
ஹரியும், ஹரனும் இணைந்து பெற்ற திருக்குழந்தையான தர்ம சாஸ்தா வேறு, ஐயப்பன் வேறு அல்ல என்றாலும் தர்ம சாஸ்தாவின் திரு அவதாரமே ஐயப்பன் ஆகும். எப்படினு பார்ப்போமா? ஐயப்பனாக நாம் இன்று வணங்கும் திருமூர்த்தி தர்ம சாஸ்தாவின் திரு அவதாரம். தர்மசாஸ்தா தர்மத்தை நிலைநாட்டுவதற்காகத் தோன்றியவர். சாஸ்தாவின் வரலாறு மிகப் புனிதமானது. அவர் எட்டு அவதாரங்கள் எடுத்ததாய்ச் சொல்லப் படுகிறது. அவை:
சம்மோஹன சாஸ்தா: வீட்டையும், குடும்பத்தையும் காக்கும் தெய்வம் இவர்.
கல்யாண வரத சாஸ்தா: தேவியருடன் காட்சி தரும் இவரை வழிபட்டால், திருமணத்தடைகள், தோஷங்கள் விலகும்.
வேத சாஸ்தா: சிம்மத்தில் அமர்ந்திருக்கும் இவரை வழிபட்டால் கல்வி, கேள்விகளில்
சிறந்து விளங்கலாம்.
ஞான சாஸ்தா; தட்சிணா மூர்த்தியைப் போன்ற ஞானகுருவான இவரை வழிபட்டால் உள்ளார்ந்த ஞானம் சிறக்கும்.
பிரம்ம சாஸ்தா: குழந்தைச் செல்வம் பெற இவரை வழிபடலாம்.
மஹா சாஸ்தா: வாழ்வில் முன்னேற இவரை வழிபடலாம்.
வீர சாஸ்தா: ருத்ர மூர்த்தியான இவரை வணங்குவதால் தீமைகள் அழியும்.
தர்ம சாஸ்தா: இவரே ஐயப்பனின் திரு அவதாரம். சபரிமலையில் காட்சி தருபவர் இவரே. இவரின் அவதார நோக்கமே மஹிஷி மர்த்தனம் ஆகும். யார் இந்த மஹிஷி? எதுக்காக ஐயப்பன் அவதாரம் எடுத்து அவளை சம்ஹாரம் செய்ய வேண்டும்? கொஞ்சம் பின்னோக்கிப்
போவோமா???
******************************************************************************
பாற்கடல் கடைந்து அமுதம் எடுத்தாயிற்று. தேவர்களுக்குள் பங்கீடும் முடிந்தது. மோகினியாய் அவதாரம் எடுத்து, விஷ்ணுவும் தன்னோட வேலையைத் திறம்படச்
செய்தாகி விட்டது. என்றாலும் அசுரத் தனமான எண்ணங்கள் அசுரர்களிடம் இருந்து
போகவில்லை. ரம்பன், கரம்பர் என்னும் இரு அரக்கர்களில் ரம்பனின் பிள்ளையான
மஹிஷாசுரனைத் தேவி துர்க்கையாக அவதரித்து சம்ஹரித்தாள். பார்த்தான் கரம்பன்.
அவன் பெண்ணான மஹிஷியைத் தூண்டி விட்டு பிரம்மாவை நோக்கித் தவம் இருக்கச்
செய்தான். மஹிஷியும் தவம் இருந்தாள். இந்த இடத்தில் ஒரு கேள்வி அனைவருக்கும்
சாதாரணமாய் எழக் கூடியது!!
தவம் செய்யும் எல்லாருக்கும் இறைவன் காட்சி தந்து வேண்டிய வரங்களைத் தந்து விட்டு பின்னர் ஏன் மாட்டிக் கொண்டு தவிக்க வேண்டும்? இது ஒரு மில்லியன் டாலர் கேள்வி இல்லையா?எல்லாருமே பரிட்சைக்குப் படிக்கிறோம். அனைவருமே "பிட்" அடிக்காமலும் பரிட்சை எழுதுகிறோம். நாம் எழுதியதுக்குத் தகுந்தவாறு மதிப்பெண்கள் கிடைத்துத் தானே ஆகவேண்டும்? குறைத்துக் கொடுத்தால் நாம் சும்மா இருப்போமா? படித்ததை நாம் எவ்வாறு உபயோகிக்கப் போகிறோம் என்பது நம் தனிப்பட்ட விருப்பம், என்றாலும் பரிட்சை பொதுப்பரிட்சை. எல்லாரையும் போல்தானே மதிப்பெண்கள் எதிர்பார்ப்போம் இல்லையா? அதே தான் இங்கேயும் அரக்கக் குடும்பம் ஆனாலும் தவம் பொய்யல்லவே, பக்தி
பொய்யல்லவே, அதை உபயோகிக்கும் விதம் தானே தவறு! அதற்குத் தான் சம்ஹாரம்
என்ற தண்டனை!! மஹிஷி என்ன ஆனாள் நாளை பார்க்கலாமா????
சபரி மலை ஐயப்பன் படம் எடுக்க முடியவில்லை, ஆனால் ஐயனார் படம் போட்டுள்ளேன். ஐயனாரும், ஐயப்பனும் ஒண்ணே, அதுவும் பதினெட்டாம்படிக் கறுப்பண்ண சாமி என்று சொல்பவரும், ஐயப்பனும் ஒன்றே. மதுரை அழகர் கோயிலில் உள்ள பதினெட்டாம்படிக் கறுப்பண்ண சாமியின் தீர்ப்பை இன்றளவும் மீறி நடப்பவர்கள் இல்லை. கறுப்பு காவல் தெய்வம் என்றும், தவறுகளைத் தண்டிக்கும் என்னும் எண்ணமும் இன்றளவும் தென்மாவட்ட மக்களிடம் அதிகமாய் உண்டு. இந்தப் பதினெட்டாம்படிக்கு உள்ள முக்கியத்துவமும், கறுப்பு தான் காவல் தெய்வமான "சாஸ்தா" "சாத்தன்" என்பதும் பின் வரும் பதிவுகளில் விளக்கமாய்க் கிடைக்கும்.
எல்லாம் வரலாமுங்க கீதா அக்கா... அப்பிடியே கையோட கையா ஒரு பிளைட் டிக்கெட் எடுத்து அனுப்பிடுங்க..
ReplyDeleteநல்ல தகவல்கள் :)
ReplyDeleteவரம் தந்த சாமிக்கு சுகமான லாலி
ReplyDeleteஅருமையான தகவல்கள்! தொடர்ந்து இதே மாதிரி உருப்படியா எழுதுங்க! :)))
ReplyDeleteகீதாம்மா,
ReplyDeleteசாஸ்தா என்றால் அடக்கி நடத்தும் தலைவன் என்று பொருள். சாஸ்தாவின் எட்டு வடிவங்களைப் பற்றிப் படித்திருக்கிறேன். மீண்டும் அவற்றை நினைவூட்டியிருக்கிறீர்கள்.
சாஸ்த்ரே துப்யம் நமோ நம: