எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, January 27, 2012

சுழிக்காற்றா? சுழல்காற்றா? 2

ராஜஸ்தானிலே சிறிய சுழல் காற்று என்ன? பெரிதாகவே வரும். அதுவும் கோடைக் காலத்தில் தான் வரும். ஆந்தி என்று சொல்வார்கள். மணல் வாரித் தூற்றும். ஒரு முறை நசிராபாத் ராணுவக் குடியிருப்புக்கு மாற்றலில் அப்போது தான் வந்தோம். அதற்கு முன்னர் இருந்திருந்தாலும் எங்க பையரும், பெண்ணும் விபரம் தெரிந்து அப்போது தான் வருகிறார்கள். ஒரு வாரம் கூட இருக்காது. இங்கே மாதிரி அங்கே அறிவிப்பெல்லாம் வராது. விண்ணைப் பார்த்து நாமே தெரிந்து கொள்ளலாம். அது போல் அன்று காலையிலிருந்தே ஆகாயத்தில் ஆந்தி வரக்கூடிய சூழ்நிலை தெரிந்தது. இங்கே மாதிரி அங்கே வந்துவிட்டு உடனே எல்லாம் போகாது. ஒருமணி நேரமாவது ஆகும். எப்போ வருமோ எனத் தெரியாமல் இதைக் குறித்துப் பேசிக் கொண்டிருந்தோம். எங்க பையர் அப்போது ரொம்ப போரடிக்குது; அதனால் கடைத்தெருவுக்குப் போய்க் கதைப்புத்தகம் வாங்கி வரேன்னு கிளம்பினார். வேண்டாம்னு நான் தடுத்தும் கேட்கவில்லை; என் கணவருக்கோ இப்படிக் குழந்தைகளை பயமுறுத்தக் கூடாது; எல்லாச் சூழ்நிலைக்கும் பழகணும்னு சொல்வார். ஆகவே அப்பாவோட அனுமதியோடக் கிளம்பியாச்சு.

கடைத்தெருவுக்கு அரைமணி நேர நடை தான் இருக்கும். பையர் சைகிளில் சென்றிருந்தார். சென்று பத்து நிமிஷம் தான் இருக்கும். ஆந்தி ஆரம்பித்துவிட்டது. மாலை நேரம். அங்கெல்லாம் மாலை எட்டுமணி வரை சூரியனார் மறைய மாட்டார். அப்போதோ மாலை நான்கிலிருந்து ஐந்து மணிக்குள்ளாகத் தான். பார்த்தால் மதியம் இரண்டு மணி போல் தோன்றும். செக்கச் சிவந்த வானிலிருந்து மேகங்கள் சூழ்ந்து கொண்டு சூரியனை மறைக்கச் சிவந்த நிறம் சூரியக் கதிர்களின்வழியே பூமியில் பிரதிபலிக்கக் காற்றுச் சுழன்று கொண்டு மணலை அள்ளிக்கொண்டு வந்து கொட்டிக்கொண்டிருந்தது. ரத்தம் போல் சிவந்த நிற மணலும் வாரிக் கொட்டிக் கொண்டிருந்தது. இப்போது இந்த ரசனையெல்லாம் தோன்றுகிறதே தவிர அப்போது என்ன தான் ஏற்கெனவே பழக்கமிருந்தாலும் மனதில் கலக்கமாகவே இருந்தது.

சற்று நேரத்துக்கெல்லாம் ஒரே கும்மிருட்டு. அதிர்ந்து போனோம். மின்சாரம் போய்விட்டது என்று நினைத்துக்கொண்டு மின் விளக்கைப் போட்டோம். மின்விளக்கு எரியவில்லைதான்; மின்சாரத்தை நிறுத்தி இருந்தார்கள். ஆனால் இவ்வளவு இருட்டு எங்கே இருந்து வந்தது? அதுவும் மாலை நான்கு, ஐந்து மணிக்கு? என் கணவர் எங்கே இருக்கார்னே எனக்குத் தெரியலை. கண்ணுக்குத் தான் ஏதோ ஆச்சுனு கத்திட்டேன். அவரோ எனக்கும் அப்படித்தான் இருக்கு; நீ எங்கே இருக்கேனு தெரியலைனு சொல்ல, எங்க பொண்ணும் அதை ஆமோதித்தாள். உடனே போய் விளக்கை ஏத்துவோம்னு நினைச்சு சாமி அலமாரியை நோக்கிச் செல்ல ஆரம்பித்தால் போகும் வழி தெரியவில்லை. சுவற்றில் முட்டிக் கொண்டேன். முட்டிக்கொண்ட சப்தம் கேட்டு என் கணவர் என்னனு கேட்க வழி தெரியலைனு நான் சொல்ல; அப்போத் தான் எல்லாருக்கும் உறைத்தது. ஆஹா, பையர் கடைத்தெருவிலே மாட்டிக்கொண்டிருக்காரேனு. பொண்ணு, "என் தம்பி"னு கத்த, "ஆஹா," னு கணவர் சொல்ல, "அடடா, அவனுக்கு வழி தெரியுமா? இங்கே பேசற ஹிந்தியைப் புரிஞ்சுப்பானா?"னு எனக்கு ஒரே கவலை. ஹிந்தி நல்லாப் பழக்கம்னாலும் ராஜஸ்தானின் வட்டார வழக்குப் புரியுமானு சந்தேகம்.

எல்லாத்துக்கும் வெளிச்சம் இருந்தால் தான். ஒருத்தர் கையை ஒருத்தர் கெட்டியாப் பிடிச்சுண்டோம். தட்டுத் தடுமாறிப் பெண்ணும், கணவரும் குரலை வைத்து நான் இருக்கும் திசைக்கு வந்திருந்தனர். அப்படியே ஒவ்வொருத்தரா நகர்ந்தோம். கிட்டத்தட்ட சாமி அலமாரி வந்தாச்சுனு தோணினதும் தீப்பெட்டியைத் தேடினேன்; துளாவினேன்; சிறிது நேரத்தில் கிடைத்தது. தீக்குச்சியைக் கிழித்தேன்; எரிந்த வாசனை என்னமோ வந்தது. ஆனால் வெளிச்சமே தெரியலை. யாருக்குமே தெரியலை. ஒண்ணும் புரியாமல் கந்த சஷ்டி கவசத்தைச் சொல்ல ஆரம்பித்தேன். கண்ணிலிருந்து கண்ணீர் கொட்டியது. ஒரு யுகம் என்று தோன்றிய அரை மணிக்குப் பின்னர் கொஞ்சம் வெளிச்சம் தெரிந்தது. மாலை மயங்கி அந்தியும், சந்தியும் கூடுமே; அது போலவா? அல்லது கருக்கிருட்டா? சொல்லத் தெரியலை. ஆனால் உள்ளங்கை தெரியுமளவுக்குத் தான் வெளிச்சம். அந்த வெளிச்சத்திலேயே என் கணவர் மெல்லப் பக்கத்துக் குடியிருப்புக்குப் போய் விஷயத்தைச் சொல்லி அங்கிருந்த அலுவலக நண்பரை அழைத்துக்கொண்டார். அப்போது என் கணவரிடம் வண்டி இல்லை; நண்பரிடம் வண்டி இருந்தது. ஆகவே இருவரும் வண்டியில் சென்றனர்.

செல்லும் வழி நெடுஞ்சாலை. ஆகவே வழியெல்லாம் வாகனப்போக்குவரத்து நின்றிருந்தது. திரும்ப நல்ல வெளிச்சம் வந்தால் தான் வாகனப் போக்குவரத்து ஆரம்பிக்கும். நல்லவேளையாகக் காவல்துறை பொறுப்பை எடுத்திருந்தது. இவர்களை நிறுத்தி விஷயத்தைக் கேட்க, இவர்களும் சொல்லி இருக்கிறார்கள். உடனே போக அனுமதி கொடுத்ததோடு அல்லாமல் நெடுஞ்சாலையில் செல்ல வேண்டாம் எனவும், கனரக வாகனங்கள் இருக்கும் என்பதால் குறைந்த வெளிச்சத்தில் சரியாய்த் தெரியாது என்பதால் பக்கத்திலுள்ள இன்னொரு உபசாலை மூலம் செல்லுமாறும் கூறி இருக்கிறார்கள். எங்கள் குடியிருப்பிலிருந்து நடந்தே போகக் குறுக்கு வழி உண்டு. இந்தச் சாலை அங்கே சென்று முடியும். குறுக்கு வழியில் இந்த இருட்டில் வண்டி செல்ல முடியாது என்பதாலேயே இவங்க நெடுஞ்சாலையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இவங்க அங்கே போகையிலேயே எதிரே உள்ளூர்க்காரர் ஒருத்தரோடு எங்க பையர் வருவதைப் பார்த்துவிட்டார்கள். பையர் கடைத்தெருவுக்குப் புத்தகக் கடையில் இருக்கையிலேயே ஆந்தி ஆரம்பித்து இருக்கிறது. கடைக்காரர் பையர் புதுசு எனப் புரிந்து கொண்டு அப்போது போகாதே எனத் தடுத்து நிறுத்திவிட்டுக் கொஞ்சம் வெளிச்சம் வந்ததும் கடைப்பையரைக் கூட அனுப்பிக் குடியிருப்பு வரை கொண்டு விடச் சொல்லி இருந்திருக்கிறார். இவங்க வழியிலேயே பார்த்துட்டாங்க.

அலுவலக நண்பரோடு பையர் வண்டியிலே வந்து சேர, என் கணவர் பின்னால் நடந்து வந்தார். அதுக்கப்புறமாப் பல ஆந்திகளைப் பார்த்தாச்சு. ஆனால் இந்தக் காலி ஆந்தி அங்கு இருக்கும்வரையிலும் அதன் பின்னர் வரவே இல்லை. மறுநாள் செய்தித் தாள்களில் அறுபது வருடத்திற்குப் பின்னர் அந்த வருடம் காலி ஆந்தி வந்ததாய்ப் போட்டிருந்தார்கள்.

Thursday, January 26, 2012

சுழிக்காற்றா? சுழல்காற்றா?

இரண்டு நாட்களாவே இதைப் பத்தி எழுத நினைச்சு எழுத முடியலை. இணையத்தில் அமரும் நேரமே குறைந்து விட்டது. வந்து நாலு மெயிலைப் படிச்சுட்டுப் போனாப் போதும்னு ஆயிடுது. கடந்த வாரம் சனிக்கிழமை மதியம் இங்கே திடீர்னு அபாய அறிவிப்புச் சங்கு ஊதியது. என்னனு புரியலை. பொண்ணு வேலைக்குப் போயிட்டா. வீட்டிலே நாங்க தான். அப்புறமா அதைக் குறித்துக் கேட்கத் தோன்றவில்லை. ஞாயிறன்று இரவு உணவு முடித்துக்கொண்டு படுத்துவிட்டோம். அப்புவும் என்னைத் தூங்க வைச்சுட்டுப் போயாச்சு. திடீர்னு மறுபடி சைரன் ஊதியது. இம்முறை நிற்காமல் தொடர்ந்து ஊதிக்கொண்டே இருக்க என்னனு புரியலையேனு நினைச்சோம்.

அப்போப் பொண்ணு உள்ளே வந்து டொர்னடோ அபாய அறிவிப்புச் சங்கு ஊதறாங்க. டொர்னடோ வரப் போகுது. ஜன்னல் வழியா உள்ளே வந்தால் அப்படியே தூக்கிக் கொண்டு போய் உங்களை இந்தியாவிலே விடுதோ இல்லை, சமுத்திரத்தில் போடுதோ சொல்ல முடியாது. எழுந்து வாங்கனு கூப்பிட்டா. சரியா ஜன்னலுக்கு நேரே நான் படுத்திருந்தேன். நம்ம வெயிட்டைத் தூக்க அதால முடியுமானு நான் நினைக்க, உன்னை மாதிரிப் பத்துப்பேரைச் சேர்த்தாப்போல் வீட்டோட தூக்கிட்டுப் போகும். தூக்கிட்டுப் போறச்சேயே தயிர் கடையறாப்போல் உன்னை மத்தாக நினைச்சுக் கடையும்; பரவாயில்லையானு கேட்க, வம்பே வேண்டாம்னு வெளியே வந்தோம்.

மாடிப்படி தான் பாதுகாப்புனு(பேஸ்மென்ட்(தரைத்தளம்) தான் பொதுவாய்ப் பாதுகாப்பு; இங்கே பெரும்பாலான வீடுகளில் பேஸ்மென்டே இல்லை) அங்கே உட்காரச் சொன்னா. சினிமாத் தியேட்டரில் உட்கார்ந்துக்கறாப்போல் எல்லாரும்வரிசையா உட்கார்ந்தோம். அதுக்குள்ளே பெண்ணும், மாப்பிள்ளையும் முக்கியமான எலக்ட்ரிக், எலக்ட்ரானிக் சாதனங்களின் மின் இணைப்பைத் துண்டித்துவிட்டு ஒரே ஒரு மினி டிவியை மட்டும் சூடான செய்திகளுக்கப் போட்டார்கள். இதற்கு பாதிப்பு வந்துடாதா? டிவி ஓடலாமானு கேட்டேன்; டொர்னடோ இந்தப் பக்கம் திரும்பும் சிக்னல் கிடைச்சதும் டிவி தானே நின்னுடும்; இதற்கான சிக்னலை நிறுத்திடுவாங்க. எல்லார் வீட்டிலும் டிவி மட்டும் ஓடும்; இப்போக் கவுன்டியிலே இருந்து தொலைபேசியில் கூப்பிட்டு எச்சரிக்கை கொடுப்பாங்கனு சொன்னா.

கவுன்டி என்பது நகர நிர்வாகம்னு நினைக்கிறேன்; அவங்களுக்கும் இது குறித்துச் சொல்லத் தெரியலை. ஆனால் அப்படித்தான் கிட்டத்தட்ட என்றார்கள். அபார்ட்மென்ட் குடியிருப்புகளுக்கு டொர்னடோ எச்சரிக்கை கொடுப்பது அந்த அந்தக் குடியிருப்பு வளாகத்தின் அலுவலகத்தைச் சார்ந்ததாம். இம்மாதிரித் தனி வீடுகளுக்கு மட்டும் கவுன்டியில் இருந்து எச்சரிக்கை செய்வார்களாம். அதே போல் தெருவில் அப்போது செல்லும் வண்டிகள் அனைத்துக்கும் பாதுகாப்பாக ஒரு இடம் சொல்லி அங்கே போய் இருக்கச் சொல்லிவிடுகிறார்கள். அந்த இடத்துக்குக் குறிப்பிட்ட நேரத்துக்குள் வண்டி போகவேண்டும் என்பதால் டொர்னடோ வருவதற்கு அரைமணி, ஒரு மணி முன்பே இதெல்லாம் ஆரம்பம்.

