எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, June 23, 2011

ஆஹா, மதுரைக்கு வந்த சோதனை இதுவா! கல்யாணமாம் கல்யாணம்!

நல்லவேளையாய் அன்றைக்கு ஹவிஸுக்கு வேண்டிய அரிசியைக் கொடுத்துட்டாங்க. இல்லைனா இந்த அளவுக் கணக்கில் பின்னர் ஏற்பட்ட குழப்பம் அன்றே ஏற்பட்டிருக்கும். பின்னர் என்ன குழப்பம்னு கேட்கிறீங்களா? வரேன் மெதுவா, இதை முதல்லே முடிச்சுட்டு. :D ஹவிஸ் தயாரானதும் ஹோமங்கள் நடந்து முடிந்தன. அன்றைய சாப்பாட்டிற்கு நான் தான் முதலில் பாயாசம் பரிமாற வேண்டும் என்று சொல்லி அனைவருக்கும் பரிமாறச் சொன்னார்கள். கிரஹப்ரவேசத்திற்கு மறுநாள் காலையில் வீட்டிற்குப் புதிய மருமகள் தான் வாசல் தெளிக்க வேண்டும் என்பது அந்த நாளைய வழக்கம், சம்பிரதாயம். அப்போதெல்லாம், (என்னைப் பொறுத்தவரை இப்போதும்,) முதலில் வாசல் கதவைத் திறப்பதில்லை. கொல்லைக் கதவைத் திறந்துவிட்டு (இது தனிவீடுகளில் மட்டுமே சாத்தியம்) கொல்லையில் நிலையைக் கைகளால் அலம்பிக் கோலம் போட்டுவிட்டுப் பின்னர் சுவாமி மாடத்தில் விளக்கை ஏற்றி இன்னொரு கை விளக்கையும் கூடவே ஏற்றி அதை எடுத்துக்கொண்டு வாசல் கதவைத் திறந்து வாசலுக்கு வரவேண்டும். எல்லா வீடுகளிலும் விளக்கு மாடம் இருக்கும். அந்த வாசல் மாடத்தில் விளக்கை வைத்துவிட்டுப் பின்னர் வாசல் நிலையைக் கைகளால் அலம்பிவிட்டுப் பின்னரே பசுஞ்சாணி கலந்த நீரால் வாசல் தெளிக்க வேண்டும். வாசல் தெளித்ததும் தான் துடைப்பமோ/விளக்குமாறு போட்டுப் பெருக்க வேண்டும். பெருக்கியதும் மீண்டும் ஓர் முறை சாணி நீரைத் தெளித்துச் சமன் செய்துவிட்டுக் கோலம் போடவேண்டும்.


