எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, September 19, 2019

விதை விநாயகர்!

விநாயகர் விசர்ஜனம் க்கான பட முடிவு


என்னடா, பிள்ளையார் சதுர்த்தி முடிஞ்சு இத்தனை நாட்கள் ஆகிவிட்டனவே, இப்போப் போய் விதை விநாயகர் பற்றிச் சொல்றாளேனு பார்க்கிறீங்களா? அதற்குக் காரணம் 2 நாட்கள் முன்னர் முகநூலில் பார்த்த ஆதி வெங்கட்டின் பழைய நினைவுகளின் மீள் பதிவு. அதில் அவர் தான் விதை விநாயகர் வாங்கித் தொட்டியில் கரைத்ததாகச் சொல்லி இதன் மூலம் சுற்றுப்புறச் சூழல் பாதிக்காது என்றும் சொல்லி இருந்தார்.  அங்கேயே அவரிடம் சொல்லி இருக்கலாம். ஆனால் அனைவருக்கும் தெரியணுமே! முக்கியமாய்க் கல்யாணி சங்கர் போன்ற சில பெரியவர்களும் இந்த மாதிரியான ஓர் விஷயத்தைப் பெருமையாகக் கருதுகின்றனர். விநாயகரைக் கரைப்பதன் தத்துவமோ உண்மையான நோக்கமோ இல்லாமல் இம்மாதிரிச் செய்வது சரியில்லை என்பதே என் எண்ணம்.  இப்போது இம்மாதிரியான விநாயகர் சிலைகளை அதிக விலைக்கு விற்கவும் வியாபாரத்தைப் பெருக்கவும் விநாயகர் சிலைகள் செய்பவர்கள் கண்டு பிடித்த ஓர் தந்திரமான யுக்தி எனலாம்.

விநாயகரை ஏன் நதி, குளங்களில் கரைக்கிறோம்? இதை முதலில் தெரிந்து கொண்டு பின்னர் ஏன் விதை விநாயகரைத் தொட்டிகளில் கரைக்கக் கூடாது என்று பார்ப்போமா? நம் நாட்டில் தென்மேற்குப் பருவ மழை தான் எல்லா ஆறு, நதிகளிலும், ஏரிகள், குளங்களிலும் நீரைக் கொண்டு வரும் சக்தி உள்ளது. இந்தப் பருவம் தான் நம் நாட்டின் உணவு உற்பத்தியையும் நிர்ணயிக்கிறது. இந்த மழை பெய்து கொண்டிருக்கையில் அநேகமாக எல்லா ஆறுகளும் பூரணப் பிரவாகம் எடுத்து ஓடும். அதி வேகமாகவும் ஓடும். அப்போது நதி நீரின் ஓட்டத்தில் ஆற்றில் உள்ள மணலும் அடித்துக் கொண்டு சென்றுவிடும். நீர் ஆற்றில் தங்காமல் ஓடோடி விடும் சாத்தியங்கள் உண்டு. பெய்யும் மழையால் வந்த நீரெல்லாம் தங்காமல் ஓடிக் கடலை அடைந்து விட்டால் நிலத்தடி நீர் ஆற்றைச் சுற்றி உள்ள ஊர்களிலும், அதன் மூலம் மற்றக் குளங்கள், ஏரிக்கரைகள் உள்ள ஊர்களிலும் குறைய ஆரம்பிக்கும்.


நீர் ஆற்றிலோ குளங்களிலோ ஏரிகளிலோ தங்க வேண்டுமெனில் அடியில் நீரைத் தேக்கி நிற்கும் சக்தி வாய்ந்த ஒரு பொருள் தேவைப்படும். அது தான் களிமண்! இந்தக் களிமண் ஆற்று நீர் முழுதும் ஓடாமல் தடுக்கும் சக்தி வாய்ந்தது. நன்றாக யோசித்துப் பாருங்கள். ஒவ்வொரு வருஷமும் ஆடி மாதம் அல்லது ஆவணி மாதங்களிலேயே பெரும்பாலான பண்டிகைகள் வருகின்றன. நீர் வளம் மட்டும் காரணமில்லை. நீரைச் சேமித்து வைக்கவுமே இத்தகைய பண்டிகைகள். அதிலும் விநாயக சதுர்த்தி அன்று களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகரை வணங்கிய பின்னர் ஒவ்வொரு வீட்டிலும் அவற்றை ஆற்றிலோ, குளங்களிலோ, ஏரிகளிலோ அல்லது வீட்டுக் கிணறுகளிலோ கரைத்தால் தான் நீர் தேங்கி நின்று நிலத்தடி நீர் மட்டம் உயரும். ஒவ்வொரு ஊரிலும் விநாயகரை வணங்கிய ஒவ்வொரு குடும்பத்தினரும் இம்மாதிரிச் செய்தால் அதன் மூலம் அந்த அந்தச் சுற்று வட்டாரங்களில் உள்ள ஆறுகள், ஏரிகள், குளங்களின் நிலத்தடி நீர் மட்டம் உயர வழி கிடைக்கும்.


ஒவ்வொரு வீட்டிலும் இப்படிக் களிமண்ணால் ஆன விநாயகர் சிலைகளைக் கரைப்பதன் மூலம் நீர் பூமிக்குள் உறிஞ்சப்படும். அதுவும் பிள்ளையார் சதுர்த்தி அன்றே கரைப்பதில்லை என்பதையும் கவனியுங்கள். மூன்றாம் நாள் தான் கரைப்போம். அதற்குள் களிமண் காய்ந்திருக்கும் அல்லவா? காய்ந்த களிமண் நீரில் அடித்துச் செல்ல முடியாது. அங்கேயே தங்கும். விநாயகரைக் கரைக்கையில் மண் அங்கேயே நிலத்தில் படியும். ஆனால் இது களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு மட்டுமே பொருந்தும். இப்போதைய ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸ் சிலைகளுக்கோ மற்றச் செயற்கைச் சாயம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளுக்கோ சற்றும் பொருந்தாது.

மக்களின் எதிர்காலத்துக்காகப்பயன்படுத்தப்பட்ட ஒரு திட்டம் இப்போது முற்றிலும் சிதைந்து போய்விட்டது. இதைச் சாக்காக வைத்துக் கொண்டு தான் விதை விநாயகரைக் கொண்டு வந்திருக்கிறார்களோ எனத் தோன்றுகிறது. களிமண்ணில் செய்யப்பட்ட விநாயகர் சிலைக்குள்ளாகப் பிள்ளையார் அச்சில் வார்க்கும் முன்னர் அவற்றில் பூச்செடிகளின் விதைகளையோ அல்லது காய்கறிகளின் விதைகளையோ போட்டு விட்டு விதை விநாயகர் என்னும் பெயரில் விற்பதோடு அல்லாமல் சுற்றுப்புறச் சூழலுக்கும் நல்லது என்கின்றனர். அந்தப் பிள்ளையாரைச் செடிகள் வைக்கும் தொட்டியில் கரைக்கச் சொல்கிறார்கள். அதன் மூலம் விதைகள் தொட்டியில் விழுந்து முளைக்கும் என்பதோடு பிள்ளையாரை வைத்து வணங்கியதிலும் ஓர் அர்த்தம் இருக்கும் என்பதே அவர்கள் சொல்வது.

தொட்டியில் விநாயகரைக் கரைத்து அதன் உள்ளே இருக்கும் விதைகளை நட்டால் தான் நன்மை தருமா? நேரடியாகவே தொட்டிகளில் விதைகளைப் போட்டு வளர்க்கலாமே! பிள்ளையாரைக் கரைத்து அதன் மூலம்  விதைகளைப் போட்டு முளைக்க வைக்கும் இது சாஸ்திர விரோதம் என்றால் ஏற்கக் கூடியவர்கள் யாரும் இல்லை. விநாயகரைக் கரைப்பதன் உள்ளார்ந்த பொருளே இங்கே அடிபட்டுப் போகிறது. மேலும் விநாயகரை விஸர்ஜனம் செய்வது என்றே சொல்லுகிறோம். இந்த விஸர்ஜனம் என்னும் சொல்லுக்கு முற்றிலும் கரைத்துவிடுவது என்றே பொருள். அதைப் பார்த்தால் முற்றிலும் கரைக்கப்பட்ட விநாயகர் சிலையிலிருந்து விதைகளைப் போட்டு மீண்டும் முளைக்க வைப்போம் என்பது சற்றும் பொருந்தாத ஒன்று. விஸர்ஜனம் செய்தாகி விட்டது எனில் அங்கே அப்புறாமா ஏதும் மிச்சம் இல்லை என்பதே உண்மையான பொருள். முற்றிலும் கரைக்கப்பட்ட விநாயகர் சிலையில் இருந்து செடிகள் முளைப்பது என்பது சாஸ்திர விரோதம் மட்டுமில்லாமல் விநாயகர் வழிபாட்டின் அர்த்தமே இல்லாமல் போய்விடும்.

