எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, April 27, 2017

தாத்தாவுக்கு அஞ்சலி!

 உ.வே.சா. நினைவு தினம் க்கான பட முடிவு
புறநானூற்றைப் பார்த்து அதன் முகவுரையில் எட்டுத் தொகைகளைப்பற்றி நான் கொடுத்திருந்த செய்திகளைப் படித்து வியப்புற்றார். அதுகாறும் எட்டுத்தொகை நூல்களைப் பற்றிய செய்தி ஒருவருக்கும் விளக்கமாகத் தெரியாமல் இருந்தது. அவற்றில் ஒன்றாகிய பரிபாடலைப் பதிப்பிக்கும் செலவைத் தாமே ஏற்றுக்கொள்வதாக அவர் எழுதினார்.

கடல் கடந்து சென்ற தமிழ்ச் சுவடிகளிலே அரிய நூல்கள் எவையேனும் இருக்குமென்பது என் கருத்து. ஆயிரம் பிரதிகளில் என்ன என்ன நூல்கள் உள்ளனவோவென்று சிந்தித்தேன். என் பிரஞ்சு நண்பர் சில நூல்களின் பெயர்களை எழுதி அனுப்பினார். வில்லைப்புராணம் என்று ஒன்று இருப்பதாக ஒருமுறை எழுதினார். நான் அதைப் பற்றிப் பின்னும் விசாரித்தேன். அவர் அது 494 செய்யுட்களை யுடையதென்றும் இன்ன இன்ன சருக்கங்களையுடையதென்றும் எழுதியிருந்தார். அது மட்டுமா? அந்தப் புத்தகத்தைப் பற்றி நான் கேட்டு எழுதியிருந்த வாக்கியங்களால் எனக்கிருந்த ஆர்வத்தை அறிந்து தம் கைப்பட அந்நூல் முழுவதையுமே எழுதி அனுப்பிவிட்டார்.

ஏட்டுச் சுவடியைப் பார்த்து எழுதுவது எவ்வளவு சிரமமென்பது எனக்கு நன்றாகத் தெரியும். தமிழ்நாட்டில் அங்ஙனம் எழுதக் கூடியவர்கள் மிகச் சிலரே. தமிழ் நூல்களைச் சிரத்தையோடு படிப்பவர்களே அதிகமாக இல்லாதபோது ஏட்டுச் சுவடியைப் படிப்பதாவது! பார்த்து எழுதுவதாவது!

இந்த நிலையில் பாரிஸிலிருந்து கடல் கடந்து வந்த வில்லைப் புராணத்தை நான் புதையலெடுத்த தனம் போலவே கருதினேன். என் நண்பர் அதை எத்தனை சிரத்தையோடு எழுதியிருந்தார்! அதன் தலைப்பில் சிவலிங்கத்தின் உருவமும் நந்தியுருவமும் வரைந்திருந்தார். அப்பால் அந்தப் பிரதியைக் கொண்டு வேறொரு பிரதி எழுதச் செய்து வின்ஸோன் துரைக்கே அவரது பிரதியை அனுப்பி விட்டேன்.

வில்லைப் புராணத்தை அதுகாறும் நான் படித்ததில்லை; கேட்டதுமில்லை. அப்புராண ஏடுகளும் எனக்குக் கிடைக்கவில்லை. படித்துப் பார்த்தபோது அது வில்வவனமென்னும் தலத்தின் புராணமாக அது காணப்பட்டது. வில்வமென்பது வில்லமென வழங்கும். வில்வவனமென்பது வில்லவனம் என்று ஆகி அது மருவி வில்லையாயிற்றென்று தேர்ந்தேன். தமிழ்நாட்டில் எவ்வளவோ வில்வவன ஸ்தலங்கள் இருக்கின்றன. எந்த வில்வவனத்தைப் பர்றிப் பாராட்டுவது அந்நூலென்று எனக்கு விளங்கவில்லை. மேலும் மேலும் விசாரித்துக்கொண்டே இருந்தேன்.

