பலருக்கும் இந்தத் தகவல்கள் பயனுள்ளதாக அமைந்ததுக்கு முதலில் கோபிக்கு நன்றி கூறுகின்றேன். இப்போக் கோயிலின் தலவரலாற்றைப் பார்ப்போமா???
மிருகண்டு முனிவரும் அவர் மனைவியும் குழந்தை இல்லாமல் இறைவனை நோக்கித் தவம் இருந்தனர். ஈசன் அவர்கள் பக்தியால் மனம் மகிழ்ந்து பல்லாண்டுகள் வாழும்படிக்கு வாழ்நாள் நிறைந்த, ஆனால் குணங்கள் துர்க்குணங்கள், இவற்றால் நிரம்பிய ஓர் மகன் வேண்டுமா?? அல்லது பதினாறே ஆண்டுகள் வாழும் மிகச் சிறந்ததொரு மகன் வேண்டுமா எனக் கேட்க தம்பதியினர் சற்றும் தயங்காமல் பதினாறு வயது மகனே வேண்டும் என வரம் கேட்க, அவ்வாறு இறை அருளால் பிறந்த குழந்தைக்கு மார்க்கண்டேயன் என்ற பெயர் வைத்து வளர்த்து வந்தனர்.
குழந்தை சகல கலைகளிலும் தேர்ச்சி பெற்று விளங்கியதோடு உரிய காலத்தில் உபநயனமும் செய்து வைக்கப் பட்டான். மிகச் சிறந்த சிவபக்தனாகவும் இருந்தான். அவனுக்குப் பதினாறு வயதும் நெருங்கியது. பெற்றோர் அவனை மனத்தளவில் தயார்ப் படுத்தி வைத்ததோடு அல்லாமல் தாங்களும் மகனின் மரணத்திற்கு வேறு வழியில்லாமல் தயாரானார்கள். தனக்கு இறைவனால் விதிக்கப் பட்ட ஆயுள் பதினாறு தான் என்பதைத் தெரிந்து கொண்ட மார்க்கண்டேயன்., ஒவ்வொரு ஸ்தலமாகச் சென்று இறைவனைத் தரிசித்து வந்தான்.
திருக்கடையூருக்கும் வந்து சேர்ந்தான் மார்க்கண்டேயன். இப்போது பதினாறு வயது முடிந்து மார்க்கண்டேயனின் ஆயுள் முடியும் நாள் நெருங்கிவிட்டது. எமன் தன் பணியை உரிய நேரத்தில் முடிக்கும்பொருட்டு சிவனுக்குப் பூஜை செய்து கொண்டிருக்கும் மார்க்கண்டேயன் மீது தன் பாசக் கயிற்றை வீசினான். தாம் செய்த தவத்தாலும், ஈசனின் அருளாலும் எமனைக் கண்ணாரக் காண முடிந்த மார்க்கண்டேயன் அச்சத்தோடு தான் வழிபட்டுக் கொண்டிருந்த லிங்கத்தையே ஆரத் தழுவிக் கொண்டார். எமனும் பாசக்கயிற்றை அந்த லிங்கத்தையும் சேர்த்துக் கட்டி இழுத்து வருமாறு வீசினான். கயிற்றை வேகமாய் இழுத்து, லிங்கத்தையும் அதை இறுக்கக் கட்டிக் கொண்டிருந்த மார்க்கண்டேயனையும் சேர்த்துத் தன் பக்கம் கொண்டு வர யமன் முயற்சிக்கும்போது பளீரென ஓர் ஒளி வீசியது. இடி இடித்தாற்போன்ற ஓர் சப்தம். அதன் பின்னர் மழை பொழிவது போல் கருணை மழை பொழியத் தயாராக ஈசன் அந்த லிங்கத்தினின்று வெளிப்பட்டார். அவர் கையில் திரிசூலம். அந்த சூலாயுதத்தால் காலனைக் குத்திக் கொண்டே இடது காலால் அவனை உதைத்தும் தள்ளினார். மார்க்கண்டேயன் காப்பாற்றப் பட்டான். அவனுக்கு என்றும் பதினாறு வயதாகத் தன்னருகிலேயே இருக்கும்படி பணித்தார் ஈசன்.
