எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, October 19, 2020

நவராத்திரி நான்காம் நாள்

படத்துக்கு நன்றி கூகிள்

 இன்றைய தினத்துக்கான தேவி சந்திரகாந்தா அல்லது ஸ்கந்த மாதா ஆகியோர் ஆவார்கள். ஸ்கந்தமாதா செவ்வாய்க்கிழமைக்கு உரிய தேவி. இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை என்பதால் ஸ்கந்தமாதாவாக அம்பிகையை வழிபடலாம். சந்திரகாந்தாவாகவும் வழிபடலாம். சந்திரகாந்தா முக்கண்கள் உடைய தேவி ஆவாள். வெப்பத்தைத் தணிவிக்கும் தேவி இவள். சந்திரகாந்தக் கல்லானது சந்திரனின் குளுமையைத் தன்னுள் வாங்கிக் கொண்டு நீரைப் பொழிகிறாப்போல் அம்பிகையும் நம் தீவினைகளைத் தன்னுள் வாங்கிக் கொண்டு தன் முக்கண்களால் கருணை என்னும் அருளைப் பொழிகிறாள். நம் வெம்மையைத் தன்னுள் வாங்கிக்கொள்ளும் அம்பிகை கருணை நீரைப் பொழிகிறாள். இங்கே குறிப்பிடப்படும் வெம்மையானது நம் தீவினைகளே ஆகும். இந்தத் தீவினைகளை அம்பிகை தன்னுள் வாங்கிக் கொண்டு கருணை மழையால் நம் உடலையும், மனதையும் குளிர்விக்கிறாள். முக்கண்ணனின் மனைவியான இந்த தேவி தானும் முக்கண்களைக் கொண்டு ஈசனைப் போல் தானும் பிறைச் சந்திரனைச் சூடிக் கொண்டு காட்சி தருகிறாள். நம் தீவினைகளாம் அசுரர்களை அழித்தொழிக்க வேண்டிக் கைகளில் பல்வேறு ஆயுதங்களைத் தாங்கி நிற்கிறாள் இந்த தேவி. ராகு காலம், செவ்வாய்க்கிழமைகளில் இவளை வழிபடுதல் சிறப்பு. நவராத்திரி செவ்வாய்க்கிழமையில் ராகு காலத்தில் இவளை நினைத்து வழிபடுதல் இன்னமும் சிறப்பு. திருவாலங்காட்டில் காளி ஆடிய ஆட்டத்தில் அவளைத் தோற்கடிக்க ஈசன் ஆடிய ஊர்த்துவத் தாண்டவத்தில் தோன்றிய இந்தச் சந்திரகாந்தா தேவி ஈசன் ஒரு காலைத் தரையில் ஊன்றி மறுகாலைத் தோளுக்கு மேல் தூக்கிய கோலத்தின் போது பிறந்தவள் என்பார்கள்.


படத்துக்கு நன்றி கூகிள்

அடுத்து வரும் ஸ்கந்த மாதாவும் செவ்வாய்க்கிழமைக்கு உகந்த தேவி. ஸ்கந்தனின் மாதாவான இவளுக்கும் ஸ்கந்தனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமையே உகந்த நாளாகும். அக்னி சொரூபம் ஆன ஸ்கந்தனின்ன் திரு அவதாரத்துக்குக் காரணம் ஆன இந்த ஸ்கந்தமாதா அக்னி எவ்வாறு அனைத்துப் பொருட்களையும் சுட்டெரித்துச் சாம்பலாக்குகிறதோ அவ்வாறு நம் தீவினைகளையும் சுட்டெரித்துச் சாம்பாலாக்குவாள். நமக்கு அங்காரக தோஷத்தினால் ஏற்படும் துன்பங்கள் தீவினைகளைச் சுட்டுப் பொசுக்குவாள். நவராத்திரி செவ்வாய்க்கிழமைக்கு உகந்த தேவியான இவள் பாற்கடலை அசுரர்களும், தேவர்களும் கடைந்த போது தோன்றிய ஆலஹால விஷத்தை உண்ட ஈசன் கண்டத்தைப் பிடிக்கவும், அப்போது ஈசன் ஆடிய தாண்டவம் புஜங்க தாண்டவம் எனப்படும். ஸ்கந்தமாதா தோன்றியது அப்போது தான்.

இன்றைய தினம் ஐந்து வயதுப் பெண் குழந்தையை “ரோஹிணி” என்னும் திருநாமத்தால் வழிபட வேண்டும். சிவந்த நிறத்தில் ஆடைகள் கொடுக்கலாம். இன்றைய தினம் படிக்கட்டுக் கோலம் போடலாம். அல்லது அக்ஷதை, மலர் இதழ்கள் இவற்றாலும் கோலம் போடலாம்..கீழே குறுகி மேலே செல்லச் செல்ல விரிந்து வருவதைப் போல் கோலமிட்டால் செல்வம் பெருகும் என்பார்கள்.  நமக்கு இருக்கும் ரோகங்கள் நீங்க இத்தகைய வழிபாடு சிறப்பானது. பொதுவாகச் சிவப்பு மலர்களால் 4,5,6 நாட்களில் அம்பிகையை அர்ச்சிக்க வேண்டும் என்பார்கள். செந்தாமரை மலர், ரோஜாமலர்கள், அரளிப்பூக்கள் ஆகியவை இன்றைக்கு ஏற்றவை. கஸ்தூரி மஞ்சள் பொடியாலும் அர்ச்சிக்கலாம். மஹாலக்ஷ்மி அஷ்டகம் அல்லது திருமகளைக் குறித்த துதிகளால் வழிபடலாம். அம்பிகையை இன்று ஜயதுர்கை கோலத்தில் சிங்காதனத்தில் வீற்றிருக்கும் தேவியாக அலங்கரிக்கலாம். நிவேதனமாக அவல் கேசரி அல்லது ரவா கேசரி பண்ணலாம். சர்க்கரைப்பொங்கலும் பண்ணலாம். மாலை பட்டாணிச் சுண்டல் பண்ணி விநியோகிக்கலாம்.

நல்ல கெட்டி அவலை நெய்யில் வறுத்துக் கொண்டு அதோடு சேர்த்துச் சர்க்கரையைக் கலக்கவும். ஒரு பாத்திரத்தில் வெந்நீரைக் கொதிக்க வைத்து அவலும் சர்க்கரையும் கலந்த கலவையில் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்க்கவும். சிறிது நேரத்தில் அவல் வெந்து சர்க்கரையோடு கலந்து விடும். தேவையானால் கேசரிக்கலர் சேர்க்கலாம். நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு, திராக்ஷைப்பழங்கள் சேர்த்து ஏலப்பொடி சேர்க்கவும். அவல் இல்லை எனில் ரவையில் இதே மாதிரிப் பண்ணலாம். 

சர்க்கரைப் பொங்கலுக்கு அரிசி, பருப்பை வாசனை வரும்படி வறுத்துக்கொண்டு பாலில் குழைய வேக வைத்துக் கொண்டு தேவையான வெல்லம் சேர்த்து வெல்ல வாசனை போகச் சுருள வந்ததும் நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு, திராக்ஷைப் பழங்கள் சேர்த்துப் பின்னர் குழந்தைகளுக்குச் சாப்பிடக் கொடுக்கலாம்.

வெள்ளைப் பட்டாணியை முதல்நாளே ஊற வைத்துக் கொண்டு மறுநாள் நன்கு கழுவி உப்புச் சேர்த்து வேக வைத்துக் கொண்டு நீரை வடிகட்டி வைத்துக் கொள்ளவும். கடாயில் நல்லெண்ணெய் ஊற்றிக் கடுகு, பெருங்காய்த்தூள், பச்சை மிளகாய், இஞ்சி, மாங்காய்(கிடைத்தால்) கருகப்பிலை, தேங்காய்க்கீற்றுகள் சேர்த்து நன்கு கிளறி வெந்த பட்டாணியைப் போட்டுக் கிளறி எடுத்தால் சுவையான தேங்காய், மாங்காய்ப் பட்டாணிச் சுண்டல் தயார். விநியோகிக்கலாம்.

பட்டாணிச் சுண்டல் சொந்தம், சில வருடங்கள் முன்னர் பண்ணியது. முகநூலில் மோகன் ஜி அவரோட பதிவுக்குப் போட்டிருந்தார். எந்தப் பதிவிலே போட்டேன்னு தேடணும். ஆனாலும் சொந்தச் சுண்டல், பச்சைப் பட்டாணியா இருந்தா என்ன? இதுவும் பட்டாணிச் சுண்டல் தானேனு போட்டுட்டேன். இத்தனை வருஷங்களாக நன்றாக இருக்குமானு தெரியலை! ஹிஹிஹி! 





17 comments:

  1. மக்கள் அனைவரையும் ஸ்கந்த மாதா காக்கட்டும்.   நாளை ஸ்ரீராமுக்கு ஒரு ஆச்சர்யம் என்றீர்களே...   ஒன்றும் காணோமே...   ஆவலுடன் என்னவென்று காத்திருந்தேன்!

    ReplyDelete
    Replies
    1. ஆச்சர்யம் என்ன என்று தெரிந்து கொண்டேன்.  வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

      Delete
    2. வாங்க ஶ்ரீராம், ஆச்சரியம் என்னனு புரிஞ்சதா? மிக்க நன்றி.

      Delete
  2. தொடர்ந்து படித்து வருகிறேன் நன்றி

    ReplyDelete
    Replies
    1. நன்றி கில்லர்ஜி!

      Delete
  3. இனிய காலை வணக்கம் கீதாமா.
    செவ்வாய்க் கிழமை, நான்காம் நாளுக்கு
    உண்டான முறைகளைத் தெரிந்து கொண்டேன்.

    துர்கா தேவிக்கும் முருகனுக்கான துதிகளையும் சொல்லி,
    நீங்கள் எழுதி இருக்கும் புராணத்தையும் படிக்கிறேன்.

    சில சுண்டல் வகைகளை வாயு என்று
    விலக்கி விடுவார்கள்.
    இனிப்பு வகையறாக்கள் ஒத்துப் போகும்
    நல்ல வேளையாக:)

    ReplyDelete
    Replies
    1. நன்றி வல்லி. வாயுப் பிடித்துக் கொண்டு விட்டதாக நம்மவரும் சொல்லுவார். ஆனால் சுண்டல் எல்லாம் எனக்கு வாயு ஏற்படுத்தியதில்லை, உருளைக்கிழங்கு உள்பட! சில சமயங்களில் கீரை, தோசை மிளகாய்ப்பொடி (தொடவே மாட்டேன், என்னிக்கானும் போட்டுண்டா 2,3 நாட்கள் அவதி) கருணைக்கிழங்கு போன்றவை படுத்தி எடுக்கும்.

      Delete
  4. arumayaana navarathri padhivugal amma!

    ReplyDelete
    Replies
    1. வாங்க வானம்பாடி, உங்க குரலை மட்டும் காட்டறீங்க! யாருனு தெரியலையே! நன்றிம்மா.

      Delete
  5. சந்திரகாந்தா பிறந்த சூழலை இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.
    தொடர்ந்து வாசிக்கிறேன். சிறப்பு.

    ReplyDelete
    Replies
    1. வாங்க முனைவர் ஐயா, நன்றி.

      Delete
  6. அருமையாக இருக்கிறது பதிவு.
    தேவி சந்திரகாந்தா எல்லோரையும் காத்து அருளவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி, பாராட்டுக்கு நன்றி.

      Delete
  7. ஒவ்வொரு நாளுக்கான விசேடங்களும் பிரசாதங்களும் என நன்றாக பகிர்ந்துள்ளீர்கள்.

    ReplyDelete
  8. வணக்கம் சகோதரி

    நான்காம் நாளாகிய இன்றைய நவராத்திரி பதிவும் நன்றாக உள்ளது.

    சந்தரகாந்தா தேவியை பற்றிய விளக்கம் அருமை.
    /வெப்பத்தைத் தணிவிக்கும் தேவி இவள். சந்திரகாந்தக் கல்லானது சந்திரனின் குளுமையைத் தன்னுள் வாங்கிக் கொண்டு நீரைப் பொழிகிறாப்போல் அம்பிகையும் நம் தீவினைகளைத் தன்னுள் வாங்கிக் கொண்டு தன் முக்கண்களால் கருணை என்னும் அருளைப் பொழிகிறாள். நம் வெம்மையைத் தன்னுள் வாங்கிக்கொள்ளும் அம்பிகை கருணை நீரைப் பொழிகிறாள். இங்கே குறிப்பிடப்படும் வெம்மையானது நம் தீவினைகளே ஆகும். இந்தத் தீவினைகளை அம்பிகை தன்னுள் வாங்கிக் கொண்டு கருணை மழையால் நம் உடலையும், மனதையும் குளிர்விக்கிறாள்./

    அழகான விளக்கம். ஸ்கந்தமாதா பற்றிய விளக்கமும் நன்றாக உள்ளது. ஒவ்வொரு தேவியும் தோன்றிய கதைகள், விபரங்கள் என பக்தியுடன் படிக்க பதிவு நன்றாக உள்ளது. பக்தியுடன் தேவியருக்கு நமஸ்காரங்களும் செய்து கொண்டேன். இன்றைய பிரசாதங்கள் பற்றியும் அறிந்து கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா. பாராட்டுக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete