனார்கள், என் கணவர், அவர் தம்பிகள் என எல்லாருமாக இரண்டாம் கட்டில் கூடிப் பேசிக்கொண்டிருக்க அங்கே போகலாமா வேண்டாமா என்ற தயக்கத்தில் இருந்த என்னை அழைப்பு வந்து குழப்பத்தைத் தீர்த்து வைத்தது. எல்லாருமே பேசிக்கொண்டிருக்கையில் உங்கப்பா வீட்டில் ஊரில் நிலம் இருந்ததா? என்று கேட்க இருந்தது என் பெரியப்பா பொண்ணு கல்யாணம் சமயம் விற்றாங்க என்றேன் நான். என் மாமனார் முழுக்க முழுக்க விவசாயத்தில் மூழ்கியவர். வயலில் இறங்கி வேலை செய்யக் கூடிய ஆற்றல் உடையவர். என்னிடம் உங்க பக்கமெல்லாம் எத்தனை போகம் விளையும் என்று கேட்க, நான் மூன்று போகம் என்று சொல்ல ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கொண்டு கேலியாகச் சிரித்தனர். எனக்குக் கோபம் மெல்ல மெல்ல வந்தது. முகம் சிவந்தது.

அதற்குள் என் கணவர் என்னிடம்,” இன்னும் குழந்தையாக இருக்கியே! போகம் என்றால் என்னனு புரியலை உனக்கு!” என்று சொல்ல, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் வணிக முறையிலான விளைபொருட்கள் பற்றிய சிறப்புப் பாடம் எடுத்துப்பள்ளியிலேயே படித்திருந்த எனக்குக் கோபம் பொங்கி வர, போகம் என்றால் ஒவ்வொரு முறையும் வயலில் விளைச்சல் ஏற்படுவதைக் குறிப்பார்கள். எங்க பக்கம் மூணுபோகம் நெல் விளையும். பத்திரிகைகளிலே கூட வருமே? எங்க சித்தி ஊரான சின்னமனூர் பக்கம் மார்க்கையங்கோட்டை தான் ஆசியாவிலேயே நெல் விளைச்சலில் மூன்று போகத்தில் அதிக விளைச்சல் காணும் ஊர் என்று என் பொது அறிவைக் காட்ட அவங்க எல்லாருமே சிரித்தார்கள். வைகையிலே தண்ணியே இல்லை; உங்க ஊரிலே நெல் விளையுதா? நிலம் எப்படி இருக்கும்னு தெரியாமல் பேசறே. என்று கேலி செய்தனர். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இவங்கல்லாம் புரிஞ்சுக்கவே மாட்டாங்க போலிருக்கே. வாயை மூடிக்கொண்டேன் அப்போதைக்கு. ஆனால் சோதனை வேறொரு உருவில் வந்தது.

Tuesday, June 21, 2011

நூதன கிரஹப்ரவேசம்!

கிரஹப்ரவேசத்துக்கு அப்புறம் தொடர முடியாமல் வேலை அதிகம். தனி மடலில் கேட்டவர்களுக்கும், பதிவுகளின் பின்னூட்டங்களில் கேட்டவங்களுக்கும் நன்றி. நாளை தொடரும். நாங்க நேற்று ஊரில் இருந்து வரும்போதே சந்தேகத்தோடு வந்தாலும் குழாய் இணைப்பு வேலை முடிஞ்சிருக்கும்னு நினைச்சோம். ஆனால் நேற்றுத் தான் ஜேசிபி வந்து இணைப்புக்கான பள்ளத்தைத் தோண்டிக்கொண்டு இருந்தது. எல்லாம் நேரம்! வேறே என்ன சொல்ல! :)))))) சரி, வீட்டுக்குப் போகாமல் தெருவிலேயே குடித்தனம் பண்ண வேண்டியது தான் அப்படினு நினைச்சேன். அதுக்குள்ளே அந்தப் பக்கமிருந்து வந்தவங்க பயமுறுத்தல் வேறே. தெருவின் கிழக்குப் பக்கமாகவும் நுழைய முடியாதாம். அங்கே பள்ளத்தை வெட்டியதோடு கிணறு எடுக்கவும் இல்லையாம். ஜல்லி, மணல் எல்லாமும் கொட்டி இருக்கு. நடப்பதே கஷ்டம்னாங்க.

நரகாட்சி எவ்வளவு பொறுப்பா மக்கள் ஒருபக்கமிருந்தும் வெளியே போகாமல் அவங்க அவங்க வீட்டிலேயே இருந்து வீட்டு வேலைகளை மட்டும் பார்த்தால் போதும்னு நினைச்சிருக்கு. வெயில் ஜாஸ்தியா, மக்கள் அலைந்து திரிந்து கஷ்டப் படப் போறாங்கனு தெருவின் இருபக்கமும் எச்சரிக்கைக் கொடி கட்டித் தெருவை மூடி வைச்சாச்சு. சாமானோடு எத்தனை நாழி நிக்கறது?? மெல்ல மெல்ல நம்ம ரங்க்ஸ் ஒரு பையைத் தூக்கிக் கொண்டு ஜேசிபி வேலை செய்யும் பக்கம் போனார். வேகம் வேகமாகப் பள்ளத்திலிருந்து மண் வெளியே வாரி வீசிக்கொண்டிருந்தது. அந்தச் சத்தத்திலே பேசினாலும் காதிலே விழுமா? ஆனாலும் விடாமல் ஜாடை காட்டி நாங்க வரணும் என்பதால் மணலை நிரவும்படி சொல்லி இருக்கார் போல. கொஞ்சம் போல் நிரவினதும், மெதுவாக அவர் மலையைத் தாண்டினார். அந்தப் பக்கம் போனாரானு எனக்குத் தெரியலை. போயிருக்கணும்.

