தேவாரப் பாடல்கள் கிட்டத்தட்ட 350, திருவாசகப் பாடல்கள் 7 ஆகியவற்றைக் கொண்டது திருவாரூர். இது தவிர, திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, சேக்கிழாரின் பெரிய புராணப்பாடல்கள், அருணகிரிநாதரின் திருப்புகழில் 11 பாடல்கள், வள்ளலாரின் திருஅருட்பாவில் திருவாரூர்ப் பதிகம் என்ற தலைப்பிலேயும் இடம்பெற்றுள்ளது திருவாரூர். வள்ளலார், “எந்தாய் ஒருநாள் அருள் வடிவின் எளியேன் கண்டு களிப்படைய வந்தாய் அந்தோ கடைநாயேன் மறந்து விடுத்தேன் மதிகெட்டேன் செந்தாமரைத்தாள் இணை அன்றே சிக்கென்றிறுகப் பிடித்தேனேல் இந்தார் சடையாய் திரு ஆரூர் இறைவா துயரற்றிருப்பேனே!” என்று கூறுகிறார்.
இதைத் தவிர பதினோராம் திருமுறையில் திருவாரூர் மும்மணிக்கோவை என்ற தலைப்பில் சேரமான் பெருமான் நாயனாரும் திருவாரூரைச் சிறப்பித்துப் பாடி இருக்கிறார். திருஆரூர் புராணம், கமலாலயச் சிறப்பு, தியாகராஜலீலை, தேவாசிரிய மஹாத்மியம், திருவாரூர் நான்மணிமாலை, திருவாரூர் குறவஞ்சி, திருவாரூர் உலா, தியாகப் பள்ளு, திருவாரூர்க் கோவை, அஜபா நடேசர் பதிகம், திருவாரூர் வெண்பா அந்தாதி, கமலாம்பிகைத் தமிழ், தியாகராஜர் கழிநெடில், கந்தபுராணம், திருவாரூர் அந்தாதி, பரவைத் திருமணம், கமலாம்பிகை பதிகம் போன்ற பல தமிழ் நூல்களும், வடமொழியில் அஜபா ரகசியம், ஆடகேசுவர மஹாத்மியம், கமலாலய மஹாத்மியம், தியாகராஜலீலை, சமற்காரபுர மான்மியம், ஸ்ரீபுர மான்மியம், ஸ்கந்த புராணம், முகுந்த சஹஸ்ரநாமம், தியாகராஜாஷ்டகம், கமராம்பிகாஷ்டகம் போன்றவைகள் உள்ளன.
தஞ்சையை ஆண்ட ஷஹஜீ என்னும் மன்னன் தியாகேச பதமுலு, பஞ்சரத்ன பிரபந்தம், சங்கரபல்லக்கீ சேவா பிரபந்தம், சங்கர காளி நடன சம்வாதம் போன்ற தெலுங்கு மொழி நூல்களும், மராட்டியில் ராமபண்டிதர் என்பவர் தியாகேச மகாத்மிய, கமலாலய மகாத்மிய, தியாகராஜ விலாச, தியாகராஜ தியான, தியாகேசுவர ஆகமோத்தியான என்ற நூல்களும் திருஆரூரின் பெருமையைச் சிறப்பித்துச் சொல்கின்றது. எல்லாவற்றுக்கும் மேல் கர்நாடக சங்கீதத்தின் மும்மூர்த்திகளாகச் சிறப்பித்துச் சொல்லப் படும், சத்குரு தியாகையர், முத்துஸ்வாமி தீக்ஷிதர், சியாமா சாஸ்திரிகள் ஆகியோர் அவதரித்தது இங்கே தான். சங்கீதம் தன் உச்சிக்குப் போய் இவர்களால் பெருமை பெற்றாற்போல் திருஆரூரும் இவர்களால் பெருமை பெற்றுள்ளது.
முத்துசாமி தீக்ஷிதரின் நவாவரணக் கீர்த்தனைகள் இன்றளவும் அனைத்து சங்கீத வித்வான்கள், வித்வாம்சினிகளால் பாடப்படுவது திருவாரூரின் பெருமையைச் சுட்டுகிறது. தில்லைச் சிற்றம்பலம் பொன்னம்பலம் என்றால் திருஆரூர் பூவம்பலம் என்பார்கள். திருவாரூர் நான்மணிமாலையில் ஒரு பாடல்,
“காவாய் எனச் சிறு தெய்வந்தனைத் தினம் கை தொழுது
நாவாய் தழும்பப் புகழ்ந்து என் பயன் கதிநாடின், மும்மைத்
தேவாயத் தேவுக்கும் கோவாய் மணிப்பொற்சிங்காதனம் சேர்
பூவாய் மதிக்கண்ணி ஆரூர்ப் பிரான் பதம் போற்றுமினே!”