வீடு துடைக்கையிலும் இவ்வாறே முதலில் விளக்குமாறோ/துடைப்பமோ போட்டுப் பெருக்காமல் முதலில் நீரில் மஞ்சள் பொடி போட்டு அல்லது மண் தரை என்றால் சாணி போட்டு வீடு துடைத்துவிட்டுப் பின்னரே பெருக்க வேண்டும். அதன் பின்னரே மறு முறை வீடு துடைக்க வேண்டும். ஒரே முறை வீடு துடைத்தல் ஆகாது என்று அந்தக் காலத்துப் பெரியவங்க சொல்வாங்க. நல்ல நாட்கள் அல்லாத மற்ற நாட்களில் அதாவது சிராத்தம் போன்ற தினங்களில் மட்டுமே ஒரே முறையாக வீடு துடைக்கவேண்டும், இரண்டாம் முறை துடைத்தல் ஆகாது என்பார்கள். இதை எல்லாம் பெரியவங்க சொல்லிச் செய்து வந்ததால் இன்றும் மறக்காமல் இருக்கிறது. இந்தப் பாரம்பரியத்தைப் பற்றி எழுத வேண்டியே இதை எல்லாம் எழுதுகிறேன். அன்று தான் அப்பாவும், அம்மாவும், தம்பியும் ஊருக்குப் போகிறார்கள். அவங்களுக்கு எல்லாம் விட்டுட்டுப் போறோமேனு ஒரே வருத்தம். மதுரை என்னதான் சின்னக் கிராமம் போன்ற ஊர் என்றாலும் இது குக்கிராமம். வீட்டில் மின்சாரம் கிடையாது. வீட்டில் என்ன வீட்டில்! கிராமத்தில் எவர் வீட்டிலும் மின்சாரமே கிடையாது. ஹரிக்கேன் விளக்கும் கிடையாது. மதுரையிலே பட்டாணி, கடலை வறுக்கிறவங்க அந்தக் காலத்து இங்க் பாட்டிலில் மூடியில் ஓட்டை போட்டு மண்ணெண்ணை நிரப்பி, திரியைப் போட்டு எரிப்பார்கள். அந்த மாதிரிக் காடா விளக்கும், சின்னச் சிம்னி விளக்கும் தான் வெளிச்சத்துக்கு. காடா விளக்குப் புகை எனக்கு அப்போவே மூச்சுத் திணறச் செய்தது. அதோடு மாமியார் வீட்டில் விறகடுப்பும், குமுட்டி அடுப்பும் தான். மதுரையில் குமுட்டி அடுப்பில் சமைத்திருக்கிறேன் என்றாலும், எப்போவோ தானே. அதோடு இங்கே மண் அடுப்பு. தினமும் அடுப்பைச் சாணி போட்டு மெழுக வேண்டும். குமுட்டியும் மண் குமுட்டி. சமையலறை ஜன்னலில் ஒன்றும் மண் விறகடுப்புப் பக்கம் ஒன்றும், இரண்டாம் கட்டில் ஒன்றுமாக இருந்தது. இரும்புக் குமுட்டியும், இரும்பு விறகடுப்பும் இருந்தது. காப்பி எல்லாம் போடுவதற்கு தென்னை ஓலையைப் போட்டு எரிப்பார்கள். மாமனாருக்குத் தென்னந்தோப்புகள் இருந்ததால் எரிபொருட்கள் வீட்டிலே உள்ளதுதான். ஆகவே தென்னை ஓலை, தேங்காய் மட்டைனு எல்லாம் போட்டு எரிப்பாங்க. எனக்குப் பாலில் தென்னை ஓலை வாசம் வரும். (நாக்கு நீஈஈஈஈஈஈஈஈளம்) அவங்களுக்கோ அது பழக்கம். அவற்றில் தான் தினசரி சமையல் செய்ய வேண்டும். காப்பிக்கொட்டை அன்றன்றைக்குக் கொட்டையை வறுத்து அவ்வப்போதுக்கு அரைக்க வேண்டும்.

இதை எல்லாம் படிக்கும் தற்காலத்து அன்பர்கள் ஆணாதிக்கம் என்றும், பெண்களை வன்கொடுமைக்கு உள்ளாக்கினார்கள் என்றும் சொல்லலாம். ஆனால் இதை எல்லாம் ஆதிகாலம் தொட்டே செய்து கொண்டிருந்த என் மாமியார் இன்று எண்பதுக்கும் மேல் வயதாகியும் இப்போச் சில வருடங்களாகத் தான் வயதின் காரணமாகவும், கூன் போட்டதின் காரணமாகவும் தனியாக வேலை செய்வதில்லை. ஐந்து வருடங்கள் முன்னர் வரையிலும் பூரண ஆரோக்கியத்துடன் எல்லா வேலைகளையும் செய்து கொண்டு வளைய வந்தார். இப்போதும் தினசரி சமையல் பிடிவாதமாக அவர்கள் தான் செய்வார்கள். ஏனெனில் இந்த வேலைகளெல்லாம் ஒரு வகையில் உடல் பயிற்சியாகும். இதை இத்தோடு விட்டுட்டு என் குடும்ப வாழ்க்கையைக் கவனிக்கலாம். அப்பாவும், அம்மாவும் தம்பியோடு கிளம்பிப் போயாச்சு. இங்கே வீட்டில் எல்லாரும் அதாவது என் மாமனார், மாமியார், பக்கத்து வீட்டு அத்தை, ஊரில் இருந்த மற்ற வீட்டு உறவினர்கள், என் நாத்தனார்கள், என் கணவர், அவர் தம்பிகள் என எல்லாருமாக இரண்டாம் கட்டில் கூடிப் பேசிக்கொண்டிருக்க அங்கே போகலாமா வேண்டாமா என்ற தயக்கத்தில் இருந்த என்னை அழைப்பு வந்து குழப்பத்தைத் தீர்த்து வைத்தது. எல்லாருமே பேசிக்கொண்டிருக்கையில் உங்கப்பா வீட்டில் ஊரில் நிலம் இருந்ததா? என்று கேட்க இருந்தது என் பெரியப்பா பொண்ணு கல்யாணம் சமயம் விற்றாங்க என்றேன் நான். என் மாமனார் முழுக்க முழுக்க விவசாயத்தில் மூழ்கியவர். வயலில் இறங்கி வேலை செய்யக் கூடிய ஆற்றல் உடையவர். என்னிடம் உங்க பக்கமெல்லாம் எத்தனை போகம் விளையும் என்று கேட்க, நான் மூன்று போகம் என்று சொல்ல ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கொண்டு கேலியாகச் சிரித்தனர். எனக்குக் கோபம் மெல்ல மெல்ல வந்தது. முகம் சிவந்தது.

