எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, April 15, 2016

ஶ்ரீராமருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! :)

ரெண்டு நாளாவே ராமர் கேட்டுட்டு இருந்தார். முந்தாநாளைக்கு விஷு புண்யகாலத்திலும் வெறும் பாயசம் மட்டும் தான்! நேத்திக்குத் தமிழ் வருஷப் பிறப்பிலும் ஒண்ணுமே பண்ணித்தரலைனு சோகமா ஆயிட்டார்! நீங்கல்லாம் கிருஷ்ண ஜயந்தின்னா எல்லாம் நொறுக், முறுக்னு தின்னப் பண்ணித் தள்ளறீங்க! இன்னைக்கு என்னோட பிறந்த நாளைக்கு எல்லாம் மிருதுவாத்தானே பண்ணணும்! அது கூடப் பண்ணலைன்னா எப்படினு கேள்வி மேல் கேள்வி! கண்ணனை இப்போத்தானே எழுதறேன், அதுக்கு முன்னாடியே உங்களைப் பத்தி எழுதியாச்சே! ரெண்டாவதா அவன் இன்னமும் குழந்தை தான்! உங்க மேலே முதல்லே மரியாதை தானே வருதுனு சொன்னேன்! ஏதோ சாக்குனு முகத்தைத் திருப்பினார் ஶ்ரீராமர்!  சரி இன்னிக்குத் தான் ராமருக்குப் பிறந்த நாள் வேறேயே! நேத்திக்கே ஜன்ம நக்ஷத்திரம் வந்தாச்சு! ஆனால் நாமெல்லாம் என்னமோ நவமி திதியிலே தானே கொண்டாடறோம்! ஆகவே இன்னிக்கு ஶ்ரீராமநவமிக்கு ஶ்ரீராமர் மனம் குளிரும்படி எல்லாமும் செய்துடலாம்னு முடிவு.

என்ன பெரிசா? சாதம், பருப்பு, பாயசம், சுண்டல், வடை, பானகம், நீர்மோர்! அம்புடுதேன்! அதுக்கே இங்கே நாக்குத் தள்ளுது! :) போளியெல்லாம் பண்ணலை!  இந்த வெயில் வேறே இந்த வருஷம் பாடாய்ப் படுத்தி எடுக்குது. குளிச்சுட்டு வந்த உடனே மறுபடி குளிச்சாப்போல் வியர்வை வெள்ளம். அடுப்பு எரிஞ்சால் என்ன, எரியாட்டி என்னனு மெத்தனமா சமையலறையில் முழு வேகத்தில் மின் விசிறியைச் சுத்த விட்டுட வேண்டி இருக்கு!  பத்து நிமிஷத்துக்கு ஒரு முறை வியர்வைக்குளியலைக் கழுவி நல்ல நீர் விட்டு முகம், கை,கால்களைக் கழுவிட்டு வர வேண்டி இருக்கு! இத்தனைக்கு நடுவே சமையல், சாப்பாடு. மூணு நாளாக் காலை நோ டிஃபன்! நம்ம ரங்க்ஸுக்கு அதுவே பாதி பலவீனமாயிடுச்சு. பசி தாங்கலை! காஃபி இரண்டு தரம், ஹார்லிக்ஸ் (மருத்துவர் தடை போட்டிருக்கார்) ஒருதரம்னு குடிச்சாலும் தாங்கறதில்லை. ஆகவே பத்து மணிக்குள்ளாகச் சமைக்கணும்.

வீடு சுத்தம் செய்துட்டுக் குளிச்சுட்டு வரவே எட்டரை மணி ஆயிடுது! :) அதுக்கப்புறமா இவை எல்லாம் செய்துட்டுச் சரியாப் பத்து மணிக்கு எல்லாம் முடிச்சுட்டேன். வெள்ளிக்கிழமையா, ராகுகால விளக்கு ஏத்துவேன். அதுக்காகப் பத்து நிமிஷம் காத்திருந்து நிவேதனம் பண்ணினேன். கீழே படங்கள்! ராமர் படத்தின் மேலே வெளிச்சம் பிரதிபலிக்காமல் எடுக்கணும்னு பார்த்தால் முடியலை. மின் விளக்கை அணைத்தால் படம் எடுக்க வெளிச்சம் போதலை. விளக்கைப் போட்டால் அது பிரதிபலிப்பு அதிகமா ஆகி ஶ்ரீராமரின் முகமே தெரியறதில்லை!


மல்லிகைப்பூ நேற்று உதிரியாக வாங்கித் தொடுத்தேன். கால் கிலோ நேத்திக்கு 40 ரூ விலை. :(  கால் கிலோவுக்குப் பூக்காரங்களைப் போல் தொடுத்தால் ஆறு, ஏழு முழம் வரும். நான் தொடுத்தது 5 முழம், கொஞ்சம் கூடவும் வந்தது. 




சாதம், பருப்பு, பாயசம், சுண்டல், பானகம், நீர்மோர், வடை, வெற்றிலை பாக்கு, பழம் நிவேதனம்!

கீழே கற்பூரம் காட்டியது தட்டில் எரிந்து கொண்டு இருக்கிறது.  பலகையில் ராகுகால விளக்கு ஏற்றியது எரிகிறது. :)

எல்லோரும் சீக்கிரமா வந்து சுடச் சுட வடை, பாயசம், சுண்டல் எடுத்துண்டு, பானகமும், நீர்மோரும் குடிங்கப்பா! 

18 comments:

  1. புகைப்படம் நன்று ஸ்ரீராமருக்கு கொடுத்த பாயசம் எங்களுக்கு இல்லையா ?
    வாயிலயே பாயசம் காச்சுறதுன்னு கேள்விப்பட்டு இருக்கேன் இதுதானோ....?
    ஏட்டுச் சுரைக்காய் கூட்டுக்கு உதவாது பாயசம் அபுதாபி பார்சல் வரட்டும்

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா கில்லர்ஜி, பாயசம் நீங்களா எடுத்துக் குடிச்சுக்க வேண்டியது தான்! :)

      Delete
  2. அருமையான நேர்முக வர்ணனையுடன் ஸ்ரீராமநவமி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கோமதி அரசு! :)

      Delete
  3. பானகம், நீர்மோர்,ஸ்...... ஆ! ரயிலில் வரும்போது திருச்சி ஸ்டேஷனில் "மல்லீப்பூ நூலோட கால்கிலோ பத்து ரூபாய்" என்று ஒரு சிறுமி விற்றுக் கொண்டிருந்தாள்.

    ReplyDelete
    Replies
    1. நாங்க அதாவது நம்ம ரங்க்ஸ் இங்கே சாத்தாரத் தெருவிலே பூக்கடையிலே போய் வாங்குவார். மல்லிகைப்பூவின் தரமும் இருக்கே. பொதுவா விலை மலிஞ்சிருந்தா சாதாரண நாட்களில் கால் கிலோ 15 ரூபாயிலிருந்து 20 வரை இருக்கும். திங்கள், வியாழக்கிழமைகளில் கொஞ்சம் விலை கூடும். நான் கதம்பம் கூட விருட்சி, பச்சை, மரிக்கொழுந்து, வெள்ளை சம்மங்கி, அரளினு வாங்கிக் கட்டுவேன். இந்த முறை என்னமோ அந்தப் பூவெல்லாம் நல்லா இல்லைனு வாங்கலை. மல்லிகை மட்டும் தான் வாங்கினார். பொதுவா உதிரியாக வாங்கித் தொடுத்தால் தான் லாபம். அப்படித் தான் வாங்குவேன்.

      Delete
  4. ராமரை வணங்கி, பானகம், நீர்மோர் பருகினேன். நன்றி

    ReplyDelete
  5. எங்கள் வீட்டு மொட்டை மாடியில் மல்லிகை பூத்திருக்கும் தினம் இரண்டு முழம் பூ கட்டலாம் இது மல்லிகை சீசன் மேலும் வீட்டு மாமரத்துக் காய்களை எடுத்து கச்சா மாங்கோ ஜூஸ் தயார் செய்வாள் என் மனைவி இந்த கோடை வெயிலுக்கு உடலுக்கு நல்லது நான் வருவோருக்கு எல்லாம் ஜூஸ் கொடுப்பேன் புகைப் படத்திலிருந்து எடுத்துக் கொள்ளச் சொல்ல மாட்டேன் ( சும்மா தமாஷ் )ஸ்ரீராம நவமிக்கு அருகில் இருக்கும் கோவிலுக்கு வெல்லம் பானகம் செய்யக் கொடுப்பது வழக்கம்

    ReplyDelete
    Replies
    1. அம்பத்தூர் வீட்டிலும் மல்லிகைப் பூ, சந்தனமுல்லை ஆகியவை பூத்துக் கொண்டிருந்தன. தினமும் அங்கேயும் பூக்கட்டுவேன். கச்சாமாங்காயில் ஜூஸ் உடம்புக்கு நல்லதுதான் ஆனால் எனக்கு என்னவோ பிடிக்காது. :) பானகம், நீர் மோரெல்லாம் நீங்க வீட்டுக்கு வந்திருந்தால் கிடைச்சிருக்கும். இல்லைனா புகைப்படத்திலிருந்து எடுத்துக்க வேண்டியது தான்! :)

      Delete
  6. அருமையான ராம தரிசனம்.
    இங்க இனிமேலதான் எல்லாம்.
    தொடுத்த மல்லி மாலை ஜோர்.
    டிஃபன் ஏன் கட். ஒரு நாள் மாசப் பிறப்பு.
    ராம நவமிக்கும் பட்டினியா.