44 comments:

  1. இந்த பிளாஸ்டர் ஆஃப் பாரீஸ் விநாயகர் சிலைகளை எப்போதுதான் தடை செய்வார்களோ.

    பக்தியைவிட அரசியலும் ஆர்ப்பாட்டமும்தான் மிகுந்திருக்கிறது என்பது என் அபிப்ராயம்

    ReplyDelete
    Replies
    1. வாங்க நெல்லைத்தமிழரே, ப்ளாஸ்டர் ஆஃப் பாரீஸுக்குத் தடை வந்தால் தான் இது நிற்கும். அரசியல், ஆர்ப்பாட்டம் என்பதை விட ஈகோ, நான் என்னும் அகங்காரமே இதில் தெரிகிறது.

      Delete
    2. //பாரீஸ் விநாயகர்//
      இதென்ன புதுசு புதுசாப் பெயர் சூட்டுறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. வருங்கால சமய சிலபஸ் இல் இதெல்லாம் வரும்போல இருக்கே.. நல்லவேளை மீ தப்பிச்சுட்டேனே விதை விநாயகரே:).

      Delete
    3. அமேசானில் ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸ் விற்பனை இருக்கு. போய்ப் பாருங்க அதிரடி, வெள்ளை மாளிகை, சரித்திரப் புகழ் அதிரா!

      Delete
  2. நல்ல தகவல்கள்... மாற்றம் ஒன்று மட்டுமே மாறாதது - சில வருடங்களில் இப்படிச் செய்வது தான் மூதாதையர் வழி என்று சொன்னாலும் சொல்லலாம்.

    பண்டிகைகள் எதற்கு கொண்டாடப்பட்டதோ அந்த விஷயங்கள் மறந்து கொண்டே வருகிறது. சொல்லித் தர பெரியவர்களும் தயாரில்லை!

    சுட்டி அனுப்பி இருக்கிறேன். :)

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட், சரியான புரிதலுக்கு முதலில் நன்றி. சுட்டி ஏதும் வரவில்லை. மின்னஞ்சலில் அனுப்பி இருக்கீங்களோ?

      Delete
    2. ///சுட்டி ஏதும் வரவில்லை. மின்னஞ்சலில் அனுப்பி இருக்கீங்களோ?//
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) எனக்கு டக்கெனப் புரிஞ்சுபோச்சு... பிக்கோஸ் மீ கற்பூரமாக்கும்:)) ஹையோ ஹையோ.. மெயிலில் சுட்டி தேடுறா கீசாக்கா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. அவர் போட்டிருக்கும் ஸ்மைலியே பதில் சொல்லுதே:)) ஹா ஹா ஹா..

      Delete
    3. எனக்கு இன்னமும் புரியலை அதிரடி. வெங்கட் எந்தச் சுட்டியைச் சொல்கிறார்னு புரியலை!

      Delete
    4. ஹாஹா... சுட்டி உங்களுக்கு அனுப்பவில்லை. ஆதி வெங்கட்க்கு அனுப்பினேன். பதிவு படிக்க வேண்டும் என... அதிராவுக்கு இது தான் புரிந்ததா என அவர் தான் சொல்ல வேண்டும்.

