எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, July 14, 2009

கடவுளர் தவறான உதாரணங்களே இல்லை!

மனிதனை உயர்த்துவதற்குத் தோன்றியவையே மதமும் அதன் சார்பான சம்பிரதாயங்களும். இப்போ ஆடு, மாடுகள், குதிரை, பாம்பு, புலி, சிங்கம் போன்றவைக்கு இருக்கும் சக்தி மனிதனுக்கு இல்லை. குளிருக்குக் கம்பளி வேணும்னால் ஆடு யாரிடமும் போய்க் கேட்பதில்லை. அதன் உடலிலேயே இருக்கிறது. பால் குடிக்கணும்னா பசுவோ, எருமையோ அதன் பாலையே தன் குட்டிகளுக்குக் கொடுக்கும், நாம என்னதான் சின்னக் குழந்தையா இருக்கும்போது தாய்ப்பாலை உண்டு வளர்ந்தாலும் அது கொஞ்ச நாளைக்குத் தானே. அப்புறமாப் பால் வேணும்னா பசுவோ, எருமையோ, ஆடோ தான் பால் கொடுக்கிறது. இவ்வாறு ஒவ்வொரு மிருகமும் ஒவ்வொன்றைப் பெற்றிருக்கிறது. குதிரை வேகமாய் ஓடும். அந்த வேகத்தை மனிதன் கட்டுப் படுத்தித் தனக்கு வாகனமாகவும், போக்குவரத்து சாதனமாகவும் ஆக்கி இருக்கிறான். மனிதனோ இவற்றை எல்லாம் தன் புத்தியால் ஆளுமைப் படுத்தி ஆள்கின்றான் அல்லவா? இப்படி உயர்ந்த அறிவைப் பெற்றிருப்பவனே மனிதன். ஆனால் அவனோ தனக்குத் தானே மட்டுமில்லாமல் உடன் வாழும் மனிதருக்கும், மிருகங்களுக்குமே இன்பத்தையா தருகின்றான்? இல்லையே?

அவன் தேவைகளை நிறைவேற்றும் இம்மிருகங்களைப் போல் இல்லாமல் உயர்ந்த புத்தியோடு இருக்கும் மனிதன் தானும் கஷ்டப் பட்டு மற்றவரையும் கஷ்டத்தில் ஆழ்த்துகின்றான். அவனை விடுவிக்கத் தோன்றியதே மதமும், புராணங்களும். தத்துவ விளக்கத்தை அப்படியே சொன்னால் என் போன்ற பாமரர்களுக்குப் புரியாது. ஆகவே அதுக்கு ஒரு கதை சொல்லியே ஆகவேண்டும். அதற்காக நம் போன்ற பாமரர்களுக்குப் புரியவென ஏற்பட்டவையே புராணங்களும், அதில் உள்ள கதைகள், உபகதைகளும். புராணக்கதைகளில் உள்ள தத்துவ விளக்கங்களைப் புரிந்து கொள்ளவேண்டும். உடனே எல்லாம் புரியவும் புரியாது. நாளாக, நாளாக உலகம் என்னும் சமுத்திரத்தில் நம் வாழ்க்கைப்படகு மேலும் கீழும் அலைகளால் மொத்துண்டு, மொத்துண்டு கரைக்கு வரும்போது தான் புரியவே ஆரம்பிக்கும். அதுவும் முழுசாப் புரிய இந்த ஒரு பிறவி போதாது. நம் மதத்தில் ஏன் இத்தனை கடவுளர் என்றும், ஏன் இத்தனை வழிபாடுகள் என்றும் தோன்றினால் அதற்கான ஒரே பதில் அவரவரும் அவரவர் மனோபாவப்படி அன்போடு நெருங்கி வழிபட ஏற்றவையாக நம் கடவுளர் இருக்கின்றனர். இவை எதுவும் கற்பனை இல்லை. ஒன்றேயான பரமாத்வாவே இப்படிப் பல ரூபங்களோடு காட்சி அளிக்கின்றார். வழிபாட்டு முறை எதுவானாலும் பக்தி முக்கியத்துவம் பெறுகின்றது.

விநாயகர் பழத்துக்குச் சண்டை போட்டார் என்பதோ அதுக்காக முருகன் கோவித்துக் கொண்டு பழநி மலையில் உட்கார்ந்தார் என்பதோ கற்பனைக் கதை. அப்படி ஒரு கதை கிடையாது. உண்மையில் அமிர்தமய ஞானமாகிய மோதகத்தைப் பெறவேண்டியே விநாயகர் தன் தாய், தகப்பனைச் சுற்றி வந்ததாயும், இப்போ மாம்பழக் கதையாகச் செவிவழியாக நாம் கூறுவது .உண்மையில் அமிர்தத்தால் ஆன மோதகம் என்றும், அதை உலகைச் சுற்றிப் புண்ணியம் சேர்த்துக் கொண்டு வருபவருக்குத் தருவதாயும் சிவன் சொல்ல, விநாயகர் தாய், தந்தையை விடச் சிறந்த உலகம் இல்லை எனச் சொல்லி அவர்களைப் பணிந்து நிற்க, மோதகம் அவருக்குக் கிடைத்தது. ஆனால் முருகனோ அது கிடைக்காமல் கோவித்துக் கொண்டெல்லாம் உட்காரலை. உண்மையில் அங்கே சடாமுடியோடு கூடிய ஷண்முகனே யோக நிலையில் அமர்ந்திருக்கின்றான். மொட்டை அடித்துக் கொண்டு பழநி ஆண்டி அல்ல.

முருகனுக்கு இரு மனைவியர் இருப்பதும் சரி, சக்தியைக் குறித்தே. இச்சாசக்தி, க்ரியா சக்தி இவை இரண்டும் இருந்தாலே ஞான சக்தியான முருகக் கடவுளை அடைய முடியும்.இந்த முருகனுக்கு ஆறு முகங்கள். இவை ஆறு திசைகளைக் குறிக்கும். ஆறுமுகங்களும் ஆறு திசைகளைக் குறிக்கும். கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, மேல், கீழ் என ஆறு திசைகளையும் காட்டுகின்றது. இது தவிர முருகக் கடவுளின் ஆறுமுகங்களும் நம் உடலின் ஆறு ஆதாரங்களைக் குறிப்பவை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஆதாரத்தைக் குறிக்கும். கடைசியில் கிடைக்கும் சச்சிதானந்தமே மேலானதாய்ச் சொல்லப் படுகின்றது. இந்த ஆதாரங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பீஜ மந்திரங்கள் உண்டு. அவற்றைச் சொல்லியே படிப்படியாய் மேலே செல்லவேண்டும். இரு மனைவியர் முருகனுக்கு என்று எதையும் புத்தகரீதியாய்ப் படித்துவிட்டு அர்த்தம் கொள்ளக் கூடாது. படிக்கிறதின் உண்மையான தாத்பரியம் இதன் உள்ளே மறைந்திருக்கும் உட்பொருளைப் புரிந்து கொள்வதே.

மு" என்ற சொல் முகுந்தனாகிய மஹாவிஷ்ணுவைக் குறிக்கின்றது. "ரு" என்ற சொல்லானது ருத்ரனைக் குறிக்கின்றது. "கா" என்ற சொல்லோ கமலத்தில் வாசம் செய்யும் பிரம்மனைக் குறிக்கின்றது. இம்ம்மூவரையும் ஒருங்கிணைக்கும் சொல்லே "முருகா" என்று ஆகின்றது. இது தவிர முருகு என்றால் தமிழ், தமிழ் என்றால் முருகு என்றும் சொல்வதுண்டே? அந்த ஆறுமுகனின் ஆறுமுகங்களே தமிழ் எழுத்தில் உள்ள வல்லினம், மெல்லினம், இடையினம் என்னும் ஒவ்வொரு இனத்திலும் உள்ள ஆறு எழுத்துக்கள் ஆகின்றன. "அ" முதல் "ஒள" வரை உள்ள பனிரண்டு எழுத்துக்கள் ஆறுமுகனின் பன்னிரு திருக்கரங்களும், தோள்களும் ஆகின்றன. "க" முதல் "ன" வரையில் உள்ள பதினெட்டு எழுத்துக்கள் அவனின் பதினெட்டுக் கண்கள் ஆகின. ஆயுத எழுத்தான ஃ என்னும் எழுத்தோ கந்தனின் முக்கிய ஆயுதமான வேலாயுதத்தைக் குறிக்கின்றது.

ஒரு பழத்துக்காகக் கோபித்துக் கொண்டு அவன் மலைதேடித் தனியே அமர்ந்ததாகவும் கதை! உண்மையில் பழத்துக்கா கோபம்! இல்லை! தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு ஞானத்தைப் போதிக்கவேண்டி, தான் எவ்வாறு அனைத்தும் துறந்து இருக்கின்றோமோ அதே போல் பற்றை அறு, என்னைச் சரணடை! உனக்கு நான் இருக்கிறேன் ஞானத்தைப் போதிக்க என்று அந்தச் சின்னஞ்சிறுவன் நமக்கு எடுத்துக்காட்டாய் அனைத்தையும் துறந்து ஒரு ஞானியாக, துறவியாக நின்று காட்டுகின்றான்.

ஷண்முகன் இங்கே யோக வடிவில் காட்சி அளிக்கின்றான். எல்லாரும் துறவு மேற்கொண்டுவிட்டால் பின்னர் திருமணத்துக்குத் திரும்ப மாட்டார்கள். அல்லது திருமணம் செய்து கொண்டு மனைவியால் "கூறாமல் சந்நியாசம் கொள்"வோரும் உண்டு. ஆனால் இங்கே நம் ஆறுமுகனோ குழந்தையாய் இருக்கும்போதே சந்நியாசி ஆகிவிட்டானே. பழத்துக்கா கோபித்தான்??தவ வடிவில் அவன் நமக்கு என்ன போதிக்கின்றான்? அனைத்தையும் துறந்து என்னிடம் வா என்றல்லவா சிவகுமாரன் கூப்பிடுகின்றான்? யோகத்தின் அர்த்தம் ஆன அவனே யோக வடிவில் நின்று தன் தவக் கோலத்தால். பக்தர்களை யோகம் பற்றி அறிய வைக்கின்றான், இந்தத் தவ வடிவம் எங்கேயும் காணக் கிடைக்காத ஒன்றல்லவோ?? இந்தத் தவக்கோலம் எனக்காவோ என்று எண்ணத் தோன்றுகின்றதல்லவா?

அடுத்து நீங்க சொல்வது ஈசனின் இரு மனைவியர் பத்தி. உலகுக்காக இவ்வாறு ஏற்படுத்தப் பட்டது. நீரின்றி அமையாது உலகு. அந்த நீரைத் தருவது மலையில் இருந்து விழும் அருவிதானே. நீரின் மூலமே சக்தியும் உருவாகின்றது. ஆகவே நீரையும், சக்தியையும் மனைவியாய்க் கொண்டதாய் தாத்பரியம். மலை மேலிருந்து விழும் அந்த அருவியைத் தன் தலையில் ஈசன் தாங்குவதாய் ஐதீகம். அதுவே கங்கையாய் பூமியில் விழுவதாயும் ஐதீகம். இமவானின் புத்திரியே இவளும். உமைக்கு மூத்தவள். உண்மையில் ஈசன் மூலம் கொடுத்த சரவணகுமாரனின் அக்னியின் வீரியம் தாங்காமல் உமை ஓடிப் போக தன் நீரின் சக்தியால் அதைத் தாங்கிக் கொண்டு சென்று சரவணப் பொய்கையாய் உருமாறிக் கொண்டு ஒளிந்திருந்த உமையிடம் கங்கை விட்டதாய்ச் சொல்லுவார்கள். இதுவும் நீர், அதுவும் நீர். வேறுபாடு எங்கிருந்து வந்தது? உள் அர்த்தம் தான் புரிந்து கொள்ளப் படவேண்டும்.

