முதலில் இந்தக் கோயிலின் தலவரலாற்றைப் பார்ப்போமா?? பலருக்கும் தெரிந்த கதையாகவே இருந்தாலும் நினைவு படுத்துக்கொள்ளலாமே?? திருமால் எந்நேரமும் தன் மனமாகிய தாமரையில் ஈசனை இருத்திப் பூஜித்து வந்தார். ஈசனைத் தனியாகப் பூஜிக்கவில்லை. கூடவே அன்னையையும், அவர்கள் அம்சமான சிவகுமாரனையும் சேர்த்தே வழிபட்டு வந்தார். பூசலார் நாயனார் தன் நெஞ்சிலே ஈசனுக்குக் கோயில் கட்டியதற்கு இப்போத் திருமாலே முன்னோடி எனலாம். தன் மனதுக்குள்ளாகவே நெஞ்சே கோயிலாக சோமாஸ்கந்தரை அங்கே பிரதிஷ்டை செய்து வழிபடலானார் காக்கும் கடவுளான விஷ்ணு. இந்நிலையில் தேவேந்திரனுக்கு வழக்கம்போல் துன்பம் வந்திட சிவ வழிபாடு சிறந்தது என நினைத்து அவன் திருமாலிடம் வழிபடும் விதம் கேட்டான். தன் நெஞ்சிலே வைத்துப் பூஜித்து வந்த சோமாஸ்கந்தரை அவனிடம் கொடுத்து அந்தத் தியாகேசரை வழிபடச் சொன்னார் திருமால்.
தேவேந்திரனும் முறைப்படி வழிபட்டு வந்தான். அசுரர்கள் தொல்லை தாங்கவில்லை. இந்திரலோகத்தை வலன் என்னும் அசுரன் தாக்கிக் கடும்போர் புரிந்தான். பூவுலகில் அப்போது முசுகுந்தன் என்னும் சக்கரவர்த்தியின் ஆட்சி நடந்து வந்தது. முன் பிறவியில் ஒரு குரங்காய்ப் பிறந்திருந்த அவன், சிவ பூஜை செய்து வந்ததன் பலனாக இப்பிறவியில் மன்னனாய்ப் பிறந்து ஆண்டு வந்தான். ஆயினும் முன்பிறவியில் கேட்டிருந்த வரத்தின்பலனாகத் தன் முன்பிறவியை மறவா வண்ணம் அதே குரங்கு முகத்தோடேயே பிறந்திருந்தான். இந்திரனுக்கு நெருங்கிய நண்பனாகவும் இருந்தான். இப்போது தன் நண்பனுக்கு ஒரு பிரச்னை என்றதும் முசுகுந்தச் சக்கரவர்த்தி, வலனைத் தோற்கடிக்க உதவி செய்தான். தேவேந்திரனும் அவன் உதவியை வேண்டிப் பெற்றுக்கொண்டான். வலன் தோற்கடிக்கப் பட்டான்.
தேவேந்திரன் வெற்றி கிட்டியதைக் கொண்டாடும் வண்ணம் தியாகேசப் பெருமானின் எதிரே நின்று, தன் நண்பனாகிய முசுகுந்தனை மார்போடணைத்து நன்றி கூறி, “உனக்கு என்ன வேண்டுமானாலும் கேள், தருவேன்.” என்று சொல்ல, முசுகுந்தன் அந்தத் தியாகேசரே வேண்டுமென்றான். தியாகேசரும் ஜீவசக்தியோடு இருந்தமையால் முசுகுந்தனைப் பார்த்துத் தன் கண்ணசைவால் பூவுலகம் கொண்டு செல்லுமாறு ஜாடை காட்ட, முசுகுந்தனும் மகிழ்ந்தான். தியாகேசரே வருகிறேன் என்றுவிட்டாரே?? ஆனால் முசுகுந்தன் கேட்ட பரிசை தேவேந்திரனுக்குக் கொடுக்க மனமில்லை. அவன் திகைத்துத் திடுக்கிட்டு, “இந்த விக்கிரஹம் திருமாலே வழிபட்டது. அவர் அனுமதி வேண்டும்” என்று சமாளிக்கப் பார்த்தான். ஆனால் திருமாலோ முழுமனதோடு அநுமதி கொடுத்துவிட்டார். ஆனால் இந்திரனுக்கோ தான் ஆத்மார்த்தமாக வழிபட்டு வந்த மூர்த்தியைக் கொடுக்க மனமே வரவில்லை. என்ன செய்யலாம் என யோசித்தான்.
