மனிதனை உயர்த்துவதற்குத் தோன்றியவையே மதமும் அதன் சார்பான சம்பிரதாயங்களும். இப்போ ஆடு, மாடுகள், குதிரை, பாம்பு, புலி, சிங்கம் போன்றவைக்கு இருக்கும் சக்தி மனிதனுக்கு இல்லை. குளிருக்குக் கம்பளி வேணும்னால் ஆடு யாரிடமும் போய்க் கேட்பதில்லை. அதன் உடலிலேயே இருக்கிறது. பால் குடிக்கணும்னா பசுவோ, எருமையோ அதன் பாலையே தன் குட்டிகளுக்குக் கொடுக்கும், நாம என்னதான் சின்னக் குழந்தையா இருக்கும்போது தாய்ப்பாலை உண்டு வளர்ந்தாலும் அது கொஞ்ச நாளைக்குத் தானே. அப்புறமாப் பால் வேணும்னா பசுவோ, எருமையோ, ஆடோ தான் பால் கொடுக்கிறது. இவ்வாறு ஒவ்வொரு மிருகமும் ஒவ்வொன்றைப் பெற்றிருக்கிறது. குதிரை வேகமாய் ஓடும். அந்த வேகத்தை மனிதன் கட்டுப் படுத்தித் தனக்கு வாகனமாகவும், போக்குவரத்து சாதனமாகவும் ஆக்கி இருக்கிறான். மனிதனோ இவற்றை எல்லாம் தன் புத்தியால் ஆளுமைப் படுத்தி ஆள்கின்றான் அல்லவா? இப்படி உயர்ந்த அறிவைப் பெற்றிருப்பவனே மனிதன். ஆனால் அவனோ தனக்குத் தானே மட்டுமில்லாமல் உடன் வாழும் மனிதருக்கும், மிருகங்களுக்குமே இன்பத்தையா தருகின்றான்? இல்லையே?
அவன் தேவைகளை நிறைவேற்றும் இம்மிருகங்களைப் போல் இல்லாமல் உயர்ந்த புத்தியோடு இருக்கும் மனிதன் தானும் கஷ்டப் பட்டு மற்றவரையும் கஷ்டத்தில் ஆழ்த்துகின்றான். அவனை விடுவிக்கத் தோன்றியதே மதமும், புராணங்களும். தத்துவ விளக்கத்தை அப்படியே சொன்னால் என் போன்ற பாமரர்களுக்குப் புரியாது. ஆகவே அதுக்கு ஒரு கதை சொல்லியே ஆகவேண்டும். அதற்காக நம் போன்ற பாமரர்களுக்குப் புரியவென ஏற்பட்டவையே புராணங்களும், அதில் உள்ள கதைகள், உபகதைகளும். புராணக்கதைகளில் உள்ள தத்துவ விளக்கங்களைப் புரிந்து கொள்ளவேண்டும். உடனே எல்லாம் புரியவும் புரியாது. நாளாக, நாளாக உலகம் என்னும் சமுத்திரத்தில் நம் வாழ்க்கைப்படகு மேலும் கீழும் அலைகளால் மொத்துண்டு, மொத்துண்டு கரைக்கு வரும்போது தான் புரியவே ஆரம்பிக்கும். அதுவும் முழுசாப் புரிய இந்த ஒரு பிறவி போதாது. நம் மதத்தில் ஏன் இத்தனை கடவுளர் என்றும், ஏன் இத்தனை வழிபாடுகள் என்றும் தோன்றினால் அதற்கான ஒரே பதில் அவரவரும் அவரவர் மனோபாவப்படி அன்போடு நெருங்கி வழிபட ஏற்றவையாக நம் கடவுளர் இருக்கின்றனர். இவை எதுவும் கற்பனை இல்லை. ஒன்றேயான பரமாத்வாவே இப்படிப் பல ரூபங்களோடு காட்சி அளிக்கின்றார். வழிபாட்டு முறை எதுவானாலும் பக்தி முக்கியத்துவம் பெறுகின்றது.
