தமிழில் பொங்கல் பண்டிகை, என்றும் வடமாநிலங்களில் மகர சங்கராந்தி என்றெல்லாம் அழைக்கப்படும் இந்தப் பண்டிகை முன்காலங்களில் இந்திரவிழாவாகக் கொண்டாடப் பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது. வடமாநிலங்களில் இப்போதும் மகர சங்கராந்தி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. இதுவும் இந்தியா முழுதும் கொண்டாடப்படும் ஒரு பண்டிகையே. சங்க காலத்திலேயே இது தை நோன்பு என்ற பெயரில் கொண்டாடப் பட்டிருக்கலாம் என்றாலும் ராஜராஜ சோழன் காலத்தில் தான் வருடத்தின் முதல் அறுவடைத் திருநாள் புதியீடு என்ற பெயரில் கொண்டாடப்பட்டிருக்கிறது என்பது காணக்கிடைக்கிறது. இந்தியா முழுதும் கொண்டாடப்படும் இது வெவ்வேறு மாநிலங்களிலும் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் பொங்கல் என அழைக்கப்படும் இது ஆந்திரம், ஒரிசா, மேற்கு வங்கம், பிஹார், மத்தியப்பிரதேசம், உத்தரப் பிரதேசம், மஹாராஷ்டிரா, மணிப்பூர் ஆகிய இடங்களில் மகர சங்கராந்தி என்ற பெயரிலும், குஜராத், ராஜஸ்தானில் உத்தராயணம் என்ற பெயரிலும், பஞ்சாப், ஹரியானா, ஹிமாசல் பிரதேசம் ஆகிய இடங்களில் லோஹ்ரி என்ற பெயரிலும், அஸ்ஸாமில் மாகே பிகு என்ற பெயரிலும், நேபாளத்தில் மாகே சங்க்ராந்த் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. மற்றத் தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில் சொங்க்ரான் என்றும், மியான்மரில் திங்க்யான் எனவும், லாவோஸில் பி மா லாவ் என்ற பெயரிலும் கொண்டாடுகிறார்கள்.
பெரும்பாலான வடமாநிலங்களில் எள்ளினால் செய்த இனிப்பு வகைகள், அல்லது வேர்க்கடலையினால் செய்யப்பட்டவை விநியோகிக்கப்படுகின்றன. இது சூரியனின் வான்வழிப் பயணத்தில் சூரியன் மகரராசிக்கு மாறும் நாள் என இந்துக்களால் நம்பப்படுகிறது. வான்வெளியில் வடக்கு நோக்கி சூரியன் நகரும் இந்த நாளில் இருந்து பகல் நேரம் அதிகரிக்கும் என்பதாலும் இது கொண்டாட்டத்தின் முக்கியகாரணமாகிறது. ஆடி மாதம் சூரியன் தென் திசை நோக்கிப் பயணம் செய்யும் காலத்தில் விதைக்கப்படும் விதைகள் அனைத்தும் இதற்குள் பூரணமாக அறுவடை செய்யத் தயாராகக் காத்திருக்கும். வருடத்தின் முதல் அறுவடையை அமோகமாகத் தங்களுக்கு அளித்த சூரியனுக்கு நன்றி கூறும் விதத்திலும் இந்தப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. எனினும் இது மழைக்கடவுளான இந்திரனுக்கு நன்றி செலுத்தும் விழாவாகவே முதலில் இருந்திருக்கவேண்டும் என்றும் பின்னர் முதல்நாளை மட்டும் இந்திரனுக்கு நன்றி செலுத்தும் விழாவான போகியாகவும், அடுத்த நாளை சூரியனுக்காகவும், மூன்றாவது நாளை இதற்கெல்லாம் உதவி செய்யும் கால்நடைச்செல்வங்களுக்காகவும் கொண்டாடி வந்திருக்கின்றனர். நாளாவட்டத்தில் நான்காம் நாள் உறவினரை, நண்பரைக் கண்டு செல்லும் நாளாகக் கொண்டாட ஆரம்பித்தனர். ஆகத் தற்காலங்களில் இது நான்கு நாட்கள் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.
ஆரம்பத்தில் அதாவது சங்ககாலத்தில் இது மஹாவிஷ்ணுவைக் குறித்தே இளம்பெண்களால் கொண்டாடப்பட்டிருக்கவேண்டும் என்றும் ஒரு கூற்று உண்டு. சாணத்தால் பெரியதொரு உருண்டை பிடித்து நடுவில் வைத்து அதில் பறங்கிப்பூவையும் வைத்துச் சுற்றிலும் சிறிய சிறிய சாண உருண்டைகளையும் வட்டமாக வைத்து அவற்றிலும் பூக்களை வைப்பார்கள். நடுவில் உள்ள பெரிய உருண்டையை கண்ணனாகவும், சுற்றிலும் உள்ள சின்ன உருண்டைகளை கோபியராகவும் பாவித்து இளம்பெண்கள் அந்தக் கோலங்களைச் சுற்றி வந்து கும்மி, கோலாட்டம் ஆடிக் களிப்பார்கள். மேலும் பொங்கல் வைப்பதன் தாத்பரியம், உணவுக்கு நமக்கு உதவி செய்த பஞ்சபூதங்களையும் போற்றுவது ஆகும். மண்ணிலிருந்து நமக்குக் கிடைத்த பொருட்களை வைத்துச் சமைப்பது முன்பெல்லாம் மண்ணாலாகிய அடுப்பிலேயே, மண்பானைகளிலேயே பொங்கல் வைப்பார்கள். காலக்கிரமத்தில் இது மாறிவிட்டாலும், மண் அடுப்பும், மண்பானையும் பூமித்தாயையும், அதில் பொங்கலுக்கு ஊற்றப்படும் பாலும், நீரும், தண்ணீரையும், எரியும் நெருப்பு அக்னியையும், பொங்கல் வேகும்போது கிளம்பும் ஆவி வாயுவையும், வெட்டவெளியில் பொங்கல் சமைத்துப் பின்னர் வெட்டவெளியிலேயே வழிபாடு நடத்துவது ஆகாயத்தையும் குறிக்கும் என்பார்கள்.
ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையில் ஆரம்பம் ஆகும் விழாவறை காதையில் “இந்திர விழா” என்ற பெயரிலேயே பொங்கல் பண்டிகை கொண்டாடப் பட்டிருக்கவேண்டும் என அறிய வருகிறது. முதல் முதல் இந்திரவிழா கொண்டாட ஆரம்பிக்கையில் அதைப் பொது மக்கள் மன்றத்தில் முரசறைந்து தெரிவிக்கப்பட்டதாகவும், சுமார் 28 நாட்கள் விழா நடந்ததாகவும் தெரிந்து கொள்கிறோம். மேலும் அகத்திய முனிவர் இந்திரனுக்கு அழைப்பு விடுத்ததாகவும் இந்திரன் பூம்புகாருக்கு வந்ததாகவும் குறிப்புகள் கூறுகின்றன. தற்காலங்களில் பொங்கலுக்கு முன்னர் வீட்டை அலங்கரித்துச் சுத்தம் செய்து பழையன கழிதல் போல் அந்தக் காலங்களிலும் வீட்டை மட்டுமின்றி நாடும், நகரங்களுமே சிறப்பாக அலங்கரிக்கப்பட்டன. கமுகுக் குலைகளும், தென்னை ஓலைத் தோரணங்களும், வாழை மரங்களும் கட்டப்பட்டு, பொன்னாலான பாலிகைகள், பூரண கும்பங்கள் ஆகியவற்றால் வீடுகள், கோயில்கள், அரண்மனைகள் அலங்கரிக்கப்பட்டன. வீதிகளிலே புது மணல் பரப்பி, காவல் தெய்வங்கள் முதல் அனைத்துத் தெய்வங்களுக்கும் சிறப்பான