இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகிறோம். சொந்த வீட்டை விட்டுட்டு வந்ததில் ஏகப்பட்ட மனக்கஷ்டங்கள், உடல் கஷ்டங்கள், பல்வேறு பிரச்னைகள் எதிர்கொள்ள நேர்ந்தது. தனியொரு குடும்பத்திற்கே சொந்த இடத்தை விட்டு இன்னொரு இடத்திற்குப் போவதில் இவ்வளவு சிரமங்கள் இருந்தால், ஒரு நாடும், அதன் மனிதர்களுமே முற்றிலும் புதியதொரு நாட்டிற்குக்குடி பெயர்ந்தால்?? அப்படித் தான் நம் கண்ணனும், யாதவர்களும் குடிபெயரப் போகின்றனர். நாட்டின் ஒவ்வொரு மனிதரும், சின்னஞ்சிறு குழந்தை, ஆடு, மாடு,குதிரைகள் கால்நடைகள் உட்பட மொத்தமும் காலி செய்து கொண்டு போக வேண்டும். நீர் நிரந்தரமாய்க் கிடைக்கும் யமுனை தீரத்தை விட்டுவிட்டு, பாலைவனத்தைக் கடந்து, பாதி பாலைவனம், கொஞ்சம் சுமாரான நிலம் என்றொரு பகுதிக்குப் போகவேண்டும். இந்த முடிவுக்கு அனைவரையும் கொண்டு வருவதற்குள்ளாக கண்ணன் பட்ட கஷ்டம்! அப்பப்பா! சொல்லி முடியாது. எத்தனை பேச்சுக்கள்! எத்தனை இகழ்ச்சிகள்! அவமானங்கள்! ஆனால் கண்ணன் அனைத்தையும் எதிர்கொண்டான். தன் மக்களின் நலம் ஒன்றே நினைத்தான். அதை நினைக்கையில் நானெல்லாம் எந்த மூலைக்கு என்று தோன்றுகிறது.
கொஞ்ச நாட்கள் முன்னர் கூடப் பதிவுலகை விட்டுட்டுப்போயிடலாமானு ஒரு யோசனை. சும்மா இணையத்தில் உட்கார்ந்து ஒரு சில குழுக்களின் மடல் பார்ப்பேன். ஒண்ணும் எழுதத் தோணாது. மனசே பாரமா இருக்கும். கண்ணன் கதை வேறே எழுதிட்டு இருக்கேன். இன்னும் முடியவில்லை. ஆனால் அதையும் பாதியிலே நிறுத்திடலாம்னு தான் இருந்தேன். அப்போத் தான் கண்ணன் கதையில் குறிப்பிட்ட ஒரு பகுதியைப் படிக்க நேர்ந்தது. படிச்சதும் என் மேலேயே எனக்கு வெட்கம் வந்தது. மனிதராய்ப் பிறந்த அனைவருக்கும் ஏதோ ஒருவிதத்தில் அவமானம் ஏற்படத் தான் செய்யும், தவிர்க்க முடியாத ஒன்று. ஆனால் நமக்கெல்லாம் ஏற்பட்ட, ஏற்படும், ஏற்படுகிற அவமானங்கள் ஒன்றுமே இல்லை. கண்ணன் பிறந்ததில் இருந்து அத்தனை அவமானப் பட்டிருக்கிறான். கண்ணனோ பிறந்தது சிறைச்சாலை எனில் இரவுக்கிரவே தாயைவிட்டுவிட்டு வேறு இடத்தில் வளர நேர்ந்தது. அங்கேயும் அவனைக் கொல்ல ஆட்கள் வந்து கொண்டே இருந்தனர். இடைக்குலத்தில் வளர்ந்தான். மாமனைக்கொன்ற பின்னர் ஜராசந்தன் அவனை ஓட ஓட விரட்டினான். இதற்கு நடுவில் கண்ணனை அனைவரும் இடையன் என்கின்றனர். இடைக்குலத்தில் பிறந்தவன் எனக் கேலி செய்வதோடு அவன் யமுனைக்குக் குளிக்க வருகையில் அவனோடு யாரும் பேசக் கூட அஞ்சினார்கள். பொது இடங்களில் அவனோடு சேர்ந்து காணப்படுவதற்கும் கூசினார்கள். அறவே கண்ணனைத் தவிர்த்தார்கள். அவன் சொந்த மக்களே இதைச் செய்தனர். ஆனாலும் கண்ணன் அவர்களை வெறுக்கவில்லை.