அதற்குள் என் கணவர் என்னிடம்,” இன்னும் குழந்தையாக இருக்கியே! போகம் என்றால் என்னனு புரியலை உனக்கு!” என்று சொல்ல, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் வணிக முறையிலான விளைபொருட்கள் பற்றிய சிறப்புப் பாடம் எடுத்துப்பள்ளியிலேயே படித்திருந்த எனக்குக் கோபம் பொங்கி வர, போகம் என்றால் ஒவ்வொரு முறையும் வயலில் விளைச்சல் ஏற்படுவதைக் குறிப்பார்கள். எங்க பக்கம் மூணுபோகம் நெல் விளையும். பத்திரிகைகளிலே கூட வருமே? எங்க சித்தி ஊரான சின்னமனூர் பக்கம் மார்க்கையங்கோட்டை தான் ஆசியாவிலேயே நெல் விளைச்சலில் மூன்று போகத்தில் அதிக விளைச்சல் காணும் ஊர் என்று என் பொது அறிவைக் காட்ட அவங்க எல்லாருமே சிரித்தார்கள். வைகையிலே தண்ணியே இல்லை; உங்க ஊரிலே நெல் விளையுதா? நிலம் எப்படி இருக்கும்னு தெரியாமல் பேசறே. என்று கேலி செய்தனர். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இவங்கல்லாம் புரிஞ்சுக்கவே மாட்டாங்க போலிருக்கே. வாயை மூடிக்கொண்டேன் அப்போதைக்கு. ஆனால் சோதனை வேறொரு உருவில் வந்தது.

24 comments:

  1. //இல்லைனா இந்த அளவுக் கணக்கில் பின்னர் ஏற்பட்ட குழப்பம் அன்றே ஏற்பட்டிருக்கும்.//

    உம்? ரெண்டு பேர் சாப்பிடற அளவு வெச்சுட்டீங்களா?
    // கொல்லையில் நிலையைக் கைகளால் அலம்பிக் கோலம் போட்டுவிட்டுப் பின்னர் சுவாமி மாடத்தில் விளக்கை ஏற்றி இன்னொரு கை விளக்கையும் கூடவே ஏற்றி அதை எடுத்துக்கொண்டு வாசல் கதவைத்
    வாசலுக்கு வரவேண்டும்.//

    கேட்டதில்லை

    //என்னிடம் உங்க பக்கமெல்லாம் எத்தனை போகம் விளையும் என்று கேட்க, //
    பொண்ணு பாக்கிறப்பவே கேக்கக்கூடாதோ?

    //எங்க சித்தி ஊரான சின்னமனூர் பக்கம் மார்க்கையங்கோட்டை தான் ஆசியாவிலேயே நெல் விளைச்சலில் மூன்று போகத்தில் அதிக விளைச்சல் காணும் ஊர் என்று என் பொது அறிவைக் காட்ட அவங்க எல்லாருமே சிரித்தார்கள். // இன்னும்மா?

    // வைகையிலே தண்ணியே இல்லை; //
    அப்பவேவா? சரிதான்!

