எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, October 16, 2020

நவராத்திரி நாயகியர் மற்றும் வழிபாடுகள்!

 நவராத்திரி மூன்று வகைப்படும். அவற்றில் சாரதா நவராத்திரி, வசந்த நவராத்திரி, ஆஷாட நவராத்திரி என 3 வகைகள் உண்டு. ஆஷாட நவராத்திரி என்பது ஆடி மாதம் அமாவாசையிலிருந்து அடுத்து வரும் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும். சாரதா நவராத்திரி புரட்டாசி மாதம் மஹாலய அமாவாசையிலிருந்து அடுத்து வரும் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும். இந்த வருஷம் புரட்டாசி மாதம் இரண்டு அமாவசைகளுடன் அதிக மாதம் எனப்படும் மாதமாக இருப்பதால் புரட்டாசி மாத 2 ஆவது அமாவாசையிலிருந்து அடுத்து வரும் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது. வசந்த நவராத்திரி என்பது வசந்த கால ஆரம்பத்தில் பங்குனி மாத அமாவாசைக்குப் பின்னர் கொண்டாடப் படுகிறது. இவற்றில் பொதுமக்களால் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுவது சாரதா நவராத்திரி அல்லது சரத் நவராத்திரி எனப்படும் புரட்டாசி மாத நவராத்திரியே ஆகும். 

இந்த நவராத்திரிக்குத் தனிச் சிறப்பு உண்டு. இது முழுக்க முழுக்கப் பெண்களுக்கான பண்டிகை என்றாலும் ஆண்களின் பங்களிப்பு இல்லாமல் நிறைவேறுவது இல்லை. பெண் தெய்வம் ஆகிய ஆதி சக்தி அசுரத்தனங்களைக் கொன்று அழித்து வெற்றி கண்டதைக் கொண்டாடும் பண்டிகை இது. தேவியின் சக்தி மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறது. அவை இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகிய மூன்றும் ஆகும். ஆதி சக்தியான ஸ்ரீலலிதை மஹிஷாசுரனை வதம் செய்ய துர்கா பரமேஸ்வரியாக அவதாரம் எடுத்தாள். அதை ஒட்டியே நவராத்திரி கொண்டாடப்படுகிறது. அசுர சக்தி மேலோங்கும் சமயம் மக்கள் மனதில் ஏற்படும் பீதியைப் போக்கும் துர்கா பரமேஸ்வரிக்காக நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் கொண்டாடப்படுகிறது. மக்கள் மனதில் பயம் நீங்கியதும் செல்வத்தை அடைய அடுத்த மூன்று நாட்கள் மஹாலக்ஷ்மிக்காகக் கொண்டாடப்படுகிறது. கடைசி மூன்று நாட்களோ  அறிவு பெருகி ஞானம் அடைவதற்காக சரஸ்வதிக்காகக் கொண்டாடப் படுகிறது. இந்த ஒன்பது நாட்களிலும் ஒவ்வொரு நாளும் அம்பிகையை ஒவ்வொரு பருவம் உள்ள பெண் குழந்தையாக நினைத்து ஆராதித்து வழிபடுவார்கள். ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு வகையாகக் கொண்டாடினாலும் கடைசி நாட்கள் சரஸ்வதி பூஜை, விஜயதசமி எனத் தென்னாட்டிலும் துர்கா பூஜை, தசரா என வட மாநிலங்களிலும் கொண்டாடுகிறார்கள். இதற்காகத் தென் மாநிலங்களில் பொம்மைக் கொலு வைப்பார்கள். அதில் சுமார் ஒன்பது படிகள் இருக்கும். ஒவ்வொரு படியும் உலக வாழ்வின் தத்துவத்தை எடுத்துச் சொல்வதாக அமையும். கீழே தெப்பக்குளம் அமைத்து அதில் நீர் வாழ் உயிரினங்களை பொம்மை வடிவில் மிதக்க விடுவார்கள். உலகம் முதலில் நீரால் சூழ்ந்திருந்ததை அது நினைவூட்டும். அடுத்து படிகளில் நீரில், நிலத்தில் வாழும் உயிரினங்கள். அடுத்த படியில் காட்டு மிருகங்கள். அடுத்த படிகளில் மனிதர்களால் வளர்க்கப்படும் வீட்டு மிருகங்கள். அதன் பின்னர் பாதி மனிதன், பாதி மிருகமான காட்டு மனிதர்கள். அதன் பின்னர் பரிணாம வளர்ச்சியில் குறுகிய மனிதன், பின்னர் சாதாரணமான இப்போதைய மனிதன், என ஆரம்பித்துச் சாதாரண மனிதர்கள், அவர்களில் திருமணங்கள் செய்யும் காட்சிகள் எனவகை வகையாய் வைத்துப் பின்னர் மனித நிலையிலிருந்து உயர்ந்த சில தெய்வீக மனிதர்களான புத்தர், வள்ளலார், விவேகானந்தர், ராகவேந்திரர், காந்தி  போன்றவர்களின் உருவ பொம்மைகள், அதன் பின்னர் தேவாதி தேவர்கள், ஶ்ரீகிருஷ்ணன், ஶ்ரீராமன் போன்ற மனிதத் தன்மையும், தெய்வத் தன்மையும் கலந்த அவதாரங்கள் என வைத்துப் பின்னர் கடைசிப் படியில் மஹாவிஷ்ணுவின் தசாவதாரங்களோடு நடுவில் ஆதி பராசக்தியையும் வைப்பார்கள். மனிதன் புழு, பூச்சியிலிருந்து ஆரம்பித்து தெய்வீக நிலையை அடைவதைச் சுட்டிக்காட்டும்படி அவை அமைக்கப்படும். 

