எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, January 02, 2012

பதிவர் ப்ரியாரவியின் சில கேள்விகளும், என் பதிலும்

ப்ரியா: ஒரு சிலர் மற்றும் ஆன்மிகத்தில் சிறந்து விளங்குவதற்கு ஜாதக அமைப்பும் ஒரு காரணம் என்கிறார்கள் .


நான்: ம்ஹூம் இதுக்கெல்லாம் ஜாதகம் சரியா வராது என்பதே என் கருத்து. நம் மனம் நம் கட்டுப்பாட்டினுள் நாம் தான் கொண்டு வரணும். ஜாதகம் என்ன செய்ய முடியும்? ஓரளவுக்கே ஜாதகத்தை நம்பலாம். பக்தியில் ஆரம்பித்தால் அது ஆன்மிகத்தில் கொண்டு போய்விடும்.

ப்ரியா:அதோடு சேர்த்து எடுத்து கொள்ளும் பயிற்சியும் நம்மை பக்குவபடுத்தும் என்றும் சொல்கிறார்கள் .உடலுக்கு உடற்பயிற்சி ,மனதிற்கு தியான பயிற்சிஉயிருக்கு காயகல்ப பயிற்சி என்று செய்து வந்தாலே பழக்கம் வழக்கமாகி, வழக்கம் வாழ்க்கையில் நம்மை செம்மை பெற செய்யும் என்றும்சொல்கிறார்கள் .


நான்: காயகல்பப் பயிற்சி என்பதெல்லாம் அவ்வளவு எளிதல்ல. எத்தனையோ படிகள் தாண்டிச் செல்லவேண்டும். உடலுக்கு நீங்க என்ன ஆசனப் பயிற்சி செய்யறீங்களா? இல்லைனா ட்ரெட் மில் போன்ற உடல் பயிற்சி மட்டுமா? எதுவானாலும் அது ஆரம்பமே. தியானம் என்றால் மணிக்கணக்காக உங்களை மறந்து உங்களால் உட்கார முடியுதா? அந்த நேரம் உங்களுக்குள்ளே தோன்றும் உணர்வை உங்களால் வெளியே சொல்ல முடிகிறதா? விவரிக்க முடியுமா? உங்களை உங்களால் தனித்துக் காண முடிகிறதா? அப்படிக் காணமுடிந்தால் நீங்கள் கொடுத்து வைத்தவர். பொறாமையாக இருக்கிறது.


ப்ரியா: சரி .,இதை மட்டும் செய்தால் போதுமா .

நான்: இதெல்லாம் அவரவர் விருப்பத்தைப் பொறுத்தே என எனக்குத் தோன்றுகிறது.

ப்ரியா: ஆன்மிக வகுப்புகளில் காலத்து கொள்ளுங்கள் ,நல்ல நல்ல நூல்களை படியுங்கள் , சத்சங்கங்களில் கலந்து கொண்டு பயன் பெறுங்கள் என்றும் சொல்கிறார்கள் .

நான்: ஆமாம், ஆனால் ஆன்மிகத்திற்கும், பக்திக்கும் வேறுபாட்டைப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் தானே? என்னைப் பொறுத்தவரையில் நான் ஆன்மிகக் கடலின் கரையில் தான் இருந்து கொண்டிருக்கிறேன். இன்னும் உள்ளே இறங்கவில்லை. கரையில் இருந்து வேடிக்கை பார்க்கிறேன். பக்தி மட்டுமே எனக்குத் தெரிந்த ஒன்று. அதுவும் கண்மூடித்தனமாக இல்லை. எனக்கு வேண்டியதை அவன் தருவான். என்னுடையது எனக்கு எப்படியும் கிடைத்தே தீரும்; அதற்காகக் கவலைப்படவேண்டாம் என்பது போன்ற நம்பிக்கை. கோயில்களில் பிரார்த்தனை செய்து கொள்வது குறைவு. நான் நிறைவேற்றும் பிரார்த்தனைகளே பிறர் எனக்காக வேண்டிக்கொண்டு என்னிடம் சொல்லி நிறைவேற்றச் சொல்வதே. நானாக இதைக் கொடு, அதைக் கொடுனு கேட்டதில்லை; கேட்கத் தோன்றியதில்லை; ஆனால் எல்லாருக்கும் நல்லதே நடக்கணும்; அவங்க கேட்கிறது கிடைக்கணும்னு தியானம் செய்கையில் நினைப்பதுண்டு.

