எத்தனை பேர் காப்பிக்கொட்டை மெஷினைப் பார்த்திருப்பீங்கனு தெரியலை. என்னோட காப்பிக்கொட்டை மெஷின், பொடி அரைக்கும் மெஷின் இரண்டையும், ஶ்ரீரங்கம் வரதுக்கு முன்னாடி தான் எடைக்குப் போட்டேன். :( அப்போ இருந்த மனநிலையிலே ஃபோட்டோ எடுக்கணும்னு தோணலை. காப்பிக்கொட்டை மெஷினில் அரைச்சுப் பழகி இருந்ததால் இதிலே சிக்கினதுமே அதன் வாயைத் திறந்து அதிகப்படியாக இருந்த பொருளை எடுத்துவிட்டு மறுபடிபோட்டு அரைத்தேன். ஹிஹி, தொழில் நுட்பம் எல்லாம் கத்துக்கிட்டு இருந்தோமுல்ல! அப்போ எல்லாம் ஃப்யூஸ் போனால் கூட நானே ஃப்யூஸ் கட்டையை எடுத்துட்டுப் போடுவேன். அது ஒரு கனாக்காலம்! :)))) இப்படியாகத் தானே ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம்னு செலவிட்டு ஒரு வாரத்தில் அரைத்து முடித்தேன். மிக்சியில் அரைக்கக் கூடாதானு கேட்கலாம். அப்போ மிக்சி அவ்வளவா பிரபலம் ஆகலை. எங்கேயோ ஒன்றிரண்டு பேர் வைச்சிருந்தாங்க. அதுவும் சுமீத் மிக்சி தான் கிடைக்கும். முன் பதிவு செய்து கொள்ள வேண்டும். அப்போவே ஆயிரம் ரூபாய் விலை. அப்போத் தங்கம் மிக்சியை விடக்குறைவாகவே விற்றது. மிக்சி வாங்கற பணம் இருந்தால் கல்யாணத்துக்கு இருந்த நாத்தனாருக்குப் பவுன் வாங்கலாம். ஆகவே நோ மிக்சி. :))))
நசிராபாதில் இப்படியாகத் தானே கிட்டத்தட்ட நாலு வருஷம் கை மெஷினிலே அரைச்சே பொடி விஷயம் கடந்து சென்றது. இதுக்கு நடுவிலே பையர் பிறந்து அம்மா மடியை விட்டு இறங்காத ரகமான அவரை மடியில் போட்டுக் கொண்டே ஆட்டுக்கல், அம்மி, கை கிரைண்டரில் அரைத்த கதை எல்லாம் தனியா வைச்சுப்போம். அதுக்கப்புறமா சிகந்திராபாத் வந்தப்போ அங்கே கொஞ்சம் பரவாயில்லை ரகம். ஒரே ஒரு மெஷினில் அரைச்சுக் கொடுப்பாங்க. நல்ல நாள், நக்ஷத்திரம், யோகம் பார்த்துப் போய் அரைச்சு வாங்கி வரணும். கால் கிலோ மி.வத்தல் போட்டு அரைக்கிற பொடியையே ஒரு மாசத்துக்கெல்லாம் பழசாயிடுச்சு சொல்லும் குழுவைச் சேர்ந்த நான் அங்கே அரைகிலோ மி.வத்தல் போட்டு அரைச்சு வாங்கி வைச்சுக்க வேண்டியதாப் போச்சு! இதிலெல்லாம் நம்ம தமிழ்நாட்டை அடிச்சுக்க வேறே மாநிலம் கிடையாது. சகலவிதமான செளகரியங்களும், அசெளகரியங்களும் நிறைந்த மாநிலம்னா அது தமிழ்நாடு மட்டுமே!
பின்னர் மறுபடி சென்னை வந்து மறுபடி நசிராபாத் போனப்போ மிக்சி வாங்கியாச்சு. சுமீத் தான். முன் பதிவு செய்து வாங்கிக் கொடுத்தது என் தம்பி. என்றாலும் அதிலே மஞ்சளை எல்லாம் போட்டு அரைக்கக் கொஞ்சம் யோசனையாக இருக்கும். இப்போ மாதிரி பல அளவுகளில் ஜார்கள் இல்லை. ஒரே அளவு தான். பெரிய ஜார் மட்டுமே. அப்புறமா ரொம்பக் காலம் கழிச்சு சின்ன ஜார் கிடைக்க ஆரம்பிச்சது. அந்தச் சின்ன ஜாரிலே சாம்பாருக்கு அரைச்சு விடறதெல்லாம் கஷ்டம். ஆகவே அதில் கொஞ்சம் போலக் காப்பிக் கொட்டை போட்டு காப்பிப் பொடி மட்டும் அரைக்கனு வைச்சிருந்தேன். ஆகக் கூடி மிக்சி இருந்தும் சாம்பாருக்கு அரைக்கிறதெல்லாம் அம்மியில் தான். :)))) பின்னர் அங்கிருந்து குஜராத் ஜாம்நகர் வந்தப்போ கொஞ்சம் அப்பாடானு இருந்தது. அங்கே உள்ள ஒரு மாவு மில்லில் மி.பொடி, ம.பொடி, த.பொடினு வகை வகையாப் பொடி இருக்க, அவங்க கிட்டே அரைச்சுத் தரச் சொல்லிக் கேட்டால்!!!!!
ம்ஹூம், மாட்டவே மாட்டேன்னு சொல்லிட்டார். வேணும்னா மி.பொடி, த.பொடி, ம.பொடினு வாங்கிப் போய்க் கலந்துக்குங்கனு சொல்லவே, கடும் ஆய்வுகள் எல்லாம் செய்து அரை கிலோ மி.பொடிக்குத் தேவையான த.பொடி, ம.பொடி வாங்கி மூன்றையும் கலந்து கொண்டு. மேல் சாமான்களை வெறும் வாணலியில் வறுத்துக் கொண்டு மிக்சியில் பொடி செய்து அவற்றோடு கலந்து கொண்டு மறுபடி மிக்சியில் போட்டு அரைத்துக் கலந்து கொண்டேன். அதிலே குழம்பு வைத்தாலோ, ரசம் வைத்தாலோ, வாசனை ஊரைத் தூக்கியது! ஆஹா, அருமைனு எனக்கு நானே ஷொட்டுக் கொடுத்துக் கொண்டேன். இந்த முறையில் பழகிக் கொண்டது எனக்குப் பின்னாட்களில் அமெரிக்காவில் போய்ப் பெண்ணுக்கும், பிள்ளைக்கும் சாம்பார்ப் பொடி, ரசப்பொடி பண்ணி வைக்க உதவியது; உதவுகிறது. அது சரி, இந்தக் கதை ஃப்ளாஷ் பாக்கெல்லாம் ஏன்னு கேட்கறீங்களா?? இப்போவும் கடந்த ஒரு மாசமாக ரசப்பொடி பண்ண நேரமே இல்லாமல், இருந்த பொடியெல்லாம் தீர்ந்து போக, தனியா, து.பருப்பு, க.பருப்பு, மிளகு, வெந்தயம் எல்லாவற்றையும் வறுத்துக் கொண்டு மிக்சியில் பொடி செய்து வீட்டில் வைத்திருந்த தனி மிளகாய்ப் பொடியோடு கலந்து கொண்டு மறுபடி அரைத்து வைத்துக் கொண்டிருக்கிறேன். அதில் தான் பத்துநாட்களாகக் குழம்பு, ரசம் எல்லாம். சாம்பார் மட்டும் எப்போவும் போல் அரைத்துவிட்டுத் தான். பின்னே? அது ஒண்ணு தானே ஒழுங்கா வரும்! :))))
நேத்துத் தான் ரசப்பொடிக்கு சாமான்கள் எல்லாம் வாங்கி வைத்து அரைத்து வாங்கி வந்திருக்கிறோம். ரொம்பக் கொரகொரனு அரைச்சிருக்காங்க. :) சரியாக அரைக்கலைனு நான் நொட்டுச் சொல்லவும், ரங்க்ஸுக்குக் கோபம். ஹிஹிஹி, என் மேல் இல்லை(அப்படித் தானே நினைச்சுக்கணும்) அரைச்சுக் கொடுத்த தாத்தா மேல். பொதுவா இந்த மெஷின்காரங்க கிட்டே ரொம்ப நைசா வேண்டாம்னா சாமான்கள் எல்லாம் தெரியும்படியாக் கொரகொரனு அரைக்கிறாங்க. அவங்களுக்கெல்லாம் புரியவே இல்லை. அதுவே நான் அரைச்சு வைச்சிருக்கேன் பாருங்க, சூப்பரா இருக்கு. கோதுமை அரைக்கையில் நைசா வேண்டாம்னு சொன்னதுக்கு ரொம்பக் கொரகொரனு அரைச்சிருக்காங்க. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதனாலே இனி பேசாமல் இப்படியே அரைச்சுடலாமானு யோசிச்சுட்டு இருக்கேன். :)))) அதுக்குத் தான் இந்தப் பதிவே. ஆனால் கோதுமையை மெஷினில் தான் அரைச்சாகணும்! மாவெல்லாம் வாங்கினால் சரிப்பட்டு வரலை. என்ன செய்யலாம்????
இப்படியாகத் தானே பொடி மஹாத்மியம் இப்போதைக்கு நிறைவு பெற்றது.