எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, September 08, 2013

கெட்டி மேளம் கொட்டக் கொட்ட! ஒரு சில மந்திரங்களின் அர்த்தங்கள்.

ஆச்சா, பெண் புடைவை கட்டிக் கொண்டு வந்தாச்சு.  இப்போச் சில சடங்குகளைப் பிள்ளை செய்யணும். திருமாங்கல்யதாரணம் நடக்கப் போகிறது.  கூறைப்புடைவை கட்டிக் கொண்டு வந்த பெண் தன் தகப்பன் மடியில் அமர்ந்து கொள்கிறாள்.  இதுவும் ஒரு சம்பிரதாயமாகவே இருக்கணும்.  அந்தக்காலங்களில் சின்னக் குழந்தைகளைப் பிடித்துத் திருமணம் செய்வித்திருக்கின்றனர்.  குழந்தைகள் ஓடிவிடாமல் இருக்க (ஹிஹிஹி) குழந்தையைத் தந்தை மடியில் வைத்து அமுக்கிக் கொண்டு இருந்திருக்கணுமோ?  அது ஒரு கட்டாயமாகவே ஆகிவிட்டது.  இப்போ மணமேடையில் பெண் வீட்டுப் பிள்ளை வீட்டு முக்கியஸ்தர்கள் அனைவரும் சூழ்ந்து கொண்டு திருமாங்கல்யதாரணத்தைப் பார்க்க விடமாட்டார்கள்.  பெண் புடைவை கட்டிக் கொண்டு வரதுக்கு முன்னாலேயே எல்லார் கிட்டேயும் புடைவை, திருமாங்கல்யத்தைக் காட்டி ஆசிகள் வாங்கி இருப்பாங்க.  அதே போல் பெண்ணின் மேல், பிள்ளையின் மேல் பொழியவும் மலர்கள், உதிரிப்பூக்கள், அக்ஷதை ஆகியன வழங்கப்படும்.  இப்போல்லாம் மேலே பலூன்கள் கட்டிக் குறிப்பிட்ட நேரத்தில் அதை வெடிக்கச் செய்து பூக்கள், கலர்ப்பேப்பர்கள் எனக் கொட்ட வைக்கின்றனர்.  அதே சமயம் சத்திரத்துக்கு வெளியே பெண்ணின்/பிள்ளையின் நண்பர் கூட்டம் ஒன்று சேர்ந்து ஆயிரம் வாலா, பத்தாயிரம் வாலாக்கள் எல்லாம் வெடிக்கிறதும் உண்டு.  இவ்வளவு அமர்க்களத்துக்கும் இந்தத் தாலி கட்டுதல் வெறும் சம்பிரதாயமான ஒன்றே.  அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது இல்லை. 



 ஒருவேளை தமிழ் சினிமா, தமிழ் சீரியலின் தாலி சென்டிமென்டினால் முக்கியத்துவம் அடைந்ததோ என்னமோ நாம் அறியோம் பராபரமே.  அப்போது சொல்லப்படும் மாங்கல்யம் தந்துநானே என்பது மந்திரமும் அல்ல.  ஒரு ஸ்லோகமே.  ஹிஹிஹி, ஆனால் இந்தத் தாலி கட்டி முடிஞ்சதுமே உற்றார், சுற்றார் அனைவரும் ஒருவருக்கொருவர் கைகுலுக்கிக் கொள்வதோடு, பெண்ணின் கையைப் பிள்ளையின் கையையும் குலுக்கிக் கொண்டு பரிசுகளைக் கொடுத்து அவர்களைத் திருமண சாஸ்திரபூர்வமான சடங்குகளைச் செய்ய விடுவதில்லை.  ஆகவே இப்போதெல்லாம் தாலி கட்டும் முன்னர் மேள சப்தம், கூடி இருப்போர் பேசும் சப்தம் அனைத்தையும் நிறுத்திவிட்டு அறிவிப்புச் செய்கிறார்கள்.  பாணி கிரஹணம் முடிந்து சப்தபதி முடிந்து, பெண்ணும், பிள்ளையும் தனியாக ஒரு நாற்காலியில் அமர வைக்கப்படுவார்கள்.  அப்போ உங்கள் சந்தோஷத்தைத் தெரிவிக்கலாம்னு சொல்லிடறாங்க.  எனெனில் பாணிகிரஹணம் என்னும் முக்கிய நிகழ்ச்சி சுப லக்னைத்தில் நடைபெற வேண்டும்.  சாஸ்திரப்படியும், தர்மப்படியும் இப்போத் தான் பெண்ணின் கையைப் பிள்ளை பிடிக்க வேண்டும்.  அதே போல் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வதே கன்யாதானத்தின் பின்னரே.  தாலியில் பிள்ளை ஒரு முடிச்சுப் போட்டதும் பாக்கி இரு முடிச்சுக்களைப் பிள்ளையின் சகோதரி போடுவது ஒரு சம்பிரதாயமே. 



