எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, April 29, 2016

ரவாதோசைக்கான செய்முறை!

ரவா தோசை பொதுவான செய்முறை சுமார் ஆறு பேருக்கு

இரண்டு கிண்ணம் ரவை

ஒன்றரைக்கிண்ணம் அரிசி மாவு

கால் கிண்ணம் மைதா அல்லது கோதுமை மாவு( நான்கோதுமை மாவே பயன்படுத்துகிறேன்.)
இரண்டு டேபிள் ஸ்பூன் உளுத்தமாவு(உளுத்தம்பருப்பை மிஷினில் கொடுத்துத் திரித்து வைத்துக் கொள்ளவேண்டும். இம்மாதிரிக் கரைத்த தோசைகளுக்கு உளுத்தமாவு சேர்த்தால் தோசை விள்ளாமல் விரியாமல் நன்றாக வரும்.)

புளித்த மோர் ஒரு கிண்ணம்

உப்பு தேவையான அளவு

பச்சை மிளகாய்  2 பொடியாக நறுக்கவும்
இஞ்சி ஒரு துண்டு பொடியாக நறுக்கவும்

அரை டீஸ்பூன் மிளகு(ஒன்றிரண்டாக உடைத்துப் போட்டால் பிடிக்குமெனில் அப்படிப் போடலாம். அல்லது முழுசாகப் போடலாம்.)
ஜீரகம் இரண்டு டீஸ்பூன்(ஜீரகம் நிறையப் போட்டால் தோசை வாசனையாக இருக்கும்.)

கொத்துமல்லி, கருகப்பிலை ஒரு கைப்பிடி பொடியாக நறுக்கிச் சேர்க்கணும்.

மாவுகளை ஒன்றாகச் சேர்த்துக் கொண்டு உப்பு, புளித்த மோர் விட்டு நன்கு கலக்கவும். கரண்டியால் கலக்கினால் சரியாக வரவில்லை என்று நினைப்பவர்கள் மிக்சி பெரிய ஜாரில் போட்டு மோரை விட்டு ஒரு சுற்றுச் சுற்றவும். ரொம்பக் கெட்டியாகத் தான் வரும். ஆகவே அப்புறமாக ஒரு கிண்ணம் நீரை விட்டுச் சுற்றவும். கொஞ்சம் தோசை மாவு பதத்துக்கு வரும். வந்ததும் மிக்சியை விட்டு வெளியே எடுத்துப் பாத்திரத்தில் ஊற்றி ஜாரில் இன்னும் கொஞ்சம் நீரை விட்டுச் சுற்றி நன்கு அலம்பி எடுத்து கரைத்த மாவில் சேர்க்கவும். மாவு ரொம்பவே கெட்டியாக இருக்கக் கூடாது. ரொம்ப நீர்க்கவும் இருக்கக் கூடாது. தூக்கி ஊற்றினால் மெலிதாக தோசை வரணும். அது பழகப் பழகத் தான் வரும்.

இப்போது அடுப்பில் தோசைக்கல்லை வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றிக் கடுகு தாளிக்கவும். தாளிப்பிலேயே பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்துக் கொஞ்சம் வதக்கிக் கொண்டு கரைத்த மாவில் கொட்டவும். உடைத்த மிளகு, ஜீரகம் சேர்த்துக் கொண்டு கொத்துமல்லி, கருகப்பிலை போட்டுவிட்டு சுமார் 20 நிமிடம் வைக்கவும். ரவை ரொம்பவும் ஊறி விட்டால் தோசை செய்யும்போது சுருட்டிக் கொள்ளும். ஆகவே கவனமாக அரைமணிக்குள் தோசையை வார்க்க ஆரம்பிக்கவும். மாவு முதல் தோசைக்கு விடும்போதே மாவின் தன்மை புரிந்து விடும். அதற்கேற்பத் தேவையான நீர் சேர்த்துக் கொள்ளலாம். அல்லது அப்படியே வார்க்கலாம். தொட்டுக்க சாம்பார், சட்னி எதுவானாலும்  சரிதான்!

மேற்கண்ட அளவில் ஒருத்தருக்கு இரண்டு தோசை என்னும் கணக்கில் ஆறுபேருக்கு மேலும் சாப்பிடலாம். மற்றபடி ஒரு குடும்பத்துக்கு நான்கிலிருந்து ஐந்து பேருக்குள்ளாக இருக்கும் குடும்பத்திற்கு இந்த அளவில் மாவு கரைத்தால் சரியாக இருக்கும். இரண்டு கிண்ணம் ரவையும் ஊறிக்கொண்டு மாவு நிறையவே வரும்! ஆகவே கவனமாக எடுத்துக்கொள்ளவும். பொடி ரவை எனில் அதிகம் ஊற வைக்க வேண்டாம். பெரிய ரவை எனில் அரை மணி நேரம் ஊறணும். இதெல்லாம் அனுபவத்தில் தான் புரியும்.

சில சின்னச் சின்ன டிப்ஸ்கள்: இட்லி மாவு மீந்து போனால் அதில் ரவையும் கோதுமை அல்லது மைதா மாவு சேர்த்துக் கொண்டு தோசை வார்க்கலாம். இது நல்ல மெலிதாக நன்றாக வார்க்க வருவதோடு எடுக்கவும் வசதியாக இருக்கும்.

அல்லது அரைக்கிண்ணம் அரிசியைக் கால்கிண்ணம் உளுந்தோடு ஊற வைத்துக் கொண்டு நன்கு நைசாக அரைத்து உப்புப் போட்டுப் புளிக்க வைக்கவும். மாலை ரவாதோசை எனில் காலை அரைத்து வைக்கலாம். தேவையானால் புளித்த மோர் சேர்க்கலாம். இந்த மாவோடு ரவை+கோதுமை அல்லது மைதா சேர்த்து தோசை வார்க்கலாம்.

அல்லது ஒரு கிலோ பச்சரிசியோடு கால் கிலோ உளுந்து சேர்த்து மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும். இந்த மாவை ரவாதோசைக்கு அரிசி மாவு போடும்போது அதே அளவில் போட்டுக்கலாம். தனியாக உளுத்தமாவு சேர்க்க வேண்டாம். இந்த மாவின் பிற பயன்கள் பஜ்ஜி, பக்கோடா செய்கையில் இந்த மாவைப் பயன்படுத்திக்கலாம். அல்லது அப்படியே இந்த மாவில் தேன்குழல் செய்யலாம். கடலை மாவு வறுத்துச் சேர்த்து ஓட்டு பக்கோடா அல்லது முள்ளுத் தேன்குழல் செய்யலாம். ஆகவே இந்த மாவு கைவசம் இருப்பது நல்லது. மற்றக் கரைத்த தோசைகளுக்கும் பயன்படுத்திக்கலாமே!

இணையத்தில் ரவாதோசை படம் தேடினால் என்னுடையதே நல்லா இருக்குனு நினைக்கும்படி மோசமான படங்களா இருந்தன. அதனால் எடுக்கலை. படம் வேணும்னா நேத்திப் பதிவப் போய்ப் பாருங்க! :)  தம்பி நல்லா இல்லைனாரேனு இன்னிக்கும் அதையே போடவேண்டாம்னு போடலை! :)


ரவா தோசை வேணுமா?


ம்ம்ம்ம்ம்ம், முந்தாநாள் தற்செயலாக ரவா தோசை செய்தேன். அப்போ எடுத்த படங்கள் இவை. அடுப்பில் தோசைக்கல்லில் இருக்கு!



மாவு ஊற்றியது இங்கே பார்க்கலாம். கல் பெரியது. படம் எடுக்கும் எண்ணம் வழக்கம் போல் இல்லை. அப்புறமா நான் சாப்பிட தோசையை வார்க்கையில் திடீர்னு தோன்றி எடுத்தேன். செல்லில் தான்! இன்னொரு நாள் பண்ணினால் காமிராவில் எடுத்துப் பதியணும். நினைவு வரணும். காமிராவை சமையலறையிலேயே வைச்சிருக்கணுமோ? :)  தோசைக்குத் தொட்டுக்க நூல்கோல் சாம்பார், தக்காளிச் சட்னி! 

Thursday, April 28, 2016

தாத்தாவுக்கு அஞ்சலி!

உ.வே.சா. க்கான பட முடிவு


மல்லரை வென்ற மாங்குடியார்
இந்தச் சுட்டியின் மீதிப் பகுதி கீழே!
பெப்ரவரி மாதம் தாத்தாவின் பிறந்த நாளில் போட்ட பதிவின் மீதிப் பகுதியைக் கீழே வாசிக்கலாம். இன்று தாத்தாவின் நினைவு நாள். தாத்தாவுக்கு அஞ்சலி!

சம்மானங்களைப் பெற்றுக்கொண்ட மல்லரும் கைலாசையரும் அங்கே சில நாள் இருந்தனர்.. அப்பால் அரசரிடம் இருவரும் விடைபெற்றுக்கொண்டபோது மல்லர் அரசரைப் பார்த்து, “ஒரு பிரார்த்தனை “ என்றார்.

“என்ன?” என்று கேட்டார் அரசர்.

“இவ்வளவு பலம் பொருந்திய இந்தப் பிராமண சிரேஷ்டருடைய ஊரையும் உறவினர்களையும் பார்க்கவேண்டுமென்ற ஆசை எனக்கு உண்டாகின்றது. அதை நிறைவேற்றிக்கொள்ளும்படி உத்தரவாகவேண்டும்.” என்று மல்லர் வேண்டிக்கொண்டார்.