      Delete
    5. இதேதான், எனக்கு படிக்கும்ப்போதே புரிஞ்சுபோச்ச்ச்ச் ஹா ஹா ஹா.. ஆதியைப் பற்றிப் பேசியிருக்கிறா கீசாக்கா போஸ்ட்டில், ஆதி இங்கு வருவதில்லை, அப்போ சுட்டி அனுப்பியிருக்கிறேன் என்றால்.. புரியும்தானே ஹா ஹா ஹா கீசாக்கா சூப்பர் மாட்டீஈஈஈஈஈஈஈஈ அம்பேரிக்காவில கால் வச்சதும் வயசாகிட்டுதூஊஊஊஊஊஊஊ:))

      Delete
  3. பிள்ளையாரை ஆற்றிலோ குளத்திலோ கரைப்பதன் தாத்பரியத்தை தெரிந்து கொண்டேன் மாமி..ஆனால் நான் சென்ற வருடம் கரைத்தது களிமண் பிள்ளையாரைத் தான்..கொள்ளிடத்தில் கரைப்பதற்கு பதிலாக பக்கெட் நீரில் கரைத்து செடிகளுக்கு விட்டேன்..விதைப் பிள்ளையார் பற்றி கேள்விப்பட்டிருக்கேனேத் தவிர பார்த்ததில்லை என்பது உண்மை..:)

    ReplyDelete
  4. வாங்க ஆதி, புரிந்து கொண்டதுக்கு முதலில் நன்றி. முகநூலில் உங்கள் பதிவை மட்டும் இல்லை, இன்னும் சிலரின் பதிவுகளில் விதை விநாயகர் பற்றிப் படிக்க நேர்ந்ததும் நீங்களும் விதை விநாயகரைத் தான் சொல்லி இருக்கீங்கனு நினைச்சுட்டேன். மற்றபடி களிமண் பிள்ளையாரைத் தொட்டிகளிலும் கரைப்பது நல்லதல்ல. தொட்டிச் செடிகளுக்குக் காற்று வராமல் தொட்டிகளில் உள்ள சின்னஞ்சிறிய துளைகளைக் களிமண் மூடிவிடும். நாம் ஊற்றும் தண்ணீரும் கொஞ்சம் வெளியேற வேண்டும் என்பதற்காகவே தொட்டிகளில் நுண்துளைகள் இருக்கும். களிமண் பிள்ளையாரை அதில் கரைத்தால் நுண்துளைகள் மூடிக் கொண்டுவிடும். செடிக்கு நல்லதல்ல. திறந்த மைதானம், வீட்டுத் தோட்டம், நீர்க் கால்வாய் போன்றவற்றில் கரைக்க முடியவில்லை எனில் அவற்றில் பிள்ளையாரைத் தூக்கிப் போட்டு விடலாம். தானே கரைந்து விடும்.

    ReplyDelete
    Replies
    1. என்னிடம் தொட்டிச் செடியே கிடையாது...குடியிருப்பில் மண்ணில் ஊன்றியிருக்கும் செடிகளுக்குத் தான் அந்த நீரை விட்டேன்..மண்ணோடு மண்ணாகத் தான் பிள்ளையார் கரைத்த நீர் சேர்ந்தது...இனி அடுத்த வருடமேனும் பிள்ளையார் சதுர்த்தி கொண்டாடுவேன் என்றால் நிச்சயம் நீங்கள் சொன்ன கருத்துகள் நினைவிலிருக்கும்..

      Delete
    2. நல்லது ஆதி, பொதுவாய் நம்மைப் போன்ற குடியிருப்பு வளாகங்களில் இருப்பவர்கள் தொட்டிகளில் தானே செடிகள் வளர்க்க முடியும்! அந்த நினைவில் சொன்னேன். தவறாய் எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என்னும் நம்பிக்கையும் தான் சொல்ல வைத்தது. அடுத்த வருடமேனும் பிள்ளையார் சதுர்த்தி கொண்டாடினால் என்று சொல்லுவது மனதில் வருத்தத்தைத் தருகிறது. நிச்சயமாக நன்றாகக் கொண்டாடுவீர்கள். உறவினர் இறப்பால் பண்டிகை இல்லை என்றாலும் கிருஷ்ணன் பிறப்புக்கும், பிள்ளையார் சதுர்த்திக்கும் வெற்றிலை, பாக்கு, பழங்கள் வைத்துக் கொண்டாடலாம். அன்றாட நிவேதனம் போல் தான் இது. பிள்ளையாருக்கு வழக்கமான கொழுக்கட்டை செய்யாமல் நெய்க்கொழுக்கட்டை பண்ணி நிவேதனம் பண்ணலாம். கூடியவரை பண்டிகையைக் குறைக்கக் கூடாது!