அடுத்துக் கண்ணனுக்கு, அதாவது விஷ்ணுவுக்கு இத்தனை மனைவியரா? என்று ஒரு ஏக்கம். கண்ணனாய் அவதாரம் எடுத்த போது ருக்மிணியிடம் அக்கரையில் இருக்கும் துர்வாசரிடம் சேர்ப்பிக்கும்படியான ஒரு முக்கியப் பொருளைக் கொடுத்து அனுப்புகின்றார் கண்ணபிரான். நதியோ பிரவாஹம் எடுத்து ஓடுகின்றது. இரு கரையும் புரண்டு ஓடுகின்றது. எவ்வாறு செல்வது? ருக்மிணிதயங்க, கண்ணன் சொல்கின்றான் அவளிடம்: "நித்திய பிரம்மசாரியான கண்ணனுக்காக வழிவிடு என்று நதியிடம் கேள். வழிவிடும்." ருக்மிணிக்குத் திகைப்பு. இத்தனை மனைவியர் இருக்கும் கண்ணன் நித்திய பிரம்மசாரியா?? எனினும் ருக்மிணி அவ்வாறே சொல்ல நதி விலகி வழிவிட அக்கரை சென்று துர்வாசரிடம் சேர்ப்பிக்கின்றாள் ருக்மிணி. இனி திரும்பக் கண்ணனிடம் செல்லவேண்டுமே? என்ன செய்வது? மீண்டும் நதியின் வெள்ளம்!!

இப்போது துர்வாசர் சொல்கின்றார் ருக்மிணியிடம்: "நித்திய உபவாசியான துர்வாசருக்காக வழிவிடச் சொல்!" தூக்கிவாரிப் போடுகின்றது ருக்மிணிக்கு. துர்வாசராவது? நித்திய உபவாசியாவது? சாப்பாட்டுப் பிரியர். நேரத்துக்குக் கொடுக்கலைனா கோபமும் வரும். என்றாலும் இப்போதும் முனிவர் சொன்னபடியே செய்ய நதி விலகி வழிவிடுகின்றது. குழப்பத்துடன் திரும்பி வருகின்றாள். கண்ணனைப் பணிந்து நிற்கின்றாள். கண்ணனுக்கு அவள் கலக்கம் புரிய உண்மை நிலையை அவளுக்கு விளக்குகின்றான் ."ருக்மிணி, இத்தனை பெண்களோடு நான் இருப்பது இந்தப் பெண்களின் திருப்திக்காக மட்டுமே. உண்மையின் என் மனமோ, ஆன்மாவோ இதில் ஈடுபடவில்லை. அதேபோல் துர்வாசர் உண்பதாய்த் தெரிவதும் வெளி உலகுக்காகவே. உண்மையில் அவருக்காக அல்ல. அவர் பரம ஞானி. நீர் கூட அருந்தாமல் அவரால் இருக்க முடியும்." ருக்மிணி புரிந்து கொள்கின்றாள். பற்றில் இருந்து, பந்தத்தில் இருந்து விடுபட்டு இருப்பவர்களை எதுவும் பாதிக்காது, எதுவும் அவர்களிடம் ஒட்டாது என்பதை. புளியம்பழம் ஓட்டில் இருந்து பிரிந்தால் தான் கையில் ஒட்டாமல் எடுக்க முடியும். இல்லை எனில் எடுக்க முடியாது. ஓட்டிற்குள் இருந்தாலும் ஒட்டாமல் இருப்பது தான், குடும்பத்திற்குள் இருந்தும் ஒட்டாமல் இருப்பது. அதையே கண்ணன் நடத்திக் காட்டினான்.

புத்தகங்களிலும், புராணங்களிலும் இருப்பதின் உள்ளார்ந்த அர்த்தங்களைப் புரிந்து கொண்டாலே போதுமானது. அனைவரும் நினைப்பதும் சொல்லுவதும் கடவுள் ஏதோ தவறுகளுக்கு மேல் தவறுகள் செய்து கொண்டே இருப்பது போலவும், அதற்கு நாம் ஏதோ போனால் போகிறது என்னோட பக்தியினால் நான் உன்னை ஏத்துக்கறேன் என்று சமாளிப்பது போலவும் தோற்றம் அளிக்கின்றது. புராணங்களை ஊன்றிப் படியுங்கள். புரிந்து கொள்வீர்கள்,
இதிலே பிரம்மாவைப் பற்றியது விடுபட்டிருப்பதை இப்போத் தான் கவனித்தேன். மனிதனுக்கு அறிவு இருந்தால் மட்டும் போதாது. அந்த அறிவால் விளையும் உள்ளுணர்வு ஜோதிமயமான பிரகாசமாய்த் தன்னுள்ளும், தன்னைச் சுற்றியும் பரவ வேண்டும். அதுவே சாவித்திரி, காயத்திரியாகவும், உருவகப் படுத்தப் பட்டுள்ளது. நம் வாயிலிருந்து வெளிப்படும் சொல் நற்சொல்லாய் இருக்கவேண்டும் என்பதாலேயே நாவில் சரஸ்வதி இருப்பதாயும் உருவகப் படுத்தினார்கள். நாக்கினில் சரஸ்வதி இருக்கின்றாள் என்றால் அச்சம் வருமே? அவளைக் கடவுளாகவும் உருவகப் படுத்தி விட்டால் ஒவ்வொரு சொல்லும் யோசித்துத் தானே சொல்ல வேண்டும்? அதே போல் தான் படிப்பினால் விளையும் அறிவும் நல்லதையே நினைக்கவேண்டும். அதனால் உள்ளுணர்வு ஜோதிமயமாய் ஆகவேண்டும், அதே சமயம் அந்த உள்ளுணர்விலிருந்து பரவும் ஒளியால் அகில உலகையே பிரகாசிக்க வைக்கும்.

மனதைக் காடாய் உருவகப் படுத்தி, அந்தக் காட்டைத் தன்னில் எழும்பிய ஜோதியால் அழித்து அதில் அம்பிகையைக் கண்ட பாரதியின் வரிகளை இங்கே நினைவு கூருங்கள்.

அக்னிக் குஞ்சொன்று கண்டேன் -ஆங்கோர் காட்டிடைப்
பொந்தினில் வைத்தேன்- வெந்து தணிந்தது காடு
தழல் வீரத்தினில் குஞ்சென்றும், மூப்பென்றும் உண்டோ?


மக்களிடையே இறை உணர்வு இல்லாமல் போனதன் காரணமாகவே பல்வேறு மாநிலங்களுக்குள்ளும், மொழிச்சண்டை, ஜாதிச்சண்டை எல்லாம் அதிகம் ஆகியுள்ளது. ஏற்கெனவேயே ஜாதியின் பெயரால் கொடுமை நடந்ததாகச் சொல்லப் படும் நாட்களில் கூட இவ்வளவு அதிக அளவில் கொடுமைகள் நடந்தது இல்லை. காஷ்மீரில் இருந்து கன்யாகுமரி வரையிலும் உள்ள மக்களை அன்றிலிருந்து இன்று வரை கட்டிப் போட்ட பக்தியானது இன்றைய நாட்களில் காணக்கிடைப்பதில்லை. இன்றைக்கு உடனடித் தேவை அறிவு சார்ந்த பக்தியே. மூட நம்பிக்கைகள் உள்ள பக்தி அல்ல.

கடவுளர் தவறான உதாரணம் ஆகலாமா?

ந‌ம் க‌ட‌வுள‌ர் எல்லோரும் ஐடிய‌ல் இல்லை. ந‌ம் ந‌ம்பிக்கையின் உச்ச‌ப‌ட்ச‌ம் என்ன‌ க‌ட‌வுள் ச‌த்திய‌மா என்ப‌து தானே.கடவுள் அப்படிங்கற கருதுகோள் மூலம் தானே நாம் நம் குழந்தைகளுக்கு நல்வழிய போதித்துக் கொண்டு இருக்கின்றோம். அப்ப‌டிப்ப‌ட்ட‌ க‌ட‌வுள‌ர் த‌வ‌றான‌ உதார‌ண‌மாக‌லாமா? த‌மிழ் க‌ட‌வுள் என்ற‌ழைக்க‌ப்ப‌டும் கும‌ர‌ன் முன்கோப‌க்கார‌ன். ஒரு மாக்க‌னிக்காக‌ குடும்ப‌த்தை பிரிந்த‌வ‌ன். க‌ற்பு க‌ள‌வு என்று இருவித‌த்திலும் ம‌ண‌ம் புரிந்த‌வ‌ன்.

அவ‌ன் த‌ந்தை ஈச‌னும் அப்ப‌டியே இரு ம‌னைவி, த‌ன்னை ம‌திக்காத‌ மாம‌னார் வீட்டுக்கு போக‌ கூடாது என்று ம‌னைவியை அந்த‌ உல‌க‌ மாதாவை சொன்ன‌வ‌ர். கோப‌ம் வ‌ந்தால் ம‌னைவியையும் ச‌ரி, உண்மைக்காக‌ வாதாடும் ந‌க்கீர‌னையும் ச‌ரி சுட்டெரிப்ப‌வ‌ர்.

இவ‌ர் மைத்துன‌ன் விஷ்ணுவோ ஆயிர‌ம் நாம‌ம் கொண்ட‌வ‌ன், ம‌னைவிமார்க‌ளுக்கு க‌ண‌க்கே கிடையாது. ஒரு ம‌னைவியிட‌ம் மோதிர‌த்தை கொடுத்துவிட்டு முத‌ல் ம‌னைவியிட‌ம் ம‌ண‌ல்வெளியில் தொலைத்துவிட்ட‌தாக‌ கூறி ம‌ட்டைய‌டி வாங்குப‌வ‌ர். இவ‌ர் ஒவ்வொரு அவ‌தார‌த்திலும் முறைமீற‌ல்க‌ள் ஒன்றா இர‌ண்டா எல்லாம் சொல்ல‌வே இந்த‌ ஒரு ப‌திவு போதுமா?

பிர‌ம்ம‌னோ நான்கு முக‌ம் கொண்ட‌வ‌ர் இவ‌ருக்கும் ம‌னைவிமார் இருவ‌ருரோ மூவ‌ரோ க‌தைப்ப‌டி. சர‌ஸ்வ‌தி,சாவித்திரி,காய‌த்ரி. ஆனா கும்பிட‌ற‌ங்க‌வ‌ங்க‌ எல்லோருக்கும் போய் எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அது மெய்ப்பொருள் என்று வ‌ர‌த்தை வாரி வ‌ழ‌ங்கி பின் அடுத்த‌ க‌ட‌வுள‌ரிட‌ம் போய் நிற்ப‌து இவ‌ர் வழ‌க்க‌ம்.

ச‌ரி ச‌ரி அடிக்க‌ வ‌ராதீங்க‌ எல்லாத்தும் கார‌ண‌ம் இருக்கு. க‌ட‌வுள‌ர் யாரும் த‌வ‌றான‌ உதார‌ண‌ங்க‌ள் இல்லை அவ‌ர்க‌ள் யாவ‌ரும் ஐடிய‌ல் தான்.