“அப்படியே செய்யலாமே” என்று அரசர் உத்தரவிட்டார்.

மல்லரும் அவருடன் வந்த இருபது பேர்களும் கைலாசையருடன் மாங்குடி சென்றனர். போன சமயம் காலைவேளை. கைலாசையர் அவர்கள் வரவை முன்னதாகவே தெரிவித்து அவர்கள் யாவருக்கும் பழையது ஸித்தம் செய்துவைக்கும்படி சொல்லியனுப்பியிருந்தார். அப்படியே வீட்டிலுள்ளவர்கள் முன்னதாகவே நிறைய அன்னம் வடித்து நீரிற் போட்டிருந்தார்கள்.

“உங்களுக்கு இவ்வளவு பலம் எப்படி வந்தது? நீங்கள் என்ன சாப்பிடுவீர்கள்?” என்று மல்லர் கேட்டார்.
“நாங்கள் காலையில் சாத்தீர்த்தத்துடன் பழையது சாப்பிடுவோம். இன்று உங்களுக்கும் அது கிடைக்கும்” என்றார் கைலாசையர்.

வந்தவர்களுக்கெல்லாம் இலைகள் போடப்பட்டன. உப்பும், மாங்காய், நாரத்தங்காய், இஞ்சி முதலிய ஊறுகாய்களும் பழங்கறிகளும் பரிமாறப்பட்டன. அப்பால் பழையதைப் பரிமாறினார்கள். பிறகு ஒருவர் ஊறின எள்ளைக் கொணர்ந்து ஒவ்வோர் இலையிலும் ஒரு கைப்பிடி எடுத்து வைத்துச் சென்றார்.

வந்தவர்கள் சாதத்தைப் பிசைந்து கொண்டார்கள். ஊறுகாயையும் சுவைத்துப் பார்த்தார்கள். அந்த எள்ளை என்ன செய்வது என்பது அவர்களுக்கு விளங்கவில்லை. ஒருவரையொருவர் பார்த்து விழித்தார்கள். தலைவராகிய மல்லர் கைலாசையரைப் பார்த்து, “இதை என்ன செய்வது?” என்று கேட்டார்.
“அதுதானே உடம்புக்குப் பலம்? அப்படியே எடுத்துச் சாதத்தில் பிழிந்துகொண்டால் எண்ணெய் வரும். இந்தப் பழையதும் எண்ணெயும் சேர்ந்தால் நரம்புக்கு அதிக வன்மை உண்டாகும்.”

விருந்தினர்கள் எள்ளையெடுத்துப் பிழிந்தார்கள். ஊறின ஜலந்தான் வந்ததேயொழிய எண்ணெய் வரவில்லை; அதற்குரிய பலம் அவர்களிடம் இல்லை. மல்லர் தலைவராலும் பிழியமுடியவில்லை. அதைப் பார்த்துக்கொண்டேயிருந்த கைலாசையர் அங்கே நின்ற ஒரு பையனைப் பார்த்து, “அடே, இந்த எள்ளைப் பிழிந்து வை.” என்று கட்டளயிட்டார். அவன் ஒவ்வோர் இலையிலும் இருந்த எள்ளை எடுத்து அப்படியப்படியே சாதத்தில் பிழிந்து சக்கையைப் போட்டுவிட்டான். அவன் சரசரவென்று வரிசையாக எல்லோருடைய இலையிலும் இருந்த எள்ளை இவ்வாறு பிழிந்து சென்றதைப் பார்த்தபோது அவர்களுக்கு, “ அடேயப்பா! இங்கே எல்லோரும் இரும்பால் உடம்பு படைத்தவர்கள் போலல்லவோ தோற்றுகிறது!” என்று தம்முள் நினைத்துக்கொண்டார்கள்.

அப்பால் யாவரும் உண்டனர்; இரண்டொரு நாள் அங்கே தங்கிய பிறகு கைலாசையரிடம் விடைபெற்றுக்கொண்டு ஊர்போய்ச் சேர்ந்தனர்.

கைலாசையருடைய குமாரராகிய அண்ணாவையரென்பவர் தம் தந்தையாரைப் போலவே அஞ்சாநெஞ்சமும் தேக பலமும் படைத்தவர். அவர் காலத்தில் ஐயம்பேட்டைக்கு அருகிலுள்ள சாலைகளில் தீவட்டிக் கொள்ளக்காரர்களுடைய தொந்தரவு அதிகமாக இருந்தது. ஜனங்கள் அவர்களுடைய தொல்லையினின்றும் விடுபடுவதற்கு வழி தெரியாமல் ஏங்கிக் கொண்டிருந்தனர். அக்காலத்தில் தஞ்சையிலிருந்த மன்னருக்குக் குடிகள் அந்த விஷயத்தைத் தெரிவித்து முறையிட்டார்கள். அம்மன்னர், “இந்தத் துஷ்டர்களை அடக்குவதற்குத் தக்க பலசாலிகள் நம்மிடம் இல்லை. ஆனாலும் யாரேனும் இவர்களை அடக்கிப் பிடித்தால் தக்க சம்மானம் செய்வோம்.” என்று தெரிவித்தார்.

பொது ஜனங்களுக்குக் கொள்ளைக்காரரால் நேர்ந்துவரும் பெருந்துன்பங்களை உணர்ந்து எவ்வாறேனும் அவர்களைப் பிடித்துவிடவேண்டுமென்று அண்ணாவையர் எண்ணினார். தம்முடைய சிஷ்யர்களும் மிக்க பலசாலிகளுமாகிய ஒரு கூட்டத்தினரோடு சென்று ஒரு நாள் அவர் கொள்ளைக்காரரை எதிர்த்தார். கடும்போர் மூண்டது. கடைசியில் அண்ணாவையர் அவர்கள் அனவரையும் வென்று கைகளைக் கட்டித் தஞ்சை அரசருக்கு முன்னே கொண்டு வந்து நிறுத்தினார். அவர்கள் அனைவருக்கும் தக்க தண்டனை அளிக்கப் பட்டது.

ஜனங்களுக்கும் ராஜாங்கத்துக்கும் பெரிய பெரிய இடையூறுகளை விளைத்து வந்த அக்கொள்ளைக் கூட்டத்தாரை வென்றதனால் அண்ணாவையருக்கு அரசர் பல சம்மானங்களும் மானியங்களும் வழங்கினார். அன்றியும் ராஜாங்கம்என்னும் பட்டத்தையும் அளித்தார். அதுமுதல் அவ்வந்தணரை ராஜாங்கம் அண்ணாவையரென்று யாவரும் வழங்கலாயினர்.

“தந்தையாருக்கு ஏற்ற குமாரர். இவர் தகப்பனார் மல்லரை வென்று சோழநாட்டின் பெருமையை நிலைநாட்டினார்; இவர் கொள்ளைக்காரரை அடக்கி இத்தேசத்தின் அபாயத்தைப் போக்கினார்.” என்று ஜனங்களெல்லாம் பாராட்டினர்.

ராஜாங்கம் அண்ணாவையருக்குப் பின் அப்பரம்பரையில் உதித்தவர்களும் “ராஜாங்கம்” என்ற பட்டத்தை வகித்து வருகின்றனர்.

(இவ்வரலாறுகள் தஞ்சாவூர் ஜில்லாவில் ஊர்தோறும் வழங்கும். இளமையில் இவற்றைப் பலர் வாயிலாகக் கேட்டதோடு இப்பரம்பரையினரும் சிவபக்திச் செல்வருமாகிய ராஜாங்கம் ஸ்ரீபிரணதார்த்திஹர ஐயர் என்பவர் கூறவும் கேட்டிருக்கிறேன்.)



Saturday, April 23, 2016

எங்கெங்கு காணினும் சோகமடா! :(

நம்ம எங்கள் ப்ளாக் நண்பர் ஶ்ரீராம் அவர்களின் தந்தை ஹேமலதா பாலசுப்ரமணியன் என்னும் பாஹே நேற்று இறந்துவிட்டாராம். ஶ்ரீராம் அவரின் உடல்நிலை குறித்து நிறையச் சொல்லி இருந்தாலும் இந்தத் திடீர் இழப்புக் கொஞ்சம் எதிர்பாராதது தான். ஶ்ரீராமுக்கும் அவர் குடும்பத்தினருக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கல்கள்.  முகநூலில் கௌதமன் செய்தியைப் பகிர்ந்திருக்கிறார். 
*********************************************************************************

இனி மற்றச் சில செய்திகள் குறித்துப் பார்த்தால்

இந்த வாரம் முழுவதும் சோகமான செய்திகளே கிடைத்திருக்கின்றன. அமெரிக்காவில் ஹூஸ்டன் நகரில் பெய்த கடுமையான மழையில் (சென்னை மழையை விடக் கடுமை) எங்கள் மகளின் சிநேகிதியின் கணவர் காரில் செல்கையில் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். ஆறு வயது, நான்கு வயது உள்ள இரு குழந்தைகளோடு அந்தப் பெண் தவியாய்த் தவிக்கிறது. இதைத் தவிரவும் இன்னமும் எட்டுப் பேர்கள் மழை வெள்ளத்தில் காரோடு அடித்துச் செல்லப்பட்டிருக்கின்றனர். நினைக்கவே வேதனையாக இருக்கிறது.  