பின்னர் இந்தத் தியாகேசரைப் போலவே இன்னும் ஆறு மூர்த்தங்களைச் செய்வித்தான். எல்லாம் ஒன்று போலவே இருந்தன. அவற்றோடு மஹாவிஷ்ணு கொடுத்த தியாகேசரையும் வைத்தான். இவற்றில் எது உனக்குப் பிடிக்கிறதோ எடுத்துக்கொள் என்று சொல்ல, முசுகுந்தனோ இறை அருளால், மஹாவிஷ்ணு பூஜித்த தியாகேசர் தான் வேண்டும் என அடையாளம் காட்டினான். தேவேந்திரனுக்கு இப்போது மீண்டும் திகைப்பு. எனினும் முசுகுந்தனும் சிவ பக்தன். தன் நெருங்கிய நண்பன். அவனுக்கோ நாம் வாக்களித்துவிட்டோம். ஆகவே மறுக்கக் கூடாது என எண்ணி, மனம் நிறைய சந்தோஷத்தோடு ஏழு மூர்த்தங்களையுமே அவனுக்குக் கொடுத்துவிட்டான். பூலோகத்தில் வைத்து பூஜித்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டான். அந்த ஏழு மூர்த்தங்களே சப்த விடங்கர்கள் எனப்படுவார்கள். திருவாரூரில் தியாகேசர் மாசி மாசம் ரிஷபக் கொடியோடு எழுந்தருளியதாக ஐதீகம்.
மற்றத் தலங்கள் பற்றிய விபரங்கள் வருமாறு:
சப்த விடங்கர்கள் என்பது உளி கொண்டு செதுக்கப் படாத மூர்த்தங்களையே விடங்கம் அல்லது விடங்கர் என்று சொல்வார்கள். டங்கர் என்றால் உளியால் செதுக்கியது. இந்த ஏழு மூர்த்தங்களும் உளியால் செதுக்கப்படாத மூர்த்தங்கள். “சீரார் திருவாரூர் சென்னாகை நள்ளாறு காரார் மறைக்காடு காராயில் பேரான ஒத்த திருவாய்மூர் உகந்த திருக்கோளிலி சத்த விடங்கத் தலம் “ என்னும் தனிப்பாடலில் சப்தவிடங்கத் தலங்களும் குறிப்பிடப் பட்டுள்ளன.
திருவாரூரில் வீதி விடங்கர்= ஆடியது அஜபா நடனம். மனதுக்குள்ளேயே ஜபித்துக்கொண்டு ஆடுவது. இது நம் சுழுமுனை சுவாசம் போல என்ற தத்துவமும் குறிப்பிடப் படுகிறது.
திருக்குவளை = அவனி விடங்கர். பிருங்க நடனம். மலருக்குள்ளே வண்டு சென்று ரீங்காரமிட்டுக் குடைவதைக் குறிக்கும் நடனம்.
திருநள்ளாறு= நக விடங்கர்- உன்மத்த நடனம். பித்தன், பிறைசூடியவன் அருளாளன் ஆடிய உன்மத்த நடனம், பித்துப் பிடித்தவன் போல் ஆடியதாம்.
திருநாகை = சுந்தரவிடங்கர்= தரங்க நடனம். கடல் அலைகள் எப்படி ஆடுகின்றன?? மேலேயும், கீழேயும், சுற்றிச் சுழன்றும், கரைக்கு வந்து மோதியும், திரும்பக் கடலுக்குள் சென்றும் ஆடிய ஆட்டமென்ன?? கடல் அலைகளைப் போன்ற நடனம்.
திருக்காராயில்= ஆதி விடங்கர்= குக்குட நடனம். கோழியின் நடை எப்படி இருக்கும்?? அதைப் போல். அனைத்தையும் படைத்தவன் ஆடும் ஆட்டமென்ன???
