எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, June 29, 2011

வேலைக்குப்போறதா வேண்டாமா? கல்யாணமாம் கல்யாணம்!

கடிதம் வந்தபோது நான் அன்றைய தினம் சமையலில் இருந்தேன். கடிதம் வந்திருக்கு என்று சொல்லி அதைக் கொடுத்தார்கள். உடனே பிரிச்சுப் படிச்சால் தப்பாயிடுமோ?? யோசனையோடு கடிதத்தை வாங்கித் தனியே வைத்துக்கொண்டேன். அதற்குள் என் நாத்தனார் என்ன விஷயம் என்று கேட்க, அதான் சாக்கு எனக் கடிதத்தைப் பிரித்துப் படிக்க முனைந்தேன். மாமனாருக்கும் கடிதம் வந்திருந்தது. அதற்குள்ளாகக் குட்டி மைத்துனன், “அண்ணாவுக்கு மெட்ராஸுக்கு மாற்றல் ஆகிட்டதாம், மன்னி, உன் கடிதத்திலேயும் அதானே எழுதியிருக்கு?” என்று கேட்க, படபடக்கும் இதயத்தோடு கடிதத்தைப் பிரித்தேன். நாத்தனார்கள் இருவர், மைத்துனர் இருவர், மாமியார், மாமனார் எல்லாரும் சூழ்ந்து கொள்ளக் கொஞ்சம் தர்மசங்கடத்துடனேயே கடிதத்தைப் பிரித்த எனக்கு ஒரு பக்கம் ஏமாற்றம். இன்னொரு பக்கம் ஆறுதல்.

கடிதத்தில் நாலே வரி:
செள.கீதாவுக்கு அநேக ஆசிகள். இப்பவும் இவ்விடம் நான் க்ஷேமம். எனக்கு மெட்ராஸ் மாற்றலாகிவிட்டது. உன் அப்பாவுக்கும் கடிதம் போட்டிருக்கேன். இந்த மாசமே குடித்தனம் வைக்க வேண்டும். நான் வருகையில் வீடு பார்த்து அட்வான்ஸ் கொடுத்துவிட்டு வருவேன். நீ தயாராய் இருக்கவும். மற்றவை நேரில்.”

இதான் கடிதத்தில் கண்டது. இன்லண்ட் லெட்டர் தான் என்றாலும் ஒரு கார்டில் அடங்கி இன்னமும் இடம் இருக்கும் அளவுக்கு விஷயமே இல்லாமல் இருந்தது. ஒரு பக்கம் கோபம் வந்தது. கன்னா, பின்னாவெனத் திட்டி எழுதலாமோ என்று தோன்றியது. இன்னொரு பக்கம் ஒரு வாரத்திற்குள் அப்படி எல்லாம் எழுத முடியுமா என்று தோன்றியது. ஒன்றும் புரியவில்லை. மாற்றல் வந்த சந்தோஷத்தைக் கூட மறக்கடித்தது கடிதத்தின் வரிகள் எனலாம். ஒருவாறு ஏமாற்றத்தை மறைத்துக்கொண்டு பதில் எழுதினேன். அப்போல்லாம் உடனே கடிதம் போயிடுமே. கடிதம் உடனே போய் அதற்கும் பதில் வந்தது. “செள,கீதாவுக்கு அநேக ஆசிகள். உன் கடிதம் கண்டேன். கதை படிக்கிறாப் போல் இருக்கிறது. உனக்குத் தமிழ் நன்றாக வருகிறது. நேரம் இருக்கையில் கதை எழுதிப் பழகு. நன்றாய் எழுதுவாய் என்று தோன்றுகிறது. மற்றவை நேரில்.” க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்னு அப்போவே சொல்லி இருக்கணும். சொல்லாமல் விட்டுட்டேன். :P ஆனால் வந்த கோபத்தில் அதுக்கப்புறமா என்னோட இலக்கிய நடையையே விட்டுட்டேன். ))))) ஆனாலும் அவர் அதுக்கப்புறமும் பல முறை சொல்லி இருக்கார். எழுதிப் பழகுனு. வணங்கவே இல்லை.