ஆச்சு, திருமாங்கல்யதாரணம் ஆச்சு.  இப்போ மந்திரம் சொல்லி பெண்ணின் இடுப்பிலே தர்ப்பையால் ஆன கயிற்றை மூன்று முறை சுத்திவிடுவாங்க.  இப்போத் தான் பெண்ணின் கையைக் குவித்து வைக்கச் சொல்லிக் கட்டை விரலோடு சேர்த்துப் பிடித்துக் கொண்டு அக்னி கிட்டே அழைத்துச் செல்வார் கட்டைவிரலை ஏன் சேர்த்துப் பிடிக்கணும் என்றால் கட்டை விரலை மட்டும் ஆண்பாலில் "அங்குஷ்ட" என்பார்கள்.  மற்ற நான்கு விரல்கள் பெண்பாலில், "அங்குளீ" எனப்படும்.  ஆகவே ஆண் குழந்தைகள், பெண் குழந்தைகள் இரண்டும் வேண்டும் எனில் எல்லா விரல்களையும் சேர்த்துப் பிடிக்க வேண்டும் எனவும், பெண் மட்டும் வேண்டும் எனில் நான்கு விரல்களையும், பிள்ளை மட்டும் எனில் கட்டை விரலை மட்டும் எனச் சொல்வார்கள்.   ஆனால் பொதுவாக எல்லா விரல்களையுமே சேர்த்தே பிடிக்கச் சொல்வார்கள்.  நாம் தியானம் செய்கையில் சின்முத்திரை காட்டி அமர்வது, சக்தியும் சிவமும் சேர்ந்த ஐக்கியத்தைக் குறிக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம். 


 புதுப்பாயிலே பிள்ளையின் வலப்பக்கம் பெண் அமர்ந்து அக்னிகாரியம் ஆரம்பிச்சதும் ஹோமம் செய்வார்கள்.  எப்போவுமே இம்மாதிரியான வைதீக காரியங்கள் செய்கையில் பெண் பிள்ளையின் வலப்பக்கமாகவே இருக்க வேண்டும்.  மற்ற நேரம் இடப்பக்கம்.  அக்னியின் எதிரே நிற்கும் இந்தப் பெண் புனிதமானவள், ஆரோக்கியத்துடனும், செல்வ வளத்துடனும், கணவனோடும் குழந்தைகளோடும் இவள் வாழ்க்கை வளம்பெற வேண்டும் எனப் பிரார்த்திப்பார்கள்.  இப்போத் தான் அக்னி பகவானிடம் வேண்டிப்பாங்க.  பதினாறும் பெத்துப் பெருவாழ்வு வாழ்கனு கேள்விப் படறோமில்லையா?  அப்படித் தான்.  ஆனால் இங்கே பதினாறு குழந்தைகள்னு அர்த்தமில்லை.  அதோடு இந்த மந்திரங்கள் வேறே பலராலும் விமரிசிக்கப்படும் ஒன்றாக இருந்து வருகிறது.  அதன் உண்மையான அர்த்தம் முன்னேயே என்னோட இந்த வலைப்பக்கத்தில் எழுதி இருக்கேன்.  அதை மீள் பதிவு செய்து விடுகிறேன்.  நாளை பார்க்கலாம். 