இது தான் போச்சுனு குழுமத்தில் போனால் அங்கேயும் நண்பர் ஒருவர் தெரிந்தவர்களின் பையர் ஆற்றில் குளிக்கப் போனவர் காணாமல் போய் சுமார் ஒரு மாசமாகத் தேடியதைச் சொல்கிறார். ஆறுதலுக்குத் தொலைக்காட்சி பார்க்கலாமென்றால் தொலைக்காட்சியிலோ அரக்கன் ஒருத்தன் ஒரு பெண்ணை அடித்து இழுத்துச் செல்கிறான். எதுக்குனு நினைக்கறீங்க? பாலியல் பலாத்காரம் பண்ணுவதற்கு! நட்ட நடுத் தெருவில் அவன் அடித்து இழுத்துப் போவதை யாரும் தடுக்கக் கூட இல்லை! இப்படி எல்லாமா கொடூரம் நடக்கும்? இதற்குப் பெண்களா காரணம்? அன்றும், இன்றும், என்றும் மாறவே மாறாத ஆண் மனமன்றோ காரணம்!

இப்படி எல்லாமா பெண்ணைப் பார்த்தால் வெறி தோன்றும்? இது இந்தியாவில் மட்டும் அதிகமா இருக்கிறாப்போல் இருக்கு! அல்லது இங்கே இம்மாதிரிச் செய்திகளை மட்டும் சிறப்பு வெளியீடு செய்யறாங்களானு தெரியலை! அரசாங்கமும் என்ன என்னமோ செய்துட்டுத் தான் இருக்கு! ஆனாலும் பெண்ணுக்குப் பாதுகாப்பு என்பதே இல்லை! தமிழ்நாட்டில் தனியார் பள்ளி ஆசிரியை ஒருவர் தன் வீட்டு வேலைக்காரியினாலேயே அவரின் உதவியோடு குத்திக் கொல்லப்பட்டிருக்கிறார். பாவம் இரு சின்னஞ்சிறு குழந்தைகள்!  மொத்தத்தில் எங்கேயுமே நிலைமை சரியில்லை.  இன்னும் இருக்கு! ஆனால் எனக்கே அலுப்பா இருக்கிறதால் மற்றவை குறித்துப் பகிரவில்லை! :(

Friday, April 22, 2016

அங்கே அழகன்! இங்கே அரங்கன்!


சித்திரா பௌர்ணமியை ஒட்டி இங்கே ஶ்ரீரங்கத்தில் இன்று மாலை கஜேந்திர மோக்ஷம். சித்திரைத் திருவிழாவின் ஒரு பகுதியாக அம்மாமண்டபம் படித்துறையில் நடக்கும். கூட்டம் இருக்கும் என்பதால் மாலை போவதில்லை. ஆனால் பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு ஒவ்வொரு மண்டகப்படியாகக் கண்டருளி இங்கே எங்க குடியிருப்பு வளாகத்தின் அருகே உள்ள மண்டகப்படிக்கும் வருடா வருடம் வருகிறார். இந்த மண்டகப்படிகளையும் ஒழித்துக்கட்ட வேண்டும் என்று கோயில் அறங்காவலர்களும், இந்து அறநிலையத் துறையும் முயற்சி செய்வதாகக் கேள்விப் பட்டேன். காரணம் என்னவெனில் ஒவ்வொரு மண்டகப்படியிலும் பெருமாள் வந்து செல்வதற்கு நேரம் ஆகிறதாம். வேகமாக எல்லாவற்றையும் முடிச்சுட்டு என்ன செய்யப் போறாங்களோ தெரியலை! :(  கொஞ்சம் கொஞ்சமாகக் கோயில் நடைமுறைகளையே மாத்திடுவாங்க போல! :( நல்லவேளையாக நாம் அதை எல்லாம் இருந்து பார்க்காமல் போய்ச் சேர்ந்துடுவோம். 




இது பெருமாளின் பின்னழகு

வெயில் அதிகமாக இருப்பதால் நம்பெருமாள் திறந்த பல்லக்கிலேயே வந்திருக்கார். ஆனாலும் வெயிலில் இருந்து தப்பிக்கக்குடை, மற்றும் ஒரு பெரிய திரை போன்றவையும் நம்பெருமாளோடு எடுத்து வருகின்றனர். இங்கே மண்டகப்படி எல்லாம் முடிஞ்சு அம்மாமண்டபம் போய்ச் சாயந்திரம் வரை அங்கே தங்குவார். விளக்கு வைத்தானதும் நம்ம ஆண்டாளம்மா வருவாங்க. அவங்க தான் எப்போவுமே ஆக்டிங் கஜேந்திரன். அவங்களோட முன்னிலையில் கஜேந்திர மோக்ஷம் நடைபெற்றதும் நம்பெருமாள் யதாஸ்தானம் திரும்புவார். 



ரொம்பவே எளிமையான அலங்காரம் இன்னிக்கு. மாலைகள் கூட அதிகமா இல்லை. வெயில்னாலனு நினைக்கிறேன். 

மதுரையிலே இன்னிக்கு அழகர் பச்சைப்பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கிய வைபவம் விமரிசையாக நடைபெற்றிருக்கிறது. உட்கார்ந்து பார்க்க முடியலை! வேலை இருந்தது. கூகிளார் தயவில் அழகர் படம் ஒண்ணு போடறேன். வெயில் கடுமையாக இருந்தும் அழகருக்கு இன்று நல்ல கூட்டம் கூடி இருந்தது. 

படத்துக்கு நன்றி கூகிளார். 


Tuesday, April 19, 2016

எல்லாம் ரங்குவின் கிருபை தான்!

நேற்று ஒருநாள் பயணமாகச் சென்னை சென்றிருந்தோம். போகும்போது காலை பல்லவனில் சென்றோம். பயணம் சுகமாகவே இருந்தது.  இப்போ பான்ட்ரி கார் மீண்டும் இயங்க ஆரம்பித்திருக்கிறது. என்றாலும் நாங்க வீட்டில் இருந்தே சாப்பாடு எடுத்துச் சென்று விட்டோம்.

 என்ன ஒரு கஷ்டம்னால் எனக்கு 54 ஜன்னல் பக்கத்து இருக்கையும், ரங்க்ஸுக்கு 55 ஜன்னல் பக்கத்து இருக்கை என பின்னாலேயும் தனித்தனியாக் கொடுத்துட்டாங்க. டிக்கெட்டும் தனித்தனியா! இவங்க எப்படி நம்மளை இப்படிப் பிரிக்கலாம்னு பல்லைக் கடித்துக் கொண்டு வண்டியில் ஏறினால் 54 ஆம் நம்பர் இருக்கை காலியாக இருக்க 55 ஆம் இருக்கையில் ஒரு வட இந்தியப் பெண்மணி. பக்கத்தில் 56 இல் அவர் கணவர். இருவரும் அங்கிருந்து எழுந்திருக்க மறுக்கின்றனர். அவருக்கு 57 ஆம் எண் இருக்கையாம். அது இந்தப் பக்கம் மூன்று நபர் உட்காரும் இருக்கைகளில் ஒன்று. அவங்க அமர்ந்திருந்தது இரு நபர் மட்டுமே அமரும் இருக்கை. ஆகவே அந்த சுகத்தை விட்டுக் கொடுக்க அவங்களுக்கு மனமில்லை!


 பேசாமல் சுரேஷ் பிரபுவுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டியது தான் என நினைக்கையில் 58 ஆம் இருக்கைக்கு உரிய இளம்பெண் ஒருவர் வந்தார். அவரிடம் என்னோட ஜன்னல் இருக்கையை முழு மனதோடு தியாகம் செய்துட்டு அந்த 58 ஆம் இருக்கை நட்ட நடுவே ரங்க்ஸை உட்காரச் சொல்லிட்டு 57 ஆம் இருக்கை (அந்த வட இந்தியரோடது) அதில் நானும் உட்கார்ந்து கொண்டோம். 59 ஆம் எண் இருக்கை ஜன்னல் ஓரம் மும்பை ஐஐடி பேராசிரியர் ஒருத்தர் வந்தார். ஐஐடி பற்றிய பல கருத்துகளையும் பரிமாறிக் கொண்டார். சாதாரணமாக விழுப்புரம் தாண்டியதும் வண்டி வேகம் குறையும். நேத்திக்கு அதிசயத்திலும் அதிசயமாகப் பதினொன்றே முக்காலுக்கே மாம்பலம் போய் விட்டது.

 அதோடு பல்லவனில் சுத்தமும் கடைப்பிடிக்கப்பட்டது. முன்னே எல்லாம் சி1 சி2 ஆகிய இரு பெட்டிகள் மட்டுமே இருந்தன. இப்போ சி3 இன்னொரு பெட்டி அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆகவே மக்களுக்கு என ஒரு சில வசதிகள் ரயில்வேயில் செய்யப்பட்டு வருகின்றன. அதோடு போலீஸ்காரர்களும் ரயிலில் கூடப் பயணிப்பதோடு பெட்டிகளில் அங்குமிங்கும் உலா வந்து சந்தேகத்துக்கு இடமான நபர்கள், வஸ்துகள் எனப் பார்க்கின்றனர்.  வண்டிகள் எல்லாம் நேரக்கட்டுப்பாடுக் கடைப்பிடிக்க வலியுறுத்தப்படுகின்றன. அதோடு விழுப்புரம்--திருச்சி இரட்டை இணை ரயில்பாதை வேலைகள் வேறே இந்த ஒன்றரை ஆண்டுகளில் மிகத் துரிதமாக முடிக்கப்பட்டு வருவதும் ஒரு காரணம். மாம்பலம் போய் இறங்கியதும் ஒரு ஆட்டோ பிடித்துக் கொண்டு தேனாம்பேட்டையில் ரங்க்ஸில் அலுவலகம் சென்றோம்.