இத்தனை வருஷங்களுக்கு அப்புறம் இப்போத் தான் எழுதறேன். ஆனாலும் புதுசாக் கதை எல்லாம் எழுதாமல் சொந்தக் கதையை எழுதுகிறேன். அப்புறமாய் அவர் சென்னை வந்து முதல் முதல் வில்லிவாக்கத்தில் வீடு பார்த்து அட்வான்ஸ் கொடுத்துவிட்டு வந்தார். மாமனார், மாமியார் இருந்த ஊரின் பெயர் கருவிலி. பூர்வீக கிராமம் ஆன பரவாக்கரையிலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர். மாமனாரின் நிலங்கள் இங்கே இருந்ததால் இங்கேயே தங்கிவிட்டார். கருவிலி வந்து நாள் பார்த்து வைத்திருந்தபடி சென்னைக்குக் கிளம்பினோம். அப்போவும் என் மாமியாருக்கும், என் பெரிய நாத்தனாருக்கும் அவ்வளவாக இஷ்டம் இல்லை. சின்னப்பொண்ணு; இன்னும் கொஞ்ச நாள் பழகட்டும்; அப்புறமாய்க் குடித்தனம் வைக்கலாம்னு சொன்னாங்க. ஆனால் என் கணவர் கேட்கவில்லை. என் மாமியாரும், குட்டி மைத்துனரும் உடன் வர நாங்க இரண்டு பேரும் குடித்தனம் செய்யச் சென்னை வந்து சேர்ந்தோம். என் அம்மாவும் மதுரையிலிருந்து எனக்கு வேண்டிய சாமான்களோடு சென்னைக்கு வந்தாங்க. எல்லாருமே என் சித்தப்பா வீட்டில் தான் இறங்கினோம். அங்கிருந்து வில்லிவாக்கம் வீடுக்கு ரயிலில் போகணும்னு சொன்னாங்க. சென்னைக்கு அதற்கு முன்னர் வந்திருந்தாலும் என் பழக்கம் எல்லாம் திருவல்லிக்கேணி, மாம்பலம், மயிலைக்குள்ளாகத் தான். ஆகவே வில்லிவாக்கம், ரயிலில் போகவேண்டும் என்றதும் புதுமையாக இருந்தது.

அப்போதெல்லாம் புகை வண்டிகள் தான். வில்லிவாக்கம் செல்லும் புகை வண்டியில் சாமான்களை எல்லாம் வைத்துக்கொண்டு சாமான்னா என்னனு நினைக்கிறீங்க? ஸ்டவில் இருந்து, குமுட்டி வரை எல்லாமும், சித்தி குடும்பம், நாத்தனார் குடும்பம், என் அம்மா, என் மாமியார், மைத்துனர், நாங்க இரண்டு பேர் எனக் கிட்டத் தட்ட பதினைந்து பேர் போலப் போய்ச் சேர்ந்தோம். கீழே நான்கு குடித்தனம், மாடியில் எங்க போர்ஷனும், வீட்டுக்காரங்க போர்ஷனும் மட்டும் இருந்தது. மாடியிலிருந்து ஒரு ராட்டினம் கட்டிக் கீழே கிணறு வரை வந்திருந்தது. பார்க்கவே மயக்கம் வரும்போல் இருந்தது. தண்ணீர் கிணற்றில் ஊற ஊற எடுத்துக்கணுமாம். காலை முதல்லே வீட்டுக்காரங்க எடுத்ததுக்கு அப்புறம் தான் நாம் கிணற்றில் தண்ணீர் எடுக்கணுமாம். அதுவரைக்கும் காலைக்கடன்களுக்குத் தேவைப்பட்டால் என்ன செய்யறது? முதல் நாளே பிடிச்சு வைச்சுக்கணுமாம். ஏகப்பட்ட கண்டிஷன்கள். ஒண்ணும் புரியலை. சரி, பால் காய்ச்சலாம்னு பால் வாங்கணும்னு சொன்னோம். எதிரேயே கறப்பாங்க பாருங்க, அங்கே போய் வாங்கிக்கலாம்னு சொல்ல, என் மாமியாருக்கு ரொம்ப சந்தோஷம். ஆஹா, நல்ல பால் கிடைக்குதா இங்கேனு சொல்லிட்டு அவங்களே போய் வாங்கிட்டு வந்தாங்க. ஆனால் சென்னைப் பால்காரங்க பத்தி அவங்களுக்கு முழுசாப் புரியலை. பால் கேனை கவிழ்க்கிறாப் போல் காட்டிட்டு உள்ளே தண்ணீர் வைச்சுக் கறப்பாங்களாம். எனக்குமே இதெல்லாம் தெரியாது. பின்னால் எல்லாரும் சொல்லிக் கொடுத்துத் தான் தெரிய வந்தது.