    அழகான அமைப்பான சன்னிதானம். மனம் நிறை வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், ஸ்வாமிக்கு நிவேதனம் பண்ணும்போது சாப்பிட்டுவிட்டுச் செய்தால் சரியாக வராதே! அதான் இரண்டு பேருமே டிஃபன் வேண்டாம்னு விட்டுட்டோம். ஆனால் பத்து மணிக்குள்ளாகச் சாப்பிட்டாச்சு! :)

      Delete
  7. அருமை சகோ .....
    கன்னியாகுமரி க்கு பாயாசம்
    பார்சல் அனுப்புங்கோ....

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி, அனுப்பினேனே வந்ததா?

      Delete
  8. இராம நவமி அன்னிக்கு செய்யும் பானகம் பனை வெல்லத்தில் செய்யலாமோ என்று தெரியவில்லை.

    அது தான் இருந்தது. கையில். கடைக்குப் போக முடியவில்லை. வெய்யில் கொளுத்துகிறது.

    செய்து நிவேதனம் செய்தேன். ஒரு துளி சாப்பிட்டு பார்த்தேன்.

    ஆஹா. ஆஹா.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
    Replies
    1. பனை வெல்லம் நிவேதனம் செய்வதற்கு ஏற்றதல்ல என்பார்கள். முதல் நாளே கரும்பு வெல்லம் வாங்கி வைச்சிருக்கலாமோ? ஆனாலும் உடலுக்குப் பனை வெல்லம் நன்மையே தரும்.

      Delete
  9. நேற்றைக்கு லீவாக இருந்தாலும் ஜோலிக்கு போக வேண்டிய நிர்ப்பந்தம் இருந்ததால், ராத்ரி தான் ராம ஜனனம். பானக நீர்மோருடன் சுருக்கமான ராம ஜனனம். சஹதர்மிணி ஆசையாக ராம ஜனனம் பாராயணம். அடியேன் ராகவ சதக கீர்த்தனைகள். கொஞ்ச நேரம் தான். ஆனால் மனதுக்கு ஹிதமாக இருந்தது.

    தேஹ ஆரோக்யம் சரியில்லாத போதும் கூட கொஞ்சமும் விட்டுக்கொடுக்காது சம்ப்ரதாயமாக அழகாக உங்கள் க்ருஹத்து ராமநவமியைப் பார்க்கப் பார்க்கவே ஆசையாக இருக்கிறது.ப்ரஸாதங்கள் நேத்ரானந்தம்.

    அந்த டைல் தரையைப் பார்க்கும் போது தான் கொஞ்சம் பயமா இருக்கு :-)

    அங்க இங்கன்னு ஜலம் தெளிச்சிருந்ததுன்னா கண் சரியா தெரியலைன்னா வழுக்கி விட்டுடும் போல இருக்கே

    ReplyDelete
    Replies
    1. வாங்க கிருஷ்ணகுமார், முதல் வருகைக்கு நன்றி. இந்த அளவுக்காவது உடல்நிலையை ஆண்டவன் வைச்சிருக்கிறதற்கு நன்றி தெரிவிக்க வேண்டாமா? முடிஞ்சவரை தான் செய்யப் போறோம்! இப்போதைக்கு ஏதோ நடக்கிறது. ராமன் க்ருபை எப்படியோ! அந்த டைல்ஸ் தரை கொஞ்சம் வழுக்கல் தான். பெருக்கித் துடைக்கத் துடைக்கக் கீழே பிரதிபலிப்பு வேறே அதிகமா இருக்கும். ஜலம் சிந்தினதுன்னா கவனமாத் தான் இருக்கணும். அதிலும் மருத்துவர் என்னைக் கீழே விழக் கூடாதுனு எச்சரிக்கை வேறே கொடுத்திருக்கார். கீழேயே கண் வைத்துக் கொண்டு பார்த்துக் கொண்டு தான் நடக்கிறேன். :) உங்கள் அக்கறையான கருத்துக்கு நன்றி.

      Delete