பின்னர் உலக நன்மைக்காகவேண்டி யமனையும் உயிர்ப்பித்துத் தன் பணியைச் செவ்வனே செய்து வரும்படி அருளினார் என்பது வரலாறு. இது ஈசனின் எட்டு வீரச் செயல்களுள் காலனைக் காலால் உதைத்துக் கொன்ற செயல் நடந்த இடம் என்பதால் அட்ட வீரட்டானத் தலங்களுள் ஒன்றாக உள்ளது. யமன் ஈசன் மேல் பாசக்கயிற்றை வீசியதால் ஏற்பட்ட அடையாளத் தழும்புகளைக் கார்த்திகை சோமவார நாட்களில் மூலவர் சந்நிதிக்கு எதிரில் உள்ள சங்கு மண்டபத்தில் வலம்புரிச் சங்கை வைத்து 1008 சங்காபிஷேஹம் நடக்கும்போது மட்டுமே காணமுடியும் என்று சொல்கின்றனர். லிங்கத்திருமேனியின் உச்சியில் பிளவும், திருமேனியில் ஏற்பட்டிருக்கும் அடையாளத் தழும்புகளையும் அப்போது மட்டுமே காணலாம் என்கின்றனர். சந்நிதிக்கு முன் மண்டபத்தில் உள்ள காலசம்ஹாரமூர்த்தியின் செப்புச் சிலை வடிவமும், அங்கே லிங்கம் பிளந்து காலசம்ஹாரர் கையில் திரிசூலத்துடன் வெளிப்படும் காட்சியும் மிகத் தத்ரூபமாய் அமைக்கப் பட்டுள்ளது. இந்தச் சந்நிதி எப்போதும் திறப்பதில்லை. திறந்து காட்டிவிட்டு தீப ஆராதனை காட்டி உடனே மூடிவிடுவார்கள். ஒரு நிமிஷ காலமே தரிசிக்க முடியும். இந்தக் காலசம்ஹார மூர்த்திக்கு வருஷத்தில் பதினொரு முறை கள் மட்டுமே அபிஷேஹம் செய்யப் படுகின்றது. அப்போது காணமுடியும் என்கின்றனர்.
இந்தத் தலத்து அம்மன் மிகவும் அழகும், சக்தியும் வாய்ந்தவள். அபிராமி என அழைக்கப் படும் இவளின் அழகில் மெய்ம்மறந்த இந்தக் கோயிலின் அத்தியானபட்டர் ஆன ஒருவரிடம் கோயிலில் வழிபாடு செய்ய வந்த சரபோஜி ராஜா அம்மனைத் தரிசிக்கும்போது இவரிடம் அன்றைய திதி என்ன எனக் கேட்டான். அம்மனின் பூரணசந்திரன் போன்ற ஒளிமயமான அழகில் தன்னை மறந்திருந்த பட்டரோ அன்று பெளர்ணமி என்று சொல்லிவிடுகின்றார். மன்னனுக்குத் தன்னை அவர் மதிக்கவில்லையா என்று எண்ணிக் கோபம் வருகிறது. சுற்றிலும் தீயை மூட்டி அதில் ஓர் உறியைக் கட்டித் தொங்கவிட்டு அந்த உறியை நூறு சங்கிலிகளால் பிணைத்து பட்டரை அதில் அமரச் சொல்லி ஆணை இடுகின்றான். பட்டர் சொன்ன மாதிரி அன்று பெளர்ணமி நிலவு இரவு உதயமாகவேண்டும் எனவும், இல்லை எனில் பட்டர் ஒவ்வொரு சங்கிலியாக அறுத்துக் கொண்டு அந்தத் தீயில் விழுந்து உயிர் விடவேண்டும் எனவும் அரசாணை பிறக்கிறது.
அம்மையபப்ரின் தரிசனம் கண்டேன் அருமை.
ReplyDeleteநல்லது...;)
ReplyDeleteஒரு கேள்வியில் எத்தனை விஷயங்கள் எத்தனை கதைகள் தெரிஞ்சிக்க முடியுது.
அனைவருக்கும் வேண்டி பதிவிடும் தலைவிக்கு மனமார்ந்த நன்றிகள் ;(
நல்ல தகவல்கள் அம்மா. நீங்கதான் தகவல் களஞ்சியமாச்சே :) மிக்க நன்றி அம்மா.
ReplyDeleteகோபிக்கும் நன்றி :)
ReplyDelete