ஒரு யுகமாய்த் தோன்றின பத்து முழு நிமிடங்கள் சென்றதும், பக்கத்து அடுக்குமாடிக் குடியிருப்பு வாட்ச்மேனை அழைத்துக்கொண்டு வந்தார். மீண்டும் ஜேசிபி ஓட்டுநரிடம் வேண்டிக் கொள்ள அவர் நிற்கும் என்னைப் பார்த்துவிட்டு மணலைச் சமமாகப் பரப்பினார். அப்பாடா! மலை கரைந்தது. ஓரளவுக்கு மேடு என்றாலும் நடக்க முடியும். ஆள் வந்து சாமானைத் தூக்கிக் கொள்ள மெல்ல மெல்ல அவர் கையை நானும், என் கையை அவரும் பிடித்துக்கொண்டு எங்க வீட்டிற்கு கிரஹப் பிரவேசம் செய்தோம்.  
Posted by Picasa
இதல்லவோ உண்மையான கிரஹப் பிரவேசம்! அப்பாடா! வீட்டுக்கு வந்தாச்சு.

கும்பாபிஷேஹப் படங்கள்

கும்பாபிஷேஹம் 1


கும்பாபிஷேஹம் 2

Monday, June 20, 2011

வந்தாச்சு, வந்தாச்சு.

எங்க வீட்டிற்கு விருந்தாளிகள் வரப்போறதை நான் என்னோட வலைப்பக்கத்திலே போட்டதிலே இருந்து அம்பத்தூர் நகராட்சிக்கு என்னமோ தெரியலை, ஒரே ஆத்திரம். :P அப்போத் தான் குடிநீருக்குப் பள்ளம் தோண்டினாங்க.  
Posted by Picasa
ஏற்கெனவே வீட்டிற்கு எதிரேயும், பக்கத்திலேயும் கட்டும் அடுக்குமாடிக்குடியிருப்புக்களால் வீட்டுவாசலில் கம்பிகள், ஜல்லி, செங்கல், வாட்ச் உமன், வாட்ச்மேன், அவங்க குடும்பத்தினரின் துணிகள் தோய்த்து உலர்த்துதல், சிமென்ட் மட்டும் பாதுகாப்புக்காகக் குடிசைக்கு உள்ளே வைச்சுப்பாங்க, கொஞ்சம் சலுகை அதிலே. வீட்டை விட்டு வெளியே வரணும்னா முதல்நாளில் இருந்தே அவங்க கிட்டே பெர்மிஷன் கேட்டுக்கணும். இப்படி இருக்கையிலே அம்பத்தூர் நரகாட்சி உங்களை என் பங்குக்கு விடறேனா பாருனு ஒரு கை இல்லை, எல்லாக் கையாலேயும் பார்த்தது.  
Posted by Picasa


குடிநீருக்குத் தோன்டிட்டுப் போனதை மூடலை, குழாய் இணைப்புக் கொடுக்கணும்னு விட்டு வச்சிருந்தாங்க. எல்லாரும் மறந்து போன பச்சைக்குதிரையை நினைப்புக்குக் கொண்டு வந்து விளையாடிட்டு இருந்தோம். இது பத்தாதுனு பாதாளச் சாக்கடைக்குத் தோண்டினாங்க பாருங்க, சரியா எங்க பொண்ணும், அவ குடும்பமும் யு.எஸ் கிளம்பறதுக்கு இரண்டு நாள் முந்தி தோண்டிப் போட்டாச்சு. அப்போப் பார்த்து அப்புவுக்கும் உடம்பு சரியில்லை. ஒரு நாளைக்கு இரண்டு தரம் அந்தப் பள்ளங்களைத் தாண்டிக்கொண்டு டாக்டர் கிட்டே விசிட். நல்லவேளையாக் குழந்தை இதை எல்லாம் அவளுக்குக் காட்டிய விளையாட்டுனு நினைச்சா போல. அவங்க ஊருக்குப் போற அன்னிக்கும், பள்ளங்கள் மூடப் படவில்லை. குழாய் இணைப்புக் கொடுக்கணும், அதுக்கு இந்தப் பள்ளத்தில் தோண்டி இருக்கும் கிணறுகள் பூச்சுக் காயணும். அதுக்குள்ளே மழை எல்லாம் பெய்து அது பங்குக்குச் செய்யவேண்டியதைச் செய்தாச்சு.