வழிபாடுகள் நடத்தப்பட்டன. மழைத் தெய்வம் ஆன இந்திரனைச் சிறப்பிக்கும் வகையில் அவனுக்கு நன்றி கூறும் வகையில் எடுக்கப்பட்ட இந்த விழா நாளில், பகைமையும், பசியும் நீங்கச் சிறப்பான பிரார்த்தனைகள் செய்யப்பட்டதோடு ஒருவருக்கொருவர் பகைமை பாராட்ட வேண்டாம் என்பதும் வலியுறுத்தப்பட்டது. ஒருவருக்கொருவர் பகையுள்ளவர்கள் விலகி இருக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இப்படியாக ஆரம்பித்த இந்த விழா பின்னர் நாளாவட்டத்தில் கண்ணுக்குத் தெரியும் ஒரே கடவுளான சூரியனுக்காகக் கொண்டாடப்படும் விழாவாக மாறி இருந்திருக்கலாம். ஏனெனில் சூரியன் இருப்பதாலேயே நமக்கு மழை, ஒளி, எல்லாம் கிடைப்பதோடு உயிர்கள் வாழவும் முடிகிறது. சூரியனில்லாத பூமி இருண்டுவிடும். மனிதர்களின் வாழ்வாதாரமாகச் சூரியனே இருந்து வருகிறது.
பொங்கல் வழிபாட்டில் பொங்கலோடு சேர்த்துக் கரும்பு, வாழைப்பழம், மஞ்சள் கொத்து, இஞ்சிக்கொத்து, வெற்றிலை, பாக்கு, தேங்காய் போன்றவைகளோடு ஏழுவகைக் கறிகள்/கூட்டுகள்/குழம்பு போன்றவை செய்யப்படும். அனைத்தும் வழிபாட்டில் வைக்கப்படும். அநேகமாக வழிபாடுகள் வீட்டின் கொல்லைப்புறம் கிழக்கு நோக்கியே செய்யப்படும். அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்தாலும் வீட்டின் வெளியே வந்து சூரியனுக்குக் கற்பூரமாவது காட்டுவார்கள். பொங்கல் பால், நெய், அரிசி, பருப்பு, வெல்லம் போன்றவை சேர்த்துச் செய்யப்படும். பால் பொங்க வேண்டும். பால் நன்றாகப் பொங்கினால் அந்த வருடம் விளைச்சலும் பொங்கி வரும் என்பார்கள். வீட்டில் உள்ள அனைவரும் பொங்கல் பானையில் பால் ஊற்றுவது உண்டு. அப்போது பொங்கலோ பொங்கல் எனச் சொல்லிக்கொண்டே பாலை ஊற்றுவார்கள்.
கரும்பு இனிப்பான சுவையை உடையது. ஆனாலும் அடிக்கரும்பே தித்திப்பு அதிகம் உடையது. நுனிக்கரும்பு உப்பாகவும் இருக்கும். அதோடு கரும்பில் நிறையக் கணுக்களும் காணப்படும். இந்தக் கரும்பின் கணுக்கள் வாழ்க்கையில் ஏற்படும் சோதனைகளைக் குறிக்கிறது என்றும் ஆரம்பத்தில் உப்புப் போல் கரிக்கும் வாழ்க்கை போகப் போக அடிக்கரும்பு போல் இனிக்கும் எனவும் கூறுவார்கள். மஞ்சள் கொத்துக்களும் வழிபடப் படுகின்றன. மேலும் பொங்கல் பானையில் மஞ்சள் கொத்துக் கட்டும் வழக்கமும் உண்டு, மஞ்சள் மஹாலக்ஷ்மிக்கு உரியது. மஹாலக்ஷ்மியாகவே கருதப்படும் மஞ்சளை அனைத்து