அப்போ புத்திசாலித் தனமாய் ஒரு வேலை செய்தேன். பொங்கிக் கொண்டிருந்த அரிசியைக் கரண்டியால் அள்ளி வேறொரு பாத்திரத்தில் மாற்றிவிட்டுக் கொடி அடுப்பில் இருந்த சாம்பாரைக் கீழே இறக்கிவிட்டு வேறொரு பாத்திரத்தில் நீரை விட்டுச் சுட வைத்தேன். அதற்குள்ளாக சமையலறையில் விட்ட புது மருமகளிடமிருந்து சத்தமே இல்லையே எனப் பார்க்க வந்தார் மாமியார். கூடவே என்னோட இரண்டாவது நாத்தனாரும் வந்தார். இவரைத் தான் என் சித்தப்பா(அசோகமித்திரன்) தம்பிக்குக் கொடுத்திருந்தது. மாமியார் பார்த்துட்டு அடுப்பைச் சுற்றிச் சிதறிக்கிடந்த அரிசியைக் கண்டு என்ன இது? என்று கேட்க, நான் வாயே திறக்கவில்லை. மெளனமாய் அரிசியைப் பாத்திரத்தில் மாற்றிக்கொண்டிருந்தேன். அதற்குள்ளாக மாமியார் விஷயத்தைப் புரிந்துகொண்டார். அரிசி எவ்வளவு போட்டாய்?
ஒரு படி தான்.
ஒரு படி போடலை நீ, இரண்டு படி போட்டிருக்கே.
இல்லை, ஒரு படி தான் போட்டேன். ராஜி கூட ஒரு படினு தான் சொன்னாள்.
எங்கே படியில் அரிசியை மறுபடி அளந்து எடுத்து வா.
அரிசிப் பானையில் இருந்த படியால் நான் இரண்டு தரம் அரிசியை அளந்து எடுத்து வர, என் மாமியார் நான் நன்னாப் பார்த்தேன் இரண்டு படி தான் எடுத்திருக்கே. இப்படித் தானே அப்போவும் எடுத்திருக்கே?
ஆமாம்; ஆனால் இது ஒரு படி அரிசி தான்.
அந்த நேரம் ஆபத்பாந்தவளாய் வந்தார் என் இரண்டாவது நாத்தனார். அம்மா, அவளைக் குத்தம் சொல்லாதே! மெட்ராஸில் இதுதான் ஒரு படி. நம்ம பக்கம் ஒரு படி என்கிறது அங்கே அரைப்படி. அவள் சரியாய்த் தான் புரிஞ்சுட்டு இருக்கா. அவளையே அளந்து எடுக்க விட்டிருந்தால் குழப்பம் வந்திருக்காது. ராஜி வந்து ஒரு படினு சொல்லவும் அவ பெரியபடியாலே ஒருபடி எடுத்திருக்கானு சொல்லி விளக்கம் கொடுக்க, எனக்கு இது முற்றிலும் புது விஷயமாக இருந்தது.
எங்கேயும் எட்டாழாக்கு ஒரு படினு தானே கேள்விப் பட்டிருக்கோம்; இது என்ன புதுசா? என நினைப்பதற்குள்ளாகப் பக்கத்து வீட்டு அத்தையும் இங்கே நடக்கும் கசமுசா காதில் அரைகுறையாய் விழ அவங்களும் வந்து என் மாமியாரிடம் விளக்கினார்கள். அவங்களுக்கும் பெரிய படி, சின்னப் படி என்பது அப்போதே புரிய வர, அதற்குள்ளாக நான் மாற்றிய அரிசியை வேறொரு வெண்கலப் பானையில் வைத்து இரண்டு பக்கமும் சாதத்தை வடிக்க ஒரு மாதிரியாகச் சாதம் தயாரானது.