குண்டு குண்டா சூட்கேஸைத் தூக்கிட்டு எப்படிப் போறதுனு முழிச்சோம். வண்டி உள்ளே எந்தப் பக்கமிருந்தும் வர முடியாதபடிக்கு எச்சரிக்கைப் பலகை மாட்டி வைச்சாச்சு. வண்டியைத் தெரு முக்கில் நிறுத்திவிட்டு பக்கத்து அடுக்குமாடிக் குடியிருப்பின் வாட்ச்மேன், (அவங்களாலே கிடைச்ச ஒரு வசதி/லாபம், ) சாமான் எல்லாத்தையும் எடுத்துக்கொண்டு போய் வண்டியிலே வைக்க, எங்க பொண்ணு பச்சைக்குதிரை சொல்லிக் கொடுக்காததற்கு என்னைத் திட்டிக்கொண்டே லாங்க் ஜம்ப், பண்ணிக்கொண்டே ஒரு வழியாய் வண்டியில் ஏறிக்கொண்டாள்.

இதெல்லாம் போறாததுக்கு அன்னிக்குத் தான் கிரஹணம். பொண்ணை ஊருக்கு அனுப்பினது மட்டுமில்லாமல் கிரஹணமும் சேர்ந்துக்க அன்னிக்கு ராத்திரி சிவராத்திரி,. மறுநாள் காலையிலே குளிச்சுட்டுக் கும்பாபிஷேஹத்துக்கு ஊருக்குப் போகணும். கும்பாபிஷேஹம் இரண்டு வருஷமா நாள் பார்த்து, நாள் பார்த்துத் தள்ளிப் போய்க் கடைசியிலே ஒருவழியா எல்லாரும் ஒத்துக்கொண்ட தேதி. நல்லபடியாய் முடியணும். நாங்க ஊருக்குப் போறதுக்கும் சாமான்களை எடுத்துட்டு நடந்து போய்த் தான் வண்டியிலே ஏறணும். அப்பாடா, ஒரு வழியாய்க் காலம்பர மூணரை மணிக்குக் குளிச்சுட்டுச் சமைச்சு எடுத்து வைத்துக் கொண்டு, வீட்டைப் பூட்டிக்கொண்டு வண்டியிலே ஏறி உட்கார்ந்து ஸ்டேஷனுக்கும் போய்ச் சேர்ந்தாச்சு.

கும்பாபிஷேஹம் நேற்று நல்லபடியா நடந்தது. இன்று காலை கிளம்பி வந்து சேரலாம்னு வந்து பார்த்தா ஆட்டோ தெருவிலேயே நுழைய முடியலை. எதிரே திடீர்னு கைலை மலையாட்டமா இருக்கே?? இங்கே எப்படி இவ்வளவு பெரிய மலை வந்தது??வீட்டுக்கு எப்படிப் போறது?? சாமான் வேறே நிறைய. :( சாமானை வைத்துக்கொண்டு தெருவிலேயே நின்றோம். எதிரே ஜேசிபி குழாய் இணைப்புக்குத் தோண்டிய குழிகளில் இருந்து மண் தெருவின் இரண்டு பக்கமும் மலையாய்க் குமிந்து கிடந்தது.

Friday, June 10, 2011

ஆடலாம், பாடலாம், கொண்டாடலாம்!

வீட்டிலே விருந்தினர் வருகை, பொண்ணு வந்திருக்கா. அதோட எங்க ஊர்ப் பெருமாள் கோயில் கும்பாபிஷேஹம் அடுத்த ஞாயிறு அன்று. ஜூன் பத்தொன்பதாம் தேதி. எல்லாவற்றையும் உத்தேசித்துக் கொஞ்சம் பிசியோ பிசிஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ! அப்பாடா, நானும் சொல்லியாச்சு. கணினி வேறே கிடைக்க மாட்டேங்குது! :) நேரம் இருக்கையில் ஒரு சில குழும மடல்கள் மட்டும் பார்க்கிறேன். பதிவுகள் தொடரலையேனு ரசிகப் பெருமக்கள் பெருமளவில் ஆர்ப்பாட்டம் செய்தார்கள்னு கேள்விப் பட்டேன். போலீஸ் வந்து கண்ணீர்ப்புகைக் குண்டுகள் போட்டுக் கூட்டத்தைக் கலைக்க வேண்டியதாப் போச்சுனு கேட்டப்போ உள்ளபடியே வருந்தினேன். :P. இந்த மாசம் முப்பெரும் விழாவேறே அறிவிக்கணும். ஆகவே எனதருமைத் தொண்டர்களே, சீக்கிரம் வந்துடுவேன் உங்களை எல்லாம் கொடுமைப் படுத்த. கவலைப்படவேண்டாம்! இப்போதைக்கு நிம்மதியா ஆடுங்க, பாடுங்க, கொண்டாடுங்க, ஸ்வீட் எடுங்க, கண்ணா, லட்டு திங்க ஆசையானு நிம்மதியா ஒருத்தரை ஒருத்தர் கேட்டுட்டு இருங்க, வர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டா????