      Delete
  5. விதை விநாயகர்//
    இன்றுதான் முதல் தடவையாக இப்பெயரை அறிகிறேன், இப்படி என்றால் களிமண்ணால் செய்த விநாயகரோ...

    நான் முன்பு அறிஞ்சிருக்கிறேன், இந்த ஆவணி சதுர்த்தியில் விநாயகரை ஏன் ஆற்றில் கரைக்கிறார்கள் என்பதனை. அதனால்தான் இப்படி விநாயகரைக் கரைக்கும் முறை இலங்கையில் இல்லைப்போலும்.

    ReplyDelete
    Replies
    1. விநாயக சதுர்த்திக்கான விநாயகர் சிலைகளே களிமண்ணால் செய்பவை தானே அதிரடி. அந்தப் பிள்ளையாருக்குள்ளே காய்களின் விதைகள், பூச்செடிகளின் விதைகள் போன்றவற்றை வைத்துவிட்டு அவற்றை வீட்டுப் பூச்செடித் தொட்டிகளிலோ, பூமியிலோ கரைத்தால் அந்த விதைகள் முளைக்கும் எனவும், இதனால் சுற்றுச் சூழல் பாதுகாக்கப்படும் என்றும் சொல்லுகிறார்கள். பிள்ளையாரை நதியிலோ, குளத்திலோ, ஏரியிலோ அல்லது கிணற்றிலோ தான் கரைப்பார்கள். விசர்ஜனம் செய்ததில் இருந்து மீண்டும் செடிகள் முளைக்கும் எனச் சொல்லி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் 3 வருஷங்களுக்கும் மேலாக

      Delete
  6. //களிமண்ணில் செய்யப்பட்ட விநாயகர் சிலைக்குள்ளாகப் பிள்ளையார் அச்சில் வார்க்கும் முன்னர் அவற்றில் பூச்செடிகளின் விதைகளையோ அல்லது காய்கறிகளின் விதைகளையோ போட்டு விட்டு விதை விநாயகர் என்னும் பெயரில்//

    இதற்குப் பெயர்தான் வியாபாரம்... இதனால்தான் எப்பவும் சமய அனுட்டானங்களுக்குப் புது முறைகளைக் கையாளாமல் இருப்பது மேல்...

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான். வியாபாரம் என்பதோடு அல்லாமல் பிள்ளையாரைக் கரைப்பதன் அர்த்தமே மாறியும் போய்விடுகிறது.

      Delete
  7. முற்றிலும் உண்மை.  ஆதங்கம் சரியானதே.   அரசியல் காரணங்களுக்காகவும் பெருமைக்காகவும் வர்ணங்கள் சேர்த்த விநாயகர், ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸ் விநாயகர் என சுற்றுச் சூழலைக் கெடுக்கிறோம்.  காரணத்தை விட்டு விட்டு காரியத்தை மட்டும் பிடித்துக் கொண்டு தூங்குகிறோம்.

    ReplyDelete
    Replies
    1. உண்மை ஸ்ரீராம், விநாயக சதுர்த்தி வழிபாடு அரசியலாகத் தான் மாறி விட்டது, உண்மையான மனப்பூர்வமான பக்தியைத் தேடித்தான் பார்க்க வேண்டும்.

      Delete
  8. //காரியத்தை மட்டும் பிடித்துக் கொண்டு தூங்குகிறோம்.//


    தொங்குகிறோம் என்று படிக்கவும்.

    ReplyDelete
    Replies
    1. இம்பொசிஷன் எழுதுங்க. வர வரத் தப்பு நிறையவே வருது. நானும் கண்டுக்காமல் இருந்து பார்த்தேன். :))))))

      Delete
    2. ஹை....  அது எப்படி?  நீங்க கண்டுபிடிக்கும் முன்னாலேயே நானே கண்டுபிடிச்சு சரி பண்ணிட்டேன்.  இம்போசிஷன் கணக்குல வராது.  செல்லாது.