    ReplyDelete
  2. வீடு பெருக்கி துடைப்பது, வாசல் தெளிப்பது எல்லாம் மலைப்பாக இருக்கிறது.இப்பொழுது எல்லா வசதிகளையும் வைத்துக்கொண்டே எங்களுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. அந்த காலத்தில் பெரியவர்கள் எப்படி சைதார்களோ???? உங்களுடைய திருமண நினைவுகள் மிகவும் அருமையாக எழுதுகிரீர்கள்.

    ReplyDelete
  3. உம்? ரெண்டு பேர் சாப்பிடற அளவு வெச்சுட்டீங்களா?//

    அப்படி இருந்தாத் தான் சாதம் சாப்பிடறாப்போல் இருந்திருக்குமே! :))))) கதையே வேறே.


    நிலைப்படியில் விளக்குமாறால் பெருக்கவோ, வீடு துடைக்கும் துணியால் துடைக்கவோ கூடாது என்று எங்க பிறந்த வீடு/புகுந்த வீடு இரண்டிலும் சொல்வாங்க. கைகளால் தான் அலம்பவேண்டும். இப்போவும் அப்படித் தான் துடைக்கிறோம். இப்போதெல்லாம் கோலம் போடுவது தான் குறைந்துவிட்டது. முன்பெல்லாம் நிலைக்குமஞ்சள், குங்குமம் பூசிக் கோலம் போடுவது தவறாமல் நடக்கும். இப்போதெல்லாம் முடியறதில்லை. நாள், கிழமைகளில் மட்டுமே. :((((

    ReplyDelete
  4. வாசலில் விளக்குக் காட்ட வேண்டும், காலையில் என்பதை இப்போதும் பாலக்காட்டுத் தமிழர்கள் விடாமல் செய்கிறார்கள்.

    ReplyDelete
  5. // வைகையிலே தண்ணியே இல்லை; //
    அப்பவேவா? சரிதான்!//

    க்ர்ர்ர்ர்ர்ர்ர் வைகைத் தண்ணீரெல்லாம் நிறைய இருக்காக்கும். :P

    ReplyDelete
  6. எப்பவுமே மலரும் நினைவுகள் சுவா
    ரசியம்தான். அதுவும் இந்தக்காலத்தலைமுறையினருக்கு ஒவ்வொன்றும் ஆச்சர்யம் கலந்த அதிசயமே.என் மலரும் நினைவுகள் படிச்சிருக்கேளோ. நனும் பூனாவில்
    கரி அடுப்பில் தான் சமையல் பண்ணி
    இருக்கேன்

    ReplyDelete
  7. வாசல் நிலைப்படியை கைகளால் அலம்புவதை நானும் செஞ்சிருக்கேன்.முக்கியமா சாயந்திரம் நிலைப்படியில் கொஞ்சம் தண்ணீர் தெளிச்சு, கைகளாலேயே துடைச்சு கோலம்போட்டுட்டு அப்றம்தான் திருவிளக்கையே ஏத்தறது வழக்கம். இது வெளி நிலைப்படிக்கு மட்டுமல்ல, வீட்டின் உள்கட்டு அல்லது, குறைஞ்சபட்சம் பூஜையறை நிலைப்படிக்கும் பொருந்தும்.

    ஃப்ளாட் சிஸ்டத்து வீட்டுல அதெல்லாம் மறந்து ரொம்ப நாளாச்சு :-))))

    ReplyDelete
  8. பொண்ணு பாக்கிறப்பவே கேக்கக்கூடாதோ?//

    @திவா, ஆமாம் இல்ல?? கேட்டிருக்கணுமோ?? :)))))

    ReplyDelete
  9. வாங்க ராம்வி, இப்போதும் இரண்டு வேளையும் வாசல் தெளிச்சுக் கோலம் போடுவது வழக்கமாய் வைத்திருக்கிறேன். :)))))) ஆனாலும் அடுக்குமாடிக்குடியிருப்புக் கலாசாரம் வந்தாலும் வந்தது பல விஷயங்களும் மாறித் தான் போய் விட்டன. :(

    சென்ற வாரம் கிராமத்திற்குச் சென்றபோது காலை ஏழு மணிக்கு வாசல் தெளிக்கிறதைப் பார்க்க முடிந்தபோது வருத்தமாய் இருந்தது. இங்கே எங்க தெருவில் சிலர் முதல் நாள் இரவே ஒன்பது மணிக்கு வாசல் தெளிச்சுக் கோலம் போடுகின்றனர். மறுநாள் காலையில் முடியாதாம் அதற்காக. :((((

    ReplyDelete
  10. வாங்க லக்ஷ்மி, உங்க மலரும் நினைவுகளைப் படிக்க வேண்டும், உங்க பதிவுகளுக்கு அவ்வப்போது வருகிறேன். கட்டாயமாய்ப் படித்துப் பின்னூட்டம் கொடுக்கிறேன்.