என் இரண்டாவது நாத்தனார் தான் அந்தக் குடும்பத்திலேயே முதல்முதல் பள்ளி இறுதி வகுப்பு வரை படித்த பெண். அதற்கு முன்னர் குடும்பத்திலேயே பள்ளி இறுதி வகுப்புக்குப் போனது என் கணவர் தான். அவரோட அக்காவைப் படிக்க வைக்கவில்லை. பதினைந்து வயதுக்குள்ளேயே கல்யாணமும் செய்து கொடுத்துவிட்டார்கள். அதுவும் சொந்தம்; அத்தை பிள்ளைக்கே கல்யாணம் செய்து கொடுத்தார்கள். ஆகவே வெளிப்பழக்கம் என்பதே இல்லை. ஆனால் என் இரண்டாவது நாத்தனாரும், என் கணவரும் ஊரையும் விட்டுவிட்டு என் கணவர் புனாவிலும், நாத்தனார் மும்பையில் இன்சூரன்ஸ் அலுவலகத்திலும் வேலை பார்த்தார்கள். ஆகவே அவங்களுக்குத் தஞ்சையை விட்டு வெளிப் போக்குவரவு இருந்ததால் உடனே புரிந்து கொள்ள முடிந்தது. அதே என் மாமியாரோ, நாத்தனாரோ ஊரை விட்டு வெளியே சென்றது என்பது கும்பகோணம் சுற்றுவட்டாரக் கிராமங்கள் மட்டுமே. அதனால் அவங்களுக்கு என் அளவுக் கணக்கும், எனக்கு மிகவும் புதியதான இந்த அளவும் புரிய வில்லை. அப்புறமாய் இரண்டே நாட்களில் இந்தக் கணக்கில் மாகாணி, வீசம் என்பதில் நான் தேர்ந்தது தனிக்கதை.
அதே போல எங்க வீடுகளிலே பேசிக்கிறதும் ரொம்பவே எந்தவிதமான தயக்கம் இல்லாமல் பேசிப்போம். என் அம்மா எங்க பெரியப்பாக்கள் கூடவும், என் தாத்தா என் மாமிகளோடும் தாராளமாய்ப் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டுப் பேசுவார். ஆனால் இங்கேயோ என் கடைசி நாத்தனார் அவங்க அண்ணாவான என் கணவரோடு பேசியே நான் பார்க்கலை. என் கணவரும் அவங்க அம்மா, அவரோட அக்கா இவங்க கிட்டேத் தான் ஜாஸ்தி பேசுவார். அவங்க அப்பாவும், பிள்ளையும் பேசிக்கொண்டே நான் பார்க்கலை. இரண்டாவது நாத்தனார் மட்டும் கொஞ்சம் கலகலப்பு. எனக்கு இரண்டே வயது மூத்தவங்க என்றாலும் வெளிப்பழக்கம் அதிகம் இருந்ததால் என்னோடு சகஜமாய்ப் பேசினாங்க. இங்கே அண்ணாவோடு சண்டை, தம்பியோடு வம்புனு இருந்த எனக்குக் கொஞ்சம் கஷ்டமாய்த் தான் இருந்ததுனு சொல்லணும். வேறே யாரும் கிடைக்காமல் என் குட்டிமைத்துனனை வம்புக்கு இழுப்பேன். அவனோ, “நீ என்ன மச்சினன் என்ற மரியாதைஇல்லாமல் இப்படி இருக்கே?” என்பான். “போடா!” என்று நான் சொல்ல, “அம்மா, அப்பா கிட்டே சொல்றேன்” என்று அவன் சொல்ல, அவங்க எதிரேயே கூப்பிடுவேன் என்று சொல்லிவிட்டு அப்படியே கூப்பிடுவேன். இந்த விஷயத்தில் மாமியார், மாமனார் சொல்லைத் தட்டிய மருமகளாகவே இருந்தேன் என்பதே உண்மை. எவ்வளவு முயன்றும் அப்படி ஒதுங்கி இருக்க என்னால் இயலவே இல்லை. இன்று வரையிலும் அவங்களை எல்லாம் பெயர் சொல்லியே கூப்பிட்டாலும், பேச்சுக் குறைந்துவிட்டது. அவங்க அவங்க குடும்பச் சூழ்நிலையில் குறைத்துக் கொண்டுவிட்டோமோ என்னமோ. அண்ணாவிடம் ஏதானும் காரியம் ஆகணும்னா இவரின் பெரிய தம்பி என்னிடம் தான் விண்ணப்பம் வைப்பான். குட்டி மைத்துனன், அவனுக்கு மூத்தவன் இருவருமே எனக்கு ஆறு வயதுக்கும் மேல் சின்னவர்கள் என்பதால் அவங்களோடு பழக எனக்கும் சுலபமாக இருந்தது எனலாம்.
அடுத்த இரண்டு நாட்கள் போனவிதம் தெரியாமல் என் அண்ணா மதுரையிலிருந்து வர, இவரும் புனாவுக்குத் திரும்பும் நாளும் வந்தது. என் மாமனார் என் நாத்தனாரைக் கொண்டு விடவேண்டும் என ஏற்கெனவே சென்னை செல்ல இருந்தார். எல்லாருமே ஒரே நாளில் கிளம்பினார்கள். வீட்டில் என் பெரிய நாத்தனார், அவங்க மூணு பொண்ணுங்க, என் மாமியார், இரண்டு மைத்துனர்கள் இருந்தோம். என் அண்ணாவும் திரும்பிப் போயாச்சு. இப்போத் தனியாக அனுப்ப மாட்டோம். கல்யாணம் ஆகி முதல்முறை வரும்போது இரண்டு பேரும் சேர்ந்து தான் வர வேண்டும் என என் மாமியார் சொல்லிட்டாங்க. புனாவிலிருந்து கடிதம் வரும் நாளை எதிர்பார்த்துக் காத்திருந்தேன். கடிதமும் வந்தது.