தியானம் செய்கையில் யாருக்குப் பிரார்த்தனை செய்ய நினைக்கிறேனோ, அவர்களை நினைவில் கொண்டு வருவதுண்டு. யாருக்கானும் உடல்நலம் சரியில்லை எனில் அப்போது அவர்களை நினைவு கூர்ந்து பிரார்த்திப்பதுண்டு. இதெல்லாம் என் பூரண நினைவில் தான் செய்கிறேன். ஆகையால் தியானம் என்பது என்ன? தன்னை மறப்பதா? ஆழ்நிலை தியானம் ஒன்றே உண்மையான தியானம்/சமாதி நிலையாக இருக்கலாம். அத்தகைய ஆழ்நிலை தியானத்திற்கு இன்றுவரை நான் போனதே இல்லை; இதைச் சொல்வதில் தயக்கமோ, வெட்கமோ இல்லை. இதுதான் உண்மை நிலை. ஆனால் எதற்காக தியானத்தில் அமர்கிறேனோ அந்த உண்மைக்காரணம் மனதில் நிற்கும். மனதைக்கஷ்டப்பட்டு அந்தக் காரணத்திலேயே நிறுத்துவேன்.

ப்ரியா: நிற்க !


நான்: உட்கார்ந்துக்கறேனே, காலை வலிக்கும். :


ப்ரியா: தியானம் என்பது என்பது ஒரு அற்புதமான விஷயம் கீதாம்மா.மனதை கட்டாயபடுத்தி அடக்கும் போது அது அடங்க மறுக்கிறது . அதன் போக்கில் ஓட விடும்போது காலபோக்கில் அதுவே அடங்க தொடங்குகிறது.சின்ன அணு(துகள் ) அளவு மனதை சுருக்கவும் ,பின்னர் பிரபஞ்ச அளவு விரிக்கவும் பயிற்சி செய்ய செய்ய சாத்தியமாகிறது


நான்: நிச்சயமா எனக்கு இது சாத்தியமே இல்லை என்று சொல்வேன். ஏனெனில் எப்போதும் அடங்க மறுக்கும் மனம். அதை அதட்டி உருட்டி அடக்கி நான் நிலைக்கு வரவே சில நிமிடங்கள் பிடிக்கிறது. என்னோட லங்க்ஸ் கூடச் சுருங்கித் தான் இருக்கே தவிர விரிந்து கொள்வது இல்லை! :((( மனசு எங்கே! எண்ணாத எண்ணமெல்லாம் எண்ண ஆரம்பிக்கும். என்னைப் பொறுத்த அளவில் நானே சுருங்கி ஒரு சின்னப் புள்ளியாய்த் தோன்றுவது இங்கே யு.எஸ். வரும் சமயங்களில் அதன் வெட்டவெளிகளிலும், ராஜஸ்தான், குஜராத்தின் வெட்டவெளிகளிலும் பலருடன் சேர்ந்து இருக்கையிலும் அனுபவிக்கும் ஒரு மோனநிலையின் போதே. இது எல்லோருக்கும் ஏற்படுமா என்பதும் தெரியாது. ஆனால் பிரபஞ்சத்தின் பிரம்மாண்டம் அசத்தும்; படைத்தவனின் விஸ்வரூபம் புரியும். அப்போது நானே சுருங்கி ஒரு சின்னப் புள்ளியாய் எனக்கு நானே உணர்வேன். இந்தப் பிரபஞ்சம் எவ்வளவு விரிந்து பரந்து இருக்கிறது என்பதும் அதில் அணுவிலும் சிறிய அணுவைப் போலுள்ள நான் எத்தனை சின்னவள் என்பதை உணர்வேன். அரை வட்ட வடிவாய்த் தெரியும் பூமியும், அதன் மேலே அரை வட்ட வடிவாய்க் கவிந்திருக்கும் ஆகாயமும், தொடுவானம் தென்படும் அந்தக் கோடியும், அங்கே காணப்படும் நக்ஷத்திரங்களும் விண்ணின் ஒரு கோணத்தில் தெரியும் கிரஹங்களும் சேர்ந்து என்னை ஒரு மயக்க நிலைக்கு ஆழ்த்துவது என்னவோ உண்மை. ஆனால் இது எப்போதும் ஏற்பட்டதில்லை. சமீபத்தில் ஹூஸ்டனில் இருந்து சான் அன்டானியோவில் ஸீ வேர்ல்ட்(sea world) பார்க்கச் சென்றபோது கார் பார்க்கிங்கில் நின்ற சமயம் என்னுள்ளே ஏதேதோ உணர்வுகள். நான் பறக்கிறாப்போல். என்னையே நான் கவனிப்பது போல்.... எல்லாம்! மற்றபடி இன்று கூட தியானத்தில் நழுவி நழுவிச் செல்லும் ஶ்ரீராமஜயத்தைப் பிடித்துக் கொண்டு வந்தேன்.

