எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, March 08, 2015

மாதர் "தம்"மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்!

அகில உலகப் பெண்கள் தினமாம் இன்று. பெண்களுக்கு என ஒரே ஒரு தினம் மட்டுமா? அல்லது இன்றைய தினம் மட்டும் பெண்களுக்கு ஏதேனும் சிறப்புச் செய்யப் போகிறார்களா? ஊடகங்கள் மூலம் பிரபலமான பெண்களைத் தவிர மற்றவர்களுக்கு இந்த நாளும் எல்லா நாளையும் போல் ஓர் நாளாகவே போகப் போகிறது. ஆனாலும் எங்கே பார்த்தாலும் பெண்கள் தினத்துக்கான வாழ்த்துகள் குவிந்து கொண்டிருக்கின்றன.  இன்று ஒரு நாள் பெண்ணை மதித்தால் போதுமா?  பெண்களை நினைத்தால் போதுமா? பெண் என்பவள் ஒரு தாயாக, மனைவியாக, சகோதரியாக, தோழியாக, மகளாக எனப் பல அவதாரங்கள் எடுக்கிறாள். இதில் எந்தப் பெண்ணை நாம் போற்றுகிறோம்?  எந்தப் பெண்ணை இழிவு செய்கிறோம்? ஒட்டுமொத்தமாகப் பெண் குலத்தையே தானே.

அதிலும் பெண்கள் தம்மைத் தாமே இழிவு செய்து கொள்வதில் அவர்களுக்கு நிகர் அவர்களே தான்.   பெண்ணை சக்தி வடிவமாகக் கண்ட பாரதி, பொதுவாக,
"மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்." என்று கூறிப் போய்விட்டான்.  ஆனால் அவன் கண்டானா என்ன? இன்றைய நவநாகரிக மாதர்கள் தம்மைத் தாமே இழிவு செய்து கொள்ளும் கேவலங்களில் இறங்குவார்கள் என! அந்தக் காலப் பெண்களைக் கட்டுப்பெட்டியாக இருந்திருக்கிறார்கள் என்றும் தனித்து நிற்கவில்லை என்றும், அவர்களின் சுயம் அழிக்கப்பட்டது என்றும் சொல்லும் இக்காலப் பெண்கள் தாங்களும் அந்தத் தவறையே வேறு முறையில் செய்வதை நினைத்தாவது பார்ப்பார்களா?

உண்மையான பெண் சுதந்திரம் பெண் தன் மதிப்பை இழக்காமல் இருப்பதிலே தான் இருக்கிறது.  ஆனால் இப்போதைய பெண்கள் கொடுமைக்கு எல்லை இல்லை என்பதை நிரூபிப்பவர்களாக ஆகிவிட்டார்கள்.  பல தினசரிகளிலும் பெண்கள் செய்த கொடுமைகள் வெளி வருகின்றன.  ஆனால் இதற்கெல்லாம் அடிப்படை திரும்பத் திரும்பச் சொல்வது போல் தொலைக்காட்சித் தொடர்கள். எந்தத் தொடரை எடுத்துக் கொண்டாலும் ஒரு பெண் ஒற்றுமையாக இருக்கும் கணவன், மனைவியைப் பிரிப்பதில் தீவிரமாக இருக்கிறாள்.  கர்ப்பிணியான பெண்ணை மாடிப்படிகளில் இறங்குகையில் சோப்பு நீரை ஊற்றிக் கீழே விழ வைத்து அவள் கர்ப்பம் கலங்கும்படி செய்கிறாள். எல்லாவற்றுக்கும் மேல் சொத்துக்காகத் தன் கணவனின் கூடப் பிறந்தவர்களையே திட்டம் போட்டு அழிக்கவும் நினைக்கிறாள்.  அதில் வெற்றியும் காண்கிறாள்.  என்னதான் பின்னால் நல்ல முடிவே வந்தாலும் இப்படி எல்லாம் பெண்கள் கீழிறங்கிச் செல்வார்கள் என்று காட்டுவதும், அதில் நடிக்கப் பெண்கள் சம்மதிப்பதும் நினைக்கவே அருவருப்பாக இருக்கிறது.

எல்லாம் பணத்துக்காக.  பணம் வந்தால் போதும்; சுகமான வாழ்க்கை நடத்தினால் போதும்.  அதற்காக எவ்வளவு கீழிறங்கினாலும் பரவாயில்லை  என்று நடக்கும் இந்தப் பெண்கள் தம்மைத் தாமே இழிவு படுத்திக் கொள்வதோடு அல்லாமல் பெண் குலத்துக்கே இழிவு தேடித் தருகின்றனர்.

