மேற்கண்ட படத்தைத் தம்பி அஷ்வின் ஜி எங்கிருந்தோ எடுத்து என்னை இதில் கோர்த்துவிட்டு இந்தப் படத்திலிருக்கும் அம்பிகை யார்னு கேட்டிருந்தார். அவர் கொடுத்த படத்தில் வாள் இடக்கையில் இருந்தது. இந்தப் படத்தில் வலக்கையிலும் இருக்கு, இடக்கையிலும் வாள் போன்ற ஓர் ஆயுதம். மொத்தத்தில் இது காளி மாதாவின் ஓர் உருவம் என்ற வரையில் புரிந்து கொண்டேன். ஆனாலும் அப்படி இருக்குமானு ஓர் தயக்கம். ஆகவே அஷ்வின் ஜியிடம் எனக்குத் தெரியாது என்றே சொல்லி விட்டேன். உண்மையில் இப்படிச் சேவல் வாகனத்தைக் கொண்ட அம்மனைப் பார்த்ததில்லை தான். பின்னர் ஷிவஷிவா என்னும் நண்பர் இது பஹுசரா தேவி என்று சொல்லி இருந்தார். இது குறித்த மேலதிகத் தகவல்களைத் தேடினால் தமிழில் கிடைக்கவில்லை. ஆங்கிலத்தில் இருப்பதாக அஷ்வின் ஜியே விக்கிபீடியாவின் சுட்டியைக் கொடுத்திருந்தார்.
அதிலிருந்து தெரிய வந்தவை! இந்த அம்மன் சக்தியின் அவதாரம் எனப்பட்டாலும் உண்மையில் இவள் சரண் என்னும் குலத்தில் பிறந்தவள் என்பது தெரியவந்தது. இந்தக்குலத்தினரை வடமாநிலங்களில், குறிப்பாக ராஜஸ்தான், குஜராத், மத்ய பிரதேசம், சிந்து போன்ற மாநிலங்களில் பிரபலமாக இருந்த ஓர் குலம் எனத் தெரிய வருகிறது. இந்தக் குலத்தினர் தேவியின் மக்கள் என்று போற்றிப் பாராட்டப்பட்டிருக்கின்றனர். பல ராஜபுதன அரசர்களால் இவர்கள் பல்வேறு வளங்களையும் தானமாகப் பெற்று வந்திருக்கின்றனர். ராஜா என ஒருவன் இருந்தாலும் சரண் இனத்தினவரின் முடிவே இறுதி முடிவாக ஓர் சில ராஜ்யங்களில் இருந்திருக்கிறது. இவர்கள் அனைவருமே தெய்விக அம்சத்தைக் கொண்டவர்களாகச் சொல்லப்பட்டிருக்கின்றனர். இந்தக் குலத்தின் பெண்களை தேவியாகவே கண்டு வணங்கிப் போற்றி வந்திருக்கின்றனர். அவர்களில் ஹிங்க்லால் மாதா, அவாத் மாதா, தனோட் மாதா, கர்னி மாதா, பஹுசரா மாதா, கொடியார் மாதா, மொகல் மாதா, சோனல் மாதா ஆகியோரைச் சரண் மஹாசக்தியின் அம்சங்களாகப் போற்றி வந்திருக்கின்றனர். இவர்களில் கொடியார் மாதா பற்றி மட்டும் ஓரளவு அறிந்திருக்கிறேன். குஜராத்தில் இருந்தபோது கொடியார் மாதா குறித்துக் கேள்விப் பட்டிருந்தாலும் மற்றவர்களைக் குறித்துத் தெரியவில்லை. இப்போது தான் நேற்று அஷ்வின் ஜி மூலம் கேள்விப் பட்டேன்.