என்று சொல்கிறது. திருவாரூர் தியாகராஜருக்குப் பலவகைப் பூக்களினால் அலங்காரம் செய்வார்கள். செங்கழுநீர்ப் பூ மிகவும் விசேஷம். மல்லிகை, முல்லை, இருவாட்சி, செங்குவளை, செவ்வந்தி ஆகிய மலர்களும் மருவு, மருக்கொழுந்து, வெட்டிவேர் போன்றவற்றையும் வைத்துச் சிறப்பான அலங்காரம் செய்யப் படும். இவை யாவும் உதிரிப் பூக்களாலேயே செய்யப் படுவதாய்ச் சொல்கின்றனர். அப்பர் பெருமான் இந்த அலங்காரத்தைப் பார்த்துவிட்டு” ஐயைஞ்சின் அப்புறத்தான்” என்று புகழ்ந்துரைத்திருக்கிறார். திருவாரூர் தியாகேசரைக் குறித்த இன்னொரு பாடலில் நாவுக்கரசர்,
மெய்ப்பால்வெண் ணீறணிந்த மேனி யானை
வெண்பளிங்கி னுட்பதித்த சோதி யானை
ஒப்பானை யொப்பிலா வொருவன் தன்னை
உத்தமனை நித்திலத்தை யுலக மெல்லாம்
வைப்பானைக் களைவானை வருவிப் பானை
வல்வினையேன் மனத்தகத்தே மன்னி னானை
அப்பாலைக் கப்பாலைக் கப்பா லானை
ஆரூரிற் கண்டடியேன் அயர்த்த வாறே.
ஆறாம் திருமுறை திருவாரூர்த்தேவாரம் 26 பாடல் எண் 4 என்றும் சொல்லுகிறார். ஈசனின் வடிவங்கள் 25 எனச் சொல்லப் படுகிறது. அந்த 25 வடிவங்களில் இருந்தும் மாறுபட்ட வடிவம் இது. ஆகையால் இவரை “என்ன தன்மையன்றறிவொண்ணா எம்மானை” என்று சுந்தரரும் குறிப்பிடுகிறார். மேலும் திருவாரூர் ஈசனை நினைக்கும்போது,
பறக்குமெங் கிள்ளைகாள் பாடுமெம் பூவைகாள்
அறக்கணென் னத்தகும் அடிகள்ஆ ரூரரை
மறக்ககில் லாமையும் வளைகள்நில் லாமையும்
உறக்கமில் லாமையும் உணர்த்தவல் லீர்களே
சுந்தரர் தேவாரம் ஏழாம் திருமுறை 37 பாடல் எண் 2
கூடும்அன் னப்பெடை காள்குயில் வண்டுகாள்
ஆடும்அம் பொற்கழ லடிகள்ஆ ரூரரைப்
பாடுமா றும்பணிந் தேத்துமா றுங்கூடி
ஊடுமா றும்மிவை யுணர்த்தவல் லீர்களே
சுந்தரர் பாடல் எண் 10
திருவாரூர் தியாகேசருக்குச் சுமார் அறுபது பெயர்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. கமலேசர், கம்பிக்காதழகர், கருணாகரத் தொண்டைமான், கருணாநிதி, சிந்தாமணி, செங்கழுநீர் அழகர், செம்பொன் தியாகர், செல்வத் தியாகர், செவ்வந்தித் தோடழகர், தியாக சிந்தாமணி, தியாகப் பெருமான், தியாக விநோதர், திருந்து இறைக்கோலர், திருவாரூர் உடையார், தேவ சிந்தாமணி, தேவர் கண்ட பெருமான், கனகமணித் தியாகர், தியாகராஜர், ரத்தின சிம்மாசனாதிபதி, செம்பொற் சிம்மாசனாதிபதி, இருந்தாடழகர், வேத சிந்தாமணி, அசைந்தாடும் அப்பர், அடிக்காயிரம் பொன் வழங்கியவர், அணி வீதியழகர், ஆடவரக்கிண்கிணிக் கால் அழகர், உன்ன இனியார் என்ற பல பெயர்கள் இருந்தாலும் வீதி விடங்கர் என்ற பெயரே அனைத்திலும் சிறப்பாகச் சொல்லப் படுகிறது. இந்த வீதி விடங்கன் பற்றிய கதையும் அறிவோமல்லவா???