விநாயகர் பழத்துக்குச் சண்டை போட்டார் என்பதோ அதுக்காக முருகன் கோவித்துக் கொண்டு பழநி மலையில் உட்கார்ந்தார் என்பதோ கற்பனைக் கதை. அப்படி ஒரு கதை கிடையாது. உண்மையில் அமிர்தமய ஞானமாகிய மோதகத்தைப் பெறவேண்டியே விநாயகர் தன் தாய், தகப்பனைச் சுற்றி வந்ததாயும், இப்போ மாம்பழக் கதையாகச் செவிவழியாக நாம் கூறுவது .உண்மையில் அமிர்தத்தால் ஆன மோதகம் என்றும், அதை உலகைச் சுற்றிப் புண்ணியம் சேர்த்துக் கொண்டு வருபவருக்குத் தருவதாயும் சிவன் சொல்ல, விநாயகர் தாய், தந்தையை விடச் சிறந்த உலகம் இல்லை எனச் சொல்லி அவர்களைப் பணிந்து நிற்க, மோதகம் அவருக்குக் கிடைத்தது. ஆனால் முருகனோ அது கிடைக்காமல் கோவித்துக் கொண்டெல்லாம் உட்காரலை. உண்மையில் அங்கே சடாமுடியோடு கூடிய ஷண்முகனே யோக நிலையில் அமர்ந்திருக்கின்றான். மொட்டை அடித்துக் கொண்டு பழநி ஆண்டி அல்ல.
முருகனுக்கு இரு மனைவியர் இருப்பதும் சரி, சக்தியைக் குறித்தே. இச்சாசக்தி, க்ரியா சக்தி இவை இரண்டும் இருந்தாலே ஞான சக்தியான முருகக் கடவுளை அடைய முடியும்.இந்த முருகனுக்கு ஆறு முகங்கள். இவை ஆறு திசைகளைக் குறிக்கும். ஆறுமுகங்களும் ஆறு திசைகளைக் குறிக்கும். கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, மேல், கீழ் என ஆறு திசைகளையும் காட்டுகின்றது. இது தவிர முருகக் கடவுளின் ஆறுமுகங்களும் நம் உடலின் ஆறு ஆதாரங்களைக் குறிப்பவை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஆதாரத்தைக் குறிக்கும். கடைசியில் கிடைக்கும் சச்சிதானந்தமே மேலானதாய்ச் சொல்லப் படுகின்றது. இந்த ஆதாரங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பீஜ மந்திரங்கள் உண்டு. அவற்றைச் சொல்லியே படிப்படியாய் மேலே செல்லவேண்டும். இரு மனைவியர் முருகனுக்கு என்று எதையும் புத்தகரீதியாய்ப் படித்துவிட்டு அர்த்தம் கொள்ளக் கூடாது. படிக்கிறதின் உண்மையான தாத்பரியம் இதன் உள்ளே மறைந்திருக்கும் உட்பொருளைப் புரிந்து கொள்வதே.
மு" என்ற சொல் முகுந்தனாகிய மஹாவிஷ்ணுவைக் குறிக்கின்றது. "ரு" என்ற சொல்லானது ருத்ரனைக் குறிக்கின்றது. "கா" என்ற சொல்லோ கமலத்தில் வாசம் செய்யும் பிரம்மனைக் குறிக்கின்றது. இம்ம்மூவரையும் ஒருங்கிணைக்கும் சொல்லே "முருகா" என்று ஆகின்றது. இது தவிர முருகு என்றால் தமிழ், தமிழ் என்றால் முருகு என்றும் சொல்வதுண்டே? அந்த ஆறுமுகனின் ஆறுமுகங்களே தமிழ் எழுத்தில் உள்ள வல்லினம், மெல்லினம், இடையினம் என்னும் ஒவ்வொரு இனத்திலும் உள்ள ஆறு எழுத்துக்கள் ஆகின்றன. "அ" முதல் "ஒள" வரை உள்ள பனிரண்டு எழுத்துக்கள் ஆறுமுகனின் பன்னிரு திருக்கரங்களும், தோள்களும் ஆகின்றன. "க" முதல் "ன" வரையில் உள்ள பதினெட்டு எழுத்துக்கள் அவனின் பதினெட்டுக் கண்கள் ஆகின. ஆயுத எழுத்தான ஃ என்னும் எழுத்தோ கந்தனின் முக்கிய ஆயுதமான வேலாயுதத்தைக் குறிக்கின்றது.
ஒரு பழத்துக்காகக் கோபித்துக் கொண்டு அவன் மலைதேடித் தனியே அமர்ந்ததாகவும் கதை! உண்மையில் பழத்துக்கா கோபம்! இல்லை! தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு ஞானத்தைப் போதிக்கவேண்டி, தான் எவ்வாறு அனைத்தும் துறந்து இருக்கின்றோமோ அதே போல் பற்றை அறு, என்னைச் சரணடை! உனக்கு நான் இருக்கிறேன் ஞானத்தைப் போதிக்க என்று அந்தச் சின்னஞ்சிறுவன் நமக்கு எடுத்துக்காட்டாய் அனைத்தையும் துறந்து ஒரு ஞானியாக, துறவியாக நின்று காட்டுகின்றான்.