இது போதாது என்று டெல்லியில் குழுவாகக் கற்பழிக்கப்பட்டு இறந்து போன நிர்பயா என்னும் பெயர் வைக்கப்பட்ட பெண்ணை எவ்வளவு இழிவாகச் சொல்ல முடியுமோ அவ்வளவு இழிவாக பிபிசி சானலில் ஆவணப்படமாக எடுத்து வெளியிட்டிருக்கின்றனர். இதற்கு அவர்கள் சொல்லும் காரணம் குற்றவாளியின் தரப்பிலும் நியாயம் இருக்கிறதாம்.  என்ன நியாயம்? நாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்வோம்! பெண்கள் வாய் மூடி மௌனியாக இருக்க வேண்டும். பொறுத்துக் கொண்டிருக்க வேண்டும் சண்டை போட்டிருக்கக் கூடாது என்றெல்லாம் சொல்கிறான்.  இதுவா நியாயம்? இம்மாதிரி ஒரு கொடுமை இங்கிலாந்தில் நடந்து, அங்கே இந்தியப் படத் தயாரிப்பாளர்கள் சென்று சிறையில் அனுமதி பெற்று ஆவணப்படம் எடுத்திருக்க முடியுமா?

மத்திய அரசு வெளியிடக் கூடாது எனத் தடை உத்தரவு பிறப்பித்தும் வெளியிட்டதோடு அல்லாமல், இன்னமும் பல நாடுகளில் வெளியிடவும் ஆவன செய்கிறார்களாம்.  திட்டம் போட்டு நாட்டின் இறையாண்மையைக் கேவலப்படுத்தும் மனிதர்களா பெண்களை மதிக்கிறார்கள்?  அப்பாவியான ஒரு பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் கற்பிக்கும் உலகத்தோர் இருக்கையில் பெண்கள் தினம் ஒரு கேடா? வெட்கக்கேடு!  இதை விட மோசமானதொரு பரிசு பெண்கள் தினத்துக்கு எவராலும் கொடுத்திருக்க முடியாது! இதை, இந்த அவமானத்தை   இந்தியாவின் ஒவ்வொரு பெண்ணும் எதிர்த்து நிற்கவேண்டும்.  அதுவே உண்மையான பெண்கள் சுதந்திரம். பெண்கள் விடுதலை! பெண்ணுக்கு மதிப்பு. 

31 comments:

  1. சரியாகச் சொன்னீர்கள். கருத்து சுதந்திரம் என்ற பெயரில் நிர்பயா என்ற அந்த இளம்பெண்ணை அவள் இறந்தும் கேவலப் படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். குற்றவாளிகளுக்கு குரல் கொடுக்கும் இவர்களை என்னவென்று சொல்வது?

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஐயா, கருத்துக்கு நன்றி. இப்போதெல்லாம் குற்றவாளிகளுக்குப் பொன்னாடை போர்த்தி மலர்மாலை சூட்டி கௌரவிப்பதுதான் பெருமை! :(

      Delete
  2. உணர்வு பூர்வமாக ஜொலித்திருக்கிறீர்கள். முதிர்ச்சியான பார்வை. புதுக் காற்றை சுவாசித்த, புது எழுச்சியை தரிசித்த தெம்பு நம்பிக்கையாய் சுடர் விடுகிறது.

    படித்து முடித்த பொழுது மனசுக்கும் ஆறுதலாக இருந்தது. தங்கள் சிந்தனைத் தெளிவு உற்சாகம் கொடுத்தது. இன்றைய தினச் சிறப்புப் பதிவு என்கிற பெயரில் வயதில் மூத்தவர்கள் கூட குவித்திருக்கிற குப்பைகளுக்கிடையே குந்துமணியாய் மினுமினுக்கிறது.

    தாங்கள் குறிப்பிடுகின்ற உண்மையான பெண்கள் சுதந்திரத்தைக் கட்டிக் காப்பாற்றவும், அப்படியான சுதந்திரத்தை
    நிச்சயப்படுத்தவும் துணை நிற்கிற முற்போக்கு சிந்தனை கொண்ட ஒரு பெரும் பட்டாள ஆண்கள் இந்த தேசத்தில்
    இன்றைய தேதியில் உண்டு. அவர்கள் துணையுடன் உண்மையான சுதந்திரத்தை வென்றெடுக்க சபதம் ஏற்போம்.


