முந்தைய பதிவில் சொன்ன விறல்மிண்ட நாயனாரின் சரித்திரம் கீழே காணலாம்.
விறல்மிண்ட நாயனார் திருச்செங்குன்றூரைச் சேர்ந்தவர். இவர் சிவபெருமானிடத்தில் பூண்டிருந்த பக்தி அடியார்களிடமும் பக்தியும் , மதிப்புமாக மாறி இருந்தது. சிவனடியாரை எவரானும் நிந்தித்தாலே அவர்களைக் கடுமையாகத் தண்டிப்பார். அவருடைய பக்தி அப்போது வீரமாக மாறிவிடும். இவருடைய இந்த வீரத்தின் காரணமாகவே விறல்மிண்டர் என்ற பெயரும் ஏற்பட்டதாய்ச் சொல்லுவார்கள். விறல் என்றால் வீரம் என அர்த்தம். அஞ்சாநெஞ்சம் கொண்ட இவர் ஆலயங்கள் தோறும் சென்று இறைவனைப் பாடித் தொழுது வழிபாடுகள் செய்துவருவார். ஆனால் ஆலயங்களின் மூல மூர்த்தத்தைத் தரிசிக்கும் முன்பு, முதலில் ஆலயத்திற்கு வருகை புரிந்திருக்கும் சிவனடியார்களைத் தொழுது வழிபட்டுவிட்டுப் பின்னரே ஆலயங்களின் மூல மூர்த்தத்தைத் தரிசிப்பதை வழக்கமாய்க் கொண்டிருந்தார்.
அப்போது ஒருநாள் திருவாரூருக்கு வந்திருந்த இவர், அங்கே இருந்த சிவனடியார்களைக்கண்டு மகிழ்ந்து வணங்கி அவர்களைப் போற்றி நின்றார். அவர் வந்த சமயமே சுந்தரமூர்த்தி நாயனாரும், வன்மீக நாதர் என்னும் புற்றிடங்கொண்ட நாதனைத் தரிசிக்க வந்தார். அடியார்களை மனதால் வணங்கும் பேறு படைத்த சுந்தரர், பக்குவம் மிகுந்திருந்த காரணத்தால் தேவாசிரிய மண்டபத்தில் அடியார்களைக் கண்டும், அவர் வன்மீகநாதரைத் தரிசிக்கவெனச் சென்றார். அடியார்கள் எவரையும் (விறல்மிண்ட நாயனார் உட்பட) வணங்கவில்லை. ஆனால் விறல்மிண்டருக்கு இது மாபெரும் குற்றமாய்ப் பட்டது. சுந்தரருக்கு அகம்பாவம் மிகுந்துவிட்டது எனவும், அதனால் தான் அடியார்களை மதிக்கவில்லை என்றும் நினைத்துக்கொண்டுவிட்டார். ஏற்கெனவே கோபக்காரர் ஆன விறல்மிண்டருக்குக் கோபம் அதிகமாகிவிட்டது.
“முதலில் வணங்கத் தக்க அடியார்கள் தேவாதிதேவர்களுக்கும் மேலானவர்கள். இவர்களை வணங்காமல் இவன் நேரே உள்ளே செல்கின்றானே? இவன் ஒரு வன் தொண்டனோ? அடியார்களுக்குப் புறம்பானவனோ? ஆம், ஆம் இவன் வன் தொண்டனே, அடியார்களுக்குப் புறம்பானவனே. இவன் மட்டுமில்லை, இவனை வலிய வந்து ஆட்கொண்ட அந்த வீதிவிடங்கனுமே அடியார்களுக்குப் புறம்பானவனாகிவிட்டான்.” என்று கோபத்துடனும், கடுமை தொனிக்கவும் சொன்னார். ஆனால் மனப்பக்குவம் பெற்றிருந்த சுந்தரருக்கோ விறல்மிண்டரின் இந்தச் செய்கையினால் கோபம் வரவில்லை. மாறாக அடியார்களிடம் பக்தி பூண்டிருக்கும் விறல்மிண்டரின் பக்தியை உயர்வாகவும், உன்னதமாகவும் எண்ணி மனம் மகிழ்ந்து பெருமையுற்றார். எம்பெருமானின் சரணங்களில் விழுந்து வணங்கினார்.
"இந்த அடியார்களுக்கு எல்லாம் நான் அடியானாக ஆகும் பேற்றை எனக்குத் தந்தருளவேண்டும்.” என்று ஈசனிடம் வேண்டினார். ஈசனும் மகிழ்ந்து, “தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்” என்ற அடியை எடுத்துக் கொடுத்துப்ப் பாடுமாறு சொல்ல அனைவர் மனமும் மகிழுமாறு எழுந்தது திருத்தொண்டத்தொகை. திருத்தொண்டர்களின் பெருமையைப் பாடிப் புகழும் அந்தப் பதிகங்களைக் கேட்டு விறல்மிண்டரின் மனமும் மகிழ்ந்தது. சுந்தரரின் பக்தி பக்குவமடைந்த பக்தி என்பதையும் புரிந்துகொண்டார்.
விறல்மிண்டரைப் பற்றிய வேறு மாதிரிக் கதையில் சுந்தரரின் மீது கோபம் அடங்காநிலையிலேயே விறல்மிண்டர் திருவாரூரை விட்டு வெளியேறிவிட்டார். ஆனால் அதன் பின்னர் திருவாரூரை மிதிக்கவே மாட்டேன். அந்த எல்லைக்கு அருகிலே கூட வரமாட்டேன் என்று திட சங்கல்பம் செய்து கொண்டு இருந்தார். அவர் அடியார்களுக்கு நாள் தோறும் அன்னம் அளித்து வந்தார். தம் இல்லத்திற்கு வரும் அடியார்கள் திருவாரூரைச் சேர்ந்தவர் எனத் தெரிந்தால் அவர்கள் காலைத் துண்டித்துவிடுவாராம். இப்படி ஒரு கொடூரமான காரியத்தைச் சுந்தரர் மேல் கொண்ட கோபத்தினால் செய்து வந்ததாகச் சொல்கின்றனர். இவரைத் தடுத்தாட்கொள்ள விரும்பிய ஈசன் சிவனடியாராக வந்து உணவுண்ண அமர்ந்தார். முன்னரே அவரின் ஊரைக் கேட்டு அறிந்த விறல்மிண்டரின் மனைவியார் சிவனடியாரான ஈசனிடம் திருவாரூர் என்ற பெயரைச் சொல்லவேண்டாம் எனக் கூறி இருந்தார்.
ஆனால் ஈசன் தாம் பார்த்துக்கொள்வதாகவும் விறல்மிண்டரின் கொடுவாளை வலப்பக்கமே அது வரை வைத்திருந்ததை அன்று மட்டும் இடப்பக்கம் வைக்குமாறும் மற்றதைத் தாம் பார்த்துக்கொள்வதாயும் சொல்லிவிடுகிறார். உணவுண்ண அமரும்போது தாம் திருவாரூரைச் சேர்ந்தவன் என சிவனடியாரான ஈசன் கூற, கோபம் கொண்ட விறல்மிண்டர் வலப்பக்கம் கை வாளை எடுக்கச் சென்றது. அங்கே வாள் இல்லாமல் தேட மனைவி இடப்பக்கம் வைத்திருப்பதைக் காட்ட அதை எடுப்பதற்குள் சிவனடியாரான ஈசன் எழுந்து ஓட்டம் பிடித்தார். விடாமல் அவரைத் துரத்தின விறல்மிண்டரைத் திருவாரூர்க்குள்ளேயே இழுத்துவிட்டார் ஈசன். பின்னர் சிரித்துக் கொண்டே ”இது திருவாரூர், நீர் உள்ளே வந்துவிட்டீரே?” என்று வினவ, அதிர்ச்சி அடைந்து சுற்றும் முற்றும் பார்த்த விறல்மிண்டர் தம் காலைத் தாமே துண்டித்துக்கொள்கிறார். அவரைத் தேற்றிய ஈசன் தம் சுய உருவைக் காட்டுகிறார். சுந்தரரின் பக்தியைப் பற்றியும் அவரை உணரச் செய்த ஈசன் அவருக்கு முக்தி கொடுத்து அருளிச் செய்கிறார் கயிலையிலே சிவகணங்களுக்குத் தலைவனாகும் பேறும் பெறுகின்றார்.