சக்தியின் வெளிப்பாடே இவற்றில் முக்கியம். அன்னையின் தசமஹா சக்திகளையும் இந்த நாட்களில் விசேஷமாகக் கொண்டாடுவார்கள் சக்தி உபாசகர்கள்.. முக்கியமாய் மஹிஷனை வதம் செய்த துர்கைக்கே முக்கியத்துவம். ஆகவே நாம் இப்போது துர்கையின் பல்வேறு வடிவங்களையும் நவராத்திரி நாளின் முதல் நாளிலிருந்து ஒன்பது நாட்களுக்கும் ஆன தேவிகளையும் பற்றிப் பார்ப்போம். 




நவராத்திரி முதல் நாள்: சித்தாத்ரி மாதா!

நவராத்திரி முதல் நாளில் வழிபட வேண்டியவள் சித்தாத்ரி மாதா ஆவாள். பொதுவாக சனிக்கிழமைகளிலேயே இவள் வழிபடப்படுவாள். இந்த வருஷம் நவராத்திரி ஆரம்பம் சனிக்கிழமை என்பதால் இவளை வழிபடப் பொருத்தமான தினம் சனிக்கிழமையும் முதல்நாள் நவராத்திரி தினமும் ஆகும். இந்த தேவி அஷ்டமாசித்திகளான அணிமா, மஹிமா, கிரிமா, லகிமா, ப்ராப்தி, ப்ரகாம்யம், ஈஷித்வம், வாஷித்வம் என்னும் அட்டமாசித்திகளையும் அளிப்பதால் இவள் சித்தாத்ரி எனப்படுகிறாள். நவரசங்களையும் வெளிப்படுத்தும் நவரச நாட்டியங்களில் ஒரு வகையான சிருங்கார தாண்டவத்தை ஈசன் ஆடியபோது தோன்றியவள் சித்தாத்ரி என்பார்கள். இன்னும் இவளைக் “காலி” எனப்படும் மஹாகாளியாகவும் வழிபடலாம். (காலி என்பதே சரியான உச்சரிப்பு) இவளும் சனிக்கிழமைக்கு உரியவளே! காலத்தைக் குறிப்பதால் காலி என்பதால் இந்தப் பெயர் என்பதோடு அல்லாமல் காற்றின் வேகத்தில் நமக்கு வேண்டியதைச் செய்ய நம்மை வந்தடைவாள் என்றும் சக்தி உபாசகர்கள் சொல்லுவார்கள். காலத்தை வென்றவளான இவள் தன் கரிய நிறத்தாலும் “காலி”எனப்படுகிறாள். அச்சமூட்டும் தோற்றத்துடன் விளங்கினாலும் தன்னை நம்பியவர்களுக்குக் காற்றை விடக் கடுகி வந்து வேண்டியன செய்வாள். கால ராத்ரி என்னும் பெயரிலும் அழைக்கப்படும் இவள் தன்னை அண்டியவர்களுக்கு மங்களங்களை அள்ளித் தருவாள். சனிக்கிழமைகளில் இவளை வணங்குபவர்களுக்குச் சனைஸ்வரனின் தாக்கம் குறையும். மனவல்லமை அளிக்கக் கூடிய இந்தக் காளியானவள் தாருகா வனத்து முனிவர்களால் ஏவப்பட்ட கஜமுகாசுரனைக் கொன்று அவன் தோலைப் போர்த்திக் கொண்டு ஈசன் ஆடிய பூதத் தாண்டவத்தின் போது தோன்றியவள். அதனாலும் இவள் பெயர் காலி எனப்படும். இன்றைய தினம் கொலுவில் தேவியை ஶ்ரீதுர்கையாக அலங்கரிக்கலாம்.