    ReplyDelete
    Replies
    1. வாங்க ஜீவி சார். கொஞ்சம் அதிகமாய்ப் பாராட்டி இருக்கீங்களோனு தோணுது. என்றாலும் பாராட்டுக்கு நன்றி. இந்தப் பதிவுக்கு எந்தப் பெண்பதிவரும் வந்து கருத்திடவில்லை (ராம்வியைத் தவிர, இது சேர்க்கையில் எப்படியோ விடுபட்டுவிட்டது) என்பது தான் எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. போனால் போகட்டும்! :(

      Delete
  3. இது நியாயமே இல்லை அம்மா... படுபாவிகள்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க டிடி. துளிக்கூட நியாயம் இல்லைதான். ஆனால் இதை ஆதரிக்கிறவர்கள் தான் அதிகம். :(

      Delete
  4. இது தங்களது எண்ணங்கள் மட்டுமல்ல அம்மா
    என் போன்றோரின் பார்வையும் அதுவே.
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி அன்பே சிவம். ஆதரவுக்கு மிக நன்றி.

      Delete
  5. //இந்த அவமானத்தை இந்தியாவின் ஒவ்வொரு பெண்ணும் எதிர்த்து நிற்கவேண்டும். அதுவே உண்மையான பெண்கள் சுதந்திரம். பெண்கள் விடுதலை! பெண்ணுக்கு மதிப்பு. //
    அற்புதமாக சொல்லியிருக்கீங்க, மாமி..

    ReplyDelete
    Replies
    1. வாங்க ராம்வி, உங்க கருத்தைப் பகிர்ந்ததுக்கு நன்றி. உங்க கருத்தைக் கவனிக்காமல் முதலில் பெண் பதிவர்களே காணோமேனு நினைச்சுட்டேன். :)

      Delete
  6. உங்கள் தார்மீக ச் சீற்றம் மிகவும் மரியாதைக்குரியது..போற்றுகிறேன்..

    மாலி

    ReplyDelete
  7. அனல் தெறிக்கும் அற்புதமான + உணர்வுபூர்வமான எழுத்துக்கள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வைகோ சார்.

      Delete
  8. சரியாகச் சொல்லி இருக்கிறீர்கள். சரியான அறச்சீற்றம். இத்தனை நாள் அந்தப் பெண்ணின் பெயர் வெளியில் தெரியாது. சொல்லக் கூடாது, சொல்லவேண்டாம் என்று கேட்டுக் கொண்டும் அந்த விவரங்களை வெளிப்படுத்தியிருக்கும் அது ஆவணப்படமல்ல. ஆணவப் படம். அதை மத்திய அரசு தடை செய்திருக்கக் கூடாது என்று நம் நாட்டு பிரபலங்களே சொல்வதும் கொடுமை.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஶ்ரீராம். விட்டால் அந்தக் குற்றவாளிகளுக்கு பாரத ரத்னாவே சிபாரிசு செய்து வாங்கிக் கொடுப்பாங்க. இதுவும் ஒரு வகை ஆணாதிக்கமே!

      Delete
  9. ஆவண்ப் படம் பார்த்தீர்களா? அதில் சொல்லப் பட்டிருக்கும் செய்தி என்று கூறப்படுவது, அந்தப் பெண்ணின் பெற்றோர்களின் பேட்டியும், டெல்லியில் நடந்த எதிர்ப்புப் போராட்டங்களின் பதிவும் கூட. ஜெயிலில் இருக்கும் குற்றவாளியின் வாக்கு மூலமும் என்று அறியப் படுகிறதுகுற்றவாளியின் வாக்கு மூலத்தில் நம்நாட்டு சில மதவாதிகளும் தலைவர்களும் ஏற்கனவே கூறி இருக்கும் செய்திகள்தான் ஒரு தவறுக்கான காரணமாகக் கூறப்படும் கருத்துக்களைத்தான் தடை என்னும் பெயரில் எதிர் கொள்ளத் தயங்குகிறார்கள் . குற்றவாளியின் கருத்து நமக்கு உடன்பாடோ இல்லையோ அது வேறு விஷ்யம். எல்லா விவரங்களும் தெரிந்தால்தான் இம்மாதிரி நிகழ்வுகள் நடை பெறாதிருக்க ஆவன செய்ய முடியும். உலகம் மிகச் சிறியது. தடை என்று வரும்போதுதான் அந்தப் படத்தின் பிரபலம் அதிகமாகிறது.மாற்றுக்கருத்துக்களைக் கேட்கக் கூட நாம் தயாராய் இல்லை என்றே புரிகிறது. சம்பந்தப் பட்ட பெண்ணின் பெயர் தெரிய வரக்கூடாது என்பது அந்தப் பெண்ணின் பெயருக்குப் பங்கம் வரக் கூடாது என்பதால்தான், ஆனால் அந்தப் பெண்ணின் பெற்றோரே அந்தப் பெண்பற்றிய எல்லா விவரங்களையும் கூறி இருக்கிறார்கள். இறந்த பெண்ணைக் கேவலமாகச் சொல்லவில்லை. தவறு செய்தவனின் கண்ணோட்டமே வெளியிடப் பட்டிருக்கிறது/ இதையே நாம் எப்படி எதிர் கொள்கிறோம் என்பதுதான் கேள்வியே.

    ReplyDelete
    Replies
    1. மாற்றுக் கருத்தைக் கேட்கத் தயார் தான். அந்தக் குற்றவாளி சொன்னது எல்லாம் அப்போதே பத்திரிகைகளில் வந்தது தான்.என்னுடைய வருத்தமே அதை மீண்டும் படமாக்கி ஒரு அழியா ஆவணமாக்கி உலகநாடுகளின் முன்பு இந்தியாவின் கௌரவத்தைச் சிதைத்தது, துடிதுடித்து இறந்த அந்த இளம்பெண்ணின் பெயருக்குக் களங்கம் உண்டாக்கியது இரண்டும் தான். என்னைப் பொறுத்தவரை இதை நான் சரியாகவே எதிர்கொள்கிறேன். இனியும் எதிர்கொள்வேன்.

      Delete
  10. சிந்திக்க வேண்டிய நாளில்
    சிந்திக்க வைக்கும் பதிவு

    ReplyDelete
    Replies
    1. நன்றி காசிராஜலிங்கம்.

      Delete
  11. குப்பையிலே குவிந்து கிடக்கிறகுந்துமணியாகவேஇருக்கட்டும் உங்கள் பதிவு. பூனை கண்ணை மூடிக் கொண்டால் பூலோகமே இருண்டு விட்டதாக நினைக்குமாமின்றைய ஆங்கில த ஹிந்து பத்திரிக்கையில் பத்திரிக்ககை ஆசிரியர்களில் மூத்தவராகக் கருதப் படும் என். ராம் அவர்களின் NO LEG TO STAND ON என்ற கட்டுரையையும் Vasundara Sirnate அவர்களின் The banality of evil revisited என்னும் கட்டுரையையும் வாசித்துப் பாருங்கள் வயதில் மூத்தவர்கள் எழுதியது குப்பையா என்று தெரியும். . பிறர் எழுதுபவற்றுள்குறை கூறுவது சிலருக்கு க் கை வந்த கலையாய் இருக்கிறது. கருத்துக்களில் மாறு படுவது இயல்பு. ஆனால் அதற்காக எதையும் எழுதுவதா.?

    ReplyDelete
    Replies
    1. ஐயா, குப்பையிலே குவிந்து கிடக்கும் குந்துமணி என என்னை நானே பாராட்டிக் கொள்ளவில்லை. ஜீவி சாருக்கு அப்படித் தெரிந்திருக்கிறது என்பதால் உங்களுக்கும் அப்படியே இருக்க வேண்டும் என்றும் வற்புறுத்தவில்லை. நேற்றைய ஹிந்துப் பத்திரிகைக் கட்டுரையை நீங்கள் சொன்ன பிறகு நானும் படித்தேன். பொதுவாக ஹிந்துப் பத்திரிகை வரவழைத்தாலும் அதன் அடிப்படைக் கருத்துகள் எனக்குப் பிடிக்காததால் படிப்பதில்லை. இப்படி யாரேனும் சொல்லி எப்போவானும் படிப்பது உண்டு.