பபால் தன் தேதா என்பவரின் மகளாக பஹுசரா மாதா அறியப்படுகிறாள். இவள் தன் சகோதரிகள் அனைவருடனும் அந்தக்கால வழக்கப்படி கூண்டு வண்டியில் பிரயாணம் செய்தாள். அப்போது கொள்ளைக்கும்பலைச் சேர்ந்த பபியா என்பவன் இவர்கள் வண்டியைத் தாக்கினான். அந்தக் கால கட்டத்தில் சரண் இனத்தவர் பிரயாணம் செய்யும் வாகனங்களைத் தாக்குவது சட்ட விரோதமாகவும் பெரிய குற்றமாகவும் கருதப்பட்டு வந்தது. சரண் இனத்தவரின் ஒரு சொட்டு ரத்தம் பூமியில் விழுந்தாலும் அது கொடிய, மிகவும் வெறுக்கத்தக்க விஷயமாகக் கருதப்பட்டது. பபியா தங்கள் வண்டியைத் தாக்குவதை அறிந்ததுமே பஹுசராவும் அவள் சகோதரிகளும் தங்களை நெருப்பிலிட்டுக் கொள்வதாக முடிவு செய்தனர். அதன்படி தங்கள் மார்பகங்களையும் கத்தியால் வெட்டிக் கொண்டனர். பபியாவுக்கு உடனே பஹுசரா மாதாவின் சாபம் கிடைத்ததாகவும் இதன் மூலம் அவன் ஆண்மையற்றவனாக ஆகிவிட்டான் எனவும் சொல்கின்றனர்.
அதன் பின்னர் பபியா ஒரு பெண்ணைப் போல் புடைவை அணிந்து ஆடிப்பாடி, பஹுசரா மாதாவைத் துதித்து வணங்கி வந்ததும் அவன் சாபம் நீங்கியது என்றும் சொல்கின்றனர். ஆனால் அன்று முதல் இப்போது வரை இந்த பஹுசரா மாதா அரவாணிகள் என அழைக்கப்படும் திருநங்கையர், திருநம்பியரின் குலதெய்வமாகப் போற்றி வருவதாகவும் சொல்லப்படுகிறது. என்றாலும் அனைத்து இன மக்களும் பஹுசரா மாதாவைத் துதித்து வணங்குகின்றனர். பொதுவாக அஹிம்சையே இந்த அம்பிகையின் வழிபாட்டில் முக்கியமாகக் கருதப்பட்டாலும் முற்காலங்களில் மிருகபலி இருந்திருப்பதாகவும் சொல்கின்றனர்.
ஆஹா.. ஓஹோ..பேஷ் பேஷ்...
ReplyDeleteநன்றி அஷ்வின் ஜி. உங்களால் ஒரு புதிய அம்பிகை குறித்து அறிய முடிந்தது. :)
Deleteஉங்கள் மூலம் புதிய தகவல்கள்! எத்தனை எத்தனை புராணங்கள்...!
ReplyDeleteதூண்டுகோல் அஷ்வின் ஜி தான். அவருக்குத் தான் நன்றி சொல்லணும்.
Deleteசுடச்சுட எழுதிட்டீங்க! நல்லாவே வந்துருக்கு! ராஜஸ்தான் குஜராத் பக்கங்களில் கோகாஜின்னு குதிரையில் இருக்கும் சாமியும் இருக்கார். குக்கா ஜாஹர் வீர் என்ற பெயர்!
ReplyDeleteஆமாம், நல்ல சூடாகவே இருந்தது. :) கோகாஜி பத்திக் கேள்விப் பட்டது தான். அதிகம் தெரியாது. பார்க்கலாம். :)
Deleteபுதிய தகவல்தான்
ReplyDeleteஆமாம், கில்லர்ஜி!
Deleteபஹுசரா மாதா பற்றி தெரிந்து கொண்டேன்.
ReplyDeleteநன்றி கோமதி அரசு!
Deleteஅறியாத தகவல்கள்...
ReplyDeleteதெரியப்படுத்தியமைக்கு
நன்றி நட்பே....
நன்றி அஜய் சுனில்கர்!
Deleteபுதிய தகவல்! இதுவரை அறிந்திராத தகவல் அறிந்து கொண்டோம்...இந்தியா புராணத்தலம் என்று சொப்படுவது இதனால்தான் போலும். எத்தனை எத்தனைப்புராணக்கதைகள்!!!
ReplyDeleteநன்றி துளசிதரன்.
Delete