எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, October 04, 2013

சப்தபதியின் போது சொல்லும் மந்திரங்களின் அர்த்தம்!


மணமகனையும், மணமகளையும் அப்படியே உட்கார்த்தி வைத்துப் பல நாட்கள் ஆகிவிட்டது.  கடைசியா பாணிக்ரஹணம் குறித்துப் பார்த்தோம்.  மணமகன் தன் வலக்கையால் மணமகளின் கரத்தைப் பிடிப்பதற்கும் நான்கு மந்திரங்கள் உண்டு.  பிராமணர் தவிர மற்ற சமூகங்களில் இதன் பின்னரே மாலை மாற்றலும் நடக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது.  இதன் பின்னர் அக்னிக்கு வடக்கே மணமகன் மணப்பெண்ணின் வலக்கையைப் பிடித்தவாறே அவள் வலக்காலைத் தன் இடக்கையால் தொட்டுக் கிழக்கே பார்த்தோ அல்லது வடக்குத் திசையிலேயோ பாதத்தை எடுத்து வைத்து அவளுடன் நடந்து செல்லவேண்டும்.  ஒவ்வொரு அடிக்கும் ஒரு மந்திரம் உண்டு.  7 அடிகள் எடுத்து வைக்க வேண்டும்.  சாஸ்திரப் படி ஏழு அடிகள் ஒருத்தருடன் எடுத்து வைத்து நடந்தால் அவர் நம் நண்பர் ஆகிவிடுவார் என்று ஆகிறது.  சாவித்திரி சத்யவானின் உயிரைக் காப்பாற்ற வேண்டி யமதர்ம ராஜனோடு இப்படித் தான் ஏழடிகள் எடுத்து வைத்துப் பின்னர் யமனின் நண்பன் என்ற ஹோதாவில் அவனிடமே வரங்களை வேண்டிப் பெற்றுத் தன் கணவனின் உயிரையும் மீட்டு வருவாள் என்று படித்திருக்கிறோம் அல்லவா!  அதே போல் இங்கே மணமகளோடு சேர்ந்து ஏழடி எடுத்து வைக்கும் மணமகன் தன் மனைவியைத் தன் சிநேகிதியாகவே கருத வேண்டும்.  இத்தனையும் செய்கையில் பிடித்த வலக்கையை விடவே கூடாது.  இது தான் திருமணத்தின் முக்கியக் கர்மாவாகும்.  சட்டப்படியும் இந்த சப்தபதி ஆனாலே திருமணம் நிறைவு பெற்றுத் திருமணம் சட்டரீதியாகவும் செல்லுபடி ஆகும்.

மந்திரங்கள் என்று சொன்னாலும் இன்னொரு விதத்தில் இது மணமகன் - மணமகள் இடையே நடக்கும் உரையாடல் என்றும் சொல்லலாம்.  மணமகன் தன் மனைவியிடம் தாங்கள் இருவரும் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் ஒவ்வொரு வாசகத்தைப் பேசுவான்.

முதல் அடி: நீ என் வீட்டுக்கு வருகிறாய்.  மஹாலக்ஷ்மி போன்ற உன் வரவால் என்ன் குலம் விருத்தி அடையட்டும்.  நீ மட்டும் சந்தோஷம் அடையாமல் என்னையும் சந்தோஷப் படுத்தப் போகிறாய்.  எல்லாவற்றிலும் முக்கியமான உணவுப் பொருட்கள் உன்னால் விருத்தி அடைந்து நீ என் இல்லம் வரும்போது நிறைந்து இருக்க அந்த மஹாவிஷ்ணு அருளட்டும்.

இரண்டாம் அடி:காக்கும் கடவுளான மஹாவிஷ்ணு என் வீட்டில் வந்து இருப்பதற்கு வேண்டிய உடல் வலிமையை உனக்குத் தரட்டும்.  அவன் அருளால் உன் எண்ணங்கள் நிறைவேறட்டும்.

மூன்றாம் அடி: நாம் இருவரும் சேர்ந்து வாழப்போகும் இந்தப் புதிய வாழ்க்கையில் சாஸ்திர சம்பிரதாயங்களையும் அவற்றால் ஏற்படுத்தப்பட்ட சட்ட, திட்டங்களை மீறாமலும், கடமையுடன் நாம் செயலாற்றும்படியும், அதற்கான நம்பிக்கைக்காகவும் இறைவன் நம்முடன் ஒத்துழைப்பானாக!

நான்காம் அடி: இவ்வுலக வாழ்க்கையின் இன்ப, துன்பங்களை நாம் இருவரும் முழுமையாக அனுபவிக்க வேண்டும்.  அனைத்துச் சுகங்களும் என்னோடு சேர்ந்த உனக்கும் கிடைக்க எல்லாம் வல்ல இறைவன் அருளட்டும்.

