ஒரு விஷயம் முக்கியமாச் சொல்லணும். இங்கெல்லாம் செல்வதற்கு எல்லா இடங்களுக்கும் ஆட்டோ வராது. ஆட்டோ ஒரு குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று அங்கேயே நிறுத்தப்படும். அதுக்கப்புறமாக் குறைந்தது அரைகிலோ மீட்டரிலிருந்து ஒரு கிலோமீட்டர் வரை நடந்தே செல்ல வேண்டி இருக்கும். நிறைய நடை. ஆட்டோவோ! அதை ஆட்டோனு எல்லாம் சொல்ல முடியாது. டில்லியில் இருக்கிறவங்களுக்கு பட்பட்டினு ஒண்ணு பழக்கமாகி இருக்கும். இந்த ஆட்டோவுக்கும், பட்பட்டிக்கும் இடைப்பட்டது இது. ஒரே சத்தம். இதிலே ஆட்டோ ஓட்டுநர்கள் பாட்டு வேறே போட்டுடுவாங்க. தெருவில் பின்னால் வண்டி வந்தாலோ, எதிரே வண்டி வந்தாலோ கண்கள் தான் கவனம் வைச்சுக்கணும். ஆனால் இந்த ஆட்டோக்கள் போடும் சப்தத்தில் முன்னாலும் பின்னாலும் வர வண்டிங்க தானாவே ஒதுங்கிடும்னு வைச்சுக்குங்க. :P இந்த அழகிலே டிரைவருக்கு இருபக்கமும் இரண்டு பேர் உட்கார, உள்ளே மெயின் சீட்டில் எதிரும்புதிருமாக நாலும், நாலும் எட்டுப்பேர் உட்கார்ந்துக்கறாங்க. இதைத் தவிரப் பின் சீட்டில் எதிரும் புதிருமாக ஆறுபேர் உட்கார்ந்துக்கறாங்க. கிட்டத்தட்டச் சென்னையில் டாடா டாக்சி என்ற பெயரில் ஓடும் வண்டியைப் போல் இருக்கை வசதி. ஆனால் ஆட்டோ போல் அமைப்பு. ஆட்டோக்சினு சொல்லலாமோ!
இது முழுதும் நமக்கு மட்டும் வேண்டும்னா வண்டி ஓட்டுநரிடம் இதுக்காக சம்பிரதாயமான பேச்சு வார்த்தையில் பேசி முடிக்கணும். ஹிஹிஹி, இந்த ட்ரிப்பில் நாங்க ரொம்ப ரசிச்சது இது. ஆட்டோக்காரரைக் கூப்பிட்டு நீங்க வரீங்களானு நாம கேட்டதுமே, அவங்க நம்ம கிட்டே உங்களுக்கு மட்டும் தனியா வர முடியாது. மத்த சவாரிங்களும் வருவாங்கனு சொல்லுவாங்க. அதுக்கு நாம் "இதை நாங்க ரிசர்வ்" செய்துக்கறோம்னு சொல்லணும். ரிசர்வ் கூடக் கிடையாது. ரிஜர்வ்! :))) அப்போ ஓட்டுநர், தோ போலியே ந பாபு னு சொல்லுவார். மறுபடி நாம ரிஜர்வ் என்பதை உறுதி செய்யணும். அதுக்கப்புறமா இந்த வண்டியிலே நாம் ஏறிக்கலாம்னும், வேறே யாரையும் ஓட்டுநர் ஏத்த மாட்டார்னும் தெரிஞ்சுக்கலாம். :)) இதை வந்த அன்னிக்குக் காரிலே வந்ததாலே கவனிச்சு வைச்சுக்கலை. அப்புறமாத் தான் புரிஞ்சது.