திருவாய் மூர்= நீல விடங்கர். கமல நடனம். பொய்கையில் பூத்திருக்கும் தாமரை மலர்போன்ற நடனம். தண்டு மட்டும் இருக்கும், மேலே பூ சுற்றுவது ஒற்றைக்காலில் நின்றாடுவது போல் இருக்குமல்லாவா??? அந்த நடனம்.
திருமறைக்காடு= புவனி விடங்கர் . ஹம்ச பாத நடனம். சொல்லவே வேண்டாம், அன்னப் பறவையின் நடனம் போல.
செங்கழுநீர்ப் பூவை வைத்துச் சரியாகக் கணித்தானாம் முசுகுந்தன் வீதி விடங்கரை. ஆகையால் அவருக்குச் செங்கழுநீர்ப் பூ சாற்றுவது விசேஷமாகச் சொல்லப் படுகிறது. மேலும் தேவேந்திரன் தியாகராஜ மூர்த்தங்களை அளிக்கும்போது, கூடவே திமிரி நாகஸ்வரம், பாரி நாகஸ்வரம், முகவீணை, யாழ், தவில், மத்தளம், ஆகியவற்றையும் சேர்த்துக் கொடுத்தானாம். பாரி நாயனம் திருவாரூரில் மட்டுமே வாசிக்கப் பட்டு வந்தது. தற்போதும் இந்த வாத்தியங்கள் எல்லாம் தேவலோக கந்தருது என்னும் குறிப்பிட்ட மரபினரால் வாசிக்கப் படுவதாய்ச் சொல்கின்றனர்.
இதைத் தவிர பஞ்சமுக வாத்தியம் என்னும் ஐந்து முகங்களைக் கொண்டதொரு அபூர்வமான வாத்தியமும் இங்கே உண்டு. ஐமுக முழவம் எனப்படும் இதை சங்கரமூர்த்தி என்னும் கலைஞர் வாசித்து வந்ததாய்ச் சொல்லப் படுகிறது. இந்த வாத்தியம் சதாசிவ மூர்த்தியின் ஐந்து திருமுகங்களில் இருந்து வந்ததாகச் சொல்லப் படுகிறது. சுமார் நான்கடி க்கு மேல் சுற்றளவு கொண்ட இதன் ஒரு முகம் பாம்பு சுற்றியது போலவும், மற்றொரு முகம் ஸ்வஸ்திக் சின்னத்தோடும், மூன்றாம் முகம் தாமரைப் பூ போலும், நான்காம் முகம் அடையாளமில்லாமலும் இருக்கும். ஐந்தாம் முகம் நடுவில் உள்ளது, பெரியதாக இருக்கும் என்றார்கள். மான் தோலால் கட்டப் பட்டிருக்கும் இந்த வாத்தியத்தை நந்தி தேவர் ஈசனின் நடனத்தின்போது வாசித்து வந்ததாகவும், இப்போது வாசிக்கும் பரம்பரையினரை “பாரசைவர்கள்” என்று அழைக்கப் படுவதாகவும் தெரிய வருகிறது. இந்த வாத்தியத்தின் ஒவ்வொரு முகத்தையும் தனியாகவும், அனைத்தையும் சேர்த்தும் வாசிக்கலாம் என்கின்றார்கள். தனியாக வாசிக்கும்போது ஏழு முறையும், சேர்த்து வாசிக்கும்போது ஐந்து முறையும் வாசிக்கப் படுமாம். இந்த வாத்தியம் வாசிக்கவென்றே விதிமுறைகள் இருப்பதாகவும், அதைக்குறிப்பிடும் நூல் இருப்பதாகவும் சொல்கின்றனர். இது தவிரப் பாரி நாயனத்தைத் திருவிழாக் காலங்களில் வீதிகளில் வாசிப்பதாகவும், அதற்கும் எந்த எந்த இடங்களில் எந்தப் பண் வாசிக்கவேண்டும் என்ற விதிமுறை இருப்பதாகவும் சொல்கின்றனர். இங்கே உள்ள விளக்கை விருடி விளக்கு என்கின்றனர். தேர் போன்ற அமைப்பில் மர வடிவ அமைப்பில் உள்ளது இது.
திருவாரூர்ப் பயணம் தொடரும்.