நேசித்தான். கண்ணன் நேசத்துக்கும், பாசத்துக்கும், அன்புக்கும், நேர்மைக்கும், உண்மைக்கும், சத்தியத்திற்கும் உறைவிடம். தர்மத்தின் வடிவானவன். தர்மத்தை நிலைநாட்டவெனத் தனக்கு நேர்ந்த இகழ்ச்சிகளை எல்லாம் பொறுத்துக்கொண்டான். ஆட்சிக்கட்டிலில் ஏறாமலேயே அரசன் ஆனான். துவாரகாதீஷ் என்றே அழைக்கிறோம். ஆனால் கண்ணன் ஒருநாளும் சிங்காதனத்தில் வீற்றிருந்து அரசாட்சி புரியவில்லை. ஒரு தொண்டனாகவே தன்னைக் காட்டிக் கொண்டான். சேவகனாய்க் காட்டிக் கொண்டான். ஊழியம் செய்தான். ஊழியம் செய்ய அஞ்சவில்லை; அதைத் தன் கடமை என நினைத்ததோடு ஈடுபாட்டுடன் செய்தான். கண்ணன் கதையைப் படிக்கப் படிக்க எத்தனை உண்மைகள் புரிகின்றன.
முதல்முறை தான் மதுராவில் இருந்தால் மக்களுக்கும், மற்றவர்களுக்கும், மதுராவுக்கும் ஆபத்து எனத் தெரிந்து கொண்டு வேறு இடம் போனான். இரண்டாம் முறையும் தன்னாலே ஏற்படப் போகும் ஆபத்து எனப் புரிந்து கொண்டு ஒட்டு மொத்தமாக யாதவக் குடிகளையே இடம் மாற்றினான். எவ்வளவு பெரிய பொறுப்பு இது! சகல வசதிகளும் நிறைந்திருக்கும் இந்தக் காலத்திலேயே ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடம் போகக் கஷ்டமாக இருக்கையில் அந்தக் காலத்தில் ஒரு நாட்டையே இடம் மாற்றுவது என்ன லேசா? கண்ணன் இட்ம் மாறப்போகிறான். வாருங்கள், கண்ணனைக் காண வாருங்கள்.
கண்ணன் பட்ட கஷ்டமும் அவன் 'பக்தர்கள்' படும் கஷ்டமும் நல்லாவே புரியுது கீதா!
ReplyDeleteவித்தியாசமான பார்வையில் கண்ணன்.அற்புதம் மாமி..
ReplyDeleteபடிக்கும் நல்ல விஷயங்களைப் பாடமாக கொள்ளுதல் வாழ்க்கையில் நிறைவை ஏற்படுத்தும். பல சமயங்களில் தோன்றாத் துணையாய் இருக்கும்.
ReplyDelete'கண்ணன் கதை'யுடன் இணைத்துச் சொன்னது பொருத்தமாக இருந்தது.
சுந்தர காண்டம் படித்தாலும் இப்படித்தான் தோன்றும். நம் துன்பங்கள் எல்லாம் எந்த மூலைக்கு என்று? அழகாகச் சொன்னீர்கள் அம்மா.
ReplyDeleteவாங்க துளசி, அபூர்வமாக் காத்து இந்தப் பக்கமா அடிக்குது போலே?
ReplyDeleteவாங்க ராம்வி, வித்தியாசமெல்லாம் இல்லைம்மா. உண்மையும் அதுதானே! அவன் படாத கஷ்டமா?
ReplyDeleteவாங்க ஜீவி சார், நீங்க சொல்வது சரியே. இப்போத் திருவரங்கன் உலாவைப் படிச்சு முடிச்சேன்; ரங்கன் எங்கே எல்லாம் காட்டிலும், மேட்டிலும், பள்ளத்திலும், மலை உச்சிகளிலும் ஒளிந்து, மறைந்து, உண்ண உணவில்லாமல் காட்டுக்கனிகளையும் கிழங்குகளையும் நிவேதனமாக ஏற்று, உடுக்க உடை இல்லாமல் கிழிசல் பீதாம்பரத்தை உடுத்தி, மறைந்து கொண்டு, மறைக்கப்பட்டு அந்நியக் கோயிலில் இடம் கொண்டு அவ்வப்போது கிடைக்கும் பூஜைகளை ஏற்றுக்கொண்டு அதற்கே மனம் மகிழ்ந்து!
ReplyDeleteபோதுண்டா சாமி! உனக்கே இந்தக் கதியா?
வாங்க கவிநயா, சுந்தர காண்டம் படித்தாலும் கண்ணீர் பெருகும்; உண்மையே. ஆனால் கண்ணன் பட்ட அவமானம், நல்லதே செய்யப் போய், நல்லதே நினைத்து, பெரும்பழி சுமந்து.........
ReplyDelete