      Delete
    2. //வயதில் மூத்தவர்கள் எழுதியது குப்பையா என்று தெரியும். . பிறர் எழுதுபவற்றுள்குறை கூறுவது சிலருக்கு க் கை வந்த கலையாய் இருக்கிறது. கருத்துக்களில் மாறு படுவது இயல்பு. ஆனால் அதற்காக எதையும் எழுதுவதா.?//

      ஹிந்துவின் ராம் பற்றி மிக அதிகமாகவே தெரியும். அவருடைய எந்தக் கருத்துடனும் எனக்கு உடன்பாடு இல்லை. அவர் சொன்னார் என்பதற்காக அதையே உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்குச் சமமாகக் கருதும் எண்ணமும் என்னிடம் இல்லை. வசுந்தரா சிரான்டே ஆண்களின் ஆதிக்கத்தைத் தான் சாடி இருக்கிறார்.(எனக்குப் புரிந்தவரை) அது உயர்குலத்து ஆணாக இருந்தாலும், இந்தக் குற்றவாளியைப் போல் அடிமட்டத்துக்குடும்ப ஆணாக இருந்தாலும் பெண்ணைப் பற்றிய அவன் சிந்தனை தாழ்வாகவே இருக்கிறது என்பதைத் தான் சுட்டி இருக்கிறார். என்றாலும் அவர் சொல்லிவிட்டார் என்பதற்காக இந்த ஆவணப்படத்தைப் பிரபலம் செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. அதன் தாக்கம் எப்படி முடிந்திருக்கிறது என்பதை என் இன்றைய பதிவு ஆதாரத்துடன் சொல்கிறது.அதையும் பாருங்கள். மேலும் எவருடைய எழுத்தையும் நான் குப்பை என ஒரு போதும் சொன்னதில்லை; இனியும் சொல்ல மாட்டேன். எதை வேண்டுமானும் எழுதவும் இல்லை. பெரும்பாலானவர்களின் மனோநிலையைத் தான் பிரதிபலித்திருக்கிறேன். கருத்து வேறுபாடு என்பதற்காகக் குற்றவாளி சொன்னதை ஆதரித்துப் பேசிவிடவில்லை. ஆனால் அப்படிப் பேசினால் தானே அறிவுஜீவி! எனக்கு அத்தகைய பட்டமும் தேவை இல்லை. கருத்துக்களில் மாறுபட்டு எதை வேண்டுமானாலும் எழுதுவது என் வழக்கமும் இல்லை.

      Delete
  12. தங்கள் மதிப்பைக் கெடுத்துக் கொள்ளும் மடமையைப் பொதுவில் வைப்போம்.

    தங்கள் சீற்றம் சற்றுத் தடம் மாறி இருக்கிறதோ? தொலைக்காட்சியில் வருவது கற்பனை அல்லது கற்பனை நீட்சி அல்லவா? அதனால் குடி கெட்டு விட்டது என்பது ஏற்க முடியவில்லை. தொலைக்காட்சியின் தாக்கம் சமூக முன்னேற்றத்திலும் தெரிவதாக நினைக்கிறேன்.

    மாதரை இழிவு படுத்தும் மடமையின் ஆணி வேர் லிங்கம் மற்றும் கிருஷ்ண வழிபாடுகளில் உள்ளதோ?

    ReplyDelete
    Replies
    1. அப்பாதுரை, தொலைக்காட்சித் தொடர்களைப் பார்த்துவிட்டுத் தடம்புரளும் பெண்களைக் குறித்து நீங்கள் அறியவில்லை என்றே நினைக்கிறேன். எத்தனை பெண்கள் அந்த வில்லிகளை மாதிரியாக எடுத்துக்கொள்கிறார்கள் என்பதை ஒரு முறையாவது நகரப் பேருந்துகளில் போகும்போது பெண்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதையும், பொது இடங்களில் பேசிக் கொள்வதையும் வைத்துப் புரிந்து கொள்ளலாம். உங்களுக்கு அதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

      மடமையின் ஆணிவேர் லிங்க வழிபாடு, கிருஷ்ண வழிபாடு என்று சொல்லி இருப்பது அதைப் பற்றியும் உங்கள் புரிதல் சரியாக இல்லை என்பதையே காட்டுகிறது. லிங்க வழிபாடு நிச்சயமாய் நீங்கள் நினைக்கும் பொருளில் இல்லை. அதைக் குறித்து ஏழு வருடங்கள் முன்னரே பதிவிட்டிருக்கிறேன். மீள் பதிவும் கொடுத்திருக்கேன். கிருஷ்ண வழிபாடு சரணாகதித் தத்துவத்தைக் குறிக்கும். இவ்வுலகில் பிறந்த அனைவரும் கிருஷ்ணனுக்கு முன் பெண்ணே என்னும் பொருளைக் குறிக்கும். இதைத் தான் தன்னைப் பார்க்க மறுத்த ஹரிதாஸிடம் பக்த மீராபாயும் சொன்னாள். புரிந்து கொள்வது உங்களுக்குக் கடினமே இல்லை. கொஞ்சம் யோசித்தால் புரியும்.