பின் குறிப்பு. இந்தப் பாரி நாயனத்தை வாசிப்பது கடினம் என்பார்கள். தில்லானா மோகனாம்பாள் என்னும் தொடரில் இந்தப் பாரி நாயனத்தில் தில்லானா வாசிப்பதாகத் தான் ஷண்முக சுந்தரம் மோகனாம்பாளிடம் சபதம் போடுவான். அவளும் அதற்கு அந்தத் தில்லானாவிற்குத் தான் ஆடிக்காட்டுவதாகவும் பதில் சபதம் போடுவாள்.
திமிரி நாதஸ்வரம் சின்னதாகவும் நீளம் குறைவாகவும் இருக்கும் எனவும் இதைச் சில மாற்றங்களோடு டி.என்.ராஜரத்தினம் பிள்ளை அவர்கள் அறிமுகம் செய்ததாகவும் அதுதான் இப்போது புழக்கத்தில் உள்ள பாரி நாயனம் என்றும் அறிய வருகிறது. நீண்ட நேரம் வாசிக்க முடியும் என்பது இதன் சிறப்பு.
**********************************************************************************
அன்றிரவு ஏசி எல்லாம் நன்றாகவே இருந்தாலும் தூக்கம் என்னமோ சரியாய் இல்லை. காலையில் வேறே சீக்கிரம் கோயிலுக்குப் போகணும் என்னும் எண்ணம் மனதின் அடியிலேயே இருந்ததாலும் தூங்க முடியாமல் இருந்தது. காலை நாலரைக்குக் காஃபி கிடைக்கும் எனத் தங்கி இருந்த லாட்ஜின் ஊழியர் சொல்லி இருந்தார். அந்த நேரம் அவ்ங்கல்லாம் எழுந்திருப்பாங்களோ இல்லையோ, நானே போய் வாங்கிட்டு வந்துடறேன் என நம்ம ரங்க்ஸ் சொல்லி இருந்தார். நான்கு மணிக்கெல்லாம் விழிப்பு வந்துவிட எழுந்து உட்கார்ந்து காலைக் கடன்களை முடித்துக் கொண்டோம். குளிப்பதற்கு முன்னர் காஃபி கிடைக்குதானு பார்க்கலாம்னு ஃப்ளாஸ்கை எடுத்துக்கொண்டு நம்மவர் சென்றார். ஹிஹிஹிஹி, பத்தே நிமிஷத்தில் திரும்பி வந்துவிட காஃபி அதுக்குள்ளே கிடைச்சதானு நான் கேட்க, கடையே திறக்கலை என்றாரே பார்க்கலாம்!
முன்னெல்லாம் நாங்க கும்பகோணத்தில் லாட்ஜில் தங்கிக் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று கொண்டிருந்த நாட்களில் காலை நாலரைக்கே அங்கே டவுன்ஹால் பக்கம் ஒரு தேநீர்க்கடையில் நல்ல காஃபி கிடைக்கும். தங்கி இருந்த லாட்ஜில் இருந்து நடந்தே அங்கே போய்க் காஃபி குடிச்சுட்டு வருவோம். திரும்பி வரும்போது வெங்கட்ரமணாவில் ஓட்டல் திறந்து காஃபி ரெடி அறிவிப்புப் பலகையைக் காணலாம். இப்போல்லாம் தெரியலை. ஆனால் திருவாரூர் மாதிரி ஊர்களில் காலையிலேயே நடமாட்டம் இருக்கும்னு நினைச்சது தப்பாய்ப் போச்சு! என்ன செய்யலாம்னு யோசிக்கும்போது குருக்கள் தொலைபேசியில் அழைத்து விரைவில் கோயிலுக்கு வரும்படி சொல்லச் சரினு குளித்துவிட்டுக் கோயிலுக்குக் கிளம்பிட்டோம். நாங்க இருந்தது வடக்கு வீதி என்பதால் அங்கே இருந்து வடக்கு கோபுரம் பத்தே நிமிட நடையில் இருந்தது. நடந்தே சென்றோம். அதிகாலை என்பதால் தெருவில் கூட்டமில்லை என்றாலும் கோயிலுக்குச் செல்பவர்கள் போய்க் கொண்டிருந்தார்கள்.