***********************************************
இங்கே முந்தைய பதிவுக்கான சுட்டிக்கு இங்கே சொல்லவும். இந்தக் கோயிலுக்குப் பலமுறை போயிருந்தாலும் நான் முதல் முதல் பார்த்தப்போ இருந்த பிரம்மாண்டமும் பிரமிப்பும் இப்போ இல்லை. அதோடு அப்போதெல்லாம் உறவினர்களில் யாரானும் இங்கே இருந்து கொண்டே இருந்தார்கள். இப்போ யாரும் இல்லை என்பதோடு நான் பார்த்த நான்கு மாடவீதிகளும் இப்போக் கடைகள் மயமாய் ஆகிவிட்டன. வீடுகளே காண முடியலை. ஒவ்வொரு கோபுர வாசலிலும் இருக்கும் சின்ன வீதிகளில் மட்டும் அவை முக்கிய வீதியைச் சேரும் இடம் வரையில் பழங்காலத்து மாடி வீடுகள். ஓட்டுக் கட்டிடங்கள். இரண்டு சாரிகளிலுமாகச் சேர்ந்து 20 வீடுகள் இருந்தால் பெரிய விஷயம்.
போய்ச் சேர்ந்த அன்று ரம்ஜான் தினம் என்பதால் ஓட்டல்கள் எல்லாமும் அடைத்துக் கிடைக்கச் சாப்பிடத் திண்டாடி ஏதோ கிடைத்ததை வாங்கிச் சாப்பிட்டோம். சாப்பிட்டுச் சிறிது நேரத்துக்கெல்லாம் நாங்க தொடர்பு கொள்ள வேண்டிய குருக்களைத் தொடர்பு கொண்டு பேசினோம். அவர் கோயிலுக்கு வந்து இரவு நேர தீபாராதனையைப் பார்க்க வரச் சொன்னார். இருவருக்குமே முடியலை என்பதால் காலையிலேயே வந்துக்கறோம்னு சொல்லிட்டோம். அதன் பேரில் அவர் எங்களை ஓட்டலுக்கு வந்து பார்ப்பதாகச் சொன்னார். அதே போல் இரவு ஒன்பதரைக்கு மேலே கையில் பிரசாதங்களோடு வந்து சேர்ந்தார். விபூதி, குங்குமம், சந்தனம் தவிர்த்துப் பெரிய தேன்குழல், குழாய்ப்புட்டு மாதிரி ஒன்று, அதிரசம், அப்புறமாப் பாலில் வேக வைத்த ஏதோ ஒன்று, மிளகு வடை எனப் பிரசாதங்களைக் கொடுத்தார். பின்னர் மறுநாள் காலை ஐந்தரைக்கே எங்களைக் கோயிலுக்கு வரச் சொல்லிவிட்டு மறுநாளைக்கான நிகழ்ச்சிகளுக்கான திட்டங்களையும் சொன்னார்.
ஐந்தரைக்குக் கோயிலுக்குப் போனதுமே தியாகராஜர்/வன்மீகநாதர் சந்நிதியில் காலை நேர வழிபாட்டையும் கற்பூர ஆரத்தியையும் முடித்துக் கொண்டு பின்னர் கமலாம்பிகை சந்நிதி செல்லும் வழியில் உள்ள நவகிரஹம், ருண விமோசன லிங்கம், ரௌத்ர துர்கை போன்றோரையும் பார்த்துக் கொண்டு கமலாம்பிகை சந்நிதியில் உச்சிஷ்ட கணபதிக்கும் உள்ளே கமலாம்பிகைக்கும் அர்ச்சனையை முடித்துக் கொண்டு பின்னர் எங்களை ஓட்டலில் போய் ஓய்வு எடுத்துக் கொண்டு காலை ஆகாரம் முடித்துக்கொண்டு ஒன்பதரை மணி அளவில் நவகிரஹ சந்நிதிக்கு வரச் சொன்னார். அதன் பிறகு நவகிரஹங்கள், ரௌத்ர துர்கை, ருண விமோசனர் ஆகியோருக்கு அபிஷேஹ ஆராதனைகள், அலங்காரங்கள் ஆகியவற்றை முடித்துக் கொண்டு பிரசாதங்கள் வாங்கிக் கொண்டு அதன் பின்னர் மதிய உணவை எங்கள் விருப்பப் படி விரும்பும் இடத்தில் முடித்துக் கொண்டு ஊர் திரும்பலாம் என்பதே அந்தத் திட்டம். சரியாகவே இருந்தது. ஆனால் காலையில் என்ன நடக்கப் போகிறது என்பதை அந்தத் தியாகேசனே அறிவான் அல்லவா?
