எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, November 23, 2007

திருக்கார்த்திகைத் தீபத் திருநாள் வாழ்த்துக்கள்!!



அனைத்து மாதங்களிலும் கார்த்திகைக்குத் தனிச் சிறப்பு உண்டு. அனைவரும் கொண்டாடும் தீபத் திருவிழா மட்டுமின்றி, இந்த மாதமே சிவனுக்கு உரித்தானதாய்க் கார்த்திகை சோமவாரம் விரதமும் அனுசரிக்கப் படும். "சோமன்" என்றால் சந்திரனைக் குறிக்கும். சந்திரனுக்கு விநாயகரை எள்ளி நகையாடிய காரணத்தால் தேய்ந்து போவாய் எனச் சாபம் கிடைத்தது. போதாத குறைக்கு மாமனான தட்சனின் 27 பெண்களில் ஒருத்தியிடம் மட்டுமே பிரியம் கொண்டிருந்ததால் மாமனும் சபித்தான். சந்திரனை க்ஷயம் பீடித்தது. இது நீங்குவதற்காகச் சந்திரனை சிவனைத் தஞ்சம் அடைந்தான். சிவபூஜை செய்து வந்தான். அவனின் பக்தியால் மகிழ்ந்த மகேசர் அவனின் நோயைப் போக்கியதோடு அல்லாமல் அவனை நவகிரஹங்களில் ஒருவனாயும் ஆக்கி, அவன் பெயராலேயே ஒரு கிழமை வழங்குமாறும் அருளினார். அவன் பூஜித்தது ஒரு கார்த்திகை மாதத்தில், அந்த நாள் தான் "கார்த்திகை சோமவார விரதம்" எனச் சொல்லப்படத் தொடங்கியது. இவை யாவும் நிகழ்ந்தது கார்த்திகை மாதத்தில். ஆகவே கார்த்திகை சோமவார விரதம் பிரசித்தியும் அடைந்தது. பொதுவாய் அப்போது மழைக்காலம், உடல்நலக் கேடு உண்டாகும். சீக்கிரமே இருட்டி விடும்,. எங்கும் ஈரப் பதமாய் இருக்கும்.

இந்த உடல்நலக் கேட்டில் இருந்து தப்பிக்க விரதமும், இருட்டிலிருந்து வெளிச்சத்துக்குப் போகவும், ஈரப் பதத்தில் இருந்து உஷ்ணம் பெறவும், இவ்வாறான பல காரணங்களையும் உத்தேசித்துக் கார்த்திகை முதல் தேதியன்றிலிருந்தே பெரும்பாலான வீடுகளில் விளக்குகள் நிறைய வாசலில் வைக்கப் படும். வளர்பிறைப் பெளர்ணமி அன்றோ ஈசன் தன் அடிமுடி காட்ட மலையாக உருவெடுத்துத் தானே ஒரு அக்கினிமலையாகத் தோன்றிய நாள். அன்னை பராசக்தியானவள், தவம் புரிந்து ஈசனின் உடலில் ஒரு அங்கமாகிய திருநாள் ஆகும். இதை நினைவூட்டவும் இன்றளவும் திருக்கார்த்திகைத் தீபத் திருநாள் கொண்டாடப் படுகிறது, இது மிகப் பழங்காலத்தில் இருந்து கொண்டாடப் பட்டு வந்த ஒரு பெருவிழா என்பதைத் திருஞான சம்மந்தர் இவ்விதம் கூறுகிறார்:

"தொல்கார்த்திகை நாள்
தளத்தேந்து இளமுலையார்
தையலார் கொண்டாடும்
விளக்கீடு காணாதே
போதியோ பூம்பாவாய்"

என்று பூம்பாவையை, அவளின் எலும்புகளைப் பெண்ணாக மாற்றும்போது பாடிய பதிகத்தில் கூறுகிறார்.

அடிமுடி காணச் சென்ற பிரம்மாவும், விஷ்ணுவும் காணமுடியாமல் திரும்ப பிரம்மாவோ தாழம்பூவைச் சாட்சிக்கு வைத்துக் கொண்டு பொய் சொல்லுகிறார் முடியைக் கண்டதாய். அன்றிலிருந்து சிவபூஜைக்குத் தாழம்பூ ஏற்பதில்லை என்பதோடு, பிரம்மாவும், விஷ்ணுவும் வேண்டிக் கொண்டதற்கிணங்க மகேசன் தன் ஜோதி வடிவை அப்படியே மலை வடிவாக்குகிறார். மலையே அக்கினி வடிவம். அதில் ஒவ்வொரு திருக்கார்த்திகை அன்றும் உச்சியில் ஜோதி காட்டப் படுகிறது. இந்த ஜோதியைத் தரிசிப்பவர்களுக்கு 21 தலைமுறைகளுக்கு முக்தி கிடைக்கும் என அருணாசல புராணம் சொல்லுகிறது.

"கார்த்திகைக்குக் கார்த்திகை நாளொரு சோதி
மலை நுனியில் காட்டா நிற்போம்
வாய்த்த அந்தச் சுடர் காணில் பசி பிணி
இல்லாது உலகில் மன்னி வாழ்வார்
பார்த்திவர்க்கும் அருந்தவர்க்கும் இடையூறு
தவிரும் இது பணிந்தோர் கண்டோர்
கோத்திரத்தில் இருபத்தோரு தலைமுறைக்கு
முக்தி வரம் கொடுப்போம்!"

என்பது ஐதீகம். மனித மனத்தைத் துயரங்களில் இருந்து ஒரு சிறிதேனும் விடுவிக்கும் இத்தகைய பண்டிகைகள் மனதுக்கு மகிழ்ச்சியையும் ஆறுதலையும் கொடுக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை.

7 comments:

  1. வாழ்த்துக்களுக்கு நன்றிகள்..கீதா அக்கா..

    உங்களுக்கும் குடும்பத்துக்கும்..முதல் வாழ்த்துக்கள்...

    (ஃபஸ்ட்டு தானே?..ஹிஹி..)

    ReplyDelete
  2. நன்றிகளையும், வாழ்த்துக்களையும் நானும் தெரிவிச்சுக்கறேன் ரசிகரே, ஆமாம், நீங்க தான் ஃபர்ஸ்ட், ஆகவே பொரி உருண்டை உங்களுக்குத் தான் முதலில், பிடிங்க பொரி உருண்டையை!!!!

    ReplyDelete
  3. ம்ம்ம், ரொம்ப நாளுக்கு அப்புறமா ஒரு உருப்படியான, மொக்கை இல்லாத பதிவு. :))அருணாச்சலேஸ்வரர் நல்ல புத்தி குடுத்ருக்கார் போலிருக்கு. :p

    ReplyDelete
  4. @அம்பி, என்ன பொரி எல்லாம் பண்ணி முடிச்சாச்சா?? அதான் தெம்பாப் பேசறீங்க போலிருக்கு!!!! :P

    ReplyDelete
  5. தீபத் திருநாள் வாழ்த்துக்கள்...

    படம் நல்லா இருக்கு :)

    ReplyDelete
  6. நானே கார்த்திகை சோமவாரம் பற்றி எழுதவேண்டும் என நினைத்தேன். நன்றி கீதா மேடம்.

    உங்களுக்கும்,மற்றும் எல்லா பெண் பதிவர்களுக்கும் எனது கார்த்திகை தீப திருநாள் வாழ்த்துக்கள்......

    ReplyDelete
  7. பல உபயோகமான தகவல்கள். நன்றி.அடுத்த மாதம் வரை பொரி உருண்டை தாக்கு பிடிக்குமா??????

    ReplyDelete