அன்றைய தினம் பால் காய்ச்சிச் சமையல் செய்து எல்லாருக்கும் சாப்பாடு போட்டுட்டு வந்தவங்களை வழி அனுப்பி வைத்தோம். வீட்டு மாடியில் இருந்து பார்த்தால் எதிரே ரயில்வே ட்ராக் நன்றாய்த் தெரியும். சென்னையிலிருந்து வரும் ரயில்கள் லோகோ தாண்டும்போதும், திருவள்ளூர் ரயில்கள் கொரட்டூரிலிருந்து வருகையிலும் தூரத்திலேயே கண்டு பிடிக்கலாம். அதுக்கப்புறமா வீட்டை விட்டுக் கீழே இறங்கி ரயிலைப் பிடிக்கலாம். ஒண்ணும் அவசரமே இல்லை. அது ஒரு காலம். இப்போதெல்லாம் போல் கூட்டமும் இருக்காது. ஆகவே எல்லாரும் ரயில் வரதைப் பார்த்துட்டே கிளம்பிப்போனாங்க. மாம்பலம் வரைக்கும் டிக்கெட் எடுத்துட்டா செண்ட்ரல் போய் மாறிக்கலாம். அங்கே எலக்ட்ரிக் ரயில். அப்படியே போனாங்க. எங்க குடித்தனமும் ஆரம்பித்தது. இதற்குள்ளாகக் கல்யாணம் ஆகும் முன்னர் நான் எழுதிய தேர்வுகளில் ஒன்றான எலக்ட்ரிசிடி போர்ட் பரிக்ஷையில் தேறிவிட்டதாய் வேலைக்கு உத்தரவு ஏற்கெனவே வந்திருந்தது. அலுவலகம் தான் கொடுக்கவில்லை. அதற்குள் கல்யாணமும் ஆயாச்சு. இப்போ அதற்கான உத்தரவு வந்திருக்கிறது. மதுரைக்கருகே பரமக்குடியில் போஸ்டிங் போட்டிருந்தாங்க. அப்பா அந்த உத்தரவையும், கூடவே ஒரு கடிதமும் வைத்து அனுப்பி இருந்தார் எக்ஸ்ப்ரஸ் தபாலில். வில்லிவாக்கம் குடித்தனம் வைத்த இரண்டே நாளில் இந்தக் கடிதம் வந்தது. வேலைக்கு உத்தரவா? போறதா? வேண்டாமா?

10 comments:

  1. மலரும் நினைவுகள் அருமை.கணவரின்
    கடிதம் படிக்கும் எதிர்பார்ப்புகள். புதுக்குடித்தன அனுபவங்கள் எல்லாம்
    நல்ல சொல்ரிங்க. வேலைக்கு போனிங்களா?

    ReplyDelete
  2. சூப்பராக மலர்ந்த நினைவுகள்.

    குடும்பம் மொத்தமும் சூழ நீங்கள் படிக்க வேண்டியிருக்கும் என்று தெரிந்துதான், அவர் 'ஜஸ்ட் மேட்டர்' மட்டும் எழுதியிருக்கிறார்.
    இதுபற்றி என்னோட பதிவு ஒன்றில் எழுதியிருக்கிறேன். நேரமிருப்பின் படித்து சொல்லூங்க.
    சுட்டி கீழே:
    http://9-west.blogspot.com/2011/05/blog-post_23.html

    அது சரி....வேலைக்குப் போனீங்களா?
    ம்துரை எங்கே வில்லிவாக்கம் எங்கே!!

    ReplyDelete
  3. மலரும் நினைவுகள் நல்லாருக்கு ;-)

    ReplyDelete
  4. குடும்பம் சூழ இருந்து படித்தீர்களா :)

    இப்போது எஸ்.எம்.எஸ் பறக்கும்காலம் ஆகிவிட்டது. காலத்தின் மாற்றங்கள்....

    ReplyDelete
  5. தலைவி உங்க கடிதம் எங்க காணோம்...! ;)))

    ReplyDelete
  6. வாங்க லக்ஷ்மி, தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். வேலைக்குப் போனேன். நன்றி பாராட்டுக்கு. உங்க பதிவுகளை ஒவ்வொன்றாய்ப்படித்து வருகிறேன்.

    ReplyDelete
  7. வாங்க நானானி,நீங்க தொடர்ந்து படிக்கிறீங்கனு நினைக்கிறேன். வேலை என்னமோ அந்த வருஷம் ஜனவரியிலேயே கிடைச்சுடுத்து. முதலில் கொடுத்த தேர்வு, முதல் முறையிலேயே தேர்வும் ஆனது; ஆனால் போஸ்டிங் தாமதம். இல்லைனா மதுரையிலேயே கொஞ்ச நாட்கள்/மாதங்கள் வேலைக்குப் போயிருப்பேனோ??

    இதிலே என்ன வேடிக்கை என்றால் ஒரு வங்கி நேர்முகத் தேர்வும் என் கல்யாண தினத்தன்று இருந்தது. அதுக்குப் போக முடியலை! எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றதை அடுத்து நேர்முகத் தேர்வு, அப்புறம் மீண்டும் நேர்முகத் தேர்வுக்குக் கேட்டோம். வங்கியின் மேலதிகாரிகள் ஒத்துக்கலை. :))))))))))

    ReplyDelete
  8. வாங்க அமைதி, வரவுக்கு நன்றி.

    ReplyDelete
  9. கோபி, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
  10. நீங்க முதல் முதலா எழுதிய பதில் கடிதத்தை படிக்க

    ஓடோடி வந்த எங்களை ஏமாற்றலாமா :)))))))))))

    ஒரு வேலை

    பிராண நாதா,தங்கள் அன்பு மடல் கிடைத்தது ,லட்சம் தடவை படித்தேன் ! என்று ஆரம்பித்து எழுதி இருப்பீர்களோ :)))))))

    பதிவுக்கு நன்றி கீதாமா

    ReplyDelete