வடக்கு வீதியில் இருந்து வடக்கு கோபுர வாசலுக்குப் போனோம். அங்கே திட்டி வாசல் ஒன்று இருந்தது. அதன் வழியாகத் தான் கோயிலுக்குள் நுழையணும். அந்தத் திட்டி வாசலுக்குப் போக ஐந்தாறு படிகள். ஒவ்வொன்றும் ஒன்றரை அடி, இரண்டடி உயரம். அப்பாடி! எப்படி இந்த மலையைத் தாண்டுவேன் என பிரமிப்பு ஏற்பட்டது. முதலில் ரங்க்ஸ் இறங்கிட்டு எனக்குக் கை கொடுத்து இறக்க முயலக் கால் கீழேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ போய்க் கொண்டே இருந்தது. உள்ளூரக் கொஞ்சம் பயத்துடனேயே காலைக் கீழே வைத்தேன். அப்படியும் அரை அடி இருந்திருக்குப் போல. கால் "தொப்"பெனக் கீழே பதிய முழங்கால் சுளுக், மளுக்! சமாளித்துக் கொண்டு அடுத்த படி இறங்கத் தயாரானேன். இப்படியாகப் பத்து நிமிஷங்கள் இதிலேயே போக குருக்கள் தேடிக் கொண்டு வந்துவிட்டார்.
மெல்ல இறங்கி நடக்க ஆரம்பித்தேன். ஒரு அடி எடுத்து வைப்பதும் சிரமமாக இருந்தது. என்றாலும் விடாமுயற்சியுடன் நடந்தேன். பார்த்த குருக்கள் தீபாராதனை நேரம் நெருங்கிவிட்டதால் தான் முன்னால் போவதாகவும் எங்களை வரச் சொல்லிவிட்டும் போய் விட்டார். நம்மவரும் வேகமாக நடந்து தீபாராதனை பார்க்கும் ஆவலில் போய்க் கொண்டிருந்தார். அவர் பிரகாரத்தின் மூலை திரும்பும்போது நான் பாதி கூடத் தாண்டலை. முன்னால் ஆட்கள் போய்க் கொண்டிருந்தாலும் அந்தப் பரந்து விரிந்த பிரகாரத்தின் நடுவில் நான் மட்டும் தன்னந்தனியே போய்க் கொண்டிருந்தது பயமாகவே இருந்தது. இதுக்குள் என்னைக் காணாமல் ரங்க்ஸ் திரும்பி வந்து எட்டிப் பார்க்கக் கையை ஆட்டி அவரைப் போகச் சொன்னேன். அவராவது பார்க்கலாமே என. இதுக்குள்ளே கோயில் சந்நிதியிலிருந்து வாத்ய முழக்கம் கேட்க "ஆருரா! தியாகேசா!" என்னும் குரல்கள் ஒலிக்கக் காலையில் பாடும் திருப்பள்ளி எழுச்சியை ஓதுவார் பாடத் திருப்பள்ளி எழுச்சி ஆரம்பம் ஆனது என்பதைப் புரிந்து கொண்டேன்.
நான் போய்ச் சேரும் சமயம் ஆரத்தி எல்லாம் முடிஞ்சு தியாகேசர் நிர்மாலியங்களைக் களையும் முன்னர் உள்ள நிலையில் காணப்பட்டார். காலையில் முதல் முதல் அர்ச்சனையை எங்களுக்காக குருக்கள் செய்து வைத்தார். பின்னர் திரை போட்டு அபிஷேஹம் எல்லாம் முடிந்து அலங்காரங்கள் முடிந்து அர்ச்சனைக்கு நேரம் ஆகும் என்பதால் அப்போதே செய்து வைத்தார். தியாகேசரைப் பார்க்க மேடைக்கு ஏறுவது பெரும் பிரயத்தனமாக இருந்தது. எப்படியோ ஏறிப் போய் அவரையும் வன்மீக நாதரையும் பார்த்துவிட்டு தீபாராதனையை வாங்கிக் கொண்டு அங்கிருந்து கிளம்பினோம். போகும் வழியில் நவகிரஹங்கள், ருண விமோசனர், ரௌத்ர துர்கை ஆகியோரைப் பார்த்துக் கொண்டு கமலாம்பிகையைப் பார்த்துவிட்டு நுழையும்போதே உட்கார்ந்திருக்கும் உச்சிஷ்ட கணபதிக்கும் கமலாம்பிகைக்கும் அர்ச்சனையை முடித்துக் கொள்ள எண்ணம்.