சுபகாரியங்களுக்கும் பயன்படுத்துகிறோம். மஞ்சள் இல்லாத மங்கல காரியங்களே இல்லை. ஆகவே மஞ்சளைப்பொங்கல் பானையில் கொத்தோடு கட்டும் வழக்கம் ஏற்பட்டது. பானையில்கட்டும் மஞ்சளையே பத்திரம் செய்து ஒரு துண்டை எடுத்து சுவாமி அறையில் வைத்துவிட்டு மற்ற மஞ்சளை உடலில் தேய்த்துக் குளிக்க அரைத்துப் பயன்படுத்துவார்கள். சுவாமி அறையில் வைத்திருக்கும் மஞ்சளையே பொங்கலுக்கு மறுநாள் கனுவன்று நெற்றியில் கீறிக்கொள்ள எடுத்துச் செல்வார்கள். அக்கம்பக்கம், வீட்டுப் பெரியவர்கள் என எல்லாரிடமும் கொடுத்து நெற்றியில் மஞ்சளைக்கீறிவிடச் சொல்வார்கள். அரைத்திருக்கும் மஞ்சளில் சிறிதளவு எடுத்து சாதத்தில் கலந்து கொண்டு, குங்குமம் போட்டும் கலந்து, பொங்கல், கலந்த சாதவகைகள், தயிர்சாதம், கரும்புத்துண்டுகள், வாழைப்பழம், தேங்காய் வெற்றிலை, பாக்கு எல்லாமும் வைத்து கனுவன்று காலையில் காக்காய்ப்பிடி, கனுப்பிடி என வைப்பார்கள். இதன் தாத்பரியம் காக்கைகள் எப்படிச் சுற்றம், சொந்தங்களோடு சேர்ந்து உணவு எடுத்துக்கொள்கிறதோ அவ்வாறே நாமும் நம் உறவு, சுற்றம், நட்பு ஆகியோருடன் சேர்ந்து மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்பதே ஆகும்.
ஒரு சிலர் வீட்டு வழக்கப்படி புதிதாய்ப் பிறந்திருக்கும் சின்னஞ்சிறு குழந்தைகளைப் பத்து வயதுக்குட்பட்ட மற்றொரு குழந்தையின் மடியில் உட்கார்த்தி வைத்துச் சின்னச் சின்ன கொழுக்கட்டைகள் செய்து அவற்றோடு, கரும்புத்துண்டுகள், இலந்தைப்பழம், நாணயங்கள் எல்லாம் கலந்து அரிசி அளக்கும் படியில் நிறைநாழி என சுவாமிக்கு எதிரே வைத்து இருப்பார்கள். அக்கம்பக்கம் சுற்றத்தார், சின்னக்குழந்தைகள், பெண்கள் என எல்லாரையும் அழைத்து மாலை விளக்கு ஏற்றியதும் வீட்டில் இருக்கும் வயதான சுமங்கலிப் பெண்ணை விட்டுச் சின்னக் குழந்தையின் தலையில் மெதுவாய்க் கொட்டுவார்கள். இதற்குக் காசு, இலந்தைப் பழம் கொட்டுதல் என்று பெயர். குழந்தைகள் காசைப் பொறுக்கப் போட்டி போடும். குழந்தைகளோடு சேர்ந்து பெரியவர்களும் பொறுக்குவார்கள். பின்னர் வந்திருக்கும் அனைவருக்கும் வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள் வைத்துக்கொடுத்து அவரவருக்கு இயன்ற பொருளை வைத்துக் கொடுப்பார்கள். இது குழந்தைக்கு திருஷ்டி கழியவேண்டிச் செய்யப்படுவது. இது பெரும்பாலும் குறிப்பிட்ட சில வீடுகளிலேயே செய்யப்படுகிறது.
ஒரு சில கிராமங்களில் மார்கழி மாதம் வைக்கும் சாண உருண்டைகளைச் சேகரம் செய்து பிள்ளையார் பொங்கல் என வைப்பது உண்டு. இன்னும் சிலர் வீடுகளில் இப்படியான உருண்டைகளைச் சேகரம் செய்து கொண்டு, பொங்கலுக்கு அடுத்து வரும் முதல் ஞாயிற்றுக்கிழமையில் புதியதாய்ச் சாண உருண்டை பிடித்துக்கொண்டுஅவரவர் ஊர்களின் ஒரு நதிக்கரையில் அல்லது குளக்கரையில் அதை நடுவில் வைத்து மற்ற உருண்டைகளைச் சுற்றிலும் வைத்துப் பூசணி, பறங்கி, பூவரசம்பூக்கள் போன்றவற்றால் அலங்கரித்து மணலில் வீடுபோல் ஓவியம் வரைந்து அதன் நடுவே அடுப்பு மூட்டிப் பொங்கல் பானை வைப்பார்கள். பொங்கல் செய்து, ஒரு முறம் அல்லது சுளகைத் திருப்பிப்போட்டு நுனி இலை விரித்துப் பொங்கல் கொஞ்சமும் , பழமும் அதில் வைத்துவிட்டுக் கற்பூரமும் ஏற்றி அதில் வைப்பார்கள். பின்னர் அந்த இலையை அப்படியே நீரில் விட்டுவிட்டுச் சாண உருண்டைகளையும் நீரில் கரைப்பார்கள். இதனால் வரும் வருடம் மழை நன்கு பொழிந்து நீராதாரம் மேம்படும் என்று நம்பிக்கை. நீர், நிலைகளுக்கு மட்டுமின்றி நீர்வாழ் ஜந்துக்களுக்கும் உணவளிக்கும் விதமாகச் செய்யப்படும் இதை இன்றைய தினம் பெரும்பாலான மக்கள் அறிந்திருக்கவில்லை.
மனிதன் வாழ ஆதாரமான உணவைக்கொடுக்கும் உழவர்களின் திருநாள் என்றும் சொல்லலாம். பொங்கலுக்கு மறுநாள் மாடுகள், உழவுக்கருவிகள் அனைத்துக்கும் வழிபாடு நடக்கும். தற்காலங்களில் காலம் தப்பிப் பெய்யும் மழையினால் விவசாயிகள் கஷ்டப்படுவதே பார்க்க முடிகிறது. தேசந்தோறும் பாஷை வேறு என்பதற்கு ஏற்ப ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொருவிதமாய்க்கொண்டாடப்படும் இந்தப் பண்டிகையும் ஒரு தேசியப் பண்டிகையே. அனைவருக்கும் பொங்கல் வாழ்த்தைத் தெரிவித்துக்கொண்டு கீழே அக்கார அடிசில் செய்முறையைத் தருகிறேன்.
அக்கார அடிசிலுக்குப் பால் நிறைய வேண்டும். ஆண்டாள் செய்தாப்போல் நூறு தடா இல்லைனாலும் ஒரு லிட்டராவது வேண்டும். நல்ல பச்சை அரிசி கால்கிலோ, வெல்லம் பாகு அரை கிலோ, நெய் கால் கிலோ. பாசிப்பருப்பு ஒரு கிண்ணம். நீரே வேண்டாம். பாலிலேயே வேகவேண்டும். ஆகவே முடிந்தவரைக்கும் ஒரு லிட்டருக்குக் குறையாமல் பால் எடுத்துக்கொள்ளவும். குங்குமப் பூ, ஏலக்காய், பச்சைக்கற்பூரம் ஒரு சிட்டிகை அளவு மட்டுமே. முந்திரிப்பருப்பு, திராக்ஷை எல்லாம் தேவைப்பட்டால். சாதாரணமாய் இதற்குப் போடுவது இல்லை. ஆனால் நான் போடுவேன்.
பாசிப்பருப்பையும், பச்சை அரிசியையும் வெறும் வாணலியில் தனித்தனியாக வறுத்துக்கொள்ளவும். நன்கு களைந்து சுத்தம் செய்து கொள்ளவும். வெண்கலப்பானையை அடுப்பில் வைத்துப் பாலைக் கொஞ்சமாக முதலில் ஊற்றவும். தேவையான பாலில் பாதி அளவு ஊற்றலாம். பால் கொதிக்க ஆரம்பித்ததும் பாசிப்பருப்பைக் களைந்து சுத்தம் செய்து அதில் போடவும். சிறிது நேரத்துக்கு ஒருமுறை கிளறிக்கொடுக்கவும். பால் அடியில் பிடிக்காமல் பார்த்துக்கொள்ளவும். இதை நான் ஸ்டிக் பாத்திரத்திலோ அல்லது குக்கரிலோ செய்தால் அவ்வளவு சுவை வராது. பருப்பு வெந்ததும் அரிசியைக் களைந்து அதோடு சேர்த்துப் போடவும். மிச்சம் இருக்கும் பாலைக்கொஞ்சம் கொஞ்சமாய்ச் சேர்க்கவும். அரிசி நன்கு வெந்து குழையும் பதம் வரவேண்டும். அப்போது வெல்லத்தைத் தூளாக்கிச் சுத்தம் செய்து சேர்க்க்கவும். வெல்ல வாசனை போக நன்கு கொதிக்கவேண்டும். வெல்லம், பால் இரண்டும் சேர்ந்து வரும்வரையில் நெய்யைக் கொஞ்சம் கொஞ்சமாய்ச் சேர்த்து விடாமல் கிளற வேண்டும். நன்கு கலந்து பாயசம் போலவும் இல்லாமல் ரொம்பக் கெட்டியாக உருட்டும்படியும் இல்லாமல் கையால் எடுத்துச்சாப்பிடும் பதம் வரும் வரை கிளற வேண்டும். பின்னர் ஏலப்பொடி சேர்த்துப் பாலில் கரைத்த குங்குமப் பூவும் சேர்த்துப் பச்சைக்கற்பூரமும் சேர்க்கவும். தேவைப்பட்டால் நெய்யில் முந்திரிப்பருப்பு, திராக்ஷை வறுத்துச் சேர்க்கவும். அது இல்லாமலேயே நன்றாக இருக்கும்.
குக்கரில் வைப்பவர்கள் பாதிப்பாலை விட்டுக் குக்கரில் அரிசி, பருப்பைக் குழைய வைத்துக்கொண்டு பின்னர் வெளியே எடுத்து அடிகனமான பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு நீர் அல்லது பால் விட்டுக் கரைத்துக் கொதிக்கையில் குக்கரில் இருந்து எடுத்த கலவையைப் போட்டு மிச்சம் பாலையும் விட்டுக் கிளறவேண்டும். இதிலும் அடிப்பிடிக்காமல் நன்கு கிளற வேண்டும். பின்னர் நன்கு சேர்ந்து தளதளவென்று கொதிக்க ஆரம்பித்ததும், வெல்ல வாசனை போய்விட்டதா என்று பார்த்துவிட்டு அடுப்பை அணைக்கவும். ஏலக்காய், குங்குமப்பூ, பச்சைக்கற்பூரம் சேர்க்கவும்.//
நன்றி வல்லமை
ஆஹா பதிவிலேயே பொங்கல் பண்டிகையை சீரும் சிறப்புமாகக் கொண்டாடிவிட்டீர்கள். எல்லோருக்கும் எங்கள் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.
ReplyDeleteபொங்கல் பண்டிகையை இங்கயே கொண்டாடினமாதிரி இருக்கு. விவரமாகச்சொல்லி இருக்கீங்க.
ReplyDeleteஇன்னும் பலருக்கு தெரியப்பட வேண்டிய விஷயம் தலைவி ;-)
ReplyDeleteஉங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் ;-)
பொங்கல் சாப்ப்பிட்ட இனிமை உங்கள் பதிவு கொடுத்துவிட்டது கீதா.
ReplyDeleteஅருமையாகத் தேசம் முழுவதும் இணைத்துவிட்டீர்கள். உங்களுக்கும் குடும்பத்துக்கும் எங்கள் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.