பாலா திரிபுர சுந்தரி

நவராத்திரி முதல் நாள் பொட்டுக்கோலம் போட்டு அம்பிகையை “பாலை”யாக நினைத்து ஆவாஹனம் செய்து வழிபட வேண்டும். குமாரி எனவும் அழைக்கலாம். இரண்டு வயதுப் பெண் குழந்தையை “பாலை”யாக நினைத்து வழிபடலாம். அதற்குப் பிடித்த ஆகாரங்கள், பொம்மைகள், துணிகள் ஆகியவற்றைக் கொடுத்துக் குறிப்பாக மஞ்சள் நிறம் கொண்ட துணிகளைக் கொடுப்பது சிறப்பு. மஞ்சள் சாமந்திப்பூவால் வழிபாடுகள் செய்யலாம். மஞ்சள் முல்லையும் மிகச் சிறப்பு. செவ்வரளியும் உத்தமம். சிலர் மல்லிகைப் பூவும் கொடுப்பார்கள். லலிதா நவரத்ன மாலையால் பாடிக் குழந்தையை ஆராதிக்கலாம். மஹிஷாசுர மர்த்தினி ஸ்லோகத்தையும் சொல்லலாம். குழந்தைக்குப் பிடித்த சாப்பாடு கொடுக்கலாம் எனினும் மஞ்சள் நிறமுள்ள எலுமிச்சைச் சாதம் நிவேதனத்துக்குச் சிறப்பு. வெண் பொங்கலில் கொஞ்சம் மஞ்சள் பொடி சேர்த்துச் செய்தும் கொடுக்கலாம். மஞ்சள் நிறம் சிறப்பு. 

பச்சைப் பயறுச் சுண்டல்: மாலை முதல் நாள் என்பதால் இனிப்புச் சுண்டலான பச்சைப்பயறுச் சுண்டல் செய்யலாம். பச்சைப் பயறை முதல் நாளே ஊற வைத்துக் கழுவி அரை உப்புச் சேர்த்து வேக வைத்துக் கொண்டு வாணலியில் நெய் ஊற்றிக் கொண்டு கடுகு மட்டும் தாளித்துக் கொண்டு வெந்த பயறைப் போட்டு வெல்லத்தூள், தேங்காய்த் துருவல் சேர்த்து ஏலக்காய்ப் பொடியும்போட்டுக் கிளற வேண்டும். இதை கொலுவுக்கு வருகிறவர்களுக்கு விநியோகிக்கலாம். 

மொச்சைச் சுண்டல் . மொச்சையை முதல் நாளே ஊற வைத்துக் கொண்டு மறுநாள் வாயகலமான அடி கனமான பாத்திரம் அல்லது குக்கரில் தேவையான உப்பைச் சேர்த்து நன்கு வேக வைக்கவும். பின்னர் வெந்த பருப்பை வடிகட்டிக் கொண்டு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டு கடுகு, பெருங்காயம், மிளகாய் வற்றல், கருகப்பிலை தாளித்துக் கொண்டு வெந்த மொச்சையைப் போட்டுக் கிளறவும். மறுபடியும் உப்புப் போடக் கூடாது. 10, 12 மிளகாய் வற்றல்+ இரண்டு மேஜைக்கரண்டிக் கொத்துமல்லி விதையக் கொஞ்சம் எண்ணெயில் வறுத்துப் பொடி செய்து வைத்துக் கொண்டால் சுண்டலில் மிளகாய் வற்றலைக் குறைத்துக் கொண்டு இந்தப் பொடியைப் போட்டுக் கிளறலாம். பின்னர் துருவிய தேங்காய்த் துருவலைச் சேர்த்துக் கிளறிவிட்டுப் பின்னர் விநியோகம் செய்யலாம்.

இது நாளைய தினம் நவராத்திரி முதல்நாள் வழிபாட்டுக்கு உரியது, இரண்டாம் நாளுக்கான பதிவு நாளை வரும்.  இந்தப் பதிவை சஹானா. காம்.  இணைய இதழிலும் பார்க்கலாம்.

சஹானா.காம்

28 comments:

  1. நன்றி மீண்டும்,அழகா புரியர மாதிரி சொல்லி இருக்கீங்க

    ReplyDelete
  2. முன்பே எழுதியிருக்கீங்கன்னு நினைக்கறேன். நல்லா எழுதியிருக்கீங்க.

    ஆமாம்..இந்தச் சுண்டல்தான் என்றெல்லாம் யார் ஆரம்பித்திருப்பார்கள்?

    ReplyDelete
    Replies
    1. கீசாக்காவின் போன வருட நவராத்திரிப் போஸ்ட் எல்லாம் எனக்கு மனக் கண்ணில் இருக்குது, திரும்பவும் சுண்டல் சட்னி என நாள்கணக்கு எழுதத் தொடங்கிட்டா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

      அதுசரி நெல்லைத்தமிழன் இந்தப் பக்கம் வந்தாரோ?:)

      Delete
    2. வாங்க நெ.த. அநசூயாவின் கற்பைச் சோதிக்க நினைத்த முப்பெரும் தேவியர் நாரதரால் தங்களிடம் கொடுக்கப்பட்ட இரும்புக் கடலைகளை வேக வைத்துக் கொண்டு வரும்படி சொன்னார்களாம். அநசூயாவும் அவற்றை வேக வைத்துச் சுண்டல் உருவில் முப்பெரும் தேவியர்க்கும் கொடுத்தாளாம். அதனால் நவராத்திரியில் சுண்டல் நிவேதனம் என்னும் செவிவழிக் கதை உண்டு.
      ஆனால் உண்மையைச் சொல்லணுமானால் இந்தப் பருவம் காற்றும், மழையும், குளிருமாக இருக்கும் பருவம். இந்தப் பருவத்தில் நோய், நொடிகள் அண்டாமல் பாதுகாக்க வேண்டிச் சுண்டல் போன்ற சத்து மிகுந்த தானியங்களை ஊற வைத்து முளைக்கட்டிச் சாப்பிடுவார்கள். அதையே சுண்டலாகச் செய்தும் மூன்று தேவியருக்கும் படைத்திருக்கலாம்.

      Delete
    3. வாங்க அல்லி அதிரடி ராணி, வருஷா வருஷம் எழுதுவதால் இந்த வருஷம் வேணாம்னு தான் நினைச்சேன். :))))))

      Delete
    4. 'அ ல் லி ரா ணி' - பேர்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனா ஆளைத்தான் காணலை.

      Delete
    5. @நெ தமிழன்:)....
      ஒருவேளை அதிரா ரொம்ப மெலிஞ்சிட்டனோ:)... அதனாலதான் கண்ணுக்குத் தெரியுதில்லையோ:)

      Delete
  3. ரொம்ப சீரியஸான பதிவு. நிறைய விளக்கங்களோட எழுதியிருக்கீங்க. பாராட்டுகள்

    ReplyDelete
  4. விரிவான செய்திகளுடன் நல்லதொரு பதிவு..

    மகிஷன் மாய்ந்தது போல
    துர்க்கையின் பேரருளால்
    கொரானாவும் தேய்ந்து ஒழியட்டும்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க துரை, கொரோனாவை அழிக்கட்டும்/அடியோடு தொலையட்டும் என முப்பெரும் தேவியரை வேண்டிக்கலாம்.