ஏதோ என‌க்கு தெரிந்த‌ விள‌ங்க‌ளை த‌ர‌ முய‌ல்கின்றேன். மாங்க‌னிக்காக‌ குடும்ப‌ம் பிரிந்த‌ கும‌ர‌ன் இளைஞ‌ர்க‌ள் த‌ன் பெற்றோரை சார்ந்தில்லாம‌ல் தானே த‌ன் காலில் நிற்க‌வேண்டும் என்ற‌ க‌ருத்தை எடுத்துக்காட்டுகின்றார். க‌ற்பு க‌ள‌வு ம‌ண‌ம் மேட்ட‌ருக்கு அப்புற‌ம் வ‌ருவோம்.

இறைய‌னார் ஈச‌ன் முக்கால‌மும் உண‌ர்ந்த‌வ‌ர் தாட்ச‌ய‌ணிக்கு த‌ந்தையால் அவ‌மான‌ம் நேரும் என்று தெரிந்தே த‌டுத்தார், தானென்ன‌ ஆண‌வ‌த்தால் அல்ல‌. இவ‌ர் கோப‌த்திற்கு பின்னால் தான் உண‌ர்த்த‌ப்ப‌ட்ட‌து ச‌க்தியும் சிவ‌னும் ஒன்றென்று. அப்ப‌டி சுட்டெரித்த‌ கார‌ண‌த்தால் தான் த‌ன்னில் பாதியாக‌ ச‌க்கியை கொண்டு அர்த்த‌நாதிஸ்வ‌ர‌ர் ஆனார். நக்கீர‌னைக்கு நெற்றிக்க‌ண் காட்டி த‌மிழுக்குகாக‌ அவ‌ர் த‌ன்னையும் த‌றுவார், க‌ட‌வுள் என்றாலும் த‌மிழை காக்க‌ குர‌ல் த‌ருவார் என்ற‌ பெருமையை தான் பெற்று தந்தார் அந்த‌ இறைய‌னார். இவ‌ரின் கொஞ்சு த‌மிழில் வ‌ந்த‌த‌ல்ல‌வா "கொங்குதேர்" என்ற‌ குறுந்தொகைப் பாட‌ல். இர‌ண்டு ம‌னைவி விச‌ய‌த்திற்கு அப்புற‌ம் வ‌ருவோம்.

விஷ்ணு க‌ண‌க்கிலும் ம‌னைவிமார்க‌ள் பிர‌ச்ச‌னையை பொதுவாக‌ எடுத்துக்கொள்வோம். ஒவ்வொரு அவ‌தார‌த்திலும் ந‌ட‌ந்த‌ முறைமீற‌ல் எல்லாமே அத‌ர்ம‌த்தை அத‌ன் வழியே சென்று அட‌க்க‌ த‌ர்ம‌த்தை நிலைநாட்ட‌வே தான்.

பிர‌ம்மாவின் இள‌கிய‌ ம‌ன‌துக்கும், "உல‌கில் எங்கெல்லாம் த‌ர்ம‌ம் அழிந்து அத‌ர்ம‌ம் த‌லை தூக்குகின்ற‌தோ அங்கேல்லாம் நான் வ‌ருவேன்" என்ப‌த‌ன் ஊடுகோலே கார‌ண‌ம். "க‌ட‌வுள் ந‌ல்ல‌வ‌ர்க‌ளை சோதிப்பான் கைவிட‌மாட்டான் கேட்ட‌வ‌ர்க‌ளுக்கு வாரி வாரி வ‌ழ‌ங்கிவிட்டு, திருந்த‌ வாய்ப்ப‌ளித்து பின் திருந்தாவிட்டால் த‌ண்ட‌னை த‌ர‌வே" இவர் வ‌ர‌ம் த‌ருவார். இவ‌ர் ப‌டைக்கும் க‌ட‌வுள் ஆயிற்றே. காக்கும் ம‌ற்றும் அழிக்கும் க‌ட‌வுள‌ர் த‌ம்த‌ம் வேலையை செவ்வ‌னே செய்வ‌ர்.

ச‌ரி இப்போது க‌ட‌வுள‌ர்க்கு ப‌ல‌ ம‌னைவிக‌ள் இருப்ப‌த‌ற்கு என்ன‌ நியாய‌ம் க‌ற்பிக்க‌. அத‌ற்கும் த‌ர்ம‌ம் இருக்கின்ற‌து. ஒரு நாட்டை ஆள்ப‌வ‌ர் எல்லா துறையையும் த‌ன் கையில் வைத்துக் கொள்ள‌ இய‌லாது. அந்த‌ அந்த‌ துறைக்கு ஒரு எஸ்பேர்ஸ் வேண்டும் அவ‌ர்க‌ளை எல்லோரையும் ஒருக்கிணைத்து நாட்டை ந‌ல்ல‌ வ‌ழியில் செய‌ல்ப‌டுத்த‌லாம் நாட்டை ஆள்ப‌வ‌ர்.

அதை போல் தான் ச‌ர‌ஸ்வ‌தி க‌ல்விக்கும், ம‌ந்திர‌ ச‌க்திக்கு காய்திரியும், அந்த‌ ம‌ந்திர‌ ச‌க்திக்குள் இருக்கும் ஜோதி வ‌டிவ‌ம் சாவித்ரி என்றும் வைத்த‌ன‌ர் முன்னோர். அப்ப‌டியாக‌ புத்தி ச‌ம்ம‌ந்தமான‌ ஆளுமைக்கு ச‌ர‌ஸ்வ‌தி, காய‌த்ரி, சாவித்ரி இவ‌ர்க‌ளின் க‌ண‌வ‌ர் பிர‌ம்ம‌ தேவ‌ன். ஆஹா ச‌ர‌ஸ்வ‌தி, சாவித்ரி, காய‌த்ரி அனைவ‌ரும் புத்தி என்ற‌ ஒரு விச‌ய‌த்திற்குள் அட‌க்க‌ம் அந்த‌ வகையில் பார்த்தால் பிர‌ம்ம‌னுக்கு ஒரே ஒரு ம‌னைவியின் ப‌ல‌ ப‌ரிமாண‌ங்க‌ளே காய‌த்ரி ம‌ற்றும் சாவித்ரி.

விஷ்ணுக்கு ப‌ல‌ ம‌னைவிய‌ர் இருப்ப‌து போல‌ தோன்றினாலும் அவ‌ர் அனைவ‌ரும் ம‌ஹால‌ஷ்மி, பூமாதேவி என்ற‌ இருவ‌ருக்குள் அட‌ங்கி விடுவ‌ர். மஹால‌ஷ்மி செல்வ‌திற்கு அதிப‌தி. பூமாதேவி நில‌ம் நீர் காற்று என்ற‌ ம‌ற்றை செல்வ‌ங்க‌ளுக்கு அதிப‌தி. ஆஹ இவ‌ர்க‌ள் எல்லாவித‌ செல்வ‌ங்க‌ளுக்கும் கொடுக்க‌ப்ப‌ட்ட‌ த‌னித்த‌னி வ‌டிவ‌ங்க‌ளே ஆயினும் ஒரே வ‌டிவ‌மே. ஆகையால் விஷ்ணுக்கும் ம‌னைவி ஒருவ‌ளே. ஏக‌ப்ப‌த்தினிவிர‌த‌ன் ராம‌ன் ம‌ட்டும‌ல்லா எல்லா விஷ்ணு ரூப‌மும் அப்ப‌டியே.

சிவ‌ச‌க்தி வீர‌த்திற்கும் உட‌லில் அசையும் அனைத்து ச‌க்திக்கு அதிப‌தி. க‌ங்கை உயிர்வாழ் தேவையான‌ த‌ண்ணீர். த‌ண்ணீரால் ஆன‌து தானே உட‌ம்பும். உட‌ல் முழுதும் ஓடும் ர‌த்த‌மும் த‌ண்ணீர் க‌ல‌வை தாமே. அகையால் ச‌க்தியும் க‌ங்கையும் இருவ‌ர் போல் தெரியும் ஒருவ‌ர்.

மேலும் க‌ட‌வுள‌ர் க‌ண‌வ‌ன் ம‌னைவி மாம‌ன் ம‌ச்சான் என்று ம‌னித ச‌முக‌த்தில் இருக்கும் உறவுக‌ளோடான‌ ஒப்பீட்டிற்கு அப்ப‌ற்ப‌ட்ட‌வ‌ர்க‌ள். க‌ட‌வுள‌ர் த‌ர்ம‌ம் வேறு. ந‌ம் ந‌டைமுறையோடு பார்த்து அறிவிய‌ல் ஆராய்ச்சி எல்லாம் செய்யின் விண் குழ‌ப்பமும் தேவைய‌ற்ற‌ சிந்த‌னையுமே மிஞ்சும்.

மீண்டும் செல்றேன் கடவுள் என்கிற‌ கருதுகோள் மூலமாக‌ தான் நாம் நம் குழந்தைகளுக்கு நல்வழிய போதித்துக் கொண்டு இருக்கின்றோம். இவை க‌ட‌வுள‌ர் த‌ர்ம‌ம் என்று சொல்லி ந‌ம்பிக்கை வ‌ள‌ர்க்க‌ வேண்டும். மேல‌ சொன்ன‌து போல‌ புத்திபூர்வ‌மாக‌ என்று நினைத்து விப‌ரித‌மாக‌ யோசித்தால் கிடைக்கும் வெளிச்ச‌ம் பய‌ம் தான் த‌ரும். பின்வ‌ரும் க‌விதை போல‌.
வெளிச்சம்
பயத்தை ஏற்படுத்த
தொடங்கும் வரை
பாதைகள் எளிமையாகவே இருந்தன
இருளின் மீதான அனுமானங்களும்
ல‌ஷ்ம‌ண்.

*****************************************************************************************************************************************************

இளைய தோழி லாவண்யாவின் மடல் இது. அவர்களின் சம்மதம் பெற்றே வெளியிடுகின்றேன். இதற்குத் தத்துவார்த்தமாய்ப் பலவிதமான பதில்கள் கூற முடியும் எனினும், நான் புராணங்களையே மேற்கோள் காட்டி பதில் கொடுத்திருக்கேன். எந்தவிதமான விவாதத்துக்கும் இல்லை இது. இன்றைய தலைமுறையின் தவறான புரிதலையும், அதைத் திருத்தவேண்டும் என்ற எண்ணத்திலுமே இருவர் சம்மதத்துடனே வெளியிடுகின்றோம். கடவுளை நம்பும் பலருக்கும், முரண்பாடுகள் கொஞ்சம் நெளிய வைக்கின்றன. கூடியவரை அதைத் தெளிய வைக்கும் ஒரு சிறு முயற்சியே இது. மற்றவரும் அவரவர் கோணத்தில் பங்கு கொள்ளலாம். நன்றி. பதில் பதிவும் அடுத்துச் சில மணி நேரங்களிலேயே வெளி வரும். பொறுமையாகப் படிக்கப் போறவங்களுக்கு என் நன்றி.

Monday, July 13, 2009

மின்னும் நட்சத்திரமா இருக்கணுமா?

நட்சத்திரங்கள் விண்ணில் மின்னுகின்றன. நிரந்தரமாகவும் இருக்கின்றன. பகலில் சூரிய ஒளி காரணமாய்த் தெரியறதில்லை. என்றாலும் நக்ஷத்திரங்கள் விண்ணில் நிரந்தரமாய் இருக்கின்றன. நமக்குத் தெரியறதில்லை. ஆனால் தமிழ்மணம் நட்சத்திரம் ஒரு வாரத்துக்கு மட்டுமே மின்னும். தமிழ்மணம் நக்ஷத்திர அழைப்பு வந்ததுமே கொஞ்சம் யோசனைதான். நம்மளாலே முடியுமா? தினம் ஒரு பதிவு கட்டாயமாய்ப் போடணும், அதுவும் தமிழ்மணம் விதிமுறைகளைச் சார்ந்து இருக்கணும். யோசனையாத் தான் இருந்தது. ஆனால் இம்முறை துணிஞ்சு இறங்கிட்டேன். அழைப்பு வந்ததுமே மறுபேச்சுப் பேசாமல் சரினு சொல்லியாச்சு. இத்தனை நாளா நம்ம பதிவுக்கு வராதவங்க இப்போத் தான் வரப் போறாங்களானும் தோணிச்சு. அதோட நம்ம கதைதான் ஊரறிந்த செய்தியாச்சே?? அழைப்பை ஏற்கும் முன்னர் என்னால முடியுமானே யோசனை. ஒரு வாரம் ஒரு நியதிக்குக் கட்டுப்பட்டு எழுதணுமே! (ஹிஹிஹி, பெரிய எழுத்தாளி ஆயிட்டேன் இல்லை) ஆனால் என்னை விட அதிகம் கஷ்டப் படப் போறது படிக்கிறவங்க தானே. அதனாலே துணிஞ்சு இறங்கிட்டேன். இலக்கியம் படைக்கவானு என்னோட தோழி ஒருத்தியின் அழைப்பும் வந்தது. ஹிஹிஹி, நல்ல ஆளைப் பார்த்துக் கூப்பிடறாங்கனு மனசிலே நினைச்சேன். நாம எழுதறது, பேசறது, நினைக்கிறதுனு எல்லாமே இலக்கியம்தானே இன்னும் கொஞ்ச வருஷம் போனா! என்ன சொல்றீங்க????


உண்மையாகவே இலக்கியத் தரம் வாய்ந்த பல பதிவுகளுக்கு நான் போய்ப் படிச்சுட்டுப் பிரமிச்சுப் போயிடுவேன். திடீர்னு எல்லாம் ஒரு இரவிலே இந்த பக்திக்கதைகளிலே பற்று ஏற்படவில்லை. சின்ன வயசிலே இருந்தே ஊறிப் போனதே இவை எல்லாம். இது ஆன்மீகமும் இல்லை. உண்மையா ஆன்மீகம் எழுதறவங்க நிறையப் பேர் இருக்காங்க. நான் அதிலே சேர்த்தி இல்லை. நான் ஒரு கதை சொல்லி மட்டுமே! அதுவும் ஏற்கெனவேயே சொல்லப் பட்ட கதைகளே! புதுசா எதுவும் இல்லை. சிலர் ஆன்மீகம் பத்தி எழுதறதைப் பார்த்தாலும் அதே வியப்பு ஏற்படும். அந்த அளவுக்கெல்லாம் எனக்கு எதுவும் தெரியாது. நான் நன்கு அறியவில்லை என்றாலும் ஓரளவுக்காவது தெரிஞ்சு வச்சிருக்கிறது புராண, இதிஹாசங்கள் பத்தித் தான். சின்ன வயசிலே இருந்து கேட்டும், படிச்சும் ஓரளவுக்குப் புரியும். அதனாலே துணிந்து இதை ஆரம்பிச்சேன் என்றாலும் இந்தக் கால இளைஞர்களின் தவறான புரிதலும் ஒரு காரணம் ஆகும். எல்லாரும் சொல்லுவதைப் போல பெரியவங்க எல்லாம் முன்னாலே சொல்லி வச்சுட்டுப் போனதைத் தான் நான் திருப்பிச் சொல்லிட்டு இருக்கேன். புதுசா எதுவும் சொல்லவே இல்லை. சொல்லும் அளவுக்குத் தகுதியை வளர்த்துக்கவும் இல்லை. சில எழுத்துக்களைப் படிக்கும்போது என்ன இதுனு பிரமிப்பு ஏற்படும். அவங்க யாருமே இன்னும் நக்ஷத்திரம் ஆகாமல் இருக்காங்க. நக்ஷத்திரம் ஆனவங்கள்ளேயும் ஜாம்பவான்கள், ஜாம்பவதிகள் நிறைய உண்டு. அவங்க அளவுக்கெல்லாம் எழுதப் போகிறதில்லை. ஆகவே ரொம்ப எதிர்பார்ப்பு வேண்டாம். சில பதிவுகள் அர்த்தமுள்ள பதிவுகளாகவும் இருக்கும். நான் அந்த ரகமும் இல்லை. சிலதை வேண்டாம்னே தவிர்க்கிறேன்.

எங்க பகுதியிலே எப்போ மின்சாரம் வரும், எப்போப் போகும்? எப்போ உயர் அழுத்த மின்சாரம், எப்போ குறைந்த அழுத்த மின்சாரம்னு தெரியாது. இந்த அழகிலே இணையம் வேறே திடீர் திடீர்னு போயிடும். அதனால் இம்முறை அழைப்பு வந்ததுமே எந்த விஷயங்களைப் பற்றி முக்கியமான பதிவுகள் போடணும்னு நினைச்சதை வலை ஏத்தி வச்சுட்டேன். அது அது அந்த அந்தத் தேதிக்குத் தானா வந்துடும். நேரம் மட்டும் கொஞ்சம் சரி செய்யணும். பின்னூட்டங்கள் இப்போ அதிகமாய் வரதில்லை. அதனால் பிரச்னை இல்லை. மொக்கைகளுக்கே ஆதரவுனு சிஷ்யகேடிங்க முடிவு எடுத்திருப்பதால் நீங்க எழுதற ஆன்மீக/பக்தி விஷயங்களுக்கு யார் பின்னூட்டம் போடுவாங்கனு எல்லாரும் கேலி செய்யறாங்க. யார் படிக்கிறாங்கனு இதை எல்லாம் எழுதறேனு சிலர் கேட்கிறாங்க. ராமாயணம் எழுதும்போது இதைக் கேட்டே ஒருத்தர் பின்னூட்டம் போட்டிருந்தார். எங்கோ யாரோ ஒருத்தர் இரண்டு பேர் நான் எழுதறதில் உள்ளதைப் புரிந்து கொண்டால் போதும். முதல்லே எல்லாம் பின்னூட்டங்கள் வரலைனா கஷ்டமாத் தான் இருந்தது. ஆனால் போகப் போக பின்னூட்டங்களை எதிர்பார்க்கும் மனசும் இப்போ இல்லை. இதுதான் நீ செய்யவேண்டியதுனு யாரோ கட்டளை போட்டிருக்கிறாப்போல் ஒரு நினைப்பு. அதனால் எதையும் எதிர்பார்க்காமலேயே எழுதிட்டு இருக்கேன். வந்து பின்னூட்டம் போடறது மிகச் சிலரே. அந்த மிகச் சில பின்னூட்டங்களுக்கும் உடனடியாக பதில் எழுதலைனா தப்பா நினைக்க வேண்டாம். மின் தடை, அல்லது இணையத் தடை தான் காரணமா இருக்கும். மத்தவங்க ஆன்மீகம்னு நினைச்சுட்டு வரதில்லை. இது ஆன்மீகமே இல்லை. பக்திக் கதைகளே. இன்றைய இளைய தலைமுறைக்குப் பள்ளிகளில் நீதி போதனை வகுப்புகளோ, அல்லது குடிமைப் பயிற்சியோ பாடத்திட்டத்தில் இல்லை. முக்கியமான இவைகள் சொல்லிக் கொடுக்காமல் ஒரு பாடத் திட்டம். இதிலே சமச்சீர் பாடத் திட்டம் கொண்டு வரணும்னு வேறே சொல்லிட்டு இருக்காங்க.

நான் பள்ளியில் படிக்கையிலே வாரம் இரு முறை நீதி போதனை வகுப்புகளும், வாரம் இருமுறை குடிமைப் பயிற்சி வகுப்புகளும் இருந்தன. நீதி போதனையில் மற்றக் கிறித்துவ மாணவிகளுக்கு அவங்க வேதாகமத்தில் இருந்து பாடம் என்றால் எங்களைப் போன்றவர்களுக்குப் பொதுவான நீதிக்கதைகள், பாடங்கள் என்று போதிக்கப் படும். குடிமைப் பயிற்சி அனைவருக்கும் பொது. அனைத்துக் கைவேலைகள், சாலை விதிகள், விருந்து சாப்பிடும்போது கடைப்பிடிக்கும் விதிகள், குழந்தைகள் பெரியவர்களிடம் நடந்து கொள்ளவேண்டிய முறைகள், சமூக நீதிகள் என அனைத்தும் போதிக்கப் பட்டு இவைகளுக்குத் தேர்வும் இருந்தது. ஆனால் இன்றைய பள்ளிகளில் கடவுள் வாழ்த்தே தடை செய்யப் பட்டுள்ளது. :((((((( இறைவனுக்குப் படைத்துவிட்டு உணவு உண்ணுவதையும் கேலி செய்கின்றனர். நிவேதனம் என்றால் கடவுள் வந்து உணவருந்துவார் என்று எண்ணக் கூடாது. அறிவிப்பு மட்டுமே அது. இன்றைய இந்த நேர உணவை நீ கொடுத்ததுக்கு உனக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்ற அறிவிப்பு.

பலருக்கும் புராணங்கள் பற்றிய தவறான கண்ணோட்டமே இருக்கிறது. ஒரே மனுஷியான நான் என்னோட அப்பா, அம்மாவுக்குப் பெண்ணாகவும், கணவருக்கு மனைவியாகவும், தோழிக்கு சிநேகிதியாகவும், குழந்தைகளுக்குத் தாயாகவும், மாமியார், மாமனாருக்கு மறுமகளாகவும் இப்படிப் பல்வேறு ரூபங்கள் எடுக்கவில்லையா? அதுபோலவே இருக்கும் ஒரே பிரம்மமே வேறு வேறு வடிவம் எடுக்கின்றது. ஒவ்வொருவருக்கும் பிடிச்ச வகையில். வீரம் பிடிச்சவங்களுக்கு வீரத்தில் சிறந்த முருகனும், காளியும் கடவுளாயும் எடுத்துக்கறாங்க. சிலருக்குக்கிருஷ்ணரைப் பிடிக்கும், அதிலும் பால கிருஷ்ணனைப் பிடிக்கும். இப்படி ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொன்று பிடிக்கும் என்பதால் இருக்கும் ஒரே பிரம்மமே பல்வேறு உருவங்களில் அவரவருக்குத் தகுந்தாற்போல் தோன்றுகிறார்.

பொதுவாய் நான் எழுதுவதில் எந்தவிதமான சமூக, ஆன்மீக, பெண்கள் பிரச்னைகளைத் தொடுவதில்லை. இந்தப் பிரச்னைகள் பற்றிய என்னோட கருத்துகள் கொஞ்சம் மாறுபடுவதால் விவாதங்களைத் தவிர்க்க எண்ணியே அவற்றைப் பற்றி ஏதும் எழுதுவது இல்லை. இதிஹாசங்கள், புராணங்களை அடிப்படையாக வைத்தே தகவல்களைக் கொடுத்து வருகின்றேன். ஏனெனில் பலரும் புராணங்களைப் புரிந்து கொள்வதில் செய்யும் தவறே காரணம். மற்றவை என்னோட பயணங்கள் பற்றி மட்டுமே. இப்போவும் அப்படித் தான் எழுதப் போறேன்னு நினைக்கவேண்டாம். ஒரு சில முக்கியமான பிரச்னைகளை ஓரளவு ரொம்ப ரொம்ப லேசாக எடுத்துச் சொல்ல முயன்றிருக்கிறேன். ரொம்ப ஆழமா எல்லாம் போகலை. முழுக்க ஆன்மீகமும் இல்லை, கவலைப் படாதீங்க.