      Delete
  9. சரியான விளக்கம்... அருமையான விளக்கம்...

    ReplyDelete
  10. காரண காரியம் தெரியாமல் செய்து கொண்டு இருக்கிறார்கள். பண்டிகைகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு அர்த்தம் இருக்கிறது.
    ஆடி, ஆவணிகளில் மலை அதிகமாக பெய்யும், அப்போது ஆறுகளில் நீர் வரத்து அதிகம் இருக்கும் புதிதாக நிறை மண் வந்து சேரும், அதை எடுத்து கணபதி சிலை செய்வார்கள். அதை வைத்து சாமி கும்பிட்டு மூன்று ஐந்து நாள் ஆனவுடன் அதில் கொண்டு கரைப்பார்கள்.

    நானும் இந்த கருத்தை முகநூலில் பகிர்ந்தேன் , ராமகிருஷ்ண விஜயம் பத்திரிக்கையில் வந்ததை போட்டு பகிர்ந்து இருந்தேன்.

    எளிமையான பண்டிகை எல்லாம் இப்போது ஆடம்பர விழாவாக நடந்து வருகிறது.

    மதுரை பக்கம் மேலூர் சாலையில் ஒரு பெருமாள் கோவில் இருக்கிறது அதில் ஆற்றிலிருந்து ஒரு பிடி மண்ணை எடுத்து வெளியே போட்டு விட்டு தலையில் நீரை தெளித்துக் கொண்ட பின் தான் இறைவனை வணங்க போக வேண்டும். எடுத்து போட்ட மண்ணே பெரிய மலை போல் உள்ளது.
    அதையும் இரண்டு மூன்று வருடங்களுக்கு முன் முக நூலில் பகிர்ந்து இருந்தேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி, கால் வலி பரவாயில்லையா? உங்களுடைய முகநூல்ப் பதிவை நான் பார்க்கலைனு நினைக்கிறேன். படித்த ஞாபகம் வரலை. பொதுவாகவே நம் மக்கள் புதுமையை விரும்புவதாகச் சொல்லிக் கொண்டு இம்மாதிரியான அசட்டுத்தனங்களைச் செய்கிறார்கள். அக்ஷயத்ரிதியைக்கு நகை வாங்கணும்னு சொல்லி மக்களை ஏமாற்றுவது போல் இந்த விதை விநாயகரும் ஓர் வியாபார தந்திரம்.

      Delete
  11. >>> இப்போது இம்மாதிரியான விநாயகர் சிலைகளை அதிக விலைக்கு விற்கவும் வியாபாரத்தைப் பெருக்கவும் விநாயகர் சிலைகள் செய்பவர்கள் கண்டு பிடித்த ஓர் தந்திரமான யுக்தி..<<<

    இது.. இது தான் உண்மை...

    போலித் தனமான பக்தர்களையே ஊடகங்கள் ஊக்குவிக்கின்றன...

    விசர்ஜனத்தின் உண்மையான தத்துவம் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் எங்கள் ஆசிரியரால் சொல்லப்பட்டது...

    இன்றைக்கு அந்த மாதிரி பள்ளிக் கூடத்தில் ஆசிரியர் விநாயக தத்துவத்தைப் பேசினால் மதத்தைப் பரப்புவதாக போலித் தமிழர்கள் வழக்கு போட்டு விடுவார்கள்...

    இந்த தத்துவங்களையும் மறை பொருள்களையும் மக்களிடையே விதைப்பதில் நாம் தோற்று விட்டோம்..

    இன்றைக்கு சமூக ஊடகங்களின் வழியாக கிருமிகளைப் பரப்புவதையே முழுநேரத் தொழிலாக வைத்துக் கொண்டிருக்கின்றார்கள்...

    என் குடும்பத்தை நான் தான் வழி நடத்த வேண்டும்... 15 ரூபாய்க்கு ஆன்மீகத்தைப் பரப்பும் அச்சு ஊடகங்களும் தெரிந்தும் தவறான தகவல்களைத் தரும் ஒளி ஊடகங்களும் அல்ல...