ஐந்தாம் அடி: சுக,போகங்களை அனுபவிக்கத் தேவையான வீடு, வாசல், நிலம், கால்நடைச் செல்வங்கள் போன்றவையும் நிறைந்து இருக்குமாறு கடவுள் அருளட்டும்.

ஆறாம் அடி: பருவகால மாற்றங்களினால் ஏற்படும் இயற்கைச் சீற்றங்கள் நம்மைத் தாக்கினால் வாழ்வின் சுவை குன்றாமல் அவற்றை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை நம் மனங்களுக்குத் தருமாறு அந்தக் கடவுள் அருளட்டும்.

ஏழாம் அடி:  நம் வாழ்க்கையில் வெறும் சுகத்தை மட்டுமே பார்க்க மாட்டோம்.  எல்லாவற்றையுமே அனுபவிப்போம்.  அதற்கு அடிப்படையான இயற்கைச் சக்திகளான, மழை, வெயில், பனி போன்றவை அந்த அந்தப் பருவத்தில் தவறாமல் ஏற்படுவதற்கு உதவி புரியும் கண்ணுக்குத் தெரியாத மாபெரும் சக்தியை வணங்கவும், அதற்குச் செய்ய வேண்டிய எல்லாக் கடமைகளையும் நாம் இருவரும் சேர்ந்து நிறைவேற்றவும் ஆண்டவன் அருளட்டும்.

இவ்வாறு திருமண வாழ்க்கையில் ஈடுபடும் மணமகனும், மணமகளும் தங்கள் வாழ்க்கைக்கு மட்டுமல்லாமல் உலக க்ஷேமத்துக்கும் சேர்த்துப் பிரார்த்திப்பான். இதன் மூலம் இருவருக்கும் மனத்தெளிவு உண்டாகி ஆன்மிகப் பாதையில் செல்ல வேண்டிய பக்குவம் ஏற்படும்.  இந்தப் பிறவியின் கடமைகளை ஆற்றவேண்டுமானால் இயற்கைச் சக்திகளும் உதவ வேண்டும் அல்லவா? அதற்கும் கடமைப்பட்டிருப்பதால் அவற்றுக்கும் சேர்ந்து நன்றிக்கடனை வேள்விகள், பூஜைகள் மூலம் நிறைவேற்றுவார்கள் தம்பதியர்.  இப்படி அறம் சார்ந்த வாழ்க்கையே இல்லறம் எனப்பட்டது.

19 comments:

  1. பொருள் பொதிந்த கர்மாக்கள். யாருக்கு இப்போதெல்லாம் இது என்னன்னு தெரியறது? :(

    ReplyDelete
  2. ஏழடிகளின் விளக்கங்களை அழகாக அறியமுடிந்தது.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  3. தெளிவாக எல்லா அர்த்தங்களையும் சொல்லியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்!

    ReplyDelete
  4. அழகா சொல்லியிருக்கீங்க

    ReplyDelete
  5. பொருள் பொதிந்த இந்த வாசகங்களை அவரவர் மொழியில் சொன்னால் பலன் இல்லாமலா போகப் போகிறது. குறைந்த பட்சம் இந்த சடங்குக்கு முன் இதை விளக்கி பிறகு நடத்தலாமே.

    ReplyDelete

  6. மொழியும் அர்த்தமும் புரியாததால் இதன் அருமைகள் புரிவதில்லை.

    ReplyDelete
  7. இப்போதெல்லாம் சில திருமணங்களில் சப்தபதி போன்றவற்றின் விளக்கங்களை தமிழில் அச்சடித்து விநியோகம் செய்கிறார்கள் - கல்யாணக் கூடத்தில் ஆங்காங்கே சிதறிக்கிடக்கிறது பார்க்கும்போது கஷ்டமாக இருக்கும்......

    அர்த்தம் பொதிந்த சப்தபதி மந்திரங்கள் - பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  8. வாங்க வா.தி. வரவுக்கு நன்னி ஹை! இப்போல்லாம் இதன் மொழிபெயர்ப்பைக் கொடுக்கிறாங்க. பல கல்யாணங்களிலும் ஆங்கிலம், தமிழில் மொழிபெயர்ப்பை காடரிங்காரங்களே கொடுக்கிறாங்க. :))))

    ReplyDelete
  9. வாங்க வைகோ சார், நன்றி

    ReplyDelete
  10. வாங்க ரஞ்சனி, இது அனைத்துக் குலத்தவருக்கும் பொதுவானதாச்சே! :)))))

    ReplyDelete
  11. நன்றி புதுகை!