ஏற்கெனவே சாலைகள் மோசம். இதிலே இந்த வண்டிப் பிரயாணம் வேறே. வண்டி குலுக்கின குலுக்கல்லே என்னோட வயிறு உதரவிதானத்துக்கு மேலே வந்திருக்குமோனு சந்தேகம். இன்னும் போகலை! சாப்பாடெல்லாம் சாப்பிட்டுட்டுப் போனா அவ்வளவு தான். நல்ல வேளையா நாங்க காலம்பர குடிச்ச ஒரே ஒரு டீயோட கிளம்பி இருந்தோம். சரயு நதிக்கரையிலிருந்து ராம் தர்பார், சீதாகி ரசோயி பார்த்துட்டு, கோசலை, சுமித்திரை ஆகியோரின் அந்தப்புரங்களையும் பார்த்தோம். பின்னர் தசரதர் புத்திர காமேஷ்டி யாகம் செய்த இடத்தை தரிசித்தோம். படங்கள் கீழே. அதன் பின்னர் ஶ்ரீராம ஜென்ம பூமி பார்க்க வேண்டி ஆட்டோவில் கிளம்பினோம். ஶ்ரீராம ஜென்ம பூமியைக் காலை பதினோரு மணிக்குள் தான் பார்க்க முடியும். அதன் பின்னர் பகல் இரண்டு மணிக்குத் தான் திறப்பார்கள். நாங்கள் சென்ற சமயம் பதினெட்டாம் தேதி அங்கே ஏதோ கிளர்ச்சி என்பதால் அன்று காலை பதினோரு மணிக்கே ராமஜென்மபூமி செல்லும் சாலைகளை மூடப்போவதாகச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆகவே ஆட்டோ ஓட்டுநரும், வழிகாட்டியும் எங்களை தாக சாந்தி செய்து கொள்ளக் கூட விடவில்லை. இதை முடிச்சுட்டு அப்புறமா எங்கே வேணாலும் போய்க்குங்க என்று சொல்லிவிட்டார்கள். ஆட்டோ ராம ஜென்ம பூமி நோக்கிச் சென்றது.
அதோடு இல்லாமல் ஶ்ரீராமன் பட்டாபிஷேஹம் செய்து கொண்டப்போ அவருடன் வந்த வாநர சேனைகள் எல்லாம் அயோத்தி சுற்று வட்டாரங்களிலேயே தங்கிட்டாங்க போல! எங்கெங்கு காணினும் வாநரங்களடா! கையிலே எதுவும் கொண்டு போக முடியாது. நாம் கொண்டு போகும் எந்தப் பொருளையும் ஆட்டோவில் (செருப்பைக் கூட) விட்டுட்டுப் பார்த்துக்கோப்பானு சொல்லிட்டுப் போக முடியாது. அவங்களே மறுத்துடறாங்க. வாநரங்கள் சர்வ சகஜமா உலவிட்டு இருக்குங்க. யாரையும் ஒண்ணும் பண்ணலைனாக் கூடக் கையிலே எதையும் எடுத்துட்டுப்போக யோசிக்க வேண்டி இருக்கு.
அங்குள்ள பிரபலமான ஆஞ்சநேயர் கோயிலின் ஆஞ்சநேயர்.
ராமர், சீதை, லக்ஷ்மணனோடும் ஆஞ்சநேயனோடும்
எல்லா இடங்களிலும் ஶ்ரீராமர் இப்படியே காணப்படுவதால் எது எங்கே எடுத்ததுனு கொஞ்சம் புரியாமல் போகிறது. :))))
இது சகல பரிவாரஃங்களோடு இருப்பதாகச் சொல்கின்றனர். கீழே சின்னச் சின்னதாக மற்ற மூர்த்தங்கள்.
புத்ர காமேஷ்டி யாகம் நடந்த இடத்தில் உள்ள சந்நிதி. இங்கே குழந்தை இல்லாதவர்கள் வந்து வேண்டிக் கொண்டு ஆண்டு முழுவதுக்கும் பாயசம் நிவேதனம் செய்ய 200 ரூ வசூலிக்கின்றனர். குழந்தை பிறந்ததும், இங்கே கொண்டு வந்து பிரார்த்தனையை மணி கட்டி நிறைவேற்றுகின்றனர். மணிகள் கட்டியது படம் சரியாக வரலை. பிரதிபலிப்பு அதிகமாப் போயிருக்கு. டெலீட் செய்துட்டேன். :(
அரசக் கோலத்தில் தசரதன் அமர்ந்திருக்க, ரிஷ்ய சிருங்கர், வசிஷ்டர், கெளதமர், விஸ்வாமித்திரர் போன்ற முனிவர்கள் சூழ நடத்தப்பட்ட புத்ர காமேஷ்டி யாகத்தில் பாயசக் கிண்ணத்தோடு வரும் புருஷன் படத்துக்கு நடுவே சிவப்பு உடையில்.