    ஆனால் நானே காலி டப்பாவாக இருந்தால் - தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் தான்..

    விநாயக சதுர்த்தியின் பேரால்
    இந்து சமயத்தின் சில உதிரி அமைப்புகள் ஏதோ இவர்கள் தான் பிள்ளையாரின் பேரருளைப் பெற்றமாதிரி
    பெரிய பெரிய சுதை வடிவங்களை ஆகமத்துக்கு விரோதமாக அமைப்பதும்
    அவற்றை கேவலமான ஆட்ட பாட்டத்துடன் தூக்கிக் கொண்டு போய் நீர் நிலைகளில் போட்டு அவமதிப்பதும்
    முற்றாக நிறுத்தப்பட வேண்டும்...

    வடநாட்டு வியாபாரிகளால் 90 களில் சென்னையில் பரப்பப்பட்ட மோசமான நிகழ்ச்சி இது...

    இனிமேல்
    அவங்க வந்து அன்னதானம் போடுறாங்க... அதுக்காகவே புள்ளையார் சிலை கட்டணும்..
    - ன்னு கூட ஒரு கோஷ்டி கெளம்பும்...

    இன்னும் சொல்லலாம்... பிறகு பார்ப்போம்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க துரை, நீங்க சொல்லுவது உண்மைதான். விநாயக சதுர்த்தியின் பெயரால் நடக்கும் அட்டூழியங்கள் சொல்லி முடியாது. அதிலும் விஸர்ஜனம் என்னும் பெயரில் நடக்கும் கூத்துக்கள் கண்ணால் பார்க்க முடிவதில்லை.நாம் எடுத்துச் சொன்னாலும் எல்லோரும் புரிந்து கொள்பவர்கள் இல்லை.

      Delete
    2. //இந்து சமயத்தின் சில உதிரி அமைப்புகள் ஏதோ இவர்கள் தான் // - இதைப் பற்றியும் எழுதணும் துரை செல்வராஜு சார்... நம் மண்ணுக்கு அந்நிய வழிபாடுகள் வருவது சரியில்லைதான். இப்போ புதிதாக ஆறுகளுக்கு ஆரத்தி கலாச்சாரம் வரப்போகுது. கன்யாகுமரி பக்கம்லாம் (இன்னும் நிறைய இடங்களில்) வட இந்திய பாணி கோவில்கள். (பயங்கர ஆடம்பரத்தில். தவறில்லை..ஆனால் பாடல் பெற்ற கோவில்களில் கவனிப்பு குறைவு)

      வேறு சில காரணங்களால் இதனைப் பொறுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

      Delete
  12. Plaster of Paris என்பதும் ஒரு வகை இயற்கை தாது உப்பே. Gypsum என்ற உப்பு கூடுதல் உள்ளது. இது உப்பு வயல்களில் உப்பு உண்டாக்கிய பின் கிடைக்கும், இயற்கையாகவும் வெள்ளை களிமண் ஆகவும் கிடைக்கும். calcium sulfate  எனப்படும் இது ஒரு உரமும் ஆகும். எலும்பு முறிவுகளுக்கு போடப்படும் கட்டுக்களில உபயோகிக்கப் படுவது. திருமண் என்றால் நெற்றியில் இட்டுக்கொள்வீர்கள். plaster of paris என்றால் உப்புக் களிமண் என்பீர்கள். தண்ணீரில் கரையும் தன்மை குறைந்தது. 
    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. //https://tinyurl.com/y2hmt2xt//
      திருமண் தயாரிப்பைப் பற்றி இந்தச் சுட்டியில் பார்க்கலாம் ஜேகே அண்ணா. இதற்கும் கரையாத ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸுக்கும் வித்தியாசங்கள் உண்டே!

      Delete
  13. புதுமை என்றுகூறி பலவற்றை மாற்றிவிடுகின்றார்களே.

    ReplyDelete
    Replies
    1. வாங்க முனைவரே, நன்றி.