    ReplyDelete
  12. ஜிஎம்பி சார், அவரவர் மொழியில் எல்லாருமே ஒரு காலத்தில் புரிந்து கொண்டு தான் இருந்தனர். அப்போ எல்லா வர்ணத்தவருக்கும் அத்யயனம் கட்டாயமாய் இருந்தது. இப்போவும் ஸ்தபதிகள் பலருக்கும் சம்ஸ்கிருத அறிவு பூரணமாய் இருக்கும். அதோடு வேத மந்திரங்கள் சம்ஸ்கிருத மொழியில் இல்லை. அவை உச்சரிப்புக்கும், உச்சரிப்பின் போது ஏற்படும் அதிர்வலைகளின் வீரியமுமே முக்கியத்துவம் வாய்ந்தவை. அதோடு இப்போதெல்லாம் பெரும்பாலான திருமணங்களில் பாணிக்ரஹணம்,சப்தபதியை விளக்கிச் சொல்லவும் சொல்கின்றனர் என்பதோடு அதுவரை பரிசுகள் கொடுக்கவோ, மணப்பெண், மணமகனின் கைகளைக் குலுக்குவதோ கூடாது என வற்புறுத்தியும் சொல்கின்றனர்.

    ReplyDelete
  13. வாங்க ஶ்ரீராம், கேட்டுத் தான் தெரிஞ்சுக்கணும், இல்லையா! :)))

    ReplyDelete
  14. வாங்க வெங்கட், ஆமாம் நீங்க சொல்வது போல் பல கல்யாணங்களில் அச்சடித்துத் தருகின்றனர். எத்தனை பேர் படிக்கிறார்கள் என்பது கேள்விக்குறி தான்! என்றாலும் ஊதுகிற சங்கை ஊதிவிட்டால் பொழுது விடியும் போது கட்டாயம் விடியும். :))))

    ReplyDelete
  15. ஜிஎம்பி சார், நீங்க எழுதிய பின்னூட்டத்தை அசை போட்டுக்கொண்டே வைகோ சாரின் பதிவுக்குப் போனால் விடை அங்கே எடுத்த எடுப்பிலே காத்திருந்தது.

    பரமாசாரியாரின் அமுதமொழியாக அங்கே வந்திருப்பவை:

    நாம் ஒரு விவாஹம் செய்கிறோம். உபநயனம் செய்கிறோம், ஸீமந்தம் செய்கிறோம் என்றால், அதற்கு இரண்டு நாட்கள் முந்தி பாஷ்யக்ஞான வேத பண்டிதரை வரவழைத்து, அதிலே பிரயோகமாகிற மந்திரங்களுக்கு என்ன அர்த்தம்? சடங்குகளுக்கு என்ன தாத்பரியம்? என்று கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.

    கர்மாவைப் பண்ணுகிறபோதே கேட்டுக்கொள்வது என்றால் அதற்கு ’டயம்’ [பொழுது] இருக்காது.

    முன்னாடியே தெரிந்து கொண்டால் தான், மனசிலும் ஊறும்.

    அப்போதுதான் கர்மா பண்ணுகிறபோது அதில் மனசார நமக்கு ஓர் பிடிப்பும் இருக்கும்.

    ReplyDelete
  16. இப்போல்லாம் எப்படினு தெரியலை. ஆனால் எங்க பையருக்கு உபநயனம் செய்விக்கையில் எங்க குடும்ப புரோகிதர் கிராமத்திலிருந்து (மாமனார் வீட்டுக்குப் பரம்பரையாகப் புரோகிதம் செய்பவர்) சென்னை வந்து எங்களையும், எங்க பையரையும் உட்கார்த்தி வைத்து உபநயனம் என்றால் என்னனு ஒரு வகுப்பு எடுத்தது நினைவில் இருக்கு. அதோடு நாங்களும் ஒரு காலக்ஷேபம் செய்யும் நண்பரை வரவழைத்து உபநயனம் ஆரம்பிக்கும் முன்னரும், முடிந்த பின்னரும் அது குறித்த ஒரு சொற்பொழிவைச் செய்ய வைத்தோம். என் தம்பியின் மாமனார் தமிழாசிரியர் அழகுத் தமிழில் உபநயனம் குறித்த தகவல்களை எல்லாம் திரட்டி ஒரு சொற்பொழிவு கொடுத்தார். இம்மாதிரிச் செய்தால் ஏன், எதற்கு, என்ற கேள்வியே எழாது.

    ReplyDelete

  17. //கேட்டுத் தான் தெரிஞ்சுக்கணும், இல்லையா! :)))//

    இது போல எங்கேயாவது படிச்சும் தெரிஞ்சுக்கலாம்! :)))

    ReplyDelete