அப்புராணத்திலுள்ள கடவுள் வாழ்த்துச் செய்யுள் ஒன்றிலிருந்து (பாயிரம், 10) அங்கே எழுந்தருளியுள்ள அம்பிகையின் திருநாமம் குயிலம்மையென்று தெரியவந்தது. அப்போது,
"பக்குவமாகக் கவிநூறு செய்து பரிசுபெற
முக்கரணம்மெதிர் பல்காலும் போட்டு முயன்றிடினும்
அக்கட போவெனும் லோபரைப் பாடியலுத்து வந்த
குக்கலையாண்டருள் வில்வ வனத்துக் குயிலம்மையே!"
என்ற தனிப்பாடலும் ஞாபகத்துக்கு வந்தது. அந்தத் தனிப்பாடல் வில்லைப் புராணத்திற்குரிய தலத்தைப் பற்றியதென்று நிச்சயித்தேன். அப்பால் என்னுடைய நண்பர்கள் மூலமாக விசாரித்து வந்தேன். புதுச்சேரிக்கு அருகில் உள்ள வில்வநல்லூர் அம்பிகையின் பெயர் கோகிலாம்பிகை யென்று தெரிய வந்தது. அவ்வூர்ப் புராணம் கிடைக்குமாவென்று தேடச் செய்தேன். நல்லகாலமாகச் சில பிரதிகள் அவ்வூரிலிருந்து கிடைத்தன; அவற்றின் உதவியால், கடல் கடந்து வந்த பிரதியைச் செப்பம் செய்து கொண்டேன்.

அந்தப் புராணம் *வீரராகவரென்னும் பெயருடைய ஒரு புலவரால் இயற்றப் பெற்றது. நல்ல வாக்காக இருந்தது. ஒரு முறை புதுச்சேரிக்குச் சென்றபோது, அதனருகில் வில்வநல்லூர் இருப்பதை அறிந்து அங்கே சென்று ஆலய தரிசனம் செய்தேன். அது மிகப் பழைய தலமாக இருக்கவேண்டுமென்று தோற்றியது. அந்தத் தலத்தைப் பற்றி ஏதேனும் தெரியுமாவென்று பலரை விசாரித்தேன். ஒரு முதிய வீரசைவர், "இது மிகப் பழைய தலம். தேவாரத்தில் வரும் வில்வேச்சரமென்னும் வைப்பு ஸ்தலம் இதுதான்.: என்றார். நான் கேட்டு மிக்க மகிழ்ச்சியுற்றேன்.

வில்வவனத்தைப் பற்றி நான் அறிந்த விஷயங்களை வின்ஸோன் துரைக்குப் பிறகு எழுதினேன். அவர் மகிழ்ச்சியடைந்தார். அவர் தமிழ் இலக்கணமொன்று (Tamil Manual) எழுதினார். அதை எனக்கு அனுப்பினார்.

ஒரு முறை அவர் திருக்குறள், காமத்துப் பாலின் பிரெஞ்சுமொழிபெயர்ப்புப் புத்தகமொன்றை அனுப்பி, "இதனை என் மாணவர் ஒருவர் மொழி பெயர்த்தார். நான் முகவுரை எழுதியிருக்கிறேன்." என்று எழுதினார். தமிழாராய்ச்சியாளராக இருப்பதோடு தமிழ்ப் போதகாசிரியரகவும் அவர் இருப்பதை அப்போதுதான் உணர்ந்தேன். தம்முடைய மாணாக்கரொருவர் புதுச்சேரிக்கு வந்திருக்கிறாரென்றும் என்னைப் பார்க்க வருவாரென்றும் எழுதினார். அம்மாணாக்கர் பெயர் பொண்டெனூ'(Marquis De Barrique 'Fontainieu) என்பது.

1902-ம் வருஷம் அம்மாணாக்கர் இந்நாட்டில் நடைபெற்ற கீழ்நாட்டுக் கலைஞர் மகாசபை'(Orientalists' 'Congress)யின் பொருட்டு வந்திருந்தார். அவர் கும்பகோணத்தில் என் வீட்டை விசாரித்துக்கொண்டு வரும்போது போலீஸார் அவரை வேற்று நாட்டு ஒற்றரென்றெண்ணிப் பிடித்துப் பாதுகாப்பில் வைத்துவிட்டார்கள். அது போயர் யுத்தம் நடந்து கொண்டிருந்த காலம். சிறைப்பட்ட பிரஞ்சுக்காரர் அக்காலத்தில் கும்பகோணத்தில் ஸப் கலெக்டராக இருந்த ஸ்ரீமான் வைபர்ட் துரையென்பவருக்கு ஒரு கடிதமெழுதித் தாம் இன்னாரென்பதையும் தாம் வந்த காரியம் இன்னதென்பதையும் தெரிவித்தார். அவர் பிரெஞ்சு பாஷை தெரிந்தவர். கடிதம் கண்ட உடனே அவரே நேரில் வந்து பிரெஞ்சுக் கனவானை விடுவித்துத் தம் விருந்தினராக இருக்கச் செய்தார்.

அப்பால் பொண்டெனூ சிலருடன் என்னுடைய வீட்டிற்கு வந்தார். ஜூலியன் வின்ஸோனைப் பற்றி அவர் மிகவும் மதிப்பாகப் பேசினார். என்னிடம் அவ்விருவர்க்கும் உள்ள பேரன்பு அவருடைய சம்பாஷணையால் விளங்கியது.