அங்கிருந்து ரங்க்ஸின் அலுவலகம் போய் வேலைகளை முடித்துக் கொண்டு அம்பத்தூர் வீட்டைப் பார்த்து ஒருவருஷம் ஆகிவிட்டதால் நேரே அம்பத்தூர் சென்றோம். கால் டாக்சி பார்த்தால் கிடைக்கலை. ஆட்டோவில் தான் சென்றோம். ஆட்டோக்காரர் மீட்டர் போட்டார். மீட்டருக்கு மேல் 10 ரூ. கொடுத்தால் போதும்னு சொன்னார். அப்படியே செய்தார். :) வெயில் தகித்தது என்பதோடு போக்குவரத்துப் பாதிப்பில் ஆங்காங்கே நின்று நின்று போக வேண்டி இருந்தது இந்த வெயிலில் எரிச்சலைக் கிளப்பியது. வெயில் யாரையும் பாதித்ததாகத் தெரியவில்லை. கூட்டம் கூட்டமாக மக்கள் போய்க் கொண்டிருந்தனர்.

அண்ணா வீட்டிற்குப் போய் இறங்கிக் கொண்டோம். சுமார் ஐந்து மணி அளவில் எங்க வீட்டைப் பார்க்கப் போனோம். நாங்க இருக்கும்போதே வீட்டு வாசலில் வரிசைகட்டி வண்டிகள் நிற்கும். இப்போ யாருமே இல்லையா, கேட்கவே வேண்டாம். வாயில் கதவு அருகே போய்த் திறக்கவே முடியாமல் வண்டிகளைக் குறுக்கும், நெடுக்குமாக நிறுத்தி இருந்தாங்க. போதாததுக்கு வீட்டினுள்ளே குப்பைன்னா குப்பை! அவ்வளவு குப்பை! உள்ளே நுழையவே முடியலை. படம் எடுக்கக் காமிரா கொண்டு போயிருந்தேன். படம் எடுக்க மனசு வரலை! ரொம்பவே வேதனையா இருந்தது. என்ன செய்ய முடியும்! பரிதாபமாக வேப்பமரம் நின்றிருந்தது. அதையானும் ஃபோட்டோ எடுக்கலாம்னு நினைச்சுட்டுப் பின்னாடி பார்த்துக்கலாம்னு விட்டுட்டேன்.  ரங்க்ஸ் மட்டும் உள்ளே போனார். பின்னர் நான் கிளம்பி வந்துட்டேன். அதுக்கப்புறமா வீட்டுக்கு வந்துட்டு சாப்பிட்டுவிட்டுக் கிளம்பிட்டோம். மலைக்கோட்டை விரைவு வண்டியில் டிக்கெட் முன்பதிவு ஆகியிருந்தது.  எப்போதும் பாண்டியன் கிளம்பின உடனேயே வண்டி நடைமேடைக்கு வந்துடும். ஆனால் நேற்று வண்டி நடைமேடைக்கு வரவேப் பத்து மணி ஆயிடுச்சு! :( நல்லவேளையா ஏசி பெட்டிக்கு எதிரேயே உட்கார்ந்திருந்தோம்.  வண்டியைத் திறக்கவும் பத்து நிமிஷம் ஆச்சு!  வண்டிக்குள் நுழைந்தால் ஒரே சூடு! தாங்கலை! ஏசி போடலையோனு நினைச்சால் போட்டிருக்காங்களாம். இரவு முழுவதும் சூடு தாங்காமல் வியர்த்து வியர்த்து ஊற்றிக் கொண்டு தூக்கமே வரலை! மேலே இருக்கும் மின் விசிறியைப் போட்டால் மேல் படுக்கை இருக்கைக்காரங்க அணைக்கிறாங்க! ஒரு வழியாப் பனிரண்டுக்கு அப்புறமாத் தூங்கினேன் போல! யாரிடமானும் புகார் கொடுக்கலாம்னு பார்த்தா யாருமே அங்கே கிடைக்கலை! :( ஏற்கெனவே முன்னர் இரு முறை இதே மலைக்கோட்டை விரைவு வண்டிப் பயணத்தில் ஏசி சரியாக வேலை செய்யாமல் அவதிப் பட்டிருக்கோம். இப்போ கடுமையான வெயிலிலும் இப்படி வறுத்தெடுத்து விட்டது!

ஏனெனில் கடைசியா மணி என்னனு பார்த்தேன். 00-37 என்று காட்டியது என்னுடைய அலைபேசி. சரி, இந்த வண்டி காலை ஐந்து மணிக்குத் தானே ஶ்ரீரங்கம் போகும், நேரம் இருக்கேனு மறுபடி படுத்தேன்.  படுத்துக் கொஞ்ச நேரம் தான் ஆகி இருக்கும்போலத் தோன்றியது. நம்ம ரங்க்ஸ் திடீர்னு எழுந்தவர் என்னை எழுப்பி ஶ்ரீரங்கம் வந்தாச்சுனு சொன்னார். என்ன? என்று அதிசயமாக் கேட்டுட்டே மணியே ஆகலைனு சொல்லிட்டே அலைபேசியை எடுத்துப் பார்த்தேன். மணி 4-17 காலை ஆகி இருந்தது. அலறிப் புடைத்துக் கொண்டு இருவரும் கிளம்பினோம். மேலே இருந்தவங்க, பக்கத்துப் பெட்டிகளில் தூங்கிட்டு இருந்தவங்க எல்லோரும் எங்க குரலைக் கேட்டுட்டு எழுந்தாங்க. நான் மெதுவாக ஒரு பையைத்தூக்கிக் கொண்டு வண்டியின் வாயிலுக்கு வந்தேன். ஏதோ ஒரு ரயில் நிலையத்தில் (?) ஒரு நடைமேடையில் வண்டி நின்று கொண்டிருந்ததைப் பார்த்துட்டுத் தூக்கம் கலையாமலேயே அங்கே நடைமேடையில் எங்கோசென்று கொண்டிருந்த ஒரு நபரிடம் என்ன ஸ்டேஷன் என்று கேட்டேன். ஶ்ரீரங்கம்னு சொல்லவும் தூக்கிவாரிப் போட்டது. ஆஹா, வர வர மாமியார் கதையாயிடுச்சானு நினைச்சுட்டுச் சரினு கையிலே இருந்த பையை அந்த மனிதரிடமே கொடுத்துக் கீழே வைக்கச் சொல்லிட்டு நான் மெதுவாக இறங்கினேன். எப்படி அந்த அரைத்தூக்கத்தில் இறங்கினேன் என்பது ரங்கநாதருக்கே வெளிச்சம்! :)

அதற்குள்ளாக மிச்சச் சாமான்களைத் தூக்கிக் கொண்டு ரங்க்ஸும் இறங்கினார். அவரிடமிருந்தும் சாமான்களை வாங்கி அந்த மனிதர் நடைமேடையில் கீழே வைத்தார். பின்னர் அவரும்  இறங்கியதும் பின்னால் வந்தவர்கள் அனைவரும் இறங்க ஆரம்பிக்க அத்தனை நேரமாய் நின்றிருந்த வண்டி கிளம்பி விட்டது.  எல்லோருமே வண்டி ஒரு தூங்குமூஞ்சினு நினைச்சுட்டுத் தூங்கி இருக்காங்க! அதில் ஒரு மாமி வண்டி கொஞ்சம் வேகமெடுக்கையில் இறங்க முற்பட மயிரிழையில் தப்பித்தார். எங்களுக்கு உதவி செய்த நபரே அங்கேயும் போய் இறங்கினவர்களுக்கு உதவி செய்து இறக்கி விட்டார்.  இதிலே ஒருத்தருக்குக் கை சரியில்லாமல் கைக்கட்டு வேறே! இன்னொருத்தர் வாக்கர் வைச்சுட்டு நடந்தார்! பின்னர் வண்டி கிளம்பி வேகமெடுத்துச் சென்று கொண்டிருக்கும்போது இன்னும் சிலர் இறங்கினர்.  உள்ளூர்க்காரர்கள் சிலர் அவர்களுக்குக் கை கொடுத்து இறக்கி விட்டு உதவி செய்தனர். நடைமேடையில் எங்கேயோ நாங்க பயணம் செய்த பெட்டி இருக்க முழு தூரமும் நடந்து வெளியே வந்தோம். ஆட்டோக்கள் எல்லாம் முன்னாடியே இறங்கிட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு போய்விட்டன போலும்! ஆட்டோவே இல்லை.

என்னடா இது சோதனைனு நினைச்சால் ஒரு ஆட்டோக்காரர் படபடவென வந்தார். பத்து ரூபாய் அதிகம் கேட்டார். ஆனால் அந்த அதிகாலையிலேயே ஆட்டோவில் அவருடன் பயணித்த சின்னக் குழந்தையைப் பார்த்ததும் ஒண்ணும் பேசாமல் ஏறிக்கொண்டோம். வீடும் வந்து சேர்ந்தோம். பையருக்கும், பெண்ணுக்கும் வந்து சேர்ந்த செய்தியைத் தெரிவித்துவிட்டுக் காஃபி போட்டுப் பால் வந்தவுடன் காஃபி சாப்பிட்டு விட்டு உட்கார்ந்தால் வரிசையாய்த் தொலைபேசி அழைப்பு! இப்படியாகத் தானே எங்கள் ஒரு நாள் பயணம் இனிதாக முடிவடைந்தது.  நல்லபடியாக வண்டியில் இருந்து இறங்க முடிஞ்சதே! எல்லாம் ரங்குவின் கிருபை தான்!