அன்று இரவு பத்தேமுக்காலுக்கு டொர்னடோ மெம்பிஸின் இந்தக் காலியர்விலைக் கடந்தது. முதலில் இங்கே வரலைனு சொல்லிட்டாங்க. டொர்னடோ உடனே மிரட்டல் செய்தியை அனுப்ப, பயங்கர வேகத்தில் வருது; தப்பாய்ச் சொல்லிட்டோம், மன்னிச்சுக்குங்கனு மீண்டும் மீண்டும் தொலைபேசியில் செய்தி வந்து கொண்டே இருந்தது. வெளியே பயங்கரமான மின்னல் , இடி,இவற்றோடு காற்றின் சப்தமும். எனக்கோ வெளியே போய்ப் பார்க்கணும்; படம் பிடிக்கணும்னு ஆசை. கதவை எல்லாம் திறக்க முடியாது. கதவு பூட்டி இருந்தாலே டொர்னடோ உள்ளே வரும்; திறந்தால் வீடே இருக்காதுனு சொல்லிட்டாங்க. ஆசையை அடக்கிக் கொண்டேன். வந்த சுவடு தெரியாமல் இங்கே இருந்து போயிட்டது. அது போயிடுச்சுங்கறதுக்கு ஒரே அடையாளம் மறுபடி தொலைக்காட்சிப் பெட்டி இயங்க ஆரம்பித்தது தான். தொலைக்காட்சிப் பெட்டியை அணைக்கவே இல்லை. டொர்னடோ போனதும் மறுபடி இணைப்பு வந்துவிட்டது. அதுக்குள்ளே இங்கே உள்ள ஜெர்மன் டவுன் என்னும் பகுதியில் பயங்கரமான சேதம் என்னும் தகவல்களும் வந்து விட்டது.

இவற்றில் என்னைக் கவர்ந்த விஷயம் சரியான சமயத்தில் நிர்வாகத்தினரின் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளும். கொஞ்சமும் கலவரம் இல்லாமல் சகஜமாகக் கையாண்டவர்களும் ஆவார்கள். நாம் கற்றுக்கொள்ளவேண்டியது இவை எல்லாமும் தான். இந்தக் கலாசாரத்தையோ, உணவையோ, உடையையோ அல்ல. புரிதலுக்கு நன்றி. பாதிப்பு அடைந்த ஜெர்மன் டவுன் சகஜ நிலைக்குத் திரும்பிவிட்டது இரண்டே நாட்களில்.

Tuesday, January 24, 2012

புத்தம்புதிய அப்பு டேட்ஸ்!

அப்பு டேட்ஸ்:

நேத்திக்குச் சாயந்திரமா அப்புவுக்குக்கொறிக்க அவ அம்மா பிஸ்கட் கொடுத்துட்டு இருந்தா. அப்போ தாத்தாவுக்குக் கொடுனு ஷுகர் ஃப்ரீ பிஸ்கட்டை அப்பு கிட்டே கொடுத்துக் கொடுக்கச் சொன்னா. அப்பு தனக்கும் அதுதான் வேண்டும்னு கேட்டது. அவ அம்மா கொடுக்க மாட்டேன்னு சொன்னா. அது தாத்தாவுக்கு மட்டும்னு சொல்லிட்டா. உடனேயே அப்பு, பாட்டிக்கு மட்டும் கொடுக்கிறயே அதையேனு கேட்க, அவ அம்மா because she is patti னு சொன்னா. அப்பு கொஞ்ச நேரம் யோசித்தது.

Mommy, then those things are especially for thatha and patti?

yes darling,

Mommy, then will you buy me those snacks when I become thatha????

LOL!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Monday, January 23, 2012

தாலாட்டுப் பாடவா!

அப்புதான் தினம் என்னைத் தூங்க வைக்கிறது. ராத்திரி வேலை எல்லாம் முடிச்சுட்டுப்படுக்க வந்தால் உடனே go, brush your teethனு சொல்லும். கொஞ்ச நேரம் உட்கார்ந்துக்கறேனே அப்படினு சொன்னால் உடனே ஓகே, ஜஸ்ட் டென் மினட்ஸ்னு சொல்லும். அப்புறமா உடனடியாகப் போ, பல்லைத் தேய்ச்சுட்டு வா னு பிடுங்கல் தான். விடாது. :)))) பல்லைத் தேய்த்துட்டு வந்ததும், உடனே வின்டர் லோஷனைக் கொடுத்துப் போட்டுக்கோனு சொல்லும். கூடவே you have to apply on your own, be carefulனு எனக்கு எச்சரிக்கையும் கிடைக்கும்.

அது முடிஞ்சதும் எனக்குத் தூக்கம் வருதோ இல்லையோ படுத்துண்டே ஆகணும். உடனே கம்ஃப்ர்டரை எடுத்துப் போர்த்திவிடும். கம்ஃபர்டரை அதால் தூக்கக் கூட முடியாது. முக்கி, முனகிக் கொண்டு எடுத்துப் போர்த்தும். அதன் நான்கு முனைகளும் சீராக இருக்கணும். கட்டில் மேல் ஏறி என்னை மிதித்துக்கொண்டு அந்தப் பக்கம் போய் கம்ஃபர்டரை ஒழுங்காய்ச் சீராகப் பரப்பும். என்னோட கைகள் வெளியே தெரிஞ்சால் போதும், உடனேயே cover your hands properly, or you'll get freezeனு சொல்லும். எல்லாம் முடிஞ்சாச்சு. இப்போ நான் தூங்கப் போயாகணும். கோ டு ஸ்லீப் னு சொல்லும்.

முழிச்சிண்டு இருந்தா உடனேயே போய் அதோட டே கேர் கதைப் புத்தகத்தை எடுத்துக்கொண்டு வரும். Listen, I am reading you bedtime storiesனு அந்தப் புத்தகத்தில் அது புரிந்து கொண்ட கதையைச் சொல்லும். அப்படியும் தூங்கறாப்போல் நான் பாவனை கூடச் செய்யலைனா, உடனே Ok, I'll sing you lullaby, do you like lullaby? னு கேட்டுக்கும். நான் சரினு சொன்னதும், ட்விங்கிள், ட்விங்கிள் லிட்டில் ஸ்டார் னு பாட ஆரம்பிக்கும். It is not a lullaby, it is rhyme னு சொன்னா கண்ணில் தண்ணீர் எட்டிப் பார்க்க ஆரம்பிக்கும். No, it is night time. see there are stars in the sky. so we have to sing twinkle twinkle little star onlyனு சொல்லும். அப்படியும் நாம தூங்கலைனா/தூங்கறாப்போல் பாவனை செய்யலைனா குழந்தைக்கு நிஜம்ம்மாவே அழுகை வரும். பாவம்! அழுது கொண்டே அவ அம்மா கிட்டேப் போய் ask patti to sleep. she is very naughty. னு சொல்லும். குழந்தைத்தனம் அப்போது தான் தன்னையறியாமல் வெளியே வரும். அதுவரைக்கும் பெரிய மனுஷத்தனமாக எனக்கு அம்மா போல் உத்தரவு போட்டுக்கொண்டிருந்தது. தன்னை அறியாமல் தான் குழந்தை என்பதை வெளிப்படுத்தும்.

ஆனால் இயற்கையின் இந்த அதிசயம் நினைத்தால் ஆச்சரியம். பெண் குழந்தைகள் மட்டுமே இப்படித் தூங்க வைப்பது; சாப்பிட வைப்பது என விளையாடுகிறது. எனக்குத் தெரிந்து இதை யாரும் சொல்லிக் கொடுத்ததாய்த் தெரியவில்லை. தங்களுக்கு அம்மா செய்வதை அப்படியே திரும்பச் செய்கின்றன. அதே ஆண் குழந்தைகளுக்கு இந்தப் பொறுமை இருப்பதில்லை. இன்றளவும் பார்த்து வியந்து கொண்டிருக்கும் ஒரு விஷயம் இது.

ஜெய்ஹிந்த்!

Sunday, January 15, 2012

பொங்கல் கால நினைவலைகளே!

பொங்கலைப் பத்தி எழுதச் சொல்லி எல்லாரும் கேட்டிருக்காங்க. பொங்கல் சாப்பிடத் தான் தெரியும்னு நினைக்கவேண்டாம். செய்யவும் தெரியும். அதுவும் முழுக்க முழுக்கப் பாலிலேயே வேக வைத்த பருப்பும், அரிசியும், வெல்லமும் நெய்யும் சேர்த்து. நிறைய மு.ப. தி.ப. போட்டு. ஆகவே இப்போ எழுதப் போறது பொங்கல் திருவிழாவின் சில நினைவுகள். ஹிஹிஹி, அதான் கேட்டோம்னு சொல்றீங்களா, தெரியுமே. கொஞ்சம் வம்பு பண்ணிட்டு எழுதலாம்னு தான்! J)))))


எனக்கு நினைவு தெரிஞ்சு நான் நவராத்திரிக்கு உடம்பு வந்து படுத்தால் தீபாவளி கழிச்சுத் தான் எழுந்திருப்பேன். படுக்கையிலேயே கொண்டாடிய பல தீபாவளிகள் உண்டு. ஆகவே பொங்கல் தான் நான் முழுமையாகச் சின்ன வயசிலே கலந்து கொண்ட பண்டிகைனு சொல்லலாம். பொங்கலுக்கு முன்னர் வெள்ளை அடிக்கிறதை அப்பா, அண்ணா, தம்பிகள் செய்வாங்க. வாசல் திண்ணைக்குக் கீழே உள்ள சுவரில் காவிப் பட்டையும் சுண்ணாம்பும் அடிச்சுடுவாங்க. அம்மாவுக்கும், எனக்கும் சாமான்களை எடுத்து வைக்கிறதிலேயே சரியாயிடும். போகி அன்னிக்கு இந்த போகி கொட்டறதுனு ஒண்ணு இருக்கே பறை போன்றதொரு சின்னக் கொட்டுக் கொட்டறாங்க. அதெல்லாம் எனக்குச் சென்னைக்குக் குடித்தனம் வந்தப்போ கூட அவ்வளவா தெரியாது. ஏனென்றால் எங்கேயோ ஒரு சில இடங்களில் மட்டுமே அது இருந்திருக்கு. அதிகமாய் நகரப்பகுதிகளில் இருந்திருக்க வேண்டும். அதே போல் குப்பையை எரிப்பதும் சென்னையில் இப்போது போல் அப்போ இருந்ததில்லை. ஆகவே இந்த வழக்கங்களே சென்னை வர வரைக்கும் தெரியாது. மதுரையிலே அன்னிக்குக் காலம்பரவே எழுந்து அம்மா பெரிய பெரிய கோலங்கள் போட்டிருப்பாங்க. ரொம்பச் சின்னப் பொண்ணா இருந்தப்போ காலம்பர எழுந்து விதவிதமான கோலங்களைப் பார்த்தப்போ, இந்த அம்மாக்களெல்லாம் தூங்கவே மாட்டாங்க போல; நாமளும் பெரியவளா ஆனா இப்படித் தான் இருக்குமோ; பெரிய பெண்ணாகவே ஆகக் கூடாதுனு நினைச்சுப்பேன். கொஞ்சம் ஆச்சரியமா இருக்கும். அம்மா எப்போ எழுந்து, எப்போ கோலம் போடறானு புரியாது. அப்புறமாய்ப் புரிஞ்சது. J


அப்போது மேல ஆவணிமூலவீதியின் இருபக்கங்களிலும் சொந்த வீட்டுக்காரர்களே அதிகம் வசித்ததோடு குடித்தனம் இருந்தவங்களும் சேர்ந்து நடைபாதை முழுதும் கோலங்களால் நிறைத்திருப்பாங்க. ஒவ்வொரு வீட்டிற்கும் சில, பல படிகள் ஏறியே மேலே போகணும். திண்ணைகளெல்லாம் கோலங்கள் காணப்படும். கலர் போட்டெல்லாம் அப்போது அதிகம் காணமுடியாது. அரிசிமாவு அல்லது வெள்ளைக்கல் மாவுக் கோலங்களே. பொங்கல் அன்னிக்கு எல்லாருமே பொங்கல் பானையில் பால் ஊற்றுவோம். தம்பியும், நானும் தொண்டை வலிக்குமளவுக்குப் பொங்கலோ பொங்கல்னு கத்துவோம். வழக்கம்போல் அப்பாவோட திட்டு எனக்கு மட்டும். பொண்ணாப் பிறந்துட்டு அடக்கமில்லாமல் தெருவெல்லாம் கேட்கறாப்போல் கத்தறது பார்;அப்படினு சொல்லுவார். அதையெல்லாம் கண்டுக்கறதே இல்லை. துடைச்சு விட்டுட்டுப் புதுப்பாவாடை, ப்ளவுஸ் போட்டுக்கொண்டு பூஜைக்குத் தயாராவேன். கோலமெல்லாம் நான் தான் போடுவேன். அம்மா சொல்லித் தருவாங்க. கிழக்குத் திசையில் சூரியன் கோலம் போட்டுத் துணைக்கோலங்களும் போடுவேன். இந்த சூரியன் கோலம் போடுகையில் நாம் மேற்கே அமர்ந்து கிழக்கே சூரியனைப் பார்க்கிறாப்போல் போடவேண்டும். சூரியனின் முகம் நம்மைப்பார்த்து இருக்கும்படி போடவேண்டும். கிணற்றடியில் தான் பூஜை. நாங்க குடியிருந்த வீடுதான் என்றாலும் எல்லா வீடுகளிலும் இம்மாதிரிக் கொல்லை ஒன்று கிடைத்துவிடும். ஆகவே பூஜைக்கு வசதி. சில சமயம் அதிசயமா சாஸ்திரிகள் வருவார் பூஜை பண்ணி வைக்க. பலசமயங்களும் அப்பாவே பூஜையைப் பண்ணிவிடுவார். பொங்கலை விட எனக்கு உளுந்து வடை மேலேயே கண் இருக்கும். பொங்கலுக்கு மறுநாள் கனுவன்னிக்கு அக்கம்பக்கம் இருக்கும் எல்லா வீடுகளுக்கும் போய் மஞ்சள் கீறிக்கப் போவேன்.