      Delete
  5. மிக அற்புதமான வழிபாட்டு நாட்களை விவரமாகக கொடுத்திருக்கிறீர்கள். இப்போதுதான் அமாவாசை பூர்ததியாகிறது.
    இனி நாளை தாயின் அருளோடு பூஜை வழிபாடு ஆரம்பிக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி, நன்றி. பூஜையை ஆரம்பித்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.

      Delete
  6. வணக்கம் சகோதரி

    அருமையான பதிவு. அவ்வளவு நல்ல விளக்கங்களுடன் தங்கள் திறமை மிகுந்த எழுத்தாற்றலால், வருடங்களில் முறையாக வரும் ஒவ்வொரு கொலுவை பற்றியும், அதை வைக்கும் முறைகளைப் பற்றியும், தினசரி நிவேதனம் எதைச் செய்வது என்பதைப் பற்றியும் அழகாக விரிவாக சொல்லியிருக்கிறீர்கள். படிக்க படிக்க இனிமையாக உள்ளது.ரசித்தேன். நவராத்திரி சிறப்பான நாளைய பதிவையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா, நாளைய பதிவையும் போட்டு விட்டேன். சஹானாவுக்காக எழுதினதால் அங்கே போட்ட பின்னரே போடணும்னு முன் கூட்டிப் போடவில்லை.

      Delete
  7. சஹானா இதழில் உங்கள் பதிவு - வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா, வெங்கட், ஆரம்பமே நானும், ஆதியும் தானே! :)))))))

      Delete
  8. அம்மா...டி...   எவ்வளவு விவரங்கள்...   

    ReplyDelete
    Replies
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஸ்ரீராம் உங்களுக்கு மறதி அதிகம் என்பதால இப்பூடி விளிக்கிறீங்க...:)).. இது கீசாக்கா ஒவ்வொரு வருடமும் எழுதுவதுதான்:)) ஹா ஹா ஹா.. விடமாட்டமில்ல:))

      Delete
    2. அதானே, ஸ்ரீராமுக்கு எப்போவுமே மறதி அதிகம் தான் அதிரடி அல்லிராணி.

      ஒவ்வொரு வருஷமும் எழுதினாலும் கொஞ்சம் இல்லை நிறைய மாற்றங்கள் இருக்கும் அல்லிராணி!

      Delete
  9. நிறைய விடயங்கள் அறிந்தேன் சகோ நன்றி

    ReplyDelete
  10. கீசாக்கா நலம்தானே.. இந்த அல்லிராணியை நினைவிருக்கோ?:).. நவராத்திரி ஆரம்பம் என்பதால அவசரமாக ஓடி வந்தேன்.. இன்று சுண்டலும் அவலும் செய்து துர்க்கை அம்மாளாச்சிக்குக் குடுத்து.. என்னை இன்னும் வீரி ஆக்கப்போகிறேனாக்கும் ஹா ஹா ஹா...

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா, யாரு இந்த அல்லிராணி? எனக்கு அதிரடியைத் தான் தெரியும். உங்க பணியாரம் செய்ய பாசிப்பயறை வறுத்துப் பொடி செய்து அரிசி மாவையும் தேங்காய்த் துருவலையும் சேர்த்து வெல்லத்தூள் சேர்த்து வைச்சிருக்கேன். இன்னமும் உருட்டிப் போட வேளை வரலை! என்னிக்குப் போடறேனோ அன்னிக்குப் படம் எடுக்கணும் நினைவா! இல்லைனா நம்ப மாட்டீங்களே! :)))))

      Delete
  11. நவராத்திரியின் சிறப்பினை பொதுக்கூறுகளாகவும், சிறப்புக்கூறுகளாகவும் எழுதி சிறப்பான ஆரம்பத்தைத் தந்துள்ளீர்கள். தொடர்ந்து கொலுவிற்கு வருவேன்.
    கும்பகோணத்தில் எங்கள் இல்லத்தில் நவராத்திரி வைத்த நாள்கள் நினைவிற்கு வருகின்றன. குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட வகையிலான சுண்டல் செய்வது பற்றி அப்போது பேசிக்கொள்வார்கள். அதனை இப்போது கூடுதல் விவரங்களோடு அறிந்தேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க முனைவர் ஐயா, தொடர்ந்து வாருங்கள். பாராட்டுக்கு நன்றி.

      Delete
  12. நல்ல விரிவான பகிர்வு.

    ReplyDelete