நான் இந்தக் கோவிலுக்குச் சென்றிருக்கிறேன். எந்த சன்னிதியில் என்ன என்ன பார்க்கணும் என்றெல்லாம் ஒன்றும் தெரியாது. கோவிந்தராஜன் சன்னிதியைச் சேவித்துவிட்டு, நடராஜரையும் தரிசனம் செய்துகொண்டேன்.
ReplyDeleteபல வருடங்களுக்கு முன்பே உங்களுடன் வந்திருந்தால் எல்லா முக்கிய சன்னிதிகளையும் தரிசித்திருக்கலாம். விவரங்களையும் தெரிந்துகொண்டிருக்கலாம்.
வாங்க நெல்லை. கோயில் பற்றிய விபரங்கள் அடங்கிய கட்டுரை நாங்க காவிரிக்கரை ஓரக் கோயில்களைத் தரிசித்த சமயம் (2010 ஆம் ஆண்டில்) எழுதினவை. அவற்றை மின்னூலாக ஆக்க எடிட் செய்து கொண்டிருக்கேன். நடுவில் இப்போப் போன மாசம் போகும்படி நேர்ந்தது. ஆகவே இங்கேயும் பதியலாம்னு போட்டு வருகிறேன். இந்தக் கோயிலில் "நடராஜர்" இல்லை. "தியாகராஜர்" தேவேந்திரனும், முசுகுந்தச் சக்கரவர்த்தியும் வழிபாடு செய்தவர். இதைத் தொடர்ந்த விபரங்கள் அடுத்து வரும். விடங்கர்களில் இவர் முதன்மையானவர். விடங்கர் எனில் உளியால் செதுக்கப்படாதவர் என்னும் பொருள்.
Deleteபாருங்க... என் மனசில் தில்லையம்பலமே இருந்திருக்கிறது. திருவாரூர் மனதில் படவில்லை.
Deleteதிருவாரூர் பக்கமே சென்றதில்லை. அதன் புகழ் எல்லாம் படித்திருக்கிறேன்.
திருவாரூர் தியாகவிடங்கர் படித்த நினைவு வருகிறது.
அதென்னமோ தெரியலை நெல்லை. சிதம்பரம் கோயிலைப் போலப் பழமையான கோயில் தான் திருவாரூரும். ஒரு காலத்தில் சோழர்களின் தலை நகரமாகவும் இருந்திருக்கு. ஆனாலும் சிதம்பரம் அளவுக்குப் பிரபலம் அடையவில்லை. ஏனெனத் தெரியலை. சப்த விடங்கத் தலங்களில் முதன்மையானது திருவாரூர்.
Deleteஅடுத்த ஜென்மா எனக்கு திருவாரூர்லயாம் (எப்படி அந்தப் பிறப்பிற்குப் பணம் வைத்துவிட்டுப் போவது என்று தெரியவில்லை ஹா ஹா). பேச்சலராம், கடைசி ஜென்மமாம். இப்படி நாடி ஜோசியத்தில் 20 வருடங்களுக்கு முன்பு சொன்னார்கள்.
Deleteஎனக்கு இதான் கடைசி ஜன்மமாம். தென்காசி சித்தர் கூடச் சொன்னார். நாலைந்து ஜோசியர்கள் சொல்லி இருக்காங்க. இந்தப் பிறவியையே நான் இன்னமும் ஒழுங்காகச் செலவு செய்யவில்லையே என்று வருத்தமாக இருக்கு! :(
Deleteநலமுடன் தரிசனம் செய்து முடிக்க இறையருள் கிடைக்கட்டும்.