பெண் குழந்தை பிறந்ததில் இருந்து கல்யாணம் வரை உள்ள காலத்தை மூன்றாகப் பிரித்து ஒவ்வொரு காலத்துக்கும் ஒரு தேவன் அவளுக்குப் பாதுகாவலனாக இருப்பதாய்ச் சொல்வார்கள்.  இது எல்லாப் பெண் குழந்தைகளுக்கும் பொருந்தும்.  முதல் பிரிவின் பாதுகாவலன் சோமன், இரண்டாவது பிரிவின் பாதுகாவலன் கந்தர்வன், மூன்றாவது பிரிவின் பாதுகாவலன் அக்னியே ஆவான்.  இதன் பின்னரே பெண்ணானவள் கணவனை அடைகிறாள்.  இந்த ஒவ்வொருவருக்கும் அக்னி மூலமாகவே கணவனும், மனைவியுமாகச் சேர்ந்தே தங்கள் நன்றியைச் செலுத்துகின்றனர். இப்போது 16 விதமான கோரிக்கைகளைக் கல்யாண மணமகன் வைக்கிறான்.  அவையாவன:

1.சோமனுக்கு நன்றி தெரிவித்து ஹவிர் அளிப்பது

2. கந்தர்வனுக்கு நன்றி தெரிவித்து ஹவிர் அளிப்பது

3. அதே போல் அக்னிக்கும் நன்றி, ஹவிர் அளிப்பது

4. பிறந்த வீட்டிலிருந்து, புதிய வீடான புக்ககம் வந்திருக்கும் இந்தப் பெண்ணை சந்தோஷமாக வைக்கும் தகுதியை வேண்டுவது.  பிறந்த வீட்டு சந்தோஷம் குறையாமல் பெண்ணை மகிழ்ச்சியாக வைத்திருக்கப் பிரார்த்திப்பது.

5. இந்தப் பெண்ணைத் தேர்ந்தெடுக்க உதவிய இந்திரனுக்கு நன்றி தெரிவிப்பதோடு அவனால் சகல செளகரியங்களும் உண்டாகப் பிரார்த்திப்பது.

6. இல்லறத்த நல்லறமாக நடத்தவும், ஆரோக்கியமான குழந்தைகளைச் சுலபமாகப் பெற்றெடுக்கவும் பிரார்த்திப்பது. ஒரே குழந்தையோடு நிற்காமல் பல குழந்தைகள் பிறக்கவும், எல்லாவற்றிற்கும் மேல் மனைவியின் கடைசிக் குழந்தையாகக் கணவனை அவள் நினைக்கவும் பிரார்த்திப்பது.

7. ஏற்கெனவே வியாதிகள் இருந்தாலோ, இனி வியாதிகள் தோன்றாவண்ணமோ பாதுகாக்க வேண்டுவது.  குழந்தைகள் மூலமும் மணப்பெண்ணுக்குத் துன்பம் வராமல் பாதுகாக்க வேண்டுவது.

8. இருவரும் இனி ஒருவர் என்பதால் இருவரின் பிரார்த்தனையும் இனி ஒன்றே.  இந்த அக்னி சாக்ஷியாக கிருஹஸ்தன் ஆன மணமகன் தன்னிடம் உள்ள குறைகளை நீக்கி நிறைவானவனாக ஆக்கும்படியும் பெண்ணின் தேஜஸ் வளரவும், பெண்ணைச் சந்தோஷமாக வைக்கும்படியான ஆரோக்கியத்தைத் தனக்குத் தரும்படியும் பிரார்த்திப்பான். நீண்ட ஆயுளும், அறிவும், ஆரோக்கியமும் உள்ள குழந்தைகளையும் வேண்டுவான்.

9. எத்தனை சொத்து, செல்வம், நிலம், நீச்சு இருந்தாலும் குழந்தைச் செல்வத்துக்கு ஈடாகாது.  அத்தகைய குழந்தை பாக்கியம் இருவருக்கும் ஏற்பட வேண்டிப் பிரார்த்திப்பது. அதோடு தன் குழந்தைகளுக்கும் குழந்தை பிறந்து அதையும் நாங்கள் இருவரும் சேர்ந்து பார்க்கும் அனுகிரஹத்தையும் வேண்டுவது.

