வயோதிகம்! 500 வார்த்தைகளில், சாத்தியமா!by கீதா சாம்பசிவம்
வயோதிகம் என்ற தலைப்பிலே எழுத இன்னம்புரார் அனைவரையும் அழைத்திருக்கிறார். இதிலே வயோதிகர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டுமென்றால் நான் அந்த லிஸ்டில் இல்லை. என்னைப் பொறுத்த அளவில் வயோதிகம் என்பது மனதிலும் ஏற்பட்டாலே வயோதிகர் ஆகலாம். வெறும் உடல்மாற்றம் அல்ல. வயோதிகத்திலும் அழகாய் இருந்த எம்.எஸ். அம்மா, சந்திரலேகா, கம்பீரம் குறையாத இந்திரா காந்தி, அன்னை தெரசா, போன்ற எத்தனையோ பேர் உதாரணம் காட்டலாம். வயோதிகம் என்பது முதுமை, வயது ஒவ்வொரு வருடமும் கூடிக்கொண்டே போகப் போக உடலிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. தோலில் சுருக்கம், கண்பார்வையில் குறைபாடு, நடக்கையில் தள்ளாட்டம், உடல்நலக்கேடு அதிகமாதல் என்று சொல்லலாம். . வயதும் அதிகமாகி தனிமையாகவும் இருந்தால் மனத்தளர்ச்சியும் உண்டாகிறது. கவனிக்க யாருமில்லையே; நம்மை யாரும் லக்ஷியம் செய்யவில்லையே என்றெல்லாம் தோன்றுகிறது. இப்போது இந்தியாவிலும், குறிப்பாகத் தமிழ்நாட்டிலும் முதியோர் இல்லங்கள் வந்துவிட்டன. சில இல்லங்கள் கவனிப்பு நன்றாக இருப்பதாய்க் கூறினாலும் பெரும்பாலான இல்லங்களின் கவனிப்பு குறிப்பிட்டுச் சொல்லும்படியாக இல்லை. இதற்கு ராஜம் கிருஷ்ணன் அவர்களைச் சேர்த்திருக்கும் முதியோர் இல்லமே ஒரு சாட்சி. வயதான ராஜம் கிருஷ்ணன் அம்மையார் உறவினரால் ஏமாற்றப்பட்டு சொத்துக்களை இழந்து இன்று முதியோர் இல்லத்தில் திலகவதி ஐபிஎஸ் அவர்களால் சேர்க்கப்பட்டு தனிமை வாழ்க்கை நடத்தி வருகிறார். அங்கேயும் அவருக்கு மன அமைதி கிட்டவில்லை என ஒரு பேட்டியில் படிக்க நேர்ந்தது. வருந்தத்தக்க விஷயமே இதுதான்.
வயதானவர்களுக்குப் பெரும் சவால் கவனிக்க யாருமே இல்லாமல் போவதுதான். ஆகவே தனிமையைத் தவிர்க்க வேண்டும். கூடியவரையிலும் மனதை இளமையாக வைத்திருக்க வேண்டும். உடல்நலக்கேடு என்பது தவிர்க்க இயலாத ஒன்று. ஆனால் அதையும் வெற்றிகரமாக எதிர்கொள்ள வேண்டும். என் கணவரின் பாட்டி வயது முதிர்ந்த காலத்தில் கூடத் தனியாகச் சமைத்துச் சாப்பிட்டுக்கொண்டு இருந்திருக்கிறார். இதற்கு மனோபலம் வேண்டும். ஆகவே ஆன்மீக விஷயங்களில் ஈடுபாடு அதிகம் இருத்தல் நலம் பயக்கும். இது ஓரளவு மன வலிமையைக் கொடுக்கும். நல்ல புத்தகங்களைத் தேர்ந்தெடுத்துப் படிக்க வேண்டும். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பல நல்ல நிகழ்ச்சிகள் இருக்கின்றன. கோயில்களின் வரலாறு, பல நகரங்களின் வரலாறு போன்றவையும், மூளைக்கு வேலை கொடுக்கும் அறிவியல் புதிர்கள், தமிழ்ப் பழமொழி விளையாட்டு, இயன்றவரை எளிய தமிழில் பேசுவது; கல்வெட்டுக்கள் குறித்த ஆய்வு என எத்தனையோ பயனுள்ள நிகழ்ச்சிகள் இருக்கின்றன. அவற்றில் கலந்து கொள்ள வேண்டும். தினம் தினம் புதிது புதிதாய்க்கற்க வேண்டும். இதற்குத் தகுந்த எடுத்துக்காட்டு நம் இன்னம்புராரே தான். அவர் தினமும் புதிது புதிதாய் விஷயங்களைத் தேடி எடுத்துப் போட்டு நம்மை எல்லாம் படிக்க வைக்கிறார். அதற்கு எத்தனை உழைப்பு வேண்டும்! தளராத மனம் இருந்தாலே இது சாத்தியம்.
வயதால் பெரியவரே தவிர மனதால் அவர் என்றும் இளைஞரே. இத்தகைய நினப்பு அனைவருக்கும் இருக்க வேண்டும். மனத்தளர்ச்சி இல்லாமல் இருக்க தீனமும் யோக ஆசனப் பயிற்சி மேற்கொள்ளலாம். நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். சென்னையைப் பொறுத்தவரை சாலைகள் நடைப்பயிற்சிக்கு ஏற்றவை அல்ல. வேறு வழியில்லை. உணவில் கட்டுப்பாடு வேண்டும். உடலுக்கு ஏற்ற உணவுதான் உட்கொள்ள வேண்டும் . மேலும் நம் மனதும் உணவுப் பழக்க வழக்கங்களுக்கு ஏற்பவே செயல்படும் என்கின்றனர். ஆகையால் வயோதிகம் என்பது வயதில் மட்டுமே இருக்க வேண்டும். அது எந்நாளும் மனதைத் தாக்கக் கூடாது. நண்பர்களோடு கலந்து பழகுதல், இளைஞர்கள், இளம்பெண்கள் என அனைவரோடும் அவர்களைப் போலவே கலந்து பழகுதல் நல்லது. நாம் பெரியவர்கள் என்றவிதத்தில் ஒதுங்கி இராமல் அவர்களின் எண்ண ஓட்டங்களில் கலந்து கொண்டு சிந்தனைப் பகிர்வுகளைப் புரிந்து கொள்ள வேண்டும். வயதான கணவன், மனைவியாக இருந்தால் பிரிந்து இருப்பதைத் தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாத சமயங்கள் தவிர மற்ற நேரம் ஒருவருக்கொருவர் துணையாக இருத்தலே நலம். சிறு சிறு உதவிகளைச் செய்து கொள்ளலாம். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திருமணங்கள், நண்பர்கள் வீடுகள், கலை நிகழ்ச்சிகள், தல யாத்திரை செய்தல் எனச் சென்று வரலாம். அவை பற்றிய நினைவுகளை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம். எங்கே சென்றாலும் கூடியவரை இருவரும் சேர்ந்து செல்வதை வழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். இளமையில் விட முதுமையிலேயே ஒருவருக்கொருவர் துணை தேவை.
சமூகசேவைகள் செய்யலாம். நாம் இருக்கும் பகுதியின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற உரியவர்களை அணுகுதல், அதற்கான ஏற்பாடுகளைச் செய்தல், அல்லது இளைஞர்களுக்கு வழிகாட்டுதல், வீட்டிலேயே குழந்தைகள், பெரியவர்கள் போன்றவர்களுக்கு ஸ்லோக வகுப்புகள், பாட்டு வகுப்பு, ஆசனப்பயிற்சி கற்றுக்கொடுத்தல் என எந்நேரமும் நம்மை சுறுசுறுப்பாக வைத்திருக்கலாம். நாம் இளைஞராக இருந்தபோது எவ்வாறு நம் பெற்றோர் நம்மை ஒரு புரட்சியாளராக, புரட்சிகரச் சிந்தனைகள் உள்ளவராக நினைத்தார்களோ அவ்வாறே இப்போது நம் குழந்தைகள் நமக்குத் தோன்றலாம்; தோன்றுவார்கள். அதை அவர்கள் நிலையில் இருந்து புரிந்துகொள்ள வேண்டும். எல்லாவற்றுக்கும் மேல் மாமனாராக இருந்தால் உங்கள் மாப்பிள்ளையை நீங்கள் மாப்பிள்ளையாக இருந்த நிலையில் இருந்து பார்த்துப் புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் மகனை நீங்கள் மகனாக இருந்தபோது எவ்வாறு இருந்தீர்கள் என எண்ணிப் பார்த்துப் புரிந்து கொள்ள வேண்டும். இதில் மாற்றங்கள் இருக்கலாம். நாம் நம் பெற்றோர் சொல்லை மீறாமல் இருந்திருப்போம். ஆனால் இன்றைய சூழ்நிலையில் அது பெரும்பாலும் சாத்தியம் அல்ல. அதை அவர்கள் கோணத்தில் இருந்து பார்த்துப் புரிந்து கொள்ள வேண்டும்.
மாமியாரானால் மருமகளை நீங்கள் உங்கள் கணவரோடு எவ்வாறு வாழ விரும்பினீர்களோ அவ்வாறே வாழ விட வேண்டும். உங்கள் மகளுக்கு நீங்கள் உங்கள் கணவரை எவ்வாறு மதித்து மகிழ்வித்தீர்களோ அவ்வாறு இருக்கக் கற்றுக்கொடுங்கள். உங்களுக்கு ஏற்பட்டிருந்த கசப்பான அனுபவங்களைக் குழந்தைகளோடு கூடிய வரையில் பகிர்ந்து கொள்ளாதீர்கள். அவர்களாகத் தெரிந்து கொள்ள நேர்ந்தால் அதன் தாக்கம் குறைவாக இருக்கும். உங்கள் மூலம் செல்ல வேண்டாம். மகன், மருமகளுக்கிடையிலேயோ, மகள், மருமகனுக்கிடையிலேயோ சண்டைகள் நடக்கலாம்; நடக்கும். அப்போது நீங்கள் உங்கள் கண்கள், காதுகள், வாய் ஆகியவற்றை மூடிக்கொண்டு காந்தியின் மூன்று குரங்குகளைப் போல் இருத்தல் நலம். உங்களுக்கு அப்போது கண் தெரியாது; காது கேட்காது; வாய் பேசாது. பின்னரும் இது குறித்துத் தனியாக யாரிடமும் விமரிசிக்க வேண்டாம். அது இன்னமும் ஆபத்தானது. அப்படி ஒரு நிகழ்ச்சியையே மறந்துவிடுங்கள்.
ஒரு சிலர் பேரன், பேத்தியைக் கவனிக்கிறதை ஒரு சுமையாகக் கருதுகின்றனர். உடல்நலம் மிக மோசமாக இருந்தால் தவிர பேரன், பேத்தி கொடுக்கும் இன்பத்தை நழுவ விடவேண்டாம். புற்றுநோயாளியான என் அம்மா கீமோதெரபி எடுத்துக்கொண்ட நிலையிலும் நாங்க எவ்வளவோ தடுத்தும் என் மகளின் பூப்புநீராட்டலுக்குக் கிட்டத்தட்டப் பத்துப்படி அரிசியைப் புட்டுச் சமைத்தார். இது அன்பின் வெளிப்பாடு. பேரக் குழந்தைகளிடம் அன்பு இருந்தால் தவிர இது இயலாது. அப்பாவும், அம்மாவும் மகன்கள் , மருமகள்கள் ஆகியோரோடு கூட்டுக்குடும்பமாக இருந்தபோது காலைச் சமையலை அவரே சமைத்துக்கொண்டிருந்தார். தலைமுடி உதிர்ந்த நிலையிலும் வீட்டு விசேஷங்களில் ஆர்வமாய்க் கலந்து கொண்டு அனைவருக்கும் தனக்குத் தெரிந்ததை எடுத்துச் சொல்லுவார். பேரக்குழந்தைகளை இறைவன் உங்களுக்கு அளித்த மாபெரும் பரிசு என நினைத்து அன்பு பாராட்டுங்கள். அவர்கள் தேவைகளை நிறைவேற்றுங்கள். அவர்களுக்காக நீங்கள் உங்கள் உடல்நலம் கருதாமல் உழைத்தால் அதன் மூலம் உங்கள் மனம் பிரகாசிக்கும். மனதில் தோன்றும் மகிழ்ச்சி கலந்த பிரகாசம் உடலையும் நன்றாக வைத்திருக்கும்.
சமூகசேவைகள் செய்யலாம். நாம் இருக்கும் பகுதியின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற உரியவர்களை அணுகுதல், அதற்கான ஏற்பாடுகளைச் செய்தல், அல்லது இளைஞர்களுக்கு வழிகாட்டுதல், வீட்டிலேயே குழந்தைகள், பெரியவர்கள் போன்றவர்களுக்கு ஸ்லோக வகுப்புகள், பாட்டு வகுப்பு, ஆசனப்பயிற்சி கற்றுக்கொடுத்தல் என எந்நேரமும் நம்மை சுறுசுறுப்பாக வைத்திருக்கலாம். //
ReplyDeleteநீங்கள் சொல்வது எல்லாம் மிகவும் பயனுள்ளதாய் இருக்கிறது.
முதுமை என்பது வியாதி இல்லை முதுமையில் அழகாய் வாழ நல்ல கருத்துக்களைச் சொல்லி இருக்கிறீர்கள்.
இந்த பதிவை போனவாரம் வலைச்சரத்தில் பகிர்ந்து கொண்டேன்.
உடல் நலம், உளநலம் காப்போம் என்ற பதிவில் பகிர்ந்து கொண்டேன்.
உங்களுக்கு நன்றி.
இதை படித்தால் எல்லோரும் முதுமையை ரசித்து வாழலாம்.
கோமதி அரசு, எவராலும் கவனிக்கப்படாத இந்தப் பதிவைப் படித்துப் பின்னூட்டம் இட்டதற்கும், வலைச்சரத்தில் அறிமுகம் செய்தமைக்கும் நன்றி.
ReplyDeleteஇயன்றால் வலைச்சரத்தின் சுட்டி கொடுங்க. நன்றி.
ReplyDeletehttp://blogintamil.blogspot.com/2012/01/blog-post_04.html
ReplyDeleteவலைச்சரத்தின் சுட்டி.
முடிந்த போது பாருங்கள்.
நன்றி.
thedi pidichu parthu commentum potachu! :))))) thank you, thank you and Happy Pongal
ReplyDelete