எல்லாரும் அடுப்பு, குமுட்டி, அம்மி, கல்லுரல் படங்கள் கேட்டிருக்காங்க. இரண்டு நாட்களாய் வீட்டில் வேலை, இன்னிக்கு வெளியே போயிட்டேன். படம் எடுக்கலை. எடுத்துப் போடறேன். நன்றி.
கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறையே
ReplyDeleteஅலாதி சுகம் தான். நாம் எடுத்துச்சொன்னால்தான் இந்த தலை
முறைகளுக்கு புரியும். அழ்கா
சொல்லியிருக்கீங்க.
மலரும் நினவுகள் அருமை. எண்ணங்களை சிறப்பாக வெளிப்படுத்தும் பாங்கிற்குப் பாராட்டுக்கள்.
ReplyDeleteUnga pathivu romba nanna irukku mami. naan innum old posts padikalai. appruam padikarane.
ReplyDeleteanbudan
Subha
வாங்க லக்ஷ்மி, சுகம்னு சொன்னாலும், அதை வெறுத்தவங்க அந்தக் காலத்திலும் இருந்திருக்காங்க. பொதுவாக நன்மை பயப்பது தான். ஆனாலும் நாம் நடந்து கொள்ளும் முறையும் இருக்கே! நன்றிங்க.
ReplyDeleteவாங்க ராஜராஜேஸ்வரி, பாராட்டுக்கு நன்றி.
ReplyDeleteஅதிசயமாய் வந்திருக்கும் சுபாஷிணிக்கு நன்றி. கிழிஞ்சது கிருஷ்ணகிரி. தொடர்பதிவுகள் முடியற சமயத்திலே வந்து ஆரம்பத்திலே இருந்து படிக்கப் போறீங்களா?? சரிதான். :P:P:P:P
ReplyDeleteகீதா மாமி உங்கள் கல்யாணமாம் கல்யாணம் ரொம்ப சுவையாக இருக்கிறது. என் அம்மா கூட சொல்லியிருக்கிறார்கள்.. மச்சினருக்கு 4 அ 5 வயதாக இருந்தால் கூட வாங்கோ! போங்கோ! என்று மரியதை கொடுக்க வேண்டுமாம் அந்த காலத்தில்.
ReplyDeleteவாங்க ராம்வி, நீங்க சொல்வது சரிதான். என் குட்டி மைத்துனருக்கும் அப்போது ஐந்து வயது தான். ஆனாலும் வாங்கோ, போங்கோ என்றே சொல்ல வேண்டும் என எதிர்பார்த்தனர். ஆனால் இந்த விஷயத்தில் எனக்குச் சரிப்பட்டு வரவில்லை. அதே என் கடைசி நாத்தனார் என்னை விட இரண்டு, மூன்று வயதே சின்னவள் அவங்களை இன்று வரை வாங்கோ, போங்கோ தான். :)))))
ReplyDeleteஆனால் மதுரையில்/அல்லது தென்மாவட்டங்களில் மன்னி என்பவளை உயர்ந்த ஸ்தானத்தில் வைப்பாங்க. சின்ன நாத்தனாரைப் பெயர் சொல்லிக் கூப்பிடலாம், அவங்க தவறுகளைச் சுட்டிக் காட்டலாம், மாமனார், மாமியாரோடு அவங்களைப் பற்றி விவாதிக்கலாம் இத்யாதி, இத்யாதி, தேசந்தோறும் பாஷை வேறு என்பது மட்டுமின்றிப் பழக்க, வழக்கங்களும் மாறுபடுகிறது. :))))))))))
சுவாரஸ்யமாகப் படிக்க முடிந்தது. நாத்தனார் மரியாதை பற்றிய பின்னூட்டம் படித்த போது நாத்தனார் -மாமியார் பற்றி பெண் குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே பல அனுபவக் கதைகள் சொல்லி ஒரு அவேர்ஷனையும் பயத்தையும் உருவாக்கி வரப்போகும் அந்த உறவுகளைப் பற்றி அவர்களுக்கு ஒரு fixed image உருவாக்கி விடுகிறோம் என்று தோன்றும்!