      Delete
  14. s 2சாஸ்டிர சம்பிரதாயங்களைச் சொல்லிச் செல்லும் உங்களுக்கு பாராட்டுகள்

    ReplyDelete
  15. களி மண்ணால் செய்யப்பட்ட விநாயகரின் தாற்பரியம் தெரிந்து கொண்டோம். நம் ஊரில் இது வழக்கத்தில் இல்லை. மார்கழி சாணிப்பிள்ளையார் மட்டும் கரைக்கப் போடுவார்கள்.

    ReplyDelete
  16. இனிய காலை வணக்கம் கீதாமா.
    களிமண் பிள்ளையாரைத் தவிர வேறெந்தப் பிள்ளையாரும் மனதில்
    லயித்தது இல்லை.
    மிக அரிய உண்மைகளைச் சொல்லி இருக்கிறீர்கள்.
    எங்கள் வீட்டுக்கிணறும் பிள்ளையாரைப் பார்த்து நாட்களாச்சே
    என்று கேட்கிறது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி. விரைவில் உங்க வீட்டுப் பிள்ளையாரும் உங்க கிணற்றில் மூழ்கட்டும். இரண்டு நாட்களாக இங்கே புயல், புயல்னு நேரம் போய் விட்டது. மின்சாரம் வேறே போயிட்டுப் போயிட்டு வந்தது. நம்ம ஊர் ஞாபகம் வந்து விட்டது. உங்க வீட்டில் வேலை நடப்பதால் கூப்பிடவில்லை. நாளைக்கு வாரக் கடைசி விடுமுறை தானே. அப்போப் பேசிக்கலாம்னு இருந்துட்டேன்.

      Delete
  17. வணக்கம் சகோதரி

    அருமையாக விநாயகர் கரைக்கும் முறையில் உள்ள பயன்களை கூறியிருக்கிறீர்கள். விபரங்கள் அறிந்து கொண்டேன்.

    விதை விநாயகர் பற்றி நானும் சமீப காலத்தில் கேள்விபட்டுள்ளேன். அப்போதெல்லாம் விநாயக சதுர்த்திக்கு வெறும் களிமண்ணில் செய்யப்படும் விநாயகரை வாங்கித்தான் பூஜிப்போம். விலையும் கம்மிதான். பூஜை முடிந்து இரண்டொரு நாளில் நாங்கள் அரசமரத்தடி அருகில் இருந்தால் அங்கு கொண்டு வைத்து விடுவோம். அவர் பெய்யும் மழையில் தானாகவே கரைந்து விடுவார். இப்போதுதான் கலர் பூசிய சிலைகள் நிறைய விலைகளில் வந்து விட்டது. அதன் அழகை பார்க்கும் போது கரைக்கவும் மனம் வரவில்லை. ஏதாவது பிரார்த்தனை செய்து அது நடக்கும் வரை கரைக்காமல் இருந்தால் பிரார்த்தனை பலிக்கும் எனவும் சொல்கிறார்கள். ஆண்டுகளாக அப்படியே வைத்திருக்கலாமா எனவும் தெரியவில்லை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா, ஒரு சிலர் இம்மாதிரிப் பிள்ளையார்களைச் சேமித்து வைக்கிறார்கள். நானும் பார்த்திருக்கேன். ஆனால் நாங்க அம்பத்தூரில் இருந்தவரை கிணற்றில் தான் போட்டு வந்தோம். எங்க குடும்பப் பாரம்பரிய விநாயகர் விக்ரஹம் வீட்டுக்கு வந்ததில் இருந்து களிமண் பிள்ளையாரை நம்மவர் வாங்க மறுக்கிறார். எனக்கு அதில் கொஞ்சம் வருத்தம் தான். ஐம்பொன் விநாயகரை வைத்தே வழிபாடுகள் செய்து திரும்ப எடுத்து வைக்கிறோம் சுமார் பத்து ஆண்டுகளாக.

      Delete
  18. விளக்கம் அருமை விநாயகர் வழிபாடு
    அரசியலாக்கப்பட்டு அதனுள் பிள்ளையாரும் சிக்கி விட்டார்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி, ஆமாம். எல்லாமே அரசியல் தான்!

      Delete