    புனாவின் கரி அடுப்புக் கரி நிலக்கரி இல்லையா?? இங்கே எல்லாம் நிலக்கரி அவ்வளவாய்க் கிடையாது. மரக்கரி தானே பயன்படுத்தினாங்க. நெய்வேலியில் தோண்ட ஆரம்பிச்சதும் கிடைச்ச கரியை ஒரு திறந்த மாட்டு வண்டியில் போட்டுக்கொண்டு கூடவே ஒரு குமுட்டி அடுப்பையும் வைத்துக்கொண்டுஇரண்டு பெண்கள் வீடு வீடாகப் பிரசாரம் செய்தது இன்னமும் நினைவில் இருக்கிறது.

    கரி பிடிக்க நேரம் எடுத்ததும், இதை எப்படி நம்பி வாங்கறதுனு எல்லாரும் கேட்டதும்; அந்தப் பெண்கள் பதில் சொல்ல முடியாமல் விழித்ததும்! :))))))))

    ReplyDelete
  11. வாங்க அமைதி, உங்களுக்குத் தெரிஞ்சிருப்பது குறித்து சந்தோஷம். சாயந்திரம் நிலையை அலம்பினது நினைவில் இல்லை. ஆனால் நிலைக்கு அருகே விளக்கைக் காட்டுவாங்க. மஞ்சள், குங்குமம் வைப்பாங்க. நீங்க சொல்றாப்போல் அப்போதெல்லாம் பூஜை அறை தனியாக இருக்குமாதலால், அதன் நிலைப்படிக்கும் உண்டு தான். சமையலறையிலும் சமையல் செய்யும் அடுப்பின் அருகே விளக்கை ஏற்றி வைப்பார்கள்.

    புதுசாய் மண் அடுப்புப் போட்டாலும் அடுப்பைப் பயன்படுத்தும் முன்னர் விளக்கு ஏற்றி, மஞ்சள் குங்குமம் வைப்பார்கள். கிராமத்தில் மாமியார் வீட்டில் செய்திருக்கோம்.

    ReplyDelete
  12. காலையில் வீடுபெருக்குவது மட்டும் இங்கு நடந்திருக்கு.

    சாணம்,கோலம் எல்லாமே எமக்குப் புதுசுதான்.

    ReplyDelete
  13. //ஆனால் நிலைக்கு அருகே விளக்கைக் காட்டுவாங்க//

    இதைமட்டும் இன்னும் விடாம செஞ்சுக்கிட்டிருக்கேன்.. விளக்குக்கு பதிலா அகர்பத்தி :-)))))

    ReplyDelete
  14. கீதாம்மா,
    இந்தப் பழக்கவழக்கமெல்லாம் எனக்கும் ரொம்ப புதுசாத் தான் இருக்கு.. மதுரைக்கார சிட்டி பொண்ணு எப்படி குக்கிராமத்துல சமாளிச்சீங்கன்னு படிக்க நல்லா இருக்கு..

    இப்படியே தொடர்ந்து எழுதுங்க,.. ஆணாதிக்கம், வன்கொடுமை மேட்டரெல்லாம், வேற discussionல பாத்துக்கலாம் :-)

    இது ஒரு மாதிரி கடந்த முப்பது வருடத்துக்கு முந்திய தமிழகத்தின் வாழ்க்கை எப்படி இருந்ததுங்கிற பதிவு மாதிரி இருக்கு., எதுக்காகவும் இதை குறைக்காதீங்க..

    இப்ப இதையெல்லாம் படிக்கும்போது, எங்க அம்மாவும் இதே மாதிரி பெரிய ஊரிலிருந்து சின்ன கிராமத்துக்குக் கல்யாணமாகிப் போனாங்க, அந்தக் கதையை அவங்க கிட்ட கேட்கணும்னு தோணுது..