ஆன்மீகம்னு நான் எழுதும் புராணக் கதைகளைச் சொல்ல முடியாது. உண்மையான ஆன்மீகமே வேறே. அதன் முதல் படியில் கூட நான் இல்லை. ஆனால் ஒன்று, இந்த பக்தியெல்லாம் திடீர்னு வந்தது இல்லை. அது மட்டும் நிச்சயம். சின்ன வயசிலே இருந்தே வந்த ஒன்று. ஆழமாய்ப் பதிந்து விட்டது. இன்றைய தலைமுறையினர் பல விஷயங்களில் ஒரே அவசரம், வேகம். எல்லாருக்கும் புராணக் கதைகள் பலவும் தெரிந்திருந்தாலும், புராணங்கள் பெரும்பாலும் தவறாய்ப் புரிந்து கொள்ளப் பட்டிருக்கின்றன என்பதற்கு என் இளைய சிநேகிதி லாவண்யா எனக்கு அனுப்பிய ஒரு மடலில் இருந்து காணலாம். கடவுள் இருக்கின்றான் என்று சொல்லும் ஆத்திகவாதிகளை நெளிய வைக்கும் அளவுக்குக் குறைகள், குற்றங்கள். இது புரிதலில் உள்ள கோளாறே காரணம். ஆத்திகவாதிகள் பலரும் கடவுளை நம்பினாலும் இந்த முரண்பாட்டை ஏற்றுக் கொள்ளுவதில்லை தான். ஆனால் இதில் ஆழமாய்ப் பார்த்துப் புரிஞ்சுக்கணும். அதற்கான அவகாசம் யாருக்கும் இல்லைனு நினைக்கிறேன். விவாதம் செய்யணும்னு பார்த்தால் புராணங்களைப் புரிந்து கொள்வது கஷ்டம் தான். நட்சத்திர வாரத்தின் முதல் பதிவே கடவுளில் தான் ஆரம்பம் ஆகிறது.

நாத்திகம் பேசுபவர்களுக்கு வெறும் வாயை மெல்ல அவல் கிடைச்சாப்போல் இந்த விஷயங்கள் மாட்டிக் கொண்டு தவிக்கின்றன. நம்மை மாதிரிக் கடவுளையும் நாம ஒரு மனுஷனா நினைப்பதிலே தான் இந்தக் கோளாறெல்லாம். கடவுள் இல்லைனு சொல்றவங்க, எங்கே கடவுள் காட்டுனு கேட்கிறாங்க. கடல் நீர் நிறைய உப்புத் தான் நிறைஞ்சு இருக்கு. வாயில் விட்டால் உப்புக் கரிக்கின்றது. ஒரு இடத்தில் உப்பு ஜாஸ்தி, மற்ற இடத்தில் உப்புக் கம்மினு சொல்ல முடியுமா? எல்லா இடத்திலும் ஒரே சீராக இருக்கின்றது. ஏன் அந்தக் கடல் நீரையே உப்புக்குப் பதிலாய்ப் பயன்படுத்திச் சமைக்கக் கூடாது? முடியாதுனு புரியுது இல்லையா? உப்பைப் பிரித்து எடுத்துப் பயன்படுத்தறோம் அல்லவா? அப்போத் தான் உப்பு இருக்குனு நாம புரிஞ்சுக்கறோமா? அது இல்லை அல்லவா? உப்பு என்னமோ ஏற்கெனவே இருக்கிறது தான்.

அது போலத் தான் கடவுளும். எல்லா இடத்திலும் நிறைந்தே இருக்கின்றார். ஒரு இடத்தில் இல்லை, மற்ற இடத்தில் இருக்கார்னு குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. ஆனால் கடல் நீரைப் பாத்தி கட்டித் தேக்கி வைத்து உப்பை அதில் இருந்து பிரிச்சு எப்படி எடுக்கிறோம்? அதற்கு எவ்வளவு உழைப்புத் தேவை? அதே போல் நம் இறை உணர்வு என்னும் கடல் நீரைப் பாத்தி கட்டித் தேக்கி வைத்து, நம் வழிபாடுகளாலும், செயலாலும், சொல்லாலும், நடத்தையாலும் இறை அருளைப் பெற வேண்டியது தவிர வேறு ஒன்றும் நினைக்காமல் இருந்தோமானால், நமக்கு கடவுள் என்னும் உப்புக் காக்ஷி கொடுக்கும். கடவுள் கிட்டே நாம் போய்ப் பரிபூரண சரணாகதி அடைய வேண்டும். இறைவன் ஒருவனே நாம்

"அழும்போது அணைக்கும் அன்னை
அறிவிலாது ஓடி ஆடி விழும்போது
எடுக்கும் அப்பன்"
ஆக இருக்கின்றான். கடவுளுக்கு நாம் ஒரு குழந்தையைப் போல என நண்பர் காழியூரர் கூறுவார். குழந்தை எவ்வாறு அம்மாவைத் தேடி எந்தத் தயக்கமும் இல்லாமல் ஓடிப் போய்க் கட்டிக் கொள்கின்றதோ அவ்வாறே நாம் கடவுளை நம் தாயாக நினைத்து நம் துயரங்களில் இருந்து காக்கவேண்டும் என அவனைத் தேடி ஓட வேண்டும். உண்மையான பக்தி உணர்வோடு ஒரு சொட்டுக் கண்ணீர் அல்லது மனசார ஒரு பிரார்த்தனை செய்து கொண்டாலே போதும். நம்மை நம் அனைத்துத் துன்பங்களிலிருந்தும் தடுத்து ஆட்கொள்ளுவான். இப்போது அடுத்து நீங்கள் படிக்கப் போவது லாவண்யா என்னைக் கேட்ட கேள்விகள். அதற்குப் பதிலாக நான் எழுதிய பதிவு ஒன்று. இது ஏற்கெனவே ஒரு குழுமத்தில் வந்தது. ஆகவே அங்கே படிச்சவங்க கொஞ்சம் பொறுத்துக்கணும். மத்தவங்க படிப்பதற்காக இது ஒரு மீள் பதிவு.

Saturday, July 11, 2009

நாதர் முடி மேலிருக்கும் நல்ல பாம்பே!


நாதர் முடி மேலிருக்கும் நல்ல பாம்பே!
உனக்கு நச்சுப் பையை வைத்தது யார் சொல்லு பாம்பே!

ஆடு பாம்பே! விளையாடு பாம்பே!
நின்றாடு பாம்பே! குதித்தாடு பாம்பே!
எழுந்தாடு பாம்பே!

நாதர் முடி மேலிருக்கும் நல்ல பாம்பே!

குற்றமற்ற சிவனுக்குக் குண்டலமானாய்
கூறு திருமாலுக்குக் குடையுமானாய்
கற்றை குழல் பார்வதிக்குக் கங்கணமானாய்
கரவாமல் உள்ளங்களித்தாடு பாம்பே!

ஆடு பாம்பே! நின்றாடு பாம்பே! விளையாடு பாம்பே!
குதித்தாடு பாம்பே! எழுந்தாடு பாம்பே!

சின்ன வயசிலே கிட்டத்தட்ட பதினாறு, பதினேழு வயசு வரைக்கும் பாம்பைப் பாம்பாட்டிகிட்டே பார்த்தது தான். மதுரையில் அப்படி ஒண்ணும் வீடுகளுக்குள் எல்லாம் பாம்பு வந்தது இல்லை. ஆனால் அண்ணா முதலில் வேலைக்குச் சேர்ந்த ஹோசூருக்குப் போனபோது, அங்கே பாம்பு சர்வ சகஜமாய் நடமாடிக் கொண்டிருந்தது ஒரு அதிசயமா இருந்தது. கொல்லையில்(வீட்டில் இருந்து கிட்டத்தட்ட அரை பர்லாங்காவது இருக்கும்) இருந்த கழிப்பறையில், குளியலறையில் பாம்பும் பக்கத்திலேயே வந்து உட்காரும். அந்த அளவுக்கு நண்பர்களாக இருந்தது. அதனால் திருமணம் ஆகி வந்து மாமனார் வீட்டுத் தோட்டத்தில் உள்ள கிணற்றில் பெரீஈஈஈஈஈஈஈஈஈஈஈய நல்ல பாம்பை வெகு சாதாரணமாகவே பார்த்தேன். அதுக்கப்புறமும் நாங்க இருந்த ராஜஸ்தான், குஜராத்தில் இருந்த அலுவலகக் குடியிருப்புகளில் எங்களோடு பாம்புகளும் குடி இருந்தன.

அடிக்கடி வீட்டுக்குள் வரதும், நாங்க விரட்டறதுமாவே இருக்கும். ஒரு தரம், ராணுவ வீரர் ஒருவரை விரட்டக் கூப்பிட்டதில் அவர் பாம்பை அடிச்சுக் கொன்னுட்டார். அதுக்கப்புறமா நாங்க யாரையுமே கூப்பிடாமல் நாங்களே விரட்டிடுவோம். குஜராத் ஜாம்நகரிலோ கேட்கவே வேண்டாம். தினம் காலை நிலையில் மொத்த நீளத்துக்கும் ஆக்கிரமித்துக் கொண்டு படுத்துக்கும். ராணுவக் குடியிருப்பு நிலைக்கதவுகள் எல்லாம் ஏழடிக்கும் மேல் உயரமும், நாலடிக்கும் மேல் அகலமும் உள்ள நிலைகள். எல்லாம் ஆங்கிலேயர் காலத்துக் கட்டிடம். தினமும் அந்தப் பாம்பை விரட்டினப்புறம் தான் வாசலே தெளிக்க முடியும். படுக்கையில் பக்கத்தில் ஒரு நீளக் கம்பை வச்சுண்டு தான் படுத்துப்பேன். எழுந்ததும் அந்தக் கம்பைத் தட்டி ஓசைப் படுத்தினால், பாம்பு வேக வேகமாய் குளிர்சாதனப் பெட்டியைப் பாக்கிங் செய்யும் க்ரேட்டில் போய் ஒளிஞ்சுக்கும். அதுக்குள்ளே நிறைய பாக்கிங் சாமான்கள் இருந்ததால் கண்டு பிடிக்கிறது கஷ்டம். விட்டுடுவோம். ஆனால் எந்த நேரம் வெளியே வருமோனு கொஞ்சம் திக் திக் தான்.

குழந்தைகள் இருவரும் படுக்கும் அறையில் ஜன்னல் கம்பி எல்லாம் போயிருந்தது. அதுவழியாவும் சில சமயம் வரப் பார்க்கும். இங்கே அம்பத்தூரிலே நாங்க வீடு கட்டி இருக்கும் இடத்திலே கேட்கவே வேண்டாம். எங்க வீட்டுக் கிணற்றடிக்குச் சில அடிகள் தள்ளி ஒரு பெரிய புற்றே இருந்தது. பின்னாலே வீடு கட்டினவங்க அந்தப் புற்றை இடிச்சுட்டுக் கட்டி இருக்காங்க போல. இப்போ பாம்புக்குக் குடி இருக்க இடமே இல்லை. அலைஞ்சுட்டு இருக்குதுங்க. அநேகமாய்த் தினம் ஒரு முறையாவது தோட்டத்தில் கட்டுவிரியனோ, சாரையோ, வழலையோ தரிசனம் கொடுக்கும். ஒருமுறை கொம்பேறி மூக்கன் வந்து அதைக் கொல்லத் தான் கொல்லணும்னு சொல்லிட்டுக் கொன்னுட்டாங்க. கொல்லாமல் விட்டால் திரும்பவும் வந்து பழிவாங்குமாம். பச்சைப் பாம்புகளோ கேட்கவே வேண்டாம். வாழை இலை பறிக்கப் போறச்சே சில சமயம் தலைகீழாத் தொங்கினால் வாழை இலைனே நினைப்போம். கண்ணு தெரிஞ்சா பிழைச்சோம். இல்லாட்டி நம்ம கண்ணு அவ்வளவு தான்!

இத்தனையும் எதுக்குச் சொல்றேன்னா, கொஞ்ச நாட்களாகவே உள்ளே வருவேன்னு அடம் பிடிச்சுட்டு இருந்த ஒரு கட்டுவிரியன் இன்னிக்கு உள்ளே வந்திருக்கு. குளியலறை வாசலில் வாஷிங் மெஷின் போட்டு பொண்ணு துணிகளைப் போட்டிருந்தா. நான் உள்ளே கிரண்டரில் மாவு அரைக்கிறதும், சமையலையும் ஒரே சமயத்தில் பண்ணிட்டிருந்தேன். ஏதோ வேலையாகக் கொல்லைப்பக்கம் வேலை செய்யற பொண்ணு வரதுக்காகக் கட்டி இருந்த செர்வீஸ் ஏரியாவுக்குப் போனேன். போகும்போது பாம்பைத் தாண்டிட்டுப் போயிருக்கேன். எனக்கே தெரியலை. திரும்ப உள்ளே வரதுக்காக வந்தால் கொல்லை நிலைக்கு முன்னால் உள்ளே பாத்ரூமுக்கு எதிரே நெளிஞ்சுட்டு உள்ளே போக முயற்சி செய்துட்டு இருந்ததும், பாம்பு, பாம்புனு ஒரே கத்துக் கத்தினேன். என்னோட ம.பா. உள்ளே ஜபம் செய்துட்டு இருந்தார் போல. காதிலேயே விழலை அவருக்கு. அப்புறம் பொண்ணை விட்டுக் கூப்பிடச் சொன்னா, அவ பாம்பா, கயிறானு கேட்டுட்டு சாவகாசமா இருக்கா!

அதுக்குள்ளே பாம்பு நான் கத்தின கத்தல்லே பயந்து போய் பாத்ரூமுக்குள்ளே போயிடுச்சு. அங்கே போய்க் குழாயின் மேல் சுத்திக் கொண்டு விட்டது. அதுக்குள்ளே என் கணவரும் கம்பை எடுத்துக் கொண்டு வந்தார். என் பங்குக்கு நானும் ஒரு கம்பை எடுத்து வச்சுக் கொண்டேன். குழந்தைகளை அழைத்துக் கொண்டு படுக்கை அறையில் பொண்ணை இருக்கச் சொன்னால் அவளுக்கு வேடிக்கை பார்க்கும் ஆர்வம்! அதுக்குள்ளே ஒரு தொலைபேசி அழைப்பு. யார்னே தெரியலை. லூசிலே விட்டாச்சு. வாசல்லே அப்போதான் வேலை செய்யற பொண்ணோட அம்மா! அவசரமாப் பார்க்கணும்னு கூப்பிட்டுட்டு இருந்தா. மூன்று நாட்களா அம்மாவும், பொண்ணும் மட்டம் போட்டுட்டு வராமல் இன்னிக்கு நல்ல நேரம் பார்த்திருக்காங்க, பாம்பையும் கூட்டிட்டுனு நினைச்சு, பாம்பு வந்திருக்கிறதாலே அதை எண்டர்டெயின் பண்ணிட்டுத் தான் வருவேன்னு சொல்லி அனுப்பிச்சாச்சு. பொண்ணையும் வலுக்கட்டாயமாய் உள்ளே தள்ளிட்டோம். அதுக்குள்ளே இந்தக் கலவரத்தாலே இன்னும் பயந்த பாம்பு பாத்ரூம் கதவிடுக்கில் போய் ஒளிஞ்சுட்டு சுத்தி வளையமாப் படுத்துக் கொண்டு விட்டது.

நான் பாத்ரூமுக்குள்ளே போய் அதை உசுப்பிவிடறேன்னு சொன்னால் என் கணவர் அந்தப் பாம்பு நல்லாக் குதிக்கிறதாவும், உள்ளே போகும்போது மேலே குதிச்சுட்டா என்ன ஆறதுனும் சொல்லிட்டு வேண்டாம் நான், வெளியே போய் ஜன்னல் கண்ணாடியை எடுத்துட்டும் கம்பாலே தட்டி அதை வெளியே அனுப்பறேன். நீ இங்கேயே கம்போட நின்னு உள்ளே விடாம வெளியே விரட்டுனு சொன்னார். அதுக்குள்ளே கந்த சஷ்டி கவசத்தை உரக்கச் சொல்லிக் கொண்டே இரண்டு பேரும் ஆயத்தமானோம். அவர் வெளியே போய்க்கண்ணாடியை எடுக்க முயன்றால், பல மாதங்கள் கண்ணாடியை எடுக்கவே இல்லை. இப்போத் திடீர்னு எப்படி வரும்? அது எடுக்க முடியலை. திரும்ப உள்ளேயே வந்தார். அதுக்குள்ளே நான் கம்பால் பாத்ரூம் கதவைத் தட்டினேன். அவர் யோசிச்சுட்டு ஒரு கம்பியை எடுத்து வந்தார். பொண்ணு மறுபடியும் வந்து பாம்பாட்டியைக் கூப்பிடலாம்னு யோசனை சொன்னா. பாம்பாட்டி இந்த மாதிரி சமயங்களில் வீட்டை வித்துப் பணம் தரச் சொல்வார்ங்கறதாலே வேண்டாம், அந்தப் பணத்தை நாங்களே பயன்படுத்திக்கலாம்னு சொல்லி அவளை மறுபடியும் உள்ளே தள்ளிட்டுக் கம்பியால் குத்தினார். அங்கே வச்சிருந்த துடைப்பம் பாம்பின் மேல் விழ, பாம்பு அசைந்தது. இப்போ தண்ணீர் போகும் குழாய் அருகே போய்ப் படுத்துக் கொண்டது.

இவருக்கு என்ன பண்ணறதுனு புரியலை. நான் போய் கிரண்டரை முதலில் அணைச்சுட்டு, பருப்புப் போட்டிருந்த கற்சட்டியையும் அணைச்சேன். இப்போத் தான் மூளை வேலை செய்யும்போல் இருந்தது. அதுவரைக்கும் பாதி மனசு சமையலிலேயும், பாதி மனசு பாம்பிடமும் இருந்தது. இப்போ அவரை ஒரு பெரிய கம்பை எடுத்து வரச் சொன்னேன். அவர் அடிச்சுடவானு கேட்டார். எனக்கு அரை மனசுதான். அவருக்கும் கொஞ்சம் யோசனைதான் அடிக்க. அப்புறமாத் தேங்காய் பறிக்க வச்சிருக்கும் துரட்டியை எடுத்துட்டு வந்தார். துரட்டியாலே குத்திடப் போறாரோனு கொஞ்சம் கவலையா இருந்தது. பாம்போ மீண்டும் குளியலறைச் சுவற்றில் ஏறி ஜன்னல் வழியா வெளியே போக முயன்றது. ஆனால் சுவற்றிலும், தரையில் டைல்ஸ் போட்டிருந்தது அதனால் ஏறமுடியவில்லை. டைல்ஸ் போட்டது எவ்வளவு தப்புனு புரிஞ்சது! :( பாம்புக்கு முன்னால் துரட்டியை நீட்டி ஒரு தட்டுத் தட்டக் கீழே இருந்த அது மெல்லத் தலையைத் தூக்கப் பார்த்தது. அதுக்குள்ளே கம்பைத் திருப்பிக் கொண்டு அதன் உடல் நடுவே ஒரு அடி அடித்தார். உடனே பாம்பு நகர ஆரம்பித்தது. அப்பா என்ன வேகம்!! என்ன வேகம்! வெளியே ஒருவழியா வந்துடுச்சு. வீட்டுக்குள்ளே வராமல் இரண்டு பேரும் வழியை மறிச்சு நின்னு அதை வெளியே சத்தம் கொடுத்தும், கம்பால் தட்டியும் விரட்டினோம். ஒரு வழியா வெளியே போய், அங்கே இருந்த சந்தனமுல்லைச் செடிப்புதருக்குள்ளே மறைந்தது.


நானோ, அல்லது என் பெண்ணோ அவள் குழந்தைகளோ, எல்லாருமே அந்தச் சமயம் அங்கே சர்வ சகஜமாய்ப் போய் வந்து கொண்டிருந்திருக்கிறோம். ஒரு நிமிஷம் போதும் அது எங்களைக் கடித்திருக்கலாம், நான் இப்படித் தட்டச்சிக் கொண்டிருந்திருக்க மாட்டேன். கடவுள் காப்பாற்றினார். பாம்பைத் தாண்டிக் கொண்டே நான் போயிருக்கிறேன். ஆனால் திரும்பி உள்ளே வரும்போது தான் பார்த்திருக்கேன். போகும்போது ஏதாவது நடந்திருந்தால்???????

இறைவன் இருக்கின்றான். நமக்குத் தேவையானபோது விழிப்புணர்வையும் தருகின்றான். நாம தான் புரிஞ்சுக்கறதில்லை.ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதவரோ???

Friday, July 10, 2009

அறுபதுக்கு அறுபதா?? மார்க் இல்லைங்க வயசு!! 2

பலருக்கும் இந்தத் தகவல்கள் பயனுள்ளதாக அமைந்ததுக்கு முதலில் கோபிக்கு நன்றி கூறுகின்றேன். இப்போக் கோயிலின் தலவரலாற்றைப் பார்ப்போமா???

மிருகண்டு முனிவரும் அவர் மனைவியும் குழந்தை இல்லாமல் இறைவனை நோக்கித் தவம் இருந்தனர். ஈசன் அவர்கள் பக்தியால் மனம் மகிழ்ந்து பல்லாண்டுகள் வாழும்படிக்கு வாழ்நாள் நிறைந்த, ஆனால் குணங்கள் துர்க்குணங்கள், இவற்றால் நிரம்பிய ஓர் மகன் வேண்டுமா?? அல்லது பதினாறே ஆண்டுகள் வாழும் மிகச் சிறந்ததொரு மகன் வேண்டுமா எனக் கேட்க தம்பதியினர் சற்றும் தயங்காமல் பதினாறு வயது மகனே வேண்டும் என வரம் கேட்க, அவ்வாறு இறை அருளால் பிறந்த குழந்தைக்கு மார்க்கண்டேயன் என்ற பெயர் வைத்து வளர்த்து வந்தனர்.

குழந்தை சகல கலைகளிலும் தேர்ச்சி பெற்று விளங்கியதோடு உரிய காலத்தில் உபநயனமும் செய்து வைக்கப் பட்டான். மிகச் சிறந்த சிவபக்தனாகவும் இருந்தான். அவனுக்குப் பதினாறு வயதும் நெருங்கியது. பெற்றோர் அவனை மனத்தளவில் தயார்ப் படுத்தி வைத்ததோடு அல்லாமல் தாங்களும் மகனின் மரணத்திற்கு வேறு வழியில்லாமல் தயாரானார்கள். தனக்கு இறைவனால் விதிக்கப் பட்ட ஆயுள் பதினாறு தான் என்பதைத் தெரிந்து கொண்ட மார்க்கண்டேயன்., ஒவ்வொரு ஸ்தலமாகச் சென்று இறைவனைத் தரிசித்து வந்தான்.