வாங்க கெளதம், நான் என்னமோ 15-ம் தேதிக்குத் தான் ஷெட்யூல் பண்ணினேன். ப்ளாகர் துரோகம் பண்ணின விஷயம் உங்க கமென்டைப் பார்த்துத் தான் தெரிஞ்சு கொண்டேன். :)))))
ReplyDeleteநன்றிங்க, இங்கே நீங்கல்லாம் பொங்கல் சாப்பிட்டு முடிச்சதும் தான் பொங்கல் பானையே வைக்கணும். :)))) இன்னும் கொண்டாடலை. உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துகள்.
வாங்க லக்ஷ்மி, ரொம்ப நன்றி. பொங்கல் வாழ்த்துகள்.
ReplyDeleteவாங்க கோபி +ல பகிர்ந்ததுக்கு மீண்டும் நன்றிப்பா.
ReplyDeleteவாங்க வல்லி, உங்களுக்கும், உங்க குடும்பம் சுற்றம், நட்பு அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்.
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள். இந்தியா முழுவதும் பொங்கல் எப்படி கொண்டாடப்படுகிறது என்று நன்றாக எழுதியிருக்கீங்க.
ReplyDeleteபொங்கல் வழிபாட்டில் பொங்கலோடு சேர்த்துக் கரும்பு, வாழைப்பழம், மஞ்சள் கொத்து, இஞ்சிக்கொத்து, வெற்றிலை, பாக்கு, தேங்காய் போன்றவைகளோடு ஏழுவகைக் கறிகள்/கூட்டுகள்/குழம்பு போன்றவை செய்யப்படும். அனைத்தும் வழிபாட்டில் வைக்கப்படும். அநேகமாக வழிபாடுகள் வீட்டின் கொல்லைப்புறம் கிழக்கு நோக்கியே செய்யப்படும். அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்தாலும் வீட்டின் வெளியே வந்து சூரியனுக்குக் கற்பூரமாவது காட்டுவார்கள். பொங்கல் பால், நெய், அரிசி, பருப்பு, வெல்லம் போன்றவை சேர்த்துச் செய்யப்படும். பால் பொங்க வேண்டும். பால் நன்றாகப் பொங்கினால் அந்த வருடம் விளைச்சலும் பொங்கி வரும் என்பார்கள். வீட்டில் உள்ள அனைவரும் பொங்கல் பானையில் பால் ஊற்றுவது உண்டு. அப்போது பொங்கலோ பொங்கல் எனச் சொல்லிக்கொண்டே பாலை ஊற்றுவார்கள்.//
ReplyDeleteபொங்கலோ பொங்கல் என்று பால் ஊற்றும் போதும், பால் பொங்கும் போதும் சொல்வோம்.
வீட்டில் அனைவரும் சொல்லும் போது அந்த மகிழ்ச்சி அளவிட முடியாது.
இப்போது பிள்ளைகள் எங்கோ இருந்தாலும் ஸ்கைப் மூலம் நேரடி பொங்கலைப் பார்த்து பொங்கலோ பொங்கல் சொல்கிறார்கள்.
சிறு வீட்டு பொங்கல் என்று வீடு படம் வரைந்து(அல்லது சிமெண்டால் கட்டுவோம், பொங்கல் முடிந்தவுடன் குழந்தைகள் அதில் மகிழ்ச்சியுடன்விளையாடுவார்கள்) அதில் பொங்கல் பொங்கி, 9, 11 என்ற விகிதத்தில் பசுஞ்சாண பிள்ளையார் பிடித்து வைத்து நுனி இலையில் 9, 11 என்ற அளவில் பொங்கல், பழம், தேங்காய்த்துண்டுகள், வெல்லம் எல்லாம் வைத்து நீர் நிலைகளுக்கு சென்று கற்பூரம் காட்டி அதை நீரில் கரைத்து விடுவோம்.
அதை நீங்கள் விளக்கிய விதம் அருமை.
பல மாநிலத்தவர்கள் கொண்டாடும் பொங்கலை சொன்ன விதம் அருமை.
சிறியவர்களுக்கு தேவையான ஒன்று.
நம் பழக்கங்களை தெரிந்து கொள்வது நல்லது அல்லவா!.