********************************************************************************
நடுவில் அந்தப் பதிவுகளில் நாயன்மாரின் சரித்திரமும் இடம் பெற நேர்ந்திருக்கிறது. அதைத் தான் மேலே பார்க்கிறீர்கள். அடுத்துத் திருவாரூரின் விட்ட கதை தொட்ட கதை வரும். இங்கே நான் டிஃபன் சாப்பிட்டதாகப் பெயர் பண்ணிட்டுப் படுத்துக்கவும், அவர் சுமார் ஒன்பதரைக்குக் கோயிலுக்குக் கிளம்பிப் போயிட்டார். அரைகுறை நினைவு எனக்கு. தூக்கமா/மயக்கமானு புரியாத நிலை. திடீரென மருந்துகள் சாப்பிடாதது நினைவில் வரவே எழுந்து மாத்திரைகளைத் தேடி எடுத்துக் கொண்டு ஶ்ரீரங்கத்தில் இருந்து எனக்கெனப் பிரத்யேகமாய்க் கொண்டு போயிருந்த தண்ணீரைக் குடித்து மாத்திரைகள் போட்டுக் கொண்டது தான் தெரியும். அடுத்த அரை மணி நேரத்துக்கு நிலைகொள்ளாமல் வயிற்றுப் போக்கு! என்ன செய்யறதுனு புரியலை. அதற்கென மருந்து கை வசம் இருந்தாலும் அதைப் போட்டுக்கொள்ளலாமா வேண்டாமா என யோசனை. அப்படியே படுத்துக் கிடந்தேன். மணியோ நகரவே இல்லை. நாலைந்து தரம் போனப்புறம் வயிற்றில் உள்ளவை எல்லாம் வெளியே வந்துடுத்து போல. கொஞ்சம் குறைந்தது.
வயிற்றைச் சுற்றித் துண்டைக் கட்டிக் கொண்டு படுத்துக் கொண்டே இருந்தேன். அலைபேசி அழைக்கவே எடுத்துப் பேசினால் குருக்கள் தான். மாமா ரூமுக்கு வந்துட்டாரானு கேட்கவே எனக்குத் திகைப்பு. இல்லையே என்றேன். உடனே அவரே சரி, சாப்பாடு வாங்கப் போயிருப்பார். இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துடுவார். கவலைப்படாதீங்கோ. அபிஷேஹங்கள் எல்லாம் நல்லபடி முடிந்தது என்று சொல்லிவிட்டுத் தான் இன்னும் சற்று நேரத்தில் பிரசாதங்களுடன் அங்கே ரூமுக்கு வருவதாகவும் தெரிவித்தார். சரினு எழுந்து கிளம்புவதற்கான ஆயத்தங்கள் செய்து கொண்டேன். வயிற்றுப் போக்கு குறைந்திருந்தாலும் வலி இருந்து கொண்டே இருந்தது. சிறிது நேரத்தில் நம்ம ரங்க்ஸும் வந்துவிட்டார். ஒரே ஒரு பாக்கெட் தயிர்சாதம் மட்டும் வாங்கி வந்திருந்தார். என்ன ஆச்சுனு நான் கேட்கவே குருக்கள் பிரசாதங்களாகப் புளியோதரை, சர்க்கரைப் பொங்கல் தயிர்சாதம் எல்லாம் கொண்டு வருவதால் ஒருவேளை தயிர்சாதம் அதிகம் தேவைப்பட்டால் இருக்கட்டும்னு வாங்கினதாகச் சொன்னார்.
அபிஷேஹம் எல்லாம் நல்லபடி முடிந்ததா எனக் கேட்டதும் அபிஷேஹம் நல்லபடியாக சிரத்தையுடன் குருக்கள் செய்து கொடுத்தார். அம்பத்தூரில் நமக்கு எதிர்சாரி வீட்டில் இருப்பவர்கள்(இப்போவும் இருக்காங்க) அவங்க அப்பாவுடன் வந்திருந்தார். அவரும் அபிஷேஹங்கள் தான் செய்தார். உன்னை ரொம்ப விசாரித்தார் என்று சொல்லிவிட்டு கோயில் அலுவலகத்தில் அபிஷேஹப் பொருட்கள் எதுவும் சரிவரக் கொடுக்கவே இல்லைனு வருந்தினார். அன்று எங்களையும் சேர்த்து 3 பேர் அபிஷேஹம் செய்திருக்காங்க. ஒருத்தருக்கு அபிஷேஹப் பொருட்களுக்கு 1500 ரூபாயோ என்னமோ வாங்கி இருக்காங்க. ஆனால் கொடுத்தது ஒரு சின்னச் சொம்பில் பால் மட்டும். சின்னப் பொட்டலம் சந்தனம். ஒரே ஒரு பொட்டலம் மஞ்சள் பொடி. மற்றபடி தயிர், நெய்யெல்லாம் இல்லை. பஞ்சாமிர்தமோ பஞ்சாமிர்தம் செய்யப் பழங்களோ கொடுக்கலை. மாலை பூவெல்லாம் கூடச் சரியாக் கொடுக்கலையாம். நல்லவேளையாக அம்மனுக்குச் சார்த்தப் புடைவை, ருண விமோசனருக்கு வேஷ்டி எல்லாம் குருக்களே வாங்கி இருக்கார். 3 ஸ்வாமிக்கு அபிஷேஹங்கள் செய்ய மொத்தமாகக் கொடுத்ததே மேலே சொன்னது தானாம். குருக்கள் தனியாகப் பால், தயிர் வாங்கி வைச்சிருந்ததால் ஏதோ ஒப்பேத்தி இருக்கார். அர்ச்சனைக்குதட்டு மாலையுடன், வெற்றிலை, பாக்கு, தேங்காய், பழம் மூன்று சந்நிதிகளுக்கும் ஒருத்தருக்கு 3 வீதம் 3பேர்களுக்கும் சேர்த்து மொத்தம் ஒன்பது கொடுக்கணும். ஆனால் அவங்க கொடுத்ததோ ஒரு சந்நிதிக்கு ஒன்று தான். நான் மட்டும் கோயிலுக்குப் போயிருந்தால் நிச்சயம் அறமற்ற நிலையத்துறை அலுவலகத்தில் போய்ச் சண்டையே போட்டிருப்பேன். தியாகேசர் வம்பு வேண்டாம்னு என்னை ஓட்டல் அறையிலேயே இருக்கும்படி பண்ணிட்டார். :(
கும்பகோணத்தில் சில கோவில்களிலும் இந்தப் புகாரை வாசித்தார்கள். ஏதேனும் நேர்ந்துகொண்டால், நேரடியாகப் பணத்தைக் கொடுத்தால், நாங்களே நல்ல பொருட்களை வாங்கி பிரசாதம் செய்துவிடுகிறோம். ஆபீசில் கொடுத்தால் கெட்டுப்போன அல்லது உபயோகமில்லாதவற்றைக் கொடுக்கறாங்க. சில சமயம் சில பொருட்களையும் கொடுப்பதில்லைனு சொன்னாங்க. ஒருவேளை மக்கள் மனதில், கோவில் பணியாளர்கள் மீது கோபம் வரட்டும் என்று அரசு செய்கிறதோ என்னவோ
ReplyDeleteஇன்னும் சொல்லப் போனால் பல கோயில்களிலும் இப்படித்தான் அபிஷேஹம் எனில் குறைந்த பக்ஷமாக வஸ்திரம் உள்பட 3,000/- ரூபாயிலிருந்து 6,000/- வரை வாங்கறாங்க. ஆனால் கொடுக்கும் பொருள்கள் ரொம்பக் குறைவு. ஒரு கோயிலில் இப்படிக் கேட்க நாங்க வஸ்திரம் நாங்க வாங்கறோம்னு சொல்லிட்டு ட்ரஸ்டியிடம் சொல்லி அபிஷேஹப் பொருட்களையும் நாங்களே வாங்கித் தருமாறு ஏற்பாடு செய்துட்டோம். பால், தயிர், இளநீர் போன்றவற்றிற்கு உள்ளூரிலேயே ஏற்பாடு செய்தோம். கடவுளுக்கு பக்தர்கள் மனமாரச் செய்வதைக் கூட அனுமதிப்பதில்லை. :( பக்தர்களே வாங்கிக் கொடுக்கணும்னு ஒரு சட்டம் போட்டால் கூடத் தேவலை.
Deleteவிறல்மிண்டர் சரித்திரம்.... இண்டெரெஸ்டிங்
ReplyDeleteஆமாம்.