ReplyDeleteவாங்க ஸ்ரீராம், இந்த மரியாதை காட்டுவது எல்லாம் தஞ்சைப் பக்கமே அதிகமா இருக்குனு நினைக்கிறேன். என்றாலும் அங்கேயும் சில விதி விலக்குகள் உண்டு. அது போல் இங்கேயும் சில விதிவிலக்குகள் உண்டு. இது எல்லாமே மனித சுபாவங்களைப் பொறுத்தே அமைகின்றன இல்லையா?
ReplyDeleteஆனால் எங்க புகுந்த வீட்டில் மாமியார் (மாமனாரின் அண்ணா)அவங்க மைத்துனர் எதிரே பேசக் கூட மாட்டாங்க. அதையே என்னிடமும் எதிர்பார்த்தாங்க. அதே என் ஓரகத்தி என் கணவரோடு நல்லாப் பேசுவா. அவங்க என் மாமனாரின் நெருங்கிய உறவுப் பெண் தான். இதெல்லாம் நாம் எடுத்துக்கும் முறையில் இருக்கு. மேலும் இப்போது எல்லாமே தலைகீழாய் மாறி விட்டதே. இப்போல்லாம் அநேகம் பெண்களுக்கு மைத்துனரோ, நாத்தனாரோ இருப்பதே இல்லை. அதனால் இது குறித்து எந்தவிதமான கவலையும் வேண்டாம் இல்லையா??
கல்யாணமாம்...கல்யாணம்...
ReplyDeleteநீங்கள் கூறியதுபோல இடத்துக்கிடம் பழக்கவழக்கங்கள் மாறுபடும். இங்கு பிறந்த குழந்தையைக்கூட நீங்கள்,வாங்கோ.என்றுதான் அம்மா அப்பா கூட அழைப்பார்கள்.
வாங்க மாதேவி, நீங்க சொல்வது குறித்து நானும் அறிந்துள்ளேன். ஆசிரியர் கூட மாணவரை மரியாதையுடன் நீர், வாருங்கள், போங்கள் என்றே கூறுவார் என்பதையும் கேள்விப் பட்டிருக்கிறேன். ஸ்ரீலங்காவில் இருந்து இங்கே வந்து படித்த சிநேகிதிகள் இரண்டு, மூன்று பேர் உண்டு எனக்கு. அப்புறமாய் அவங்க பேச்சு இங்குள்ளதைப் போல் மாறிப் போனது. :)))))))))
ReplyDeleteகடிதம் வந்துடுச்சா!? அப்போ ஓவர் டூ புனோவா ;)
ReplyDeleteஇப்பவே கண்ணைக்கட்டுதே....அப்போ எப்படி?
ReplyDeleteஆஹா.. இந்த காப்படி, அரைப்படி, அரைக்காப்படி, மாம்படி(இது எவ்ளோன்னே இன்னும் தெரியாது :-)) எல்லாம் அம்மாவும், ஆச்சியும் எவ்ளோ சொல்லித்தந்தாலும், டம்ளர் கணக்குத்தான் எனக்கு ஞாபகம் வெச்சிக்க முடிஞ்சது.. இப்ப கொஞ்சம் தேறி கால் மற்றும் அரைப்படின்னா என்னன்னு புரிஞ்சிக்கற அளவுக்கு வந்திருக்கேன் :-)))
ReplyDelete// அப்போ புத்திசாலித் தனமாய் ஒரு வேலை செய்தேன்//
ReplyDeleteகை தட்டுகிறோம் :))))
//அந்த நேரம் ஆபத்பாந்தவளாய் வந்தார் என் இரண்டாவது நாத்தனார்.//
பரவா இல்லையே ;நீங்க கொடுத்து வைத்தவர் கீதாமா!
//அதே போல எங்க வீடுகளிலே பேசிக்கிறதும் ரொம்பவே எந்தவிதமான தயக்கம் இல்லாமல் பேசிப்போம். என் அம்மா எங்க பெரியப்பாக்கள் கூடவும், என் தாத்தா என் மாமிகளோடும் தாராளமாய்ப் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டுப் பேசுவார்.//
இது ஒருவகையில் சுதந்திர மனப்பான்மை மற்றும் எளிதாக அவர்களுடன் கலந்துரையாட முடியும்
தயக்கம் இல்லாமல் அவர்களிடம் பேசி தெளிவு படுத்தி கொள்ளவும் உபயோக படும்
பதிவுக்கு நன்றி கீதாம்மா
எப்படியோ சாதம் வடிச்சாச்சு:)
ReplyDeleteபுத்திசாலிப் பெண்ம் மன்னிக்கும மதுரைப் பக்கம் மதிப்பு ஜாஸ்திதான்.
எவ்வளவு மாற்றங்கலைகஸ் சந்தித்து இருக்கிறீர்கலள் கீதா. மிகாவும் அருமையான பதிவு.