முதல்லே அம்மா தான் கீறிக் கொண்டு எனக்கும் கீறிவிடுவாங்க. பின்னர் குடித்தனம் இருக்கும் வீட்டுப் பெண்கள், பெரியப்பா வீடுகள், சிலசமயம் தாத்தாவீடு என்றெல்லாம் போவதுண்டு. கூடத் துணைக்கு அண்ணாவும், தம்பியும் வருவாங்க. எல்லா வீட்டிலேயும் மஞ்சள் கீறிவிட்டுட்டு வெற்றிலை, பாக்கோடு நாலணா வைத்துக்கொடுப்பாங்க. கிட்டத்தட்டப் பத்து வீடானும் போவேனா! காசு சேரச் சேர ஒரே உற்சாகம் தான். பின்னே! நாலணா என்ன சின்னத் தொகையா? அண்ணா, தம்பிக்கெல்லாம் கிடைக்காது. சில வீட்டில் ரவிக்கைத் துணி கொடுத்துடுவாங்க. சப்புனு போயிடும். சிலர் வெற்றிலை, பாக்கில் கரும்புத்துண்டுகளோடு நிறுத்துவாங்க. மனசுக்குள் அல்பம்னு நினைச்சுப்போம். எங்க அப்பாவோட சித்தி வீட்டில் ஒரு ரூபாய் வெள்ளிக்காசு கொடுப்பாங்க. நாங்க வரும்போது மூணு பேரும் அப்பாவிடம் சொல்லக் கூடாதுனு பேசிப்போம். ஆனால் உள்ளே நுழைந்ததும் அப்பா கேட்பதற்கு முன்னாலேயே சொல்லிடுவோம். அந்த வெள்ளிக்காசை மட்டும் அப்பா வாங்கி வைச்சுப்பார். மிச்சத்தைப் பங்கு போட்டுப்போம். பின்னே? அண்ணாவும், தம்பியும் துணைக்கு வராங்க இல்லை? அவங்களுக்கும் பங்கு கொடுக்கணுமே. அப்புறமா அந்தக் காசில் எந்தக் கோட்டையைக் கட்டலாம்னு ஒரு டிஸ்கஷன் நடத்திப்போம். இப்படியாக எங்கள் சின்ன வயசுப் பொங்கல் உற்சாகமாகவே கழிந்தது. அம்மாவும் நானுமாக் கனுப்பிடி வைப்போம். கூடவே குடித்தனக்காரர்களும் ஒவ்வொருத்தரா வந்து வைப்பாங்க. மொட்டை மாடியில் ஒரே கூட்டமாகத் தான் வைப்போம். காக்காய்க் கூட்டமெல்லாம் எங்க கூட்டத்தில் வரவே வராது! :)))) இப்போ நான் தன்னந்தனியாகக் கனுப்பிடி வைக்கையில் மதுரையில் வைத்தது, கல்யாணத்துக்கு அப்புறமாப் புக்ககத்தில் எல்லாரும் சேர்ந்து வைத்தது என எல்லாம் நினைவில் வரும். அதோடு மட்டுமா? அப்போ குடித்தனம் இருக்கிறவங்க வீடுகளின் சாப்பாடோடு, பெரியப்பா வீடுகளில் இருந்தும் சாப்பாடு வரும். எங்க வீட்டிலே இருந்தும் அவங்க வீடுகளுக்கெல்லாம் போகும். எல்லாச் சாப்பாட்டையும் விமரிசித்துக்கொண்டே சாப்பிட்டிருக்கோம். கனுவன்று மாலையில் யார் வீட்டில் புதுசாக் குட்டிப் பாப்பா பிறந்திருக்கோ அந்தப் பாப்பாவுக்குக் காசு, இலந்தைப்பழம், கொழுக்கட்டை, கரும்புத்துண்டுகள் நிறைநாழியில் வைத்துக் குழந்தையை அதன் மூத்த இன்னொரு குழந்தையின் மடியில் உட்கார்த்தி வைத்துக் கொட்டுவாங்க. (சுமங்கலிகளுக்கு வெற்றிலை, பாக்கு வைச்சுக் கொடுப்பாங்க. வெற்றிலை,பாக்கு ஒர் மஞ்சள் பெட்டியில் தான் வைச்சுக் கொடுப்பாங்க. இப்போ மாதிரி விதவிதமான ப்ளாஸ்டிக் வகையறாக்கள் இல்லை. ஓலைப்பெட்டி அது. ஆனால் சொல்கையில் மஞ்சள் பெட்டினு சொல்வோம்.) அதோடு காசும் போடுவதால் அந்தக் காசைப் பொறுக்கவும் போவேன். அணாக்கள் வழக்கத்தில் இருந்தப்போ ஓட்டைக்காலணா, ஓட்டை இல்லாத காலணா, மஞ்சள் அரையணா, இரண்டணாக்காசுகள், நாலணாக்காசுகள் எனப் போடுவாங்க. எட்டணா, ஒரு ரூபாயெல்லாம் ரொம்ப அபூர்வம். அநேக ஒரு ரூபாய்க்காசுகள் வெள்ளி என்பதால் யாரும் போடுவதற்கு யோசிப்பாங்க. அப்புறமாப் பைசா வந்தப்புறமா 5 பைசா, 10 பைசா, 25 பைசா தான். 20 பைசா எனக்குத் தெரிஞ்சு என் கல்யாணம் ஆனப்புறமே புழக்கத்தில் வந்தது. நல்ல தங்க மஞ்சள் நிறத்தில் தாமரைப்பூப் போட்டு இருந்தது. யாரோ அதிலே 108 காசுகளால் குத்துவிளக்கு பூஜை, மஹாலக்ஷ்மி பூஜை பண்ணினால் நல்லதுனு சொல்லிவிடவே எல்லாரும் ஒரு வெறி பிடிச்சாற்போல் 20 பைசாக்காசுகளைச் சேர்க்க ஆரம்பிச்சதும் நினைவில் வருது. எங்க கிட்டேக்கூட 80 காசுகளுக்கும் மேல் இருக்குனு நினைக்கிறேன். பாருங்க, பொங்கல் எங்கே எல்லாம் நினைவுகளைக் கொண்டு போய்விட்டது.


அப்போதெல்லாம் ரேடியோவில் குன்றக்குடி அடிகளார் தலைமையில் பட்டிமன்றம் நடக்கும். வீட்டில் ரேடியோ கிடையாது. குடித்தனம் இருக்கிறவங்க யாரானும் வைப்பாங்க. அங்கே போய் உட்கார்ந்து கேட்போம். அப்போதைய வாராந்தரப் புத்தகங்களில் கல்கி, ஆனந்தவிகடன், குமுதம் போட்டி போட்டுக்கொண்டு பொங்கல் மலர் வெளியிட்டிருப்பாங்க. விலை என்னனு நினைக்கறீங்க?? விகடன் நாலு அணா,, கல்கி, குமுதம் நாலு அணாவுக்குக் கீழே தான் இருக்கும். குமுதம் வீட்டில் அப்பா வாங்க மாட்டார். அப்பாவுக்குத் தெரியாமல் தான் குமுதமே படிக்க முடியும். J குமுதம் பண்டிகை மலர்களில் குனேகா சென்ட் போட்டு வரும். பத்திரிகைத் தாளைத் தொட்டாலே கை மணக்கும். அதோடு அதில் வரும் கதைகள் அதைவிட அருமையாக இருக்கும். தினசரிப் பத்திரிகையான தினமணியிலே நிறையக் கட்டுரைகள், கதைகள்னு அதுவும் படிக்கக்கிடைக்கும். பொங்கல் சாப்பிட்டுவிட்டுப் புத்தகங்களை வைத்துக்கொண்டு பொழுதைக் கழித்த சொர்க்கமான நாட்கள் அவை.


பொங்கலுக்கு முன்னாடியே ஊரில் இருக்கும் மாடுகளின் கொம்புகளுக்கெல்லாம் வர்ணம் அடிக்கத் தொடங்குவாங்க. மதுரையிலே நான் அதிகமாய் எருமை மாடுகளைப் பார்த்ததில்லை. பசுமாடுகளே அதிகம் பார்த்திருக்கேன். பின்னால் இந்த வர்ணம் அடிப்பதிலும் கட்சிப் பாகுபாடுகள் வந்துவிட்டன. அவரவர் கட்சிக்கொடியின் நிறத்தில் மாட்டின் கொம்புகளின் வர்ணம் இருக்கும். மாட்டின் கொம்புகளுக்கு வர்ணம் அடித்ததோடு விட மாட்டாங்க. கொம்புகளைச் சுற்றிச் சலங்கை, கழுத்துக்கு மணி என்றெல்லாம் கட்டுவாங்க. நாங்க பால் வாங்கும் வீட்டில் ஒரு பெரிய மாட்டுத் தொழுவமே இருந்தது. குறைந்தது எட்டுப் பசுமாடுகளும், அதன் கன்றுகளும் இருந்திருக்கும்னு நினைக்கிறேன். மாட்டுப் பொங்கல் அன்று மாலை தொழுவத்தைச் சுத்தம் செய்து மாடுகளை அலங்கரித்துக் கற்பூரம், சாம்பிராணி காட்டுவாங்க. பாலை முன்னாலேயே கறந்திருப்பாங்க. அதனால் பூஜை முடிந்ததும் மாடுகளை அவிழ்த்து விட்டு ஊரில் உள்ள எல்லாமாடுகளும் கலந்து கொள்ளும் ஊர்வலம் போன்ற ஒன்றிற்கு அழைத்துச் செல்வார்கள். ஊரில் உள்ள எல்லா மாடுகளும் நான்கு மாசி வீதிகளும் சுற்றி வரும். அதிலே நிறையக் காளைகளும் இருக்கும். சில காளைகள் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டிற்காகச் சிறப்பாகத் தயார் செய்யப் பட்டிருக்கும். அவற்றோடு கூடவே பாதுகாப்பிற்காக ஆட்கள் வருவார்கள். ஜல்லிக்கட்டிற்கு அப்படியே ஓட்டிச் செல்வார்கள். அப்போதெல்லாம் ஜல்லிக்கட்டுப் பார்க்க அப்பா தவறாமல் போவார். நான் ஒரு ஜல்லிக்கட்டுக்கூடப் பார்த்ததில்லை. இப்போது தொலைக்காட்சியில் பார்ப்பதோடு சரி.


பெரும்பாலும் அப்போதெல்லாம் விறகு அடுப்பிலேயே சமையல் என்பதால் பொங்கல் வைப்பதும் விறகு அடுப்பு, வெண்கலப்பானை என்றே. அப்புறமாச் சென்னை வந்தப்புறமும் வழக்கத்தை விட முடியாமல் குமுட்டி அடுப்பிலாவது பொங்கல் வைத்துக் கொண்டிருந்தது. இப்போது குமுட்டி அடுப்பு ஒத்துக்கொள்ளாது என்பதால் அதைப் பயன்படுத்த முடியவில்லை. எரிவாயு அடுப்பில் தான் பொங்கல் வைக்கிறேன். ஆனால் வெண்கலப்பானையில் வைக்கும் வழக்கத்தை மாற்றவில்லை. குக்கரில் வைப்பதில்லை. இந்த வருடம் இங்கே யு.எஸ்ஸில் மெம்பிஸில் பொங்கல். இங்கே வெண்கலப்பானை கொண்டு வரவில்லை. குக்கர் பொங்கல் தான்! அதோடு குளிரும் அதிகம் என்பதால் வெளியே பூஜை செய்ய முடியாது. மேலும் இங்கே உள்ள சில கட்டுப்பாடுகள் கருதியும் வெளியே தோட்டம் பெரிதாக இருந்தாலும் அங்கே எதுவும் செய்ய முடியாது. ஆகக் கடந்த நாற்பதாண்டுகளில் மிகப் பெரிய கலாசார மாற்றத்தைக் கண்கூடாய்ப் பார்த்து வருகிறேன் என்பதே இதில் முக்கியச் செய்தி.

அதீதம் வாசகர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள். இணைய உலகின் அனைத்து அண்ணாக்கள், தம்பிகள் சார்பாகக் கனுப்பிடி வைக்கிறேன். எல்லாருடைய க்ஷேமத்திற்கும் எங்கள் மனமார்ந்த பிரார்த்தனைகளும் தெரிவித்துக்கொள்கிறேன்.


அதீதம்

Saturday, January 14, 2012

சின்னாம்படையானுக்கு வாக்கப்பட்டு, :))))

கனுப்பிடி வைக்க மஞ்சள் கீறிக்கொள்ளப் போகையில் கூறும் வாழ்த்துச் சொல்லைப் பற்றி ஒரு சிலருக்குச் சரியான புரிதல் இல்லை எனத் தெரிய வந்தது. அதற்காகவே இந்தப் பதிவு. சின்ன வயசில் கனுவுக்கு மஞ்சள் கீறிக்கொள்ளப் போகையிலே என் பாட்டி, பெரியம்மாக்கள் எல்லாம், மஞ்சளைக் கீறிக்கொண்டே,

சின்ன ஆம்படையானுக்கு வாக்கப் பட்டுப்
பெரியாம்படையானுக்குப் பிள்ளை பெத்துச்
சீரோடும், சிறப்போடும், காக்காய்க் கூட்டம் போல்
ஒற்றுமையாச் சேர்ந்து வாழணும்னு "

சொல்லித் தான் மஞ்சளைக் கீறி விடுவாங்க. சின்ன வயசில் அர்த்தம் புரியாமல் இருக்கையில் இதைக் கேட்டுச் சிரித்த நாங்கள் அர்த்தம் புரிய ஆரம்பிக்கையில் குழப்பமும், கோபமுமே வந்தது. ஒரு சமயம் என் அப்பாவின் சித்தி அடிக்கடி எங்க வீட்டில் வந்து தங்குவார். ஒரு கனுவின்போது அவர் மஞ்சள் கீறியபோது இப்படிச் சொல்லவே, நான் துடுக்குத் தனமாய், " ஏன் சித்தி, சின்னாம்படையானுக்கு வாக்கப்பட்டுப் பெரியாம்படையானுக்குப் பிள்ளை பெத்துனு சொல்றயே? இப்படிச் சொல்லாதே. ரொம்பக் கஷ்டமாவும் வெட்கமாவும் இருக்கு. என் சிநேகிதிகள் எல்லாரும் கேலி செய்யறாங்க." என்று சொன்னேன்.

அதற்கு அவர்கள் கொடுத்த விளக்கம்:"போடி அசடு! அந்தக் காலங்களில் பெண்ணிற்கு ஏதேனும் ஆபத்து வந்துடும்; நம்ம பழக்கத்தை விட்டுட்டு மாறிடுவானு சில வீடுகளில் படிக்க வைக்க யோசிப்பாங்க; சில வீடுகளில் அதனால் அவசரம் அவ்சரமாக் கிடைச்ச மாப்பிள்ளைக்குக் கல்யாணம் செய்துடுவாங்க. பெண்ணிற்கு ஐந்து, ஆறு வயசுக்கெல்லாம் கல்யாணம் ஆகும். பிள்ளைக்கு 20, 22 கூட இருக்கும். வெகு சிலருக்கே அவங்க வயசுக்கு ஏற்ற மாப்பிள்ளை கிடைப்பான். அப்போதெல்லாம் பெண்களை வயசு வித்தியாசம் பார்க்காமல் குலம்,கோத்திரம் மட்டும் பார்த்து இரண்டாவது, மூன்றாவதுனு கொடுப்பதும் உண்டு. அதிர்ஷ்டம் இருந்தால் அந்தப் பெண்களின் வாழ்க்கை நன்றாக அமையும்; இல்லை எனில் பால்யவிதவையாகி விடுவாள். அதனால் தான் அவள் வயசுக்கேற்ற கணவனாகச் சிறு பிள்ளையாகக் கிடைக்க வேண்டும், என்றும் அவனோடு நன்றாக வாழவேண்டும் என்பதற்கு வாழ்த்துவதே,

"சின்னாம்படையானுக்கு வாழ்க்கைப் பட்டு" என்ற சொற்றொடர் என்றும், அவ்வளவு சின்ன வயசில் கல்யாணம் செய்து கொண்டாலும் குழந்தை பெற்றுக்கொள்ளும்போது தகுந்த பிராயம் வரவேண்டும் இருவருக்குமே என்பதால், அந்தப் பையனுக்கும் தக்க பருவம் இருக்க வேண்டும் என்றே அவனைப் பெரியாம்படையான் என்று சொல்வது. அவன் வளர்ந்து உரிய பருவம் வந்ததும் இருவருக்கும் குழந்தை பிறக்கும் தகுதி கிடைக்கும் அல்லவா? அதன் காரணமாகவே சின்ன வயசிலேயே கல்யாணம் செய்து கொண்டாலும் தக்க பருவத்தில் உரிய நேரத்தில் குழந்தை பிறக்கவேண்டியுமே, "பெரியாம்படையானுக்குப் பிள்ளை பெத்து" என்று வாழ்த்துவது இது என எடுத்துச் சொன்னார்கள்.

தற்காலங்களுக்குப் பொருந்தாது என்றாலும் பெரியவர்கள் சொன்னதில் எந்தவிதமான மாறுபட்ட கருத்து என்பது இல்லை எனப் புரிந்து கொண்டேன். நீங்களும் புரிந்து கொள்ளுங்கள்.

Friday, January 13, 2012

தெரிஞ்ச விஷயம் தான், ஆனாலும் படிங்க!

தமிழில் பொங்கல் பண்டிகை, என்றும் வடமாநிலங்களில் மகர சங்கராந்தி என்றெல்லாம் அழைக்கப்படும் இந்தப் பண்டிகை முன்காலங்களில் இந்திரவிழாவாகக் கொண்டாடப் பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது. வடமாநிலங்களில் இப்போதும் மகர சங்கராந்தி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. இதுவும் இந்தியா முழுதும் கொண்டாடப்படும் ஒரு பண்டிகையே. சங்க காலத்திலேயே இது தை நோன்பு என்ற பெயரில் கொண்டாடப் பட்டிருக்கலாம் என்றாலும் ராஜராஜ சோழன் காலத்தில் தான் வருடத்தின் முதல் அறுவடைத் திருநாள் புதியீடு என்ற பெயரில் கொண்டாடப்பட்டிருக்கிறது என்பது காணக்கிடைக்கிறது. இந்தியா முழுதும் கொண்டாடப்படும் இது வெவ்வேறு மாநிலங்களிலும் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் பொங்கல் என அழைக்கப்படும் இது ஆந்திரம், ஒரிசா, மேற்கு வங்கம், பிஹார், மத்தியப்பிரதேசம், உத்தரப் பிரதேசம், மஹாராஷ்டிரா, மணிப்பூர் ஆகிய இடங்களில் மகர சங்கராந்தி என்ற பெயரிலும், குஜராத், ராஜஸ்தானில் உத்தராயணம் என்ற பெயரிலும், பஞ்சாப், ஹரியானா, ஹிமாசல் பிரதேசம் ஆகிய இடங்களில் லோஹ்ரி என்ற பெயரிலும், அஸ்ஸாமில் மாகே பிகு என்ற பெயரிலும், நேபாளத்தில் மாகே சங்க்ராந்த் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. மற்றத் தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில் சொங்க்ரான் என்றும், மியான்மரில் திங்க்யான் எனவும், லாவோஸில் பி மா லாவ் என்ற பெயரிலும் கொண்டாடுகிறார்கள்.

பெரும்பாலான வடமாநிலங்களில் எள்ளினால் செய்த இனிப்பு வகைகள், அல்லது வேர்க்கடலையினால் செய்யப்பட்டவை விநியோகிக்கப்படுகின்றன. இது சூரியனின் வான்வழிப் பயணத்தில் சூரியன் மகரராசிக்கு மாறும் நாள் என இந்துக்களால் நம்பப்படுகிறது. வான்வெளியில் வடக்கு நோக்கி சூரியன் நகரும் இந்த நாளில் இருந்து பகல் நேரம் அதிகரிக்கும் என்பதாலும் இது கொண்டாட்டத்தின் முக்கியகாரணமாகிறது. ஆடி மாதம் சூரியன் தென் திசை நோக்கிப் பயணம் செய்யும் காலத்தில் விதைக்கப்படும் விதைகள் அனைத்தும் இதற்குள் பூரணமாக அறுவடை செய்யத் தயாராகக் காத்திருக்கும். வருடத்தின் முதல் அறுவடையை அமோகமாகத் தங்களுக்கு அளித்த சூரியனுக்கு நன்றி கூறும் விதத்திலும் இந்தப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. எனினும் இது மழைக்கடவுளான இந்திரனுக்கு நன்றி செலுத்தும் விழாவாகவே முதலில் இருந்திருக்கவேண்டும் என்றும் பின்னர் முதல்நாளை மட்டும் இந்திரனுக்கு நன்றி செலுத்தும் விழாவான போகியாகவும், அடுத்த நாளை சூரியனுக்காகவும், மூன்றாவது நாளை இதற்கெல்லாம் உதவி செய்யும் கால்நடைச்செல்வங்களுக்காகவும் கொண்டாடி வந்திருக்கின்றனர். நாளாவட்டத்தில் நான்காம் நாள் உறவினரை, நண்பரைக் கண்டு செல்லும் நாளாகக் கொண்டாட ஆரம்பித்தனர். ஆகத் தற்காலங்களில் இது நான்கு நாட்கள் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.

ஆரம்பத்தில் அதாவது சங்ககாலத்தில் இது மஹாவிஷ்ணுவைக் குறித்தே இளம்பெண்களால் கொண்டாடப்பட்டிருக்கவேண்டும் என்றும் ஒரு கூற்று உண்டு. சாணத்தால் பெரியதொரு உருண்டை பிடித்து நடுவில் வைத்து அதில் பறங்கிப்பூவையும் வைத்துச் சுற்றிலும் சிறிய சிறிய சாண உருண்டைகளையும் வட்டமாக வைத்து அவற்றிலும் பூக்களை வைப்பார்கள். நடுவில் உள்ள பெரிய உருண்டையை கண்ணனாகவும், சுற்றிலும் உள்ள சின்ன உருண்டைகளை கோபியராகவும் பாவித்து இளம்பெண்கள் அந்தக் கோலங்களைச் சுற்றி வந்து கும்மி, கோலாட்டம் ஆடிக் களிப்பார்கள். மேலும் பொங்கல் வைப்பதன் தாத்பரியம், உணவுக்கு நமக்கு உதவி செய்த பஞ்சபூதங்களையும் போற்றுவது ஆகும். மண்ணிலிருந்து நமக்குக் கிடைத்த பொருட்களை வைத்துச் சமைப்பது முன்பெல்லாம் மண்ணாலாகிய அடுப்பிலேயே, மண்பானைகளிலேயே பொங்கல் வைப்பார்கள். காலக்கிரமத்தில் இது மாறிவிட்டாலும், மண் அடுப்பும், மண்பானையும் பூமித்தாயையும், அதில் பொங்கலுக்கு ஊற்றப்படும் பாலும், நீரும், தண்ணீரையும், எரியும் நெருப்பு அக்னியையும், பொங்கல் வேகும்போது கிளம்பும் ஆவி வாயுவையும், வெட்டவெளியில் பொங்கல் சமைத்துப் பின்னர் வெட்டவெளியிலேயே வழிபாடு நடத்துவது ஆகாயத்தையும் குறிக்கும் என்பார்கள்.

ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையில் ஆரம்பம் ஆகும் விழாவறை காதையில் “இந்திர விழா” என்ற பெயரிலேயே பொங்கல் பண்டிகை கொண்டாடப் பட்டிருக்கவேண்டும் என அறிய வருகிறது. முதல் முதல் இந்திரவிழா கொண்டாட ஆரம்பிக்கையில் அதைப் பொது மக்கள் மன்றத்தில் முரசறைந்து தெரிவிக்கப்பட்டதாகவும், சுமார் 28 நாட்கள் விழா நடந்ததாகவும் தெரிந்து கொள்கிறோம். மேலும் அகத்திய முனிவர் இந்திரனுக்கு அழைப்பு விடுத்ததாகவும் இந்திரன் பூம்புகாருக்கு வந்ததாகவும் குறிப்புகள் கூறுகின்றன. தற்காலங்களில் பொங்கலுக்கு முன்னர் வீட்டை அலங்கரித்துச் சுத்தம் செய்து பழையன கழிதல் போல் அந்தக் காலங்களிலும் வீட்டை மட்டுமின்றி நாடும், நகரங்களுமே சிறப்பாக அலங்கரிக்கப்பட்டன. கமுகுக் குலைகளும், தென்னை ஓலைத் தோரணங்களும், வாழை மரங்களும் கட்டப்பட்டு, பொன்னாலான பாலிகைகள், பூரண கும்பங்கள் ஆகியவற்றால் வீடுகள், கோயில்கள், அரண்மனைகள் அலங்கரிக்கப்பட்டன. வீதிகளிலே புது மணல் பரப்பி, காவல் தெய்வங்கள் முதல் அனைத்துத் தெய்வங்களுக்கும் சிறப்பான வழிபாடுகள் நடத்தப்பட்டன. மழைத் தெய்வம் ஆன இந்திரனைச் சிறப்பிக்கும் வகையில் அவனுக்கு நன்றி கூறும் வகையில் எடுக்கப்பட்ட இந்த விழா நாளில், பகைமையும், பசியும் நீங்கச் சிறப்பான பிரார்த்தனைகள் செய்யப்பட்டதோடு ஒருவருக்கொருவர் பகைமை பாராட்ட வேண்டாம் என்பதும் வலியுறுத்தப்பட்டது. ஒருவருக்கொருவர் பகையுள்ளவர்கள் விலகி இருக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இப்படியாக ஆரம்பித்த இந்த விழா பின்னர் நாளாவட்டத்தில் கண்ணுக்குத் தெரியும் ஒரே கடவுளான சூரியனுக்காகக் கொண்டாடப்படும் விழாவாக மாறி இருந்திருக்கலாம். ஏனெனில் சூரியன் இருப்பதாலேயே நமக்கு மழை, ஒளி, எல்லாம் கிடைப்பதோடு உயிர்கள் வாழவும் முடிகிறது. சூரியனில்லாத பூமி இருண்டுவிடும். மனிதர்களின் வாழ்வாதாரமாகச் சூரியனே இருந்து வருகிறது.

பொங்கல் வழிபாட்டில் பொங்கலோடு சேர்த்துக் கரும்பு, வாழைப்பழம், மஞ்சள் கொத்து, இஞ்சிக்கொத்து, வெற்றிலை, பாக்கு, தேங்காய் போன்றவைகளோடு ஏழுவகைக் கறிகள்/கூட்டுகள்/குழம்பு போன்றவை செய்யப்படும். அனைத்தும் வழிபாட்டில் வைக்கப்படும். அநேகமாக வழிபாடுகள் வீட்டின் கொல்லைப்புறம் கிழக்கு நோக்கியே செய்யப்படும். அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்தாலும் வீட்டின் வெளியே வந்து சூரியனுக்குக் கற்பூரமாவது காட்டுவார்கள். பொங்கல் பால், நெய், அரிசி, பருப்பு, வெல்லம் போன்றவை சேர்த்துச் செய்யப்படும். பால் பொங்க வேண்டும். பால் நன்றாகப் பொங்கினால் அந்த வருடம் விளைச்சலும் பொங்கி வரும் என்பார்கள். வீட்டில் உள்ள அனைவரும் பொங்கல் பானையில் பால் ஊற்றுவது உண்டு. அப்போது பொங்கலோ பொங்கல் எனச் சொல்லிக்கொண்டே பாலை ஊற்றுவார்கள்.

கரும்பு இனிப்பான சுவையை உடையது. ஆனாலும் அடிக்கரும்பே தித்திப்பு அதிகம் உடையது. நுனிக்கரும்பு உப்பாகவும் இருக்கும். அதோடு கரும்பில் நிறையக் கணுக்களும் காணப்படும். இந்தக் கரும்பின் கணுக்கள் வாழ்க்கையில் ஏற்படும் சோதனைகளைக் குறிக்கிறது என்றும் ஆரம்பத்தில் உப்புப் போல் கரிக்கும் வாழ்க்கை போகப் போக அடிக்கரும்பு போல் இனிக்கும் எனவும் கூறுவார்கள். மஞ்சள் கொத்துக்களும் வழிபடப் படுகின்றன. மேலும் பொங்கல் பானையில் மஞ்சள் கொத்துக் கட்டும் வழக்கமும் உண்டு, மஞ்சள் மஹாலக்ஷ்மிக்கு உரியது. மஹாலக்ஷ்மியாகவே கருதப்படும் மஞ்சளை அனைத்து சுபகாரியங்களுக்கும் பயன்படுத்துகிறோம். மஞ்சள் இல்லாத மங்கல காரியங்களே இல்லை. ஆகவே மஞ்சளைப்பொங்கல் பானையில் கொத்தோடு கட்டும் வழக்கம் ஏற்பட்டது. பானையில்கட்டும் மஞ்சளையே பத்திரம் செய்து ஒரு துண்டை எடுத்து சுவாமி அறையில் வைத்துவிட்டு மற்ற மஞ்சளை உடலில் தேய்த்துக் குளிக்க அரைத்துப் பயன்படுத்துவார்கள். சுவாமி அறையில் வைத்திருக்கும் மஞ்சளையே பொங்கலுக்கு மறுநாள் கனுவன்று நெற்றியில் கீறிக்கொள்ள எடுத்துச் செல்வார்கள். அக்கம்பக்கம், வீட்டுப் பெரியவர்கள் என எல்லாரிடமும் கொடுத்து நெற்றியில் மஞ்சளைக்கீறிவிடச் சொல்வார்கள். அரைத்திருக்கும் மஞ்சளில் சிறிதளவு எடுத்து சாதத்தில் கலந்து கொண்டு, குங்குமம் போட்டும் கலந்து, பொங்கல், கலந்த சாதவகைகள், தயிர்சாதம், கரும்புத்துண்டுகள், வாழைப்பழம், தேங்காய் வெற்றிலை, பாக்கு எல்லாமும் வைத்து கனுவன்று காலையில் காக்காய்ப்பிடி, கனுப்பிடி என வைப்பார்கள். இதன் தாத்பரியம் காக்கைகள் எப்படிச் சுற்றம், சொந்தங்களோடு சேர்ந்து உணவு எடுத்துக்கொள்கிறதோ அவ்வாறே நாமும் நம் உறவு, சுற்றம், நட்பு ஆகியோருடன் சேர்ந்து மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்பதே ஆகும்.

ஒரு சிலர் வீட்டு வழக்கப்படி புதிதாய்ப் பிறந்திருக்கும் சின்னஞ்சிறு குழந்தைகளைப் பத்து வயதுக்குட்பட்ட மற்றொரு குழந்தையின் மடியில் உட்கார்த்தி வைத்துச் சின்னச் சின்ன கொழுக்கட்டைகள் செய்து அவற்றோடு, கரும்புத்துண்டுகள், இலந்தைப்பழம், நாணயங்கள் எல்லாம் கலந்து அரிசி அளக்கும் படியில் நிறைநாழி என சுவாமிக்கு எதிரே வைத்து இருப்பார்கள். அக்கம்பக்கம் சுற்றத்தார், சின்னக்குழந்தைகள், பெண்கள் என எல்லாரையும் அழைத்து மாலை விளக்கு ஏற்றியதும் வீட்டில் இருக்கும் வயதான சுமங்கலிப் பெண்ணை விட்டுச் சின்னக் குழந்தையின் தலையில் மெதுவாய்க் கொட்டுவார்கள். இதற்குக் காசு, இலந்தைப் பழம் கொட்டுதல் என்று பெயர். குழந்தைகள் காசைப் பொறுக்கப் போட்டி போடும். குழந்தைகளோடு சேர்ந்து பெரியவர்களும் பொறுக்குவார்கள். பின்னர் வந்திருக்கும் அனைவருக்கும் வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள் வைத்துக்கொடுத்து அவரவருக்கு இயன்ற பொருளை வைத்துக் கொடுப்பார்கள். இது குழந்தைக்கு திருஷ்டி கழியவேண்டிச் செய்யப்படுவது. இது பெரும்பாலும் குறிப்பிட்ட சில வீடுகளிலேயே செய்யப்படுகிறது.

ஒரு சில கிராமங்களில் மார்கழி மாதம் வைக்கும் சாண உருண்டைகளைச் சேகரம் செய்து பிள்ளையார் பொங்கல் என வைப்பது உண்டு. இன்னும் சிலர் வீடுகளில் இப்படியான உருண்டைகளைச் சேகரம் செய்து கொண்டு, பொங்கலுக்கு அடுத்து வரும் முதல் ஞாயிற்றுக்கிழமையில் புதியதாய்ச் சாண உருண்டை பிடித்துக்கொண்டுஅவரவர் ஊர்களின் ஒரு நதிக்கரையில் அல்லது குளக்கரையில் அதை நடுவில் வைத்து மற்ற உருண்டைகளைச் சுற்றிலும் வைத்துப் பூசணி, பறங்கி, பூவரசம்பூக்கள் போன்றவற்றால் அலங்கரித்து மணலில் வீடுபோல் ஓவியம் வரைந்து அதன் நடுவே அடுப்பு மூட்டிப் பொங்கல் பானை வைப்பார்கள். பொங்கல் செய்து, ஒரு முறம் அல்லது சுளகைத் திருப்பிப்போட்டு நுனி இலை விரித்துப் பொங்கல் கொஞ்சமும் , பழமும் அதில் வைத்துவிட்டுக் கற்பூரமும் ஏற்றி அதில் வைப்பார்கள். பின்னர் அந்த இலையை அப்படியே நீரில் விட்டுவிட்டுச் சாண உருண்டைகளையும் நீரில் கரைப்பார்கள். இதனால் வரும் வருடம் மழை நன்கு பொழிந்து நீராதாரம் மேம்படும் என்று நம்பிக்கை. நீர், நிலைகளுக்கு மட்டுமின்றி நீர்வாழ் ஜந்துக்களுக்கும் உணவளிக்கும் விதமாகச் செய்யப்படும் இதை இன்றைய தினம் பெரும்பாலான மக்கள் அறிந்திருக்கவில்லை.

மனிதன் வாழ ஆதாரமான உணவைக்கொடுக்கும் உழவர்களின் திருநாள் என்றும் சொல்லலாம். பொங்கலுக்கு மறுநாள் மாடுகள், உழவுக்கருவிகள் அனைத்துக்கும் வழிபாடு நடக்கும். தற்காலங்களில் காலம் தப்பிப் பெய்யும் மழையினால் விவசாயிகள் கஷ்டப்படுவதே பார்க்க முடிகிறது. தேசந்தோறும் பாஷை வேறு என்பதற்கு ஏற்ப ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொருவிதமாய்க்கொண்டாடப்படும் இந்தப் பண்டிகையும் ஒரு தேசியப் பண்டிகையே. அனைவருக்கும் பொங்கல் வாழ்த்தைத் தெரிவித்துக்கொண்டு கீழே அக்கார அடிசில் செய்முறையைத் தருகிறேன்.

அக்கார அடிசிலுக்குப் பால் நிறைய வேண்டும். ஆண்டாள் செய்தாப்போல் நூறு தடா இல்லைனாலும் ஒரு லிட்டராவது வேண்டும். நல்ல பச்சை அரிசி கால்கிலோ, வெல்லம் பாகு அரை கிலோ, நெய் கால் கிலோ. பாசிப்பருப்பு ஒரு கிண்ணம். நீரே வேண்டாம். பாலிலேயே வேகவேண்டும். ஆகவே முடிந்தவரைக்கும் ஒரு லிட்டருக்குக் குறையாமல் பால் எடுத்துக்கொள்ளவும். குங்குமப் பூ, ஏலக்காய், பச்சைக்கற்பூரம் ஒரு சிட்டிகை அளவு மட்டுமே. முந்திரிப்பருப்பு, திராக்ஷை எல்லாம் தேவைப்பட்டால். சாதாரணமாய் இதற்குப் போடுவது இல்லை. ஆனால் நான் போடுவேன்.

பாசிப்பருப்பையும், பச்சை அரிசியையும் வெறும் வாணலியில் தனித்தனியாக வறுத்துக்கொள்ளவும். நன்கு களைந்து சுத்தம் செய்து கொள்ளவும். வெண்கலப்பானையை அடுப்பில் வைத்துப் பாலைக் கொஞ்சமாக முதலில் ஊற்றவும். தேவையான பாலில் பாதி அளவு ஊற்றலாம். பால் கொதிக்க ஆரம்பித்ததும் பாசிப்பருப்பைக் களைந்து சுத்தம் செய்து அதில் போடவும். சிறிது நேரத்துக்கு ஒருமுறை கிளறிக்கொடுக்கவும். பால் அடியில் பிடிக்காமல் பார்த்துக்கொள்ளவும். இதை நான் ஸ்டிக் பாத்திரத்திலோ அல்லது குக்கரிலோ செய்தால் அவ்வளவு சுவை வராது. பருப்பு வெந்ததும் அரிசியைக் களைந்து அதோடு சேர்த்துப் போடவும். மிச்சம் இருக்கும் பாலைக்கொஞ்சம் கொஞ்சமாய்ச் சேர்க்கவும். அரிசி நன்கு வெந்து குழையும் பதம் வரவேண்டும். அப்போது வெல்லத்தைத் தூளாக்கிச் சுத்தம் செய்து சேர்க்க்கவும். வெல்ல வாசனை போக நன்கு கொதிக்கவேண்டும். வெல்லம், பால் இரண்டும் சேர்ந்து வரும்வரையில் நெய்யைக் கொஞ்சம் கொஞ்சமாய்ச் சேர்த்து விடாமல் கிளற வேண்டும். நன்கு கலந்து பாயசம் போலவும் இல்லாமல் ரொம்பக் கெட்டியாக உருட்டும்படியும் இல்லாமல் கையால் எடுத்துச்சாப்பிடும் பதம் வரும் வரை கிளற வேண்டும். பின்னர் ஏலப்பொடி சேர்த்துப் பாலில் கரைத்த குங்குமப் பூவும் சேர்த்துப் பச்சைக்கற்பூரமும் சேர்க்கவும். தேவைப்பட்டால் நெய்யில் முந்திரிப்பருப்பு, திராக்ஷை வறுத்துச் சேர்க்கவும். அது இல்லாமலேயே நன்றாக இருக்கும்.

குக்கரில் வைப்பவர்கள் பாதிப்பாலை விட்டுக் குக்கரில் அரிசி, பருப்பைக் குழைய வைத்துக்கொண்டு பின்னர் வெளியே எடுத்து அடிகனமான பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு நீர் அல்லது பால் விட்டுக் கரைத்துக் கொதிக்கையில் குக்கரில் இருந்து எடுத்த கலவையைப் போட்டு மிச்சம் பாலையும் விட்டுக் கிளறவேண்டும். இதிலும் அடிப்பிடிக்காமல் நன்கு கிளற வேண்டும். பின்னர் நன்கு சேர்ந்து தளதளவென்று கொதிக்க ஆரம்பித்ததும், வெல்ல வாசனை போய்விட்டதா என்று பார்த்துவிட்டு அடுப்பை அணைக்கவும். ஏலக்காய், குங்குமப்பூ, பச்சைக்கற்பூரம் சேர்க்கவும்.//

நன்றி வல்லமை

Thursday, January 12, 2012

இளைஞர் தின வாழ்த்துகள்!


நேற்று இரவு மனசு கனத்தோடு படுக்கச் சென்றேன். ஆசியாவிலேயே/உலகிலேயே மிகவும் மோசமான நிர்வாகம் இந்தியாவில் தான் என்ற செய்தியைப் படித்ததில் இருந்து மனம் மிக மிக வேதனைப் படுகிறது. இன்று இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்கள் கையில். இப்போதைய இளைஞர்கள் அதிகம் உணர்ச்சிவசப்படுவதில்லை. சீர் தூக்கி ஆராய்ந்து நல்லது கெட்டது பாகுபாட்டைப் புரிந்து கொண்டு எதிர்கால இந்தியாவை வளமானதாக மட்டுமின்றி அனைத்திலும் சிறந்த ஒரு நாடாக மாற்ற வேண்டிய மாபெரும் பொறுப்பு இன்றைய இளைஞர்களுக்கு உள்ளது. இந்த இளைஞர்கள் தினத்தில் அதற்கு வேண்டிய மன உறுதியையும், வலுவையும் கொடுக்கும்படி எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

அனைவருக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

Wednesday, January 11, 2012

தாத்தா எங்கேயானும் அழறாரா! :)

அப்புவோட அம்மாவுக்கு அவசரமா வெளியே போயாகணும்; அப்புவைக் கூடக் கூட்டிக் கொண்டு போக முடியாது. அதனால் தாத்தா, பாட்டி கிட்டே விட்டுட்டுப் போனாள். அப்புவுக்கு இஷ்டமே இல்லை. அழ ஆரம்பித்தது. முதல்லே சின்னதாக ஆரம்பித்த அழுகை கொஞ்சம் கொஞ்சமாப் பெரிசானது. பாட்டி சமாதானம் செய்தும் சமாதானம் ஆகலை. அழுகையோ நிக்கலை. தாத்தா கூப்பிட்டார். போகமாட்டேன்னு பிடிவாதம் பிடித்தது அப்பு.

தாத்தா அப்புவுக்குக் கதை சொன்னார்.

"நீ சமத்துப் பாப்பா இல்லை? தாத்தா உன்னாட்டம் குட்டிப் பையனா இருக்கிறச்சே என்னாச்சு தெரியுமா?

you were a baby boy? when?

லாங் லாங் அகோ, தாத்தா தொடர்ந்தார். என்னதான் ஆங்கிலம் பேசமுடிஞ்சாலும் சட்டுனு தமிழ் தான் வசதியா இருக்கு. தாத்தா தமிழிலேயே பேச அப்பு ஆங்கிலத்தில் கேட்கனு சம்பாஷணை தொடர்ந்தது.

நான் உன்னை மாதிரிக் குட்டியா இருக்கிறச்சே இருந்து என்னோட பாட்டி கிட்டத் தான் வளர்ந்தேன்.

what is it thatha vayanthen?

Oh, I lived with my grandmother.

are you not scared?

No, I was not. அப்புறம் என்னாச்சு தெரியுமா? என்னைப் பாட்டி தான் ஸ்கூல்லே சேர்த்தா; படிக்க வைச்சா. 5வது கிரேட் வரை அங்கே தான் படிச்சேன்.

then? you never cried for your mommy?

No, I used to see my mommy on Holidays only.

அப்புவோட சின்ன மூளையிலே என்ன யோசனை தோணித்தோ! அப்புறம்னு கேட்டது. அப்புறமா என்னோட பெரியம்மா சிதம்பரம்னு வேறே ஊருக்கு அழைச்சுக்கொண்டு போய் வைச்சுப் படிக்க வைச்சாங்க.

what is periyamma?

My mommy's sister. like your sister Pooja. She is my mommy's big sister.

then your mommy is her baby sister like me?

Yes.

இப்போத் தான் வேடிக்கையே. அப்பு கேட்டது, உன்னோட அம்மா இப்போ எங்கே இருக்காங்க தாத்தானு.

தாத்தா சொல்றார். என்னோட அம்மா என் தம்பியோட டெல்லியிலே இருக்காங்க. பாரு, தாத்தா யு.எஸ்ஸிலே இருக்கேன் உன்னோட, என்னோட அம்மாவோ டெல்லியிலே. நான் எங்கேயானும் அழறேனா பாரு!

ஒரு நிமிஷம் திகைத்த அப்பு என்ன நினைத்ததோ கடகடவெனச் சிரித்தது.

அப்பாடா!

Sunday, January 08, 2012

அதீதத்தில் கொடுத்த நன்றி அறிவிப்பு!

கீதா சாம்பசிவம்
Channel: புத்தாண்டு இதழ்
கட்டுரை
Date: Thursday, January 5th, 2012
ராமலக்ஷ்மி அவர்கள் முதலில் அழைத்தபோது யோசித்தேன். ஏனெனில் கடந்த சிலநாட்களாக இங்கே கொஞ்சம் வேலைகள். மகனும், மருமகளும் அவங்களுடைய பச்சை அட்டைக்காகச் சிலவேலைகள், மருத்துவ சோதனை என அலைச்சல். ஆகவே வீட்டில் வேலை. கணினியில் அமர்ந்தாலும் எழுத முடியவில்லை. மகனின் பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாததால் நாங்க இரண்டு பேரும் சென்று இவர் எங்க பையர் தான் என உறுதி மொழி கொடுக்கவேண்டும். :)) அதற்காக ஒருநாள் செல்ல வேண்டி இருந்தது. அதோடு தம்பி வீட்டில் இத்தனை நாட்கள் இங்கே இருந்தாச்சுனு எங்க பொண்ணு வேறே குடும்பத்தோடு இங்கே வந்து எங்களை அவங்க ஊரான மெம்பிஸுக்கு அழைத்துச் செல்ல வந்திருக்கிறாள். 26-ம் தேதி பயணம் செய்யவேண்டும். முழுதும் காரிலேயே போகிறோம். மறுநாள் ஓய்வு தேவைப்படும். ஆகவே படைப்புகள் கிடைத்தாலும் அனுப்ப தாமதம் ஆகும். இதை எல்லாம் குறித்துப் பல்வேறு யோசனைகள். பின்னர் வந்தவற்றை மட்டும் அனுப்பி வைப்போம் எனக் கொடுத்தவர்களுடையதை மட்டும் அனுப்பி வைத்தேன். ஆகவே என் பங்கு என்பது எதுவும் இதில் இல்லை. பார்க்கப் போனால் சிநேகிதிகளைப் படுத்தி எடுத்தேன். முக்கியமாய்க் கவிநயாவை. எல்லாருக்கும் வேலை;பிசி; குழந்தைகள் படிப்பு. ஆகவே அதிகமான அளவில் பங்கு பெற முடியாத சூழ்நிலையைப் பொறுத்துக்கொண்டு அனைவரும் ஆதரவு கொடுத்தமைக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன். முக்கியமாய் இந்தச் சந்தர்ப்பத்தை உண்டாக்கிக் கொடுத்த அதீதம் குழுவினருக்கு என் நன்றி.

பார்க்க அதீதம்


மெம்பிஸ் வரும் முன்னர் எழுதிக் கொடுத்தது.

இலவசங்கள் அறிவிச்சாச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்!