ReplyDeleteஇறை அருள் என்னமோ கிடைச்சுட்டுத் தான் இருக்கு கில்லர்ஜி. நம்மால் தான் பயன்படுத்திக்க முடியறதில்லை. :(
Deleteஎன் அம்மாவும் அப்பவும் இந்தக் கோயில் குளம் கமலாலயத்தில் அவர்களுக்கு திருமணம் ஆன புதிதில் படகில் அமர்ந்த வண்ணம் ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்பா கும்பகோணம், திருவாரூர் அப்புறம் தஞ்சாவூர் போன்ற ஊர்களில் வேலை பார்த்தவர்.
ReplyDeleteநாங்களும் கல்யாணம் ஆன புதுசில் தான் போனோம். ஆனால் கமலாலயத்தில் இறங்கிப் படகில் போகலாம்னு எல்லாம் எனக்குத் தெரியாது. அவரும் அதிலெல்லாம் அவ்வளவு ஆர்வம் கிடையாது. ஏதோ கூட்டிச் செல்வார். அதுவே பெரிது என்னும் நினைப்பை உண்டாக்கிடுவார்! இஃகி,இஃகி,இஃகி!
Deleteநான் ஒரே ஒருமுறை திருவாரூர் கோவில் பார்த்துள்ளேன் ஆயினும் கோவிலை நிறுத்தி நிதானமாக ஒருமுறை பார்க்க ஆவல். மிகப்பெரிய கோவில் என்று தெரியும். கோவில்களின் பெருமைகளை இந்நாளைய அரசியல்வாதிகள் அழித்துக் கொண்டிருக்கிறார்கள். தவறான எண்ணங்களையும் மக்கள் மனதில் மெல்ல மெல்ல விதைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ReplyDeleteமுதல் 2 தரம் போனப்போ எல்லாம் நன்றாய்ப் பார்த்தாலும் அவ்வளவாக மனதில் பதியலை, 3 ஆம் தரம் எழுதறதுக்குனு போனோம். படங்களும் எடுக்க முயன்று மாமா எட்டுக்குடியில் உயரமான நவகிரஹ சந்நிதியிலிருந்து கீழே விழுந்ததில் எல்லாத் திட்டங்களும் மாறிவிடத் திருவாரூர்க் கோயிலை அவசரம் அவசரமாகப் பார்த்துட்டுச் சென்னைக்குக் கிளம்பிட்டோம். :(
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteபதிவு அருமையாக உள்ளது. திருஆருர் கோவிலைப் பற்றியும், அப்பர், சுந்தரர் பாடிய திருபதிகங்களை நீங்கள் சொன்ன விதமும் பதிவில் அருமையான விளக்கமும் படிக்க படிக்க பகதி பரவசமாக இருக்கிறது. இறைவனின் நாமாவளிகளை தொகுத்துச் சொன்னது அருமை. இறைவனுக்கு அலங்கரிக்கும் மலர்களை விவரித்தது மனதுக்கு மகிழ்ச்சியை தருகிறது. நாங்கள் இந்த கோவிலுக்கு இதுவரை சென்றதில்லை. உங்களின் இந்த பதிவு மூலமாக கோவிலுக்கு சென்ற உணர்வை பெற்றேன். அழகாக விவரிப்பு . நம் எண்ணங்கள் எல்லாம் சிறப்பானதாக இருந்தாலும் எல்லாம் அவன் நினைப்பதுதானே நடக்கும். மேற்கொண்டு என்ன நடந்தது? இறைவனையும், அன்னை யையும் தங்கள் திட்டப்படி மனங்குளிரக் தரிசித்தீருப்பீர்கள் என நினைக்கிறேன். அடுத்தப் பதிவுக்கு காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா. விரைவில் தியாகேசரைத் தரிசிக்கும் பேறு உங்களுக்குக் கிடைக்கப் பிரார்த்தனைகள். விரிவான கருத்துரைக்கு நன்றி.
Deleteமறுநாள் செல்ல முடியவில்லையா?தியாகேசரின் திருவிளையாடல் காண காத்திருக்கிறோம்.
ReplyDeleteஒரு பக்கம் தரிசித்தேன், இன்னொரு பக்கம் தரிசிக்கலை. மாதேவி! உண்மையில் இறைவன் திருவிளையாடல் தான்!
Deleteதிருவாரூர் கோயில் தரிசனம் பல முறை செய்து இருக்கிறோம்.
ReplyDeleteகோயில் பெரிய கோயில் , விரிவான செய்திகள் கோயிலுக்கு போக விரும்புவர்களுக்கு உதவும்.
வாங்க கோமதி. மிக்க நன்றி.