ஷண்முகன் இங்கே யோக வடிவில் காட்சி அளிக்கின்றான். எல்லாரும் துறவு மேற்கொண்டுவிட்டால் பின்னர் திருமணத்துக்குத் திரும்ப மாட்டார்கள். அல்லது திருமணம் செய்து கொண்டு மனைவியால் "கூறாமல் சந்நியாசம் கொள்"வோரும் உண்டு. ஆனால் இங்கே நம் ஆறுமுகனோ குழந்தையாய் இருக்கும்போதே சந்நியாசி ஆகிவிட்டானே. பழத்துக்கா கோபித்தான்??தவ வடிவில் அவன் நமக்கு என்ன போதிக்கின்றான்? அனைத்தையும் துறந்து என்னிடம் வா என்றல்லவா சிவகுமாரன் கூப்பிடுகின்றான்? யோகத்தின் அர்த்தம் ஆன அவனே யோக வடிவில் நின்று தன் தவக் கோலத்தால். பக்தர்களை யோகம் பற்றி அறிய வைக்கின்றான், இந்தத் தவ வடிவம் எங்கேயும் காணக் கிடைக்காத ஒன்றல்லவோ?? இந்தத் தவக்கோலம் எனக்காவோ என்று எண்ணத் தோன்றுகின்றதல்லவா?
அடுத்து நீங்க சொல்வது ஈசனின் இரு மனைவியர் பத்தி. உலகுக்காக இவ்வாறு ஏற்படுத்தப் பட்டது. நீரின்றி அமையாது உலகு. அந்த நீரைத் தருவது மலையில் இருந்து விழும் அருவிதானே. நீரின் மூலமே சக்தியும் உருவாகின்றது. ஆகவே நீரையும், சக்தியையும் மனைவியாய்க் கொண்டதாய் தாத்பரியம். மலை மேலிருந்து விழும் அந்த அருவியைத் தன் தலையில் ஈசன் தாங்குவதாய் ஐதீகம். அதுவே கங்கையாய் பூமியில் விழுவதாயும் ஐதீகம். இமவானின் புத்திரியே இவளும். உமைக்கு மூத்தவள். உண்மையில் ஈசன் மூலம் கொடுத்த சரவணகுமாரனின் அக்னியின் வீரியம் தாங்காமல் உமை ஓடிப் போக தன் நீரின் சக்தியால் அதைத் தாங்கிக் கொண்டு சென்று சரவணப் பொய்கையாய் உருமாறிக் கொண்டு ஒளிந்திருந்த உமையிடம் கங்கை விட்டதாய்ச் சொல்லுவார்கள். இதுவும் நீர், அதுவும் நீர். வேறுபாடு எங்கிருந்து வந்தது? உள் அர்த்தம் தான் புரிந்து கொள்ளப் படவேண்டும்.
அடுத்துக் கண்ணனுக்கு, அதாவது விஷ்ணுவுக்கு இத்தனை மனைவியரா? என்று ஒரு ஏக்கம். கண்ணனாய் அவதாரம் எடுத்த போது ருக்மிணியிடம் அக்கரையில் இருக்கும் துர்வாசரிடம் சேர்ப்பிக்கும்படியான ஒரு முக்கியப் பொருளைக் கொடுத்து அனுப்புகின்றார் கண்ணபிரான். நதியோ பிரவாஹம் எடுத்து ஓடுகின்றது. இரு கரையும் புரண்டு ஓடுகின்றது. எவ்வாறு செல்வது? ருக்மிணிதயங்க, கண்ணன் சொல்கின்றான் அவளிடம்: "நித்திய பிரம்மசாரியான கண்ணனுக்காக வழிவிடு என்று நதியிடம் கேள். வழிவிடும்." ருக்மிணிக்குத் திகைப்பு. இத்தனை மனைவியர் இருக்கும் கண்ணன் நித்திய பிரம்மசாரியா?? எனினும் ருக்மிணி அவ்வாறே சொல்ல நதி விலகி வழிவிட அக்கரை சென்று துர்வாசரிடம் சேர்ப்பிக்கின்றாள் ருக்மிணி. இனி திரும்பக் கண்ணனிடம் செல்லவேண்டுமே? என்ன செய்வது? மீண்டும் நதியின் வெள்ளம்!!
இப்போது துர்வாசர் சொல்கின்றார் ருக்மிணியிடம்: "நித்திய உபவாசியான துர்வாசருக்காக வழிவிடச் சொல்!" தூக்கிவாரிப் போடுகின்றது ருக்மிணிக்கு. துர்வாசராவது? நித்திய உபவாசியாவது? சாப்பாட்டுப் பிரியர். நேரத்துக்குக் கொடுக்கலைனா கோபமும் வரும். என்றாலும் இப்போதும் முனிவர் சொன்னபடியே செய்ய நதி விலகி வழிவிடுகின்றது. குழப்பத்துடன் திரும்பி வருகின்றாள். கண்ணனைப் பணிந்து நிற்கின்றாள். கண்ணனுக்கு அவள் கலக்கம் புரிய உண்மை நிலையை அவளுக்கு விளக்குகின்றான் ."ருக்மிணி, இத்தனை பெண்களோடு நான் இருப்பது இந்தப் பெண்களின் திருப்திக்காக மட்டுமே. உண்மையின் என் மனமோ, ஆன்மாவோ இதில் ஈடுபடவில்லை. அதேபோல் துர்வாசர் உண்பதாய்த் தெரிவதும் வெளி உலகுக்காகவே. உண்மையில் அவருக்காக அல்ல. அவர் பரம ஞானி. நீர் கூட அருந்தாமல் அவரால் இருக்க முடியும்." ருக்மிணி புரிந்து கொள்கின்றாள். பற்றில் இருந்து, பந்தத்தில் இருந்து விடுபட்டு இருப்பவர்களை எதுவும் பாதிக்காது, எதுவும் அவர்களிடம் ஒட்டாது என்பதை. புளியம்பழம் ஓட்டில் இருந்து பிரிந்தால் தான் கையில் ஒட்டாமல் எடுக்க முடியும். இல்லை எனில் எடுக்க முடியாது. ஓட்டிற்குள் இருந்தாலும் ஒட்டாமல் இருப்பது தான், குடும்பத்திற்குள் இருந்தும் ஒட்டாமல் இருப்பது. அதையே கண்ணன் நடத்திக் காட்டினான்.
புத்தகங்களிலும், புராணங்களிலும் இருப்பதின் உள்ளார்ந்த அர்த்தங்களைப் புரிந்து கொண்டாலே போதுமானது. அனைவரும் நினைப்பதும் சொல்லுவதும் கடவுள் ஏதோ தவறுகளுக்கு மேல் தவறுகள் செய்து கொண்டே இருப்பது போலவும், அதற்கு நாம் ஏதோ போனால் போகிறது என்னோட பக்தியினால் நான் உன்னை ஏத்துக்கறேன் என்று சமாளிப்பது போலவும் தோற்றம் அளிக்கின்றது. புராணங்களை ஊன்றிப் படியுங்கள். புரிந்து கொள்வீர்கள்,
இதிலே பிரம்மாவைப் பற்றியது விடுபட்டிருப்பதை இப்போத் தான் கவனித்தேன். மனிதனுக்கு அறிவு இருந்தால் மட்டும் போதாது. அந்த அறிவால் விளையும் உள்ளுணர்வு ஜோதிமயமான பிரகாசமாய்த் தன்னுள்ளும், தன்னைச் சுற்றியும் பரவ வேண்டும். அதுவே சாவித்திரி, காயத்திரியாகவும், உருவகப் படுத்தப் பட்டுள்ளது. நம் வாயிலிருந்து வெளிப்படும் சொல் நற்சொல்லாய் இருக்கவேண்டும் என்பதாலேயே நாவில் சரஸ்வதி இருப்பதாயும் உருவகப் படுத்தினார்கள். நாக்கினில் சரஸ்வதி இருக்கின்றாள் என்றால் அச்சம் வருமே? அவளைக் கடவுளாகவும் உருவகப் படுத்தி விட்டால் ஒவ்வொரு சொல்லும் யோசித்துத் தானே சொல்ல வேண்டும்? அதே போல் தான் படிப்பினால் விளையும் அறிவும் நல்லதையே நினைக்கவேண்டும். அதனால் உள்ளுணர்வு ஜோதிமயமாய் ஆகவேண்டும், அதே சமயம் அந்த உள்ளுணர்விலிருந்து பரவும் ஒளியால் அகில உலகையே பிரகாசிக்க வைக்கும்.