10. மணமகள் இரவில் கணவனோடு வாக்குவாதமோ, சண்டையோ செய்யாமல், தலையை விரித்துப் போட்டுக்கொண்டு அழுது கொண்டு ஆர்ப்பாட்டம் செய்யாமல் இருக்கும்படியாகவும் வேண்டிக்கொள்வதோடு அவளை அந்த நிலைக்குத் தள்ளும்படியான ஈன நிலைக்குத் தன்னைத் தள்ளாதிருக்கவும், என்றென்றும் மனைவியை மகிழ்வோடு வைத்திருக்கும் சக்தியையும் கொடுக்கும்படி வேண்டுவது.

11. இன்று திருமண நாள்.  இன்றிருக்கும் அதே சந்தோஷம் அவள் என்னோடு வாழும் எல்லா நாட்களிலும் தொடர்ந்து இருக்க வேண்டும்.  அவள் கிழவியானாலும் அவள் மனம் மகிழ்ச்சியோடேயே இருக்க வேண்டும்.  அவள் மனம் திருப்தியோடு கிளை, கிளையாக வளரும் வாரிசுகளைப் பார்த்து மகிழ வேண்டுவது.

12.  இந்தப் பெண்ணின் உடலின் ஒவ்வொரு பாகத்தையும் ஒவ்வொரு தேவர்கள் காக்கின்றனர். நான் கொடுத்த கூறைப்புடைவையை இவள் உடுத்தியதிலிருந்து இவளை பிரஹஸ்பதி எனும் குரு காத்து வருகிறான்.  இவளை நாலாபக்கங்களில் இருந்தும் விஸ்வே தேவர் குழு காத்து வரட்டும்.

13. குழந்தையே பிறக்காத மலடியாக இவளை ஆக்காதே.  அல்லது அகால மரணம் அடையும் குழந்தைகளைப் பிறக்க வைக்காதே. குழந்தைகளை நினைந்து இவள் கவலைப்படும்படியும் செய்யாதே.  வாடிய பூவைத் தூக்கி எறிவது போல் இவள் துயர்களும் தூக்கி எறியப் பட வேண்டும்.

14. வருணனிடம்  தான் செய்த பிரார்த்தனைகள் மூலம் பல்வேறு தேவர்கள், தேவதைகள் மூலம் கிடைத்த பொருட்களை எல்லாம் நிரந்தரமாக்கி இழப்பில்லாமல் இருக்கப் பிரார்த்திப்பது.

15. அக்னியிடம் மட்டுமில்லாமல் மற்ற தேவர்களிடமும் கேட்டதற்காக அக்னியைக் கோபம் கொள்ளாதிருக்கப் பிரார்த்திப்பது.  மேலும் மற்ற தேவர்களையும் கேட்டதற்காக அக்னியும் சும்மா இருக்காமல் மற்ற தேவர்களோடு சேர்ந்தே அருள் புரியப் பிரார்த்திப்பது.  வருணனும், அக்னியும் மிக முக்கியம், நெருப்பும், நீரும் இன்றி இவ்வுலகு இல்லை.  உற்பத்தியால் ஏற்படும் வளர்ச்சி அக்னியும் வருணனும் சேர்ந்தால் தான் கிடைக்கும்.  ஆகவே  இருவருடைய அருளையும் வேண்டிப் பிரார்த்திப்பது.

16. சநாதன தர்மத்தின் ஆரம்பம், முடிவு இரண்டும் அக்னி.  இடையேயும் அக்னி.  ஆகவே பிறக்கையில், வாழ்கையில், போகையில் என அக்னி இல்லாமல் வாழ்நாள் கழிவதில்லை.  எனவே மணமகனும், மணமகளும் ஜீவிக்கும் வரையிலும் கூட இருந்து அனுகிரஹம் செய்யும்படி அக்னியை வேண்டுவார்கள்.

இப்போது அடுத்த பதிவில் விமரிசனத்துக்கு உட்பட்ட மந்திரத்தையும் அதன் அர்த்தத்தையும் காணலாம். 


பதிவுக்கு உதவிய பதிவுகள்:  தெய்வத்தின் குரல், காமகோடி தளம்.