திருக்கடையூருக்கும் வந்து சேர்ந்தான் மார்க்கண்டேயன். இப்போது பதினாறு வயது முடிந்து மார்க்கண்டேயனின் ஆயுள் முடியும் நாள் நெருங்கிவிட்டது. எமன் தன் பணியை உரிய நேரத்தில் முடிக்கும்பொருட்டு சிவனுக்குப் பூஜை செய்து கொண்டிருக்கும் மார்க்கண்டேயன் மீது தன் பாசக் கயிற்றை வீசினான். தாம் செய்த தவத்தாலும், ஈசனின் அருளாலும் எமனைக் கண்ணாரக் காண முடிந்த மார்க்கண்டேயன் அச்சத்தோடு தான் வழிபட்டுக் கொண்டிருந்த லிங்கத்தையே ஆரத் தழுவிக் கொண்டார். எமனும் பாசக்கயிற்றை அந்த லிங்கத்தையும் சேர்த்துக் கட்டி இழுத்து வருமாறு வீசினான். கயிற்றை வேகமாய் இழுத்து, லிங்கத்தையும் அதை இறுக்கக் கட்டிக் கொண்டிருந்த மார்க்கண்டேயனையும் சேர்த்துத் தன் பக்கம் கொண்டு வர யமன் முயற்சிக்கும்போது பளீரென ஓர் ஒளி வீசியது. இடி இடித்தாற்போன்ற ஓர் சப்தம். அதன் பின்னர் மழை பொழிவது போல் கருணை மழை பொழியத் தயாராக ஈசன் அந்த லிங்கத்தினின்று வெளிப்பட்டார். அவர் கையில் திரிசூலம். அந்த சூலாயுதத்தால் காலனைக் குத்திக் கொண்டே இடது காலால் அவனை உதைத்தும் தள்ளினார். மார்க்கண்டேயன் காப்பாற்றப் பட்டான். அவனுக்கு என்றும் பதினாறு வயதாகத் தன்னருகிலேயே இருக்கும்படி பணித்தார் ஈசன்.

பின்னர் உலக நன்மைக்காகவேண்டி யமனையும் உயிர்ப்பித்துத் தன் பணியைச் செவ்வனே செய்து வரும்படி அருளினார் என்பது வரலாறு. இது ஈசனின் எட்டு வீரச் செயல்களுள் காலனைக் காலால் உதைத்துக் கொன்ற செயல் நடந்த இடம் என்பதால் அட்ட வீரட்டானத் தலங்களுள் ஒன்றாக உள்ளது. யமன் ஈசன் மேல் பாசக்கயிற்றை வீசியதால் ஏற்பட்ட அடையாளத் தழும்புகளைக் கார்த்திகை சோமவார நாட்களில் மூலவர் சந்நிதிக்கு எதிரில் உள்ள சங்கு மண்டபத்தில் வலம்புரிச் சங்கை வைத்து 1008 சங்காபிஷேஹம் நடக்கும்போது மட்டுமே காணமுடியும் என்று சொல்கின்றனர். லிங்கத்திருமேனியின் உச்சியில் பிளவும், திருமேனியில் ஏற்பட்டிருக்கும் அடையாளத் தழும்புகளையும் அப்போது மட்டுமே காணலாம் என்கின்றனர். சந்நிதிக்கு முன் மண்டபத்தில் உள்ள காலசம்ஹாரமூர்த்தியின் செப்புச் சிலை வடிவமும், அங்கே லிங்கம் பிளந்து காலசம்ஹாரர் கையில் திரிசூலத்துடன் வெளிப்படும் காட்சியும் மிகத் தத்ரூபமாய் அமைக்கப் பட்டுள்ளது. இந்தச் சந்நிதி எப்போதும் திறப்பதில்லை. திறந்து காட்டிவிட்டு தீப ஆராதனை காட்டி உடனே மூடிவிடுவார்கள். ஒரு நிமிஷ காலமே தரிசிக்க முடியும். இந்தக் காலசம்ஹார மூர்த்திக்கு வருஷத்தில் பதினொரு முறை கள் மட்டுமே அபிஷேஹம் செய்யப் படுகின்றது. அப்போது காணமுடியும் என்கின்றனர்.

இந்தத் தலத்து அம்மன் மிகவும் அழகும், சக்தியும் வாய்ந்தவள். அபிராமி என அழைக்கப் படும் இவளின் அழகில் மெய்ம்மறந்த இந்தக் கோயிலின் அத்தியானபட்டர் ஆன ஒருவரிடம் கோயிலில் வழிபாடு செய்ய வந்த சரபோஜி ராஜா அம்மனைத் தரிசிக்கும்போது இவரிடம் அன்றைய திதி என்ன எனக் கேட்டான். அம்மனின் பூரணசந்திரன் போன்ற ஒளிமயமான அழகில் தன்னை மறந்திருந்த பட்டரோ அன்று பெளர்ணமி என்று சொல்லிவிடுகின்றார். மன்னனுக்குத் தன்னை அவர் மதிக்கவில்லையா என்று எண்ணிக் கோபம் வருகிறது. சுற்றிலும் தீயை மூட்டி அதில் ஓர் உறியைக் கட்டித் தொங்கவிட்டு அந்த உறியை நூறு சங்கிலிகளால் பிணைத்து பட்டரை அதில் அமரச் சொல்லி ஆணை இடுகின்றான். பட்டர் சொன்ன மாதிரி அன்று பெளர்ணமி நிலவு இரவு உதயமாகவேண்டும் எனவும், இல்லை எனில் பட்டர் ஒவ்வொரு சங்கிலியாக அறுத்துக் கொண்டு அந்தத் தீயில் விழுந்து உயிர் விடவேண்டும் எனவும் அரசாணை பிறக்கிறது.

Wednesday, July 08, 2009

அறுபதுக்கு அறுபதா?? மார்க் இல்லைங்க, வயசு!


கோபி பல விஷயங்கள் பற்றிய சந்தேகத்தைக் கேட்டிருக்கார். அதிலே பாண்டுவிற்கு இரு மனைவியர் என்பது அவர் அறியாத ஒன்று என்றும் இது பற்றிக்கொஞ்சம் விளக்கவேண்டும் என்றும் கேட்டிருந்தார். அது கண்ணன் வருவான் தொடரிலேயே இடம் பெறும் வகையில் எழுதிவிடுகிறேன். அதுக்குக் கொஞ்சம் நாட்கள் ஆகும். அதுக்கு முன்னால் அறுபதாம் கல்யாணம் என்னும் சஷ்டி அப்த பூர்த்தி பற்றிக் கேட்டிருந்தார் கோபி. அது நடத்தச் சிறந்த கோயில் எது என்பதையும் கேட்டிருந்தார்.

நம்முடைய ஆண்டுக்கணக்கில் அறுபது ஆண்டுகள் கணக்கில் உள்ளன என்பதை அறிவோம். ஒருவர் பிறந்த ஆண்டு சுழற்சி முறையில் மீண்டும் வருவதற்கு அறுபது ஆண்டுகள் பிடிக்கின்றது. அறுபது ஆண்டுகளுக்கு முன்பு எந்த நக்ஷத்திரத்தில், எந்த திதியில் பிறந்தாரோ அந்தத் திதி, நக்ஷத்திரம் வரும் அறுபது ஆண்டுகளுக்குப் பின்னும். இந்த அறுபதாம் ஆண்டைக் கணவன், மனைவி இருவருக்கும் சேர்த்து ஒரு பெரும் விழாவாக அவர்கள் பெற்ற குழந்தைகள் சேர்ந்து எடுப்பது வழக்கமாய் இருந்து வருகிறது. இது சமூகத்தில் எந்தப் பிரிவினராய் இருந்தாலும் பொருந்தும். சிலர் வீடுகளிலேயும், சிலர் சத்திரங்கள் வாடகைக்கு எடுத்துப் பெரிய அளவிலேயும் செய்து கொள்கின்றனர். ஆனால் பெரும்பாலும் அனைவரும் சென்று அறுபதாம் கல்யாணம் நடத்திக்கொள்ளும் இடம் பழைய தஞ்சை மாவட்டம், மயிலாடுதுறையில் இருந்து 23 கிமீ தூரத்தில் உள்ள திருக்கடையூர் என்னும் ஸ்தலம் தான். வேறு இடங்களில் நடத்த நேர்ந்தாலும் இந்த ஊர் ஸ்வாமியையும், அம்மனையும் நினைத்தே செய்யவேண்டும் என்பதும் மரபு.

இது அட்ட வீரட்டானத் தலங்களில் ஒன்று. அட்ட வீரட்டானம் என்பது சிவனின் எட்டு வீரத் திருவிளையாடல்களைக் குறிக்கும் இடங்கள் கோயில்களாக அமைந்தவையைக் குறிக்கும். அது பற்றிப் பின்னர் பார்க்கலாம். இந்தத் திருக்கடையூர் மட்டுமில்லாது, தஞ்சை மாவட்டத்திலேயே திருவீழிமிழலை, திருவையாறு, திருவெண்காடு, திருவைகாவூர் போன்ற தலங்களும் எம பயத்தை நீக்க வல்ல தலங்கள் ஆகும். என்றாலும் திருக்கடையூர் சிறப்புப் பெற்றது மார்க்கண்டேயனால். இந்த ஊரின் தல வரலாறும், புராண வரலாறும் பின் வருமாறு கூறப் படுகின்றது.

பிரம்மா ஞானோபதேசம் பெற விருப்பம் கொண்டு சிவனை வழிபட, சிவனால் அளிக்கப் பட்ட வில்வ விதையைப் பெற்றுக் கொள்கின்றார். அந்த வில்வ விதையை நடப்பட்ட ஒரு முஹூர்த்த காலத்திற்குள் முளைவிடவேண்டும் எனவும் சிவன் சொல்ல, முளைவிட்ட இடத்தில் தன்னை வழிபடவேண்டும் என்றும் ஆணை இடுகின்றார். பிரம்மாவும் ஒவ்வொரு இடமாய்ச் சோதித்துப் பார்த்துத் திருக்கடையூரில் முளைவிடக் கண்டார். இந்த ஊரில் வில்வமரங்கள் நிறைந்திருந்ததாகவும், அதனால் இது வில்வவனம் என்ற பெயர் பெற்றதாகவும் கூறப் படுகின்றது.

மூலஸ்தானத்தில் குடி இருக்கும் லிங்க ஸ்வரூப மூர்த்திக்கு அமிர்த கடேஸ்வரர் எனப் பெயர். இந்தப் பெயர் வந்ததின் பின்னால் சொல்லப்படும் புராணக் கதை என்னவெனில், பாற்கடலைக் கடைந்து அமிர்தம் எடுத்துக் கொண்டு சென்ற தேவர்கள் அதை அசுரர்களிடமிருந்து ஒளித்து வைக்க எண்ணியும், நீராட வேண்டி இருந்ததாலும், இந்தத் தலத்தில் இறக்கி வைக்கின்றனர். திரும்பி வந்து குடத்தை எடுக்க முயன்றபோது எடுக்கவராமல் குடம் லிங்கமாய் மாறி நிலைத்து நிற்க லிங்கேஸ்வரர் அன்று முதல் அமிர்தகடேஸ்வரர் எனப் பெயர் பெறுகின்றார். இந்த ஊர் அன்னையின் பெயர் அபிராமி. அபிராமி அந்தாதி இவள் பெயரிலேயே அபிராமி பட்டர் பாடினார். இவர் வீடு இருந்த இடம் இன்னமும் பாதுகாக்கப் படுகின்றது. இதைத் தவிரவும் இந்த ஊருக்குப் பல சிறப்புக்கள் உண்டு. காலனைக் காலால் உதைத்த இடம் இது தான். ஒவ்வொன்றாய்ப் பார்ப்போம்.