ப்ரியா: எனது இன்னொரு சந்தேகம் என்ன வென்றால் மௌன நிலை சிறந்ததா.

நான்: மெளனம் என்பதை லெளகிக வாழ்க்கையில் நடைமுறைப் படுத்தணுமா? ஆன்மிகத்திலா? இரண்டிலும் மெளனம் பல பொருள்படும். மெளனம் என்றால் யாருடனும் பேசாமல் இருப்பதா? இல்லை பேசினாலும் உள்ளுக்குள்ளே காரியத்தில் கவனமாய் இருப்பதா? என்னைப் பொறுத்தவரை கூட்டத்தின் நடுவே இருந்தாலும் பல சமயங்களில் பேசாமல் இருந்திருக்கிறேன். ஆனால் உள்ளுக்குள்ளே சிந்தனைகள் ஓடிக்கொண்டிருக்கும். இது மெளனமா என்றால் இல்லை; பேசாமல் இருந்தால் மெளனம் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. சிந்தனைகளை ஒடுக்கி, ஆற்றலை ஒருமுகப்படுத்தி உள்ளே தேக்கிக் கொண்டு வெளியே சாதாரணமாக எப்போதும்போல் சலனங்களைக்காட்டுவதும் மெளனமே என நினைக்கிறேன். அதாவது வெளியே சலனமாக இருந்தாலும் உள்ளுக்குள்ளே அமைதியாய் இருப்பது. நிதானம் இழக்காமல் இருப்பது என்று வைத்துக்கொள்ளலாமோ? அல்லது தன் காரியத்தில் மன ஒருமை, தன்னுள்ளே தன்னை அறிவதில் ஈடுபாடு, ஆழ்ந்த கவனம் என்று கொள்ளலாமா? இதெல்லாம் லெளகீக வாழ்க்கைக்குச் சரியாக வரும் உதாரணங்கள். உங்களோடு பஸ்ஸில் கமென்டிக்கொண்டே வேறு பதிவுகளை எழுத வேண்டிய விஷயங்களில் ஆழ்ந்து போக என்னால் இயலும். கவனம் முழுதும் எழுத வேண்டிய பதிவில் இருந்தாலும் பஸ்ஸிலும் சரியாக பதில் கொடுப்பேன். இது மெளனமா? கூடியவரை தடுமாற்றம் வந்ததில்லை; எப்போவானும் வரும். மனம் கலங்கினால் வரும். என்றாலும் சமாளித்துவிடுவேன். ஆனால் பொதுவாக மெளனம் என்றால் என் புரிதல் எதற்கும் கலங்காமல் இருப்பதே! என்ன நடந்தாலும், எப்படி நடந்தாலும் இதுவும் நன்மைக்கே என இருத்தல்.


இதுவும் அவன் செயலே என்று நினைத்தல். நடப்பவைகளிலிருந்து தன்னை வேறுபடுத்திக்கொண்டு மெளனமாக வேடிக்கை பார்த்தல். ஆனால் இது எல்லோராலும் சாத்தியமே இல்லை. இது தான் மெளனம் எனச் சொல்லலாமோ? தெரியலை! பேசாமல் மெளன விரதம் இருத்தல் மெளனம் எனச் சொல்ல முடியாது. அன்று முழுதும் மெளன விரதம் எனில் வேறு விஷயங்களை நினைக்காமல் இருக்க வேண்டும்; ஒரு சிலர் மெளனவிரதம் என எழுதிக்காட்டுவார்கள்; வீட்டு விஷயங்களுக்கெல்லாம் பேப்பரில் எழுதிச் செய்யச் சொல்லி, குழந்தைகள், மனைவியிடம் பேப்பரில் எழுதிக்காட்டி, கை ஜாடை, கண் ஜாடை காட்டி, ம்ஹும் அதுவும் கூடாது. அன்று பூராவும் அலைகளே இல்லாத கடல் போலச் சிந்தனைகளே இல்லாத மனத்தோடு இருக்க வேண்டும். முடியுமா? அதான் சித்தத்தைச் சிவனிடம் நாட்டி இருக்கச் சொல்றாங்க. சும்மா இருனும் சொல்றாங்க. இந்த சும்மா இருத்தல் சாதாரண விஷயமே இல்லையே! ஆக மெளனம் என நீங்கள் இங்கே கேட்டது லெளகீக வாழ்க்கைக்கான மெளனம் எனில் தேவை எனும்போது பேசிக்கொண்டு, தேவை இல்லை எனில் பேச்சைக் குறைத்தால் போதும்னு நினைக்கிறேன். ஆனாலும் பேசிவிட்டு மாட்டிக்கொள்வதும் தவிர்க்க முடியாதுதான். குறைவாகப் பேசும் எனக்கும் தேடிக்கொண்டு வரும் பிரச்னைகள். சில சமயம் நாம் ஒன்று நினைத்தால் எதிராளி வேறொன்று நினைக்கையில் என்ன செய்ய முடியும்? இது எனக்கு எப்போதும் நடக்கிறது. அப்போ அதிகப் பேச்சுத்தான்! ஆனாலும் என் நிலையை விளக்கப் பார்ப்பேன். உங்களுக்குத் தொழிலில் பேச்சு முக்கியம். அதைக் குறைக்க முடியுமா? இயன்றவரையில் தேவையான விஷயங்களைப் பேசியே ஆகவேண்டும் அல்லவா? நம் நிலையை விளக்கியும் எதிராளி புரிந்து கொள்ளவில்லை என்றால், அவர் புரிந்து கொள்ளப் பொறுத்திருக்க வேண்டும்; வேறு வழியே இல்லை. அதை மெளனம் எனக் கொள்வதா? இல்லை அல்லவா?