நான் என் வீட்டின் மேலே ஒரு கொட்டகையை அமைத்துக்கொண்டு அங்கே என் ஆராய்ச்சிகளை நடத்திவந்தேன். பொண்டெனூ வந்தபோது என் மேல் வெயில் அடித்துக்கொண்டிருப்பதைப் பார்த்தார்; அவர் மேலும் அடித்தது. அவர், "இந்த மாதிரி இடத்தில் இருக்கிறீர்களே! வேறு நல்ல இடத்தில் இருந்து வேலை செய்யக் கூடாதா?" என்று கேட்டார். நான், "என்னுடைய நிலைக்கு இதுதான் முடியும். இந்தத் தேசத்தில் இந்த நிழல் கூட இல்லாமல் கஷ்டப்படும் வித்துவான்கள் எவ்வளவோ பேர்கள் இருக்கிறார்கள். என் இளமையில் மரத்தடியிலும் வீட்டுத் திண்ணையிலும் இருந்து படித்து வந்த மகாவித்துவான்களைப் பார்த்திருக்கிறேன்." என்றேன். இவ்விஷயம் அவருக்கு மிகவும் புதுமையாக இருந்தது. அவரோடு நெடுநேரம் பேசினேன். தாம்போகும் மகாசபையில் ஏதேனும் ஒரு பழைய தமிழ் நூலைப் பற்றிய கட்டுரை ஒன்றைத் தாம் வாசிக்க விரும்புவதாகவும், அதற்கேற்ற பழைய நூற்பிரதி ஒன்று உதவினால் நலமாக இருக்குமென்றும் கூறினார். வெளிப்படாமல் இருந்த பழைய காஞ்சிப் புராணத்தை நான் தருவதாக ஒப்புக்கொண்டேன். அவர் தம் செலவில் அதன் பிரதி ஒன்றை எழுதச் செய்து கொடுத்தால் அனுகூலமாக இருக்குமென்று சொன்னார். அப்படியே செய்வதாக நான் கூறினேன். அப்பால் அவர் தஞ்சை சென்று அங்கிருந்து எனக்கு ஒரு கடிதம் எழுதினார். அது வருமாறு:-

தஞ்சாவூர்,
6 அக்டோபர், '02.
மகாஸ்ரீஸ்ரீ சாமிநாதய்யரவர்களுக்கு அனேக வந்தனம்.

நான் கும்பகோணத்தை விட்டுப் புறப்படும்போது உங்களுக்கு விடுமுறை நாள் என்று கேள்விப்பட்டேன். ஆகையால் தங்களைச் சிரமப் படுத்த எனக்கு மனதில்லை.

மகாஸ்ரீ கலெக்டர் வீட்டில் நான் விருந்துண்ணும்போது உங்களைக் கீர்த்தியால் அறிந்து அதிக மதிப்பு வைத்திருக்கும் கலெக்டர் துரையவர்களைத் தாங்கள் எனக்குக் காட்டிய பழைய காஞ்சிப் புராணத்தை என்னுடைய செலவில் காபியெடுக்கத் தங்களைக் கேட்கும்படி பிரார்த்தித்துக்கொண்டேன். நான் அந்தப் புராணத்தை அச்சிட்டு வெளிப்படுத்த மாட்டேனென்கிற நம்பிக்கை தங்களுக்கு இருக்கலாம்.

அதின் சாராம்சத்தை அறிந்து கீழ்நாட்டுப்பாஷைகளை ஆதரிக்கும் சங்கத்துக்கு (Orientalists' Congress) எழுத எண்ணமே தவிர வேறு எண்ணங் கிடையாது. இந்த அருமையான அச்சிடாத புஸ்தகத்தைத் தாங்கள் கஷ்டப்பட்டுக் கண்டு பிடித்தீர்களென்றும் அதின் அசல் தங்களிடத்தில் இருக்கிறதாகவும் வெளிப்படுத்துவேன்.

நான் தங்கள் சினேகிதரும் என் உபாத்தியாயருமாகிய மகாஸ்ரீ வின்ஸோன் துரை(M.Vinson) பேரைச் சொல்லித் தங்களைப் பார்க்க வந்தபோது என்னை எவ்வளவு அன்பாய் அங்கீகரித்தீர்கள்! என்றால் தங்களை யான் கேட்கும் புராணத்தின் காபியைத் தருவீர்களென்று நம்புகிறேன்.