Tuesday, July 07, 2009

குருவின் பாதாரவிந்தங்களுக்குச் சரணம் சொல்லுவோம்!

த்யானமூலம் குரோர் மூர்த்தி= தியானத்திற்கு உகந்தது குருவின் திருவுருவம்
பூஜா மூலம் குரோர் பதம் = வழிபாட்டுக்கு உகந்தது குருவின் பாதாரவிந்தங்கள்
மந்த்ரார் மூலம் குரோர் வாக்யம்=ஜபிப்பதற்கு உகந்தது குருவின் வாக்கின் மூலம் கிடைத்த போதனைகள்
மோக்ஷமூலம் குரோர் க்ருபா!!= குருவின் அருளைப் பெற்றாலோ மோக்ஷமே கிடைத்துவிடுகிறது.

இந்தப் புண்ணிய பூமி கர்ம பூமி, எனவும், ஞானபூமி எனவும் சொல்லப் படுகின்றது. இந்த பாரதத் திருநாட்டை நோக்கி ஞானகுருவான தட்சிணாமூர்த்தி ஸ்வரூபமாகத் திருக்கைலையில் ஈசன் அமர்ந்திருக்கும் கோலத்தில் கைலை தரிசனம் காணலாம். அதனாலேயே ஞானபூமி என்று சொன்னார்களோ என்னவோ? ஆனாலும் ஆதிகுரு தட்சிணாமூர்த்தி என்றாலும், அவர் உபதேசித்தது மெளனத்தின் மூலமே. மெளன குருவான அவர் பேசாத குருவாக இருப்பதால், நம்மிடம் பேசி உபதேசம் பண்ணிய ஒரே குரு, முக்கியமாய் அத்வைத வேதாந்திகளுக்கு ஸ்ரீமந்நாராயணனே ஆசார்யன் ஆவான். அவர்களின் கர்மாக்களின் மந்திரங்களின் முக்கிய இடைவெளியில், "கிருஷ்ண, கிருஷ்ண," என்றோ, "கோவிந்தா, கோவிந்தா" என்றோ அல்லது "நாராயணா, நாராயணா" என்றோ சொல்லி, செய்வதை அனைத்தையும் அவனுக்கே அர்ப்பணிப்பார்கள்.
நாராயணம், பத்மபுவம், வஸிஷ்டம்
சக்திம் ச, தத்புத்ர பராசரம் ச,
வ்யாஸம், சுகம், கெளடபதம் மஹாந்தம்
கோவிந்த யோகீந்தரம்,அதாஸ்ய சிஷ்யம்!
ஸ்ரீசங்கராசார்யம், அதாஸ்ய பதம்-
பாதம் ச, ஹஸ்தாமலகம் ச சிஷ்யம்
தம் தோடகம், வார்த்திககாரம், அந்யாந்
அஸ்மத் குருந் ஸந்ததம் ஆநதோஸ்மி!

இந்த ஸ்ரீமந்நாராயணனின் பிள்ளையான பிரம்மா, பிரம்மாவின் பிள்ளை வசிஷ்டர், வசிஷ்டரின் மகன் சக்தி, அவர் மகனும் விஷ்ணு புராணம் எழுதியவரும் ஆன பராசரர், பராசரரின் பிள்ளை வியாசர், வியாசரின் மகன், சுகர், சுகர் பிரம்மச்சாரி. பிறந்ததில் இருந்தே பரப்பிரம்மம். இவருக்குக் கிளி மூக்கும், முகமும் வந்த கதை அனைவருக்கும் தெரிந்திருக்கும். இந்த சுகர் திருமணம் செய்து கொள்ளாததால், இவருக்குச் சீடர் மட்டுமே உண்டு. அவர் தான் கெளடபாதர். கெளடபாதரோ, சந்யாஸி. ஆகவே இவருக்கும் சிஷ்ய பரம்பரையே வருகின்றது. இந்த சிஷ்ய பரம்பரையில் வந்தவரே கெளடபாதரின் சிஷ்யர் ஆன கோவிந்த பகவத்பாதர். கோவிந்த பகவத்பாதரின் சிஷ்யரே ஆதிசங்கரர். சங்கரருடைய நான்கு சிஷ்யர்கள் ஆன, பத்மபாதர், தோடகர், ஹஸ்தாமலகர், ஸுரேஸ்வரர் போன்றவர்கள் பற்றியும், அவர்கள் சார்ந்த மடங்கள் பற்றியும் ஓரளவு அறிவோம். இப்படிப் பார்த்தால் நம் ஆசாரியர் என்பவர் ஆதிகுருவான விஷ்ணுவின் சாட்சாத் அவதாரம் ஆன வியாசரே ஆவார். "முநீநா மப்யஹம் வ்யாஸ:" என்று கீதையில் கீதாசார்யனே சொல்லி இருக்கின்றான். மேலும் விஷ்ணு சஹஸ்ரநாமாவளியில் "வ்யாஸாய விஷ்ணு ரூபாய" "வ்யாஸ ரூபாய விஷ்ணவே" என்றும் வருகின்றது. இந்த வேத வியாஸர் அவதாரம் காரணத்துடனேயே ஏற்பட்டது. பராசர முனிவர், குறிப்பிட்ட நேரத்தில் மச்சகந்தியுடன் கூடியதன் விளைவாக ஒரு த்வீபத்தில் தோன்றியவர் வேத வியாஸர். தீவில் பிறந்ததால் அவருடைய பெயர் "த்வைபாயனர்" என்றும், கறுப்பாக இருந்தமையால், "கிருஷ்ணர்" என்றும், இரண்டையும் சேர்த்தே வேத வியாஸரை "கிருஷ்ண த்வைபாயனர்" என்றும் சொல்லுவதுண்டு. கலி தோன்றப் போகின்றது என்பதாலேயே, வேதங்களைக் காத்து அவற்றைத் தொகுத்து மக்களைச் சென்றடையவேண்டியே பகவான் எடுத்த ஒரு அவதாரமே, விஷ்ணுவின் அம்சமே வியாஸர் என்றும் சொல்லுவார்கள். இந்த வியாஸர் வேதங்களைத் தொகுத்தமையால், "வேத வியாஸர்" என்ற பெயர் பெற்றார். மும்மூர்த்திகளின் சொரூபமாயும் வேத வியாஸரைச் சொல்லுவதுண்டு. வியாஸரே "குரு பிரம்மா, குரு விஷ்ணு, குரு தேவோ மஹேஸ்வர:" என்றும் திரிமூர்த்திகளும் சேர்ந்தவர் என்றும் சொல்லுவது உண்டு.

அதுவரையிலும் கங்குகரை இல்லாமல் இருந்த வேதங்கள் நான்காய்ப் பிரிக்கப் பட்டது வியாஸராலேயே. தம் சிஷ்யர்களில் பைலரிடம் ரிக்வேதத்தையும், வைசம்பாயனரிடம் யஜுர்வேதத்தையும், ஜைமினியிடம் சாமவேதத்தையும், ஸுமந்துவிடம் அதர்வண வேதத்தையும் உபதேசித்து, இவை பரவ வழி வகுத்துக் கொடுத்தார். இதே வியாசர் தான் புராணங்களையும் பதினெட்டாய்த் தொகுத்து அவற்றையும், மஹாபாரதத்தையும் ஸூத முனிவருக்கு உபதேசித்து அவர் மூலம் இவை பரவ வழி வகுத்தார். இந்த ஸூத முனிவர் வழியாய் வந்தவையே நம் பதினெண் புராணங்கள். இந்த ஸுத முனிவர் பிறப்பால் பிராமணர் இல்லை, தேரோட்டி மகன் என்பதும் குறிப்பிடத் தகுந்தது. பிரம்மதத்துவத்தைச் சொல்லும் பிரம்ம ஸூத்திரத்தையும் வேத வியாஸர் ஏற்படுத்தி, சுகப்பிரம்ம ரிஷிக்கு அவற்றை உபதேசித்தார்.

இந்த பிரம்ம ஸூத்திரத்துக்குப் பாஷ்யம் எழுதியவர்களிலேயே நாம் இன்றைக்கும் பின்பற்றும் ஆசாரிய பரம்பரைக்கு வழி வகுத்த சங்கரர், (அத்வைதம்)ராமானுஜர்,(விசிஷ்டாத்வைதம்) மத்வர், (த்வைதம்), ஸ்ரீகண்டாசாரியார்(சைவ சித்தாந்தம்), வல்லபாசாரியார்(கிருஷ்ண பக்தி மார்க்கம்) போன்றவற்றைத் தம் தம் நோக்கில் எழுதி இருக்கின்றார்கள். ஆகவே மூலம் என்பது ஒன்றே. இதில் நமக்கு எதைப் பிடிக்கிறதோ, அல்லது குடும்ப வழி என்று சிலருக்கு வருகின்றதோ, அல்லது இஷ்டம் என்று சிலருக்குத் தோன்றுகின்றதோ அதை எடுத்துக் கொண்டு அதன்படி பயிற்சி செய்து வருகின்றோம். ஆனால் அனைத்துக்கும் மூல காரணம் வேத வியாஸரே.

அதனாலேயே குரு பூர்ணிமா என்று ஏற்பட்டு வேத வியாஸருக்கு என்று தனியாகப் பூஜை, வழிபாடுகள் செய்து வருகின்றோம். இன்னும் குடும்ப வாழ்வில் ஈடுபட்டவர்களும், திருமணம் ஆகாத பிரம்மசாரிகளும் ஒருபடி மேலே போய் ஆவணி அவிட்டத்தின்போது, பூணூல் போட்டுக் கொள்ளும் முன்னர், வேத வியாஸரைக் கும்பத்தில் ஆவாஹனம் செய்து வழிபட்டு, நைவேத்தியங்கள் செய்து, அந்தப் பிரசாதத்தை வீட்டில் உள்ள அனைவருக்கும் நினைவாய் எடுத்து வந்து கொடுத்து வியாஸரை நினைவு கூருகின்றார்கள். அதோடு அன்றைய தினம் தர்ப்பணம், ஹோமம், போன்றவையும் செய்து ஆராதிக்கின்றனர். இது முன்னர் அனைத்து வர்ணத்தினராலும் செய்யப் பட்டு வந்திருக்கின்றது, என்றாலும் இன்றும் ஒரு சில வேறு வர்ணத்தினரும் விடாமல் செய்து வருகின்றார்கள். ஆனால் சந்யாஸிகள் பூணூல் தரிப்பது இல்லை ஒரு சிலரைத் தவிர. ஆகவே அவர்கள் வியாஸரை நினைவு கூருவதற்காகவே சாதுர்மாஸ ஆரம்பத்தின்போது வியாஸ பூஜை செய்து வழிபடுகின்றார்கள்.


எப்பொழுதுமே எல்லா கர்மாக்களையும் செய்து முடித்த பின்னரும் ஒவ்வொரு முறையும் செய்த அனைத்தையுமே ஸ்ரீமந்நாராயணனுக்கே சமர்ப்பிக்கின்றோம் இவ்வாறு சொல்லி.

//காயேந வாசா, மனஸேந்த்ரியைர்வா
புத்யாத்மநாவா ப்ரக்ருதேஸ்வபாவாத்
கரோமி யத்யத் ஸகலம்பரஸ்மை
நாராயாணாயேதி ஸமர்ப்பயாமி//

இந்தப் பதிவும் அப்படியே, ஸ்ரீமந்நாராயணனுக்கே சமர்ப்பணம்.

டிஸ்கி: கோபி சில நேயர் விருப்பங்களைத் தெரிவித்திருக்கிறார். அவற்றில் ஒன்று இன்னும் இரண்டு நாட்களில் வரும். கோபி, இப்போ சரியா???:D