/கீதா சாம்பசிவம் மேடம் - கான்வாசிங் உண்டு. நீங்க உங்கள் தரப்பு வாதங்களை, உங்களுக்கு வோட்டுப் போட்டால் வாக்காளப் பெருமக்களுக்கு என்ன இலவசம் கொடுப்பீர்கள் என்று எழுதி engalblog@gmail.comமின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். ஜனவரி பதினான்காம் தேதி வரை வாக்குப் பதிவு இருக்கின்றது. ஒரு கை பார்த்துவிடலாம்!//


//ஒரு ஓட்டுக்கு ஒரு ஆடு, ஒரு ரெப்ரெஜிரேடர், ஏசி கார் இலவசம். இன்னும் நிறைய இலவசத் திட்டங்கள் வருகின்றன. சைனாவில் ஆர்டர் கொடுத்து செய்ய வேண்டியிருப்பதால் தாமதமாகிறது. அதற்காக ஓட்டு போடுவதை நிறுத்த வேண்டாம்.//

ஹாஹா, மேலே இருப்பது எங்கள் ப்ளாக் எனக்குக் கான்வாசிங்குக்குக் கொடுத்த அனுமதி. என்னடா தானைத் தலைவியா இருந்துட்டு அனுமதி எல்லாம் கேட்கறேன்னு பார்க்கறீங்களா? தேர்தல்னு வந்தால் எலக்‌ஷன் கமிஷனின் உத்தரவுகளை மதிக்கணுமே! அதான்! எலக்‌ஷன் கோட் அறிவிச்சுட்டாங்க. அதற்கு உட்பட்டு நானும் சில, பல பதிவுகளில் போய்க் கான்வாசிங் செய்திருக்கேன். மிச்சத்துக்குத் தேடிக் கண்டு பிடிச்சுட்டுப் போகணும். ஹிஹி, ஆனால் கான்வாசிங் செய்யாமலேயே கீதா சந்தானத்திற்கு மதிப்பெண்கள், சே,சே, வாக்குகள் கூடுதலாய் இருக்கிறதைப் பார்த்து கண், காது, மூக்கு, வாய்னு எல்லாத்திலேயும் புகை வந்துட்டு இருக்கு. (இங்கே மெம்பிஸில் உறைநிலைக்குப் போயிடுது ராத்திரி எல்லாம், வாயைத் திறந்தால் புகை வராமல் என்ன பண்ணும்?) சரி, சரி, இலவசம் அறிவிக்கச் சொல்லித் தேர்தல் கமிஷனே உத்தரவு கொடுத்து அதையும் எழுத்து வடிவத்தில் (ஒரு ஜாக்கிரதைக்குத் தான்) வாங்கி வச்சுட்டிருக்கிறதாலே நான் எனக்கு ஓட்டுப் போடறவங்களுக்கு என்னவெல்லாம் கொடுப்பேன் என்பதை இங்கே அடக்கத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

யாருங்க அது, உங்களுக்கு வாங்கித் தான் பழக்கம்னு முணுமுணுக்கிறது? வாங்கினதை பத்திரமா வச்சுப்போம் இல்ல? அதைப் பாருங்க! வழக்கமா நான் முப்பெரும் விழா நடத்தறச்சே தொண்டர்கள் தான் எடைக்கு எடை தங்கம், வெள்ளி, வைரம்னு கொடுப்பாங்க. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் என்ன பண்ணறது? நேரம், ஏழரைச் சனி இப்போ எனக்கு. கையை விட்டுச் செலவு பண்ண வேண்டி இருக்கு . இதோ பட்டியல் தயார்.


downloadlatest intelcorelaptap.jpgலேட்டஸ்ட் இன்டெல் கோர் லாப்டாப்imagesadvanced all in one car.jpgகாரிலே வைச்சுட்டுப் போற சகலவசதிகளோடு கூடிய பிசி.


imagesandroid.jpgஅன்ட்ராய்ட் போன் imagesapplepad.jpg ஆப்பிள் ஃபோன்


imagesiphone.jpgஐ ஃபோன் 5ஜி imagesipod.jpg ஐ பாட்


imagesnotebook.jpgநோட் புக்

எல்லாத்தையும் பார்த்துக்குங்க. பார்த்துட்டு உங்கள் ஓட்டை எனக்கே போடுங்க! எனக்கே எனக்கு.

கீதா சாம்பசிவம்

இந்த எங்கள் ப்ளாக் எலக்‌ஷன் கோடைக்கண்டிப்பாய்ப் பின்பற்றுகிறது தெரியாமப் போச்சு. நான் பாட்டுக்கு ஓட்டுப் பெட்டி பக்கத்திலேயே என்னோட அறிவிப்பை எதிர்பார்த்தா ஹிஹிஹி, வாக்குச் சாவடியை விட்டுத் தள்ளி வைச்சிருக்காங்க நம்ம விளம்பரத்தை. போற போக்கைப் பார்த்தால் கள்ள ஓட்டு விழுந்தாக் கூட ஜெயிப்பேனா?? சந்தேகமா இருக்கே! :)))))))

வலை உலகத்திலே எல்லாரும் சத்தம் போடாம மீனாக்ஷியை ஆதரிக்கறாங்களே? ம்ஹும்!

Thursday, January 05, 2012

"தங்கமா"ன ஒரு விமரிசனம்! :P

எல்லாரும் பெண்கள் முன்னேற்றம், பெண்கள் விடுதலைனு சொன்னாப் போதுமா? அதுக்காக என்ன செய்யறோம்? கவலையே வேண்டாம்; விடுங்க கவலையை. சன் தொலைக்காட்சியிலே வரும் "தங்கம்" சீரியலைப் பார்த்தால் போதும். பெண் விடுதலையாவது ஒண்ணாவது! அந்த சீரியலே வர கதாபாத்திரங்கள் அரைக்கிற மிளகாயிலே என்னோட தலையே எரியும் போலிருக்கு. இத்தனைக்கும் நான் தினசரி பார்க்கிறதில்லை. சில சமயம் தவிர்க்க முடியாமல் உட்கார்ந்திருக்கையில் வசனங்கள் காதில் விழும். காதைப் பொத்திக்க முடியலை! :))))

இன்னிக்குப் பாருங்க எங்க பொண்ணு கிச்சனை க்ளீன் செய்துட்டு இருந்ததால் சமையல் வேலையை அதுக்கப்புறம் ஆரம்பிக்கச் சொல்லவே வேறு வேலை இல்லாமல் உட்கார்ந்திருந்தேன். சீரியல் ரசிகரான நம்ம ரங்க்ஸ் ரசிச்சுப் பார்த்துட்டு ஊடே கமென்ட்ஸும் கொடுக்கவே என்னனு பார்த்தேன்! கலெக்டர் பரிக்ஷைக்கு எழுதப் போறாளாம் ஒரு பெண். கதாநாயகியின் தங்கையாம் இவள். ஊரிலே இருந்து சென்னைக்குக் கிளம்பி வரா. வரதே என்னமோ பிக்னிக் போறமாதிரி மாமியார், அண்ணி எல்லோரையும் அழைச்சிட்டு வரா. போனாப் போறதுனு பார்த்தா ஊரை விட்டுக் கிளம்பறச்சே கைப்பையை நல்லா சோதனை பண்ணி,அதிலே பரிக்ஷைக்கு வேணுங்கற முக்கியமான ஆவணங்கள், எல்லாத்துக்கும் மேலே உள்ளே நுழையும் ஹால் டிக்கெட் இருக்கானு பார்க்க வேண்டாமா? ம்ஹும் அந்த அம்மா அதை எல்லாம் பார்க்கவே இல்லை. இத்தனைக்கும் அவங்க பரிக்ஷை எழுதக் கூடாதுனே உடல் நலம் கெட்டுப் போன மாதிரி நடிச்ச மாமனாராம்; அவர் ஆஸ்பத்திரியிலே இருக்கையிலே அவர் பக்கத்திலேயே அழகாக் கைப்பையை வைச்சுட்டுத் திரும்ப அதைத் திறந்து பார்க்கவே இல்லையாம். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஜிப்பை ஒரு இழு இழுத்திருந்தால் போதும். ம்ஹும் கடைசி வரை செய்யவே இல்லை.

அதுவும் ஹாலில் உள்ளே விடத் தன்னுடைய முறை வரும்வரைக்கும் கைப்பையைத் திறக்கவே இல்லையாம். ஜெராக்ஸ் காப்பி வேறே எடுத்து வைச்சிருக்கணும்; அதுவும் எடுத்து வச்சிருந்தால் அதாவது இருக்குமே. அவங்க முறை வந்ததும் கைப்பையை அப்போத்தான் திறக்கவே திறக்கிறாங்க. ஹால் டிக்கெட் இல்லை; உடனே பதறுகிறாங்க; ஓடறாங்க; ஊருக்குத் தொலைபேசி அக்காவோட ஆலோசனை கேட்கிறாங்க. அன்னிக்குனு பாருங்க அவங்களுக்கு ஒரு ப்ரவுசிங் சென்டரும் திறக்கலையாம்; திறந்த ஒரே ஒரு ப்ரவுசிங் சென்டரிலும் கரன்ட் இல்லையாம். அவங்க அக்கா ஊரிலே இருந்து எக்சாமினரோட பேசறாங்களாம். அப்போப் பதட்டத்திலே ஃபோன் கீழே விழுந்து உடையுது. பாவமா இருக்கா எல்லாருக்கும்?

எனக்கு இல்லை. இவங்களை மாதிரித் திட்டம் போட முடியாதவங்கள்ளாம் கலெக்டரா வந்து என்ன கிழிக்கப் போறாங்க. ஐஏ எஸ் ஐ சிஎஸ் பரிக்ஷை எழுதறதெல்லாம் சாதாரண விஷயமா? எவ்வளவு தயாரிப்பு? எவ்வளவு திட்டம் போடணும்! ஹால் டிக்கெட் விஷயத்தில் கோட்டை விடறவங்க எல்லாம் எப்படி கலெக்டரா வந்து குப்பை கொட்ட முடியும்? முன் கூட்டியே திட்டம் போட்டுக்கொண்டு ஊரை விட்டுக் கிளம்பும் முன்னரே எல்லாத்தையும் சரி பார்த்திருக்கணும். ஒண்ணுக்கு மூணு காப்பி எல்லாத்துக்கும் எடுத்துத் தனித்தனி இடங்களில் பத்திரப்படுத்தணும். கைப்பையில் ஒரிஜினலை வைத்திருந்தால் கைப்பையை உங்க கணவரே கேட்டாலும் கொடுக்கக் கூடாது. அப்படியே கொடுக்க நேர்ந்தாலும் சரியா இருக்கானு பார்த்துக்கணும்.

அப்படியே மறந்து போய் தேர்வு நடக்குமிடம் வந்துட்டாலும் பதட்டமே இல்லாமல் தன்னுடைய விபரங்களைச் சொல்லி இங்கேயே இருக்கும் கணினியில் தன்னுடைய ஹால் டிக்கெட் கிடைக்கும் என்பதால் தான் இங்கேயே தரவிறக்கிக் கொள்ள அனுமதி கேட்டிருக்க வேண்டும். ஊரிலே இருக்கும் அக்காவை விட இங்கேயே இருக்கும் எக்சாமினர் தான் உதவுவார் என்ற எண்ணம் தோன்ற வேண்டாமா? ஒரு தவறு நிகழ்ந்து விட்டது என்றால் அடுத்தது என்ன? அதை எப்படித் திருத்த முடியும் எனப் பார்க்கிறதை விட்டுட்டு அழுதுட்டு நிக்கிறாங்களாம். இப்படி மனோதைரியம் இல்லாமல் என்னத்தைக் கலெக்டர் ஆகிறது? அரிசிக் கடத்தலையோ, மணல் கடத்தலையோ எப்படிப் பிடிக்கிறது? அங்கே போயும் அழுதே அதைத் தடுப்பாங்களோ என்னமோ!

தைரியம் இல்லாமல் இருக்கும் இம்மாதிரிப் பெண்களை அபலையாகச் சித்திரிப்பதும், அதை எல்லாரும் பார்க்கும்படியாக நெடுந்தொடர்களில் காட்டுவதும் அந்த சீரியலின் ரேட்டிங்குக்கு வேண்டுமானால் சரியாய் இருக்கும். ஆனால் சவால்களை எதிர்கொள்வதும், அதிலிருந்து மீண்டு வருவதுமே ஒரு கலெக்டராக ஆக நினைக்கும் பெண்மணிக்கு முக்கிய நோக்கமாய்க் காட்டி இருக்க வேண்டும். இப்படித் தன் சொந்த விஷயத்திலேயே கவனம் இல்லாத பெண்மணி எப்படி ஒரு கலெக்டராக ஆகி ஒரு மாவட்டத்தைக் கட்டி ஆள முடியும்?

எரிச்சல் வருகிறது. ஒரு அரை மணி நேரம் பார்த்ததுக்கே எனக்கு இப்படி இருந்தால் தினம் தினம் பார்க்கிறபேர் எத்தனையோ!

சிறுமை கண்டு பொங்குவோம் பெண்களே!

ஓட்டுப் போடுங்கப்பா! எல்லாரும்!

எங்கள் ப்ளாக் கின் இடப்பக்க மூலையில் இருக்கும் ஓட்டுப்பெட்டியிலே போய் எல்லாரும் உங்க வாக்குகளை எனக்கே, எனக்கு மட்டுமே அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். ஒருத்தர் எத்தனை ஓட்டு வேணாப் போடலாம்னு சொன்ன எங்கள் ப்ளாக் என்னை ஒரு ஓட்டுக்கு மேல்(ஹிஹிஹி, எனக்குத்தான் அந்த ஒரு ஓட்டையும் போட்டேன், இன்னொரு ஓட்டும்போட்டுக்கலாம்னு பார்த்தா விடலை, அல்பம்)போட அனுமதிக்கவில்லை. இந்தப் பாரபட்சத்தை வன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்மையாகக் கண்டிக்கிறேன்.

வோட் ஃபார் எனக்கே!

சீக்கிரமாப் போய் வரிசையிலே நின்னு ஓட்டுப் போடுங்க!


லேட்டஸ்ட் வாக்குப்பதிவு நிலவரப்படி கீதா சந்தானம் 2% வாக்குகள் அதிகம் பெற்று முன்னணியில் நிற்கிறார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். யாரோ துரோகி அவங்க பெயருக்கும், என் பெயருக்கும் உள்ள ஒற்றுமையைப் பார்த்துட்டு எனக்குப் போட வேண்டிய ஓட்டை எல்லாம் அவங்களுக்குப் போட்டுட்டாங்களோ?? என்ன போங்க! விறுவிறுப்பா கான்வாசிங் எல்லாம் செய்தும் கூட இப்படி ஆயிடுதே! இலவசம் அறிவிக்க வேண்டியது தான்! :)))))))

விரைவில் வருகிறது அறிவிப்பு.

இலவசம் அறிவிச்சு மெயில் அனுப்பியும் எங்கள் ப்ளாக் தூங்கிட்டு இருக்கு போல. அதுக்குள்ளே மீனாக்ஷி எல்லாரையும் டெபாசிட் இழக்க வைச்சுடுவாங்க போலிருக்கு. கான்வாசிங்கே ஆரம்பிச்சிருக்க வேண்டாமோ? சொ.செ.சூ??????????????????????????

Wednesday, January 04, 2012

தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே!