சாஸ்திரங்களை ஓங்கச் செய்யவும் அழகிய தமிழ்ப்பாஷையின் பெருமையை வெளிப்படுத்தவுமே இந்த உபகாரத்தைத் தங்களிடம் கேட்கிறேன்.
தங்கள் அபிமானத்தை எதிர்பார்க்கும்
Marquis De Barrique Fontainieu

நான் மதுரை, இராமேஸ்வரம் போய்த் திரும்புகையில் கும்பகோணம் வருகிறேன். தாங்கள் எனக்கு எழுத வேண்டுமானால் புதுச்சேரிக்குக் கடிதம் எழுதவும். அங்கிருந்து எனக்கு வந்து சேரும்.

அவர் விரும்பியபடி பழைய காஞ்சிப் புராணத்தைப் பிரதி செய்ய இயலவில்லையாதலின் என்னிடமுள்ள காகிதப் பிரதியையே அனுப்பினேன். அவர் அதை உபயோகித்துக்கொண்டு எனக்குத் திருப்பி அனுப்பிவிட்டார்.

அவர் வந்து என்னைப் பார்த்ததையும் காஞ்சிப் புராணம் பெற்றது முதலியவற்றையும் தம்முடைய ஆசிரியராகிய வின்ஸோன் துரைக்கு எழுதி யிருந்தார். அவற்றை அறிந்த அவ்வாசிரியர் எனக்குத் தம் மாணாக்கரைப் பற்றி எழுதினார்.

ஸ்ரீபொண்டெனூ தம் கடிதத்தில், 'உங்களைக் கீர்த்தியால் அறிந்து மதிப்பு வைத்திருக்கும் கலெக்டர் துரையவர்கள்' என்று குறிப்பித்திருந்தார். அதை நான் முதலில் நன்றாகக் கவனிக்கவில்லை. ஆனால் இரண்டு மாதங்களுக்குப் பிறகு 1903-ம் வருஷம் ஜனவரி மாதம் தஞ்சாவூர்க் கலெக்டரிடமிருந்து ஏழாம் எட்வர்ட் மன்னர் முடிசூட்டு விழாவின் சம்பந்தமாக நடக்கும் தர்பாருக்கு வரும்படி எனக்கு அழைப்புக் கடிதம் வந்தது. நான் போனேன். அப்போது அரசாங்கத்தார் நான் பழைய ஏட்டுச் சுவடிகளை ஆராய்ந்து வருவதை நன்கு மதித்து ஒரு நன் மதிப்புப் பத்திரம் (Certificate of merit in recognition of researches and work in connection with ancient Tamil manuscript) அளித்தனர். அதனைக் கலெக்டர் துரை வழங்கினார். பொண்டெனூ என்னைப்பற்றிச் சிறப்பித்துப் பேசியதன் விளைவென்றே நான் அதனைக் கருதினேன். எனக்கு அரசாங்கத்தார் முதன்முறையாகத் தந்த அந்தச் சிறப்பை நன்றியறிவுடன் ஏற்றுக்கொண்டேன்.

எதிர்பாராதபடி இவ்விரண்டு பிரெஞ்சு நண்பர்களுடைய நட்பு எனக்குக் கிடைத்தது. அவர்களிடமிருந்து 1910-ம் ஆம் வருஷத்திற்குப் பின் எனக்குக் கடிதம் கிடைக்கவில்லை. அவர்களைப் பற்றி அறிந்து கொள்ளவும் இயலவில்லை. ஆனாலும் வில்லைப் புராணத்தையும், பழைய காஞ்சிப் புராணத்தையும் பார்க்கும்போதெல்லாம் பிரெஞ்சு தேசத்துத் தமிழாசிரியரையும், தமிழ் மாணவரையும் நினைக்கிறேன். அவ்விரண்டு நூல்களுள் காஞ்சிப் புராணம் இன்னும் வெளிப்படவில்லை.

ஜூலியன் வின்ஸோன் இப்பொழுது இருந்தால் அதனை வெளிப்படுத்த வேண்டுமென்று நூறு கடிதங்க ளாவது எழுதியிருப்பார். அவர் இல்லை. ஆனால் அவர் அன்போடு எழுதிய கடிதங்கள் இருக்கின்றன. அவர் பழைய அன்பை நினைவூட்டும் வில்லைப்புராணம் வில்வவனப் பெருமையைக் காட்டிலும் அதிகமாக வின்ஸோன் துரையின் தமிழன்பை அறிவுறுத்திக்கொண்டிருக்கிறது.

**********************************************************************************

தமிழ்த்தாத்தாவின் நினைவு தினம் 28-4-17. தாத்தாவையும் அவர் தமிழுக்குச் செய்த தொண்டையும் நினைவு கூர்வோம்.  அவருடைய நினைவு மஞ்சரி பகுதி ஒன்றிலிருந்து ஓர் கட்டுரையின் சில பகுதிகளை இங்கே படிக்கலாம். இதிலிருந்து தாத்தாவின் புகழ் எவ்வளவு பரந்து விரிந்திருந்தது என்பதையும் அப்படி இருந்தும் அவர் வாழ்ந்த எளிமையான வாழ்க்கையையும் அறிய முடிகிறது.