Friday, April 15, 2016

ஶ்ரீராமருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! :)

ரெண்டு நாளாவே ராமர் கேட்டுட்டு இருந்தார். முந்தாநாளைக்கு விஷு புண்யகாலத்திலும் வெறும் பாயசம் மட்டும் தான்! நேத்திக்குத் தமிழ் வருஷப் பிறப்பிலும் ஒண்ணுமே பண்ணித்தரலைனு சோகமா ஆயிட்டார்! நீங்கல்லாம் கிருஷ்ண ஜயந்தின்னா எல்லாம் நொறுக், முறுக்னு தின்னப் பண்ணித் தள்ளறீங்க! இன்னைக்கு என்னோட பிறந்த நாளைக்கு எல்லாம் மிருதுவாத்தானே பண்ணணும்! அது கூடப் பண்ணலைன்னா எப்படினு கேள்வி மேல் கேள்வி! கண்ணனை இப்போத்தானே எழுதறேன், அதுக்கு முன்னாடியே உங்களைப் பத்தி எழுதியாச்சே! ரெண்டாவதா அவன் இன்னமும் குழந்தை தான்! உங்க மேலே முதல்லே மரியாதை தானே வருதுனு சொன்னேன்! ஏதோ சாக்குனு முகத்தைத் திருப்பினார் ஶ்ரீராமர்!  சரி இன்னிக்குத் தான் ராமருக்குப் பிறந்த நாள் வேறேயே! நேத்திக்கே ஜன்ம நக்ஷத்திரம் வந்தாச்சு! ஆனால் நாமெல்லாம் என்னமோ நவமி திதியிலே தானே கொண்டாடறோம்! ஆகவே இன்னிக்கு ஶ்ரீராமநவமிக்கு ஶ்ரீராமர் மனம் குளிரும்படி எல்லாமும் செய்துடலாம்னு முடிவு.

என்ன பெரிசா? சாதம், பருப்பு, பாயசம், சுண்டல், வடை, பானகம், நீர்மோர்! அம்புடுதேன்! அதுக்கே இங்கே நாக்குத் தள்ளுது! :) போளியெல்லாம் பண்ணலை!  இந்த வெயில் வேறே இந்த வருஷம் பாடாய்ப் படுத்தி எடுக்குது. குளிச்சுட்டு வந்த உடனே மறுபடி குளிச்சாப்போல் வியர்வை வெள்ளம். அடுப்பு எரிஞ்சால் என்ன, எரியாட்டி என்னனு மெத்தனமா சமையலறையில் முழு வேகத்தில் மின் விசிறியைச் சுத்த விட்டுட வேண்டி இருக்கு!  பத்து நிமிஷத்துக்கு ஒரு முறை வியர்வைக்குளியலைக் கழுவி நல்ல நீர் விட்டு முகம், கை,கால்களைக் கழுவிட்டு வர வேண்டி இருக்கு! இத்தனைக்கு நடுவே சமையல், சாப்பாடு. மூணு நாளாக் காலை நோ டிஃபன்! நம்ம ரங்க்ஸுக்கு அதுவே பாதி பலவீனமாயிடுச்சு. பசி தாங்கலை! காஃபி இரண்டு தரம், ஹார்லிக்ஸ் (மருத்துவர் தடை போட்டிருக்கார்) ஒருதரம்னு குடிச்சாலும் தாங்கறதில்லை. ஆகவே பத்து மணிக்குள்ளாகச் சமைக்கணும்.

வீடு சுத்தம் செய்துட்டுக் குளிச்சுட்டு வரவே எட்டரை மணி ஆயிடுது! :) அதுக்கப்புறமா இவை எல்லாம் செய்துட்டுச் சரியாப் பத்து மணிக்கு எல்லாம் முடிச்சுட்டேன். வெள்ளிக்கிழமையா, ராகுகால விளக்கு ஏத்துவேன். அதுக்காகப் பத்து நிமிஷம் காத்திருந்து நிவேதனம் பண்ணினேன். கீழே படங்கள்! ராமர் படத்தின் மேலே வெளிச்சம் பிரதிபலிக்காமல் எடுக்கணும்னு பார்த்தால் முடியலை. மின் விளக்கை அணைத்தால் படம் எடுக்க வெளிச்சம் போதலை. விளக்கைப் போட்டால் அது பிரதிபலிப்பு அதிகமா ஆகி ஶ்ரீராமரின் முகமே தெரியறதில்லை!


மல்லிகைப்பூ நேற்று உதிரியாக வாங்கித் தொடுத்தேன். கால் கிலோ நேத்திக்கு 40 ரூ விலை. :(  கால் கிலோவுக்குப் பூக்காரங்களைப் போல் தொடுத்தால் ஆறு, ஏழு முழம் வரும். நான் தொடுத்தது 5 முழம், கொஞ்சம் கூடவும் வந்தது. 




சாதம், பருப்பு, பாயசம், சுண்டல், பானகம், நீர்மோர், வடை, வெற்றிலை பாக்கு, பழம் நிவேதனம்!

கீழே கற்பூரம் காட்டியது தட்டில் எரிந்து கொண்டு இருக்கிறது.  பலகையில் ராகுகால விளக்கு ஏற்றியது எரிகிறது. :)

எல்லோரும் சீக்கிரமா வந்து சுடச் சுட வடை, பாயசம், சுண்டல் எடுத்துண்டு, பானகமும், நீர்மோரும் குடிங்கப்பா! 

Thursday, April 14, 2016

எல்லோருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்!

 ஶ்ரீராமர் க்கான பட முடிவு
ஶ்ரீராமர் க்கான பட முடிவு


என்னத்தைச் சொல்றது?  என்னென்னமோ பண்ணிச் சாப்பிட்டுட்டு இப்போப் பாயசம் வைக்கவே யோசனை. :))) என்னோட பிறந்த வீட்டிலே நிபந்தனைகள் எதுவும் இல்லை.  எந்தச் சமையலும் ஓகே.  சில சமயங்களில் அவியல், சாம்பார் இருக்கும்.  பெரும்பாலும் பிட்லை, மோர்க்குழம்பு இருக்கும்.  பிட்லையை மதுரைப் பக்கம் கொஞ்சம் கெட்டியாகக் கூட்டும் இல்லாமல் குழம்புனும் சொல்ல முடியாமல் நிறையக் காய்களைத் தானாகப் போட்டுப் பண்ணுவாங்க.  முக்கியமாப்பாகற்காய் அல்லது கத்திரிக்காய்.  எப்போவானும் சேனைக்கிழங்கும், காராமணிக்காயும் போட்டுச் செய்வதுண்டு.  மற்றவற்றில் பிட்லை செய்வதில்லை.  பிட்லை செய்தால்   மோர்க்குழம்பு முக்கியமா வேணும்.  அப்புறமா வடை முப்பருப்பு வடை தான் தென் மாவட்டங்களிலேயே பிரபலம்.  வேப்பம்பூவைப் புதிதாகப் பறித்து வந்து நெய்யில் பொரித்து, (அப்ப்பா என்ன மணம் வீசும்) மாங்காய்ப் பச்சடி செய்து அதில் போடுவாங்க.  அதோடு கடலைப்பருப்பு, தேங்காய் சேர்த்தோ வெறும் தேங்காயிலோ அல்லது பால் போளியோ எதுவோ ஒண்ணு கட்டாயம் இருக்கணும்.  பாயசம்னா அது தேங்காய்ப் பால் விட்டுச் செய்யும் பாயசம் தான் அநேகமா.  செய்முறை தனியாத் தரேன்.

இதிலே யுகாதி வேறே அப்பா வீட்டிலே கொண்டாடும் வழக்கம் உண்டா!  அன்னிக்கும் போளி இருக்கும்.  யுகாதிக்குப் பால் போளின்னா சித்திரை வருஷப் பிறப்புக்குக் கடலைப்பருப்பு, தேங்காய் அல்லது வெறும் தேங்காய் மட்டுமே போட்ட போளி இருக்கும். முப்பருப்பு வடைக்கு து.பருப்பு, க.பருப்பு, உபருப்பு மூணையும் ஊற வைச்சு அரைப்பாங்க.


து.பருப்பு ஒரு கிண்ணம், க.பருப்பு அரைக்கிண்ணம், உ.பருப்பு இரண்டு டேபிள் ஸ்பூன் .  மூணையும் நல்லாக் களைஞ்சு ஊற வைக்கணும்.  ஊறினால் எண்ணெய் குடிக்கும்னு பயமே வேண்டாம்.  எண்ணெயெல்லாம் குடிக்காது.  நான் உறுதிமொழி கொடுக்கிறேன்.  அப்புறமா ஊற வைச்ச பருப்பை நீரை வடிகட்டிவிட்டு மி.வத்தல், நான்கு, ப.மிளகாய் இரண்டு, (காரம் கொஞ்சம் குறைச்சே போட்டுக்குங்க)உப்பு, பெருங்காயம் சேர்த்து அரைக்கணும். நைசா அரைக்கக் கூடாது.  பருப்பு ஒன்றிரண்டாக இருத்தல் நல்லது.  அப்புறமா அதை எடுத்து ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போட்டு. சின்னதாய் ஒரு பச்சை மிளகாயை நீள வாட்டில் நறுக்கி உள்ளே உள்ள விதையை எல்லாம் எடுத்துட்டுப் பொடியாக நறுக்கி வடைமாவில் சேர்க்கவும்.  இஞ்சி ஒரு அங்குலத் துண்டு தோல் சீவிப் பொடியாக நறுக்கிச் சேர்க்கவும்.  கருகப்பிலை, கொத்துமல்லி சேர்க்கவும். கொஞ்சம் போல் பாசிப்பருப்பு சுமார் ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்துக் களைந்து வடைமாவில் சேர்க்கலாம்.  வடை மொறு மொறுவென வரும்.  எண்ணெயைக் காய வைத்து வடைகளாகத் தட்டிச் சாப்பிடுங்க.  அப்புறமா போளி இதோ இங்கே சொல்லி இருக்கேன் பாருங்க.


http://tinyurl.com/c6src6k  இந்தச் சுட்டியிலே போய்ப்பாருங்க.  நம்மபேரிலே வந்திருக்கும். வேணும்னா அப்புறமாத் தனியாத் தரேன்.