Deleteஅடியாரைத் தொழுவதே, அரங்கனைத் தொழுவதை விடச் சிறந்தது என்பது எங்கள் தாத்பர்யம்
ReplyDeleteஇங்கேயும் அப்படித்தான் ஶ்ரீவைஷ்ணவரே! :))))))))
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteபதிவு அருமையாக உள்ளது. விறல்மிண்ட நாயனார் கதை படித்திருக்கிறேன். நீங்கள் சொல்வது போன்ற இரண்டாவது கதை வடிவில் நாயன்மார்கள் சரித்திரத்தில் படித்திருக்கிறேன். சுபாவமாக அவருக்கு கோபம் இருந்தாலும் அளவு கடத்த சிவ பக்தியில் அது அடிபட்டு போய் விடுகிறது.
அசலேஸ்வரர் கோயில் கோபுர தரிசனம் பக்தியுடன் பெற்றுக் கொண்டேன்.
உங்களுக்கு மருந்து மாத்திரைகள் சாப்பிட்டவுடன் ஏன் வயிற்றுப் போக்கு ஏற்பட்டது.? அவை சுகருக்கான மாத்திரைகளா? ஏன் கேட்கிறேன் என்றால், எனக்கு மருத்துவர் தந்த இந்த சுகர் மாத்திரை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக தினமும் இதே தொந்தரவை தந்தது. இப்போது அதை நிறுத்தியுள்ளேன். இப்போதும் வேறு ஒரு தொந்தரவில் திண்டாடுகிறேன். சில மாத்திரைகள் இப்படித்தான் உபத்திரவத்தை தரும் போலும்.. சென்றவிடத்திலும் உங்களுக்கு எவ்வளவு கஸ்டங்கள். நினைக்கவே மனது தவிக்கிறது.
அப்பறம் பிரசாதங்கள் பாகுபாடின்றி கிடைத்தனவா? கொடுத்த ரூபாய்க்கு பிரசாதங்கள் (சந்தனம், குங்குமம், வீபூதி போன்றவை) கிடைத்தால்தான் நமக்கும் மனது சந்தோஷமாக இருக்கும். விபரங்கள் அறிய ஆவலுடன் உள்ளேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டதால் அல்ல. ஏற்கெனவே வயிறு தொந்திரவு இருந்து கொண்டு தான் இருந்தது. தண்ணீரைக் குடித்து மாத்திரைகளைப் போட்டுக்கவும் உடனே வயிற்றுப் போக்கு வந்துவிட்டது. சில சமயம் தண்ணீர் குடிச்சாலே ஒத்துக்காது எனக்கு. சர்க்கரைக்கான மாத்திரைகள் ரொம்பவே வீரியம் குறைந்தவை. அதுவும் இப்போ 2,3 வருஷங்களாகத் தான் சாப்பிடுகிறேன். அதனால் எல்லாம் போகவில்லை. பிரசாதங்கள் பற்றிக் குறையே இல்லை. அபிஷேஹப் பொருட்கள் பற்றித் தான்.
Deleteவியக்க வைத்த விறல்மிண்ட புராணம். இப்படியும் அடியார்கள்!
ReplyDeleteஆமாம். வன் தொண்டர்.
Deleteஅவ்வளவு பணம் வாங்கி அபிஷேகங்கள் செய்தும் சரியான பிரசாதங்கள் தராதது அவர்களின் பொறுப்பின்மையை காட்டுகிறது..
ReplyDeleteஶ்ரீராம். தப்பாய்ப் புரிஞ்சுண்டு இருக்கீங்க. பிரசாதங்கள் பத்திச் சொல்லலை. அபிஷேஹத்துக்கான பால், தயிர், திரவியப் பொடி, எண்ணெய், சந்தனம், இளநீர், எலுமிச்சம்பழம், நார்த்தம்பழம், அரிசி மாவு, அபிஷேஹப் பொடி போன்றவை எதுவும் கொடுக்கவில்லை. மூன்று அபிஷேஹங்களுக்கும் சேர்த்து ஒரு சின்னச் செம்பில் பால் மட்டும் கொடுத்திருக்காங்க. மற்றப் பொருட்கள் கொடுக்கவே இல்லை. பிரசாதங்கள் மடப்பள்ளியில் குருக்கள் பொறுப்பில் பண்ணுவதால் அதில் குறையேதும் வைக்கலை. நவகிரஹங்களுக்கும் அவங்க அவங்களுக்கு உரிய பிரசாதங்களைத் தனியாப் பண்ணி எடுத்து வந்திருக்கார்.