தலபுராணம் தெரிந்து கொண்டேன். பொதுவாகவே இந்திரன் கொஞ்சம் ஃப்ராடுதான் போல!!
ReplyDeleteமனிதன் தானே தேவன் ஆகிறான். :)
Deleteஹாஹாஹாஹா ஸ்ரீராம் நானும் இப்படிச் சொல்வதுன்டு. ஒரு புகழ் பெற்ற உபன்யாசகர் இந்திரனை ஃப்ராட் என்றும் எங்கெல்லாம் கெட்டது நடக்கிறதோ அங்கு அவன் காரணமாக இருப்பான் என்றும்.....ஏனோ மக்கள் ரொம்ப ஹைப் கொடுத்து ஏற்றி வைத்திருக்கிறார்கள் என்றும் சொல்லியிருப்பதாக என் தங்கை பெண் சொன்னாள்.
Deleteகீதா
அப்படி இல்லை. மனித குணத்திற்கும்/தேவ குணத்திற்கும் இடையில் ஏற்படும் சின்னச் சின்ன வித்தியாசங்களினால் ஏற்படும் தடுமாற்றம் இந்திரனைப் படுத்துகிறது.
Deleteகீதாக்கா நீங்கள் சொல்லியது புரிகிறது...
Deleteகீதா
காஃபி கிடைக்காதது கஷ்டமாக இருந்திருக்கும். காலையில் காஃபி குடிக்காவிட்டால் மனதுக்குள் என்னவோ போல இருக்கும் எனக்கு!! தஞ்சை, திருவாரூர், குடந்தைகளில் இந்நிலையா? ஆச்சர்யம்தான்!
ReplyDeleteஇல்லை ஶ்ரீராம்! சொல்லப் போனால் நிம்மதியாக இருந்தது, காஃபி குடிச்சிருந்தால் கழிவறைப் பிரச்னை எல்லாம் வந்திருக்கும். பொதுவாகவே உலக மக்கள் அனைவருமே இப்போல்லாம் காலை ஏழு மணி எட்டு மணிக்கு முன்னாடி எழுந்திருப்பதே இல்லை போல! நாங்க ஊர்ப்பக்கம் போகும்போதெல்லாம் காலை ஏழரைக்கெல்லாம் கிராமங்களில் வாசல் தெளிப்பதைப் பார்த்து வியப்பாக இருக்கும்.
Deleteஉங்களுக்காவது இந்த வயதில் முழங்கால் வலி முதலானவை வருகிறது. எனக்கு இப்போதே ரொம்பக் கஷ்டமாக இருக்கிறது. சொல்ல வெட்கமாக இருந்தாலும் சிரமம் சிரமம்தான்.
ReplyDeleteஹிஹிஹி, முழங்கால் வலி, வீக்கத்துக்கும் எனக்கும் நினைவு தெரிந்ததில் இருந்து பழக்கம். அப்போல்லாம் பள்ளிக்குப் போகும்போதெல்லாம் கஷ்டப்படுவேன். மருத்துவர் இத்தியால் கிளிசரின் என்ற ஒரு தார் போன்ற மருந்தைப் பூசிவிடுவார். (முன்னேயே சொன்ன நினைவு!) பின்னர் கொஞ்ச நாட்கள் இல்லாமல் இருந்தது மறுபடியும் 25 வயதுக்கப்புறமாத் தொந்திரவு தான். :( அப்போவே குடும்ப மருத்துவர் என்னிடம் 40 வயசுக்கப்புறமா நடப்பதே சிரமமாகிடும் என்பார். :(
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteநல்ல விரிவான சுவாரஸ்யமான பதிவு. கோவில் தலபுராணக் கதை அறிந்து கொண்டேன். உங்கள் அருமையான எழுத்து நடையில் மிக நன்றாக சொல்லியிருக்கிறீர்கள்.தெரியாத பல தகவல்களையும் தெரிந்து கொண்டேன். இசைக்கருவிகளைப் பற்றி கூறியதும், பாரி நாயனம் பற்றியும் விளக்கமாக கூறியதும் அருமை. நல்ல விஷயங்கள்.
காலையில் காஃபி கூட கிடைக்காமல், வெறும் வயிற்றோடு சுவாமி தரிசனம் கிடைத்திருக்கிறது என்றாலும், ஒன்றும் அருந்தாமல் ஆங்காங்கே நடந்து செல்லவும் உடம்புக்கு தளர்ச்சியாகத்தான் இருந்திருக்கும். படிகளின் உயரங்கள் பிரம்பை ஊட்டுகின்றன. அதில் இறங்குவது கடினந்தான். எப்படியோ நல்லபடியாக தியாகேசரை தரிசனம் செய்து விட்டீர்கள். இறைவன்தான் தங்களுக்கு அந்த சமயங்களில் தேக பலமும். மனோபலமும் தந்து உதவியுள்ளார். அடுத்து அவ்விதமே அம்பிகையையும் தரிசித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். அதற்குப் பின்தான் காலை உணவுட எடுத்துக் கொண்டீர்களா ? அடுத்த பதிவையும் காண ஆவலாக உள்ளேன். தங்களின் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
காஃபி சாப்பிடாமல் போனதெல்லாம் ஒண்ணும் பிரச்னையாக இல்லை கமலா. நடப்பது தான் பிரச்னையாக இருந்தது. அன்னிக்கு என்னமோ போய்ப் பார்த்துட்டேன். இனி நினைச்சால் கூட முடியாது.
Deleteவிரிவான தல வரலாறுகள் அருமை.
ReplyDeleteநிறைய தடவை இந்த கோயில் போய் இருக்கிறோம்.
பாரி நாயனத்தை பற்றி சொன்னது அருமை.
திருவெண்காட்டில் இருக்கும் போது அகோரமூர்த்தி 5ம் திருவிழாவிற்கும் நடராஜர் அபிஷேகத்தின் போதும் திரு .ராஜரத்தினம் அவர்கள் நாயனம் வாசிப்பார்.
விரதமாக இருந்து சுவாமி தரிசனம் செய்து இருக்கிறீர்கள் இறைவன் உடல் நலத்தை தருவார்.
முழங்கால் வலி இப்போது தேவலையா?
நன்றி கோமதி. திருவாரூர் போறச்சே எல்லாம் எனக்குத் தில்லானா மோகனாம்பாளும், ஷண்முக சுந்தரமும் நினைவில் வருவார்கள். கூடவே பாரி நாயனமும். டி.என்.ராஜரத்தினம் பிள்ளையின் வாசிப்பைக் கேட்டதாக நினைவில் இல்லை. ஷேக் சின்ன மௌலானா சாஹிபின் நாதஸ்வரம் கேட்டிருக்கேன். ஶ்ரீரங்கம் கோயிலுக்குப் பரம்பரை மேளகாரர்கள் அவர் குடும்பம் தான். தற்சமயம் பேரன் காசிமோடு இன்னொருத்தரும் வாசிக்கிறார். அவங்க குடும்பம் மட்டும் வீதியிலும் குடி இருக்காங்க.
Deleteதலபுராணத்தோடு கோயில் தரிசம் சென்று வந்த நிகழ்வை அழகாக சொன்னீர்கள் மகிழ்ச்சி.
ReplyDeleteநன்றி கில்லர்ஜி.
Deleteதிருக்காராயில், திருவாமூர் - எங்கிருக்கின்றன?
ReplyDeleteதிருவாரூரில் இருந்து பத்து, பதினைந்து கிலோமீட்டருக்குள் இருக்கு. போனதில்லை.
Deleteதிருவாய்மூர் தான் கருணாநிதியின் சொந்த ஊரான திருக்குவளைக்கு அருகே இருக்குனு நினைக்கிறேன். திருக்குவளை போனோம். சாலைகளெல்லாம் பிரமாதமாக இருக்கும். எழுதவும் எழுதினேன். திருக்காராயில், திருவாய்மூர் இரண்டுமே காவிரியின் தென்கரைத் திருத்தலங்கள் எனவும் நினைக்கிறேன்.
Deleteசிறிய வயதில் துள்ளித் திரிந்ததெல்லாம் மனதில் நிழலாடியிருக்கும் இல்லையா?