Tuesday, April 25, 2017

Pink (பிங்க்)

pink hindi movie க்கான பட முடிவு

தலைநகர் தில்லியில் பெண்களுக்கு நடக்கும் பாலியல் வன்முறைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதும், அதற்கு ஆணாதிக்க மனப்பான்மையே காரணம் என்பதையும் தெள்ளத் தெளிவாக எடுத்துச் சொல்லும் ஓர்படம் "பிங்க்". அமிதாப் பச்சன் உடல் நிலை, மனநிலை சரியில்லாதவராக வருகிறார். தொடர்ந்து மருந்துகள் சாப்பிட்டால் மட்டுமே நிகழ்காலச் சூழ்நிலைகளுக்கு அவரால் வர முடியும். இதில் மரணத்தை எதிர் நோக்கி இருக்கும் அவர் மனைவி சாரா! ஆனால் அவர் உண்மையில் ஒரு பிரபலமான வக்கீலாக இருந்திருக்கிறார்.

உடல்நிலை, மனநிலை, குடும்பச் சூழ்நிலை மற்றும் வயது காரணமாகத் தொழிலைத் தொடராமல் ஓய்வில் இருக்கும் அமிதாப் பச்சன், பாதிக்கப் பட்ட மூன்று பெண்களுக்காகத் தன் வக்கீல் தொழிலை மீண்டும் தொடர நேரிடுகிறது. தற்காலப் பெண்களின் சுதந்திரப் போக்கும் அவர்கள் தங்கள் சுயத்தை நிரூபிக்கப் போராடுவதும் கதையின் முக்கியக் கரு. அது எப்படி ஆணாதிக்கப் பேர்வழிகளால் சீரழிக்கப்படுகிறது, அவர்கள் இப்படிப் பட்ட பெண்களை எப்படி நடத்துகிறார்கள் என்பது அமிதாப் வாயிலாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அமிதாபின் நடை, உடை, பாவனைகள் அனைத்தும் இந்தக் கதைக்குப் பொருந்தும்படி திட்டமிடப்பட்டிருக்கிறது. அதை நன்றாக உள்வாங்கிச் செய்திருக்கிறார் அமிதாப்.

pink hindi movie க்கான பட முடிவு

படத்தில் நீதிமன்றக் காட்சிகள் தான் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவற்றை விடாமல் தொடர்ந்து பார்க்க வேண்டும்.  அரசு தரப்பு மற்றும்  உண்மையான குற்றவாளியான ராஜ்வீர் சிங்கின் வக்கீலாக வருபவர் புதுமுகம் (எனக்கு) பியூஷ் மேஹ்ரா என்பவர் அருமையாகக் கூண்டில் இருப்பவர்களிடம் விசாரணை செய்கிறார். ராஜ்வீர் சிங்காக நடிப்பவர் பிஷன் சிங் பேடியின் மகன் அங்கத் பேடியாம். ஆன்டிரியாவாக வடகிழக்கு மாநிலப் பெண் ஆன்டிரியாவே நடித்துள்ளார். ஆனால் யாரும் நடிக்கவில்லை. வாழ்ந்து காட்டி இருக்கின்றனர்.

கதை அமைப்பு, காட்சி அமைப்பு, ஒளிப்பதிவு போன்றவை அருமையாக அமைந்து விட்டது. நீதிமன்றக் காட்சிகளில் மனம் ஒன்றிப் போய்விடுகிறோம்.  உண்மையில் படத்தில் நீதிபதி தீர்ப்புச் சொல்கையில் குற்றம் இழைத்த ஆண்களுக்கு ஆதரவாக இருக்கும்படி தான் அமைத்திருக்கிறார்கள். ஆனால் பின்னால் பெண்கள் மற்றும் மற்ற ரசிகர்களின் மனம் புண்படக் கூடாது என்பதால் கதைப் போக்கு அமிதாப் வெற்றி பெறுவதாகவும் பெண்களுக்கு வெற்றி கிடைப்பதாகவும் மாற்றப்பட்டிருக்கிறது.  மாற்றவில்லை எனில் இத்தகைய வெற்றி படத்துக்குக் கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே!

pink hindi movie க்கான பட முடிவு

சமூக நீதியைப் போதித்திருப்பதற்காக இந்தப்  படம் தேசிய விருது பெற்றிருக்கிறது.  ராஜஸ்தான் மாநிலக் காவல் துறையினருக்கு இந்தப் படத்தைச் சிறப்புக் காட்சியாகத் திரையிட்டுப் பார்க்க வைத்துப் பெண்களின் உரிமைகளையும், கௌரவத்தையும் பாதுகாப்பதோடு அல்லாமல் அவர்களுக்கான நீதியையும் சரியான முறையில் பெற்றுத் தரவேண்டும் என்பதை வலியுறுத்தி இருக்கின்றனர்.  குடியரசுத் தலைவர் மாளிகையிலும் நியூயார்க் ஐநாவிலும் சிறப்புக்காட்சியாகத் திரையிடப் பட்டிருக்கிறது. படத்தின் கதையை இங்கே விவரிக்கவில்லை. (நெ.த. கோவிச்சுக்கறாரே!)  :D நீங்களே நேரில் பார்த்துக்குங்க!