Deleteஆதியான திருத்தலம்.. தோன்றியது எப்போது என்பதில் அப்பர் ஸ்வாமிகளுக்கே வியப்பு..
ReplyDeleteநித்ய ப்ரதோஷ திருத்தலம்.. அதனால் தான் விடங்கர் சந்நிதியில் நந்தியம் பெருமான் நின்று கொண்டிருக்கின்றார்.. இங்கே குடிகொண்டிருக்கும் ஸ்ரீ ஜேஷ்டா தேவி வரப்ரசாதி ஆனவள்..
உண்மை தான் தம்பி. ஆதித் திருத்தலம். ப்ருத்வித் தலம். ஶ்ரீ ஜேஷ்டா தேவியை இம்முறை பார்க்கலை. ஜேஷ்டா தேவி இருக்கும் கோயில்கள்/சப்த கன்னியர் இருக்கும் கோயில்கள் எல்லாம் சுமார் 2000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானது என்பார்கள்.
Deleteகுருந்தம் ஏறிக் கொடிவிடு மாதவி
ReplyDeleteவிரிந்து அலர்ந்த விரைகமழ் தேன் கொன்றை
திருந்து மாடங்கள் சூழ்திரு ஆரூரான்
வருந்தும் போது எனை வாடலெ னுங்கொலோ.. 3.045.5..
- ஞானசம்பந்தர்..
பகிர்வுக்கு நன்றி. காலையில் கூடப் பெண்ணிடம் திருநீற்றுப் பதிகத்தை விடாமல் படிக்குமாறு சொல்லிக் கொண்டிருந்தேன். இங்கே நீங்களும் சம்பந்தரின் திருவாரூர்ப் பதிகத்தைப் பகிர்ந்திருக்கிறீர்கள்.
Deleteஒரே ஒரு முறைதான் தியாகேசரை தரிசிக்கும் பேறு கிடைத்தது. மிகப்பெரிய கோவில். அறநிலையத்துறைக்கு ஆட்சியாளர்கள் உரிய அனுமதி கொடுத்தால் இன்னும் சிறப்பாக இயங்கக்கூடும்.
ReplyDeleteவழிபாட்டுக்கே அரசின் அனுமதி தேவைப்படும் சூழல்! இதிலே சிறப்பாக யார் என்ன செய்ய முடியும்! :( அந்தத் தியாகேசனே இவற்றை எல்லாம் நிவர்த்தி செய்துக்கணும்.
Deleteஉங்களுடைய பழைய பதிவுகளையும் இன்றுதான் படித்தேன். மூன்று பதிவுகளை படிக்காமல் விட்டிருக்கிறேன். கமெண்ட் போட முடியாத வெறுப்பில் படிக்கவும் தோன்றுவதில்லை.
ReplyDeleteதிருமணங்களில் செண்டை மேளம், மணமக்கள் உட்பட ஆட்டம், பாட்டம் எல்லாம் இப்போதெல்லாம் அதிகம்தான்.
தேவார பதிகங்கள் அழகு! இத்தனை எளிமையாக இருக்கிறதே? படிக்க வேண்டும்.
இன்று சிஸ்டம் கிடைத்ததால் அதில் கமெண்டுகள் எழுதி போஸ்ட் பண்ணிக்கொண்டிருக்கிறேன்.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. செண்டை மேளம் கல்யாணங்களில் வைச்சுட்டால்! அதுவும் எங்க குடியிருப்புக்குப் பின்னாடி இருக்கும் கல்யாண மண்டபத்தில் வைச்சால்! வீட்டில் இருக்கவே முடியாது. அதில் என்ன ரசனையைக் கண்டார்களோ! இப்போல்லாம் குஜராத்தி முறையில் மெஹந்தி, சங்கீத் என எல்லாமும் எல்லா ஜாதி/இனக் கல்யாணங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கின்றன. ரிசப்ஷன் எனில் வெளியே சாட் டுக்குத் தனியான ஸ்டால்,, ஐஸ்க்ரீம் பார்லர், வளையல்கள் ஸ்டால், பீடா ஸ்டால் எனத் தனித் தனி ஸ்டால்கள்! :(
Deleteஆரூராரின் பெயர்கள் அழகோ அழகு! குழந்தைகளுக்குச் சூட்டலாம் என்றும் தோன்றுகிறது.
ReplyDeleteகீதா
ஆமாம், ஆனாலும் எத்தனை பேருக்குப் பிடிக்கும்?
Delete