
பந்தள நாடு. அழகான தாமரை போன்ற அமைப்பில் இருந்ததால், "பத்ம தளம்" என்ற பெயர் மருவி, பின்னர் பந்தளம் என ஆயிற்று என்று ஒரு கூற்று. பந்தளத்தை ஆண்டு வந்த மன்னன், "ராஜசேகர பாண்டியன்", மிகச் சிறந்த சிவபக்தன். அவன் மனைவியான கோப்பெருந்தேவி, இருவருக்கும் குழந்தை இல்லை என்பதைத் தவிர, வேறு குறை இல்லை. குடிமக்களும், மன்னன் ஆட்சியில் மகிழ்ச்சியாகவே வாழ்ந்தனர். மக்கட்பேறுக்காக "மகேசன்" பூஜை செய்து வந்தான் மன்னன். ஒரு நாள் மன்னன், காட்டுக்கு வேட்டையாடச் சென்றான். செல்லும்போதே மனதில் ஒரு இனம் தெரியாத மகிழ்ச்சி உண்டாயிற்று. வேட்டைக்குச் சென்ற மன்னனுக்கு அங்கே கிடைத்தது ஒரு பெரிய புதையலே!!! ஆம், மிகப் பெரிய வேட்டை கிடைத்தது. மன்னனுக்குக் காட்டில் ஒரு பச்சைக் குழந்தையின் அழுகுரல் கேட்டது. குரல் வந்த திக்கை நோக்கிச் சென்றான் மன்னன். கண்டது என்ன? ஒரு அழகான ஆண்குழந்தை, கழுத்தில் கட்டிய மணியோடு அங்கே அழுது கொண்டு இருந்தது. குழந்தை அழகோ, அழகு!!! ஒரு பூவே பூத்து வந்தது போலச் சிரித்தது மன்னனைப் பார்த்து. கையில் எடுத்தான் அந்தப் பூக்குவியலை, மார்போடு அள்ளி அணைத்தான், சுற்றும், முற்றும் பார்த்தான், மன்னன் யாரையும் காணவில்லை. அப்போது அங்கே தோன்றினார் ஒரு வேதியர். குழந்தையையும், மன்னனையும் பார்த்தார்.
"மன்னா, குழந்தை இல்லாத உன் பிள்ளைக் கலி தீர்க்க வந்த இந்தப் பாலகனை நீ வளர்த்து வா! இவனால் உன் ராஜ வம்சமே பெருமை அடையும். இவனின் பெருமையை நீயும் பின்னால் உணருவாய்." எனச் சொல்லுகிறார். (வேதியராக வந்தது சிவபெருமான், எனச் சிலர் கூற்று. அகத்தியர் எனச் சிலர் கூற்று.) குழந்தையும் பந்தள மன்னனின் சகோதரி குழந்தை எனவும் சிலர் கூற்று. அந்தக் கதை செவிவழி கூறுவது:
பந்தள மன்னனுக்கு ஒரு சகோதரி உண்டு என்றும், மகாவிஷ்ணுவின் அம்சம் ஆன அந்தச் சகோதரி மணந்தது, சிவ அம்சம் ஆன தளபதி ஒருவரை எனவும், மன்னனின் மந்திரியானவனும், அரசியும், இந்தத் திருமணத்தால் பிறக்கும் குழந்தைக்கு நாடு உரியது என்பதால், (கேரள நாட்டில் மருமக்கள் தாயம் என்னும் முறை இருந்ததாலோ??) இருவரையும் கொல்ல முடிவு செய்தான் என்றும், அவனிடமிருந்து தப்பின மன்னனின் சகோதரியும், அவள் கணவனும் காட்டில் மறைந்து வாழ்ந்தனர் என்றும், அங்கே குழந்தை பிறந்த வேளையில் மன்னன் வரவே, குழந்தையை அவனிடம் ஒப்புவித்து விட்டு இருவரும் மறைந்தனர் எனவும் செவிவழிக் கதைகள் கூறுகின்றன.