ஶ்ரீராம், படம் பார்த்து விமரிசனம் எழுதியாச்சு!

Friday, April 21, 2017

என்னோட பெயரும் வந்திருக்கே! :)

என்னோட பெயரும் அச்சில் (ஹிஹிஹிஹி) வந்திருக்கு. மே 5 ஆம் தேதி "தீபம்" இதழில் நான்   பஹுசரா மாதா  வைப் பற்றி எழுதிய பதிவைச் சுருக்கமாக அரைப்பக்கத்துக்குப் போட்டிருக்கார் இளைய நண்பர் செங்கோட்டை ஶ்ரீராம் அவர்கள். உடனே தகவல் தெரிவிக்க வேண்டி என்னை அலைபேசியில் தொடர்பு கொண்டிருக்கிறார். நான் அம்பேரிக்காவில் இருப்பது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. நானும் சொல்லவில்லை! :( பின்னர் மெசஞ்சர் மூலம் செய்தியைத் தெரிவித்து விட்டு வாட்சப்பின் மூலம் அந்தப் பக்கத்தை ஸ்கான் செய்து அனுப்பி உள்ளார்.

 அடுத்ததாக ஓர் இனிய அதிர்ச்சி மார்ச் 22-3-17 தேதியிட்ட குமுதத்தில் எழுத்தாளர் சாரு நிவேதிதா அவர்கள் அக்கார அடிசில் பற்றிக் குறிப்பிட்டு விட்டு அதன் செய்முறை பற்றி விவரிக்கையில் நான் மரபு விக்கியில் எழுதிய அக்கார அடிசில் குறிப்பை என் பெயருடன் பகிர்ந்திருக்கிறார். அதை எனக்கு அனுப்பி வைத்தது நம்ம ஏடிஎம் என்னும் "அப்பாவி தங்கமணி"! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், கட்டுரையை முழுசும் கொடுக்கலை. என்னோட பெயரை அவர் குறிப்பிட்டிருக்கும் இடத்தின் பக்கத்தை மட்டும் ஸ்கான் செய்து அனுப்பி உள்ளார். ஆக மொத்தம் என்னோட பெயரும் அச்சில் வந்து நானும் பிரபலமான எழுத்தாளியா ஆயிட்டேன்!  :P:P:P:P:P:P:P:P  (எழுதிட்டாலும்) க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அடைப்புக்குறிக்குள்ளாக என்னோட ம.சா.ங்க. ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கு! :)


இதை ரகசியமா வைச்சுக்கணும்னு தான் நினைச்சுட்டு இருந்தேன். அப்புறமா என்னமோ தோணித்து! போட்டுட்டேன். :) ஆனாலும் கொஞ்சம் வெட்கம் , கொஞ்சம் தயக்கம்! :))))

Sunday, April 16, 2017

குற்றம் 23

"குற்றம் 23" என்னும் படத்தைத் தற்செயலாகப் பார்க்க நேரிட்டது. நல்லவேளையா படம் ஆரம்பிச்சுக் கொஞ்ச நிமிடங்களிலேயே பார்க்க உட்கார்ந்துட்டேன். தொடர்ந்து (நான் மட்டும்) பார்த்து முடிச்சேன்.

 குற்றம் 23 திரைவிமர்சனம் க்கான பட முடிவு

நல்ல அருமையான கருத்துள்ள திரைக்கதை. நடிகர்களில் விஜய்குமாரைத் தவிர மத்தவங்களைத் தெரியலையேனு நினைச்சால் உதவி கமிஷனர் "வெற்றி மாறன்" பாத்திரத்தில் நடிச்சிருப்பது விஜய்குமாரின் மகன் அருண் விஜய் என்று பையர் சொன்னார். அபாரமான நடிப்பு! அடக்கமான நடிப்பு! வெகு இயல்பாக உதவிக் கமிஷனராக வாழ்ந்தே காட்டி இருக்கார்னு சொல்லலாம். கதை குழந்தை இல்லாத் தம்பதிகளை வைத்து அமைக்கப்பட்டிருந்தாலும் இதை ஓர் திகில் படமாகவே எடுத்திருக்கிறார்கள். கடைசி வரை விறுவிறுப்பாகவும் இருக்கிறது. கடைசியில் கிளைமாக்ஸில் சண்டைக்காட்சி தேவை இல்லை என்பதோடு அது கதைக்குப் பொருந்தவும் இல்லை என்பது என் கருத்து.

