அம்பிகை மஹிஷனை வதம் பண்ணி விட்டாள். அவள் வந்த வேலை முடிந்தது. இனி ஈசனோடு ஐக்கியம் ஆகவேண்டும். சிவசக்தியாகக் காட்சி தரவேண்டும். ஒரு சிலர் சிவனை வழிபடும் அன்னையாக சிவபூஜைக் கோலத்தில் அன்னையை அலங்கரிப்பார்கள். ஒரு சிலர் சரஸ்வதியாக வெள்ளைப் பட்டுடுத்தி வீணையைக் கையில் தாங்கி, அக்ஷமாலை, கமண்டலு, சுவடிகளோடு வெண்தாமரையில் அமர வைத்தும் அலங்கரிப்பார்கள். இவர்களில் யாராகவே இருந்தாலும் அன்னை கலைகளை ஆதரிக்கிறவள். லலிதா சஹஸ்ரநாமாவளியில் இரண்டு இடங்களில் அம்பிகையின் கலாஞானம் குறித்து வரும்."கலாவதீ கலாலாபா காந்தா காதம்பரீ-ப்ரியா" என்றும், "கலாத்மிகா கலாநாதா காவ்யாலாப - விநோதினீ" எனவும் அழைக்கப்படுகிறாள் அம்பிகை. அறுபத்து நான்கு கலைகளுக்கும் அவளே தலைவி. ஆகையால் நாம் கற்ற கலைகளை மறவாமல் நினைவுகொள்ளத் தக்க நாள் இன்றைய நாள் என்பதை நினைவில் கூரவேண்டும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கலையில் தேர்ந்தவர்களாக இருப்போம். அந்தக் குறிப்பிட்ட கலையை மறவாமல் இன்றைய தினம் நினைவூட்டிக்கொண்டு குருவுக்கு வந்தனமும் செய்ய வேண்டும். சிறு குழந்தைகளை முதன் முதல் படிப்பிக்கும் நாளும் இதுவே. சில குழந்தைகளுக்கு சங்கீதம், நடனம் போன்ற லளித கலைகளையும் சொல்லிக் கொடுக்க ஏற்ற நாளாகும். இன்றைய தினம் அக்ஷராப்பியாசம் செய்தால் நல்லது எனச் சொல்லப் படும்.
இன்றைய நிவேதம் தயிர் சாதம். சாதத்தைப்பால் விட்டுக் குழைய வடித்து வைத்துக்கொள்ளவும். அதிலே உப்புச் சேர்த்துக்கொண்டு, ஒரு டேபிள்ஸ்பூன் தயிரும், ஒரு டேபிள்ஸ்பூன் வெண்ணெயும் சேர்த்துப் பிசையவும். நல்லெண்ணெயில் கடுகு, பெருங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, கருகப்பிலை தாளிக்கலாம், பிடித்தமிருந்தால் காரட், வெள்ளரிக்காய், மாங்காயைப் பொடிப் பொடியாக நறுக்கிச் சேர்க்கலாம்.
உலகம் தோன்றிய நாள் தொட்டு சக்தி தான் அனைத்துக்கும் ஆதாரமாக இருந்து வருகிறது. அந்த சக்தியை மீண்டும் புதுப்பித்துக்கொள்ளும் ஒரு முயற்சி என்றும் இந்த நவராத்திரி தினங்களைச் சொல்லலாம். பழைய நண்பர்களைத் தேடிப் பிடித்துக் கண்டு பிடித்து நவராத்திரிக்கு அழைப்பது, கொலு வைப்பது, அதிலேயும் சிருஷ்டி எப்படி ஆரம்பித்தது என்பதற்கேற்ப கொலு பொம்மைகளை வைப்பது, நாம் அன்றாடம் பார்க்கும் நிகழ்வுகளில் இருந்து மூலக்கருவைத் தேர்ந்தெடுத்துப் பொம்மைகளை வைத்து அலங்கரிப்பது, நண்பர்களை வீட்டுக்கு அழைப்பது; வெற்றிலை, பாக்கு, பரிசுப் பொருள் அளித்து கெளரவிப்பது எனப் பல வகையிலும் நாம் நம்முடைய உறவைப் புதுப்பித்துக்கொள்கிறோம்.
நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் தமோ குணத்தைக் குறிக்கும் எனில் அடுத்த மூன்று நாட்கள் ரஜோ குணத்தைக் குறிக்கும். கடைசி மூன்று நாட்களோ நம் அறியாமை அகன்று, மூடத்தனம் ஓடிப் போய் ஞானம் பெறும் நாட்களாகின்றன. இது சத்வ குணத்தைக் குறிக்கும். ஒவ்வொருவருக்கும் அனைத்து குணங்களும் குறைவற இருந்தாலும், சந்தர்ப்ப சூழ்நிலைகளாலும், நம்முடைய நடவடிக்கைகளாலும் ஒவ்வொரு சமயம் ஒவ்வொரு குணம் மேம்பட்டு நிற்கிறது. நம்முடைய உணர்வு அல்லது பிரக்ஞை (எது சரியா வரும்?) தமோ குணத்தில் இருந்து ரஜோகுணத்தை ஊடுருவிச் சென்று கடைசியில் சத்வகுணத்தை அடைகிறது. சத்வகுணமே இருந்துவிட்டால் நன்றாகத் தான் இருக்கும். வாழ்க்கையில் வெற்றியும் பெற்றவர்களாவோம். ஆனால் அப்படி எல்லாம் நடப்பதில்லை என்பதே உண்மை. ஆனாலும் நாம் ஒரு வகையில் வெற்றி அடைந்துவிட்டோம் என்ற உண்மையை உணர்த்துவதற்காகவும் விஜயதசமி எனக் கொண்டாடுகிறோம்.
புராணங்களின்படியும் விஜயதசமி நன்னாளில் ராவண வதம் முடிந்து ஸ்ரீராமர் அயோத்தி வந்து முடிசூட்டிக்கொண்ட நாளாய்க் கருதப்படுகிறது. அர்ஜுனன் அன்றே தன் ஆயுதங்களை மறைத்து வைத்திருந்த இடத்தில் இருந்து வெளியே எடுத்து வழிபாடுகள் செய்து போருக்கு ஆயத்தமானான் எனச் சொல்லப் படுகிறது. அன்னை மஹிஷனை வதைத்து ஈசனோடு ஐக்கியமான நாள் எனவும் சொல்லப் படும். ஆக மொத்தம் விஜயதசமி முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும். மேலே சொல்லப்பட்ட மூன்று குணங்களையும் நமக்கேற்றவாறு வளைத்துக்கொண்டு சத்வகுணமே மேலோங்கி இருக்கிறாப்போல் செய்வதே விஜயதசமியின் உள்கருத்தாகும். நல்லவற்றுக்கும், கெட்டவற்றுக்கும் இடையே நடக்கும் இடைவிடாப் போரின் முடிவையே விஜயதசமி குறிக்கும். முழு உண்மை, சத்தியம், இங்கே பிரம்மம் என்று சொல்வது தகுமா தெரியலை; அது வெளிப்படையான இருமைத் தத்துவத்திலிருந்து ஒன்றாக ஆவதே ஆகும். இதற்குத் தான் அம்பிகை வழிபாடு. இங்கே நம் உள்ளத்தில் இடைவிடாது நடக்கும் போரையே உதாரணமாகச் சுட்டுகிறோம். ஆகவே நம்முடைய மனசாட்சியையே அம்பிகையாக நினைத்துக் கொண்டால், போதுமானது. என்ன பெயரில் இருந்தால் என்ன! இருப்பது ஒரே பரம்பொருளே; எந்தப் பெயரிட்டு அழைத்தும், அம்பிகையை வணங்கி அவள் அருளைப் பெறலாம்.
அந்த தேவி இருக்குமிடமோ சிந்தாமணி க்ருஹம் ஆகும். அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியான அம்பிகையின் சிந்தாமணி க்ருஹம் அனைத்துக்கும் அப்பால் அமிருத ஸாகரத்தின் மத்தியில் ரத்தினத் தீவில் அமைந்துள்ளது.
ஸுதா-ஸிந்த்தோர்-மத்த்யே ஸுரவிடபி-வாடீ-பரிவ்ருதே
மணித்வீபே நீபோபவனவதி சிந்தாமணி க்ருஹே
சிவாகாரே மஞ்சே பரமசிவ-பர்யங்க-நிலயாம்
பஜந்தி த்வாம் தன்யா: கதிசன சிதானந்த-லஹரீம்
ஆரமுதின் கடல் வேலி செழும் தரு
வாய் மணி பம்பிய தீவூடே
பாரகடம்பு அடர் கானில் அரும் கொடை
பாய் மணி மண்டப வீடுளே
கோரசிவன் பரமேசன் உன் மஞ்சம் ஓர்
கூர் பர்யங்கமெனா மேலே
சீர் அடரும் பரஞானம் உறும் களி
தேவர் அருந்துவர் பூமாதே.