      Delete
  13. பொதுவில் பெண்மையைத் துதித்து தனிமையில் தடம் மாறும் தவறுகளை நிறைய பேர் செய்கிறோம். ஆத்திரத்தில் என்ன பேசுகிறோம் செய்கிறோம் என்பது புரியாமல் நடந்து கொள்ளும் மடமையை ஆண்கள் அறிந்து அழிக்க வேண்டும். 'நாட்டிலே பெண்மையைப் பேணச் சொல்லி வீட்டிலே எத்தனை முறை வழுவியிருக்கிறேன்" என்று ஒவ்வொரு ஆணும் சிந்திக்கவே மகளிர் தினம் உருவானதோ?

    ReplyDelete
    Replies
    1. ஆண் மட்டுமில்லை, பெண்ணும் ஆத்திரத்தில் அறிவிழந்தே போகிறாள். இங்கே நல்ல குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வைர வியாபாரியின் மனைவி க்ஷண நேர இன்பத்திற்காக ஒரு ஜோசியனிடம் தன் குடும்பத்தையே பலி கொடுத்தாள். சென்ற வருடப் பத்திரிகைகளிலே வந்து ஶ்ரீரங்கம் முழுதும் இதே பேச்சு. முதலில் கணவனை பலி கொடுத்துவிட்டு, அவர் வெளியூர் சென்றிருப்பதாகப் பொய் சொல்லி அதைக் கண்டு பிடித்த பிள்ளையைக் கொன்று, அதைக் கண்டு பிடித்த பெண்ணையும் கொன்று......... போதுமா? இன்னும் வேணுமா? இதற்கெல்லாம் தொலைக்காட்சித் தொடரே காரணம் என அந்தப் பெண்ணே சொல்லி இருப்பதாகப் பத்திரிகைகளில் வந்தது. :(( இவை அனைத்துக்கும் உடந்தை அந்தப் பெண்ணின் சொந்தத் தாயே . மருமகன், பேரன், பேத்தி என அனைவரையும் பலி கொடுத்திருக்கிறாள் அந்தத் தாய். :(((( அதன் பின்னர் என்ன ஆனது என்று தெரியவில்லை. வழக்கு நீதிமன்றத்தில் நடக்கலாம்.

      Delete
  14. Taken in 2013 what they did till modi came to power ??? there are lot of things which we dont know

    ReplyDelete
    Replies
    1. எல்கே, நியாயமான சந்தேகம் தான். :)

      Delete
  15. நல்ல கதையாகும் இருக்கே? உங்க புரிதல் தான் சரியா அப்படின்னா? (ஆயிரககணக்கான மைல் தள்ளியிருந்தா எத்தனை வசதி)

    சரணாகதிங்கற தத்துவமே ஆதிக்க அடிமைத்தன வெளிப்பாடு தானே? பெண்கள் ஆண்களின் அடிமைகள் என்கிற தத்துவம் தான் கிருஷ்ண சரணாகதி. நான் சொன்னது வேறே கருத்துல. இப்போ இந்த சரணாகதி வக்காலத்து நான் நினைத்ததை விட பலமடங்கு கேவலமா இல்லே படுது!

    ReplyDelete
    Replies
    1. சேச்சே, நான் என்னோடது தான் சரினு சொல்லலை. உங்க கருத்து உங்களுக்கு,என் கருத்து எனக்குச் சரி. அதைத் தான் சொன்னேன். :)))) சரணாகதித் தத்துவத்தை நீங்க சரியாப் புரிஞ்சுக்கலைனா வேறே யாருக்குப் புரியும். இதிலே கேவலம் ஏதும் இல்லை. நீங்க சொன்ன கருத்தைத் தொட வேண்டாம்னு தான் நான் தொடலை. இங்கே ஆண், பெண் என்னும் பேதம் ஏதும் கிடையாது. ஆகவே அதை விட்டுத் தள்ளி வந்து பார்க்கணும் இல்லையா? பெண்கள் ஆண்களின் அடிமைனு சொல்வது தான் கிருஷ்ண சரணாகதினு உங்கள் கருத்தாக இருக்கலாம். கிருஷ்ண ப்ரேமிகள் கருத்து அப்படி இருக்காது. :)))) அதோட இந்தச் சரணாகதியிலே ஆண்டான், அடிமைங்கறதெல்லாம் இல்லையே!

      Delete