விவாஹம்: திரு சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

http://anmikam4dumbme.blogspot.in/2008/08/blog-post_07.html

http://anmikam4dumbme.blogspot.in/2008/08/2.html

மேலே உள்ள  இரண்டும் திரு திருமூர்த்தி வாசுதேவனால் எழுதப்பட்ட பதிவுகள். 

14 comments:

  1. REVISED
    =======

    //சநாதன தர்மத்தின் ஆரம்பம், முடிவு இரண்டும் அக்னி. இடையேயும் அக்னி. ஆகவே பிறக்கையில், வாழ்கையில், போகையில் என அக்னி இல்லாமல் வாழ்நாள் கழிவதில்லை. //

    எல்லாமே அக்னி சாக்ஷியாக நடைபெறுகின்றன.

    நியாயமாகப் பார்த்தால் இவ்வாறு கிரஹஸ்தாஸ்ரமம் மேற்கொள்வோர் [தம்பதியினர்] தினமும் இரண்டு வேளையும் அக்னி அணையாமல் காத்து ஹெளபாஸனம் செய்ய வேண்டும்.

    முதல் 4 நாட்களாகவது அவர்கள் ஹெளபாஸனம் செய்த பின்பே ஒரு நல்லநாள் பார்த்து சாந்திக்கல்யாணம் ஏற்பாடு செய்வார்கள்.

    அதைத்தான் நாலு நாள் கல்யாணம் எனச் சொல்வார்கள்.

    எனக்கும் சாஸ்த்ரோக்தமாக ஹெளபாஸனத்துடன் நான்கு நாள் கல்யாணம் தான் [1972] நடைபெற்றது.

    என் மூத்த பிள்ளைக்கும் அதுபோலவே [1998] செய்தோம். ஏதோ செளக்யமாகவே இருந்து வருகிறோம்.

    தங்களின் இந்தப் பதிவு மிகவும் அருமையாகச் செல்கிறது.

    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. 'பதினாறை'யும் தெரிந்து கொண்டேன்!

    மதிரத்துக்கும் ஸ்லோகத்துக்கும் என்ன வித்தியாசம்?

    மாங்கலயதாரணம் முடிந்தவுடன் திருமண நிகழ்ச்சியே முடிவுக்கு வந்ததுபோல இந்தக் காலத்தில், மொய் கொடுத்துவிட்டு, சாப்பிடப்போய் விடுவதும், கிளம்பி வந்து விடுவதும்தான் நடக்கிறது.

    ReplyDelete
  3. வெகு அருமையாக சாஸ்த்ர சம்ப்ரதாயங்களை வரிசையாக எடுத்துப் பகிர்ந்திருக்கிறீர்கள் கீதா. அரை நாள் திருமணமாகிவிட்ட நாஅட்களில், நான்கு ஐந்து நாட்கள் நடந்த நினைவும் வருகிறது.
    ஔபாசனம் செய்வதும் மிகமுக்கியம். இவை எல்லாம் முடிந்த பிறகே நல்ல நாள் பார்து லௌகீக விஷயங்கள் நடக்கும். அம்மா பாட்டி சொல்லக் கேள்வி.
    இந்தத் தாலிக்குத் தான் எத்தனை செலவு எத்தனை போட்டி,
    எத்தனை தங்கம்:)

    ReplyDelete
  4. பதினாறு கோரிக்கைகள் தெரிந்து கொண்டோம். அருமையாக பகிர்ந்துள்ளீர்கள்.

    ReplyDelete
  5. குழந்தையே பிறக்காத மலடியாக இவளை ஆக்காதே. அல்லது அகால மரணம் அடையும் குழந்தைகளைப் பிறக்க வைக்காதே. குழந்தைகளை நினைந்து இவள் கவலைப்படும்படியும் செய்யாதே. வாடிய பூவைத் தூக்கி எறிவது போல் இவள் துயர்களும் தூக்கி எறியப் பட வேண்டும்.//

    எவ்வளவு நல்ல மந்திரம்.
    எல்லா பெண்களுக்கும் இந்த பாக்கியம் கிடைக்க வேண்டும்.