இது என் மனதில் பல நாட்களாக இருந்த ஒரு சந்தேகம். தில்லையிலே குடி கொண்டிருப்பவர் கோவிந்தராஜர். அதிலும் அவரின் கதையும் அனைவரும் அறிந்ததே. மஹாவிஷ்ணு பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கையில் ஆதிசேஷன் பாரம் தாங்காமல் தவிக்க, இறைவனைக் காரணம் கேட்கிறார். அப்போது தன் உள்ளத்துள்ளே நடனமாடும் நர்த்தனசுந்தரநடராஜரின் அருட்கோலத்தையும் நடனத்தையும் ரசித்தே தான் அஜபா ஜபம்(மனதிற்குள்ளாகவே ஜபித்தல், இதன் மேலதிக விளக்கம் இந்தக் கட்டுரையின் நோக்கம் அல்ல என்பதால் மன்னிக்கவும்) ஜபித்ததையும் கூறத் தானும் காணவேண்டும் என்று ஆதிசேஷன் பதஞ்சலியாக அவதரித்துத் தில்லை வந்து வியாக்ரபாதரோடு சேர்ந்து திருநடனத்தைக் கண்ணாரக் கண்டதும், அங்கேயும் பெருமாள் ஶ்ரீகோவிந்தராஜராக வந்து ஈசனின் திருநடனத்தைக் கண்ணாரக் கண்டதாகவும், தாம் கண்ட இக்கோலத்தை இவ்வுலக மக்களும் காணவேண்டி அவ்வண்ணமே காட்சி தரப் பதஞ்சலியும், வியாக்ரபாதரும் பிரார்த்தித்ததும், அவ்வாறே இன்றுவரை இருவரும் காட்சி தருவது அனைவரும் அறிவோம். சிதம்பர ரகசியம் தொடருக்காக வேண்டிப் பல புத்தகங்களைப் படித்தபோதும், பல குறிப்புகளைத் தேடியபோதும் தெய்வத்தின் குரலில் பரமாசாரியார் அவர்கள் கீழ்க்கண்ட விஷயத்தைப் பகிர்ந்து கொண்டிருந்தார். அதன் பின்னர் பெருமாள் திருமொழியைப் பல்வேறு சமயங்களில் படிக்க நேர்ந்தபோதும் தில்லை விளாகம் ஶ்ரீராமரைப் பற்றித் தெரிய வந்தபோதும் இதுதான் சரியானதாய் இருக்கவேண்டும் எனப் புரிந்து கொண்டேன். பலநாட்களாய் மனதில் உருப்போட்டு வைத்திருந்த ஒன்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.


தில்லையிலே நடராஜரும் கோவிந்தராஜரும் ஒருசேரக் கோயில்கொண்டு அனைவரையும் அருள் பாலித்து வருவதை அறிவோம். தில்லையம்பலம் பொன்னம்பலம் எனில் கோவிந்தராஜர் குடி கொண்டிருக்கும் கோயிலைத் திருச்சித்திரகூடம் என்கிறோம். ஆனால் நம் தமிழ்த்தாத்தாவுக்கோ திருச்சித்ரகூடம் என்றால் அங்கே ஶ்ரீராமர் அன்றோ குடியிருக்கவேண்டும். மேலும் குலசேகராழ்வாரின் பெருமாள் திருமொழியில் அவர் ராமரைக் குறித்தே பாடியுள்ளாரே. ஒரு இடத்தில் பள்ளி கொண்ட பெருமானைக் குறித்து எதுவும் சொல்லவில்லையே என்றெல்லாம் யோசனை பிறந்திருக்கிறது. ஆகவே அவர் மேலும் மேலும் ஆராய்ச்சிகள் செய்திருக்கிறார். பெருமாள் திருமொழியில் ராமாயண சம்பவங்களே இடம்பெறுவதால் ஶ்ரீராமரை மூலவராய்க் கொண்ட வேறொரு கோயிலே இது என்ற முடிவுக்கும் வந்திருக்கிறார்.



ஆனால் குலசேகராழ்வாரோ எல்லாக் கோயில்களிலும் உள்ள பெருமாளை ஶ்ரீராமராகவே கண்டார் என்பார்கள். உதாரணமாகத் திருக்கண்ணபுரம் செளரிராஜப் பெருமாளைக் கூட


மன்னு புகழ் கோசலைதன் மணிவயிறு வாய்த்தவனே

தென்னிலங்கை கோன்முடிகள் சிந்துவித்தாய் செம்பொஞ்சேர்

கன்னிநன்மா மதிள்புடை சூழ் கணபுரத்தென் கண்மணியே

என்னுடைய இன்னமுதே இராகவனே தாலேலோ.”


என்ற தாலாட்டால் துதிக்கிறார். ஆனால் இதே குலசேகராழ்வார் திருச்சித்ரகூடம் குறித்த பாடலில்,


“தில்லைநகர் திருச்சித்ர கூடந்தன்னுள்

திறல் விளங்கு மாருதியோடு அமர்ந்தான் தன்னை.”


என்று பாடி இருக்கிறார். ஶ்ரீராமன் எங்கெல்லாம் கோயில் கொண்டிருக்கிறானோ அங்கெல்லாம் மாருதியும் கட்டாயமாய் இருப்பான். ஆனால் சிதம்பரம் கோயிலில் மாருதி இல்லை. ஆனால் குலசேகராழ்வார் அதே திருச்சித்ரகூடம் குறித்த பாடல் தொகுப்பில் வேறொரு இடத்தில்


“தில்லைநகர் திருச்சித்ரகூடந்தன்னுள் அந்தணர்களொரு மூவாயிரவரேத்த”


என்றும் குறிப்பிடுகிறார். இந்தக் குறிப்பிட்ட வரிகள் குழப்பத்தைக் கொடுக்கும். தில்லை வாழ் அந்தணர்கள் மூவாயிரம் பேர்கள் என்பார்கள் அல்லவா? ஆகவே மூவாயிரம் அந்தணர்கள் ஏத்திப் பாடிய காரணத்தால் தில்லைச் சிதம்பரத்தையே திருச்சித்ரகூடம் என நினைத்திருக்கிறார்கள். ஆனால் அது தவறு என்பதே தமிழ்த்தாத்தாவின் கூற்று. அவர் சொல்லும் காரணம் வருமாறு:


தமிழ்த்தாத்தா வாழ்ந்த காலத்துக்கு சுமார் நூறாண்டுகள் முன்னர் பழைய தஞ்சை மாவட்டம் திருத்துறைப்பூண்டிக்கு அருகே உள்ள தில்லை விளாகம் என்னும் ஊரில் ஶ்ரீசீதா, லக்ஷ்மண, அநுமத் சமேத ஶ்ரீராமச்சந்திர மூர்த்தியின் விக்ரஹங்களோடு, ஶ்ரீநடராஜர், சிவகாமி அம்மையின் விக்ரஹங்களும் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. இதைக் கேள்விப்பட்ட தமிழ்த்தாத்தா செய்த ஆய்வில் இந்தத் தில்லை விளாகமே உண்மையான திருச்சித்ரகூடம் என்று கண்டறிந்திருக்கிறார். ஏனெனில் இந்த ஊரின் பெயரே தில்லை விளாகம் என்று இப்போது கூறுகிறார்கள். தில்லை சம்பந்தப்பட்டிருப்பதால் நடராஜர் இங்கே இருந்திருப்பதும் நிச்சயமாகிறது. அதோடு ஶ்ரீராமரும் இங்கே இருந்து கண்டெடுத்திருக்கிறார்கள் எனில் ஶ்ரீராமரும், நடராஜரும் சேர்ந்தே இங்கிருந்திருக்க வேண்டும். ஆகவே இதைத் தான் தில்லைத் திருச்சித்ரகூடம் என்றழைத்திருக்க வேண்டும். பின்னர் காலப்போக்கில் தில்லை விளாகம் என மாறி இருக்கலாம்.



அதிலும் ஶ்ரீநடராஜர் விக்ரஹம் அம்பல ஊருணி என்னும் குளத்தருகே கண்டுபிடிக்கப்பட்டதால் அம்பலம் ஒன்று இங்கே இருந்திருக்கிறது. ஆகவே திருவெண்காட்டை ஆதி சிதம்பரம் எனச் சொல்வதைப் போல் இதையும் இரண்டாவது சிதம்பரமாகச் சொல்லி இருக்கலாம். சிதம்பரம் தீக்ஷிதர்களில் சிலர் இங்கே இருந்து வழிபாடுகள் நடத்தி இருக்கலாம். மேலும் ஶ்ரீராமர், சீதா, லக்ஷ்மண, அநுமத் சமேதராய்க் காட்சி கொடுக்கும் சந்நிதிகளையே சித்ரகூடம் என்பார்கள். எப்படிப் பெருமாள் சந்நிதிகளில் கருடாழ்வார் முக்கியமோ அதைவிட முக்கியமாய் ஶ்ரீராமர் சந்நிதியில் அநுமன் இல்லாமல் இருக்கமாட்டார். ஆகவே தில்லை விளாகம் ஶ்ரீராமர் கோயிலையே தில்லைத் திருச்சித்ரகூடம், என்று அழைத்திருக்கவேண்டும். இந்தக் கோயில் விக்ரஹங்கள் அந்நியப்படையெடுப்பின் போது பூமியில் புதைக்கப்பட்டுப் பின்னர் சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் மீட்டெடுக்கப்பட்டுக் கோயிலும் கட்டப்பட்டிருக்கிறது. முதலில் ராமர் குடும்பத்தினரின் விக்ரஹங்களே கண்டெடுக்கப்பட்டாலும் இதற்குச் சுமார் 30 ஆண்டுகளிலேயே நடராஜர் விக்ரஹமும் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. 1862-ஆம் ஆண்டு ஶ்ரீராமர் குடும்பமும், 1892-இல் ஶ்ரீநடராஜர், சிவகாமி விக்ரஹங்களும் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. மேலும் ஶ்ரீராமர் குடும்பத்தினரின் விக்ரஹங்களின் அமைப்பும், ஶ்ரீநடராஜர், சிவகாமி விக்ரஹ அமைப்பும் ஒரே மாதிரியாக இருந்ததாலும் இவை இரண்டும் ஒரு காலத்தில் ஒருசேரக் கோயில் கொண்டிருந்திருக்கவேண்டும் என்பதும் தாத்தா அவர்களின் தீர்மானமான கருத்து. ஆகவே தில்லைத் திருச்சித்ரகூடம் என்பது தில்லை விளாகமாகவே இருக்கவேண்டும். ஏனெனில் சீதா, லக்ஷ்மணரோடு மட்டும் ஶ்ரீராமர் இருந்து அருள்பாலிக்கும் தலங்களையே திருச்சித்ரகூடம் என்பார்கள். பட்டாபிஷேஹ ராமர் என்றால் சகலமான உறவினர்கள், நட்பு வட்டங்கள் சூழ அமர்ந்திருப்பார். ஶ்ரீராமர் தனித்து சீதையோடும், லக்ஷ்மணனோடும் இருந்தது பஞ்சவடியும், சித்ரகூடமும் மட்டுமே. இதிலே பஞ்சவடியிலே ராவணன் வந்து சீதையைத் தூக்கிச் சென்ற துக்கமான சம்பவம் நடந்ததால் சித்ரகூடத்தை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொண்டு, சீதை, ராமர், லக்ஷ்மணர் மூவர் மட்டும் அநுமனோடு காட்சி கொடுக்கும் தலங்களே சித்ரகூடம் எனப்படும். தில்லைவிளாகம் ராமர் மிகவும் பிரபலமானவர். ஒருமுறையாவது சென்று பார்க்க வேண்டும். நாங்கள் இன்னமும் இந்தக் கோயிலுக்குச் செல்லவில்லை. சென்று வந்ததும் மேலதிகத் தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறேன். நன்றி.


அதீதம்

Monday, January 02, 2012

பதிவர் ப்ரியாரவியின் சில கேள்விகளும், என் பதிலும்

ப்ரியா: ஒரு சிலர் மற்றும் ஆன்மிகத்தில் சிறந்து விளங்குவதற்கு ஜாதக அமைப்பும் ஒரு காரணம் என்கிறார்கள் .


நான்: ம்ஹூம் இதுக்கெல்லாம் ஜாதகம் சரியா வராது என்பதே என் கருத்து. நம் மனம் நம் கட்டுப்பாட்டினுள் நாம் தான் கொண்டு வரணும். ஜாதகம் என்ன செய்ய முடியும்? ஓரளவுக்கே ஜாதகத்தை நம்பலாம். பக்தியில் ஆரம்பித்தால் அது ஆன்மிகத்தில் கொண்டு போய்விடும்.

ப்ரியா:அதோடு சேர்த்து எடுத்து கொள்ளும் பயிற்சியும் நம்மை பக்குவபடுத்தும் என்றும் சொல்கிறார்கள் .உடலுக்கு உடற்பயிற்சி ,மனதிற்கு தியான பயிற்சிஉயிருக்கு காயகல்ப பயிற்சி என்று செய்து வந்தாலே பழக்கம் வழக்கமாகி, வழக்கம் வாழ்க்கையில் நம்மை செம்மை பெற செய்யும் என்றும்சொல்கிறார்கள் .


நான்: காயகல்பப் பயிற்சி என்பதெல்லாம் அவ்வளவு எளிதல்ல. எத்தனையோ படிகள் தாண்டிச் செல்லவேண்டும். உடலுக்கு நீங்க என்ன ஆசனப் பயிற்சி செய்யறீங்களா? இல்லைனா ட்ரெட் மில் போன்ற உடல் பயிற்சி மட்டுமா? எதுவானாலும் அது ஆரம்பமே. தியானம் என்றால் மணிக்கணக்காக உங்களை மறந்து உங்களால் உட்கார முடியுதா? அந்த நேரம் உங்களுக்குள்ளே தோன்றும் உணர்வை உங்களால் வெளியே சொல்ல முடிகிறதா? விவரிக்க முடியுமா? உங்களை உங்களால் தனித்துக் காண முடிகிறதா? அப்படிக் காணமுடிந்தால் நீங்கள் கொடுத்து வைத்தவர். பொறாமையாக இருக்கிறது.


ப்ரியா: சரி .,இதை மட்டும் செய்தால் போதுமா .

நான்: இதெல்லாம் அவரவர் விருப்பத்தைப் பொறுத்தே என எனக்குத் தோன்றுகிறது.

ப்ரியா: ஆன்மிக வகுப்புகளில் காலத்து கொள்ளுங்கள் ,நல்ல நல்ல நூல்களை படியுங்கள் , சத்சங்கங்களில் கலந்து கொண்டு பயன் பெறுங்கள் என்றும் சொல்கிறார்கள் .

நான்: ஆமாம், ஆனால் ஆன்மிகத்திற்கும், பக்திக்கும் வேறுபாட்டைப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் தானே? என்னைப் பொறுத்தவரையில் நான் ஆன்மிகக் கடலின் கரையில் தான் இருந்து கொண்டிருக்கிறேன். இன்னும் உள்ளே இறங்கவில்லை. கரையில் இருந்து வேடிக்கை பார்க்கிறேன். பக்தி மட்டுமே எனக்குத் தெரிந்த ஒன்று. அதுவும் கண்மூடித்தனமாக இல்லை. எனக்கு வேண்டியதை அவன் தருவான். என்னுடையது எனக்கு எப்படியும் கிடைத்தே தீரும்; அதற்காகக் கவலைப்படவேண்டாம் என்பது போன்ற நம்பிக்கை. கோயில்களில் பிரார்த்தனை செய்து கொள்வது குறைவு. நான் நிறைவேற்றும் பிரார்த்தனைகளே பிறர் எனக்காக வேண்டிக்கொண்டு என்னிடம் சொல்லி நிறைவேற்றச் சொல்வதே. நானாக இதைக் கொடு, அதைக் கொடுனு கேட்டதில்லை; கேட்கத் தோன்றியதில்லை; ஆனால் எல்லாருக்கும் நல்லதே நடக்கணும்; அவங்க கேட்கிறது கிடைக்கணும்னு தியானம் செய்கையில் நினைப்பதுண்டு.