கவிராஜ பண்டிதரின் தமிழாக்கம்
லலிதா சஹஸ்ரநாமாவளியில் அம்பிகையின் இருப்பிடம் ஆன ஸ்ரீ நகரம் குறித்த வர்ணனையில் “ஸுமேரு மத்ய ச்ருங்கஸ்தா ஸ்ரீமந்நகர நாயிகா, சிந்தாமணி க்ருஹாந்தஸ்தா பஞ்ச-ப்ரஹ்மாஸனஸ்திதா” என்று வரும். ஈசனுக்குக்கைலையும், விஷ்ணுவுக்கு வைகுண்டமும் போல ஸ்ரீலலிதைக்கு ஸ்ரீநகரம். ஆனாலும் இன்னொரு வாசஸ்தலமும் உண்டு அம்பிகைக்கு. அது தான் மேலே சொன்ன மேருவில் செய்யும் வாசம். பிரம்ம லோகம், விஷ்ணு லோகம், சிவலோகம் ஆகியவற்றுக்கு நடுநாயகமாக பிரதானமாய் இருக்கும் சிகரத்திலே அம்பிகையின் வாசஸ்தலமான மேரு எனக் குறிப்பிட்டிருக்கிறது. இதைத் தவிரவும் ஸ்ரீநகரம் எனப்படும் ஸ்ரீநகர வாசியாவாள் அம்பிகை. அந்த ஸ்ரீநகரத்தின் வர்ணனையைத் தான் இப்போது பார்க்கிறோம். மேருவில் இருக்கும் ஸ்ரீநகரம் அம்பாளின் ஆக்ஞையின் பேரில் விஸ்வகர்மா நிர்மாணித்தான் எனில் இது அம்பிகையே தனக்குத் தானே ஏற்படுத்திக் கொண்டது. இது அமிருத சாகரத்தின் மத்தியில் ஒரு தீவில் உள்ளது.
இந்த ஸ்ரீநகரத்தில் இருபத்தைந்து கோட்டைகள்,ஆவரணங்கள் எனப்படும் வெளிப்பிரகாரங்கள் இருபத்தைந்து. இவற்றில் இரும்பு, தங்கம், வெள்ளி, நவரத்தினங்கள் ஆகியவற்றாலும், பின்னர் மனம், புத்தி, அஹங்காரம் ஆகியவற்றாலும்சூரியன், சந்திரன், மன்மதன் ஆகியவர்களின் தேஜஸால் ஆன கோட்டை என உண்டு. இங்கே உள்ள கடம்ப வனத்தைத் தாண்டிச் சென்றால் பத்மங்கள் எனப்படும் தாமரை பூத்த தடாகத்திலே சிந்தாமணிக்கற்களைப் படியாகக் கொண்ட அரண்மனையிலே பஞ்ச பிரம்மங்களை (பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், ஈசானன்) நான்கு கால்களாகவும், சதாசிவனை மேல் பலகையாகவும் கொண்ட சிம்ஹாசனத்தில் காமேச்வரன் மடியில் அமர்ந்து கொண்டு லலிதாம்பிகை தர்பார் நடத்துகிறாள். இதுவே ஓங்கார மஞ்சம் அர்த்தம், மாத்திரை, பிந்து அ+உ+ம.
இந்தச் சிந்தாமணி க்ருஹம் என்பது என்ன?? சிந்தா என்பதெல்லாம் நம்முடைய சிந்தைகளே ஆகும். மணி நம்முடைய சிந்தை துர் சிந்தையாக இல்லாமல் பொறுக்கி எடுத்த முத்துக்களைப் போல மணியாக அமையப்பெற்று எப்போதும் அவள் நாமத்தையே ஓங்கார ஸ்வரூபத்தையே நம் சிந்தைக்குள்ளே குடி கொள்ளுமாறு பண்ணுவதே ஆகும். இதை யோக முறையில் சிந்தித்தால் நன்கு புரியும். வெளியே இருந்து இப்படிப் பட்டகிருஹத்திலா அம்பிகை வாசம் செய்கிறாள் எனக் கேள்வி கேட்பது சரியில்லை. இதை உள்ளார்ந்து கூர்ந்து கவனித்துக்கொண்டு பார்க்க வேண்டும். இவை அனைத்துமே நம் உடலை, நம்முள்ளே உறையும் சிந்தனைகளை, நம் உள்முக வழிபாட்டையே குறிக்கும். அங்கே சுத்தி, இங்கே சுத்திக் கடைசியில் நம்முள்ளே உறையும் அம்பாளை நாம் காணவேண்டும். இதைத் தான் அபிராமி பட்டர் கூறுகிறார்.