மனதைக் காடாய் உருவகப் படுத்தி, அந்தக் காட்டைத் தன்னில் எழும்பிய ஜோதியால் அழித்து அதில் அம்பிகையைக் கண்ட பாரதியின் வரிகளை இங்கே நினைவு கூருங்கள்.
அக்னிக் குஞ்சொன்று கண்டேன் -ஆங்கோர் காட்டிடைப்
பொந்தினில் வைத்தேன்- வெந்து தணிந்தது காடு
தழல் வீரத்தினில் குஞ்சென்றும், மூப்பென்றும் உண்டோ?
மக்களிடையே இறை உணர்வு இல்லாமல் போனதன் காரணமாகவே பல்வேறு மாநிலங்களுக்குள்ளும், மொழிச்சண்டை, ஜாதிச்சண்டை எல்லாம் அதிகம் ஆகியுள்ளது. ஏற்கெனவேயே ஜாதியின் பெயரால் கொடுமை நடந்ததாகச் சொல்லப் படும் நாட்களில் கூட இவ்வளவு அதிக அளவில் கொடுமைகள் நடந்தது இல்லை. காஷ்மீரில் இருந்து கன்யாகுமரி வரையிலும் உள்ள மக்களை அன்றிலிருந்து இன்று வரை கட்டிப் போட்ட பக்தியானது இன்றைய நாட்களில் காணக்கிடைப்பதில்லை. இன்றைக்கு உடனடித் தேவை அறிவு சார்ந்த பக்தியே. மூட நம்பிக்கைகள் உள்ள பக்தி அல்ல.
மிக நீண்ட கட்டுரையாகிடுச்சு....பாதிதான் படிச்சுருக்கேன்...மீதி மாலையில்...
ReplyDeleteஹும்!
ReplyDeleteநல்லா இருக்கு பதிவு! புராணங்களை சரியானபடி புரிஞ்சுக்கலைனா கோளாறாத்தான் இருக்கும். இதான் நாத்திகவாதிகளுக்கு தீனி போடுது.
கடவுளர் தர்மம் வேறு ந்னு லாவண்யா எழுதினது ரொம்ப முக்கியம்.
வாங்க மெளலி, கொஞ்சமானும் படிக்க நேரம் கிடைச்சதே, அதே அதிகம். ரொம்ப நன்றிப்பா.
ReplyDeleteவாங்க திவா, அடுத்தது உங்களை வைச்சுத் தான் பதிவு வருதுனு நினைக்கிறேன். :))))))))
ReplyDeleteஹிஹிஹி, இல்லை, இன்னும் மூணு நாள் கழிச்சுத் தான் உங்களை வைச்சுப் பதிவு! :))))))))
ReplyDelete//அடுத்தது உங்களை வைச்சுத் தான் பதிவு வருதுனு நினைக்கிறேன். :))))))))//
ReplyDelete???????
பயமா இருக்கே!
:-))
//புராணங்களும், அதில் உள்ள கதைகள், உபகதைகளும். புராணக்கதைகளில் உள்ள தத்துவ விளக்கங்களைப் புரிந்து கொள்ளவேண்டும். உடனே எல்லாம் புரியவும் புரியாது. நாளாக, நாளாக உலகம் என்னும் சமுத்திரத்தில் நம் வாழ்க்கைப்படகு மேலும் கீழும் அலைகளால் மொத்துண்டு, மொத்துண்டு கரைக்கு வரும்போது தான் புரியவே ஆரம்பிக்கும்//
ReplyDeleteஅதே அதே அதே
//பதினெட்டு எழுத்துக்கள் அவனின் பதினெட்டுக் கண்கள் ஆகின.//
முருகனுக்குப் பதினெட்டு கண்களா?
பாரதி பாட்டுக்கான விளக்கம் நன்றாக இருந்தது.
சும்மா ஒரு கிண்டலுக்கு:
//."ருக்மிணி, இத்தனை பெண்களோடு நான் இருப்பது இந்தப் பெண்களின் திருப்திக்காக மட்டுமே. உண்மையின் என் மனமோ, ஆன்மாவோ இதில் ஈடுபடவில்லை" ருக்மிணி புரிந்து கொள்கின்றாள்.//
ருக்மணி புரிந்து கொள்ளலாம்; நம்ம ஊரும், வீடும், சட்டமும் ஒத்துக் கொள்ளாதே!