ஒரு சர்ச்சின் பாதிரியார் கொலை வழக்கில் ஆரம்பிக்கிறது கதை! அதைப் பற்றி ஓர் போலீஸ் அதிகாரி விசாரணை நடத்துகையில் பிரபல தொழிலதிபரின் மனைவியைக் காணோம்னு போலீஸுக்குப் புகார் வருகிறது. அதைக் குறித்து விசாரிக்கப் போன உதவிக்கமிஷனர் வெற்றி மாறன் பாதிரியார் கொலைக்கும், தொழிலதிபர் மனைவி இறந்ததுக்கும் ஏதோ தொடர்பு இருக்கணும்னு கண்டு பிடிக்கிறார்.  ஆகவே இரண்டு வழக்குகளையும் அவரே விசாரிக்கட்டும் என மேலதிகாரி (விஜயகுமார்) உத்தரவிட அதைத் துப்புத் துலக்கும் வெற்றி மாறனுக்குக் கிடைக்கும் தகவல்கள் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக வருகிறது. தொழிலதிபரின் மனைவி கர்ப்பமாக இருந்திருக்கிறார். கடைசியில் அவர் பிணம் குப்பைக்கிடங்கில் இருந்து கண்டெடுக்கப்படுகிறது.

குழந்தை இல்லாத் தம்பதிகளுக்குச் செயற்கை முறை கருத்தரிப்புச் செய்யும் ஓர் மருத்துவமனை கணவன் ராமகிருஷ்ணன் என்னும் மருத்துவராலும் அவர் மனைவி துளசி என்னும் மருத்துவராலும் நடத்தப்படுகிறது. அந்த மருத்துவமனை நகரிலுள்ள மற்ற மருத்துவமனைகளில் வந்து சிகிச்சை எடுத்துக் கொள்ளும் குழந்தை இல்லாத் தம்பதிகள் பற்றிய தகவல்களைத் திரட்டுகிறது. இதை எல்லாம் பயன்படுத்திக் கொள்ளும் வில்லன் (வம்சி கிருஷ்ணாவாமே, யாருங்க அது புதுசா) அந்தக் குறிப்பிட்ட மருத்துவமனையில் செய்யும் ஓர் செயலால் பாதிக்கப்பட்ட பெண்கள் ஒவ்வொருவராக இறக்கின்றனர். கடைசியில் அங்கே சுத்தி இங்கே சுத்தி நம்ம உதவி கமிஷனரோட அண்ணியும் தூக்குப் போட்டுக் கொள்கிறார். அவர் அண்ணியும் அந்தச் சமயம் மூன்று மாதம் கர்ப்பம்.  இன்னொரு இடத்தில் ஓர் அரசியல் தலைவரின் மருமகளும் கர்ப்பம் தரித்து வளைகாப்புப் போடும்போது கழிவறையில் தற்கொலை செய்து கொள்கிறாள். இந்த மூன்று கொலைக்கும் தொடர்பு இருக்க வேண்டும் என்று வெற்றி மாறனுக்குத் தோன்றுகிறது.

குற்றம் 23 திரைவிமர்சனம் க்கான பட முடிவு

வெற்றிமாறன் முதல் முதல் சர்ச்சில் நடந்த கொலையை விசாரிக்கப் போன இடத்தில் தென்றல் என்னும் குழந்தைகள் காப்பகத்தில் வேலை செய்யும் பெண் இருந்ததால் அவளைச் சந்திக்கச் செல்லும் உதவிக் கமிஷனர் வெற்றிமாறன் நாளாவட்டத்தில் தென்றலைக் காதலிக்கத் தொடங்குகிறார். இது வீட்டுக்கும் தெரிய வருவதால் வெற்றிமாறனின் அண்ணியோடும் தென்றல் (மஹிமாவாம் நடிகை பெயர்) பழகத் தொடங்க, திடீர்னு அண்ணி இறந்ததைப் பற்றி வருந்தும் வெற்றிமாறனிடம் தென்றல் தன் தோழி மூலம் ஓர் உண்மை தெரிந்ததாகச் சொல்கிறார். என்னவென்று கேட்கும் வெற்றிமாறனிடம் அவர் அண்ணனுக்குக் குழந்தை பெற்றுக்கொள்ளும் தகுதி இல்லை என்றும் அவர் அண்ணி வயிற்றில் வளர்ந்து வந்தது அவர் அண்ணாவின் குழந்தை இல்லை என்றும் அண்ணிக்கு வேறு ஏதேனும் தொடர்பு இருக்குமா என்று சந்தேகப்படுவதாகவும் சொல்கிறார். கோபம் கொண்ட வெற்றிமாறன் தென்றலை அடித்து விடுகிறார். ஆனால் இந்த நூலைப் பிடித்துக் கொண்டு செல்லும் அவருக்குக் கிடைப்பன அதிர்ச்சியான தகவல்கள்.

மருத்துவமனையில் குழந்தை இல்லாத் தம்பதிகளின் பலவீனத்தை எப்படிப் பயன்படுத்திக் கொண்டு அதை வியாபாரம் ஆக்கிக் காசு சம்பாதிக்கிறார்கள் என்று தெள்ளத் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. குழந்தை பிறக்கவில்லை என்றால் ஓர் தம்பதிகளை இந்த சமூகம்  இப்போதும் நடத்தும் முறையும் அதைத் தீர்க்க வேண்டி கோயில் கோயிலாகவும் ஒவ்வொரு மருத்துவமனை வாசலிலும் ஏறி இறங்கும் தம்பதிகள் பலரையும் குறித்தே இந்தக் கதை அமைப்பு! இவற்றை எல்லாம் அருமையான வசனங்கள் மூலம் எடுத்துச் சொல்லி இருக்கிறார் கதாசிரியர் அல்லது இயக்குநர் அறிவழகன்!  இயக்குநருக்குப் பாராட்டுகளைச் சொல்லும் கையோடு பாதிரியார் இறந்து போனதாகச் சொல்லப்பட்ட சர்ச்சைப் படமாக்கி இருப்பதற்கு ஒளிப்பதிவாளருக்கும் பாராட்டுகள்.

சண்டைக்காட்சியெல்லாம் வெகு இயல்பாக இருக்கின்றன. அதிலும் போக்குவரத்து நெரிசலில் சின்னத்திரைக் கதாநாயகியாக வரும் நீலிமா ராணியையும் அவர் கணவராக நடிப்பவரையும் துரத்தும் காட்சி, அவர்கள் காரில் வில்லனின் ஆள் ஏறிக் கொண்டு பணத்தை எடுத்துச் செல்வது, அவர்களைத் துரத்தியும் பிடிக்க முடியாமல் போவது எல்லாம் மிக அழகாக உயிரோட்டத்துடன் எடுக்கப்பட்டுள்ளது.  தர்க்கரீதியாக வில்லன் இந்த அடுத்தடுத்த மரணங்களுக்குச் சொல்லும் காரணம் அவ்வளவு அழுத்தமாக இல்லை.  அவன் ஒரு சைகோ என்பதை ஆரம்பத்திலே காட்டவில்லை என்பது படத்தின் வெற்றி என்று சொல்லலாம்.  ஏனெனில் மரணங்களின் காரணம் தெரிந்த பின்னரே வில்லன் படத்தில் நுழைகிறார். அதுவே ஒரு புதுமை!

அருண் விஜய் நடிச்ச எந்தப்படமும் நான் பார்த்ததில்லை என்றே நினைக்கிறேன். இது தான் முதல் படம். ஒரு போலீஸ் அதிகாரிக்குள்ள மிடுக்கு, உடல்கட்டு, நடிப்பு என்றே தோன்றாதவண்ணம் இயல்பாகச் செய்திருப்பது எல்லாம் சேர்ந்து இது அருண் விஜய்க்கு ஓர் வெற்றிப்படம் என்றே தோன்றுகிறது. தென்றலாக வரும் மஹிமா நடிச்சும் எந்தப் படமும் பார்த்ததில்லை. அவரும் வெகு இயல்பாகவே நடித்திருக்கிறார்.  மற்றபடி உறுத்தாத பின்னணி இசை! பாடல்கள் அதிகம் இல்லை. மரத்தைச் சுற்றி வெள்ளைத் தேவதைகளுடன் ஓடியாடும் காதல் காட்சிகள் இல்லை. நேரிடையாகக் கிட்டே இருந்து சம்பவங்களைப் பார்க்கிறாப் போன்ற உணர்வு. அதோடு குற்றம் 23 என்பதும் கதையின் முக்கியக் கருவைச் சுட்டுகிறது.  23 குழந்தைப்பேறில் முக்கிய அங்கம் வகிக்கிறது.  23+23 முக்கியமானது. ஆகவே நன்கு யோசித்துச் சிறிதும் தவறில்லாமல் அருமையாகக் கதையைத் தயாரித்ததோடு  மட்டுமில்லாமல் படத்தையும் எடுத்திருக்கும் குழுவினருக்கு மனமார்ந்த பாராட்டுகள்.