ஒன்றாய் அரும்பிப் பலவாய் விரிந்து இவ்வுலம் எங்குமாய்
நின்றாள், அனைத்தையும் நீங்கி நிற்பாள்என்தன் நெஞ்சினுள்ளே
பொன்றாது நின்று புரிகின்றவா; இப்பொருள் அறிவார்
அன்று ஆலிலையில் துயின்ற பெம்மானும் என் ஐயனுமே.
ஆதிசக்தி ஏகப் பரம்பொருள். இந்த ஏகப்பரம்பொருளானது, முதலில் ஒரே பொருளாகிய பராசக்தியாகத் தோன்றிப் பின்னர் பல்வேறு சக்திகளாய் விரிந்து இவ்வுலகத்தின் அனைத்திலும் நிறைந்து, பின்னர் அவற்றினின்றும் நீங்கியும் நிற்பாள். ஆனாலும் சக்தியானவள் ஒன்றே தான். இந்த ஒரே சக்தி என் நெஞ்சில் நீங்காது நிலை பெற்று நின்றிருக்கிறாளே, என் அம்மே, இது என்ன அதிசயமானதாய் இருக்கிறதே. இந்தப்பேருண்மையை உணர்ந்தவர்கள் வேறுயாரென்றால் இவ்வுலகம் அழியுங்கால் ஆலிலையில் துயின்றானே அந்தத் திருமாலும், உன் அருமைக்கணவன் ஆன என் ஐயன் ஈசனும் தான். இவர்கள் இருவருமே அறிவார்கள்.
நவராத்திரி, கொலு வைப்பது,விஜயதசமி நாளின் சிறப்பு ஆகியவற்றை பற்றி அழகாக விளக்கியுள்ளீர்கள் மாமி.
ReplyDelete//இவர்களில் யாராகவே இருந்தாலும் அன்னை கலைகளை ஆதரிக்கிறவள் ஆகையால் நாம் கற்ற கலைகளை மறவாமல் நினைவுகொள்ளத் தக்க நாள் இன்றைய நாள் என்பதை நினைவில் கூரவேண்டும். //
ஆம். கலைகளுக்கு உகந்த நாள் பற்றி அழகான விளக்கம்.
விஜயதசமி வாழ்த்துகள்.
ReplyDelete\\ புராணங்களின்படியும் விஜயதசமி நன்னாளில் ராவண வதம் முடிந்து ஸ்ரீராமர் அயோத்தி வந்து முடிசூட்டிக்கொண்ட நாளாய்க் கருதப்படுகிறது. \\
ReplyDeleteராவண வதம் விஜயதசமியா இல்லை ராமர் பட்டாபிஷேகம் விஜயதசமியா?
முன் வருஷத்திய வசந்த நவராத்திரியில் ஆரம்பித்த யுத்தம் 18 மாதம் நடந்து முடிகிறது.
அயோத்தி வரும் சமயம் கிட்டத்தட்ட தீபாவளி சமயம் (following அமாவாசை) ஆகி விடுமே (அப்பொழுது தீபாவளி என்ற ஒன்று இல்லாவிட்டாலும்).
இடைப்பட்ட 20 நாட்கள் இலங்கையில் இருந்து பரத்வாஜர் ஆஷ்ரமம் வந்து பின்னர் அயோத்யா வரும் கணக்கு சரியாய் வருமே.
வாங்க ராம்வி, நன்றிங்க.
ReplyDeleteமாதேவி வாழ்த்துகளுக்கு நன்றி.
ஶ்ரீநி, நீங்க சொல்வது சரியே. நான் ஒரு உதாரணமாகத் தான் எழுதினேனே தவிர, ஒவ்வொரு வருஷமும் விஜயதசமிக்குத் தான் தஷ் ஹரா எனப்படும் ராவண வதம் என்பது தெரியும். கருத்துக்கு நன்றி.
ReplyDeleteராமர் அயோத்திக்குத் திரும்பும் நாள் தான் தீபாவளி என உ.பி. மக்கள் சொல்வார்கள்.
அங்கே சுத்தி, இங்கே சுத்திக் கடைசியில் நம்முள்ளே உறையும் அம்பாளை நாம் காணவேண்டும்//
ReplyDeleteசரியாக சொன்னீர்கள்.
நலம்தரும் நவராத்திரி வழிபாட்டை உங்களுடன் சேர்ந்து நல்ல படியாக செய்தோம். அடுத்த ஆண்டும் அவ்வாறே செய்ய தேவி அருள் புரிவாள்.