ReplyDeleteஹிஹிஹி, மாமாவை நினைத்துக் கொண்டு என்னைக் கேட்டீர்களா? நான் எங்கே அங்கே எல்லாம் துள்ளித் திரிஞ்சிருக்கேன்! மதுரையில் இருந்தப்போவே சின்ன வயசில் ஓடக் கூடாது/ஆடக்கூடாது/பாடக்கூடாது/தலை நிமிர்ந்து நடக்கக் கூடாது என எல்லாமும் கூடாது என்னும் நிபந்தனைகள் தான். :( மாமாவுக்குச் சொந்தக்காரங்க இருந்ததால் அவர் போயிருக்கார்.
Deleteஇல்லை. இப்போ நடை தளரும்போது, சிறிய வயது நினைவு வந்திருக்குமே...அதைத்தான் கேட்டிருந்தேன்.
Deleteசின்ன வயசுக்குப் போவானேன். 2012 ஆம் ஆண்டில் கூடக் கீழே படுத்துக் கொண்டிருக்கேன். வேகமாக நடந்திருக்கேன். அவ்வளவு ஏன்? இப்போ சமீபத்தில் 2017 ஆம் ஆண்டில் கொடைக்கானலில் பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயிலுக்குப் போனதும் அதன் பின்னர் 2019 ஆம் ஆண்டில் திரும்பப் பிரார்த்தனையை முடிச்சதும் கூடக் கஷ்டமாகத் தெரியலை. :( அதன் பின்னரே கோலாப்பூர் மஹாலக்ஷ்மி தரிசனத்துக்கும் போனேன். :( இப்போ 2 வருஷங்களாக ரொம்ப மோசம்.
Deleteஅண்மையில்கூட திருவாரூர் கோயில் சென்றுவந்தேன். பிரமிப்பை உண்டாக்கும் கோயில்களில் இதுவும் ஒன்று.
ReplyDeleteஆய்வுப்பணியால் முழுமையாக வலைப்பக்கம் வர இயலவில்லை. பணி ஓரளவுக்கு நிறைவு பெற்றபின் தொடர்வேன்.
வாங்க முனைவர் ஐயா. உங்கள் வேலை மும்முரங்களுக்கிடையே எப்படியோ நேரம் ஒதுக்கி வந்து கருத்திடுவதற்கு மிக்க நன்றி.
Deleteஅறியாத புராணக் கதை கீதாக்கா.
ReplyDeleteதிருவாரூர்க்கோயில் சென்றிருக்கிறேன். அழகான பிரம்மாண்டமான கோயில். சென்றிருந்த போது பணிகள் நடந்து கொண்டிருந்ததால் பல சன்னதிகளும் மூடப்பட்டு, ஆங்காங்கே தண்ணீர் தேங்கி, சிமென்டும் குப்பைகளுமாக இருந்தது கோயில் வளாகம்...
4 அரை மணிக்குக் காபி கிடைக்கிறது என்றதும் அட போட்டேன் பரவாயில்லையே என்று கடைசியில் ஹாஹாஹாஹா...பரவாயில்லை அதுவும் நல்லதுக்குத்தான் ...
நடப்பதற்குக் கஷ்டப்பட்டு தரிசனம் செய்திருக்கிறீர்கள். நல்லது நடக்கும் கீதாக்கா.
கீதா
இங்கே இளங்கோயில் ஒண்ணு இருக்கு. இம்முறை போனப்போ அங்கே எல்லாம் போகலை/ இதுவே பெரிய விஷயமாக ஆகி விட்டது.
Deleteஇளங்கோயில் பற்றியதையும் தெரிந்து கொண்டேன் கீதாக்கா. மறுபடியும் செல்லும் வாய்ப்பு கிடைத்தால் அக்கோயிலுக்கும் செல்ல வேண்டும்..
Deleteகீதா
கருத்து வந்திருக்கும் என்று நினைக்கிறேன்
ReplyDeleteகீதா
வந்ததைப் போட்டிருக்கேன்.
Deleteதலபுராணம் அறிந்தோம். பஞ்சமுக வாத்தியம் கேள்வி பட்டதுண்டு உங்கள் பகிர்வில் விரிவாக அறிந்து கொண்டோம்.
ReplyDeleteஉங்கள் உடல் சிரமத்தின் மத்தியிலும் தரிசனம் பெற்றது சிறப்பு.
வாங்க மாதேவி. எல்லாம் அவன் அருள்.
Delete