ப்ரியா: நான் சில ஏன் பல சமயங்களில் இரண்டாக இருக்கிறேனோ அல்லது பிம்பத்தை ஏற்படுத்தி கொள்கின்றேனோ என்று படுகிறது


நான்: இந்த பிம்பம் ஏற்படுத்திக்கொள்வது இணையத்தில் என்னாலும் தவிர்க்க முடியவில்லை. ஆகையால் இந்த விஷயத்தில் உங்களுக்குச் சொல்ல என்னிடம் எதுவும் இல்லை. முதலில் நான் ஏற்படுத்திக்கொண்டிருக்கும் பிம்பத்தை என்ன செய்யறது? அதன் பின்னரே உங்களுக்கு அறிவுரை கூற முடியும்.

ப்ரியா: இலகுவாக ஒன்று

நான்: உங்களுக்கு எது பிடிக்குமோ அதை லகு என நினைக்கிறீர்கள்.

ப்ரியா:ஆன்மிக தேடலாக மற்றொன்று


நான்: எல்லாச் சமயத்திலும், எல்லாவற்றையும் ஆண்டனுக்கு அர்ப்பணம் னு நினைங்க. தனியா ஆன்மிகத் தேடல்னு ஒண்ணு வராது. வந்தாலும் எது வேண்டும் என்று புரிய ஆரம்பிக்கும். முதலில் பக்தியில் தொடங்கினாலே போதும்னு என் கருத்து.


ப்ரியா: மௌனம் என்பதை கூட நான் இவ்வாறு அர்த்தம் கொள்கிறேன் அமைதியாக எல்லாவற்றையும் பார்த்து புன்னகைத்து மிகவும் குறைவாக பேசுவது என்பது


நான்: குறைவாய்ப் பேசணும்தான்; பேசவேண்டிய நேரத்தில் வாய் மூடியும் இருக்கக் கூடாது. மெளனம் என்ற பெயரில் வாய்மூடிக்கொண்டு உள்ளுக்குள்ளே போராட்டம் நடத்தினால்??

ப்ரியா: அல்லது மனதில் இருப்பதை எல்லாம் பேசிவிடும் போது மனம் காலியாகவோ அல்லது லேசாகவோ இருக்கலாம் அல்லவா என்பது இன்னொன்று

நான்: உங்களுக்குப் பிரியமானவர்களிடம் உங்கள் மனதைக் காலி செய்யுங்கள். எல்லாரிடமும் காலி செய்ய வேண்டாம். என்னைப் பொறுத்தவரையிலும் இணையச் செய்திகளில் இருந்து எல்லாமும் என் கணவரிடம் பகிர்ந்து கொண்டுவிடுவேன். அன்றன்றைக்கு அப்டேட் ஆகிவிடும். அதே போல் அவரும் அன்றன்றைக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலிருந்து பத்திரிகைச் செய்திகள் வரை பகிர்ந்து விடுவார். ஆகவே மனம் எப்போதும் காலிதான். அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் அன்றாடப் பேச்சுவார்த்தைகளின் தாக்கங்கள் எல்லோரையும் போல் என்னிடமும் உண்டு. அது தவிர்க்க முடியாதே. நான் ஒன்றும் அசாதாரண மனுஷி இல்லையே. ஆனாலும் கூடியவரை மனம் பாதிக்காமல் இருக்கவேண்டி வேறு வேலைகளில் கவனம் செலுத்திவிடுவேன். முக்கியமாய்ப் புத்தகங்கள். பல சமயங்களிலும் என்னை நிலை தடுமாறாமல் வைத்திருப்பவை புத்தகங்களே.

ப்ரியா: அல்லது நான் சொல்வது முழுவதும் சரியா தவறா என்றும் உறுதி படுத்தி கொள்ள முடியவில்லை :)

நான்: இது ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொருவிதமாக மாறுபடும். நீங்க சரின்னால் இன்னொருத்தர் தப்பும்பாங்க.

ப்ரியா: உங்களை போன்றோரின் அனுபவம் எங்களை போன்றோரை வழி நடத்தும் என்பது எனது தீர்க்கமான எண்ணம் கீதாம்மா.

நான்: வயது ஒன்றே காரணம் என்றால் எனக்கும் தகுதி தான். ஆனால் மற்றபடி எனக்கு எந்தத் தகுதியும் இல்லை என்பது என் தீர்மானமான முடிவு.

***************************************************************************************

மேலே நீங்கள் காண்பவை திரு தி.வா. அவர்களின் ஒரு பதிவைக் குறித்து எழுந்த ஒரு கலந்துரையாடல்/மடலாடல். தனிப்பட்ட மடலாடல் என்றாலும் செய்தி பொதுவானதே என்பதால் அதீதத்துக்கு அனுப்பினேன். இப்போது இங்கே பகிர்ந்து கொள்கிறேன். வழக்கம்போல் பின்னூட்டம் எதுவும் வராவிட்டாலும் எல்லாரும் படிக்கிறாங்க என்ற நினைப்பு தான் பிழைப்பைக்கெடுக்குது! :P :P:P

13 comments:

  1. உங்களை போன்றோரின் அனுபவம் எங்களை போன்றோரை வழி நடத்தும் என்பது எனது தீர்க்கமான எண்ணம் கீதாம்மா.

    ReplyDelete
  2. உண்மையாச் சொல்லணும்னா விட்டு விட்டுதான் படிச்சேன்! "நிற்க, உக்காந்துக்கறேன் கால் வலிக்கும்" ரசித்தேன்!

    ReplyDelete
  3. கேள்வி பதில்கள் சிந்திக்க வைக்கின்றன. நிறைய தெளிவா புரியும் படி சொல்லி இருக்கீங்க.

    ReplyDelete
  4. பகிர்தலுக்கு நன்றி அம்மா.

    ReplyDelete
  5. ஆன்மீகம்,தியானம்,பக்தி பற்றிய தங்களின் கருத்துக்கள் அருமை.இரண்டு முறை படித்தேன்.சுமாராக புரிந்தது,இன்னும் படித்து தெளிவாக புரிந்து கொள்ள முயல்கிறேன்,கீதா மாமி.சிறப்பான கலந்துரையாடல்.நன்றி பகிர்வுக்கு.

    ReplyDelete
  6. வாங்க ராஜராஜேஸ்வரி, நன்றிங்க.

    ReplyDelete
  7. ஶ்ரீராம், இரண்டாய்ப் பிரிச்சுப் போட்டிருக்கணுமோ? ம்ம்ம்ம்ம்ம்ம்?? முன்னாலேயே செய்திருக்கணும். :(

    ReplyDelete
  8. வாங்க லக்ஷ்மி, உங்களுக்குப் புரிஞ்சுக்க முடியும்னு நினைச்சேன். நல்லவேளையா உங்களுக்குப்படிக்கவும் வசதியா இருந்ததா? ரொம்பப் பெரிசா இருந்ததோ?

    ReplyDelete
  9. வாங்க ராம்வி, மெல்ல மெல்லப் படிச்சாலும் புரிஞ்சுண்டது குறித்து சந்தோஷம். அவ்வளவு கனமான விஷயம் இல்லை. என்றாலும் பதிவு ரொம்பப் பெரிசு!

    ReplyDelete
  10. வாங்க கவிநயா, வரவுக்கு நன்றி. கருத்துச் சொல்ல மறந்துட்டீங்க போல! :))))))

    ReplyDelete
  11. //நான்: ஆமாம், ஆனால் ஆன்மிகத்திற்கும், பக்திக்கும் வேறுபாட்டைப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் தானே?//

    கொஞ்சம் தான் கீதாம்மா ;விரிவாக சொல்ல முடிந்தால் எங்களுக்கு உதவியாக இருக்கும்

    மற்றபடி மீண்டும் மீண்டும் எனது நன்றிகள்.

    ReplyDelete
  12. கேள்வி பதில்கள் அருமை.

    ReplyDelete