எது எப்படி இருந்தாலும் சிவ அம்சமும், விஷ்ணு அம்சமும் ஒருங்கே சேர்ந்து பிறந்த அந்தக் குழந்தையின் வரவால் மன்னன் மனமகிழ்ச்சியே அடைகின்றான். நீலகண்டனுக்கும், கெளஸ்துப கண்டனுக்கும் பிறந்த அந்தக் குழந்தை, கழுத்தில் மணியுடன் இருந்ததால் "மணிகண்டன்" எனப் பெயரும் சூட்டுகிறான் மன்னன். வளரும்பருவத்திலேயே குழந்தையின் சிறப்புக்கள் அவ்வப்போது வெளிப்பட்டு வருகின்றன. குழந்தை குருகுல வாசத்துக்கு அனுப்பப் படுகிறான். அங்கே குருவின் பார்வையற்ற, பேச்சற்ற குழந்தைக்குப் பார்வையும், பேச்சும் மணிகண்டன் அருளால் கிடைக்கிறது. குருவுக்கு வந்திருப்பது சாதாரணப் பிள்ளை இல்லை எனப் புரிகின்றது.
இடைப்பட்ட காலத்தில் அரசியும் கருவுற்று ஒரு ஆண் மகவைப் பெற்றெடுக்கிறாள். தனக்கெனச் சொந்தமாய்ப் பிள்ளை வந்ததும் அரசிக்கு இந்தப் பிள்ளைக்கே அரசாட்சி உரிமையாகவேண்டும் என்ற எண்ணம் அதிகம் ஆகிறது. குழந்தையும் "ராஜராஜன்" என்ற பெயரில் சீருடனும், சிறப்புடனும் வளர்ந்து வருகின்றான். மணிகண்டன் தன்னுடைய சீரான நடவடிக்கைகளாலும், தெய்வாம்சம் இயல்பிலேயே கைவரப் பெற்றிருந்ததாலும், மக்கள் மனதைக் கவருகின்றான். மணிகண்டனின் செல்வாக்கைப் பார்த்த அரசிக்குப் பொறாமை மேலிடுகின்றது. மந்திரியின் துணையையும் நாடுகின்றாள். ஏற்கெனவே மந்திரிக்கு மணிகண்டன் அரசன் ஆனால் தன்னுடைய தனிப்பட்ட செல்வாக்கு மங்கிக் காட்சி அளிக்குமே என்ற கவலை இருந்து வந்தது. எவ்வகையிலேனும், மணிகண்டனை அழிக்க உறுதி பூண்டான். அப்போது அரசியும் அவ்வாறான எண்ணத்துடன் இருக்கவே , இருவரும் சேர்ந்து மணிகண்டன் திரும்ப வர முடியாதபடி ஏதேனும் செய்ய எண்ணுகின்றனர். அவர்கள் திட்டம் வெற்றி பெறுகிறதா? மணிகண்டன் திரும்ப வரமுடியாதபடி ஒழிக்கப் பட்டானா??? நாளை காணலாம்.
ஆஹா.. அருமையான தொடர்.. முதலிலிருந்து அனைத்தையும் படித்தேன்.. பரவசம் அடைந்தேன்.. டைமிங்கா பதிவுகள் போடுறதுல உங்களை அடிச்சுக்க ஆளே இல்லீங்க மேடம்
ReplyDeleteபல புதிய செவிவழி தகவல்கள். நன்றி ஹை!
ReplyDeleteநேத்து பதிவுல நீங்க கேட்ட தகவல்கள் கிடைச்சதா? :p
//அவர்கள் திட்டம் வெற்றி பெறுகிறதா? மணிகண்டன் திரும்ப வரமுடியாதபடி ஒழிக்கப் பட்டானா??? நாளை காணலாம்.
//
ஹஹா! வெள்ளி கிழமைகளில் மெகா சீரியல்களை இப்படி தான் முடிப்பார்கள். :))
நன்கு தெரிந்த கதையுடன் இதுவரை தெரியாத கதையையும் சொல்லியிருக்கிறீர்கள் கீதாம்மா. கேரள பாண்டிய ராஜகுமாரன் என்பதால் அரசனின் சகோதரி மகனுக்கே அரசபதவி என்ற லாஜிக் ஒத்துப் போகிறது.
ReplyDelete