தியானம் செய்கையில் யாருக்குப் பிரார்த்தனை செய்ய நினைக்கிறேனோ, அவர்களை நினைவில் கொண்டு வருவதுண்டு. யாருக்கானும் உடல்நலம் சரியில்லை எனில் அப்போது அவர்களை நினைவு கூர்ந்து பிரார்த்திப்பதுண்டு. இதெல்லாம் என் பூரண நினைவில் தான் செய்கிறேன். ஆகையால் தியானம் என்பது என்ன? தன்னை மறப்பதா? ஆழ்நிலை தியானம் ஒன்றே உண்மையான தியானம்/சமாதி நிலையாக இருக்கலாம். அத்தகைய ஆழ்நிலை தியானத்திற்கு இன்றுவரை நான் போனதே இல்லை; இதைச் சொல்வதில் தயக்கமோ, வெட்கமோ இல்லை. இதுதான் உண்மை நிலை. ஆனால் எதற்காக தியானத்தில் அமர்கிறேனோ அந்த உண்மைக்காரணம் மனதில் நிற்கும். மனதைக்கஷ்டப்பட்டு அந்தக் காரணத்திலேயே நிறுத்துவேன்.

ப்ரியா: நிற்க !


நான்: உட்கார்ந்துக்கறேனே, காலை வலிக்கும். :


ப்ரியா: தியானம் என்பது என்பது ஒரு அற்புதமான விஷயம் கீதாம்மா.மனதை கட்டாயபடுத்தி அடக்கும் போது அது அடங்க மறுக்கிறது . அதன் போக்கில் ஓட விடும்போது காலபோக்கில் அதுவே அடங்க தொடங்குகிறது.சின்ன அணு(துகள் ) அளவு மனதை சுருக்கவும் ,பின்னர் பிரபஞ்ச அளவு விரிக்கவும் பயிற்சி செய்ய செய்ய சாத்தியமாகிறது


நான்: நிச்சயமா எனக்கு இது சாத்தியமே இல்லை என்று சொல்வேன். ஏனெனில் எப்போதும் அடங்க மறுக்கும் மனம். அதை அதட்டி உருட்டி அடக்கி நான் நிலைக்கு வரவே சில நிமிடங்கள் பிடிக்கிறது. என்னோட லங்க்ஸ் கூடச் சுருங்கித் தான் இருக்கே தவிர விரிந்து கொள்வது இல்லை! :((( மனசு எங்கே! எண்ணாத எண்ணமெல்லாம் எண்ண ஆரம்பிக்கும். என்னைப் பொறுத்த அளவில் நானே சுருங்கி ஒரு சின்னப் புள்ளியாய்த் தோன்றுவது இங்கே யு.எஸ். வரும் சமயங்களில் அதன் வெட்டவெளிகளிலும், ராஜஸ்தான், குஜராத்தின் வெட்டவெளிகளிலும் பலருடன் சேர்ந்து இருக்கையிலும் அனுபவிக்கும் ஒரு மோனநிலையின் போதே. இது எல்லோருக்கும் ஏற்படுமா என்பதும் தெரியாது. ஆனால் பிரபஞ்சத்தின் பிரம்மாண்டம் அசத்தும்; படைத்தவனின் விஸ்வரூபம் புரியும். அப்போது நானே சுருங்கி ஒரு சின்னப் புள்ளியாய் எனக்கு நானே உணர்வேன். இந்தப் பிரபஞ்சம் எவ்வளவு விரிந்து பரந்து இருக்கிறது என்பதும் அதில் அணுவிலும் சிறிய அணுவைப் போலுள்ள நான் எத்தனை சின்னவள் என்பதை உணர்வேன். அரை வட்ட வடிவாய்த் தெரியும் பூமியும், அதன் மேலே அரை வட்ட வடிவாய்க் கவிந்திருக்கும் ஆகாயமும், தொடுவானம் தென்படும் அந்தக் கோடியும், அங்கே காணப்படும் நக்ஷத்திரங்களும் விண்ணின் ஒரு கோணத்தில் தெரியும் கிரஹங்களும் சேர்ந்து என்னை ஒரு மயக்க நிலைக்கு ஆழ்த்துவது என்னவோ உண்மை. ஆனால் இது எப்போதும் ஏற்பட்டதில்லை. சமீபத்தில் ஹூஸ்டனில் இருந்து சான் அன்டானியோவில் ஸீ வேர்ல்ட்(sea world) பார்க்கச் சென்றபோது கார் பார்க்கிங்கில் நின்ற சமயம் என்னுள்ளே ஏதேதோ உணர்வுகள். நான் பறக்கிறாப்போல். என்னையே நான் கவனிப்பது போல்.... எல்லாம்! மற்றபடி இன்று கூட தியானத்தில் நழுவி நழுவிச் செல்லும் ஶ்ரீராமஜயத்தைப் பிடித்துக் கொண்டு வந்தேன்.

ப்ரியா: எனது இன்னொரு சந்தேகம் என்ன வென்றால் மௌன நிலை சிறந்ததா.

நான்: மெளனம் என்பதை லெளகிக வாழ்க்கையில் நடைமுறைப் படுத்தணுமா? ஆன்மிகத்திலா? இரண்டிலும் மெளனம் பல பொருள்படும். மெளனம் என்றால் யாருடனும் பேசாமல் இருப்பதா? இல்லை பேசினாலும் உள்ளுக்குள்ளே காரியத்தில் கவனமாய் இருப்பதா? என்னைப் பொறுத்தவரை கூட்டத்தின் நடுவே இருந்தாலும் பல சமயங்களில் பேசாமல் இருந்திருக்கிறேன். ஆனால் உள்ளுக்குள்ளே சிந்தனைகள் ஓடிக்கொண்டிருக்கும். இது மெளனமா என்றால் இல்லை; பேசாமல் இருந்தால் மெளனம் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. சிந்தனைகளை ஒடுக்கி, ஆற்றலை ஒருமுகப்படுத்தி உள்ளே தேக்கிக் கொண்டு வெளியே சாதாரணமாக எப்போதும்போல் சலனங்களைக்காட்டுவதும் மெளனமே என நினைக்கிறேன். அதாவது வெளியே சலனமாக இருந்தாலும் உள்ளுக்குள்ளே அமைதியாய் இருப்பது. நிதானம் இழக்காமல் இருப்பது என்று வைத்துக்கொள்ளலாமோ? அல்லது தன் காரியத்தில் மன ஒருமை, தன்னுள்ளே தன்னை அறிவதில் ஈடுபாடு, ஆழ்ந்த கவனம் என்று கொள்ளலாமா? இதெல்லாம் லெளகீக வாழ்க்கைக்குச் சரியாக வரும் உதாரணங்கள். உங்களோடு பஸ்ஸில் கமென்டிக்கொண்டே வேறு பதிவுகளை எழுத வேண்டிய விஷயங்களில் ஆழ்ந்து போக என்னால் இயலும். கவனம் முழுதும் எழுத வேண்டிய பதிவில் இருந்தாலும் பஸ்ஸிலும் சரியாக பதில் கொடுப்பேன். இது மெளனமா? கூடியவரை தடுமாற்றம் வந்ததில்லை; எப்போவானும் வரும். மனம் கலங்கினால் வரும். என்றாலும் சமாளித்துவிடுவேன். ஆனால் பொதுவாக மெளனம் என்றால் என் புரிதல் எதற்கும் கலங்காமல் இருப்பதே! என்ன நடந்தாலும், எப்படி நடந்தாலும் இதுவும் நன்மைக்கே என இருத்தல்.


இதுவும் அவன் செயலே என்று நினைத்தல். நடப்பவைகளிலிருந்து தன்னை வேறுபடுத்திக்கொண்டு மெளனமாக வேடிக்கை பார்த்தல். ஆனால் இது எல்லோராலும் சாத்தியமே இல்லை. இது தான் மெளனம் எனச் சொல்லலாமோ? தெரியலை! பேசாமல் மெளன விரதம் இருத்தல் மெளனம் எனச் சொல்ல முடியாது. அன்று முழுதும் மெளன விரதம் எனில் வேறு விஷயங்களை நினைக்காமல் இருக்க வேண்டும்; ஒரு சிலர் மெளனவிரதம் என எழுதிக்காட்டுவார்கள்; வீட்டு விஷயங்களுக்கெல்லாம் பேப்பரில் எழுதிச் செய்யச் சொல்லி, குழந்தைகள், மனைவியிடம் பேப்பரில் எழுதிக்காட்டி, கை ஜாடை, கண் ஜாடை காட்டி, ம்ஹும் அதுவும் கூடாது. அன்று பூராவும் அலைகளே இல்லாத கடல் போலச் சிந்தனைகளே இல்லாத மனத்தோடு இருக்க வேண்டும். முடியுமா? அதான் சித்தத்தைச் சிவனிடம் நாட்டி இருக்கச் சொல்றாங்க. சும்மா இருனும் சொல்றாங்க. இந்த சும்மா இருத்தல் சாதாரண விஷயமே இல்லையே! ஆக மெளனம் என நீங்கள் இங்கே கேட்டது லெளகீக வாழ்க்கைக்கான மெளனம் எனில் தேவை எனும்போது பேசிக்கொண்டு, தேவை இல்லை எனில் பேச்சைக் குறைத்தால் போதும்னு நினைக்கிறேன். ஆனாலும் பேசிவிட்டு மாட்டிக்கொள்வதும் தவிர்க்க முடியாதுதான். குறைவாகப் பேசும் எனக்கும் தேடிக்கொண்டு வரும் பிரச்னைகள். சில சமயம் நாம் ஒன்று நினைத்தால் எதிராளி வேறொன்று நினைக்கையில் என்ன செய்ய முடியும்? இது எனக்கு எப்போதும் நடக்கிறது. அப்போ அதிகப் பேச்சுத்தான்! ஆனாலும் என் நிலையை விளக்கப் பார்ப்பேன். உங்களுக்குத் தொழிலில் பேச்சு முக்கியம். அதைக் குறைக்க முடியுமா? இயன்றவரையில் தேவையான விஷயங்களைப் பேசியே ஆகவேண்டும் அல்லவா? நம் நிலையை விளக்கியும் எதிராளி புரிந்து கொள்ளவில்லை என்றால், அவர் புரிந்து கொள்ளப் பொறுத்திருக்க வேண்டும்; வேறு வழியே இல்லை. அதை மெளனம் எனக் கொள்வதா? இல்லை அல்லவா?


ப்ரியா: நான் சில ஏன் பல சமயங்களில் இரண்டாக இருக்கிறேனோ அல்லது பிம்பத்தை ஏற்படுத்தி கொள்கின்றேனோ என்று படுகிறது


நான்: இந்த பிம்பம் ஏற்படுத்திக்கொள்வது இணையத்தில் என்னாலும் தவிர்க்க முடியவில்லை. ஆகையால் இந்த விஷயத்தில் உங்களுக்குச் சொல்ல என்னிடம் எதுவும் இல்லை. முதலில் நான் ஏற்படுத்திக்கொண்டிருக்கும் பிம்பத்தை என்ன செய்யறது? அதன் பின்னரே உங்களுக்கு அறிவுரை கூற முடியும்.

ப்ரியா: இலகுவாக ஒன்று

நான்: உங்களுக்கு எது பிடிக்குமோ அதை லகு என நினைக்கிறீர்கள்.

ப்ரியா:ஆன்மிக தேடலாக மற்றொன்று


நான்: எல்லாச் சமயத்திலும், எல்லாவற்றையும் ஆண்டனுக்கு அர்ப்பணம் னு நினைங்க. தனியா ஆன்மிகத் தேடல்னு ஒண்ணு வராது. வந்தாலும் எது வேண்டும் என்று புரிய ஆரம்பிக்கும். முதலில் பக்தியில் தொடங்கினாலே போதும்னு என் கருத்து.


ப்ரியா: மௌனம் என்பதை கூட நான் இவ்வாறு அர்த்தம் கொள்கிறேன் அமைதியாக எல்லாவற்றையும் பார்த்து புன்னகைத்து மிகவும் குறைவாக பேசுவது என்பது


நான்: குறைவாய்ப் பேசணும்தான்; பேசவேண்டிய நேரத்தில் வாய் மூடியும் இருக்கக் கூடாது. மெளனம் என்ற பெயரில் வாய்மூடிக்கொண்டு உள்ளுக்குள்ளே போராட்டம் நடத்தினால்??

ப்ரியா: அல்லது மனதில் இருப்பதை எல்லாம் பேசிவிடும் போது மனம் காலியாகவோ அல்லது லேசாகவோ இருக்கலாம் அல்லவா என்பது இன்னொன்று

நான்: உங்களுக்குப் பிரியமானவர்களிடம் உங்கள் மனதைக் காலி செய்யுங்கள். எல்லாரிடமும் காலி செய்ய வேண்டாம். என்னைப் பொறுத்தவரையிலும் இணையச் செய்திகளில் இருந்து எல்லாமும் என் கணவரிடம் பகிர்ந்து கொண்டுவிடுவேன். அன்றன்றைக்கு அப்டேட் ஆகிவிடும். அதே போல் அவரும் அன்றன்றைக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலிருந்து பத்திரிகைச் செய்திகள் வரை பகிர்ந்து விடுவார். ஆகவே மனம் எப்போதும் காலிதான். அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் அன்றாடப் பேச்சுவார்த்தைகளின் தாக்கங்கள் எல்லோரையும் போல் என்னிடமும் உண்டு. அது தவிர்க்க முடியாதே. நான் ஒன்றும் அசாதாரண மனுஷி இல்லையே. ஆனாலும் கூடியவரை மனம் பாதிக்காமல் இருக்கவேண்டி வேறு வேலைகளில் கவனம் செலுத்திவிடுவேன். முக்கியமாய்ப் புத்தகங்கள். பல சமயங்களிலும் என்னை நிலை தடுமாறாமல் வைத்திருப்பவை புத்தகங்களே.

ப்ரியா: அல்லது நான் சொல்வது முழுவதும் சரியா தவறா என்றும் உறுதி படுத்தி கொள்ள முடியவில்லை :)

நான்: இது ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொருவிதமாக மாறுபடும். நீங்க சரின்னால் இன்னொருத்தர் தப்பும்பாங்க.

ப்ரியா: உங்களை போன்றோரின் அனுபவம் எங்களை போன்றோரை வழி நடத்தும் என்பது எனது தீர்க்கமான எண்ணம் கீதாம்மா.

நான்: வயது ஒன்றே காரணம் என்றால் எனக்கும் தகுதி தான். ஆனால் மற்றபடி எனக்கு எந்தத் தகுதியும் இல்லை என்பது என் தீர்மானமான முடிவு.

***************************************************************************************

மேலே நீங்கள் காண்பவை திரு தி.வா. அவர்களின் ஒரு பதிவைக் குறித்து எழுந்த ஒரு கலந்துரையாடல்/மடலாடல். தனிப்பட்ட மடலாடல் என்றாலும் செய்தி பொதுவானதே என்பதால் அதீதத்துக்கு அனுப்பினேன். இப்போது இங்கே பகிர்ந்து கொள்கிறேன். வழக்கம்போல் பின்னூட்டம் எதுவும் வராவிட்டாலும் எல்லாரும் படிக்கிறாங்க என்ற நினைப்பு தான் பிழைப்பைக்கெடுக்குது! :P :P:P