எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, October 23, 2020

நவராத்திரி எட்டாம் நாள்


நாரசிம்ஹி படத்துக்கு நன்றி மஹாபெரியவா வலைப்பக்கம்.

இன்றைய தினம் அனைத்து சக்திகளும் சேர்ந்து அன்னையுடன் அசுரனை எதிர்த்துப்  போரிடுவார்கள். அம்பிகை ரக்தபீஜனை வதம் செய்த திருக்கோலத்தில் காட்சி அளிப்பாள். இவளை நாரசிம்ஹி அல்லது துர்கையாக வழிபடுவார்கள். இந்தப் போரில் அன்னைக்கு உதவிய அனைத்து சக்திகளையும் வழிபடுதல் விசேஷமானது.



பிராம்ஹி படத்துக்கு நன்றி விக்கி பீடியா

பிராம்ஹி  பிரம்மனுக்கு உரிய சக்தியாக ப்ராம்ஹி. நான்கு முகங்கள், நான்கு கரங்கள். மஞ்சள் வண்ணம் உகந்தது. ருத்ராக்ஷ மாலை தரித்து ஹம்ச வாஹனத்தில் அமர்ந்த வண்ணம் முன்னிரு கரங்களால் அபய ஹஸ்தம் காட்டிப் பின்னிரு கரங்களில் கமண்டலமும் அக்ஷமாலையும் தரித்திருப்பாள். சகல கலா வல்லியான இவளைத் துதித்தால் அனைத்துக் கலைகளும் கை கூடும்.




வாராஹி படத்துக்கு நன்றி கூகிளார்

வாராஹி, மஹா விஷ்ணுவின் வராஹ அவதாரத்தின் அம்சமாய்த் தோன்றியவள். அம்பிகையின் படைத்தளபதி இவளே! தண்டினி எனவும் அழைக்கப்படுவாள். மேக வண்ணத்திலானவள். இவளுக்கு உகந்த நிறம் கறுப்பு. வராஹ முகத்தோற்றத்துடன் கலப்பை, உலக்கை ஆகியவற்றைப் பின்னிரு கரங்களில் தாங்கி முன்னிரு கரங்களால் அபய ஹஸ்தம் காட்டுவாள். சிம்ஹ வாஹினியான இவளை வணங்குவோர்க்குச் சிக்கல்கள், இன்னல்கள், இடையூறுகள் நீங்கும்.



மாகேஸ்வரி படத்துக்கு நன்றி கூகிளார்

மாகேஸ்வரி! முக்கண்ணனின் சக்தியான இவளும் முக்கண்கள் கொண்டவள். ஈசனைப் போலவே ஜடாமகுடத்துடன், மான், மழுவுடன்  ரிஷப வாஹனத்தில் காட்சி கொடுப்பாள். வெண்மை உகந்த வண்ணம். மங்களங்களை அள்ளித்தரும் தேவி இவள்.


இந்திராணி படத்துக்கு நன்றி கூகிளார்

இந்திராணி: இந்திரனின் சக்தியான இவள் மாஹேந்திரி என்னும் பெயரும் கொண்டவள். தங்கம் போல் மிளிரும் பொன்னிற மேனி கொண்ட இவள் சக்தி ஆயுதமும்,  வஜ்ராயுதமும் தாங்கி வெள்ளை யானை மேல் அமர்ந்த வண்ணம் அபயஹஸ்தம் காட்டுவாள். சத்ரு பயம் போக்குவாள்.



துர்கை படத்துக்கு நன்றி கூகிளார்

இன்று ஒன்பது வயதுப் பெண் குழந்தையை “துர்கை”யாகப் பாவித்து வழிபட வேண்டும். பத்மக் கோலம் போடலாம். அரிசி மாவினால் பதினாறு இதழ் கொண்ட தாமரைப்பூக்கோலமும் போடலாம். முல்லை மலர்கள், தாமரை மலர்கள், மருதாணிப்பூக்கள், செண்பக மலர்கள், சாமந்திப்பூக்கள் மற்றும் குங்குமத்தால் அர்ச்சிக்கலாம். எல்லா நிறங்களும் கலந்த வஸ்திரங்கள் கொடுக்கலாம். கொலுவிலும் இன்று சக்திகள் புடைசூழ வீற்றிருக்கும் துர்கையாக அம்பிகையை அலங்கரிக்கலாம். சக்திகள் புடை சூழ மலர் அம்பு ஏந்தி அமர்ந்த கோலத்தில் வீற்றிருக்கும் இந்த அம்பிகையைத் துதித்தால் பகை ஒழியும். சத்ரு நாசம் ஏற்படும். மனதில் தைரியமும் செயல் திறனும் அதிகரிக்கும். அத்தகைய வல்லமையைத் தருவாள் இந்த மஹாசக்தி!

வேர்க்கடலைச் சுண்டல் மாலையில் பண்ணலாம். காலையில் தேங்காய்ச் சாதம் அல்லது எள் சாதம் பண்ணலாம். இன்றைய எட்டாம் நாளும் சனிக்கிழமையாக இருப்பதால் பலரும் எள் சாதமே பண்ணுவார்கள். இல்லை எனில் பால் பாயசம் செய்யலாம். அஷ்டமி திதியான இன்று தான் சரஸ்வதி ஆவாஹனம் செய்யப்படுகிறது. இன்றும் அபிராமி அந்தாதி, சரஸ்வதி துதி, சகலகலாவல்லி மாலை, லலிதா சஹஸ்ரநாமம் ஆகியவை சொல்லி வழிபடலாம். தேங்காய்ச் சாதம், எள் சாதம் செய்முறை ஏற்கெனவே கொடுத்திருக்கேன்.

பால் பாயசம். ஒரு சின்னக் கிண்ணம் அரிசியைக் களைந்து நெய்யில் வறுத்துக் கொண்டு அரை லிட்டர் பாலில் குழைய வேக விடவும். பால் பாயசத்துக்கு என முதல் நாளே ஒரு லிட்டர் பால் வாங்கிக் குறுகக் காய்ச்சி வைக்க வேண்டும். பால் சிவந்த நிறம் வந்ததும் அதில் உள்ள ஆடைகளோடு அப்படியே எடுத்து வைக்க வேண்டும். குழைந்து வெந்த அரிசியில் கொஞ்சம் கொஞ்சமாகச் சர்க்கரையைச் சேர்க்கவும்.ஒரு கிண்ணம் சர்க்கரை வரை சேர்க்கலாம். பின்னர் குறுகக் காய்ச்சிய பாலைச் சேர்த்து நன்கு கிளற வேண்டும். பாயசம் அடியில் பிடிக்காத வண்ணம் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். பாயசம் கெட்டிப் பட்டதும் பாலில் கரைத்த குங்குமப் பூச் சேர்த்து, தேவை எனில் ஏலக்காய்ப் பொடியும் சேர்த்துக் கீழே இறக்கவும். முந்திரிப்பருப்பு, பாதாம்பருப்பு, பிஸ்தா ஆகியவற்றை மெலிதாகச் சீவி வைத்துக் கொண்டு நெய்யில் வறுத்துப் பாயசத்தில் சேர்க்கவும்.

வேர்க்கடலைச் சுண்டல்: வேர்க்கடலையை முதல் நாளே ஊற வைக்கவும். இரண்டு, மூன்று முறை நன்கு கழுவி நீரை மாற்றி வைக்கவும். சொத்தைக் கடலை இருந்தால் எடுத்து விடவும். எல்லாவற்றுக்குமே  இப்படிச் செய்யலாம். மறுநாள் மீண்டும் நன்கு கழுவி குக்கரில் உப்புச் சேர்த்து வேக வைக்கவும். வெந்த வேர்க்கடலையை வடிகட்டி வைக்கவும். பின்னர் கடாயில் நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டு கடுகு, மி.வத்தல், கருகப்பிலை சேர்த்துக் கொண்டு வெந்த வேர்க்கடலையையும் கொட்டிக் கிளறவும். தேங்காய்த் துருவல் சேர்க்கவும். காரம் அதிகம் தேவையானால் கொஞ்சம் சாம்பார்ப் பொடி அல்லது மி.வத்தல்+கொத்துமல்லி விதை வறுத்த பொடியைச் சேர்க்கவும். விநியோகத்துக்குச் சுண்டல் தயார்!


14 comments:

  1. நவராத்திரி விளக்கங்கள் அருமை தொடர்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி கில்லர்ஜி!

      Delete
  2. வராஹி அம்மன் வரங்களை அருள பிரார்த்திப்போம்.

    ReplyDelete
  3. arumayaana padhivu. naan ungal padhivugalai sameebamaaga padiththu varugiren... migavum ubayogamaaga ulladhu!

    ReplyDelete
    Replies
    1. நன்றி வானம்பாடி!

      Delete
  4. வணக்கம் சகோதரி

    நவராத்திரி எட்டாம் நாள் அம்பிகையை மனதாற வேண்டிக் கொண்டு வழிபட்டேன். வாராஹி தேவி அனைவரையும் காத்தருளட்டும். ஒவ்வொரு சக்திக்கும் ஒவ்வொரு பெயராக விளக்கங்கள் படிக்க நன்றாக உள்ளது. பிரசாதமாகிய வேர்கடலை சுண்டலுக்கும், பால் பாயாசத்திற்கும் செய்முறை விளக்கம் சிறப்பாக இருக்கிறது. அனைத்தையும் ரசித்துப் படித்தபடி நாளைய பதிவுக்கு காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கமலா. தொடர்ந்து வருவதற்கும் நன்றி. நாளைய பதிவை விரைவில் போடுகிறேன்.

      Delete
  5. இன்று எட்டாம் நாள் வழிபாட்டுக்கு நல்ல
    யோசனைகள் சொல்லி இருக்கிறீர்கள்.
    எங்கள் துர்காவையே பால் பாயசம் , சுண்டல்
    சேர்த்து வழிபடுகிறோம்.

    இத்தனை சக்திகளையும் நினைத்தாலே
    முக்தி கிடைக்கும் .மிக நன்றி மா கீதா.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி, வழிபாடுகள் நல்லபடி நடந்து முடிஞ்சிருக்கும். நன்றி.

      Delete
  6. அம்மனைக் கண்டேன். மன நிறைவு பெற்றேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி முனைவர் ஐயா!

      Delete
  7. சக்தியின் நல் அருளை வேண்டுவோம்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க மாதேவி, வேண்டுவோம்.

      Delete