மல்லரை வென்ற மாங்குடியார்
இந்தச் சுட்டியின் மீதிப் பகுதி கீழே!
பெப்ரவரி மாதம் தாத்தாவின் பிறந்த நாளில் போட்ட பதிவின் மீதிப் பகுதியைக் கீழே வாசிக்கலாம். இன்று தாத்தாவின் நினைவு நாள். தாத்தாவுக்கு அஞ்சலி!
சம்மானங்களைப் பெற்றுக்கொண்ட மல்லரும் கைலாசையரும் அங்கே சில நாள் இருந்தனர்.. அப்பால் அரசரிடம் இருவரும் விடைபெற்றுக்கொண்டபோது மல்லர் அரசரைப் பார்த்து, “ஒரு பிரார்த்தனை “ என்றார்.
“என்ன?” என்று கேட்டார் அரசர்.
“இவ்வளவு பலம் பொருந்திய இந்தப் பிராமண சிரேஷ்டருடைய ஊரையும் உறவினர்களையும் பார்க்கவேண்டுமென்ற ஆசை எனக்கு உண்டாகின்றது. அதை நிறைவேற்றிக்கொள்ளும்படி உத்தரவாகவேண்டும்.” என்று மல்லர் வேண்டிக்கொண்டார்.
“அப்படியே செய்யலாமே” என்று அரசர் உத்தரவிட்டார்.
மல்லரும் அவருடன் வந்த இருபது பேர்களும் கைலாசையருடன் மாங்குடி சென்றனர். போன சமயம் காலைவேளை. கைலாசையர் அவர்கள் வரவை முன்னதாகவே தெரிவித்து அவர்கள் யாவருக்கும் பழையது ஸித்தம் செய்துவைக்கும்படி சொல்லியனுப்பியிருந்தார். அப்படியே வீட்டிலுள்ளவர்கள் முன்னதாகவே நிறைய அன்னம் வடித்து நீரிற் போட்டிருந்தார்கள்.
“உங்களுக்கு இவ்வளவு பலம் எப்படி வந்தது? நீங்கள் என்ன சாப்பிடுவீர்கள்?” என்று மல்லர் கேட்டார்.
“நாங்கள் காலையில் சாத்தீர்த்தத்துடன் பழையது சாப்பிடுவோம். இன்று உங்களுக்கும் அது கிடைக்கும்” என்றார் கைலாசையர்.
வந்தவர்களுக்கெல்லாம் இலைகள் போடப்பட்டன. உப்பும், மாங்காய், நாரத்தங்காய், இஞ்சி முதலிய ஊறுகாய்களும் பழங்கறிகளும் பரிமாறப்பட்டன. அப்பால் பழையதைப் பரிமாறினார்கள். பிறகு ஒருவர் ஊறின எள்ளைக் கொணர்ந்து ஒவ்வோர் இலையிலும் ஒரு கைப்பிடி எடுத்து வைத்துச் சென்றார்.
வந்தவர்கள் சாதத்தைப் பிசைந்து கொண்டார்கள். ஊறுகாயையும் சுவைத்துப் பார்த்தார்கள். அந்த எள்ளை என்ன செய்வது என்பது அவர்களுக்கு விளங்கவில்லை. ஒருவரையொருவர் பார்த்து விழித்தார்கள். தலைவராகிய மல்லர் கைலாசையரைப் பார்த்து, “இதை என்ன செய்வது?” என்று கேட்டார்.
“அதுதானே உடம்புக்குப் பலம்? அப்படியே எடுத்துச் சாதத்தில் பிழிந்துகொண்டால் எண்ணெய் வரும். இந்தப் பழையதும் எண்ணெயும் சேர்ந்தால் நரம்புக்கு அதிக வன்மை உண்டாகும்.”
விருந்தினர்கள் எள்ளையெடுத்துப் பிழிந்தார்கள். ஊறின ஜலந்தான் வந்ததேயொழிய எண்ணெய் வரவில்லை; அதற்குரிய பலம் அவர்களிடம் இல்லை. மல்லர் தலைவராலும் பிழியமுடியவில்லை. அதைப் பார்த்துக்கொண்டேயிருந்த கைலாசையர் அங்கே நின்ற ஒரு பையனைப் பார்த்து, “அடே, இந்த எள்ளைப் பிழிந்து வை.” என்று கட்டளயிட்டார். அவன் ஒவ்வோர் இலையிலும் இருந்த எள்ளை எடுத்து அப்படியப்படியே சாதத்தில் பிழிந்து சக்கையைப் போட்டுவிட்டான். அவன் சரசரவென்று வரிசையாக எல்லோருடைய இலையிலும் இருந்த எள்ளை இவ்வாறு பிழிந்து சென்றதைப் பார்த்தபோது அவர்களுக்கு, “ அடேயப்பா! இங்கே எல்லோரும் இரும்பால் உடம்பு படைத்தவர்கள் போலல்லவோ தோற்றுகிறது!” என்று தம்முள் நினைத்துக்கொண்டார்கள்.
அப்பால் யாவரும் உண்டனர்; இரண்டொரு நாள் அங்கே தங்கிய பிறகு கைலாசையரிடம் விடைபெற்றுக்கொண்டு ஊர்போய்ச் சேர்ந்தனர்.
கைலாசையருடைய குமாரராகிய அண்ணாவையரென்பவர் தம் தந்தையாரைப் போலவே அஞ்சாநெஞ்சமும் தேக பலமும் படைத்தவர். அவர் காலத்தில் ஐயம்பேட்டைக்கு அருகிலுள்ள சாலைகளில் தீவட்டிக் கொள்ளக்காரர்களுடைய தொந்தரவு அதிகமாக இருந்தது. ஜனங்கள் அவர்களுடைய தொல்லையினின்றும் விடுபடுவதற்கு வழி தெரியாமல் ஏங்கிக் கொண்டிருந்தனர். அக்காலத்தில் தஞ்சையிலிருந்த மன்னருக்குக் குடிகள் அந்த விஷயத்தைத் தெரிவித்து முறையிட்டார்கள். அம்மன்னர், “இந்தத் துஷ்டர்களை அடக்குவதற்குத் தக்க பலசாலிகள் நம்மிடம் இல்லை. ஆனாலும் யாரேனும் இவர்களை அடக்கிப் பிடித்தால் தக்க சம்மானம் செய்வோம்.” என்று தெரிவித்தார்.
பொது ஜனங்களுக்குக் கொள்ளைக்காரரால் நேர்ந்துவரும் பெருந்துன்பங்களை உணர்ந்து எவ்வாறேனும் அவர்களைப் பிடித்துவிடவேண்டுமென்று அண்ணாவையர் எண்ணினார். தம்முடைய சிஷ்யர்களும் மிக்க பலசாலிகளுமாகிய ஒரு கூட்டத்தினரோடு சென்று ஒரு நாள் அவர் கொள்ளைக்காரரை எதிர்த்தார். கடும்போர் மூண்டது. கடைசியில் அண்ணாவையர் அவர்கள் அனவரையும் வென்று கைகளைக் கட்டித் தஞ்சை அரசருக்கு முன்னே கொண்டு வந்து நிறுத்தினார். அவர்கள் அனைவருக்கும் தக்க தண்டனை அளிக்கப் பட்டது.
ஜனங்களுக்கும் ராஜாங்கத்துக்கும் பெரிய பெரிய இடையூறுகளை விளைத்து வந்த அக்கொள்ளைக் கூட்டத்தாரை வென்றதனால் அண்ணாவையருக்கு அரசர் பல சம்மானங்களும் மானியங்களும் வழங்கினார். அன்றியும் ராஜாங்கம்என்னும் பட்டத்தையும் அளித்தார். அதுமுதல் அவ்வந்தணரை ராஜாங்கம் அண்ணாவையரென்று யாவரும் வழங்கலாயினர்.
“தந்தையாருக்கு ஏற்ற குமாரர். இவர் தகப்பனார் மல்லரை வென்று சோழநாட்டின் பெருமையை நிலைநாட்டினார்; இவர் கொள்ளைக்காரரை அடக்கி இத்தேசத்தின் அபாயத்தைப் போக்கினார்.” என்று ஜனங்களெல்லாம் பாராட்டினர்.
ராஜாங்கம் அண்ணாவையருக்குப் பின் அப்பரம்பரையில் உதித்தவர்களும் “ராஜாங்கம்” என்ற பட்டத்தை வகித்து வருகின்றனர்.
(இவ்வரலாறுகள் தஞ்சாவூர் ஜில்லாவில் ஊர்தோறும் வழங்கும். இளமையில் இவற்றைப் பலர் வாயிலாகக் கேட்டதோடு இப்பரம்பரையினரும் சிவபக்திச் செல்வருமாகிய ராஜாங்கம் ஸ்ரீபிரணதார்த்திஹர ஐயர் என்பவர் கூறவும் கேட்டிருக்கிறேன்.)
சுவாரஸ்யமான பதிவு. தாத்தாவுக்கு எங்கள் அஞ்சலிகளும்.
ReplyDeleteகாலங்கார்த்தாலேயே வந்துட்டீங்க போல! :)
Deleteஅஞ்சலி
ReplyDeleteநன்றி சு.தா.
Deleteஹா!
ReplyDeleteஎன்ன அதிர்ச்சி தம்பி?
Deleteஇந்தத் தடவை முந்திக் கொண்டு விட்டேன், பார்த்தீர்களா?..
ReplyDeleteபுரியலை, உங்க வலைப்பக்கம் பதிவு ஒண்ணையும் பார்க்கலையே? அதோட இதை நான் ஷெட்யூல் பண்ணிப் பத்து நாளுக்கும் மேல் ஆகுது. காலையிலேயே ஐந்தரை மணிக்கு முன்னாடியே வெளியாகி இருக்குமே! நீங்க தாமதமாப் பார்க்கிறீங்கனு நினைக்கிறேன். :)
Deleteஇதைப் பாருங்க:
Deletehttp://jeeveesblog.blogspot.in/2016/04/blog-post_13.html
பார்த்தேன், இன்னும் படிக்கலை! :)
Deleteஅறியாத தகவல்கள்! தமிழ்தாத்தாவிற்கு என்னுடைய அஞ்சலிகள்!
ReplyDeleteநன்றி சுரேஷ், அவ்வப்போது தாத்தாவின் நினைவு மஞ்சரியிலிருந்து பகிரலாம் என்று ஓர் எண்ணம்!
Deleteதாத்தாவுக்கு அஞ்சலி புதியவை அறிந்தேன் சகோ.
ReplyDeleteசுவாரசியமான தகவல் தமிழ்த்தாத்தாவுக்க்க பதிவுக்குப் பாராட்டுக்கள்
ReplyDeleteநன்றி ஐயா!
Deleteசுவாரசியமான புதிய தகவல்கள் பல அறிந்தோம் சகோ...நல்லபதிவு...
ReplyDeleteநன்றி துளசிதரன்/கீதா!
Deleteதமிழ்த்தாத்தாவுக்கு அஞ்சலிகள்.
ReplyDeleteநன்றி வல்லி!
Deleteதமிழ்த் தாத்தாவுக்கு எனது அஞ்சலிகள்
ReplyDeleteநன்றி அஜய்!
Deletehttp://www.vallamai.com/?p=32346
ReplyDeleteநன்றி
பெருவை பார்த்தசாரதி