இதுவே மாமியார் வீட்டில் சமையலில் மாறுதல் உண்டு.  அங்கே பாயசம் அநேகமாய்ப் பாசிப்பருப்புப் பாயசம் தான்.  தயிர்ப்பச்சடி, பாசிப்பருப்புக் கோசுமல்லி,(இது உப்புப் போட்டது), கடலைப்பருப்புக் கோசுமல்லி(இது சர்க்கரை சேர்த்தது) இரண்டும் கட்டாயம் இடம் பிடிக்கும்.  எங்க மதுரைப் பக்கம்  நாள், கிழமைக்குக் கோசுமல்லி செய்யும் வழக்கம் இல்லை.  மாமியார் வீட்டில் மாங்காய்ப் பச்சடிக்குப் பதிலாகப் புளியைக் கரைத்து உப்புச் சேர்த்துக் காரப்பொடி, வெல்லம் சேர்த்துக் கொதிக்க விட்டு அதிலே தான் வேப்பம்பூவை வறுத்துச் சேர்ப்பாங்க.  காய்கள் எது வேண்டுமானாலும் இருக்கும்.  முட்டைக்கோஸ், கொத்தவரை, அவரைனு கிடைக்கும் காயைச் செய்வாங்க.  இங்கே அநேகமாய் சாம்பார் தான்.  அரைத்துவிட்டாலே பிட்லைனு சொல்லுவாங்க.  வெண்டைக்காய் அரைத்து விட்ட சாம்பாரைப் பிட்லைனு சொல்வாங்க. மற்றபடி போளி, ஆமவடை உண்டு.  ஆமவடைன்னா இங்கே நிஜம்மாவே ஆமை ஓடு மாதிரி வடை கெட்டியாக இருக்கும்.  தனிக் கடலைப்பருப்பைக் கொஞ்ச நேரமே ஊற வைச்சு உப்புக் காரம் சேர்த்து அரைச்சுக் கெட்டியாக எடுத்து வடை தட்டுவாங்க.  வடையைக் கையால் கிள்ளிச் சாப்பிட முடியாது.  அதைப் பின்னர் வெந்நீரிலே ஊற வைச்சுச் சாப்பிடக் கொடுப்பாங்க அவங்க எல்லாருக்கும் அதனால் தான் பல்லெல்லாம் கெட்டியாக இருக்கும். :))) நம்மை மாதிரி இல்லை.

சரி இப்போத் தேங்காய்ப் பாயசம் செய்யும் விதம் பார்க்கலாமா?

பச்சரிசி அரிசி ஒரு சின்னக் கிண்ணம் எடுத்துக் களைந்து நெய்யில் பொரித்துக் கொண்டு குருணையாக உடைத்துக் கொள்ளவும். தேங்காய் நடுத்தர அளவில் ஒன்று. உடைத்துத் துருவிக் கொள்ளவும்.  கால் கிலோவுக்குக் குறையாமல் வெல்லம்(பாகு) வேண்டும்.  கூடவே இருந்தாலும் நல்லாவே இருக்கும்.  ஏலக்காய்த் தூள், முந்திரிப்பருப்பு, வறுக்க நெய் அரைக்கிண்ணம்.

குருணையாக உடைத்த அரிசியைத் தேவையான நீர் மட்டும் விட்டு  நன்கு கரைய விடவும்.  குழைய வேகும்போது துருவிய தேங்காயில் இரண்டு டேபிள் ஸ்பூன் எடுத்து வைத்துவிட்டு மிச்சத் துருவலை மிக்சியில் போட்டு நன்கு அரைக்கவும்.  பால் எடுக்கவும் தனியாக வைக்கவும்.  இரண்டாம் முறையும் இதே போல் அரைத்துப் பால் எடுக்கவும்.  அந்தப் பாலை வேகும் அரிசியில் சேர்க்கவும்.  மூன்றாம் பால் எடுக்க வருதானு பார்க்கவும். வந்தால் எடுத்து அதையும் வேகும் அரிசியில் சேர்க்கவும்.  நன்கு சேர்ந்து வரும்போது வெல்லத்தூளைச் சேர்க்கவும்.  வெல்ல வாசனை போகக் கொதிக்க விடவும்.  நன்கு கொதித்து வந்ததும், தனியாக வைத்திருக்கும் முதல் பாலைச் சேர்க்கவும்.  நெய்யில் முந்திரிப்பருப்பு வறுத்துப் போட்டுத் தனியாக வைத்திருக்கும் பச்சைத் தேங்காய்த் துருவலையும் ஒருமுறை நெய்யில் பிரட்டிவிட்டுப் பாயசத்தில் சேர்க்கவும்.  பால் எடுத்த சக்கைத் தேங்காய் பயன்படாது.  உங்களுக்குத் தேவையானால் அதையும் இந்தப் பாயசத்திலேயே சேர்க்கலாம்.  ஏலத்தூள் சேர்க்கவும்.  பாயசம் சூடாகச் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.  அதோடு பாயசம் நீர்க்க இருக்கக் கூடாது.  கையால் எடுத்துச் சாப்பிடும் பதத்தில் கெட்டியாக, அதே சமயம் சர்க்கரைப் பொங்கல் போல் ரொம்பக் கெட்டியாகவும் இருக்கக் கூடாது.

இந்தப் பாயசம் தான் தமிழ் வருஷப் பிறப்புக்கு ஸ்பெஷல் பாயசம்னு செய்துட்டு இருந்தேன்.  இப்போ ஒரு ஸ்பூன் பாயசம் வைச்சாலே பெரிய விஷயம். :)))))

இதைத் தவிர வீடு சுத்தம் செய்து, மாவிலைத் தோரணங்கள் கட்டி, கதவுகள், நிலைக்கதவு, வீட்டின் பயன்பாட்டுக்கான முக்கியப் பொருட்கள் எல்லாத்துக்கும் சந்தனம், குங்குமம் வைச்சு, கூரையில் கூரைப்பூ வைச்சு, பானகம், நீர் மோர், சுண்டல், வடைப்பருப்பு வைத்து பஞ்சாங்கத்தோடு ஸ்வாமிக்கு சமைத்தவற்றையும் வைத்து நிவேதனம் செய்வார்கள்.  பெரிய பெரிய கோலங்களாகப் போடப்பட்டிருக்கும்.  புதுத்துணி உடுத்தலும் உண்டு.  கேரளாவில் விஷுக்கனிக்குப் பட்டாசு வெடித்தலும் உண்டு.


போளிகளும் வடைகளும் நம்ம கைவண்ணம் தான்.  நம்ம வீட்டிலே நான் செய்தவையே.  அதனால் எல்லாரும் வந்து எடுத்துக்கோங்க. :)))))  ஆனால் ஒரு விஷயம். எல்லாம் 2013 ஆம் வருடம் பண்ணினவை. பதிவே அப்போப் போட்ட பதிவைத் தான் மீள் பதிவாப் போட்டிருக்கேன். இந்த வருஷம் வெறும் பாயசமும், வடையும் தான்! படம் எடுக்கலை! போளி இல்லையா, படம் எடுக்கணும்னு தோணலை. பாயசம், மாங்காய்ப் பச்சடி, வாழைக்காய்ப் பொடிமாஸ்,  சாம்பார், ரசம், ஆமவடை. இவை தான் இன்றைய சமையலில் இடம்பெற்றவை. அதுவும் வடை  மொத்தமே எட்டு அல்லது பத்துக்குள் தான் வரும்படி மாவு அரைச்சிருக்கேன். நாளைக்கு வேறே ஶ்ரீராமருக்கு உளுந்து வடை பண்ணணுமே! மொத்தமா ஆறு அல்லது எட்டு வடை தான் இன்னிக்கு! காக்காய்க்குக் கூடப் போடலை, மறந்திருக்கேன். பாயசம் மட்டும் கொடுத்தேன் காக்காய்க்கு!

நாளைக்கு நிவேதனம் ஶ்ரீராமர் படத்தோடப் போட முயல்கிறேன். இன்று போட்டிருக்கும் ராமர் படம், கீழுள்ள விக்ரஹங்கள் எல்லாம் ஏற்கெனவே போட்டதில் இருந்து எடுத்தது. ஹிஹிஹிஹி!

அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்!

Sunday, April 10, 2016

பஹுசரா மாதா! புதிய தகவல்கள்!