Deleteஉங்களுக்கு வெளி ஆகாரங்கள் எதுவுமே ஒத்துக்கொள்வதில்லை போலும். உங்களுக்காக பிரத்தியேகமாக ஸ்ரீரங்கத்திலிருந்தே தண்ணீர் கொண்டு போனீர்கள் என்றால் எவ்வளவு கொண்டு செல்வீர்கள்?
ReplyDeleteஎனக்குனு ஒரு பெரிய ஃப்ளாஸ்க் இருக்கு ஶ்ரீராம். அம்பேரிக்காவில் பையர் வாங்கிக் கொடுத்தார். அதில் எடுத்துச் சென்றால் குறைந்தது 2 நாட்களுக்கு வந்துடும்.
Deleteஆமாம், வெளி ஆகாரம் ஒத்துக்காமல் தான் வயிற்றுப் போக்கு.
Deleteஆரூரில் தரிசனம் செய்வதற்கு அரங்கத்துக் காவேரியும் கூடவே வந்திருக்கின்றாள்.. அதிசயம் தான்..
ReplyDeleteஇங்கே வந்ததில் இருந்தே நாங்க ஶ்ரீரங்கம் தண்ணீரை இரண்டு அல்லது மூன்று குடிநீருக்கான பாட்டில்களில் எடுத்துச் சென்றுவிடுகிறோம். வெளியே வாங்கினால் அக்வா/நீர் மட்டுமே எனக்கு ஒத்துக்கும். ஆகவே வெளியே தண்ணீரே குடிப்பதில்லை.
Deleteகுறை நிலையத் துறையின் கோயில்களில் இப்படியெல்லாம் தான் கல்லா கட்டுகின்றார்கள்.. அன்பர்கள் அவரவரும் கையில் பொங்கல் பிரசாதம் கிடைத்தவுடன் ஆனந்தம் ஆகி விடுகின்றார்கள்.. அன்றைய உபயதாரர்கள் ஏன் இதைத் தட்டிக் கேட்க வில்லை?..
ReplyDeleteஎல்லாவற்றுக்கும் அடிப்படை நம்முடைய சோம்பல்.. அபிஷேகத் திரவியங்களை சேகரித்து கூடைகள் தாம்பாளங்களில் வைத்து மேள தாளத்துடன் கொண்டு வருவார்கள் அந்தக் காலத்தில்.. அது புண்ணியம் .. காசு ஒன்றே லட்சியம் என்றானது காலத்தின் கொடுமை...
நல்ல பெயர் "குறை"நிலையத் துறை. பொங்கல் பிரசாதமும் எப்போவும் மடப்பள்ளியிலிருந்து கொடுப்பதில்லையே! டென்டர் போட்டு கான்ட்ராக்டுக்கு விட்டு அதைப் பிரசாதம் என்னும் பெயரில் விற்பனை செய்து வியாபாரம் அல்லவோ செய்கிறார்கள். பிரசாதம் பக்தர்களுக்கு விநியோகிப்பதன் உண்மையான அர்த்தமே அல்லவோ மாறிப் போச்சு! தட்டிக்கேட்கும் ஆட்கள் ஊரிலேயே வாசம் செய்வதில்லை. பின்னே அவங்களுக்கு இது நன்மை தானே!
Deleteஇதற்கு முக்கியக் காரணம், பக்தி இல்லாதவர்களை அந்த இடங்களில் வேலைக்கு வைப்பது. முன்னெல்லாம், கோவிலுக்காக காசு கலெக்ட் செய்தால் அதில் பத்துப் பைசா எடுத்துக்கொள்வதே குற்றமாகிவிடும் என்று மனதுகள் நினைத்தன. இப்போதோ கடவுளைப் பற்றி எண்ணாமல் கல்லா கட்டுவதிலேயே குறியாக இருக்கிறார்கள். அப்படி பணம் வந்தால்தானே தங்கள் உபயோகத்துக்கு கார் வாங்கிக்கொள்ள முடியும்.