    ReplyDelete
  15. வாங்க மாதேவி, இந்த அவசர வாழ்க்கையில் தினம் வீடு பெருக்கித் துடைப்பதே பெரிய விஷயமாய் இருக்கு இல்லையா? :( எல்லாரும் ஓடறதைப் பார்க்கையில் என்னிக்கு இந்த ஓட்டம் நிற்கும்னு எனக்குத் தோன்றும். :(

    ReplyDelete
  16. இதைமட்டும் இன்னும் விடாம செஞ்சுக்கிட்டிருக்கேன்.. விளக்குக்கு பதிலா அகர்பத்தி :-)))))//

    நல்லது; என்றாலும் ஒரு சின்ன அகலை ஏற்றி நிலைக்கருகே காட்டலாமோ? அப்புறம் பால்கனி இருந்தால் அங்கே வைக்கலாம். இதெல்லாம் நம் செளகரியத்தைப் பொறுத்தது இல்லையா? :)))))))

    ReplyDelete
  17. வாங்க பொன்ஸக்கா, நீங்க படிப்பது உண்மையிலேயே சந்தோஷத்தைத் தருகிறது. நானும் கூடிய வரையில் இந்த ஆணாதிக்கம், பெண்ணுரிமை பற்றிச் சொல்லாமல் தான் எழுத எண்ணம். ஆனால் சில தனிமடல்களினால் இங்கே பதில் கொடுத்தேன்; உண்மையில் இத்தகையதொரு வாழ்க்கையும் வாழ்ந்திருக்காங்க என்பது இன்று பலருக்கும் ஆச்சரியத்தை அளிக்கிறது என்பதையும் புரிந்து கொண்டேன்.

    ReplyDelete
  18. கிராமங்களில் பயோ எரிவாயு இருந்தாலும் பலருக்கும் இன்னும் விறகே முக்கிய எரிபொருளாக இருக்கிறது. ஆனாலும் ஒரு சில விஷயங்களில் அவங்க நகரத்தைப் பார்த்தே செய்யறாங்க. அதில் முக்கியமான ஒன்று;

    முன்பெல்லாம் காலை ஆறு மணிக்குள்ளாக கிராமங்களில் வாசல் சாணம் போட்டுத் தெளித்துக் கோலம் போட்டிருப்பதைக் காணலாம். அதுவும் அரிசிமாவுக் கோலம்; ஆனால் இப்போது, அதுவும் சென்ற வாரம் சென்றிருந்த போது இந்தக் கோடையிலும் காலை ஏழு மணிக்கும், அதன் பின்னரும் சில கிராமங்களில் வாசல் தெளிக்கப் பட்டது; கோலமோ எங்க குலதெய்வமான எங்க ஊர் மாரியம்மன் கோயிலிலேயே கல் மாவில் போடுகின்றனர்: ரொம்பவே வருத்தமாய் இருந்தது.

    ReplyDelete
  19. அடுத்தது பட்டி, தொட்டியெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் தேசீய உடையாக நைட்டி மாறி இருப்பது. நைட்டி அணிவது அவரவர் செளகரியம் என்றாலும் பொது இடங்களிலும், கடைகளுக்குச் செல்லுகையிலும், குழாயில் தண்ணீர் பிடிக்க வருகையிலும், அணியலாமா?? புரியலை! அம்மாவை மம்மி என்றும், அப்பாவை டாடி என்றும் கூப்பிடப் பழக்கி இருக்கின்றனர். கடுங்கோடையிலும் குழந்தைகளுக்குப் பருத்தி ஆடை அணிவிக்காமல் முழுக்கைச் சட்டை, ஜீன்ஸ், டீ ஷர்ட், காலில் சாக்ஸ், ஷூ அல்லது பூட்ஸ் என அணிவிப்பது. மதியம் பனிரண்டு மணி அளவில் வடமட்டம் பேருந்து நிலையத்தில் ஒரு பதின்ம வயதுப் பெண் அந்தச் சூழ்நிலைக்குச் சற்றும் பொருந்தாமல் ஜீன்ஸும், மேலே டாப்ஸும், குதிகால் செருப்பு, காலில் கொலுசு, தலை பின்னிப் பூ நீளமாய் வைத்துக்கொண்டு விசித்திரமாய்க் காட்சி அளித்தார். :((((

    இந்த விஷயத்தில் வட மாநிலங்களில் பெரியவங்க வந்தால் புடைவை அணிந்து தலை முக்காடு போட்டு மூடிக் காலில் விழுந்து வணங்குவதை இன்னமும் நிறுத்தவில்லை.