Bahuchara.jpg

மேற்கண்ட படத்தைத் தம்பி அஷ்வின் ஜி எங்கிருந்தோ எடுத்து என்னை இதில் கோர்த்துவிட்டு இந்தப் படத்திலிருக்கும் அம்பிகை யார்னு கேட்டிருந்தார். அவர் கொடுத்த படத்தில் வாள் இடக்கையில் இருந்தது. இந்தப் படத்தில் வலக்கையிலும் இருக்கு, இடக்கையிலும் வாள் போன்ற ஓர் ஆயுதம். மொத்தத்தில் இது காளி மாதாவின் ஓர் உருவம் என்ற வரையில் புரிந்து கொண்டேன். ஆனாலும் அப்படி இருக்குமானு ஓர் தயக்கம். ஆகவே  அஷ்வின் ஜியிடம் எனக்குத் தெரியாது என்றே சொல்லி விட்டேன். உண்மையில் இப்படிச் சேவல் வாகனத்தைக் கொண்ட அம்மனைப் பார்த்ததில்லை தான். பின்னர் ஷிவஷிவா என்னும் நண்பர் இது பஹுசரா தேவி என்று சொல்லி இருந்தார். இது குறித்த மேலதிகத் தகவல்களைத் தேடினால் தமிழில் கிடைக்கவில்லை. ஆங்கிலத்தில் இருப்பதாக அஷ்வின் ஜியே விக்கிபீடியாவின் சுட்டியைக் கொடுத்திருந்தார்.

அதிலிருந்து தெரிய வந்தவை! இந்த அம்மன் சக்தியின் அவதாரம் எனப்பட்டாலும் உண்மையில் இவள் சரண் என்னும் குலத்தில் பிறந்தவள் என்பது தெரியவந்தது. இந்தக்குலத்தினரை வடமாநிலங்களில், குறிப்பாக ராஜஸ்தான், குஜராத், மத்ய பிரதேசம், சிந்து போன்ற மாநிலங்களில் பிரபலமாக இருந்த ஓர் குலம் எனத் தெரிய வருகிறது. இந்தக் குலத்தினர் தேவியின் மக்கள் என்று போற்றிப் பாராட்டப்பட்டிருக்கின்றனர். பல ராஜபுதன அரசர்களால் இவர்கள் பல்வேறு வளங்களையும் தானமாகப் பெற்று வந்திருக்கின்றனர். ராஜா என ஒருவன் இருந்தாலும் சரண் இனத்தினவரின் முடிவே இறுதி முடிவாக ஓர் சில ராஜ்யங்களில் இருந்திருக்கிறது. இவர்கள் அனைவருமே தெய்விக அம்சத்தைக் கொண்டவர்களாகச் சொல்லப்பட்டிருக்கின்றனர். இந்தக் குலத்தின் பெண்களை தேவியாகவே கண்டு வணங்கிப் போற்றி வந்திருக்கின்றனர். அவர்களில் ஹிங்க்லால் மாதா, அவாத் மாதா, தனோட் மாதா, கர்னி மாதா, பஹுசரா மாதா, கொடியார் மாதா, மொகல் மாதா, சோனல் மாதா ஆகியோரைச்  சரண் மஹாசக்தியின் அம்சங்களாகப் போற்றி வந்திருக்கின்றனர். இவர்களில் கொடியார் மாதா பற்றி மட்டும் ஓரளவு அறிந்திருக்கிறேன். குஜராத்தில் இருந்தபோது கொடியார் மாதா குறித்துக் கேள்விப் பட்டிருந்தாலும் மற்றவர்களைக் குறித்துத் தெரியவில்லை. இப்போது தான் நேற்று அஷ்வின் ஜி மூலம் கேள்விப் பட்டேன்.



பபால் தன் தேதா  என்பவரின் மகளாக பஹுசரா மாதா அறியப்படுகிறாள். இவள் தன் சகோதரிகள் அனைவருடனும் அந்தக்கால வழக்கப்படி கூண்டு வண்டியில் பிரயாணம் செய்தாள். அப்போது கொள்ளைக்கும்பலைச் சேர்ந்த பபியா என்பவன் இவர்கள் வண்டியைத் தாக்கினான். அந்தக் கால கட்டத்தில் சரண் இனத்தவர் பிரயாணம் செய்யும் வாகனங்களைத் தாக்குவது சட்ட விரோதமாகவும் பெரிய குற்றமாகவும் கருதப்பட்டு வந்தது. சரண் இனத்தவரின் ஒரு சொட்டு ரத்தம் பூமியில் விழுந்தாலும் அது கொடிய, மிகவும் வெறுக்கத்தக்க விஷயமாகக் கருதப்பட்டது. பபியா தங்கள் வண்டியைத் தாக்குவதை அறிந்ததுமே பஹுசராவும் அவள் சகோதரிகளும் தங்களை நெருப்பிலிட்டுக் கொள்வதாக முடிவு செய்தனர். அதன்படி தங்கள் மார்பகங்களையும் கத்தியால் வெட்டிக் கொண்டனர். பபியாவுக்கு உடனே பஹுசரா மாதாவின் சாபம் கிடைத்ததாகவும் இதன் மூலம் அவன் ஆண்மையற்றவனாக ஆகிவிட்டான் எனவும் சொல்கின்றனர்.

அதன் பின்னர் பபியா ஒரு பெண்ணைப் போல் புடைவை அணிந்து ஆடிப்பாடி, பஹுசரா மாதாவைத் துதித்து வணங்கி வந்ததும் அவன் சாபம் நீங்கியது என்றும் சொல்கின்றனர். ஆனால் அன்று முதல் இப்போது வரை இந்த பஹுசரா மாதா அரவாணிகள் என அழைக்கப்படும் திருநங்கையர், திருநம்பியரின் குலதெய்வமாகப் போற்றி வருவதாகவும் சொல்லப்படுகிறது. என்றாலும் அனைத்து இன மக்களும் பஹுசரா மாதாவைத் துதித்து வணங்குகின்றனர். பொதுவாக அஹிம்சையே இந்த அம்பிகையின் வழிபாட்டில் முக்கியமாகக் கருதப்பட்டாலும் முற்காலங்களில் மிருகபலி இருந்திருப்பதாகவும் சொல்கின்றனர். 

Saturday, April 09, 2016

இனிய தோழி ரேவதிக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்.

ரேவதி நரசிம்ஹன் க்கான பட முடிவு


அது 2005 ஆம் வருடம்! உடல்நிலை ரொம்பவே முடியாமல் வீட்டில் வேலையும் அதிகம் செய்ய முடியாமல் மனசு நொந்து போயிருந்த சமயம். பையர் கணினி வாங்கிக் கொடுத்துச் சும்மா இருக்கும் நேரங்களில் கணினியில் பொழுது போக்கச் சொல்லிச் சென்று விட்டார். விளையாட்டாக ஆரம்பித்தேன். 2005 ஆம் வருடம் நவம்பர் மாதம். அடுத்த மாதம் பையரின் கல்யாணம்! அப்போது தான் விளையாட்டாக ஆங்கிலத்தில் தட்டுத் தடுமாறிப் பதிவை ஆரம்பித்தேன்.

சில நாட்களில் எனக்கு அதன் மூலம் பல பதிவுகளுக்கும் தொடர்பு ஏற்பட்டது. அவற்றில் முக்கியமானவர்கள் என்றால் முதலில் அம்பி, பின்னர் ரேவதி! என்றாலும் நான் முதலில் பழகிக் கொண்டது துளசி கோபாலையும், நுனிப்புல் உஷாவையும் தான். இன்றும் அவர்கள் இருவரும் நண்பர்களே என்றாலும் சிறப்பான நண்பர்கள் என்று சொல்லப் போனால் (இதில் துளசிக்கோ, உஷாவுக்கோ வருத்தமெல்லாம் இருக்காது!) அம்பியும் ரேவதியும் தான். நான் மெல்ல மெல்லக் கணினித் தமிழ் எழுதப் பழகியது வெண்பா வடித்துக்கொண்டிருந்த ஜீவ்ஸ் என்னும் ஐயப்பனின் உதவியால் தான். அதே போல் ரேவதியும் நான் ஆரம்பித்தபோது கிட்டத்தட்ட அதே சமயம் ஆரம்பித்து அவரும் பழகிக் கொண்டு இன்று இணைய உலகிலும் முகநூலிலும் மிகவும் பிரபலமானவராக ஆகி இருக்கிறார்.

பத்து வருடங்களுக்கு முன் தொடர்ந்த நட்பு இன்னமும் தொடருவதோடு அல்லாமல் குடும்ப நண்பர்களாகவும் ஆகி விட்டோம். அந்த இனிய நட்புக்கு இன்று பிறந்த நாள்.  எனக்கு ஏதாவது ஒண்ணுன்னா முதலில் விசாரிப்பது ரேவதியும், எங்கள் ஶ்ரீராமும் தான். ரேவதி வீட்டுக்கே தொலைபேசி விடுவார். இல்லைனா தவிச்சுப் போயிடுவார். ஒருத்தர் கிட்டேயும் சொல்லாமல் அயோத்திப் பயணம் போயிட்டேன். எல்லாம் என்னோட விளையாட்டுப் புத்தி காரணமாத் தான்! ஆனால் ரேவதி பத்துநாட்களாக இணையத்தில் நான் இல்லைனதும் தவிச்சுப் போயிட்டாங்க. எப்படியோ என் அலைபேசி எண்ணைத் தேடி எடுத்து என்னைத் தொடர்பு கொண்டாங்க. நான் அப்போது வால்மீகி ஆசிரமத்தில் இருந்தேன். பின்னர் அவங்களிடம் இரண்டு நாட்களில் திரும்புவதாகவும் சொன்னேன். அதுக்கப்புறமாத் தான் அவங்களுக்கு சமாதானம் ஆச்சு!

நட்பு எவ்வளவு ஆழம் என்பதைப் புரிய வைத்த ரேவதிக்கு இன்று பிறந்த நாள். இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ரேவதி!  உங்கள் உடல்நிலை தேறி உங்கள் மனம் மகிழ்ச்சியுடன் இருக்கப் பிரார்த்தனைகளும் கூட. என் சார்பிலும் என் கணவர் சார்பிலும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.


ரேவதி நரசிம்ஹன் க்கான பட முடிவு

Saturday, April 02, 2016

கண்ணை மறந்து சமையலில் கவனம்! :)


கண்ணிலே இருக்கும் பிரச்னை கூடவும் இல்லை; குறையவும் இல்லை. அவ்வப்போது வந்து எட்டிப் பார்க்கிறது. சில சமயங்களில் சரியாயிட்ட மாதிரி இருக்கும். ஆனால் அப்படி நினைத்த மறு கணமே சிலந்தி வலை தோன்றிவிடும். மற்றபடி வேறு பிரச்னை இல்லை. பார்க்கலாம். அதிக நேரம் இணையத்தில் செலவு செய்வது இல்லை. முடிந்தவரை கண்களை மூடி ஓய்வு கொடுக்கிறேன். புத்தகம், தினசரி படிப்பதை ஒரு மணி நேரம் மட்டுமே வைத்திருக்கேன். அதே போல் கணினியிலும் ஒரு மணி நேரத்திலிருந்து இரண்டு மணி நேரம் வரையுமே! அதற்குள்ளாக என் மின் மடல் பெட்டியில் வந்திருக்கும் மடல்களைப் பார்ப்பது, மடல்கள் மூலம் பதிவுக்கு அழைத்தவர்களின் பதிவுகளைப் படிப்பது என்று செய்ய வேண்டும். ஆகவே எல்லோருடைய பதிவுகளுக்கும் போக முடியலை! மன்னிக்கவும். (இல்லாட்டி ரொம்பத் தான் போயிட்டிருந்தாப்போல! ) ஹிஹிஹி, அது என் ம.சா. இப்படித் தான் அவ்வப்போது வாய்ப்புக் கிடைச்சாக் கூவும்! :P :P கண்டுக்கிறதில்லைனு வைச்சிருக்கேன். 

இப்போ இந்தப் பதிவு எதுக்குன்னா இன்னிக்கு ஒரு புது வித உணவு தயாரிப்பில் ஈடுபட்டேன். மராத்திய உணவு. என்ன திடீர்னு கேட்கறீங்களா? இந்த மாசம் மங்கையர் மலர் மராத்திய உணவு சிறப்பிதழ் வெளியிட்டிருக்கா! நம்ம ரங்க்ஸ் அதிலேருந்து எதானும் பண்ணுனு உத்தரவு பிறப்பிச்சாச்சு. உடனே சிரமேற்கொண்டு செய்பவர்களாச்சே நாமெல்லாம். தாலிபீத் என்னும் கலவை ரொட்டியைத் தேர்ந்தெடுத்தேன் காலை உணவுக்காக. 

எனக்குத் தெரிஞ்சவரை தாலி பீத் தயாரிக்க கோதுமை மாவு, சோள மாவு அல்லது கம்பு மாவு அல்லது வெள்ளைச் சோள மாவு, அரிசி மாவு(தேவைப்பட்டால்) மற்றும் கட்டாயமாகக் கடலைமாவு போன்றவை தேவை! ஆனால் இதிலே கோதுமை மாவே குறிப்பிடவில்லை. அப்புறமாச் சோளம், கம்பு மாவுக்கெல்லாம் எங்கே போக! :) என்றாலும் இதில் சொன்னபடியே செய்துடலாம்னு ஒரு தீர்மானம் போட்டாச்சு! கோதுமை மாவெல்லாம் சேர்த்தால் சப்பாத்தி மாதிரிக்குழவியால் இட்டுக் கொள்ளலாம். ஆனால் இங்கே சொல்லி இருந்ததோ வெறும் அரிசி மாவும், கடலைமாவும் மட்டுமே! இனி மேலே பார்ப்போமா?

நான்கு பேர்கள் கொண்ட குடும்பத்திற்குத் தேவையான பொருட்கள். இது அந்தப் புத்தகத்தில் கொடுத்திருக்கும் பொருட்கள். சாமான்கள் அளவில் சிறிய மாற்றம் இருக்கலாம். 

அரிசிமாவு இரண்டு கிண்ணம்
கடலை மாவு இரண்டு கிண்ணம்
உளுந்தம் மாவு அரைக்கிண்ணம்
அவல் கால் கிண்ணம் போல் எடுத்து நன்கு ஊற வைக்கவும். 
உப்பு தேவையான அளவு
சேர்க்கவேண்டிய மசாலா சாமான்கள்
தனியாப் பொடி இரண்டு டீஸ்பூன்
மஞ்சள் பொடி கால் டீஸ்பூன்
ஜீரகம்,ஓமம் வகைக்கு ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் காரத்துக்கு ஏற்ப 1 அல்லது 2 பொடியாக நறுக்கவும்
இஞ்சி ஒரு துண்டு துருவிக்கொள்ளவும் அல்லது பொடியாக நறுக்கவும்.
கொத்துமல்லித் தழை பொடியாக நறுக்கியது 3 டேபிள் ஸ்பூன்
பெரிய வெங்காயம் 2 பொடியாக நறுக்கியது. 
பிசையத் தேவையான நீர்
தோசைக்கல்லில் போட்டு எடுக்கத் தேவையான சமையல் எண்ணெய்/நெய்

எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து தேவையான நீர் விட்டுப் பிசையவும். சற்று நேரம் ஊற வைத்துவிட்டுப் பின்னர் ஒரு வாழை இலை அல்லது ப்ளாஸ்டிக் ஷீட்டில் சாத்துக்குடி அளவு உருண்டையை எடுத்துக் கொண்டு நடுவில் வைத்து எண்ணெய் தொட்டுக் கொண்டு கைகளால் போளி தட்டுவது போல் தட்டவும். ஒரு சிலர் கைகளிலேயே தட்டுகிறார்கள். அடுப்பில் தோசைக்கல்லைக் காய வைத்துவிட்டுத் தட்டியதை அடுப்பில் போட்டு நடுவில் அடைக்கு ஓட்டை போடுவது போல் போட்டுச் சுற்றிலும் மற்றும் நடுவில் எண்ணெய்/நெய் ஊற்றவும். இரு பக்கமும் நன்கு வேக வேண்டும். வெந்ததும் ஊறுகாய்/தக்காளிச் சட்னி/தயிர் ஆகியவற்றுடன் சூடாகச் சாப்பிட வேண்டும்.
ஒன்று சாப்பிடும்போதே வயிறு நிறைந்து விடுகிறது. ஆகையால் குறைந்த பட்சமாக நான்கு பேராவது சாப்பிட இருந்தால் மட்டுமே இதைச் செய்யலாம் என்பது என் சொந்தக் கருத்து.  இதுவும் ஓகே தான். ஆனாலும் இதில் கோதுமை மாவு சேர்த்துத் தான் மஹாராஷ்டிராவில் செய்வார்கள். விரத நாட்களில் ஜவ்வரிசியை எட்டு மணி நேரம் ஊறவைத்து உருளைக்கிழங்கு, வேர்க்கடலைப் பொடி சேர்த்துக் கொண்டு வெங்காயம் போடாமல் மற்றச் சாமான்களைப் போட்டுச் செய்வார்கள். பொதுவாக இது கொஞ்சம் வயிற்றில் கனமாகவே இருக்கும். ஆகவே காலை உணவுக்கென்று வைத்துக் கொண்டாலும் ஜீரணம் ஆகும்படியான வேலைகளை அன்று வைத்துக் கொண்டால் நல்லது! :) இரவுக்கோ, மதிய உணவுக்கோ வேண்டவே வேண்டாம். தாலிபீத் செய்வதற்குக் கோதுமை மாவு, கம்பு அல்லது சோள மாவு சேர்த்துக் கடலைமாவோடு மற்றச் சாமான்களைப் போட்டுப் பிசைந்து ரொட்டி மாவு போல் வைத்துக் கொண்டு குழவியால் உருட்டிச் செய்யலாம். இதில் கொஞ்சம் மெலிதாக வரும். என்றாலும் வெங்காயம் ரொம்பப் பொடியாக இருந்தால் நல்லது. அல்லது ராஜ்கீர் எனப்படும் வட மாநிலங்களில் கிடைக்கும் கீரை, வெந்தயக்கீரை போன்றவற்றைப் போட்டும் செய்யலாம்.



பிசைந்த மாவை வாழை இலையில் வைத்துத் தட்டி இருக்கேன். 


அடுப்பில் வேக விடும்போது எடுத்த படம். வெந்தது படம் எடுக்க மறந்துட்டேன். :) ஹிஹிஹி, வழக்கம் போல் படம் எடுக்க நினைவில்லை. பின்னர் நினைவு வந்தபோது செல்லிலேயே எடுத்தேன். புது செல்! ஆகையால் படம் நல்லா வரும்னு நினைச்சேன்! ம்ஹூம்! சொதப்புது! :) மெமரி கார்டு பழய செல்லோடது! அதனாலோ! :)