    ReplyDelete
  6. வாங்க வைகோ சார், ரொம்ப நன்றி. எனக்கும் நாலு நாள் கல்யாணம் தான். :))) பாராட்டுகளுக்கு நன்றி.

    ReplyDelete
  7. வாங்க டிடி, தொடர்வதற்கு நன்றி.

    ReplyDelete
  8. வாங்க ஶ்ரீராம், மந்திரங்கள் அனைத்தும் வேத ஸ்வரூபம். ரிஷிகள் கண்டறிந்தது. ஸ்லோகங்கள் இயற்றப்பட்டவை.

    ReplyDelete
  9. வாங்க வல்லி, தொலைக்காட்சிகளில் வரும் தங்கத் திருடு செய்திகளைப் பார்த்தால் அதிர்ச்சியாகத் தான் இருக்கு! :(

    ReplyDelete
  10. வாங்க கோமதி அரசு. பாராட்டுக்கு மிக்க நன்றி. உண்மை தான். அனைவருக்கும் நலம் வேண்டியே சொல்லப்படும் மந்திரங்கள் எல்லாமே.

    ReplyDelete
  11. பதினாறு வகை செல்வத்தையும் அறிந்து கொண்டேன்.

    தாலி கட்டும் முன்பு தலையில் ஒரு கொம்பை வைத்து அதன் மேல் தாலி வைத்து மந்திரம் சொல்கின்றனரே அதன் அர்த்தம் என்ன? என் மாமியாருக்கெல்லாம் பெரிய கொம்பே வைத்தார்களாம்... குடும்ப பாரத்தை சுமக்க என்றார்கள்...

    ReplyDelete
  12. வரவுக்கு நன்றி கோவை2தில்லி. தலையில் வைப்பது கொம்பு அல்ல. நுகத்தடி. இது வைப்பதற்கும் அதில் உள்ள துவாரத்தின் மேல் தங்கத்தை/இப்போல்லாம் தாலியை வைக்கின்றனர். அதன் வழியாக நீர் ஊற்றுவதற்கும் காரணம் உண்டு.

    அத்ரி மஹரிஷியின் புதல்வி அபலாவுக்குத் தோல் வியாதி இருந்தமையால் திருமணம் நடைபெறாமல் தாமதம் ஆகிறது. அவள் பலரின் ஆலோசனைப்படியும் இந்திரனை நோக்கித் தவம் செய்கிறாள். அவள் தவத்துக்கு இரங்கிய இந்திரன் அவளுக்கு நுகத்தடியை வைத்து மந்திர ஜபங்களால் சுத்திகரிக்கப்பட்டு புனிதமடைந்த நீரை விட்டு அவள் தோல் வியாதியைக் குணமாக்குகிறான். பின்னர் அவள் இந்திரனையே மணந்ததாயும் சொல்வார்கள். அவளைப் போல் நோய், நொடியின்றி ஆரோக்கியமாக வாழவே எல்லா மணப்பெண்களுக்கும் நுகத்தடியை வைத்து அபலாவுக்கு இந்திரன் சொன்ன அதே மந்திரங்களைச் சொல்லி புனித நீரை ஊற்றிப் பிரார்த்திக்கின்றனர்.

    ஆனால் இப்போது சொல்வது என்னவெனில் இரண்டு மாடு பூட்டிய வண்டியின் நுகத்தடியை இரு மாடுகளுமே சமமாகச் சுமந்து சென்று வண்டி குடைசாயாமல் செல்ல உதவுவது போல் கணவன், மனைவி இருவருமே ஒன்றாக சமாதானமான போக்கில் சென்று குடும்பத்தைக் குடை சாய்க்காமல் நடத்துவதற்கு என்கின்றனர்.

    இதில் மந்திரபூர்வமாயும் விளக்கம் உள்ளது. லெளகீக விளக்கமும் உள்ளது. நம் மனதுக்கு எது ஏற்குமோ அதை எடுத்துக்கலாம்.

    ReplyDelete
  13. நுகத்தடியா! தெரிந்து கொண்டேன்.

    இரண்டு விதமான விளக்கங்களுக்கும் நன்றி மாமி.

    ReplyDelete