    ReplyDelete
  20. மாமி அந்தக் காலத்து வாழ்க்கை முறையை தெரிஞ்சுக்க முடியறது. இந்தக் காலத்துல சாணம் நு சொன்னாலே பெண்கள் ஓடி விடுகிறார்கள். :) முன்னாடி அதாலே தெளிச்சு மெழுகனும்.
    போகம் கணக்கு என்ன? நீங்க சொன்ன கணக்கு சரி தானே. எனக்கு புரியவில்லையே.

    ReplyDelete
  21. அன்று தான் அப்பாவும், அம்மாவும், தம்பியும் ஊருக்குப் போகிறார்கள். அவங்களுக்கு எல்லாம் விட்டுட்டுப் போறோமேனு ஒரே வருத்தம். //iruggaathaa பின்னே



    மதுரை என்னதான் சின்னக் கிராமம் போன்ற ஊர் என்றாலும் இது குக்கிராமம்.
    மதுரை சின்ன கிராமமா!!!!!!!!!!! இருந்தாலும் உங்க நகைச்சுவைக்கு ஒரு அளவே கிடையாது போங்க :)

    வீட்டில் மின்சாரம் கிடையாது. வீட்டில் என்ன வீட்டில்! கிராமத்தில் எவர் வீட்டிலும் மின்சாரமே கிடையாது. ஹரிக்கேன் விளக்கும் கிடையாது. மதுரையிலே பட்டாணி, கடலை வறுக்கிறவங்க அந்தக் காலத்து இங்க் பாட்டிலில் மூடியில் ஓட்டை போட்டு மண்ணெண்ணை நிரப்பி, திரியைப் போட்டு எரிப்பார்கள். அந்த மாதிரிக் காடா விளக்கும், சின்னச் சிம்னி விளக்கும் தான் வெளிச்சத்துக்கு. காடா விளக்குப் புகை எனக்கு அப்போவே மூச்சுத் திணறச் செய்தது.
    ஏதோ அந்த காலத்து படம் பார்த்த நிறைவு கீதாம்மா;பதிவுக்கு நன்றி
    ரசித்து படிப்பதால் ஒவ்வொரு பதிவையும் படிக்க கொஞ்சம் நேரம் கூடுதலாக தான் ஆகிறது !

    ReplyDelete
  22. இதுக்கு முன்னே போட்ட கமெண்ட்ஸ் எங்கே காணோம் ;

    காக்கா thuggittu போச்சோ ennavo :((((

    ReplyDelete
  23. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ப்ரியா, ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நாளா உங்க கமெண்டே வரலைனு பிள்ளையாருக்குத் தேங்காய் எல்லாம் வேண்டிட்டு இருக்கேன், போட்டேன்னு சொல்றீங்க? நோ தேங்காய் பிள்ளையாருக்கு. :P

    ReplyDelete
  24. இல்லே இல்லே ;நான் போட்ட கமெண்ட்ஸ் இரண்டும் வந்துட்டது :))))))))

    சோ நீங்க உங்க வேண்டுதலை நிறைவேற்றிடுங்க :))))

    ஆமா இதென்ன ஜில்லுன்னு ஒரு ........ வந்தோமா படிச்சோமா அப்பாவியை திட்டினோமா ன்னு போறதுக்கு!

    (அது சரி .......நான் பாட்டுக்கு இப்படி எல்லாம் எழுதுகிறேனே அப்பாவி வந்து படித்தால் என்ர கதி :))))) )

    ஒவ்வொரு வரியையும் ரசித்து படித்து வியந்து உங்கள் எழுத்தின் அழகில் மயங்கி அப்புறம் சுமாராவது பின்னூட்டம் போடணும் இல்லே :)

    ReplyDelete