Deleteஅவங்க தானே நல்லா வாழறாங்க. கஷ்டப்படறவங்க என்னிக்கும் கஷ்டம் தான் அனுபவிக்கிறாங்க.
Deleteசிவ நிவேதனம் என்று வைத்திருந்த நெல்லை எடுத்து பஞ்சம் வந்தபோது சோறாக்கிச் சாப்பிட்டதற்காக குடும்பத்தையே போட்டுத் தள்ளியிருக்கின்றார் சிவனடியார் ஒருவர்.. இன்னொருவர் அர்ச்சனைப் பூக்களை முகர்ந்ததற்காக அரசியின் மூக்கை நறுக்கி இருக்கின்றார்.. இன்றைக்கு அடாததைச் செய்யும் அரசு அலுவலர்/ ஊழியர் வீட்டு எலிக் குஞ்சைக் கூடத் தொட முடியாது..
ReplyDeleteஉண்மைதான் தம்பி. சிவன் சொத்து குல நாசம் என்பார்கள். ஆனால் இவங்க எல்லாம் நல்லாவே இருக்காங்க. எந்தவிதமான கவலையோ தொந்திரவோ இல்லாமல் நல்லா சாப்பிட்டுக் கொண்டு நல்லா அனுபவித்துக் கொண்டு நல்லாத் தான் இருக்காங்க. கஷ்டப்படறவங்க எப்போவும் கஷ்டம் தான் படறாங்க.
Deleteபுராணத் தகவல்கள் சுவாரசியம்
ReplyDeleteஅபிஷேகப் பொருட்கள் இப்படியும் செய்வார்களா? அதுவும் கோயில் அலுவலகங்களிலேயே..நாமே நேரடியாக வாங்கிக் கொடுத்துவிடலாமோ
கீதாக்கா உங்களுக்கு வெளி உணவு பல இடங்களில் ஒத்துக் கொள்ளாமல் போகிறதே...வயிற்றுப் பிரச்சனை படுத்துகிறதே.
அதன் பின் பிரசாதம் சாப்பிட முடிந்ததா?
கீதா
வாங்க தி/கீதா. எனக்கு Irritable Bowel syndrome, amebiasis என என்னென்னமோ உண்டு. ஆகவே எப்போதுமே உணவு விஷயத்தில் ரொம்பவே கவனமா இருப்பேன். இதைப் புரிஞ்சுக்காமக்கோபம் கொள்பவர்கள் உண்டு. சில சமயம் படுத்தலே இருக்காது. பத்துநாட்கள் ஆனாலும் ஒண்ணும் பண்ணாது. சில சமயம் வந்தால் ஒரு மாசமாவது உலுக்கி விட்டுடும். என்ன செய்ய முடியும்?
Deleteஎங்க ஊர்க்கோயில்கள் எல்லாமும் அறமற்ற நிலையத்துறைக்குக் கீழேயே வந்தாலும் நாங்க அபிஷேஹப் பொருட்கள் வாங்கிக் கொடுத்துடுவோம். இங்கே எல்லாம் பெரிய கோயில்களில் அப்படி அனுமதிப்பதில்லை. :( இறைவனைப் பட்டினி போட்டுட்டு இவங்க சாப்பிட்டால் எத்தனை நாளைக்கு? கொடுத்த பிரசாதங்கள் எல்லாம் வீட்டிற்குப் போய் விநியோகம் முடிஞ்சு ராத்திரி தான்.
Deleteபணம் வாங்கி அபிஷேகப் பொருட்கள் முறைப்படி தராதது தவறுதான்.
ReplyDeleteதரிசனம் பெற்றோம்.
சும்மா ஒரு சொம்பு பாலை மட்டும் கொடுத்துட்டுப் பேசாமல் இருந்துட்டாங்க. ஒரு லிட்டர் இருந்திருக்குமாம் அந்தப்பால்! மற்ற சாமான்கள் வாங்கினதாக் கணக்கு மட்டும் கட்டாயமாய்க் காட்டி இருப்பாங்க! அந்தத் தியாகேசன் தான் இதை எல்லாம் என்னனு கேட்கணும்.
Deleteபுராணத் தகவல்கள் அறிந்தேன் நன்று.
ReplyDeleteநன்றி கில்லர்ஜி!
Delete